Friday, December 27, 2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின் "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013

வவுனியாவில் தமிழ்மணி அகளங்கனின்
 "கம்பனில் நான் ' நூல் வெளியீடு -16-12-2013
 உடுவை எஸ்.தில்லைநடராஜா வுக்கு  தமிழ்மணி அகளங்கன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்
உடுவை எஸ்.தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார் 

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலை இலக்கிய விழா 05-12-2013

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச
 கலை இலக்கிய விழா 05-12-2013
 வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச கலாசார பேரவையின் கலைஇலக்கிய விழாவும் ,திருவுடையாள் மலர் வெளியீடும் 05-12-2013 அன்று கரவெட்டியில் நடைபெற்ற போது விருந்தினர்கள் பிரதேச செயலாளராலும் கலாசார உத்தியோகத்தராலும் வரவேற்கப்படுகின்றனர்
 சிறப்பு விருந்தினர் உடுவை தில்லைநடராஜா பிரதேச செயலாளர் சிவஸ்ரீ யால் கௌரவிக்கப்பட்டார்
 பிரதேச செயலாளர் சிவஸ்ரீ தலைமையில் உடுவை தில்லைநடராஜா சிறப்புரையாற்றினார்
 விழா மேடையில் வடமாகாண கல்வியமைச்சு செயலாளர் சத்தியசீலன் .பிரதேச செயலாளர் சிவஸ்ரீ உடுவை தில்லைநடராஜா மேலதிக அரச அதிபர் ரூபிணி வரதலிங்கம் கலாசாரபணிப்பாளர் ஸ்ரீதேவி ஆகியோர்
 சங்கீதபூஷணம் குமாரசாமிக்கு உடுவை தில்லைநடராஜா பொன்னாடை போர்த்தி விருது வழங்கி கௌரவித்தார் 

Tuesday, December 3, 2013

கொழும்பு தமிழ் சங்க நிர்வாக உத்தி யோகத்தருக்கு கௌரவம்

கொழும்பு தமிழ் சங்கத்தில் 30-11-2013 இணுவில் திருவூர் ஒன்றியம்  ஒழங்கு செய்த 'இணுவில் ஒலி ' நடாத்திய  மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி ,விருது வழங்கல் ,'தாயக ஒலி ' வெளியீட்டு விழாவில் தமிழ் சங்க நிர்வாக உத்தியோகத்தர்( முன்னாள் யாழ் மத்திய கல்லூரி அதிபர் ) திரு ஓங்காரமூர்த்திக்கு  உடுவை எஸ் தில்லைநடராஜா பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி கௌரவம் செய்தபோது 

Sunday, December 1, 2013

உடுவை எஸ்.தில்லைநடராஜாவுக்கு பாராட்டு விழா

உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவன் உடுவை எஸ் .தில்லைநடராஜா வின் ஐம்பது வருட கலை இலக்கிய பணிகளை பாராட்டி உடுப்பிட்டி அ.மி.கல்லூரி பழைய மாணவர் சங்க கொழும்பு கிளை 24-11-2013 ஞாயிறு பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் கௌ ரவிப்பு விழாவை நடாத்தியது
பாராட்டு நிகழ்வில் பலர் கலந்து கொண்டனர்
விழா நிகழ்வுகளை கொழும்பு கிளைச் செயலா ளாரும் முன்னாள் தொலை தொடர்பு திணைக் கள பொறியிலாளருமான என் .சரவணபவன் நெறிப்படுத்தினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி பழைய மாணவர் தாய்ச் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் கலந்து கொண்டு பழைய மாணவன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
நிகழ்வில் அ .மி .கல்லூரி அதிபர் ஜி .கிருஷ்ணகுமாரும் கலந்து கொண்டு தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
கலாநிதி ஏ .நவரத்னராஜா (இடது) கலாநிதி எம் .கோபாலசுந்தரம் ஆகியோர் தில்லைக்கு பொன்னாடை போர்த்திக் கௌரவித்தனர்
எம்.சபாரத்தினம் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுப்பிட்டியிலிருந்து வருகை தந்த தாய் சங்க செயலாளர் எஸ்.கனகசபையும் மலர்மாலை அணிவித்துக் கௌரவித்தார்
உடுவை தில்லையை உடுப்பிட்டி அ.மி .கல்லூரியும் கௌரவிக்க ஒழுங்கு செய்வதாக அதிபர் தெரிவித்த போது கொழும்பு செயலாளர் உட்பட சபையோர் வரவேற்றனர்
சங்க உப தலைவர் -முன்னாள் தேசிய வீடைமைப்பு அதிகார சபை மாவட்ட முகாமையாளர் த .சிவநாதன் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -முன்னாள் மின்சார சபை பிரதி பொது முகாமையாளர் ஆர் .முத்துரத்தினானந்தன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க காப்பாளரும் முன்னாள் ஆசிரியருமான ஆர். பொன்னம்பலமும் தில்லையை வாழ்த்தி உரையாற்றினார்
முன்னாள் கட்டிடங்கள் திணைக்கள பணிப் பாளரும் பிரபல பாடகருமான த .கிருஷ்ணன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
முன்னாள் ஆசிரியர் த.நடராஜாவும் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
சங்க உப தலைவர் -அகில இந்து மாமன்ற தலைவர் கந்தையா நீலகண்டன் தில்லையை பாராட்டி உரையாற்றினார்
உடுவை எஸ் .தில்லைநடரஜா நன்றி தெரிவித்தார்




Wednesday, November 27, 2013

அஸ்மின் எழுதிய "பாம்புகள் குளிக்கும் நதி " கவிதை நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை

எனது ''பாம்புகள் குளிக்கும் நதி'' நூல் வெளியீட்டு விழாவின்போது கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், எழுத்தாளர் உடுவை தில்லை நடராசா அவர்கள் ஆற்றிய உரை...

இப்போதெல்லாம் தினமும் எங்காவது ஓர் இடத்தில் நூல் வெளியீடு .அதுவும் கவிதை நூல்கள் அதிகம். இன்றும் கூட இளம் கவிஞன் அஸ்மினின் “பாம்புகள் குளிக்கும் நதி “ கவிதை நூல் வெளியீடு வெகு சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது . வழமையான நூல் வெளியீடு போல இல்லாமல் குளிருட்டிய மண்டபம் நிறைய மகிழ்ச்சியான ஆர்வலர்களுடன் பெறுமதியும் கனதியும் இணைந்த கவிதை நூல் வெளியீட்டின் ஒவ்வொரு அம்சமும் வித்தியாசமானதாகவும் சிறப்பானதாகவும் அமைத்திருப்பது பாராட்டுக்கு உரித்தாகும் .

பொன்னாடைகள் பூமாலைகள் புகழ்மாலைகள் என்றில்லாமல் நூலைப் பற் றியும் நூலா சிரியர் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்படும் அதே வேளை பல முக்கியமான தகவல்கள் பல்லூடக வழி தெளிவாக திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. திரைப்படங்களில் இடம் பெற்ற கவிஞரின் பாடல்களோடு மலேசியாவில் அவரது புலமையையும் திறமையையும் பாராட்டிய அவையையும் நாங்கள் தரிசிக்க முடிந்தது

நெடுந்தூரமிருந்து வருகை தந்த வாசகர் வட்டத்தை வைத்தே நண்பர் அஸ்மினின் நட்பின் வீச்சை எடை போடலாம் 

அழகான அளவான நல்ல நல்ல சொற்களைத் தெரிந்தெடுத்து பொருளும் கருத்தும் சேரத்தக்கதாக அமைத்து விட்டால் அது கவிதை .இசையோடு பா டத்தக்கதாக அமைத்து விட்டால் அது பாடல் .திரைப்படத்துக்கு ஏற்றபடி அமைத்து விட்டால் திரைப்படப்பாடல்.
கவிதையோ பாடலோ எவ்வளவு தான் நன்றாக அமைந்து விட்டாலும் அது திரைப்படம் என்ற வாகனத்துகக்கூடாக பயணிக்கும்போது பலரை சென்றடைகின்றது.
இலங்கையில் சிலர் திரைப்படபாடல்களை எழுதினாலும் அது இலங்கைத் திரைப்படம் என்ற சிறிய வட்டத்துக்குள் –எமது வானொலி எமது தொ லைக்காட்சி என மட்டுப் படுத்தப்பட்டதால் பலரைச்சென்று சேரவில்லை என்பது என கருத்து .இருப்பினும் அஸ்மின் பாடல் எழுதிய நேரம் நல்ல நேரம் .இந்திய திரைபடத்தில் இடம்பெற்று  இந்திய வானொலி –இந்திய தொலைக்காட்சி என பரவலாக ஒலி –ஒளி பரப்பப்பட்டதால் அது பல இடங்களையும் சென்று சேர்ந்திருக்கிறது
அகராதியிலோ அல்லது நாம் பேசுகின்ற .-எழுதுகின்ற மொழியிலோ உள்ள சொற்களை எல்லாம் சாதாரணமாகப் பலர் கருத்தில் கொள்வதில்லை -கவனிப்பதில்லை . கவனம்  எப்படியென்றால் ---
எங்கள் வீட்டுக்கு முன்னால் நல்ல வெள்ளை நிற மல்லிகைப் பந்தல். காலையில் பார்க்கும்போது பூக்கள் மிக அழகாக இருக்கின்றன. அதை  அடுத்த வீட்டுப்பெண் தனது மெல்லிய கைகளால் கொய்து மாலையாகக் கட்டும் போது  அந்த மல்லிகை மாலை மேலும் அழகாக இருக்கிறது. மாலையில் அந்த மாலையை அவள் கூந்தலில் சூடி  வரும் போது இன்னும் மின்னும்  வெகு அழகாக எடுப்பாக இருக்கிறது.

கவிஞர்களும் இப்படித்தான் இனிமையான சொற்களைத் தெரிந்தெடுத்து அழகாக சேர்த்து வார்த்தை ஜாலம் காட்டி மயங்க வைப்பார்கள் . பாரதி பாடினார் அல்லவா  ?

“சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
பிள்ளைக்கனியமுதே –கண்ணம்மா
பேசும் போற்சித்திரமே –
அள்ளியணைத்திடவே –என முன்னே  ஆடி வரும்  தேனே”
பாரதியார் உயிர் பிரிந்த பின் கூட இந்தப்பாட்டின் வரிகளிலிருந்து இரண்டு புதிய பாடல்கள் தோன்றி  இருப்பது போல  நான் உணர்வதுண்டு
ஒரு பாடல் –
பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திட வேண்டும் .அதை அள்ளிக் கையால் அணைத்திட வேண்டும்” .
மற்றது –“ ‘பேசும் பொற் சித்திரமே ‘ என்ற வரி மாறுகிறது –
 “ சித்திரம் பேசுதுதடி-என் சிந்தை மயங்குதடி “
இன்றைய விழா நாயகன் இளங்கவிஞன் அஸ்மின் எழுதிய “பாம்புகள் குளிக்கும் நதி” நூல் வெளியீடு பற்றிய தகவல்கள் சில நாட்களாக முகநூலில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அவற்றில்  ஒருவர் தெரிவித்த கருத்து –‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்பதற்குப் பதிலாக பாம்புகள் குளிக்கும் நதி என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்  என்பதே அது
கவிஞனுக்குத்தான் எதனை என்னமாதிரி எழுதவேண்டும் என்பது சரியாகத் தெரியும்

.” சின்னஞ்சிறு கிளியே – “ பாடலில் குழந்தை நடந்து வருவதை பார்த்த கவிஞர் குழந்தையை ‘ஆடி வரும் தேனே ‘ என்று அழகாகப் பாடுகிறார் .சிறு குழந்தை நடக்க மாட்டாது –ஓடவும் முடியாது ஆடி ஆடித்தான் தள்ளாடி வரும் .அதனால்தான் பாரதியார் “ஆடி வரும் தேனே “ எனப்பாடுகின்றார் .

யாழ்பாணத்தில் நாங்கள் கீரிமலைக்கு நீந்தப் போவது வழக்கம்  இருந்தாலும் குளிக்கப்   போறோம் என்று தான் சொல்வோம் . அது போலத்தான் அஸ்மின் “பாம்புகள் குளிக்கும் நதியைக் கவிதையில் காண்பிக்கின்றார் 
.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால்  தமிழ் இலக்கியங்களைச்சிறிது படித்து தமிழ் பாடல்கள் கேட்டு இளைஞனாக  இருந்த காலத்தில்தான் நேரம் போகாது. பிறகு ஒருத்தியை பார்த்த பின் நேரம் கட கட என ஓடத் தொடங்கியது உண்மையாகச் சொன்னால் நேரம் காணாது .நான் இப்படி நினைத்ததை கவிதை மாதிரி எழுதினேன் .பத்திரிகையில் வெளியானது கவியரங்கிலும்  ஏற்றி விட்டார்கள் பத்திரிகைக்காக ஒரு தரம் எழுதியதியதை கவியரங்கில் இரண்டு தரம் வாசித்தேன் இப்படி:-

“நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை
நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை –அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை – அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை “
என்றதும் –
போதும் இறங்குதில்லை’   “போதும் இறங்குங்கோ தில்லை’ –
என கவியரங்கில் இருந்து என்னை இறக்கிவிட்டார்கள்

இப்போது ஒரு திரைப்படப்பாடல் அடிக்கடி ஒலிக்கிறது
பாடல் இதுதான்
 “ பூக்கள் பூக்கும் தருணம் “ பாடலில்
‘நேற்று வரை நேரம் போக வில்லை –உனதருகே
நேரம் போதவில்லை ‘
பாடல் கவித்துவத்துடன் இசையோடு ஓசையும் சேர்ந்து அமைத்தால் செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் தரும்  அது காலமெலாம் நிலைத்திருக்கும்

சிறு வயதில் யாழ் திறந்தவெளியரங்கில் பார்த்து மகிழ்ந்த நாடகம்தான் ‘கண்டி அரசன் ‘ அந்த இசை நாடகத்தில் ஒரிரு  வரிகள்-

 “ மாட்டாள் என்றவள் சொன்னாளா ? -சொன்னாள்  ஐயா சொன்னாள்”
பின்னர் அது போன்ற பாடல் ஒன்றை திரைப்படத்திலும் ரசித்தேன்

“அவளா சொன்னாள் –இருக்காது  அப்படி இருக்கவும் கூடாது  !”-

 என்ற வசனம் பாடல் வரிகளாகி சௌந்தரராஜன் குரலில் பாடலாக ஒலிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைவழங்க சிவாஜி கணேசன் நடிக்க அந்த நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்கிறது

பாடல் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என எம். ஜி. ஆர். கண்ணதாசன்- வாலி போன்றோருக்கு சொல்வாரம் .பாடல் வரிகளுக்கு பல மெட்டுகள் போட்டு ஒலிப்பதிவு செய்து கொடுப்பார்களாம். எம். ஜி .ஆர் .எல்லாவற்றையும் பலமுறை கேட்டு ஒன்றை தெரிவு செய்த பின்னர் இசைத்தட்டாக படம் திரைக்கு வருவதற்கு முன்னரே பாடல் பரவலாக்கப்  பட்டுவிடும் . அப்படி ஒரு பாடல் “ தூங்காதே தம்பி தூங்காதே” ரேடியோவில் தூங்காதே தம்பி தூங்காதே பாடல் கேட்டு எப்போது ‘நாடோடி மன்னன் ‘ படம் வரும் என யோசித்துக்கொண்டே பாடசாலைப் புத்தகங்களை மேசையில் விரித்து வைத்திருப்பேன்., அம்மா யோசிப்பா ‘பொடியன் கடுமையாக படிக்கிறான்- தூங்காமல்- நித்திரை கொள்ளாமல் படிக்கிறான்’

இது போல அந்த நாட்களில் பிரபலமான இன்னும் சில  பாடல்கள் :-

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும் “
“ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து “
“நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தாங்க “
எத்தனையோ வருடங்களுக்கு முந்திய பாடல் என்றாலும் இப்போதும் கேட்கலாம் போல இருக்கிறது
முதல் முதலாக நடந்த விடயங்களை மறக்க முடியாது  அதுவும் அன்போடு கிடைத்தால் மறக்கவே  முடியாது
பள்ளிக்கூட காலத்தில் வீட்டில் கஷ்டம் அம்மா சோறு தருவா .சில வேளை வெறும் சோறு கறி  இருக்காது உப்புத்தண்ணி தெளித்து அம்மா அதை பக்குவமாக குழைத்து தருவா அந்த சோறு நல்ல ருசி . அன்பையும் பாசத்தையும் குழைத்துத்தருவா . நல்ல ருசி

இன்று பல ஆடம்பர ஹோட்டலில் பல வகை  வகையான கறிகளோடு சாப்பிட்டாலும் அம்மா தந்த உப்புசோற்றுக்கு அவற்றை ஒப்பிட முடியாது. அது தான் அம்மாவின் அன்புகையாலை குழைத்துத் தந்த பாசமும் அன்பும்
என்னைப் பொறுத்த அளவில் அஸ்மினுக்கும் அவரது முதல் திரைப்படப்பாடல் மறக்க முடியாமல் இருக்கும்

எம். ஜி. ஆரின்  ரிக் ஷா  காரன் படத்தில் ‘அழகிய தமிழ் மகள் இவள் என்ற பாடலை கனவுக் காட்சியாக சேர்த்திருந்தார்  படம் வெளியானதும் அவரை வானொலியில் பேட்டி கண்டார்கள்  பிடித்தமான பாடல் எது என்ற கேள்விக்கு எல்லாரும் ‘அழகிய தமிழ் மகள்’ என்ற பாடலை சொல்வார் என எதிர்பார்த்தார்கள் . ஆனால் எம் ஜி ஆர் தனக்கு பிடித்த பாடல் எம். கே. தியாகராஜ  பாகவதரின் ‘மன்மத லீலை ‘ பாடலைச்  சொன்னார் .
கால ஓட்டத்தில் ‘நடக்கும் என்பார் நடக்காது “ என்ற  பாடல்  அல்லது ‘குங்குமம் சிவப்பு கூந்தல் கறுப்பு “ போன்ற பாடல்கள் மறைந்துவிடும் .
ஆனால் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ‘ பாடல் –சீர்காழியின் குரலும் சிவாஜியின் நடிப்பும் மறக்கமுடியாது-நினைவில் இருக்கவே செய்யும்

அஸ்மினின் சில பாடல்களும் நினைவில் இருக்கவே செய்யும்

அஸ்மினிடம் இளமை –இனிமை –திறமை –புலமை எல்லாம் நிறையவே இருக்கிறது .எல்லாவற்றையும் சேர்த்து புதுமையான பாடல்கள் –கனிவான பாடல்கள் அறிவான பாடல்கள்  காலத்தால் அழியாத பாடல்கள் ஆக்கித் தர வேண்டும் எனக் கேட்டு , அவர் கவிதைகளால் பாடல்களால் சமூகம் பயனுற வாழ்த்துகின்றேன்

Monday, October 21, 2013

எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் தமிழியல் விருது வழங்கலின் போது...Honoured by WRITERS MOTIVATION CENTRE



UDUVAI .S.THILLANADARAJAH was HONOURED with THAMIOLOGI AWARD & CASH PRIZE on Sunday 20th October,2013 at MAHAJANA COLLEGE, BATTICALOA by P.M.S.CHARLES, GOVT.AGENT. Function was organized by the WRITERS MOTIVATION CENTRE


20-10-2013  ஞாயிறுக் கிழமை எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தால் மட்டக்களப்பு மகாஜன கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்ட விழாவில் உடுவை எஸ்.தில்லைநடராசா அரசஅதிபர் ஸ்ரீமதி சார்ள்ஸ் அவர் களால் கீரிடம் சூடப்பட்டு தமிழியல் விருது  மற்றும் பணப்பரிசு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டார்

 Photo by SUGI of Eastern University
























PHOTOs by SUGI , Eastern University

Wednesday, September 11, 2013

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...



















உடுப்பிட்டி அ.மி.கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை கனடாவில் 25 வது ஆண்டு விழாவை 09-08-2013,10-08-2013 தினங்களில் கொண்டாடி வெளியிட்ட வானவில் மலரில் வெளியான எனது கட்டுரை இது..எழுத தூண்டி வெளியிட்ட கலாநிதி.த. வசந்தகுமாருக்கு நன்றி

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...

-உடுவை எஸ்.தில்லைநடராசா

கல்லூரி வாழ்க்கை கழிந்து நாற்பது ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் கவலைகள் மனதை வாட்டும் போது- நோய்கள் உடலை வருத்தும்போது பிரச்சினைகள் தலைதூக்கும்போது கல்லூரிக்காலமும் அப்போது சிரித்து மகிழ்ந்த நாட்களும் மாறிமாறி மனதில் தோன்றி சந்தோஷம் தருகிறது., சங்கடங்களை மறக்க வைக்கிறது.

எனது வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ விடயங்கள் மறந்து போய்விட்டது. மறக்காமல் , மறக்க முடியாமல் நினைக்காதபோதிலும் மனமகிழ்ச்சியை- ஒருவித உள்ளக்கிளுகிளுப்பைத் தருவது பள்ளி வாழ்க்கையே ! அடி வாங்கி அழுதாலும் அவமானப்பட்டாலும் இன்று அதை எண்ணிப்பார்க்கிறபோது ஒரு தனிச்சந்தோஷம்.

இப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா மாணவர்களிடமும் சைக்கிள்- சிலரிடம் மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. எனது நாட்களில் பாடசாலைலிருந்து தூரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும். சிலர் பஸ்ஸில் வந்து போவார்கள். ஒரு நாள் வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்குபேச வருகிறார் என்ற கதை பரவ சில ஆசிரியர்கள் முன்னே செல்ல பின்னே மாணவர்படை. சைக்கிள் வைத்திருந்தவர்களுக்கு வசதி. சைக்கிள் பாரில் கரியரில் மாத்திரமன்றி ஹான்டிலிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றனர்.


மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தவுடன் வழமை போல நவுண்டில் சோதிலிங்கம் வீட்டுக்குப் போவதற்காக தனது சைக்கிளைத்தேடி, சைக்கிளைக்காணாமல் அழத்தொடங்கினான். பூட்டப்டபடாமல் இருந்த சைக்கிள்களை மற்றவர்கள் களவாக எடுத்துக்கொண்டு போன கதையும் அதிபருக்கு முறையிடப்பட்டது. நீதி மன்றம் போனவர்கள், நீதி மன்றம் போனசைக்கிள் எல்லாம் அதிபரின் அறைக்கு அருகே வந்து சேர்ந்தது. ஆனால் சோதிலிங்கத்தின் சைக்கிள் வரவே இல்லை. அதிபரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பலர் பதில் சொல்ல முடியாமல் தடுமாற- நீதி மன்றம் சென்று ஒழித்து ஒழித்து பிந்திவந்த மகாலிங்கமும் சிவராசாவும் சொன்ன கதை அதிபரை மாத்திரமல்ல- எல்லோரையும் சிரிக்க வைத்தது. வழமையாக சைக்கிளில் வரும் சோதிலிங்கம் அன்று சைக்கிள் கொண்டு வரவில்லை. சிவராசாவின் சைக்கிள் கரியரிலிருந்து வந்ததை சிவராசா நினைவூட்டிச்சொல்ல சோதிலிங்கம் ஒத்துக்கொள்ள- அதிபரின் தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிவிட்டார்கள்.

பாடசாலை நாட்களில் உல்லாசமாக உலாத்தித்திரிவதென்றால் ஒரு தனிசந்தோஷமல்லவா ? நண்பர்கள் கூடினால் சிலமணி நேரத்துக்குள் சமாளித்து விடலாமென்றால் தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் என சொல்லி புறப்பட்டு- கோவிலுக்குப் போவதற்கு முதல் குளிக்க வேண்டுமென்று சொல்லி பாலத்துக்கு வலது புறமாக இருக்கும் உப்புமாலுக்குச்சென்று கடல்நீராடுவோம். கரையிலிருந்து சற்று தள்ளிப்போனால் கற்கள் எதுவுமில்லாத வெண்ணிற மணலை அடியில் கொண்டதாகவும் ஆழம் குறைவானதாகவும் உள்ள தெளிந்த நீர். வழுக்கும் பாசி- இழுக்கும் சுழி என்ற பயமே இல்லாமல் நேரம் போவது தெரியாமல் கடல் விளையாடிய நாட்கள் ஏராளம் !

சைக்கிள் வசதியும் கிடைத்து ஒரு பகல்பொழுதைச் சமாளிக்க முடியுமென்றால் கீரிமலைக்கேணி எங்களோடுதான். அப்படி தூரம் சென்று வரும் நாட்களில் தாகத்தை தணிக்க வளலாய் என்ற இடத்துக்கும் மயிலிட்டி என்ற இடத்துக்கும் இடையில் தென்னைமரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இளநீருக்குச் சொந்தக்காரர் நாங்கள்.

அந்த நினைப்போடு, ஞானதாசன், பாலசுப்ரமணியம், பரமசாமி ஆகியோரோடு – நானும் வளலாய் கிராமத்தில் தென்னை மரமொன்றில் ஆளுக்கு இரண்டு என்ற வீதத்தில் இளநீர் பிடுங்கிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த கிழவனின் கையில் வைத்திருந்த கத்தியைத் தரும்படி கேட்டோம். கத்தியைத்தர முடியாது இளனியை வெட்டித்தாறன் என எங்களை வீதியோரம் அழைத்துச்சென்று நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மரமொன்றில் கத்தியைத்தீட்ட ஆரம்பித்தான். இடையிடையே நிலத்தில் இருந்த மணலையும் மரத்தில் போட்டு கத்தியை கூராகத்தீட்டிக்கொண்டே,” எங்கை தேங்காய் பிடுங்கினது ?” என விசாரித்தான். பரமன் தான் பதில் சொன்னான்.-‘அந்த மரத்திலை தான் பிடுங்கினது., நேரம் போகுது. கத்தியை கெதியாகத் தாங்கோ- நாங்க வெட்டுறம்’ என்றான். கிழவன் மரத்தில் தீட்டி கூராக்கிய கத்தியை விரல்களால் மெதுவாகத் தடவிக்கொண்டே, “ டேய் என்ரை காணியிக்கிளை களவாக தேங்காய் இண்டைக்கும் பிடுங்கிக்கொண்டு என்னட்டை கத்தி கேக்கிறாங்கள். அண்டைக்கு ஓடினவங்கள்-இண்டைக்கு விட மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே நிலத்திலிருந்து எழும்பினான்.

 “ஓடித்தப்புவம்” என்று சொல்லிய வண்ணம் சைக்கிளில் பாய்ந்து ஏறினான் ஞானதாசன்., கிழவன் அவனைக் குறிபார்த்து ஏறிந்த கத்தி குறி தவறிவிட்டது.

கத்தி விழுந்த இடத்துக்கு விரைவாக ஓடமுடியாத கிழவன் நிலத்திலிருந்த இளனியை ஒவ்வொன்றாக எடுத்து எங்களை நோக்கி ஏறிய நாங்களும்

சைக்கிள்களில் தாவி ஏறினோம். தப்பினோம் பிழைத்தோம் என, கன தூரம் வேகமாக ஓடின சைக்கிள் ஒரு கள்ளுக்கொட்டில் அருகே மெதுவாக தயங்கித்தயங்கி நின்றது. அப்போது தான் ஞானதாசன் சொன்னான்:-‘ இப்ப தான் நினைவுக்கு வருகுது- கொஞ்ச நாளைக்கு முதல் வேறை சில பொடியளோடை வந்து அந்தக் காணியுக்கிளை இளனி பிடுங்கினனாங்கள்., கிழவன் கலைச்சுக்கொண்டு ஓடி வர நாங்கள் ஓடித்தப்பியிட்டம்”.

 ‘தப்பியிட்டம் எண்டு சொல்ல முடியாது. அங்கை வாற சைக்கிள் கரியரிலை கிழவன் கத்தியோடை வாறமாதிரித் தெரியுது’ என்று சைக்கிள் வந்த திசையைக் காட்டினான், பாலன். இரண்டு பேர் சைக்கிளில் வருவது தெரிந்தது.

அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக கொட்டில் பின்புறத்தில் சைக்கிள்களைச்சாத்திவிட்டு உள்ளே ஒழித்துக் கொண்டோம்., கொட்டிலுக்கு உள்ளே போனதால் ஒரு போத்தல் நாலுபேருக்குப் போதாது தான். ஆனாலும் அதுக்கு மேலை போக விரும்பவில்லை.

அன்று இளனி விடயம் சரிவராமல் போனதால் தாகத்தைத் தீர்த்தது அந்தக்கொட்டில். பிறகு இளனி பிடுங்கினதாகவும் நினைவில்லை., கொட்டிலுக்குள்ளை ஒழித்ததாகவும் நினைவில்லை.

கையிலை பையிலை காசு இருந்தால் நம்பக்கூடிய மாதிரி யாராவது ஒரு ஆசிரியரின் பெயரையும் இரவு பாடசாலையில் தங்க வேண்டும் என்று ஒரு கதையையும் அவிட்டு விடுவம். சைக்கிள் வண்டிகள் ஒழுங்கைகள் வழியாக மொட்டைப் புளியடியில் ஒன்றாகச்சந்தித்து , கீரிமலைக்குளிப்பு- யாழ்பாணத்தில் கொத்துரொட்டி-ஏதாவது ஒரு தியேட்டரில் செக்கன்ட் ஷோ. விடிவதற்கு முன் உடுப்பிட்டிச்சந்திக்கு வந்து விடும் சைக்கிள்.

ஒரு நாள் காலையில் நாலைந்து சைக்கிள்- நாங்கள் ஏழு எட்டுப்பேர்- ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று கொடிகாமம் சென்று விட்டோம். மத்தியானம் வயிறு கடிக்க ஒவ்வொருவரும் ஆளையாள் பார்த்தோம். நம்பிக்கையில்லாமல் ஒவ்வொருவரின் பொக்கற்றுகளையும் கடுமையாகச்சோதித்து, ஒருசதம் இரண்டு சதமாக எடுத்த பணத்தின் மொத்தப் பெறுமதி பதினைந்து சதம். நீண்ட நேரம் சந்தையில் தேங்காய் விற்கும் கிழவியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொடிகாமம் சந்தையில் பதினேழு சதம் சொன்ன தேங்காயை இரண்டு சதம் விலை குறைத்து வாங்கி அதைச்சிதறு காயாக அடித்து ஏழு எட்டுப்பேரும் ஆளுக்கு இரண்டொரு தேங்காய்ச்சொட்டு- அது தான் அன்றைய மத்தியான சாப்பாடு.

காய்ந்த வயிற்றோடு சோர்ந்து போய் சைக்கிள் ஓடி வர இரவு எட்டு மணியாகி விட்டாலும் உடுப்பிட்டி சங்கக்கடையைக் கண்டவுடன் ஒரு சந்தோஷம். விசிலடித்து சத்தமாக கத்திக்கொண்டு வர எதிரில் வந்த ஒரு கிழவி கேட்டாள்-“ ஏன்ரா உங்களை பேய் பிசாசு ஒண்டும் காண இல்லையே?”

நவம் சொன்னான்:-“ இல்லைஆச்சி பேய் பிசாசுகள் கண்டது தான். சயிட் எடுத்துக்கொண்டு வாறம்”

இவை எனது கதைகள்- உங்களின் கதைகளையும் கேட்க ஆவலாக உள்ளேன்.


Monday, September 2, 2013

உறவாடுதல் நல்லது...வீரகேசரி சகோதர வெளியீடான சமகாலத்தில் வெளியானது

உறவாடுதல் நல்லது...

உடுவை எஸ்.தில்லைநடராசா








சுழலும் உலகில் சுற்றிகொண்டிருக்கிறோம்; எம்மைச்சுற்றி சில உறவினர்கள், நண்பர்கள்.நம்மில் பலர் அவர்களுடன் உறவுகளை தொடர்புகளை பேணிக்கொள்வது குறைவாகத்தான் உள்ளது.ஏதாவது தேவை என்றால் இல்லாத உறவுகளையோ அல்லது தூரத்துச்சொந்தங்களையோ கொண்டாடுவதும் ஒன்றுமே தேவைப்படாதபோது ஒதுங்கிப் போவதும் வழக்கம்.

அரச ஊழியர்கள் பொதுவாக பொதுமக்களுடன் நல்லுறவை உருவாக்கி, வளர்த்து நிலையானதாக்கிக் கொண்டால் கடமைகளைச் சிறப்பாகச் செய்யலாமென்பதுடன், சேவையில் நீடிக்கஉதவியாகவும் அமையும். தனிய அது ஒரு காரணம் மட்டுமல்ல; ஆனாலும் அதுவும் ஒரு காரணமாக அமைகிறது.

ஒருவர் என்னைப்பார்ப்பது போல நான் உணர்ந்தால் மெல்லியதாகச்சிரிப்பேன். அவரும் மெதுவாகச் சிரித்தால் காலப்போக்கில் அது கதை பேசி கருத்துக்களை பரிமாறும் அளவுக்கு வளர்ந்துவிடும். அந்த நட்புறவு ஆபத்துவேளைகளில் உடனிருந்து உதவும் அளவுக்கு உயர்ந்ததுமுண்டு.

1970 களில் வவுனியா அஞ்சல் அலுவலகத்தில் கடமையாற்றிய திருப்பரங்கிரி எனது நெருங்கிய நண்பரானார். 1980 களில் கொழும்பில் அவரைக் கண்டபோது அவர் என்னை ஒரு நாளும் காணாததுபோல நடந்துகொண்டபோது, ‘என்ன திருப்பரங்கிரி என்னோடு கோபமா ?’ என்றேன். அவர் சிரித்துக்கொண்டே, தான் திருப்பரங்கிரியின் சகோதரன் அருணகிரி எனவும் தாங்கள் இரட்டையர்கள் (Twins )என்றார்.

சில நாட்களுக்குப்பின் யாழ்ப்பாணத்தில் அருணகிரி என்னை நோக்கியபோது,’ஹலோ அருணகிரி’ என்றதும், தான் திருப்பரங்கிரி என்று சொல்லி வவுனியா நினைவுகளை மீட்டுக்கொண்டார். திருப்பரங்கிரி, அருணகிரி இரட்டையர் என்னைச்சற்று தடுமாற வைத்தாலும் இரண்டு நல்ல நண்பர்கள் கிடைத்தனர்.

இது போல- வீரகேசரி புலோலி நிருபர் தில்லைநாதன் எழுபதுகளில் எனது நண்பரானார். எண்பதுகளில் மன்னாரில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது செய்தியாளர் தில்லைநாதன் செய்திகள் சேகரித்துக்கொண்திருந்தாரேயொழிய என்னைத் தெரிந்தது போலக்காட்டிக்கொள்ளவில்லை. ‘தில்லைநாதா நான் தில்லைநடரஜா’ என்றதும் சிரித்துக்கொண்டே, தான் தில்லைநாதனின் அண்ணா தர்மகுலசிங்கம்-தினபதி நிருபர் என்றார். தில்லைநாதனும் தர்மகுலசிங்கமும் இரட்டையர்கள். ஒருவர் யாழ் வீரகேசரி நிருபர்; மற்றவர் மன்னார் தினபதி நிருபர். ஒருவரின் நட்புறவால் மற்றவர் நட்புறவு தானாக வளர்ந்தது.

1971 இல் பொலிஸ் திணைக்களத்தில் சாதாரண எழுதுநராக நான் கடமையாற்றினேன். எனது சிரேஷ்ட எழுதுனரக புஹாரி..சில நேரங்களில் காரணமில்லாமல் எரிந்து விழுவார். நான் பொருட்படுத்துவதேயில்லை. 1972 கிளாஸ் ரூ பரீட்சை முடிவுகள் வெளியானதும் நிலைமை மாறி புஹாரி எனக்குக்கீழ் வேலை செய்ய வேண்டியவரானார். நான் வேறுபாடு காட்டாவிட்டாலும் அவர் மனம் குறுகுறுத்ததை உணரமுடிந்தது. பின்னர், 1979 இல் நிர்வாகசேவை பதவி உயர்வுடன் மட்டக்களப்புக்கு கூட்டுறவு உதவி ஆணையாளராக சென்றபோது என்னை மனதார வாழ்த்தி வரவேற்ற காதர், புஹாரியின் அண்ணன் என தன்னை அறிமுகப்படுத்தி வேண்டிய உதவிகளை செய்தார்.

1975 இல் வவுனியாவில் எழுதுவினைஞனான என்னை சனிக்கிழமை வேலைக்குச் செல்ல மறுத்ததற்காக எனது மேலதிகாரியாக இருந்தவர்  என்னை கொழும்புக்கு இடமாற்றி விட்டார். சிரித்துக்கொண்டே நன்றி சொல்லி விட்டு வந்தேன். இன்று அந்த மேலதிகாரியும் நானும் ஒன்றாக ஒரே தரத்தில் ஒரே வேதனத்தில் வேலை செய்கின்றோம்.அவர் மட்டுமல்ல- முன்னர் எனது மேலதிகாரிகளாக இருந்த இன்னும் இருவர் என்னோடு வேலை செய்கின்றார்கள். எல்லோரும் சமதரத்தினராக கடமையாற்றுகின்றோம்.

1983 இல் வவுனியா கூட்டுறவு அலுவலகத்தில் திருமதி சீலன் எனது தட்டெழுத்தாளர். பின் அவசர புனர்வாழ்வு புனரமைப்பு திட்ட அலுவலகம் சென்றபோது பிரதம எழுதுனராக திரு. சீலன். 1998 இல் கலாசாரபணிப்பாளராக நியமனம் பெற்றபோது கலாசார உத்தியோகத்தராக சீலனின் தங்கை திருமதி பியசீலி தேவேந்திரன். 1999 இல் கல்வி அமைச்சு மேலதிக செயலாளாரானாபோது வவுனியா கல்வியியல் கல்லூரி விரிவுரையாளராக பியசீலியின் கணவன் தேவேந்திரன். நாலு வெவ்வேறு அலுவலகங்களில் அண்ணா- தங்கை என ஒரே குடும்பத்தைச் சேர்ந்ததும் பின்னர் அவர்களின் வாழ்க்கைத்துணையாக இணைந்த உறவுகள் என நான்கு பேருடன் கடமையாற்றினேன்.

இன்னும் சொல்லப்போனால் 1967 இல் களுத்துறை பொலீஸ் பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிட்டேன். 2010 இல் அரச விமானப்படை பயிற்சிக் கல்லூரியைப் பார்வையிடுவதற்கிடையில் திருகோணமலை கடற்படைத்தளம் உட்பட பல்வேறு பயிற்சி முகாம்களையும் தளங்களையும் பார்வையிட்டுளேன். எல்லாம் உறவாடியதால் கிடைத்தவை. ஓய்வு நிலையிலும் இன்றும் கடமைகளுக்கு குறைவில்லை.

(வீரகேசரி பத்திரிகை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனம் இருவாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் ” சமகாலம்” சஞ்சிகையில் (2013 ஆகஸ்ட் 01-15) இதழில் கடைசிப் பக்கம் ஒதுக்கீடு செய்து தந்த ஆசிரியர் வீரகத்தி தனபாலசிங்கம் உதவி ஆசிரியர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் ஆகியோருக்கு நன்றி)