Sunday, December 23, 2007

நடைவண்டி போலொரு வாசிப்பு

யாழ் தமிழ்ப்பண்ணை புத்தகசாலைக்கு அண்மையில் அப்பா வேலை செய்த கடை அமைந்திருந்தாலும் முதலாளி அப்பாவின் நண்பர் என்பதாலும் என் விருப்பம் போல புத்தகங்களை எடுத்துப் படிக்கலாம். 12 வயது மாணவனாக இருந்த போது மர்ம நாவல்களையும். சினிமா தொடர்பான நூல்களையும் சுவாரஸ்யமாக வாசிப்பேன். ஒரு நாளில் சாதாரணமாக ஆறு புத்தகங்களை வாசித்து முடித்து விடுவேன். இந்த விடயம் அப்பாவுக்கு தெரியும். சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அத்தகைய வாசிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொன்னார்.

“சின்னக்குழந்தை நடக்கிறதுக்கு முதல் நடைவண்டியைக் கொடுத்து நடை பழக்கிறம் - ஓரளவுக்கு வந்தால் நடைவண்டி இல்லாமல் நடக்க வேணும். வாசிக்கிறதில்லை ஒரு விருப்பத்தை ஏற்படுத்திறதுக்காக துப்பறியும் நாவலும் பேசும் படமும் வாசித்தது போதும். விரைவாக வாசிக்க பழகியாச்சு. இனி நல்ல எழுத்தாளர் யார்? நல்ல புத்தகம் என்ன? எல்லாம் தேடி வாசிக்கப் பழக வேணும் - இவ்வளவு நாளும் வாசித்த மர்ம நாவலும் சினிமாவும் ஒண்டுக்குNமு பயன்படாது. இது நூறு புத்தகம் வாசிக்கிறதை விட சும்மா ஒரு சின்னப் புத்தகம் வாசித்தாலும் வாழ்க்கைக்கும் சோதனைக்கும் பயன்பட வேணும்”

அப்பா சில நாட்களாக சில நூல்களைத் தெரிந்து வாசிக்க வழி காட்டினார். பின்னர் நடைவண்டி இல்லாமல் நடப்பது போலவே அப்ப இல்லாமல் புத்தகத் தெரிவு வாசிப்பு. நல்லதைத்தான் தேடி வாசிக்கின்றேன். ஆரம்பத்தில் சிறிது விட்டுப்பிடித்த அப்பா தருணமறிந்து நிறுத்தி சரியான வழியைக் காட்டி தொடர வைத்திருக்கிறார்.

நல்லவற்றை தேடி வாசிக்க வழிகாட்டியவர் எழுதவும் தூண்டிவிட்டார். 1961 டிசம்பர் விடுமுறை ஆரம்பமானதும் தைப்பொங்கலைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி ஈழநாடு காரியாலயத்தில் கொடுக்கும்படி சொன்னார். பல முறை சொன்ன பின் வெட்டி வெட்டி திருத்தி எழுதிக் கொண்டு ஈழநாடு அலுவலகத்துக்கு ஜனவரி முதல் வாரம் சென்று கட்டுரையைக் கொடுத்த போது - "Too late எங்கடை பொங்கல் முடிஞ்சு போச்சு" என்று சொல்லிக் கொண்டு அச்சு இயந்திரங்கள் இருந்த பகுதிக்கு கூட்டிச் சென்று காட்டினார்கள். ஈழநாடு என்னைப் பார்த்துச் சிரித்தது. அதற்குப் பின்தான் பத்திரிகையின் சில பகுதிகள் பல நாட்களுக்கே முன் தயாராகும் இரகசியத்தை தெரிந்து கொண்டேன்
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: