Wednesday, October 31, 2007

சுகமான காற்று

மூன்றாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தபோது அப்பா வேலை செய்யும் கடைக்குச் சென்றிருந்தேன். சுமார் பத்துப் பதினைந்துபேர் ஒரு பொருளைச் சுற்றிவரப் பதினைந்துபேர் ஒரு பொருளைச் சுற்றிவரப் புதினம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஆவல் மிகுதியால் நானும் அவர்களுக்கிடையே நுழைந்தபோது மூன்று பேர் புதிய மின்சார விசிறியைக் கூரையில் பொருத்திக் கொண்டிந்தனர். மூன்று நீளமான சிறகுகள் கொண்ட அழகான விசிறியை மேசையில் மேல் ஏறி நின்ற இருவர் பிடித்துக் கொண்டிருக்க நிலத்திலிருந்து கூரையைத் தொட்டுக் கொண்டுடிருந்த ஏணியில் ஏறி நின்றவர் நீளமான குழாயை வளைந்த கொழுக்கியில் கொளுவி மின்சார வயரை இணைத்தார். சுழல ஆரம்பித்த மின்விசிறியிலிருந்து வந்த காற்றை அனுபவிப்பதற்க்காக காரண காரியம் இல்லாமல் அடிக்கடி மின்விசிறிக்குக் கீழே வந்தவர்களுள் நானும் ஒருவன்.


என்னைப் பொறுத்தளவில் மின்விசிறியிலிருந்து வந்த காற்று குளிராகவும் சுகமாகவும் இருந்தது. ஆனால் அப்பாவோ அக்காற்று உஷ்ணமானது எனவும் தெரிவித்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சிறிது நேரம் நிற்கவே சுகமாயிருந்தால் அதன் கீழ் படுத்திருந்தால் எப்படியிருக்கும் என எண்ணிக் கற்பனைச் சுகம் கண்டேன்.

என் கற்பனைகேற்றவாறு அன்றிரவு அப்பா இரவு முழுவதும் கண் விழித்துக் குசினியில் வேலை செய்ய வேண்டியிருந்தது. நான் மேசைகளை மின்விசிறிக்குக் கீழே போட்டுக் கொண்டு விசிறியையும் ஆகக் கூடியளவு வேகத்தில் சுழலவிட்டேன். அதை யாரும் பார்க்கக்கூடாது என்ற எண்ணத்துடன் கதவையும் யன்னலையும் இறுக்கிப் பூட்டினேன். நித்திரை என்றால் அப்படியொரு நித்திரை. காலைப்பொழுது விடிவதற்கு சற்று முன்பாக அப்பா எழுப்பிய போது என்னால் சரியாக கதைக்கக் கூடி முடியவில்லை. தொண்டை கட்டியிருந்தது. கண்கள் சிவந்திருந்தது. உடம்பெல்லாம் ஒருமாதிரிக் கணகணவென்றிருந்தது. மின்விசிறியிருந்து சூடான காற்றுத் தான் வரும் என்பதை உணர முடித்தது. அப்பா சொன்னார் ‘’ மின்சார விசிறி சுழலும் போது அறைக்கதவு ஜன்னல்களை முடிந்தளவுக்குக்குத் திறந்து வைத்தால் காற்றோட்டம் சீராகி உடல் அலுப்பாவதையும் சூடாவதையும் குறைக்கும்” அதன் பின்பு மின்சார விசிறிக்குக் கீழ் இருக்கும் போது சூடான காற்றை அறையில் குறைப்பதற்காக கதவு ஜன்னல்களை நன்றாகத் திறந்த விடுவதால் முதல் நாள் ஏற்பட்ட திக்குமுக்காடல் இல்லை.

Friday, October 26, 2007

பேனாவை மட்டும் பிடித்தால் போதுமா?


அப்பா சாப்பாட்டுக் கடையில் சமையல் வேலை செய்தாலும் எனக்கு அத்தொழிலை பழக்கக் கூடாது என்று வற்புறுத்தி வந்தார். வீட்டுக்கு வரும் நாளிளும் சும்மா இருக்கமாட்டார். மண்வெட்டி, கோடரி, கத்தி அலவாக்கு என்று ஏதாவது ஒரு ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பார்.

வேலைக்குச் சேர்ந்த பின் விடுதலையில் சொல்லும் நான் வீட்டு வேலைகள் செய்யப் பின்வாங்கி வாசிப்பு, எழுத்து என்று பொழுது போக்கும் போது சொல்வார்- “பேனவை மட்டும் பிடித்தால் போதாது. மண்வெட்டி, கோடாரியும் பிடித்துப் பழக வேண்டும். குனிந்து நிமிர்ந்து வேலை செய்ய ப் பழகினால் வருத்தம் வராது. வீட்டு வேலைகளை நாங்களே செய்ய வேண்டும்” என்று சொல்வார்.

‘கொத்தும் போதும் வெட்டும் போதும் சிந்திக்கலாம். பிறகு அந்தச் சிந்தனையை எழுதலாம் என்பார்.

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையில் ஒரு போட்டி. அம்மா இறப்பதற்க்கு முன்பாக தான் இறக்க வேண்டும் என்பார் அப்பா. அப்பா இறப்பதற்க்கு முன்பாக தான் மஞ்சள் குங்குமத்துடன் போக வேண்டும் என்பார் அம்மா. அம்மா இறந்தபோது அப்பாவால் எப்படி அந்தத் துக்கத்தை தாங்கிக் கொள்ள முடிந்தது என்பது ஆச்சரியமே!

இறுதிக் கிரியைகள்- பல வேலைகள்- அந்தியேட்டிக்கான ஆயுத்தங்கள். எனக்கு பெருமளவில் நண்பர்கள். எனவே சமையலுக்கு விறகுக்காக லொறியில் பெரிய மரங்களைக் கொண்டு வந்தேன்.

‘கூலி ஆட்களைக் கொண்டு வந்து கொத்த கூடாது’ அப்பாவின் உத்தரவு.

தானே கொத்த தொடங்கினார். எனக்கு மனம் கேட்கவில்லை.

“ பணத்தை மிச்சம் பிடிப்பதற்காக கூலி ஆட்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. அம்மாவோடு வாழ்ந்த வாழ்க்கை நல்ல வாழ்க்கை. பிள்ளைகளாகிய நீங்கள் பணத்தைச் செலவழிப்பீர்கள். என்னிடம் உடல் வலு இருக்கின்றது. மனம் சோர்வடையவில்லை. அம்மாக்கும் எனக்கும் நடந்த போட்டிகளில்லெல்லாம நானே வெற்றி பெற்றிருக்கிக்கின்றேன். முதலில் யார் போவார்கள் என்ற போட்டியில் நான் தோத்து போய்ட்டேன். ஆனபடியினால் அம்மாவின் நினைவுக் சமையலுக்கு நானே விறகு கொத்துவேன்.”

அப்பாவை யாராலும் தடுக்க முடியவில்லை. ஏனென்றால் பேனா பிடிக்கும் எனக்கு மண்வெட்டியோ கோடரியோ பிடிக்கத் தெரியாது.

Wednesday, October 24, 2007

எண்ணிக்கை ஒரு நம்பிக்கை

சித்திரை வருடப் பிறப்பன்று இரவு சாமி கும்பிடும் அறையில் குத்து விளக்கை ஏற்றிவைத்து அப்பா அம்மாவுக்கும் எங்களுக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் கைவிசேடம் தருவார். வெற்றிலையில் நெல்மணி, மஞ்சள், தாள்காசு, சில்லறைக் காசு வைத்துத் தருவார். அம்மா மட்டும் காசோடு நெல்லு, மஞ்சள் எல்லாவற்றையும் எண்ணிப் பார்ப்பார். எண்ணும் போது உருப்படிகளின் எண்ணிக்கை ஒற்றை எண் உடையதாக இருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்ப்பு.

நான் சிறுவனாக இருந்தபோது அம்மா கைவிசேடம் வாங்கி உருப்படிகளை எண்ணி இருபத்தியெட்டு என்று சொல்லிக்கொண்டே என்னையும் எண்ணிப் பார்க்க சொன்னார். நானும் எண்ணியபோது இருபத்தியெட்டுதான் இருந்தது. ஆனால் அவற்றை அப்பா வாங்கி எண்ணும் போது இருபத்தியொன்பது இருந்தது.

எனக்கு திருமணமாகிய பின்னரும் சிலகாலம் அப்பாவிடம் கைவிசேடம் வாங்கினேன். அப்போது ஒரு நாள் அம்மா உருப்படிகளை எண்ணியபோது இருபத்தியெட்டு. நானும் எண்ணினேன் - இருபத்தியெட்டு. ஆனால் அப்பா அவற்றை வாங்கி எண்ணும் போது இருபத்தொன்பது. அப்பா வெகுஇலாவகமாக விரல்களிடையே மறைத்து வைததிருந்த ஒரு நெல் மணியையும் சேர்த்து இருபத்தொன்பதாக்கியதைக் கண்டு விட்டேன்.

“என்ன செய்வது, ஒற்றை விழத்தக்கதாக இருந்தால் அதிஸ்ரம் என்பது அம்மாவின் எதிர்பார்ப்பு. அவரை திருப்திப்படுத்த வேண்டும். இந்த விசயங்களில் மட்டும் அம்மாவை ஏமாற்றியிருக்கிறேன்” என்றார்.

“ஏன்! ஒரு நெல்லை சுகமாக மறைத்து விடலாம் தானே” என்றேன். இந்த விடயத்தில் ஒரு உருப்படி குறைந்தாலும் அம்மாவின் யோசனை கூடும். கூடினால் சந்தோசமாயிருப்பார். அதற்காக ஒரு நெல்லை விரல்களிடையே தந்திரமாக வைத்திருப்பேன்” என்றார்.

Friday, October 5, 2007

இரவு – பகல் - இரவு

“மயக்கும் மாலைப் பொழுதே வா வா
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா”

சிறுவனாக வாழ்ந்த காலத்தில் வீட்டில் பாட்டுக்கேட்கக் கூடிய வசதி இல்லா விட்டாலும் ஊரெங்கும் தொடர்ந்து நடக்கும் கொண்டாட்டங்கள் ஆலய திருவிழாக்கள் எல்லாவற்றிலும் அலறும் ஒலிபெருக்கிகளில் அடிக்கடி ஒலித்து மனதை கொள்ளைகொண்ட பாடல்களில் இதுவும் ஒன்று. “மாலை முழுதும் விளையாட்டு” என பாரதி பாடிய வண்ணம் விளையாடாவிட்டாலும் மாலைப்பொழுது மகிழ்ச்சியாகவும் கழிந்தது. இரவில் கணிசமான அளவு நேரம் படிக்க வேண்டும்.

இருந்தாலும் மேளச்சமா, பாட்டுக்கச்சேரி , வாணவேடிக்கை சப்பறம் சிகரம் என கலகலப்பூட்டிய இராத்திருவிழாக்கள் ஆடல்பாடல் நாடகம் நிறைந்த முத்தமிழ்க்கலைவிழாக்கள் இரவுப்பொழுதில் களிப்பைத்தந்தன. காலம் உருண்டோடி கல்லூரி நாட்கள் பின்னோக்கிச்செல்ல உத்தியோகம் கிடைக்க இரவெல்லாம் கண்விழித்துப்படிக்க வேண்டிய கட்டாயம் இருக்கவில்லை.

1977ம் ஆண்டு வரை சிலநாட்கள் மப்பும் மந்தாரமுமாக இருந்ததுண்டு. இரண்டொரு மூலைகளில் மின்னல் தோன்றி மறுகணம் மறைந்ததுண்டு. இடையிடையே இடிமுழக்கச் சத்தம் கேட்டதுண்டு. தூரத்தில் சில இடிமுழக்கம் விழுந்த கதைகளும் கேட்டதுண்டு.

1989ம் ஆண்டில் திருகோணமலையில் வடக்கு கிழக்கு மாகாணசபையின் ஆரம்பம். பிறமாவட்டங்களில் கடமையாற்றிய சிரேஸ்ட உத்தியோகத்தர்களான தமிழர்கள் மாகாண சபைக்கும் அதனோடிணைந்த அமைச்சுக்கள் திணைக்களங்களிற்கும் மாற்றப்பட்டனர். இடமாற்றப்பட்ட நான் கடற்றொழில் பணிப்பாளராகி பின்னர் உணவு கூட்டுறவு வர்த்தக அமைச்சின் சிரேஸ்ட உதவிச் செயலாளராக இருந்த நாட்களில் 1990 களின் ஆரம்பத்தில் முதலமைச்சர் ஈழப்பிரகடனம் செய்து இந்தியப் படையினருடன் ஈழத்தை விட்டுச்செல்ல மாகாணசபை ஆளுனரின் கீழ்க்கொண்டுவரப்பட்டது. ஆளுனரால் அமைச்சின் பதில்செயலாளராக நியமனம் பெற்று உத்தியோக விடுதி கிடைக்காவிட்டாலும் ஏனைய வசதிகளுடன் செல்வாக்காக வாழ்ந்த காலம்.

திருகோணமலையில் மத்திய வீதியும் கடல்முக வீதியும் சந்திக்கும் மூலையில் அமைந்த வீடு வாடகைக்கு கிடைத்தது. வீட்டின் சொந்தக்காரியும் அருகிலிருந்த அவரின் வீட்டில் குடியிருந்தார். அமைச்சு வாகனத்தில் திருகோணமலை எனக்கு அத்துப்படி. உயர் பதவிக்கப்பால் கலை இலக்கிய சமூகமுயற்சிகளால் என் முகமும் பெயரும் திருகோணமலை நகர மக்களிற்கு நன்கு பழக்கமானவை பிறகென்ன? பயமில்லாமல் எங்கும் போகலாம் என்னவும் செய்யலாம்.

1990 ஜீன் மாதம் முதலாம் திகதி புதன் கிழமை வழமைக்கு மாறாக அன்று மாலை சிறிது நேரம் முன்பாக அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டபோது மலை 7 மணியிருக்கும். போகும் வழியிலேயே அடுத்த நாள் முல்லைத்தீவு செல்ல வேண்டிய பயணத்திற்காக காரில் பெற்றோல் நிரப்பி ஏனைய ஏற்பாடுகளும் செய்து கொண்டேன். காரை வீட்டில் நிறுத்திவிட்டு கார்ச்சாவியை என்னிடம் தந்த போது சாரதி தேவராசா அடுத்தநாள் 5 மணிக்கு முல்லைத்தீவு செல்ல ஆயத்தமாக வருவதாக கூறிக்கொண்டு விடைபெற்றான். அலுலகக் களைப்பு தீரக்குளித்து வயிற்றுப்பிள்ளையாருக்கு அபிசேகம் செய்த பின் கந்தோரிலிருந்து கட்டிகொண்டு வந்த கோவைகள் கடிதங்களிற்குள் முகம் புதைத்தேன். எப்போது கட்டிலில் படுத்தேன் எனத்தெரியாது. கண்விழிக்கும் போது காலை 5 மணி.

சாரதி தேவராசா நேரத்திற்கும் மேலதிகாரிகளின் கட்டளைக்கும் மிகுந்த மதிப்பளிப்பவன். குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னதாகவே வந்து நாங்கள் கேற் திறக்கும் வரை பார்த்துக்கோண்டிருப்பது வழக்கம். கேற்றை மெது வாகத்திறந்து வைத்து விட்டு குளித்து ஆயத்தமாகி மீண்டும் கேற்றிற்கு வெளியே நோட்டம் விட்டேன். “தேவராசாவை இன்னும் காணவில்லை” என்று நான் சொன்ன போது……

“இரவு நீங்கள் நித்திரை இரவிரவாக வாகன ஓட்டமும் சன நடமாட்டமும் ஏதோ பிரச்சினை போலக்கிடக்கு” மனைவி சொன்ன போது தான் இரவிரவாக ஆட்கள் கதைக்கும் சத்தம் கேட்டதையும் கோணேசர் நகர்வலம் பாலம்போட்டாறு கோவில் பொங்கல் நேரத்தில் சன நடமாட்டம் இருந்ததைப்போல ஆரவாரம் இருந்ததை உணர்ந்தேன். நானும் மனைவியும் கதைக்கும் சத்தம் கேட்டுப்பக்கத்து வீட்டிலிருந்த வீட்டுச்சொந்தக்காரியும் அவரது மகளும் இடைக்கதவு வழியாக நாங்கள் நின்ற இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் சொல்லிய தகவல் “தம்பி ஏதோ பெரிய பிரச்சினை போலக்கிடக்கு அக்கம் பக்கம் ஒரு சனத்தையும் காணயில்லை. இரவிரவாக எல்லோரும் ஓடிப்போட்டுதுகள். நான் இந்தக்குமரையும் கூட்டிக்கொண்டு எங்கை ஓடுறது? ஆறு மணியாகி விட்டது. வெளிவீதிக்கு வந்து சற்று தூரம் அங்குமிங்குமாக நடந்து பார்த்தேன். எந்த உயிரினமும் இல்லை. நன்றாக கழுவிவைத்த பாத்திரங்களைப் போல் காட்சியளித்தன வீதிகள். பயங்கரமான அமைதியை இடையிடையே குலைத்தன படையினரின் வாகனங்கள். எனக்கும் பசிக்கவில்லை மனைவிக்கும் சாப்பாடு செய்ய வேண்டும் போலத் தோன்றவில்லை.

கதவை உட்புறமாக சாத்திவிட்டு ஜன்னலருகே கதிரையைப்போட்டு அதன் மேலேறி வீதிகளை நோக்கினேன். நான்கைந்து ஆட்கள் கொண்ட குழுக்களாகப் பல குழுக்கள் சிலர் சீருடைகளில். சீரற்ற பலவிதமான உடைகளில் பலர். ஏதோ பயங்கரம் நடக்கப் போகிறது என்றது உள்மனம்.

“நீங்கள் உதிலை ஏறி நிண்டு பார்க்க வந்தாலும் வந்திடுவாங்கள்” சத்தம் போடாமல் இருப்பம் என மனைவி சொன்னதும் மெதுவாக இறங்கி கேற்றருகே சென்று சங்கிலியில் பூட்டைக்கொழுவி றோட்டுப்பக்கமாக திருப்பிவிட்டேன். யாராவது வந்தால் வீட்டில் ஆட்கள் இல்லை என்று நினைக்கட்டும் இது எனது புத்திசாலித்தனமான ஐடியா. எனக்கு நானே சபாஸ் போட்டுக் கொள்வதற்கு முன்பாக தடதடவென பலர் ஓடி வரும் சத்தம். சோடாப் போத்தல்களின் உடையும் ஒலி. திருமணம் நீராட்டுவிழா போன்ற சமயங்களில் நாற்காலி கோப்பை கிளாஸ் போன்றவற்றை வாடகைக்கு விடுவதைப்பார்த்திருக்கிறேன். இவர்கள் குளிர்பானம் சோடா ஆகியனவும் விற்பதுண்டு.

சந்திக்கு வந்த சோடாப் போத்தல்கள் பந்துகளாகி தம் வாழ்வை முடித்துக்கொண்டன. தடிங் தடிங் என்ற சத்தங்கள் நான் நின்ற ஜன்னலோரம். ஜன்னலுக்கு பொருத்தப்பட்ட கண்ணாடிக்கதவுகள் சிதறித்தூளாக. சாரமணிந்தவர்களால் கேற்றுச் சங்கிலியும் ஆமைப்பூட்டும் இழுக்கப் படுகிறது.

துணிவை வரவழைத்துக்கொண்டு கொஞ்சம் பொறுங்கோ என சிங்களத்தில் சொல்லிக்கொண்டு வெளியே வந்து ஆமைப்பூட்டைத் திறந்தேன். வந்தவர்களின் ஒருவன் உரத்த குரலில் நீ யார்? அமைச்சின் செயலாளர் என்ற பதிலால் அவர்கள் திருப்திப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வீட்டைச்சோதனையிட வேண்டுமென்றனர்.நான் மறுப்புத்தெரிவிக்க வில்லை. வாசலில் வரிசையாக மூன்று சோடி செருப்பு. அதனை வைத்து ஆறு பேர் அந்த வீட்டில் இருப்பதாகவும் அவர்களைக் கூப்பிடும் படியும் கட்டளை.
காலணிகள் 12ம் எனக்குரியவை ஒவ்வொன்றாக அணிந்து கொண்டே பாவிக்கும் சந்தர்ப்பங்கள் விளக்கப்பட்டன. ஒருவாறாக சோதனை உரையாடல் நிறைவு பெற இரவாகி விட்டது. ஓவ்வொருவரும் சாப்பாட்டைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார்களே ஒழிய தவிர செயலில் ஒருவரும் இறங்கவில்லை .எனது பரிசோதனை முயற்சிகளால் தங்கள் உடல் நலம் பாதிக்கப்படக் கூடுமென்பதால் மூன்று பெண்கள் சேர்ந்து நான்கு தேனீர் தயாரித்த போது எனக்கும் ஒன்று கிடைத்தது.

சில பெண்கள் வழமையாகப் பயந்த சுபாவம் உடையவர்கள். கணவன்மாரை பயப்படுத்துவது வேறு கதை. மூன்று பெண்களும் சேர்ந்த பகல் பொழுதில் நடந்த சிறு சிறு சம்பவங்களிற்கு தங்களால் முடிந்தளவு பயத்தைய+ட்டி கதைவிட்டுக்கொண்டிருந்தனர் முசுப்பாத்திக்கட்டை எனப் பெயரெடுத்த நான் “இடுக்கண் வருங்கால் நகுக”என ஆரம்பிக்க படபடவென வெடிசத்தங்கள் கட்டிடங்கள் இடிந்து விழும் ஒசை. விரைந்தோடும் வாகனங்களின் இரைச்சல் நாங்கள் இருந்த பகுதிகளில் சுற்ற வர யாரும் இல்லை. என்பது பகலில் நாங்கள் தெரிந்து கொண்ட ஒன்றாகும். அப்படியானால் வீடுகள் கடைகள் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்படுகின்றன. அல்லது பொருட்களிற்கு சேதமும் எரிய+ட்டலும் நடக்கின்றன. என ய+கித்துக் கொண்டோம். வீட்டுக்காரர் சமயலறைப்பகுதியில் இடமிருப்பதாக கூறிக்கொண்டு என்னையும் மனைவியையும் விட்டுச்சென்றனர்.

எனது ஆலோசனையை மனைவியும் ஆமோதித்தாள். வீட்டுக்குள் நுழைபவர்களிற்கு பொருட்களை எடுப்பது அல்லது அழிப்பது தான் நோக்கமென்றால் நாங்கள் இருப்பது அறிந்தால் முதலில் எங்களிற்கு ஏதும் செய்யக்கூடும். எனவே நாங்கள் வீட்டுக்கு பின்பக்கம் உள்ள கிணற்றடியில் ஒழிந்திருப்பது என்ற தீர்மானம் நிறவேற்றப்பட்டது. சில இடங்களில் தீவைப்பினால் ஏற்பட்ட வெளிச்சமும் ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களின் வெளிச்சமும் தான் மற்றும் படி மையிருட்டு. இருக்கிற பொருள் எல்லாம் போனாலும் பரவாயில்லை இந்தப்பக்கம் வரக்கூடாது என்பது பிரார்த்தனை. வந்தால் அவர்களால் ஆபத்து எற்படுவதற்கு முன்பாக கிணற்றுக்குள் குதித்து கதையை முடித்துக்கொள்வதாக இன்னுமொரு தீர்மானம். குதிப்பதற்கு ஆயத்தமாக கிணற்றுக்கட்டில் இருக்கும் போதுகூட நித்திரையில் தவறிவிழுந்து விடக்கூடாது என்பதில் கவனம். இப்படியாக இ(ரு)னிக்கும் இன்ப இரவு மெல்ல மெல்ல விடிந்தது.

ஓரிடத்திலும் ஆள்டநடமாட்டமோ சத்தமோ இல்லை. சில உடுப்புக்கள் முக்கியமான அவசரத்திற்;கு உதவக்கூடிய பொருட்கள் நகை பணம் இரண்டு பைகளிற்குள் திணிக்கப்பட்டன. என் கையிலொன்று மற்றது மனைவி கையில். நீண்டு கிடக்கும் கடல்முக விதிவழியே உள்துறைமுக வீதியை நோக்கி ஓட்டம்கலந்த வேகநடை பிரதான வீதியைத்தாண்டியதும் வீடுகளிலிருந்வவாறே எங்களிருவரையும் நோக்கும் இரண்டொரு முகங்கள். அவை சிரிக்கி;ன்றனவா? அழுகின்றனவா ஏங்குகின்றனவா இரங்குகின்றனவா யாருக்குத் தெரியும். நின்று பார்க்க முடியாத நிலை செல்வச்சந்நிதி ஸ்ரோர்சை அண்மித்த போது வீட்டுக்க வெளியே வீதி வரை நீண்ட கரம் எங்களை உள்ளே வருமாறு அழைத்தது கையை நீட்டித்தடுத்த நண்பர் மகேந்திரன் படையினர் மற்ற வீதியால் முன்னேறி வருவதாகவும் உடனடியாக வீட்டிற்கு வரும்படியும் அழைத்தார். மகேந்திரனுடன் அவர்மனைவி அவர் மனைவி விஜயமும் பிள்ளைகள் அருணும் சோபியாவும். சேர்ந்தழைத்ததால். அவர்கள் வீட்டினுள் புகுந்து சில வினாடிகள் கூட ஆகியிருக்காது. திமு திமு என நுழைந்த படையினர் என்னையும் மகேந்திரனையும் இழுத்தனர். என்னைவிட சரளமாக சிங்களத்தில் உரையாடக்கூடிய ஆற்றல் மகேந்திரனுக்கு.

சினிமா நட்சத்திரங்கள் போலப்பெயரும் புகழும் பிரபலமும் பெற்ற இராணுவப்படைவீரர் டென்சில் கொப்பேக்கொடுவ 1987ல் வவுனியாவில் சிங்களத்தில் ஆற்றிய உரையை சமகாலத்தில் தமிழில் நான் மொழிபெயர்த்த படம் வெளியான தமிழ் தினசரியைக் காட்டியே யாழ்ப்பாணத்தில் படையினரை தான் சமாளித்ததாக மாமா சொல்லுவார் அந்தப்படத்தின் ஒரிஜினல் பிரிண்டும் படையினரை திருப்திப்படுத்த வில்லை பெண்களின் அழுகுரலுக்கும் செவிசாய்க்காத படையினரால் முதலில் கொண்டு செல்லப்பட்ட இடம் மணிஸ்கபே சந்தி .

காலை எட்டரைக்கு மணிஸ்கபே சந்திக்கு நாங்கள் வருவதற்கு முன்பாக சுமார் 500 பேர் நிலத்தில் இருத்தி வைக்கப்பட்டிருந்தனர். எங்களுக்குப் பின்னரும் பலர் சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தனர் இருத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு கீழே உருகும் தாரின் வெப்பம். வெய்யிலும் மண்டையைப்பிளக்க வைத்துக்கொண்டிருந்தது. எரிய+ட்டப்பட்ட இடங்களிலிருந்து வந்த புகை எரிச்சலையும் நீரையும் வரவழைத்தது. இவையெல்லாம் ஏன் எதற்கு என்பதுதான் யர்ருக்கும் தெரியாத சங்கதிகள். சுமார் 11மணிக்குப் பிறப்பிக்கப்பட்ட கட்டளை மணிஸ் கபே சந்தியிலிருந்து வரிசை பிசகாமல் திருஞானசம்பந்தர் வீதி கடல்முக வீதிவழியாக பிரதான வீதி வழியாக ஓடி முற்றவெளிக்குச்செல்ல வேண்டும். மெதுவாக ஓடுவதற்குக் கூடப்பழகாத என் செல்ல வண்டியில் படைவீரன் ஒருவனுக்குப் பொறாமை என்றாலும் நல்லவன். கையில் வைத்திருந்த தடியினால் வண்டிக்கு மட்டும் தண்டனை வழங்கினான். நண்பகல் 12 மணிக்குச்சற்று முன்னர் ஓட்டப்போட்டியில் விரும்பாமல் பங்குபற்றியோர் முடிவிடமான முற்றவெளி வாசலை அண்மித்தபோதுதான் திருகோணமலையின் பல்வேறு இடங்களில் ஆரம்பமாகிய ஓட்டப்போட்டிகளின் முடிவுப்புள்ளி முற்றவெளி என்பதை அறியக்கூடியதாகவிருந்தது. பல்லாயிரக்கணக்கான ஓட்டப்போட்டியாளர்களால் வரலாற்றிலேயே திருகோணமலை முற்றவெளி முதன்முறையாக நிரம்பியதாக பலர் சொல்லக் கேட்டேன். அன்றுதான் முற்றவெளி சமரசம் உலாவும் இடமாகத்தெரிந்தது.

சாதிகள் மட்டுமல்ல உயர் உத்தியோகத்தினர் இடைநிலையினர் பெரும்பணக்காரர் பிச்சைஏற்போர் எல்லோரும் வெறும் நிலத்தில் இருத்தி வைக்கப்பட்டு வெயில் சூட்டிற்கு மத்தியிலும் நன்கு கவனிக்கப் பட்டனர். முதன்முறையாக முற்றவெளிக்கு வந்தோரும் இதில் அடங்குவர். அலுப்பு நித்திரை பயம் எல்லாவற்றையும் விட கொடுமையாக இருந்தது தண்ணீர்த் தாகம். இரக்கமுள்ளவர்களும் இருக்கிறார்கள் என்பது போல மைதானத்தின் ஒருபுறமாக தண்ணீர்த்தாங்கி வந்து நின்றது. ஒரு கிளாஸ் தண்ணீருக்காக தயாரான நிலையில் ஆயிரக்கணக்கானோர். நிலைமையை எப்படிக்கட்டுப்படுத்துவது என்று பயிற்சி பெற்றிருப்பார்கள் போல தாங்கியிலிருந்து நீரை எடுக்க ஒரேயொரு குழாய். குழாயிலிருந்து நீரை ஏந்திக் குடிக்க ஒரேயொரு கிளாஸ். எல்லோரும் வரிசையில் வரவேண்டுமென கட்டளை பிறப்பிக்க ஒரு துப்பாக்கி. துப்பாக்கி இல்லாவிட்டால் தண்ணீருக்காக பெரிய போராட்டமே நடந்திருக்கும். நீண்ட வரிசையில் நின்று குடிக்க தண்ணீர்த்தாகம் மேலும் அதிகரித்தது. நேரம் மாலை நான்கு மணி. மேடையிலிருந்து ஓர் அறிவிப்பு ஓவ்வொருவரும் அடையாள அட்டையுடன் வந்து கையெழுத்திட்டபின் செல்லலாம். முதலில் குருமார் அடுத்து வங்கியாளர் பின்னர் ஒவ்வொரு திணைக்களங்களாக என்னுடன் வேலை செய்பவர்கள் எல்லோரும் என்னை மேடை வரை தள்ளிக்கொண்டு சென்றனர். என்னை அறிமுகம் செய்யும் முயற்சி-டென்சில் கொப்பேக்கடுவவுடன் நான் எடுத்த புகைப்படத்தையும் காட்டமுயற்சி. அந்த அதிகாரியால் தள்ளிவிழடப்பட்டு தடுமாறிவிழும் நிலை. என்னைக் கவனித்த சிப்பாய் இன்னொரு அதிகாரியிடம் விரைந்தோடுவது தெரிகிறது அந்த அதிகாரி என்னைத்தள்ளி விழுத்திய அதிகாரி அருகே வந்து நின்று என்னை வரச்சொல்லி சைகை காட்டல் என்னையறியாமல் இரண்டு அதிகாரிகளிற்கும் மத்தியில் நான்.

தள்ளிவிட்ட அதிகாரியை மற்ற அதிகாரி ஏசிய போதுதான் என் நெஞ்சில் தண்ணீர் வந்தது. “இவர் இன்ன இடத்தில் வேலை அமைச்சர்கள் வரும் போது இவரின் காரையும் நாங்கள் பாவிப்பம்” எனது உத்தியோகக் கார் இடையிடையே படையினரால் பாவிக்கப்பட்ட கதை சாதாரண சிப்பாயினால் அதிகாரிகளிற்கு தெரிவிக்கப்பட்டதை அறியமுடிந்தது. தள்ளிவிட்ட அதிகாரி என்னை மன்னிக்கும்படி என்னிடம் வேண்டுகோள் “மன்னிப்பு கேட்க வேண்டாம் என்னுடன் வேலை செய்பவர்களையும் விடுவிக்கவேண்டும்” இது நான் “இப்ப நீங்க போங்கோ கொஞ்ச நேரத்தில அவையை விடுவம்” இது அதிகாரி. எனது பிடிவாதம் “அவர்கள் இல்லாமல் நான் போக மாட்டேன்.” மகேந்திரன் என் காதில் சொன்ன ரகசியம் நீங்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வெளியில் போங்கோ. எங்களையும் வெளியில எடுக்கிறதுக்கு அலுவல் பாருங்கோ வெளியே வந்த என் கண்ணில் பிள்ளையார் கோவிலும் காளிகோவிலும். கோவிலுக்கு முன்னால் ஓர் அம்மா சற்று வயதானவர் என்னை அழைக்கிறார். “வாங்க மகன் தண்ணி குடியுங்க”.அவருக்கு முன்னால் தங்கக் குடம் தகதக வென்று பிரகாசத்துடன் குடம் நிறைய பளிங்கு போலத் தண்ணீர் தண்ணீரைக் கைபடாமல் அள்ளித்தர கைப்பிடியுடன் கூடிய வெள்ளிப்பாத்திரம் குடத்துக்குப் பக்கத்தில் மரப்பெட்டியின் மேல் வலு சுத்தமான எவர்சில்வர் ரம்ளர்கள் தண்ணீர்த்தாக வெறியினால் கைகளிரண்டும் போட்டி போட்டுக்கொண்டு எவர் சில்வர் ரம்ளர்களை வாயருகே கொண்டு செல்வதுதான் தாமதம் நாவை முந்திக்கொண்டு வயிறு தணணீரைக்குடிக்கிறது. எவ்வளவு சுவையான பெறுமதி மிக்க பானங்களை ஒதுக்கியிருக்கிறேன் எதுவுமே அன்று குடித்த தண்ணீருக்கு ஈடாகாது. பேச்சிழந்த நிலையில் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் வைத்து தாயைக்கும்பிடுகிறேன். “நன்றி”என்ற சொல்லுக்குப் பதிலாக.

“தம்பி எனக்கொரு உதவி செய்வீங்களா” அவர் என்னைக்கெஞ்சுகிறார். வார்த்தைகள் வராத நிலையில் அவளைப்பார்த்ததன் அர்த்தம் என்ன உதவி? இந்த தண்ணீர்ப்பானையைக் கொண்டு முத்தவெளிக்கு போக ஒழுங்கு செய்தால்.... அம்மாவுக்கு எவ்வளவு பெரியமனம். “பாப்பம்” என்றதும் அம்மாவின் முகமலர்ச்சியைப்பார்கக் வேண்டுமே? யாரையாவது கேட்டுப்பார்ப்போம் என முற்றவெளி நோக்கித் திரும்பிய போது முற்ற வெளி நோக்கி ஓடிய வேகத்திலும் பார்க்க வேகத்தில் விடுதலையாகிய ஓட்டப்போட்டியாளர்கள் மகிழ்ச்சியோடு. இப்படி பகல் ஒன்று இரண்டு வந்தால் தாங்கிக்கொள்ளலாம் இருப்பினும் எல்லோராலும் தாங்கிக்கொள்ள முடியுமா?