Tuesday, August 27, 2013

படிக்காத அப்பா படிப்பித்த பாடமே என்னை புகழேணிக்கு ஏற்றியது. 25-08-2013 தினகரன் வாரமலரிலிருந்து...

மதியுடை சான்றோன் உடுவை தில்லை நடராஜாவின் நினைவலைகள்

சிரமங்களை சவாலாக எதிர்கொண்டும், அதையே படிக்கட்டாக மாற்றி, தன்னம்பிக்கையை அடித்தளமாக்கி வாழ்க்கையில் வெற்றியின் சிகரத்தைத் தொட்ட கல்விமான் இவர். இலிகிதராக இணைந்து, அரச நிர்வாக சேவையாளராக, பணிப்பாளராக, ஆணையாளராக, மதியுரைஞராக, அரச அதிபராக, இலக்கியவாதியாக, கலைஞராக பரிணமித்து பன்முகங்களைக்காட்டி நிற்கும் உடுவை தில்லை நடராஜாவின் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கின்றேன்.

பிறந்தகத்தைப் பற்றி....
யாழ்ப்பாணத்தில். உடுப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட நான் ஒரு சகோதரிக்கும் ஒரு சகோதரனுக்கும் மூத்தவன். என் தந்தை சிங்காரம்பிள்ளை. தாய் ராசாம்பாள். ஹோட்டல் சிப்பந்தியாக இருந்த என் தந்தையார் பள்ளிக்கூடம் சென்றதில்லை ஆனாலும் எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரிந்தவர். சஞ்சிகைகள், உலக நடப்புகள், அன்றாட  உள்நாட்டுவிவகாரங்கள் அனைத்தையும் பத்திரிகைவாயிலாக வாசித்து அறிந்து வைத்திருக்கும் வல்லமை படைத்தவர். அந்த அறிவை என்னோடு பால்ய பருவத்திலிருந்தே பகிர்ந்து கொள்வார். என் தாயாரும் ஓரளவு கற்று இருந்தாலும், கற்றதை கற்பித்து இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கொப்ப என்னை உருவாக்கியவர். பெற்றோர்கள், ஆசான்கள், நண்பர்கள் ஆகியோரும் மறக்க முடியாதவர்கள்.
வித்தியாரம்பத்தைப் பற்றி கூறுங்கள்....
எனது ஆரம்பக் கல்வி உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் பாடசாலையாகும். இரண்டரை வயதிலேயே எனது தாயார் உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலில் வைத்து சின்னத்தம்பி வாத்தியாரைக் கொண்டு வித்யாரம்பம் செய்து வைத்தார்.
தாம்பாளத்தில் பரப்பிய அரிசியில் என் விரலைப் பிடித்து அகரம் எழுத வைத்தார். அ.... ஆ... இ.... என்று பிள்ளையார் சுழி போட்டதுபோல் எழுதப்பட்ட அந்த எழுத்துக்களின் ஆழம் பொருந்திய கருத்துகள் அபாரமானவை என்று இப்போது புரிந்து கொண்டேன். = அம்மா, அப்பா - ஆ= ஆசிரியர் இவை சரியாக அமைந்துவிட்டால் வாழ்வில் எல்லாம் : இன்பமே என்பதை அனுபவபூர்வமாக அறிந்தேன்.
 ஆரம்பக் கல்வியை பாடசாலையில் தொடங்கும் முன்பே எனது தாயார் இரண்டாம் வகுப்புதான் படித்தவர் இருந்தாலும் என்னையும் என் சகோதர சகோதரிகளையும் வைத்து பாடம் சொல்லிக் கொடுப்பார். படிப்பை பட்டியலிட்டு கூடிய புள்ளிகள் கொடுத்து ஊக்குவிப்பார். பரிசாக விதவிதமான தின்பண்டங்களை செய்து எங்களுக்கு பகிர்ந்தளிப்பார். இப்படியான பால்ய பருவ அடித்தளமே என்னை கல்வியில் ஊக்குவித்தது.
அமெரிக்க மிஷன் பாடசாலையில் நான்காம் தரம் படிக்கும் போது, தந்தையைப் பற்றி ஐந்து வசனங்கள் ஆங்கிலத்தில் எழுதிவரும்படி ஒவ்வொருவரையும் பணித்தார் ஆசிரியர் அதற்கு முன் ஒவ்வொரு மாணவரையும் பார்த்து, உனது அப்பா என்ன தொழில் செய்கிறார். என்று கேட்டார். டாக்டர், கணக்காளர், வர்த்தகர், என்று ஒவ்வொரு மாணவர்களும் சொல்லிக் கொண்டுவந்தார்கள்.
நான் எனது அப்பா FARMER -பாமர்என்றேன். என் குடும்ப விபரங்களை அறிந்திருந்த அந்த ஆசிரியர் எவ்வித இங்கிதமும் இல்லாமல், பொய் சொல்லாதே, உன்னுடையஅப்பா ஹோட்டலில் குக்தானே என்றார். எனக்கோ பெரிய மனத் தாங்கலாகிவிட்டது. ஏனைய மாணவர்களின் ஓர் ஏளனமான பார்வை என்மீது.மிக சோகத்துடன் வீட்டிற்கு திரும்பினேன். என் முகவாட்டத்தைக் கண்ட அப்பா, விசாரிக்க விடயத்தைக் கூறினேன். இந்த வார்த்தைக்கெல்லாம் சோர்ந்துவிடக் கூடாது என்று தைரியமூட்டி, வாத்தியாரிடம் சொல் எனது அப்பா குக்அல்ல ஹோட்டலில்சுவீட்மேக்கர்SWEET MAKER என்று அந்தஸ்தான வார்த்தையை சொல்லித்தந்தார். உண்மையிலேயே லட்டு, ஜிலேபி, மைசூர்பாகு என்று பதார்த்தங்கள் செய்வதில் கைதேர்ந்தவர்.அந்தத் தொழிலுக்கு ஹோட்டல்களில் நல்ல மவுசும் இருந்தது. அடுத்த நாள் வகுப்பு ஆசிரியரிடம் என் தந்தையின் தொழிலைக் கூறி பெருமைப்பட்டேன். இவ்வாறெல்லாம் எங்களை சோடைபோகவிடாமல் கல்வியில் அக்கறைச் செலுத்த என் மாதா -பிதா குரு தெய்வமாக நின்றார்கள்.
பாடசாலை கலை இலக்கிய மன்றங்களில் என் பங்களிப்பபு பரிணமித்தது. கலை இலக்கியத்துறையில் எனக்கு ஆர்வம் ஊட்டியவரும் என் தந்தையே, பள்ளிப்படிப்பை அறியாத என் தந்தை வாசிக்கும் அறிவைப் பெற்றிருந்தார். அன்றைய இலக்கிய சஞ்சிகைகள் அனைத்திலும் ஆர்வம் கொண்டு வாசிப்பார். ஆனந்தவிகடன் சஞ்சிகைகளில் வரும் குறுக்கெழுத்துப் போட்டிகளில் கலந்து பரிசில்களையும் வென்றிருக்கிறார். சஞ்சிகைகளை வாசிப்பதோடு எங்களுக்கு கதை சொல்வார். வாசிக்க ஊக்கமூட்டுவார்.
இவ்வாறே அரசியல் பிரசார மேடைகளில் நடைபெறும் கூட்டங்கள், இலக்கிய விழாக்கள், கருத்தரங்குகள் என்று எல்லா வைபவங்களுக்கும் என்னை அனுப்பிவைப்பார். அவற்றிக்கு சென்று வந்த நான் அங்கே யார் என்ன பேசினார்கள் என்பதையெல்லாம் என் தந்தைக்கு விபரிக்க வேண்டும். அந்தக் கூட்டத்தில் பேசிய சிலரின் உரைகள் அடுத்த நாள் பத்திரிகையில் வந்திருக்கும், நான் சொல்ல மறந்த விடயங்கள் ஏதும் பத்திரிகையில் இருந்தால் அதை எனக்கு சுட்டிகாட்டி, இந்த விடயத்தை எனக்குச் சொல்ல மறந்துவிட்டியே என்று, கிரகிக்கும் சக்திக்கு உரம்விட்டு வளர்த்தார்.
இவ்வாறான வழி காட்டல்கள் தான் என்னை ஊடகத்துறைக்கும் இலக்கிய உலகுக்கும் கால்பதிக்க உந்து கோல்களாக அமைந்தன. இந்த வழிகாட்டல்கள் எத்தனை பேருக்கு கிடைத்திருக்குமோ தெரியாது. இதை நினைத்துதான், படிக்காத அப்பா படிப்பித்த பாடம்எனும் நினைவலைகளை நூலாக வடித்துள்ளேன்.
இவ்வாறு பெற்றோரினதும் ஆசிரியரதும் வழிகாட்டலில் அமெரிக்க மிஷன் பாடசாலையில் உயர்தர கல்வி கற்றேன். உயர்தர வகுப்பில் இடைவெளியில் விலகி யாழ் இந்துக் கல்லூரியில் இணைந்து உயர்தரத்தை நிறைவு செய்தேன். அமெரிக்க மிஷன் பாடசாலை காலத்து சமகால மாணவர்களாக நானும், இன்றைய அகில இலங்கை இந்து மாமன்றத் தலைவராகவும், பிரபல வக்கீலாகவும் இருக்கும் திரு. கந்தையா நீலகண்டனும் மன்றச் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளோம். இன்று வரை அதே செயற்பாட்டில் ஆர்வம் குறையவில்லை.
பள்ளி பருவத்தின் பின் முதல் காலடி வைத்த தொழில் பற்றி...
உயர்தர வகுப்பு முடிந்ததும், அரச லிகிதர் வேலைக்கு விண்ணப்பம் கோரியிருந்தார்கள். விண்ணப்பித்தேன். தேர்வு பெற்று என்னுடைய 19ஆவது வயதில் 1967ம் ஆண்டு ஜனவரியில் முதல் நியமனம் பொலிஸ் திணைக்களத்தின் தலைமையகத்தில், முதல்நாளே ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமான ஆவணங்கள் நிறைந்த கோப்புகளைத் தந்தார்கள். ஆங்கிலத்திலோ, சிங்களத்திலா தேர்ச்சியில்லாத நான் மலைத்துபோய்விட்டேன். இரண்டு மூன்று நாள் செய்வதறியாது திகைத்துப்போய் இந்த வேலை நமக்கு சரிவராது. வீட்டுக்கே போய்விடுவோம். என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
என் மேசைக்கு அருகில் கடமையாற்றிக்கொண்டிருந்த சிவகுரு என்ற கணக்காளர். என் அந்தரங்கமான நிலையைப் பார்த்து பரிதாபபட்டவராக, தம்பி, நீர் ஒன்றும் பயப்பட வேண்டாம். உமக்குத் தந்த கடித தொடர்பு வேலையை நான் செய்கிறேன். நான் செய்யும் கணக்காளர் தொழிலை நீர் செய்யும். அதில் மொழி பிரச்சினையில்லை. தனி இலக்கங்களைக் கொண்டு கூட்டல் கழித்தல்தானே என்று ஆறுதல் கூறி என் பணியை அவர் ஏற்று அவர் பணியை எனக்குத் தந்து கடவுளைப் போன்று உதவினார். அவர் தந்த ஆறுதலும் ஊக்கமும் என்னை அரச பதவியின் உச்சாணிக்கே கொண்டு வந்தது என்றால் அவருக்கே நான் நன்றி சொல்ல வேண்டும்
மொழி நம் தொழிலுக்கு இடையூராக இருக்கக் கூடாதென்று எண்ணி சிங்களத்தையும், ஆங்கிலத்தையும் பகுதிநேரங்களில் கற்றேன். அரச பணியாளர்களின் சிங்கள தேர்வு பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் நபராக தேறினேன். ஆங்கிலமும் சிங்களமும் இப்போது கைவந்த கலையாகியது. பதவிகளுக்குக் கைகொடுத்தது. 1978ஆம் ஆண்டு இலங்கை அரச நிர்வாக சேவை பரீட்சையில் சித்தியடைந்து படிப்படியாக என் பதவி உயர்வுகளுக்கு காலோச்சியது.
லிகிதராக இணைந்த நான் மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆணையாளராகவும், பின் மன்னார் - வவுனியாவிலும் கடமையாற்றினேன். 1983ம் ஆண்டு இனக்கலவரத்தையடுத்து இப்பதவியோடு பல்வேறு பொறுப்புகளையும் கையேற்று நடாத்த வேண்டியிருந்தது. இக்காலப் பகுதியில் வவுனியாவில் கடமையாற்றிய பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த ஊழியர்கள் கடமைக்கு வராதபடியால் எல்லா பொறுப்புகளையும் கவனிக்க வேண்டியிருந்தது. கடமைகளை செவ்வனே செய்து கொண்டிருந்த போது அன்றைய ஜனாதிபதியாக விருந்த ஆர்.பிரேமதாஸ வவுனியா வில் நடமாடும். சேவையொன்றை ஏற்பாடு செய்திருந்தார். என்னுடைய கண்காணிப்பில் நடமாடும் சேவையை ஒழுங்கு செய்து நிறைவாக நடாத்தியதை அவதானித்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ அவர்கள் உடனடியாக என்னை வவுனியா அரச அதிபராக நியமித்து நியமனம் வழங்கினார்.
மூன்று ஆண்டுகள் வவுனியாவிலும், கிளிநொச்சியில் மூன்று ஆண்டுகளுமாக அரச அதிபராகவிருந்து கடமையோடு கலை கலாசாரத்திற்குமான பங்களிப்பை நல்கி கொண்டி ருந்தேன். திருகோணமலையில் அவசரகால நிவாரணப்பணி ஆணையாளராகவும், பின் இந்து சமய திணைக்கள பணிப்பாளராகவும் கடமையேற் றிருந்தேன். அரச நிர்வாக சேவையில் அநேகமாக பல்வேறு திணைக்களங்களிலும் கடமை யாற்றிய அனுபவத்தோடு 1999ஆம் ஆண்டு கல்வி திணைக்கள மேலதிகச் செயலா ளராக பதவியேற்றேன். அதில் தொடராக பத்து ஆண்டுகள் சேவையாற்றக்கூடிய பாக்கியத்தைப் பெற்றேன்.
என்னுடைய சேவைக்காலங்கள் போர்காலச்சூழல் ஒவ்வொன்றும் சுவாரஸ்யம், சோகம், விகடம், பயம் கலந்த காலப்பகுதிகள் ஒவ்வொன்றையும் கதையாகச் சொல்லலாம்.
1995ஆம் ஆண்டில் இறுதிப் பகுதியில் யாழ். மாவட்டத்திலிருந்து இலட்சக்கணக்கானவர்கள் இடம் பெயர்ந்தபோது அது வரலாறு காணாத இடப்பெயர்வு என எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு கிளாலி வழியாக கிளிநொச்சி வந்தபோது கிளிநொச்சி அரச அதிபராக, அவர்களின் அத்தியாவசிய தேவைகளை வழங்கவேண்டிய பொறுப்பும் என் மீது சுமத்தப்பட்டது. இடம் பெயர்ந்த மக்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்கள் குறையென அபிப்பிராயம் சொல்லாத அளவுக்கு கடமையாற்றியதற்கு முன்னர் பெற்றுக்கொண்ட அனுபவம் உதவியது.
யாழ். மாவட்டத்திலிருந்து இடம் பெயர்ந்தவர்கள் கிளாலியூடாக வள்ளங்கள் மூலம் கரைக்கு வந்ததும் அவர்களுக்கு உடனடியாக சூடான தேநீரும் பிஸ்கட் போன்ற தின்பண்டமும் வழங்க ஒழுங்கு செய்தது. அயல் மாவட்டங்களான முல்லை, மன்னார், வவுனியா போவதற்கான பிரயாண ஏற்பாடுகளுக்கு சங்க லொறிகளைப் பயன்படுத்தியது, கிளிநொச்சியில் உறவினர் நண்பர்கள் இருந்தால் அவர்கள் வாழ்விடங்களுக்குச் செல்ல ஏற்பாடு செய்தது. யாருமில்லா விட்டால் வழிபாட்டுத்தலங்கள், பொது இடங்கள் ஆகியவற்றை தற்காலிக தங்குமிடங்களாக்கியது.
எல்லாவற்றுக்கும் மேலாக சாதாரண உடையுடன் அவர்களில் நானும் ஒருவனாக மாறி அவர்கள் கதைகளைப் பொறுமையாகக்கேட்டு ஆறுதல்வார்த்தைகள் சொல்லி நட்புறவைப் பேணியதால் பெரிய பிரச்சினைகளையும் சிரித்துக் கொண்டு சமாளிக்க முடிந்தது.
ஆபத்துக்குள்ளாகும் நிலையிலும் பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களின் பணம்சுமார் இரண்டு கோடி ரூபாவரையில் கிளிநொச்சியிலிருந்து வவுனியாவுக்கு கொண்டு சென்றேன். ஒருவருக் கொருவர் தெரியாமல் இரகசியமாக பணத்தை வாங்கி தபால் திணைக்களத்திலிருந்து இரவலாகப் பெற்றுக்கொண்ட வெள்ளை நிற தபால் பைகளுக்குள் பணத்தை கொண்டு சென்று வவுனியா மக்கள் வங்கியில், முகாமையாளர் கதிர்வேலாயுத பிள்ளையுடன் தொடர்பை ஏற்படடுத்தி கூட்டுறவுச்சங்கக் கணக்குளில் வைப்பில் இட்ட பின் தான் தேநீர்குடிக்க முடிந்தது.
சத்தம் போடாமல் மற்றவருக்கு சந்தேகம் ஏற்படாமல் பல விடயங்களைச் செய்யலாம் என்ற பாடத்தை வவுனியாவில் படித்துக் கொண்டேன். 
சத்தம் போடாமல் மற்றவருக்கு சந்தேகம் ஏற்படாமல் பல விடயங்களைச் செய்யலாம் என்ற பாடத்தை வவுனியாவில் படித்துக் கொண்டேன்.
1999ம் ஆண்டு கல்வித் திணைக்கள மேலதிகச் செயலாளராக நியமனம் பெற்று, பத்து ஆண்டு கலைசேவையில் பல வெளிநாட்டுப் பயணங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள் மூலம் கிடைத்த அனுபவங்கள் இலங்கை கல்வியியல் துறையில் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இலங்கை தமிழ்ப் பதிப்பகங்களை கல்வி இலாகாவிற்கு சந்தைப்படுத்திக்கொடுக்கக்கூடிய வாய்ப்புகள் கிடைத்தன. அரச ஓய்வுக்கு பின் உலக வங்கி, நிதி ஆணைக்குழுவில் மதியுரைஞராக பணியாற்றுகின்றேன்.
கால சுழற்சி, அரச சேவையில் இணைவதற்கு ஏற்பட்ட மாற்றத்தைப் பார்த்து வியப்படைகிறேன். என்னுடைய 19 வயதில் 1967ம் ஆண்டு பொலிஸ் திணைக்கள லிகிதராக சேரும்போது, லிகிதர் பரீட்சையில் தேர்வைப்பார்த்தார்கள். என்னைப்பற்றிய ஒருவித விசாரணையும் இல்லை. பணியில் உடனே சேர்த்துக் கொண்டார்கள். அதே திணைக்களத்தில் என்னுடைய 62வது வயதில் 2008ம் ஆண்டு பொலிஸ் ஆணைக்குழு பதவியில் என்னை சேர்ப்பதற்கு, என்னைப்பற்றிய ஓர் பெரியஆய்வு, நான்பிறந்த ஊர், தொழிலாற்றிய இடங்கள், வசிக்கும் வீட்டு சூழல் என்று துருவி துருவி புலனாய்வு செய்துதான் பதவியில் அமர்த்தினார்கள்.
வெளிநாட்டுப் பயணங்களின் அனுபவம்பற்றி...
மாணவர்களின் சீருடை வழங்குவ தற்கான புடவை கொள்வனவு ஒப்பந்தமொன் றுக்காக சீனா, டிப்ளோமா பயிற்சிக்காக பாகிஸ்தானில் இரண்டு வாரம், முகாமைத்துவ பயிற்சிக்காக பெங்கொக், கல்வி கருத்தரங்கிற்கென சீனா, கொரியா, இந்தியா, பின்லாந்து, சுவீடன், ஜேர்மன், இங்கிலாந்து என சுமார் இருபத்திரண்டு நாடுகளுக்கு விஜயம் செய்துள்ளேன்.கொரிய மக்கள் கடின உழைப்பாளிகள். நேரசூசிப்படி வேலை. நேரத்திற்கு உணவு. ஓய்வு, பயிற்சியென சுறுசுறுப்பாக தேனியைப் போல இருப்பார்கள்.
கனடா நாட்டிற்கு கல்வி சுற்றுலா மேற்கொண்டபோது, பாடசாலையொன்றுக்கு விஜயம் செய்தோம். அப்பாடசாலையின் அதிபர் தமிழரொருவர். இன் முகத்துடன் வரவேற்றார். ஆனால் தமிழ் பேசத்தெரியாது. எங்கள் வருகையைமுன்பே அறிந்து தன் தாயிடம் கூறியிருக்கின்றார். எங்களின் பாடசாலை விஜயத்தின் போது அதிபரின் தாயும் வந்திருந்தார். யாழ் பலகாரங்கள் வகைவகையாக செய்துகொண்டு வந்து எங்களுக்கு பரிமாறினார். தமிழிலேயே தாய் எங்களுடன் உரையாடினார். எங்களின்தமிழ் உரையாடலை அந்த அதிபர் ஆர்வத்தோடு பார்த்து ரசித்து, மேலும் தமிழிலேயே பேசுங்கள். கேட்பதற்கு ஆசையாக இருக்கின்றது என்றார்.
1977ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட இன கலவரமொ ன்றில் சிக்குண்ட சாவகச்சேரியைப் பிறப் பிடமாகக் கொண்ட தாங்கள் புலம்பெயர்ந்து கனடாவில் குடியேறியதாகவும் அந்தத் தாய் கூறினார். பிள்ளைகளுக்கு தாய்மொழி தெரியாமல் போனது துர்ப்பாக்கியமே என்று வருத்தப்பட்டார். அவருடைய உபசரிப்பு மனதை நெகிழ வைத்தது 
எழுத்து, கலைத்துறை பிரவேசங்கள் பற்றி...
எழுத்து, வாசிப்புக்கு குரு என் தந்தை தான். பள்ளிகாலத்திலேயே சஞ்சிகைக்கு ஆசிரியராக இருந்திருக்கிறேன். 1964ஆம் ஆண்டளவில் சுதந்திரன் பத்திரிகையில் மந்திர கண்ணாடி’, ராதா பத்திரிகையில், கடற் கன்னிதொடர் நல்ல வர வேற்பைப் பெற்றிருந்தது. இதன் தொகுப்பை நூலுருவில் வெளியிட்டு வவுனியா மகளிர் வித்தியாலய அபிவிருத்திக்கு உதவமுடிந்தது. முதல் சிறுக தைத் தொகுதி நிர்வாணம்நல்லதொரு பிரசித்தத்தைப் பெற்றுத்தந்தது. சிங்களத்தில் குருலுபொதஎன்று மொழி பெயர்க்கப்பட்டு பல பதிப்புக ளையும் கண்டுள்ளது. எம். டீ. குணசேனவின் வெளியீடாக வந்த கல்யாணம் முடித்துப்பார் வரிசையில் பல எழுத்து ஆக்கங்கள், சிறுகதை நூல்கள் என என் படைப்புகள் வாசகர்கள் மத்தியில் என்னை அடையாளப்படுத்தி நிற்கின்றது.
இலங்கை வானொலியில் இராசையா மாஸ்டர் சிறுவர் மலரில் வாய்ப்பு தந்தார். அதில் பதித்த கால் இளைஞர் மன்றம், உரைச் சித்திரம், நாடகம், பிரதியாக்கம், தயாரிப்பு என பரிணாமம் பெற்று என்னை கலைஞனாகவும் கலையுலகில் பரிணமிக்க வைத்திருக்கின்றது. நான் தயாரித்த பிரதியாக்கம் சங்கடமான சமையல், கணேஷபிள்ளையின் பிரதியாக்கத்தில் உருவான தலையணை மந்திரம் நேயர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற வானொலி நாடகங்களாகும்.
தங்களுக்கு கிடைத்த கெளரவங்கள்...
1993ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பி. தேவராஜ் அவர்களால் தமிழ் மணிகெளரவப் பட்டம் வழங்கப்பட்டது. அமெரிக்க மிஷன் பாடசாலை பழைய மாணவர்களின் சுவிட்சர்லாந்து கிளை உடுவைவித்தகர்நாமத்தைச் சூட்டி கெளரவித்தது. மானவ சமூக எழுச்சி மன்றம் மதியுடை சான்றோன்என்றும் வவுனியா கலை இலக்கிய வட்டம், கலை இலக்கிய செல்வர்கெளரவ விருதுகளையும் வழங்கியது.
அரச நிர்வாகியாகவும் கலை இலக்கியத்துறை வித்தகராகவும் திகழும் நீங்கள் கூறும் அறிவுரை...
அரச சேவையில் இணையும் இளம் தலை முறைகள் ஓய்வு பெறும் காலம் வரையிலான கடமை காலத்தில் தங்களுடைய ஆவணங்களை கோவைபடுத்திக்கொள்ள வேண்டும். நியமனக் கடிதம் முதல், பதவி உயர்வுகள், பதவி மாற்றங்கள், இடமாற்றங்கள், சம்பள நிர்ணயக் கடிதங்கள் என அத்தியாவசியப்படுகின்ற அனைத்து ஆவணங்களையும் பேணி வந்தால் சேவை ஓய்வு பெறும் காலத்தில் சுலபமாக ஓய்வுகால சகாய கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இவை சம்பந்தமான விரிவான கைநூல் ஒன்றையும் வெளியிட இருக்கின்றேன். இலக்கியத்துறையில் கால் பதிப்போர் வாசிப்பு, தேடல், சிந்தனையைக் கைகொள்ளுங்கள்.. அதுவே நல்ல அத்திவாரம்.
நன்றி-   “தினகரன்” வாரமலருக்காக சந்தித்து திரும்பிப்பார்க்க வைத்த அ.பரசுராமன், சந்திப்புக்கு ஏற்பாடு செய்து பிரசுரித்த செந்தில்வேலவர் ஆகியோருக்கு நன்றி….உடுவை