Friday, August 31, 2007

ஒரு சோக நாடகம் தொடர்கிறது


அன்று நடந்தது-
எனக்கு அது புது அனுபவம். அவளுக்கும் அப்படித்தான்.
இழகக்கூடாததொன்றை இழந்த சோகம். சோர்ந்து போய்ப் படுக்கும் அவள் முகத்தில் தெரிகிறது. மெதுவாக இந்த இடத்தை விட்டு நழுவுகின்றேன். “ஸ் மணி ஏழாகுது. நான் போயிட்டு வாறன். இங்கே நடந்த தொண்டையும் ஒருவரும் சொல்ல வேண்டாம்.

விமலாவின் உறவு பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்ற மனப்பயம் என்னை கொழும்புக்கு இழுத்து வந்தது. எழுதுவினைஞன் வேலை கிடைத்ததும் “கிளப் டான்ஸ் - பொப் இசை என்று அலைந்து கொண்டிருந்த எனக்கு ஜெசிந்தாவின் சினேகம் கிடைக்கிறது. அவளும் ஒரு பாடகிதான்.

ஜெசிந்தா என் வாடகை அறைக்கு வருவதும், வத்தளையில் இருக்கும் அவள் வீட்டுக்கு நான் செல்வதும் வழக்கம். தானும் மகிழ்ந்து என்னையும் மகிழ்வித்த ஜெசிந்தாவிடமிருந்தும் விடுதலை பெற விரும்பி நுவரெலியாவுக்கு இடமாற்றம் பெற்றுக்கொண்டேன்.

“மிஸ்டர் ஆனந்தன் உங்களுக்கு நுவரெலியா ட்ரான்ஸ்பர் கிடைக்சிருக்காம். உண்மையா” ஜெசிந்தா கேட்கின்றாள்.
“ஓம் நான் போக மாட்டன் எண்டுதான் சொன்னனான். கொழும்பை விட்டு இடமாற்றம் செய்ய வேணும் எண்டு சீவ் எக்கவுண்டன்ற் ஒரே பிடியாக நிற்கிறபடியால் ஒண்டும் செய்ய முடியாமலிருக்கு” பாடமாக்கிய வசனங்கள் ஒப்புவிக்கப்படுகின்றன.

அவளின் அடுத்த கேள்வி – “நீங்கள் நுவரெலியாவுக்குப் போகத்தான் வேண்டுமா?
“ஓ....இல்லையெண்டால் வேலையை விட்டு விட்டு வேறை ஏதும்தான் செய்யவேணும். நுவரெலியாவிலை ஆகக்கூடினால் இரண்டு வருடம் தான் வைத்து இருக்கலாம். ஜெசி நுவரெலியாவுக்குப் போனாலும் அடிக்கடி கொழும்புக்கு வருவன். சிங்களச் சோதனை பாஸ் பண்ணினதும் முதல் வேலை எங்கடை கலியாணம்தான் !”
ஜெசிந்தாவின் விரல்கள் என் கரங்களில் படர்ந்திருந்த ரோமங்களை வளையங்களாகச் சுருட்டி விளையாடுகின்றன. அவள் உடலை என் உடல் தீண்டுகிறது. இந்த இன்ப வேதனையால் அவள் சோர்ந்து விடுகிறாள். நான் சோர்வைப் பொருட்படுத்தாமல் என் பெட்டி படுக்கைகளைக் கட்டுகின்றேன்.

என் சதித்திட்டம் தெரியாத ஜெசிந்தா மெதுவாக எழுந்திருந்து குலைந்திருந்த கூந்தலை வாரி, சீப்பாலும் எடுக்க முடியாத சிக்கலை, சிறு விரல்களை கூந்தலுக்குள் நுழைத்து இழுத்த பின் அறுத்த மயிர்களையும் ஆள் காட்டி விரலில் உதிர்ந்த மயிர்களையும் சுற்றி பின் அதை ஒரு சிறு பந்தாக உருட்டி “துப்துப்” என்று துப்பி ஜன்னலூடாக எறிகின்றாள்.

இன்று நடப்பது.
“தாத்தா தாத்தா” – ஒரு குழந்தையின் குரல்.
அகத் திரையில் படமாக ஓடிய பழைய காட்சிகள் - கடந்த கால நினைவுகள் திடீரென்று அறுந்தன.
“தாத்தா உங்களைத் தேடிக்கொண்டு ஆரோ ஒரு தாத்தா வந்திருக்கிறார்” என்று என் பேத்தி மனோகரி சொன்னதும் வெளியே எழுந்து சென்றேன். மனோகரி “ஆரோ தாத்தா” எனக் குறிப்பிட்டது எனது நண்பன் நவரத்தினராசாவைத்தான்.
நவரத்தினமும் நானும் விறாந்தையிலிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம். நெடு நாட்களுக்குப் பின் சந்தித்ததால் குடும்பங்களைப் பற்றிய கதைகள் நிறைய வந்தன. ஒரு கட்டத்தில்-
“தவா, நீ சொல்லுறது உண்மைதான். மற்ற ஆக்களோடை எவ்வளவுக்குச் சிரிச்சுக் கதைச்சாலும் எனக்குக் கொஞ்சமும் நிம்மதியில்லை. அந்த வயதிலை ஆடின ஆட்டமெல்லாம் அடங்க வேணுமெண்டதுக்காகத் தான் எனக்கொரு கலியாணத்தைக் கட்டி வைச்சினம். அவள் இரண்டு பெட்டையளைப் பெத்துத் தந்திட்டுச் செத்துப் போயிட்டாள். ஒரு மாதிரி மூத்த மகள் விஜயாவுக்கு கலியாணத்தை முடிச்சன். கொஞ்சம் நிம்மதி எண்டு இருக்கிறபோது அவன் அவளை விட்டிட்டு ஓடிவிட்டான். இப்ப விஜயாவையும் பிள்ளை மனோகரியையும் நான் தான் வைச்சுப் பார்க்க வேண்டியிருக்கு. இரண்டாவது ஜெயராணிக்கு மாப்பிள்ளை தேடுறதுக்கிடையிலை உயிர் போயிடும் போலிருக்கு. என்ன செய்யிறது? எல்லாம் தலைவிதி” என் குரல் கம்மியது.
நவரத்தினம் தலையை ஆட்டினான். தலைவிதி எண்டு சொல்லுறதை எல்லாம் நாங்களாகவே தேடிக்கொள்ளுகிற விதி. அந்த நேரம் கண் மண் தெரியாமல் ஆடின ஆட்டத்துக்கெல்லாம் இப்ப அனுபவிக்க வேணுமெண்டு பலன்”
“இந்தப் பெட்டையள் இரண்டுமில்லாட்டி எனக்கொரு பயமுமில்லை. கிடைச்சதைச் சாப்பிட்டிட்டு நினைச்ச இடத்துக்குப் போய் வரலாம்:” என்றேன்.
“நீ நினைச்ச இடத்துக்குப் போய் வரக்கூடாது எண்டதுக்காகத் தான் கடவுள் இரண்டு பெட்டையளைத் தந்து உன்னைச் சோதிக்கிறார். படிக்கிற போதும் கொழும்பிலை வேலை செய்யிற போதும் எத்தினை பெட்டையளை ஏமாத்தினாய்? அந்தப் பாவங்கள் தான் உன்னைப் போட்டு இப்பிடி அலைக்கழிக்கிறது” – நண்பன் என்னைப் பார்த்தான்.
மௌனம் சாதிப்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். தொடர்ந்தும் அவனே பேசினான்.

“ஒருவருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணைக் கெடுக்கிறதுதான் பெரிய பாவம். எப்படியான பாவத்தையும் செய்துவிட்டு தப்பிவிடலாம். ஆனால் ஒரு பெண்ணைத் தொட்டுப் போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவம் சாகிற வரைக்கும் தொடர்ந்தும் வரும். சரி உன்னையும் பார்க்கப் பரிதாபமாகத்தான் இருக்கு. ஜெயராணிக்கு ஆராவது நல்ல பெடியன் சந்திச்சால் வந்து சொல்லுறன்.”
நவரத்தினராசாவை வாசல் வரை சென்று வழியனுப்பிவிட்டு வந்தபோது பூவரச மர நிழலில் மாவிடித்துக் கொண்டிருக்கும் விஜயாவையும், இடித்த மாவை அரித்துக் கொண்டிருந்த ஜெயராணியையும் கண்கள் கண்டன.

யாழ்ப்பாணத்தில் படிக்கும்போது விமலா என்றொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு “எப்படியும் உன்னையே கல்யாணம் முடிப்பேன்’ என்று வாக்குறுதி கொடுத்து அவளை ஏமாற்றினேன். அவளை அனுபவித்த பின்பு அவள் வீட்டுப் பக்கமே செல்லவில்லை. பின்பு அவளைப் பற்றி எதுவுமே அறிந்துகொள்ள முடியவில்லை. அறிந்து கொள்ள முயற்சி எடுக்கவில்லை.
“எனது மூத்த மகள் விஜயாவைப் பார்க்கும் போதெல்லாம் விமலாவின் முகம்தான் தெரிகிறது. நான் விமலாவை ஏமாற்றியது போலத்தான் விஜயாவையும் அவளோடு படித்த மாணவன் ஏமாற்றி, ஒரு குழந்தைக்கும் தாயாக்கிவிட்டு தலைமறைவாகி விட்டான். பெற்ற குற்றத்துக்காக விஜயாவையும் அவள் குழந்தை மனோகரியையும் வைத்துச் சாப்பாடு போடுகிறேன்.”

கொழும்பில் வேலை பார்த்த போது என் வாழ்க்கையில் குறுக்கிட்டவள் தான் ஜெசிந்தா என்ற பாடகி. அவளை விட்டுப் பிரிய வேண்டுமென்பதற்காக நுவரெலியாவுக்கு மாற்றலாகிச் சென்றேன். நுவரெலியாவுக்குச் சென்றம் அங்கும் ஒரு பெண்ணுடன் தொடர்பு. அதை அறிந்த பெற்றோர் யாழ்ப்பாணத்தில் ஒரு திருமணம் செய்து வைத்தனர். பின்பு ஜெசிந்தாவைச் சந்திக்கவில்லை. அவள் எழுதிய கடிதங்களுக்குப் பதில் எழுதவுமில்லை.
ஜெசிந்தாவின் நினைவாக எனது இரண்டாவது மகளுக்கு ஜெயராணி என்று பெயர் வைத்தேன். சிறு வயது முதல் ஆடல் பாடல் முதலியவற்றில் வல்லவளாக விளங்கியவளுக்கு ஆண் சிநேகிதர்கள் பலர் கிடைத்தார்கள். பல சிநேகிதர்கள் கிடைத்தென்ன? எல்லேர்ரும் அவளோடு சேர்ந்து ஆடவும் பாடவும் விரும்பினார்களேயொழிய அவளோடு வாழ்க்கை நடாத்த ஒருவரும் விரும்பவில்லை.
மணமாகாமலே வாழ்விழந்து நிற்கும் விஜயாவும் மணவாழ்க்கையைக்காண முடியாமல் தவிக்கும் ஜெயராணியும் எனக்குப் பாரமாக இருக்கின்றார்கள். அன்று பெண்களால் இன்பம் கண்டவனுக்கு இன்று பெண்களால் தான் அளவிறந்த கவலையும் துன்பமும். நண்பன் நவரத்தினராசா சொன்னது அடிக்கடி என் மனதில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

“ஒருத்தருக்கும் தெரியாமல் ஒரு பெண்ணைக் கெடுக்கிறது தான் பெரிய பாவம். எப்படியான பாவத்தையும் செய்திட்டுத் தப்பியிடலாம். ஆனால் ஒரு பெண்ணைத் தொட்டுப்போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவம் சாகிற வரைக்கும் தொடர்ந்து வரும்”
உண்மைதான்.
ஒரு பெண்ணைத் தொட்டுப் போட்டுக் கைவிட்டால் அந்தப் பாவத்திலிருந்து ஒரு போதும் தப்ப முடியாது. விமலாவிடமிருந்தும் ஜெசிந்தாவிடமிருந்தும் தப்பிவிட்ட எனக்கு விஜயாவிடமிருந்தும் ஜெயராணியிடமிருந்தும் தப்ப முடியவில்லை.
விமலா – ஜெசிந்தாவின் நினைவுகள் இதயத்தை அரிந்தெடுக்கின்றன. யாரோடு திருட்டுத்தனமாக இணைந்திருந்து இன்பம் கண்டேனோ அவர்களே என்னை வருத்துகின்றார்கள். அன்று எந்த செயல்கள் இன்பமாகத் தோன்றினவோ அவற்றின் விளைவுகள் துன்பச் சுமையாகி என் இதயத்தை அழுத்துகின்றன. நல்லதோ கெட்டதோ ஒவ்வொரு செயலுக்கும் விளைவுகள் உண்டு. அந்த விளைவுகளில் இருந்து ஒருவரும் ஒருபோதும் தப்பித்துக்கொள்ள முடியாது.

‘மனித வாழ்க்கையே ஒரு நாடகம்’ என்பது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. நானும் ஒரு நடிகன்தான். எனது வாழ்க்கை ஒரு சோகமான நாடகம். அந்த நாடகத்தில் என்னேர்டு விமலா- ஜெசிந்தா ஆகியோர் ஆரம்பக் காட்சிகளில் நடித்தார்கள். விஜயா- ஜெயராணி ஆகியோரோடு இப்போது நான் நடிக்கின்றேன். சோகமான நாடகம் தொடர்கிறது......

‘மாணிக்கம் - 1975’

Wednesday, August 29, 2007

தமிழ்வாணனுடன் நான் (38 வருடங்களிற்கு முந்திய புகைப்படம்)

Photo Sharing and Video Hosting at Photobucket

1969 ஆம் ஆண்டு நான் நுவரெலியாவில் பணியாற்றிக் கொண்டிருந்த போது அங்கு வந்திருந்த தமிழ்வாணனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

Tuesday, August 28, 2007

ஆனந்தமும் நிம்மதியும்

பிறந்த மண் உடுப்பிட்டி – யாழ்ப்பாண மாவட்டத்தின் பல கிராமங்களில் இதுவும் ஒன்று. அக் கிராமத்தில் நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன் ஆங்கில அறிவுள்ளவர்களே குறைவாக இருந்தபோது சிங்களம் தெரிந்தவர்கள் மிகமிகக் குறைவாகவே இருந்திருக்க முடியும்.

‘மணிய மாமா’ என்றழைக்கப்படும் சுப்பிரமணியமும், ‘கொழும்பு மாமா’ என்றழைக்கப்படும் ‘நவரத்தினம்’ மாமா அல்லது நவரத்தின’வும் எனது மாமன்மார்

‘’மணிய மாமா’ ஊரிலே செல்வாக்குள்ள ஆசிரியர் அரசியல்வாதிகளுக்கு வேண்டப்படுபவர். பிரசாரக் கூட்டங்களிலெல்லாம் முழக்கம் செய்வார். என்னில் நல்ல அன்பு. அவரது துவிச்சக்கர வண்டியில் ஏறி கோவில், கூட்டம், விழாக்கள் எல்லாம் பார்த்திருக்கின்றேன். பலவிதமான சாப்பாடுகளைச் சுவைத்திருக்கின்றேன். அவர் ‘’நாங்கள் சிங்களம் படிக்கக்கூடாது’’ என்ற பிடிவாதத்தையும் என்னில் திணித்தார்.

1963 என்று நினைவு கொழும்பில் ஒரு பொருட்காட்சி. அப்பொருட்காட்சியை பார்ப்பது நல்லது என்று மாமாவின் கடிதம் அப்பாவுக்கு கிடைத்தது. அப்போது தான் முதல் முறையாக ‘’நவரத்தினம்’’ என்ற கொழும்பு மாமாவின் கொழும்பிலுள்ள வீட்டுக்குச் சென்றேன். அவர் நன்றாக சிங்களத்தில் கதைப்பதால் சிங்கள நண்பர்களின் ‘’நவரத்தின’’வாகத் திகழ்ந்ததை அவருடன் பொருட்காட்சிக்குச் சென்ற போதும் ஏனைய இடங்களில் அவரைத் தொடர்த்த போதும் அறிய முடித்தது. திடீரென்று ஒரு பெரிய வானில் ஐந்து வெளிநாட்டவர் பெரிய பைகளுடன் கொழும்பு மாமாவின் வீட்டுக்கு வந்தனர். மாமா சொல்லித் தெரிந்து கொண்டேன் ‘’ரெனிஸ்’’ விளையாட யப்பான் நாட்டிலிருந்து வந்தவர்கள். விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டாளர்களில் மாமாவும் ஒருவர். அவரது வீடு பெரிதாகவும் வசதியுள்ளதாகவும் இருந்தால் அங்கேயே பத்து நாட்கள் தங்க ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

மாலையில் பொருட் காட்சியை பார்க்கப் புறப்படுவதற்காக ஆடை மாற்ற ஆரம்பித்தேன். உடுப்பை எடுப்பதற்காக சூட்கேஸ்சை திறந்தேன். என்னால் திறக்க முடியவில்லை சூட்கேஸ்சை திறந்து தரும்படி மாமியைக் கெஞ்சியும் அவரது முயற்ச்சியும் பயனளிக்கவில்லை. எங்களை ஏசியபடி மாமாவால் மேற் கொள்ளப்பட்ட பகீரதப்பிரயத்தனங்களும் பலனனிக்கவில்லை. இவற்றைக் கவனித்த ஐப்பான் மாமாவின் முதல் முயற்சியிலேயே சூட்கேஸ் பணிந்து திறந்து கொண்டது. நான் அவருக்கு நன்றி தெரிவித்த போது. ‘இல்லை – நாம் மற்றவருக்கு உதவ வேண்டும் என்றார். மாமி தயாரித்த தேநீரை அவருக்கு பரிமாறிய போது தடுமாற்றத்தால் தேநீர் சிறிது அவரது சேட்டிலும் தரையிலும் சிந்திவிட்டது. உடனடியாக மேசையில் இருந்த ‘நப்கின்’ எடுத்து தேநீர் சிந்திய இடங்களை துப்பரவாக்கினார். நான் அவருக்கு உதவ முயன்றபோது அவர் தடுத்தார். முடியுமான வரை மற்றவர்களிடமிருத்து உதவிகள் பெறுவதைக் குறைக்க வேணடும்.

அந்த யப்பானியரும் கொழும்பு மாமாவும் ஆங்கிலத்தில் கதைத்தபோது நன்றாக இருந்தது. சில வேளை மாமா ஏதாவது சொன்னால் அவர்கள் பெரிதாகச் சிரிப்பார்கள். அவர்கள் சொல்வதைக் கேடடு மாமாவும் சிரிப்பார் அவர்கள் ஏன் சிரிகின்றார்கள் என்று தெரியாமல் முழித்ததுண்டு. அந்த யப்பானியரில் இருவர் என்னுடன் ஆங்கிலத்தில் கதைத்தார்கள். பெயர், ஊர், படிக்கின்ற பாடசாலை பெயர் எல்லாம் ஆங்கிலத்தில் தான் சொன்னேன். அதற்கு பிறகு ஆங்கிலம் வர மறுத்துவிட்டது.

நான் ஆங்கிலத்தில் பேசமுடியாமல் தடுமாறிய சந்தர்ப்பங்களில் யப்பானியர் தமிழில் மட்டுமல்ல கொழும்பு மாமாவுக்கு ஒரு சிங்கள நண்பர் ‘’சிறில்’’ சிறிலின் ஆங்கில அறிவு என்னைவிடப் பரவாயில்லை அவருடன் யப்பானியர் சிங்களத்தில் கதைத்ததையும் கண்டிருக்கிறேன் ஆக...

அவர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் கதைத்தார்கள். சிங்களமும் தமிழும் கதைத்தார்கள். எனக்கு சிறிதேனும் தெரியாத இன்னொரு மொழியும் கதைத்தார்கள். யப்பான் மொழியாக இருக்க வேண்டும்

இந்தப் பன்மொழிப் புலமை பற்றி ஆச்சரியப்பட்ட போது கொழும்பு மாமா சொன்னார்.

யப்பானியர் கையில் ஒரு சிறிய புத்தகம் இருக்கிறது. அதில் நாளாந்தம் முக்கிய தேவைகளுக்கு பயன்படுத்தும் சொற்களும் அவற்றின் சிங்கள தமிழ் கருத்தும் உச்சரிப்பும் இருக்கின்றன். அடிக்கடி அந்தப் புத்தகத்தைத் பார்ப்பார்கள், படிப்பார்கள். இலங்கையில் ஆங்கிலம் தெரியாதவர்களுடன் தமிழிலும் சிங்களத்திலும் கதைப்பார்கள்.

வியப்பு மேலிட மாமாவின் உதவிடன் யப்பானியரிடமிருந்த ஒரு புத்தகத்தைப் பார்த்தேன்.

யப்பான் சொல் ஒன்று- அதற்குப் பக்கத்தில் தண்ணீர். வத்துற என மொழிபெயர்ப்பு- அடுத்து

யப்பான் சொல்- வலது கை- சோத்துக்கை என மொழிபெயர்ப்பு

எனது சந்தேகத்தை யப்பானியரிடமே கேட்டேன் ‘’நீங்கள் பத்து நாட்கள்தான் இலங்கையில் இருப்பீர்கள், ஏன் இப்படிப் படிக்க வேண்டும்?

கிடைத்த பதில்

‘’பத்து நாட்களுக்குள் முடிந்தளவுக்கு இலங்கையிலுள்ள மொழிகளைப் படிக்க முயற்சிக்கின்றோம். ஆனால் உங்களைப் புரிந்து கொள்ளலாம். எங்களுக்கும் உங்களுக்கும் சிரமம் ஏற்படுவதைக் குறைக்கலாம். உதாரணமாக நான் யப்பான் மொழியில் தண்ணீர் கேட்டால் உஙகளுக்குக் தெரியாது.

எனவே தண்ணீர் அல்லது வத்துற என்றால் எவ்வளவு சுகம்? – யப்பானியரின் பேச்சு தொடர்கிறது.

நான் சிரித்தேன் பத்து நாட்களுக்குள் எங்கள் மொழி மூலம் எங்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்கையில். இந்த நாட்டில் பிறந்து இங்கே வாழும்- வாழபோகும் நாங்கள் இன்னொரு மொழியைப் படித்தால்....’’

எனக்குத் தெரியும் நான் பேசும் சிங்களத்தில் உச்சரிப்புப் பிழை, எழுதும் சிங்களத்தில் இலக்கணப்பிழை – ஆனாலும் என் சிந்தனையை சிங்களவர் புரிந்து கொள்கின்கின்றனார்.

ஒருவரையொருவர் புரிந்து கொள்ளும் போது எவ்வளவு ஆனந்தமாகவும் நிம்மதியாகவும் இருக்கிறது.

சணப்பித்தம்.

மக்களுக்காக ஓடிக்கொண்டிருக்கும் பஸ்ஸில் மக்கள் ஓடிச் சென்று ஏறிக்கொள்கின்றனர். வெள்ளவத்தை பஸ் நிறுத்துமிடத்தில் ஏறிய ஒரு கிழவன். ஒரு பெண், ஒரு வாலிபன் ஆகியோருக்கு இருக்க இடமில்லை. ஆடிச்சென்று கொண்டிருக்கும் பஸ் அதிலிருந்தவர்களையும் ஆடவைத்துக் கொண்டு இருக்கிறது.

கிழவனுக்கு பின்னால் நிற்கும் வாலிபனின் வசீகரம் பெண்ணின் மனதைக் கவர்கிறது. அது காதல் அல்ல. ஒரு வகையான கவர்ச்சி. சுமார் ஆறடி உயரம், சிரிக்கும் அழகான முகம், சிவந்த நிறம், எவரையும் கவரும் எழிலான தோற்றம் இவற்றோடு அவன் ஒயிலாக நிற்பது, பஸ்ஸின் ஆட்டத்திற்கேற்ப மெதுவாக ஆடுவது எல்லாமே பெண்ணின் மனதை கவர்கின்றது.

அவள் ஏங்குகின்றாள் “ திரும்பி ஒரு முறை என்னைப் பார்க்க மாட்டரா?”

அவனும் எண்ணுகிறான் “திரும்பிப் பார்;த்தால் எங்கே என்னைத் தவறாகப் புரிந்து விடுவாளோ?”

“எவ்வளவு வடிவானவர்!”
“என்ன ஸ்டைலாக நிற்கிறாள்”
“அவர் சிரிப்பதே தனி அழகு!”

இப்படியெல்லாம் ஒருவரைப் பற்றி ஒருவர் இனிமையாகச் சிந்திக்கின்றனர்.

பஸ் நிற்கிறது. இருவர் இறங்குகின்றனர். பெண்ணுக்கு இருக்க இடம் கிடைக்கிறது. அவள் இருக்கும் சீற்றுக்கு முன்னாலுள்ள இருக்கையிலும் ஓரிடம் காலி.

அந்த இடத்துக்காக கிழவனும் வாலிபனும் போட்டி போட்டபேர்து வாலிபனுக்கு வெற்றி.

“பாவம்! அவருக்கு ஒரு மாதிரி இடம் கிடைத்தது” அவனுக்காகப் பரிதாபப்பட்டவள் கிழவனைப் பார்க்கிறாள்.

“ஐயோ! பார்க்கவே சகிக்கவில்லை. நடக்கவே முடியாது. இந்தக் கிழடுகள் எல்லாம் ஏன் பஸ்ஸிலை வருவான்? வீட்டிலை பேசாமல் இருக்கலாமே!”

மூக்குச் சளியும் சிந்திக்கொண்டு. சீ....வாயாலை வீணியும் வடியுது.”

“கை காலிலையிருக்கிற புண்ணுக்கு மருந்தும் கட்டாமல்..”

எல்லாம் வெறுப்பான எண்ணங்கள்.

வாலிபன் பஸ் கண்ணாடிக்கூடாக வெளியே பார்ப்பதுபோல அவளைப் பார்க்கிறான். அவளும் அவனைப் பார்;க்கிறான். அவளும் அவனைப் பார்க்கிறாள். கண்கள் ஏதோவெல்லாம் பேசுகின்றன.


பஸ் பம்பலப்பிட்டியில் நிற்கிறது.

அவளுக்குப் பக்கத்தில் இருந்தவர் இறங்க, அந்த இடத்தைக் கிழவன் பிடித்துக் கொள்கின்றான்.

அவளின் அவருவருப்பு- “ஐயே...சீ...’

பஸ் வேகமாகச் செல்வதாலும் திடீர் பிரேக்குள் பிடிப்பதாலும் ஒருவரோடொருவர் மோதிக் கொள்கின்றனர். வாலிபன் பக்கத்தில் இருந்தவருடன் மோத, கிழவன் அந்தப் பெண்ணுடன் முட்டிக் கொள்கின்றான்.

திரும்பி முறைத்துப் பார்க்கிறாள். “நான் சென்ஸ்.”

நாலைந்து மாதங்களாக, சவரக் கத்தியே பட்டறியாத முகம். அழுக்குச் சட்டை. பரட்டைத் தலை. ஒரு வகையான வெடில் வேறு வீசியது.

வாந்தி வருவது போன்ற அருக்குவிப்பு. நகர்ந்து இருந்தாள். வெறுப்பு வெடித்தது. “இந்த இடத்திலை அவர் மட்டும் இருந்திருந்தால்” மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவியது.

“கொஞ்ச நேரம் என்னுடன் பேச மாட்டாரா, இவர்?”- வடிவான சட்டை, அந்தச் சிரிக்கும் பார்வையொன்றே போதுமே, எப்பவும் பார்த்துக் கொண்டேயிருப்பதற்கு!”

“ஹ{ம்!” என்று ஆழ்ந்த பெருமூச்சொன்றை வெளியிட்டாள், அவள்.

பஸ் நிற்கிறது.

ஒருவரையும் இறக்கிக் கொள்ளாத பஸ் கர்ப்பிணி ஒருத்தியை ஏற்றிக்கொண்டு புறப்படுகின்றது. இளமை குலுங்கும் அவள் பெருத்த வயிறுடன் கம்பியை பிடித்துத் தொங்கிய வண்ணம் வாலிபனுக்குப் பக்கத்தில் வந்து நிற்கிறாள்.

அவனுக்கும் அது தெரிகிறது. திரும்பிப் பார்த்தால் எழும்பி இடங்கொடுக்க வேண்டி வருமோ என்ற அச்சம் அதனால் வீதியைப் பார்க்கிறான். முன்னாலே இருக்கும் பெண்ணைக் கடைக்கண்ணால் நோக்குகிறான்.

“வாலிபன் எழும்பி இடம் கொடுக்கப் போகிறான்” என்ற நினைப்பு மனசில் சுழியிட இருந்தவளுக்கு “நீ இங்கே வந்திரு, தங்கச்சி” என்ற கிழவனின் குரல் திகைப்பை அளிக்கிறது.

கிழவன் எழும்ப இவளுக்குப் பக்கத்தில் அமர்கின்றாள்.

பக்கத்தில் அவள் வந்து இருந்ததுமே, இவளது கனவுகள் சிதைந்தன. “சீ” இவனும் ஒரு மனிசனா?

முன்னர் எனக்கிவன் எப்படிக் கவர்ச்சியாக தென்பட்டான்? என்று இப்போது இவள் அதிசயப்பட்டாள்.

“கவர்ச்சி ஒரு கண நேர மயக்கம். உயர் நடத்தை தான் சிறந்த ஆண்மை!” என்று இவள் தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.

கிழவனை நிமிர்ந்து பார்த்தாள். இப்பொழுது கிழவன் மேல் வெறுப்பில்லை. துவேசமில்லை. அசூசையில்லை. மாறாக, மனதிற்குள் பரிவுணர்ச்சி குடிகொண்டது. பஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. இவள் தற்செயலாகக் கூட அந்த நவநாகரீக ரோமியோவின் பக்கம் திரும்பிப் பார்க்கவேயில்லை.

மல்லிகை 1973

Sunday, August 26, 2007

ஆங்கிலத்தில் எனது வலைப்பதிவு

தமிழ் வலைப் பதிவில் வந்த எனது சில படைப்புகளை ஆங்கிலத்திலும் பார்க்க முடியும். creations of uduvai எனும் பெயரில் அவ் வலைப் பதிவு இயக்கின்றது. கீழே அதன் சுட்டி.

creations of uduvai

Saturday, August 25, 2007

பாமா படித்துக்கொண்டு இருக்கிறாள்!

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலிருந்தவாறே பொழுதைப் போக்க கதைப்புத்தகங்கள் வாசிப்பது என் வழக்கம். வழக்கம்போல அன்றும் அலுமாரியிலிருந்த புத்தகங்களில் ஒன்றை எடுத்து கைகள் பக்கங்களைப் புரட்டியது. அச்செழுத்துக்களுக்கு மத்தியில் அழகான கையெழுத்தில் “பாமா” என்று எழுதியிருந்தது.

பாமா

அவள் என் பள்ளித்தோழி. ஏழ வருடங்களுக்கு முன் உடுப்பிட்டியிலுள்ள மகளிர் கல்லூரியொன்றில் இருவரும் ஒரே வகுப்பில் படித்துக் கொண்டிருந்தோம். பணக்காரியாக இருந்தாலும் “வாணி! வாணி!” என்று என்மேல் உயிரையே வைத்திருந்தாள். பாமா படிப்போடு மட்டும் நின்று விடவில்லை. நாடகம், எழுத்து, பேச்சு இவற்றில் எல்லாம் வல்லவளாக விளங்கினாள். ஏராளமான கதை, கட்டுரை, கவிதைகளi எழுதியதோடு நல்ல நாடகங்களையும் நெறிப்படுத்தினாள். எனக்கு அவற்றிலொன்றும் திறமையில்லாத போதும் கதைகள் வாசிக்க வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. பாடப் புத்தகங்கள் வாங்க வசதியில்லாமல் திண்டாடியபோது, கதைப் புத்தகங்கள் படிக்கும் வசதியை ஏற்படுத்தித் தந்தவள் பாமாதான். அந்தப் பாமா கதைப் புத்தகங்கள் வாங்குவதற்காகப் பாமாவின் வீட்டுக்குச் சென்றிருந்த போது மேசை மேலிருந்த “வயலின்” வாத்தியத்தைப் பார்த்து விட்டேன்.

“அடி பாமா? உனக்கு வயலின் கூட வாசிக்க வருமா?” என்றேன்.

பாமாவின் சிரிப்பு. “வாணி! கொஞ்சம் வாசிக்கத் தெரியும். எஸ். எஸ். ஸி சோதனை முடிந்ததும் யாரிடமாவது பழகவேண்டும். வயலின் பழகி முடிந்ததும் ஆர்மோனியம், வீணை எல்லாம் வாசிக்கப் பழகப்போகிறேன். அது மட்டுமல்ல, யாரிடமாவது மிருதங்கம் அடிக்கவும் பழகவேண்டும். இலங்கையிலேயே முதல் முதல் மிருதங்கம் வாசிக்கும் பெண் உன் சிநேகிதி பாமாவாகத்தானிருப்பாள்.

என் எண்ணத்தில் பட்டதைத் தட்டுத் தடுமாறி கொண்டு பாமாவுக்குச் சொன்னேன். “நீ வயலின் வாசிப்பதில் தவறொன்றுமில்லை. பள்ளிக்கூடப் படிப்பு முடிந்த பின் கலைத்துறையில் ஈடுபடுவதே நல்லதென நினைக்கிறேன். இப்போதே சதா நாடகம், பேச்சு என்று பொழுதைப் போக்கிக் கொண்டு இருப்பதால் படிப்பில் போதிய கவனம் செலுத்த வசதி கிடைக்காது. போதாக்குறைக்கு ஒரு பத்திரிகை விடாமல் எழுதுகிறாய். வானொலியிலும் பெண்கள் நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதிலும் ஓரிடத்தைப் பிடித்துக் கொள்கிறாய். இவற்றோடிருந்தால் படிப்பதற்கு நேரம் எப்படிக் கிடைக்கும்?”

பாமா செல்லமாகக் கோபித்தாள். “வாணி, நீ நினைப்பது போல நாடகம், எழுத்து, பேச்சு என்றெல்லாம் ஈடுபட்டுக் கொண்டிருந்தாலும் எனது படிப்பையும் கவனிக்கின்றேன். எங்கள் வகுப்பிலேயே எல்லாப் பாடங்களிலும் நான் அதிக புள்ளிகள் எடுத்து வருகிறேன் என்பது உனக்குத் தெரியும். மற்ற மாணவிகள் ஒரு நாள் முழுவதும் படிப்பதை நான் இரண்டொரு மணி நேரத்திலும் படித்து முடித்து விடுவேன். வகுப்பில் படிப்பிக்கும் போது நடக்கும் நிகழ்ச்சிகளை வகுப்பு முடிந்ததும் அப்படியே நடித்தும் காட்டுவேன். இவற்றில் கலந்து கொள்வதால் எனது படிப்பு பாதிக்கப்படுவதில்லை”

என் தோழி சொன்னதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது. எல்லாச் கலைகளிலும் சிறந்து விளங்கியது போலவே படிப்பிலும் கெட்டிக்காரியாக இருந்தாள். இருந்தாலும் அவள் எல்லாத் கலைகளிலும் ஈடுபாடு கொண்டது. எனக்குப் பிடிக்கவில்லை. “நீ ஏதாவது ஒரு துறையைத் தேர்ந்தெடுத்து அதிலேயே உன் கவனத்தைச் செலுத்தி முழுப் பயிற்சி பெற்றால் புகழ் மிக்க கலைஞர்களில் ஒருவராக வரலாம். வயலினிலும் கொஞ்ச நாள், ஆர்மோனியத்திலும் கொஞ்ச நாள், மிருதங்கத்திலும் கொஞ்ச நாள் என்று பழகிக் கொண்டு வந்தால் , காலம் தான் வீணே கழியும் தவிர ஒன்றையும் ஒழுங்காகப் பயில முடியாது. உனக்கு ஆர்வமும் திறமையும் இருக்கும் கலை ஒன்றைத் தெரிவு செய்து அதிலே முழுக்க முழுக்க ஈடுபடவேண்டும். எந்த ஒரு துறையிலுமே உடனடியாகப் பலனை எதிர்பார்க்க முடியாது. நல்ல பயிற்சி பெற்றுத் திறமைசாலியாகிய பின்தான் புகழையும் பலனையும் எதிர்பார்க்க முடியும். நீ வயலினைக் கையில் தூக்கிய உடனேயே எல்லோரும் உன்னை வயலின் மேதையெனப் பாராட்ட வேண்டுமென்று ஆசைப்படுகிறாய். அது நடக்கக்கூடியதொன்றல்ல. எங்கள் தோழி என்பதற்காக நாங்கள் பாராட்டலாம். உன்னைப் போல ஒருவரும் வயலின் வாசிக்கமாட்டார்கள் என்று போற்றலாம். ஆனால் எல்லாரும் அப்படிப் போற்றுவார்களா என்ன?” என்றேன்.

என் கருத்தை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை அவளுக்கு “எங்கள் ஓவிய ஆசிரியர் பெருமானைப் பார்த்தாயா? எமது கல்லூரியில் அவரைப் போல ஆங்கிலம் கற்பிக்க வேறு எவராலும் முடியாது. அவர் இல்லாமல் கல்லூரியில் எந்தக் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறுவதில்லை. நாடகமானால் அவர் பழக்க வேண்டும். நடனமென்றால் அதற்கும் பெருமான் தான் முன்னுக்கு வரவேண்டும். பாட்டுக் கச்சேரி என்றாலும் அவர் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும். விளையாட்டு விழா என்றாலும் அவரை விட்டுவிட்டு நடாத்த முடியாது. ஆசிரியர் பெருமான் தனியொருவராகவே எல்லாத் துறையிலும் மற்றவர்களின் பாராட்டைப் பெறவில்லையா? அவரைப் போல நானும் வர நினைப்பது தவறா?” உதாரணம் காட்டிப் பேசினாள் பாமா.

நானும் உதாரணங்களோடு அவள் கருத்தை மாற்ற முனைந்தேன். “ஆசிரியர் பெருமான் எல்லாத் துறைகளிலும் கைவைத்துப் புகழ் பெற்றுள்ளார் என்பது உண்மைதான். இரண்டொருவர் அவரைப்போல் இருக்கலாம். அதற்காக எல்லோரும் பெருமானாக முடியாது. இல்லாமலும் இன்னொன்றைக் கவனித்தாயா? பெருமானின் திறமையும் புகழும் எங்கள் கல்லூரி என்ற குறுகிய வட்டத்துக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது. அவருக்கேற்ற துறை நாடகம். நாடகத்தோடு மட்டும் அவர் திருப்திப்பட்டு, அதற்காக உழைத்தால் அவர் புகழ் எங்கள் கல்லூரிக்கு வெளியேயும் பரவும். தரமான நாடகங்களை மேடையேற்ற முடியம். நல்ல வானொலி நாடகங்களையும் எழுதலாம். எல்லாத்துறைகளிலும் கைவைத்து கொஞ்சக்காலம் ஒவ்வொரு துறையிலும் புகழ் பெறுவதை விட ஒரு துறையை முழுக்கக் கற்று மேதையாவது நல்லதல்லவா? இந்தியாவில் வீணைக்கு பாலசந்தர்,சித்தாருக்கு ஒரு ரவிசங்கர் என்றில்லையா? ஏன் எங்கள் நாட்டிலும் நாதஸ்வரத்தில் புகழ்பெற்ற அளவெட்டிப் பத்மநாதன்- கதாகாலாட்டசேபத்தில் ஸ்ரீலஸ்ரீ சுவாமிநாதத் தம்பிரான் நாடகத்தில் கலையரசு சொர்ணலிங்கம் ஆகியோர் இல்லையா? இவர்களெல்லாம் இரண்டொரு நாள் முயற்சியில் பெரும் புகழ் தேடிக்கொள்ளவில்லை. எத்தனையோ வருட முயற்சிக்குப் பின்புதான் புகழ் அவர்களைத் தேடிவந்தது. ஆர்வமுள்ள கலையில் திறமையும் இருந்தால் குறைந்தது ஐந்தாறு வருடங்களாவது பலனை எதிர்பாராது பாடுபட வேண்டும். பணமும் புகழும் தானாக வரும்” என்றெல்லாம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன்.

பாமா எஸ்.எஸ்.ஸி சித்தியடைந்து யாழ்ப்பாணத்திலுள்ள மகளிர் கல்லூரி ஒன்றுக்குச் சென்றாள். அதன்பின் சந்திக்கச் சந்தர்ப்பங்கள் கிடைக்காததால் கடிதங்கள் கதை பேசின.

“புதிய கல்லூரியில் பாமாவைவிட நாடகம், எழுத்து, பேச்சு ஆகியவற்றில் பலர் சிறந்து விளங்குவதாகவும் தன்னால் அவர்களைப் போலச் சிறப்பாகச் செய்து பெயர் பெற முடியவில்லை” என்றும் முதல் எழுதிய கடிதத்தில் குறைப்பட்டு கொண்டாள்.

“எல்லாரும் கலைஞர்களாக இருந்தாலும் ஒரு சிலர் தான் புகழ்பெற முடியும். இதற்காக வருத்தப்படாதே. காலம் வரும் வரை பொறுத்திரு” என்றெழுதினேன்.

“நடனம் ஆடக்கூடியவர்கள் குறைவாக இருப்பதால் நான் இப்பேர்து டான்ஸ் பழகி வருகின்றேன். நான் நல்லாக ஆடுவதாக நடன ஆசிரியை பாராட்டியுள்ளார். இப்போது அநேகமானவர்கள் நடனமாடி நல்ல பெயர் பெற்றுள்ளார்கள். நானும் ஒரு நடனராணியாக வரவிரும்புகின்றேன். வசதியானால் இந்தியாவுக்குச் சென்று நடனம் பயில எண்ணியுள்ளேன்” என்று பாமாவின் கடிதத்தைப் படித்ததும் பதில் எழுதினேன் இப்படி.

“நடன ஆசிரியை எப்படிப் பாராட்டினாலும் ஐந்தாறு வருடங்களாவது நடனத்தைத் துறைபோகக் கற்க வேண்டும். அப்போது தான் பிரகாசிக்க முடியும். அதற்குள் மணவாழ்க்கையில் ஈடுபடவேண்டி நேரிட்டால் பணத்தைக் கொட்டி நடனத்தைப் பழகுவதால் ஏற்படும் பலன்தான் என்ன? பணமுள்ளவர்களின் சிலர் பரத நாட்டியம் பயில்வதை ஒரு நாகரிகமாக் கருதுகின்றனர். படிப்புத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. பரதம் ஆடத்தெரிருந்திருக்க வேண்டும். என்று சில பெற்றோர் எண்ணுகின்றனர். பணத்தைச் செலவழித்துப் படிப்பதானால் ஏதாவது பலன் கிடைக்கவேண்டும்”

அந்தக் கடிதத்துக்கு அவள் பதிலே எழுதவில்லை. எஸ்.எஸ்.ஸி சித்தியடைந்து எச்.எஸ் லியில் படித்துக்கொண்டிருக்கும் போது, கொழும்பிலுள்ள அரசாங்க அலுவலகமொன்றில் எழுதுவினைஞராக வேலைபார்க்க வருமாறு அழைப்புக் கிடைத்தது.

கல்லூரிப் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, மகிழ்ச்சியான செய்தியை பாமாவுடன் பகிர்ந்து கொண்டேன். அவள் முகத்தில் மகிழ்ச்சியில்லை. காரணத்தையும் அவளே சொன்னாள்.

“வாணி நான் இப்போது நடன வகுப்புக்குச் செல்வதில்லை. என் உடல் நிலை நடனமாடுவதற்கு ஒத்துக்கொள்ளாததால் சங்கீதம் படிக்கப் போகின்றேன்” ஒரு கலையையாவது ஒழுங்காகக் கற்கமால் எல்லாவற்றிலும் கை வைத்து ஏமாற்றடைந்த பாமாவைத் தேற்ற என்னால் முடியவில்லை.

* * * *

“வாணி....என்ன சிந்தனை போல இருக்கிறதே?” அறைத்தோழி அமிர்தா அழைத்தபோது தான் பழைய காட்சிகள் மணமேடையிலிருந்து மறையத் தொடங்கின.

“ஒன்றுமில்லை....பள்ளிக்கூட நினைவுகள்” என்றேன்.

அமிர்தா கேலியாகக் கேட்டாள்.... “ஓகோ காதலா?...”

“சும்மா போடி அதொன்றுமில்லை. இதோ இந்தப் புத்தகத்தைப் பார்த்தாயா? என் பள்ளித்தோழி பாமாவின் புத்தகம். அதுதான்...” சொல்லிக் கொண்டு வரும் போது அமிர்தா என்னை விரைவுபடுத்தினாள்.

“பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியில் ஐந்து மணிக்கு ஆசிரியர் அரியரத்தினம் எழுதுவினைஞர் சேவையின் கிளாஸ் ரூ வகுப்புகள் நடத்துகிறாரல்லவா? நாம் போக வேண்டும் புறப்படு” என்றாள் அறைத்தோழி. ஆசிரியர் அரியரத்தினம் நடாத்தும் எழுதுவினைஞர் சேவை வகுப்புக்கு வந்தவர்களைப் பார்த்தேன். “இந்துமதி, சந்திரகலா, மேரி, தெய்வானை, சடாட்சரநாயகி, ராஜேஸ்வரி,பரமேஸ்வரி, பாக்கியம் என்று ஒவ்வொருவராகக் கவனித்துக் கொண்டு வந்த கண்கள் ஒருத்தியைக்கண்டு களிப்பால் துள்ளியது. வெற்றிப்புன்னகையுடன் அவளை அழைத்தேன்.

“பாமா”

அவள் முகம் ஆச்சரியத்தால் மலர்ந்தது.

“பாமா நீ இங்கே எப்படி வந்தாய் ?” எனது கேள்விக்கு அவள் அளித்த பதில், “நானும் எழுதுவினைஞராகத் தெரிவு செய்யப்பட்டு இங்கே தான் கடமையாற்றுகின்றேன்”
“எனக்குத் தெரியவே தெரியாது” என்றேன்.

“உனது முகவரியை எங்கோ தொலைத்துவிட்டேன். அதனால்தான் அறிவிக்க முடியவில்லை” என்று அவள் சொல்லி முடிப்பதற்கும் ஆசிரியர் அரியரத்தினம் வகுப்புக்குள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“இன்று அலுவலக நடைமுறைகளைக் கவனிப்போம்” என்று அன்றைய பாடங்களை ஆரம்பித்தவர்.

“இத்துடன் வகுப்பை முடித்துக்கொள்வோம். மீண்டும் நாளை மாலை ஐந்து மணிக்கும் ஐந்தே காலுக்கும் இடையில் சந்திப்போம்’ என்றதும் வகுப்பைவிட்டு வெளியேறினோம்.

பழைய சிநேகிதியை- பள்ளித்தோழியை ஐந்து வருடங்களுக்குப் பின் சந்தித்ததால் எவ்வளவு வி~யங்களைப் பற்றிப் பேசலாம்? அவ்வளவையும் அப்போதே கதைத்துவிட வேண்டுமென்ற அனல், “வேலைகள் எல்லாம் எப்படிப் போகிறது? இப்போது பத்திரிகைகளுக்கு எழுதுவதில்லையா? வானொலி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதில்லையா? வயலின், நடனம், சங்கீதம் எல்லாம் என்னாச்சு?

ஏமாற்றத்தோடு சொன்னாள். “பத்திரிகைக்கும் வானொலிக்கும் எழுதுவதால் நேரமும் வீணாகிறது. அவ்வப்போது சிறிது பணம் கிடைத்தால் உண்டு. இருந்தாலும் பாடுபடுமளவுக்குப் பலன் கிடைப்பதில்லை. அதனால் இப்போது அவற்றை விட்டுவிட்டேன். வசதி கிடைத்தால் வானொலி கேட்பதுண்டு. பணப்புழக்கம் இருக்கும் நேரம் பத்திரிகை படிப்பதுண்டு.

அதற்கு மேலே அவளிடம் கலைகள் பற்றிக் கேட்க விருப்பமில்லை எனது வீட்டுக்கு வருமாறு அழைத்தேன். அவள் தயங்கித் தயங்கிச் சொன்னாள்.


“இன்று வருவதற்கு வசதியில்லை. கோபிக்காதே. ஏழு மணிக்கு பிரைற்றன் கலாசாலையில் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியல் வகுப்புக்குச் செல்ல வேண்டும். கொழும்பில் தானே இருக்கிறோம். இன்னுமொரு நாளைக்கு கட்டாயம் வருவேன்” என்றாள்.

அவள் வர மறுத்தது கோபத்தை உண்டாக்கவில்லை. ஒரு பரீட்சை முடியுமுன்பே இன்னொரு பரீட்சைக்குப் படிப்பது வேதனையை உணடாக்கியது. என் வேதனையை மொழிபெயர்த்தேன். “கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியலுக்கு இப்போது என்ன அவசரம்? கிளாஸ் ரூ சோதனை முடிந்த பின்பு அடுத்த வருடம் எடுக்கலாமே? இரண்டு சோதனைக்கும் ஒரே நேரத்தில் படிப்பது சிரமமாயிருக்கும். ஒரு பாடத்திலாயினும் போதிய கவனம் செலுத்த முடியாதல்லவா?”

வழக்கமான அவள் சிரிப்பே பதிலளித்தது.

“இரண்டு சோதனையல்ல...இருபது பரீட்சையென்றாலும் என்னாலும் படிக்கமுடியும் கிளாஸ் ரூ பரீட்சையில் தேறினால் கணக்காளர் உத்தியோக உயர்வே கிடைக்கும். எப்படியும் அறுநூறு எழுநூறு ரூபா சம்பளமும் கிடைக்கும். வாழ்நாள் முழுவதும் எழுதுவினைஞராக இருக்க விரும்பவில்லை. எப்படியாவது ஓர் அக்கவுண்டன்ற் ஆகி விடவேண்டும்” என்றாள்.

கிளாஸ் ரூ பரீட்சையில் சித்திடைந்தபோது தோழிகளுக்கு விருந்து வைத்தேன். விருந்தில் கலந்துகொள்ள வந்த பாமா என்னைப் பாராட்டினாள். நான் அவளைப் பாராட்டும்படியாக மறுமொழி திருப்தியாக இருக்கவில்லை. எனவே அவளைத் தேற்றிவிட்டு கையிலிருப்பது என்ன புத்தகங்கள் என வினவினேன்.

“ஓ இதுவா? இப்போது அட்வான்ஸ்லெவல் படிக்கின்றேன். எப்படியும் ஐந்து வருடங்களுக்குள் பி.ஏ சித்தியடைந்துவிடலாம். பின்பு ஏதாவது வேறு உயர்ந்த வேலைகளைத் தேடிக்கொள்ளலாம்” கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டே சொன்னாள்.

“அப்படியானால் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ்....” சந்தேகத்தோடு கேட்டேன்.

ஆங்கிலத்தில் படிப்பிக்கிறார்கள். தெளிவாக விளங்கவில்லை. அதனால் கோஸ்ற் அன்ட் வேர்க்ஜ் விட்டு விட்டு அட்வான்ஸ்லெவல் படிக்கிறேன். என்னிடத்தில் திறமையும் பணமும் இருக்கிறது. நான் எப்படியும் ஒரு பட்டதாரியாகிவிடுவேன்.

குளிர்பானத்தை அவள் கைகளில் திணித்த என்ன பேச்சு சூடாக இருந்தது, “பாமா, உன்னிடம் பணம் இருக்கின்றது என்பதற்காக எல்லாவற்றையும் படிக்க வேண்டுமா? நடனம், நாடகம், வயலின், சங்கீதம், எல்லாம் கற்றாயே, அவற்றால் விளைந்த பயன் என்ன?”

“கிளாஸ் ரூ சோதனைக்குப் படிக்கும்போது கூட உன் திறமையை அதிகமாக மதிப்பிட்டு கிளாஸ் ரூ பரீட்சைக்கும் கோஸ்ற் அன்ட் வேர்க்ஸ் கணக்கியல் பரீட்சைக்கும் ஒரே சமயத்தில் படித்தாய், பலன்? இரண்டு பரீட்சையிலும் தோல்வி. எவ்வளவு திறமையிருந்தாலும் அந்தத் திறமையிலும் அளவுக்கதிகமான நம்பிக்கை வைக்கக்கூடாது. ஒரு பரீட்சையில் சித்தியடைந்த பின்புதான் இன்னொரு பரீட்சையைப் பற்றிச் சிந்திக்கவேண்டும். எல்லாப் பரீட்சைக்கும் ஒரே நேரத்தில் முயற்சி எடுத்தால் பலமரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான் என்பது போலத்தான் முடியும். எண்ணித் துணிய வேண்டும். பணம் இருக்கிறது என்பதற்காக வீணாகச் சிந்திச் செலவழிப்பதா? நேரமும் வசதியும் இருக்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் படித்து ஒன்றிலுமே தேர்ச்சியடைய முடியாமல் போவதானால் வீண் படிப்பு எதற்கு?”

விருந்துக்கு வந்தவள் என்னோடு கோபித்துக்கொண்டு சென்றுவிட்டாள். பின்பு அவளைச் சந்திக்க முடியவில்லை.

பாமா “அட்வான்ஸ் லெவல் பரீட்சையிலும் தவறி விட்டதாகவும் இப்போது கட்டுப்பெத்தை தொழில் நுட்பக் கல்லூரியில் ஏதோ படித்துக் கொண்டிருப்பதாகவும் கேள்விப்படுகின்றேன்.

ஈழநாடு 1972
சிங்கள மொழியிலும் பிரசுரிக்கப்பட்டது.

Friday, August 24, 2007

ஒரு மாவட்டத்தின் பழைய டயறி

நான் பணியாற்றும் மாவட்டங்களில் என்னைப் பற்றி பத்திரிகைகளில் வரும் செய்திகளை கத்தரித்து வைத்துக் கொள்வதுண்டு. அவ்வாறே நான் கிளிநொச்சி அரச அதிபராக கடமையாற்றிய போது ஆவணப்படுத்தி சில பத்திரிகைகளின் பகுதிகள்.

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

Photo Sharing and Video Hosting at Photobucket
Photo Sharing and Video Hosting at Photobucket

Thursday, August 23, 2007

கன்னத்தில்

(1)
காங்கேசன் துறையிலிருந்து புறப்படும் புகையிரதத்தில நடராசனை வழியனுப்பி வைக்க வந்த பாலன் சொன்னான். “மச்சான் கொழும்புக்குப் போன உடனே தபால் போடு.....முடியுமெண்டால் நான் சொன்ன சாமான் என்ன விலையெண்டு கேட்டு எழுது”

“போன உடனே முதல் வேலை இதுதான்” என்று சொல்லிவிட்டு “ எங்கடை செல்வராணி கலியாணம் முடிச்சிட்டாளாம் தெரியுமோ?” எனக் கேட்டான் நடராசன்.

“ஓ, பசறையிலை ஆரையோ மரி பண்ணியிருக்கெண்டு கமலா சொன்னது” பதிலளித்த பாலன் நடராசனையும் ஒரு கேள்வி கேட்டாள்.

“இந்திராணியும் யாழ்ப்பாணத்திலைதான் எங்கையோ கலியாணம் முடிச்சிருக்காளாம், தெரியுமோ?”

மற்றவன் சிரிக்கின்றான். “பாலா, இந்திராணியைப் பற்றி ஒவ்வொரு நியூசும் தெரியும். அவளுக்குப் போன மாதம் ஓர் ஆம்பிளைப்பிள்ளை கூடப் பிறந்திட்டுது. இந்திராணி மட்டுமல்ல-என்னோடை படிச்ச எல்லாப் பெட்டையளும் இப்ப என்ன செய்து கொண்டிருக்கினம் எண்டு தெரியும். பெரிய ஈஸ்வரி வாசிற்றிலை படிக்கிறாள். சின்ன ஈஸ்வரி வீட்டிலை இருக்கிறாள். ராஜேஸ்வரி பீப் பிளஸ் ரீச்சருக்கு அப்பிளை பண்ணியிருக்கிறா. சாந்தி தையல் படிக்கிறா. ரஞ்சி வேம்படியிலை நளினி லண்டனிலை...தேவி லவ் மரிஜ் பண்ணிக் கொண்டு கொழும்பிலை...” கட கட வென்று சொல்லிக் கொண்டு போன போது...

“போதும் மச்சான், நீ மன்னன், உன்னோடை கதைக்கேலாது. தெரியாமல் வாய் திறந்திட்டன். மன்னிச்சிடு” என்று இடை நிறுத்தினான் பாலன்.

இரண்டு வாலிபர்கள் சேர்ந்து கதைக்க ஆரம்பித்தால் பெண்களைப் பற்றிய கதைக்கா பஞ்சம்? பின்னரும் சில நிமிடங்கள் வரை நடராசனும் பாலனும் பல பெண்களைப் பற்றிக் கதைத்துக் கொண்டார்கள்.

இதற்கிடையில் நடராசன் இருந்த பெட்டியில் ஓரளவிற்க ஆட்கள் வந்து விட்டனர். அவனுக்கு முன்னாலுள்ள சீற்றிலும் இருவர் வந்து இருந்து விட்டனர்.

ஸ்டேசன் மாஸ்டர் விசில் ஊதியதும் - புகையிரதம் மெதுவாக நகரத் தொடங்கியது. சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க கிழவன் ஒருவனும் இளம் பெண் ஒருத்தியும் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

ஓடிவந்த பெண் நடராசன் இருந்த பெட்டியில் தொற்றிக் கொண்டாள். கிழவன் யன்னலூடாக ஒரு பெரிய சூட்கேசைத் தள்ளிவிட்டுப் “போய் தபால் போடு தங்கச்சி என்றார்”

நகரும் புகையிரதத்துடன் சிறிது தூரம் நடந்து வந்த பாலன் ‘செரியோ....ஆளொண்டு உன்னோடை வருது ஏதோ பார்த்து செய்...செரியோ” என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டான்.

நடராசன் பாலனுக்கு செரியோ சொன்னான். அந்தப் பெண் கிழவனக்கு செரியோ சொன்னாள்.

“ஆளொண்டு உன்னோடை வருகுது. ஏதோ பார்த்துச் செய்” ரயில் புறப்படும் போது ஏறிக் கொண்ட பெண்ணைக் குறித்து பாலன் சொன்னது நடராசனுக்கு சிரிப்பையும் ஒரு புதுவிதமான உற்சாகத்தையும் கொடுத்தது.

புதிதாக வந்தவள் சூட்கேசை மேலே வைக்கும் போது எதிர்பாராத விதமாக அவளின் மெல்லிய கை நடராசனின் கைகளின் மேல் பட்டுவிட்டது. அவள் முகத்தை நளினமாக நெளித்துக் கொண்டே “சொறி” சொல்லி முடிப்பதற்குள், அவன் “பரவாயில்லை” என்றான்.

ரயில் யாழ்ப்பாணத்தில் வந்து நின்ற போது நடராசனுக்குத் தெரிந்த சில நணபர்கள் மேடையில் அங்குமிங்கும் உலாவிக் கொண்டிருந்தனர். அவனையும் பக்கத்திலிருந்த பெண்ணையும் பார்த்துச் சிரித்துக் கொண்டே “ஆ போயிட்டு வாங்கோ” என்று பன்மையில் சொல்லி வழியனுப்பி வைத்தனர்.

மேடை வழியாக நடந்து வந்த எவளோ ஒருத்தி ஜன்னலூடாகத் தலையை நுழைத்து “ஹலோ, சரஸ் என்ன கொழும்புக்கோ?” எனக் கேட்டாள் நடராசனுக்குப் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து.

பக்கத்திலிருந்தவள் “ ஓம் மண்டே போயிருப்பன். மதருக்கு கொஞ்சம் சுகமில்லை. அதனால் ரூ டேய்ஸ் சிக் அடிச்சனான்” என்றாள் ஆங்கிலமும் தமிழும் கலந்து.

ஓரளவுக்குப் படித்த பெண்களில் பெரும்பாலானோர் இப்படித்தான். ஒழுங்காக ஆங்கிலம் பேசத்தெரியாது. தமிழிலும் கதைக்க வராது. இரண்டு மொழிகளையும் கலந்துதான் மணிப்பிரவாள நடையில் உரையாடுவார்;கள்.

இரண்டு பெண்களும் தொடர்ந்தும் மொழியைக் கொலை செய்யக்கூடாது என எண்ணியதாலோ என்னவோ புகையிரதம் இருவரையும் பிரித்து வைத்தது.

(2)
“சா கொஞ்ச நேரம் இரண்டு பேருங் கதைத்திருந்தால் எவ்வளவு வி~யம் அறிஞ்சிருக்கலாம். இப்பவும் என்ன, இரண்டு சங்கதி வந்திட்டு. ஒண்டு இவ கொழும்புக்குத்தான் போறா. மற்றது இவவின்ர பேர் சரஸ்” என அவளைப் பற்றிய சிந்தனையில் மூழ்கியிருந்த நடராசனை முன்னாலிருந்தவரின் கேள்வி விழிப்படையச் செய்தது.

“தம்பி கொழும்புக்கோ?” என்று கேட்டதற்குத் தலையை ஆட்டிக் கொண்டு ஓம் எனப் பதிலளித்தான்.

“நாங்கள் பளையில் இறங்கிவிடுவம். நீங்க நல்ல வடிவாகப் போகலாம்” என்று சொல்லி விட்டு அவனையும் அந்தப் பெண்ணையும் பார்த்தார்.

நடராசன் கடைக் கண்ணால் அவளைப் பார்;த்தான். ‘கல்கி’ பத்திரிகையை வாசித்துக் கொண்டிருந்தாள் அவள். அவனைக் கவனிக்கவில்லை. தனது சூட்கேசைத் திறந்து “பொம்மை” எனும் சினிமாப் பத்திரிகையை எடுத்து விரித்தான் நடராசன். உள்ளமெல்லாம் பக்கத்திலிருந்த பெண்ணைப் பற்றி எண்ணத்தில் இன்பம் கண்டு கொண்டிருக்கும்போது எப்படிப் படிக்க முடியும். திறந்த பொம்மை அப்படியே இருந்தது. அவள் மட்டும் ஒன்றையும் கவனிக்காமல் வாசித்துக் கொண்டிருந்தாள்.

ஆண்களிடம் காணப்படும் அடக்கமின்மையால் தான் அவர்கள் பல காரியங்களைச் சாதிக்க முடியாமல் போய் விடுகின்றனர். பெண்கள் உள்ளத்தில் எவ்வளவு ஆசையை வைத்திருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் அடக்கி வைத்திருக்கும் ஆற்றல் அவர்களிடம் இருக்கின்றது. அந்தச் சாமர்த்தியத்தினால் தான் அவர்கள் பல கடினமான காரியங்களையெல்லாம் எளிதிற் சாதித்துக் கொள்கின்றார்கள். நடராசன் பல பெண்களுடன் படித்தவன். ஒரு கலைஞனாகவும் இருப்பதால் கலை நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பெண்களுடன் கலந்து கொண்டவன். ஒவ்வொரு பெண்ணைக் காணும் போதும் அவளோடு கதைக்கவேண்டும் நன்றாக பழக வேண்டும், முடிந்தால் அவளையே காதலிக்க வேண்டுமென்ற உணர்வுகள் தான் அவனுள்ளத்தில் துள்ளி எழும்.

அந்த உணர்வுகளுடன் பல பெண்களோடு பழகியிருக்கிறான். அவன் விரித்த ஆசை வலையில் பலர் விழுந்தனர். எப்படியோ சிலர் காதல் வலையில் இருந்து தாங்களாகவே தப்பிக் கொண்டார்கள். சந்தர்ப்பம் சூழ்நிலை முதலியவற்றால் சிலரை அவனாகவே வெறுத்துக் கொண்டான்.

நடராசனைப் போல விளையாட்டுத் துறையிலும் கலைத்துறையிலும் பிரபலமான சில இப்படித்தான் நடந்து கொள்கின்றார்கள். இதற்கு அவர்;களைச் சொல்லிக் குற்றமில்லை. படைத்தவன் மேல்தான் பழியைச் சுமத்தவேண்டும்.

பெண்களால் ஏமாற்றப்பட்டதோடு, பெண்களையும் ஏமாற்றியிருக்கும் நடராசனுக்கு பக்கத்தில் இருந்த பெண் மேல் மோகம் ஏற்பட்டது. இந்தளவுக்கும் யாழ்ப்பாணத்தில் ஒருத்தியும், கொழும்பில் இன்னொருத்தியும் இவனது அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். இருந்தும் சந்தித்த பெண்ணை ‘விட்டுவிட’ மனம் வரவில்லை.

இப்படித்தான் வீட்டில் சாப்பாடு காத்துக்கொண்டிருக்கும் போது, சிலர் வழியிலுள்ள கடையில் சாப்பிடடு விட்டுத்தான் வீட்டுக்குச் செல்வார்கள். அவர்களுக்கிருப்பதைப் போன்ற மனம் நடராசனுக்கும் இருந்திருக்கலாம். அதனால்தானோ என்னவோ”எப்போ பளை வரும்” என்ற எண்ணத்துடன் இருந்தான்.

(3)

பளையை விட்டு ரயில் நகர ஆரம்பித்ததும் பக்கத்திலிருந்தவள் அந்த இடத்தை விட்டு முன்னாலுள்ள சீற்றில் வந்து அமர்ந்தாள். அதுவரை அரைகுறையாகப் பார்த்து ரசிதத அவளுடைய முகத்தை முன்னுக்கு வந்து இருந்தபோது முழுமையாகப் பார்க்க முடிந்தது.

முன்னுக்கு வந்து இருந்தவளை நிமிர்ந்து பார்த்ததும் அவள் புன்சிரிப்பொன்றைப் பரிசாகத் தந்தாள். பதிலுக்கு அவனும் மெல்லிய சிரிப்பைப் பரிசாகக் கொடுத்தான்.

அவள்தான் முதலில் கதைக்க ஆரம்பித்தான். “நீங்க கொழும்புக்கா போறீங்க?”

“ஓம்” பதிலைச் சொல்லிவிட்டு அவள் கேட்ட அதே கேள்வியைத் திருப்பி அவளிடம் அவன் கேட்டான்.

“ஓம் நானும் கொழும்புக்குத்தான் போறன்” அவள் மறுமொழி தந்தாள்.

சில நிமிடங்கள் வரையில் நிலவிய மௌனத்தை மெதுவாகக் கலைத்தான் நடராசன். “உதைக் கொஞ்சம் தர்றீங்களா?”

‘கல்கி’யும் ‘பொம்மை’ யும் கைமாறியது. புத்தகங்களை மாத்திரமல்ல...

“உங்கடை பெயர் சரஸ்வதியா?”

அவன் சிரித்துக்கொண்டே கேட்டான். “உங்களுக்கு எப்படித் தெரியும்?”

“யாழ்ப்பாணம் ஸ்டேசனிலை ஒரு பெட்டை வந்து சரஸ் என்று கூப்பிட்டு உங்களோடை கதைச்......” சொல்லி முடிப்பதற்குள்....

“உங்கடை பெயரென்ன?” என்றாள் சரஸ்வதி.

“நடராசன்! ப்ரண்ட்ஸ்மார் எல்லாம் ‘நடா’ என்றுதான் கூப்பிடுறவை” சரஸ்வதியும் தன்னை ‘நடா’ என்று அழைக்க வேண்டுமென்பது அவன் ஆசை.

“எங்கே நீங்கள் வேலை செய்றீங்க?” அவள் கேட்டாள்.

“டிப்பார்ட்மெண்டிலை கிளார்க்” விடையளித்துவிட்டு அவளை வினாவினான்.

“நீங்கள்...”

“நான் மினிஸ்ரியிலை டைப்பிஸ்ட்..” சரஸ்வதியும் தான் வேலை செய்யும் காரியலயத்தை சொன்;னாள்.

“எப்படி சிங்களம் எல்லாம் பாஸ் பண்ணியிட்டீங்களோ?” இது நடராசன்.

“இல்லை. சோதனை எடுத்தனான், பெயில்..”

கேலியாகச் சிரித்தான் நடராசன். “ஐயோ....நான் வந்து இரண்டு வரிசத்திலை எட்டாம் வகுப்பு பாஸ் பண்ணினனான். அதுகும் ஒழுங்காகப் படிக்கயில்லை. படங்கள் அப்படி இப்படியென்று முஸ்பாத்தியா திரிஞ்சிட்டு...”

பெண்களை சிறர் கேலி செய்யும்போது எதையாவது சொல்லி, அவர்களுக்கு இயல்பாகவே எழும் வெட்கத்தை மறைத்து விடுவார்கள். சரஸ்வதியும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. “எங்களுக்குச் சிங்களம் தேவையில்லை. சும்மா எழுதினது தானே!”

“இல்லை சரஸ்......உங்கடை ரான்ஸ்வர், புறமோ~ன் அதுகளுக்கு சிங்களம் பாஸ் பண்ணியிருந்தால் நல்லதுதானே!” என்றான்.

“மிஸ்டர் நடா!” சரஸ்வதிதான் அவனை அழைத்தாள். அந்த அழைப்பு ஏற்படுத்திய இன்ப உணர்ச்சியை நடராசன் அனுபவிக்கும் போது....

“நீங்கள் சாப்பிட்டீங்களா?” அவள் கேட்டபோதுதான் சாப்பாட்டைப் பற்றி யோசித்தான்.

“இல்லை ஆறுதலாகச் சாப்பிடுவம்” சொல்லிவிட்டு “நீங்கள்?” என்றிழுத்தான். அவளின் நிலையை அறிவதற்காக.

சரஸ்வதியின் தாழ்மையான வேண்டுகோள், “அந்த சூட்கேஸை எழுத்துத் தாங்கோ”

மேலே வைக்கப்பட்டிருந்த சூட்கேஸ்கள் கீழே இறங்கின. ஒன்று அவனுடையது. மற்றது அவளுடையது. அவன் தன்னுடைய சூட்கேசிலிருந்து இடியப்பப் பார்சலை எடுத்தான். அவளும் தனது சூட்கேசை மேலே வைக்கும் படி பணித்தாள்.


நடராசனின் கைகள் பார்சலை அவிழ்த்தன. “என்னுடைய பார்சலைப் பார்த்து பயப்பிடாதையுங்கோ. நான் கொஞ்சம் கனக்கத்தான் சாப்பிடுறது. என்ன இருந்தாலும் வயித்துக்கு வஞ்சகம் செய்யக்கூடாது தானே! அம்மா இருபத்தைஞ்சு இடியப்பமும் இரண்டு முட்டையும் பொரித்துக் கட்டித் தந்தவ!”

“இருபத்தைஞ்சோ?” கேலியாகக் கேட்டுக்கொண்டே அவளும் தனது பார்சலை அவிழ்த்தாள்.

“என்னப்பா நீங்களும் இடியப்பமா கொண்டு வந்தனீங்கள்?” என்பதற்குள்...

“ஓ...உங்களுக்கு இருபத்தைஞ்சு இடியப்பமும் போதாவிட்டால் சொல்லுங்கோ. இதையும் தாறன்” என்றாள் சரஸ்வதி.

“நான் சாப்பிட்டிட்டுப் போதாவிட்டால் கேட்கிறன். உதென்ன ஏழெட்டு இடியப்பம் தானே! ஒரு வாய்க்குப் பத்தாது. ஏன் தெரியுமா பொம்பிள்ளையள் கொஞ்சமாக சாப்பிடுறது?” அவளைக் கேட்டாள்.

சரஸ்வதி “தெரியாது சொல்லுங்கோ”

“பொம்பிளையள் தானே சமைக்கிறது. அவை சமைக்கிற சாப்பாடு ருசியில்லை, நல்லாயில்லை என்று அவைக்கே தெரியும். ஆனபடியால்தான் கொஞ்சமாகச் சாப்பிடுறவை” நடராசனின் கேலியைப் பொறுக்க முடியாததால்...

“அ..காணும்.....காணும்” என்றாள்.

இருவரும் கைகழுவிக்கொண்டு வந்து இருப்பதற்கும் ரயில் அநுராதபுரத்தை நெருங்குவதற்கும் சரியாக இருந்தது.

“அப்பாடி! அநுராதபுரம் வந்திட்டு. இன்னும் அரைவாசித்தூரம்!” சரஸ்வதியின் பெருமூச்சு. அரைப்பங்கு தூரம்தானே இருக்கிறது என்ற மகிழ்ச்சி அவள் முகத்தில் மலர்ந்தது. ஆனால் அவனுக்கோ....

“ஐயோ அநுராதபுரம் வந்திட்டுதே! இன்னும் அரைவாசித் தூரம் தானே இருக்கு. அதுக்கிடையில என்னத்தை செய்யிறது? என்னத்தைக் கதைக்கிறது. அதுவும் ஆக்கள் ஆரும் இந்தச் சீற்றுக்கு வராமல் இருக்க வேணும்!”உள்ளததில் எழுந்த ஏக்கம் அவன் முகத்தில் பிரபலித்தது.

சாதாரணமாகப் பிரயாணம் செய்யும் போது ரயில் பறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் சீற்றுக்கடியில் படுத்துவிடுவான் நடராசன். அழகுப் பெண் ஒருத்தி அருகில் இருக்கும்போது கண்ணில் உறக்கம் எப்படி வரும். அவளுக்கும் தூக்கம் வரவில்லை!

“சரஸ், உங்களுக்கு நித்திரை வரவில்லையா?” உரிமையுள்ளவன் போலக் கேட்டான்.

அவளது பதில்! “ நான் றவல் பண்ணுகிறபோது நித்திரை கொள்கிறதில்லை.”

“எனக்கெண்டால் கெதியாக வந்திடும். இண்டைக்கென்னவோ நித்திரையைக் காணன்” அவன் சொன்னதன் அர்த்தத்தை அவள் புரிந்து கொண்டதாக் காட்டிக்கொள்ளவில்லை.

“ஆ..அந்த இது...” தொடர்ந்து சொல்ல முடியாமல் நடராசன் தவித்த போது சரஸ்வதி தன் கண்களாலே “எந்த எது?” எனக் கேட்டாள்.

“இந்த தமிழ் ரைப்பிங் எப்பிடி சுகமா? எனக்குப் பெரிய கரைச்சலாய்க் கிடக்கு. சிங்களம் பாஸ் பண்ணியிட்டன். ரைப்பிங்கும் பாஸ் பண்ணினால் தான் வேலையிலை ‘கொன்போம்’ பண்ணுவாங்களாம்” அவன் தொடர் கதைக்கு வித்திட்ட போது அவளும் சேர்ந்து கொண்டாள்.

“நடா தமிழ் ரைப்பிங் அவ்வளவு கரைச்சலில்லை. கொஞ்சம் பழக வேணும். இரண்டும் மூன்று மாதத்திற்கு அடிச்சுப் பழகிக்கொண்டுவரச் சரியாகப் போயிடும்.”

“நீங்க சொல்கிறது சரிதான் சரஸ், இங்கிலீசெண்டால் கண்ணை மூடிக்கொண்டு அடிக்கலாம். கப்பிற்றல் எழுத்து வாறபோது மட்டும் உயர்த்தி அடிச்சால் காணும். தமிழ் ரைப்றைடரிலை இந்த மூலையில விசிறி இருக்கும். அந்த மூலையில குற்று இருக்கும். ஒவ்வொன்றையம் தேடிபிடிச்சு அடிக்கிறதென்றால்....”

“நடா நீங்கள் “கீ” போர்ட்டைப் பாராமல் அடிச்சுப் பழகினால் கெதியாய் பிக்- அப் பண்ணலாம்.

“ஓ நீங்க ரைப்பிஸ்ட் தானே! அதுதான் இப்படிச் சொல்றீங்கள்.கீ போர்ட்டைப் பார்த்தே அடிக்க முடியாமல் கிடக்கு. பாராமல் அடிச்சன் என்றால் நல்லாயிருக்கும்.”

சரஸ்வதி சிரித்தாள். “அப்படியென்றால் நான் சொல்கிற சிஸ்டத்தை போலோ பண்ணினால் சுகமாகப் பழகலாம். முதல் உயிரெழுத்து இருக்குது தானே! ஆனா..ஆவன்னா அதுகள் இருக்கிற இடத்தைப் பார்த்து வைக்க வேணும். பிறகு மெய்யெழுத்து. பிறகு சின்ன சின்ன சொல்லுகள்...இப்ப உதாரணமாக அப்பா, அம்மா ஆடு மாடு அதுகளை அடிக்கப் பழகினால் சுகம்”

“சரி பார்ப்பம்” நடராசனின் சிந்தனை எங்கோ செல்கிறது.

வேலைகள் சம்பந்தப்பட்ட கதை, சினிமாப் படங்கள் பற்றிய கதை, கல்லூரிக்கதை, இருக்குமு; இடங்கள்- இப்படி எவ்வளவோ விடயங்களை நடராசனும் சரஸ்வதியும் பரிமாறிக் கொண்டார்கள்

(3)

எத்தனையோ பெண்களுடன் பழகியிருக்கிறேன். முதல் முதலில் பழகும் போது, என்னுடன் தனியாக இருந்து கதைக்கும் போதும் அவர்களுக்கு அச்சம் ஏற்பட்டதை அவதானித்திருக்கிறேன். ஆனால் சரஸ்வதியோ எதற்கும் துணிந்தவள் போலப் பழகுகின்றாள். எனக்கிருக்கும் ஆசை அவளுக்கும் இருக்கலாம்” என எண்ணியது நடராசனின் மனம்.

அவளின் எண்ணத்தை அறிவதற்காக ரயிலின் ஆட்டத்திற்கேற்ப நித்திரையில் இருப்பன் மாதிரி இரண்டு மூன்று தடவைகள் அவள் மீது கையைப் போட்டான். கை பட்டவுடன் என்ன சொல்வாளோ? என்ற பயமும் இருந்ததால் ‘சொறி’ சொல்லிக்கொள்ளவும் தவறவில்லை.

‘பரவாயில்லை’ சிரித்தவாறே சொன்னவள். இதைக் கேட்டாள். “நடா ஒரு ஹெல்ப் செய்யவேணும்”

“ஓ...தாராளமாக” நடராசன் ஆயத்தமானான்.

“ஒரு சோடா. நெக்டோ அல்லது ~ரோனா”

“ஓ....வேண்டிவாறன்”....உதடுகளை அசைத்து உள்ளம் அவனைச் சீற்றிலிருந்து எழுப்பியது.

சரஸ்வதி தனது சின்ன மணிபேர்ஸைத் திறந்தாள். “இந்தாங்கோ காசு”

“வேண்டாம் என்னிடம் காசிருக்கு” சொல்ல எடுத்த வாயை மூடிக்கொண்டு, அவளின் உள்ளங்கையிலிருந்த ஒரு ரூபா நாணயத்தை எடுக்கும் போது நைஸாகக் கிள்ளினான். பூவிலும் மெல்லிய கைகளில் கிள்ளியதைக் கூட அவள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

சோடா வாங்கப் போனபோது பல பெட்டிகளைக் கடந்துகொண்டு பல பிரயாணிகளைச் சந்தித்துக்கொண்டு செல்ல வேண்டியிருந்தது. தூக்கத்தில் ஆழ்ந்திருந்தவர்களும் அரட்டையடித்துக் கொண்டிருந்தவர்களும் அவன் கவனத்தைக் கவரவில்லை.

ஆணும் பெண்ணும் அருகருகாக இருந்த இடங்களில்தான் கவனம் சென்றது. ஒரு சீற்றில் ஆணின் மடியில் பெண் ஒருத்தி தலையை வைத்துப் படுத்திருந்தாள். இது போன்ற காட்சிகளை ஒவ்வொரு பெட்டியிலும் பார்த்தான்.

அவர்கள் கணவன். மனைவியாக அல்லது காதலர்களாக இருக்கலாம். அதற்காகப் பல பேர் பிரயாணம் செய்யும் புகையிரதத்தில் நெருக்கமாக நடந்து கொள்வது நல்லாயிருக்குமா? ரயிலில் மட்டுமல்ல பஸ் முதலியவற்றிலும் மக்கள் நடமாடும் பொது இடங்களிலும் இப்படி நடந்து கொள்தல் கூடாது. அவற்றைப் பார்ப்பவர்கள் தாங்களும் அப்படிச் செய்ய ஆசைப்படுகிறார்கள். மற்றவர்கள் செய்வதைப்போலத் தாங்களும் செய்ய நினைக்கும்போது பல விபரீதங்கள் விளைந்துவிடுகின்றன.

சரஸ்வதி குடித்துவிட்டுக் கொடுத்த சோடாப் போத்தலைத் திருப்பிக் கொடுத்து விட்டு வரும்போது, ஆணும் பெண்ணும் இணைந்திருக்கும் காட்சிகள், அவை நடராசனின் உள்ளத்தின் அடித்தளத்தில் உறங்கிக் கிடந்த உணர்ச்சிகளை – ஆசைகளை மெல்லத் தட்டியெழுப்பின. எப்படியாவது சரஸ்வதியைத் தனது உணர்ச்சிகளுக்குப் பலியாக்கி விட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவளை நெருங்கினான்.

அப்போது கூட ஒன்றுமே தெரியாத புன்சிரிப்புத் தான்!

துணிந்த பின் எண்ணுவதற்கு இடமேது? அவன் தனது கரங்களுக்கிடையில் உடலை அணைத்துவிட்டான். “இனியென்ன?” என்ற அலட்சியத்துடன்...அவள் கன்னத்தை நெருங்கும் வேளை...

அடுத்த கணம்...

நடராசனின் கன்னத்தில் சரஸ்வதியின் கைவிரல்கள் பதிந்தன.

பலமான ஒரு அடி. ஒரு நாளுமு கலங்காதவனின் கண்கள் கலங்கி விட்டன. மலர் போன்ற மெல்லிய கைகளுக்கு எங்கிருந்துதான் அந்த வலிமை வந்ததோ தெரியவில்லை.

உலகிலேயே பெண்மைதான் மிக மிக மென்மையான தன்மை. அது கூடச் சில சமயம் வன்மையாக மாறிவிடும் என்பதைச் சரஸ்வதியின் கைகள் கன்னத்தில் காயத்தை உண்டாக்கியபோதுதான் அவனால் உணர முடிந்தது.

அவளை அணைக்கத் துடித்த அதே கைகள் தான் வலியெடுக்கும் அவனது கன்னத்தை வருடிவிட்டுக் கொண்டிருந்தன. அவன் அழுதான். குரல் தழ தழத்தது. “சரஸ், என்னை மன்னிச்சிடுங்கோ....”

சரஸ்வதியும் அழுதாள். வன்மையைப் பெற்றுவிட்ட மெல்லிய கரங்கள் சேலைத் தலைப்பை எடுத்து, கண்களில் பெருகிய நீர் முத்துக்களைத் துடைத்தன. “நீங்களும் என்னை மன்னிச்சிடுங்கோ. திடீரென உணர்ச்சி வசப்பட்டு அடிச்சிட்டன்”

மன்னிப்புக் கேட்டவள் தொடர்ந்தாள்: “உங்களைப் பற்றிச் சரியாகத் தெரியாமல் சிரித்துக் கதைச்சது எனது பிழைதான்” தன் தவறை உணர்ந்த பின்பு அவன் செய்த பெரிய குற்றத்தையும் குத்திக் காட்டினாள்... “என்;ன இருந்தாலும் நீங்க இப்படிச் செய்திருக்கக்கூடாது.”

(5)

ரயில் மீரிகமத்துக்குக் கிட்ட வந்துகொண்டிருந்த போது எங்கிருந்தோ பறந்து வந்த கரித்தூள் நடராசனின் கண்களுக்குள் புகுந்து கொண்டது. அப்போது அவன் அடைந்த வேதனை, கண்களைத் திறக்க முடியாததால் புழுவாகத் துடித்தான். கண்களைக் கைளால் கசக்கிக் கொண்டு இடையிடையே முழித்துப்பார்க்க முயன்ற போது சரஸ்வதி அவனுக்காகப் பதறிக்கொண்டு இருந்தாள்.

சரஸ்வதியின் வருத்தம் நிறைந்த திகைப்பு – “என்ன துடிக்கிறீர்கள்? கண்ணெல்லாம் சிவந்த போச்சு!”

“கண்ணிலை ஏதோ விழுந்திட்டுது. கண் தெரியவில்லை”

“கண்ணைக் கசக்காதையுங்கோ...நான் ஊதி விடுகிறன்” சரஸ்வதி தனது கைகளால் அவனது இமைகளைத் திறந்து கொண்டு வாயால் ஊதினாள். நடராசனுக்கு அடித்தபோத வன்மையாக மாறிய கரங்கள் மீண்டும் மென்மையாகிப் பூவிதழ்களின் நிலைக்குச் சென்றுவிட்டன.

“விடுங்கோ சரஸ். கண்ணைக் கழுவும்”

“நீங்கள் கண்ணைக் கசக்கியிட்டீங்கள். அது கரித்துண்டு கண்ணெல்லாம் கீறியிட்டுது..” சரஸ்வதி சொல்லும்போதே, கண்களில் வேதனையால் மயக்கமாகி விட்டான்.

மயக்கம் தெளிந்தபோது நடராசன், தனது வாடகை அறையில் படுத்து இருப்பதையும், மேசையில் ‘ஒப்ரெக்ஸ்’ (கண் கழுவும் மருந்து) போத்தல் இருப்பதையும் கண்டான்.

“நடா...உன்னுடைய சரக்காதான் உன்னைக் காலமை ரக்ஸியிலை கூட்டிக்கொண்டு வந்து விட்டவ. இந்த ஒப்ரெக்ஸாலை கண்ணைக் கழுவாட்டாம். வசதி யானால் தானே பிறகு வந்து சந்திக்கிறதாம்” பக்கத்து அறையில் இருக்கும் பத்மநாதன் சொல்லிக் கொண்டே கண்களில் மருந்தை ஊற்றினார். நடராசன் சிந்தனையுலகில்....

“பெண்மை ஒவ்வொரு நேரமும் ஒவ்வொரு தன்மையுடையதாக இருந்தாலும், அவையெல்லாம் மேன்மையான தன்மைகளே! பெண்மையின் தன்மைகளை ஒவ்வொருவரும் அனுபவித்துத் தான் அறிய வேண்டும்” கண்களை மூடிய நிலையிலும் நடராசனின் எண்ணம் விரிவடைந்து கொண்டே போகின்றது.

ஈழநாடு 1972

Tuesday, August 21, 2007

இதுவும் ஒரு காதல் கதை

கொழும்பு, கோட்டைப் புகையிரத நிலையத்தின் ஐந்தாவது இலக்க மேடையில் ஆண்களும் பெண்களுமாக யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் பிரயாணிகள் நிறைந்து நிற்கின்றனர். வழக்கமாகவே கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் போகும் ஆட்கள் அதிகம் தான். அன்று வழக்கத்தை விட அதிகமாக இருந்தது கூட்டம்.

“கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்படும் தபால் புகையிரம் இப்போது ஐந்தாம் இலக்க மேடைக்கு வரும்” புகையிரத நிலையத்திலிருந்த ஒலிபெருக்கி அறிவிக்க ஆரம்பித்ததும் அங்கு நின்றவர்கள் தங்களுடைய பெட்டிகளையும், சாமான்களையும் கைகளில் எடுத்தார்கள். “நான் சூட்கேசை வைத்திருக்கிறன்... நீங்க ஏறி இடத்தைப் பிடியுங்கோ” என்றும் “நீங்க சாமானைப் பத்திரமா வைச்சிருங்கோ. நான் ஏறி இடம் பிடிக்கிறன்” என்று வேறு சிலரும் மற்றவர்களுக்குக் கட்டளையிட்டனர்.

புகையிரத மேடையின் ஓரத்தை நோக்கி வந்த பிரயாணிகளுள் லலிதாவும் ஒருத்தி, மெல்லிய நீல நிற மினிஸ்கேர்ட் அவள் உடலை அலங்கரித்தது. அவளின் கையில் இருந்த சூட்கேஸ் சிறிது பாரமாக இருந்தாலும் அதை அவள் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. “எப்படியாவது ரெயினில் ஒரு சீற் பிடித்துவிட்டால் போதும்” இதுதான் அவளது எண்ணம். லலிதாவுக்குப் பக்கத்தில் நீல நிற டெரிலின் சேட்டுடன் நிற்கிறவனின் பெயர் காந்தன். “லலிதாவுக்குப் பக்கத்தில் அல்லது அவளைப் பார்த்தபடி இருக்கத்தக்கதாக ஒரு பிடிக்கவேண்டும்” இப்படிக் காந்தன் எண்ணிக்கொண்டு நிற்கையில்

புகையிரதம் மேடையருகே வந்ததுதான் தாமதம், ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளியபடி ஏறினார்கள்.

லலிதாவும் காந்தனும் ஏறிய பெட்டியில் , இடித்துக் கொண்டு முதலில் ஏறியவர்கள் இடத்தைப் பிடித்துவிட்டதால், இவர்கள் இருவரும் நிற்க வேண்டி நேரிட்டது. ஆட்கள் மிக நெருக்கமாக இருந்ததால் லலிதா அடுத்த பெட்டிக்கு போக முடியவில்லை. லலிதா அ;நத விட்டு அசையாததால் , காந்தன் வேறுபெட்டிக்குச் செல்ல விரும்பவில்லை.

ஸ்டேசன் மாஸ்ரர் பச்சை விளக்கை அசைத்துக் காட்டியதும் “கூ..” வென்று கூவிக்கொண்டு புகையிரதம் புறப்பட்டது. லலிதா நின்ற இடத்துக்குப் பக்கத்திலுள்ள சீற்றில் இருந்தவர்களின் மனம் ‘பெண்’ என்பதற்காக இரங்கியதும் அவளுக்கு இடம் கிடைத்தது. “தாங் யூ” சொல்லிக் கொண்டே சீற்றில் அமர்ந்த லலிதாவைக் காந்தன் மெல்லிய புன் சிரிப்புடன் பார்க்கின்றான். அந்தப் பார்வையில் ஏதோ ஓர் அர்த்தம் இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் காந்தனை லலிதா கவனித்திருக்க மாட்டள்.

காந்தனும் லலிதாவும் தங்களுக்குள் ஒருவரைப் பற்றி ஒருவர் எண்ணிக் கொண்டார்கள்: இளமை இளமையை ஈர்க்கும் இயற்கையைப் பற்றி இதயங்கள் இரண்டும் சிந்திக்கத் தொடங்கின.

“இவளுக்கு நல்ல வடிவான சுருள் தலைமயிர்: விஜயாவின்ரை பல்லுப்போல எல்லாம் நலல சின்னப் பல்லு: ராஜசீயின்ரை கன்னம் மாதிரி நல்ல இதாக இருக்கு. சில பெட்டையளுக்கு மினி ஸ்கேட் பெரிய அலங்கோலமாக இருக்கும். இவளுக்கு நல்லாயிருக்கு. இவளை எப்படியாவது....” என்ற தனக்குத் தெரிந்த சினிமா நடிகைகளின் அழகோடு லலிதாவின் அங்கங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தது காந்தனின் மனம்.

லலிதாவின் மனமும் காந்தனையோ சுற்றிக்கொண்டிருந்தது. “இதிலை நிற்கிறவர் சரியாக ஜெயசங்கரை போலை அந்த டெரிலின் சேட் ஐயோ அள்ளுது. ஆள் கொஞ்சம் எண்டாலும் நல்ல வெள்ளை” இப்படியாக அவள் உள்ளம் துள்ளும் வேளையில் கண்கள் காந்தனின் முகத்தையும் முகத்தைத் தடவிக்கொண்டிருக்கும் கரத்தையும் கவனிக்கின்றன.

“வு” என்று உதட்டை உறிஞ்சிவிட்டு “இவருக்கு கை எல்லாம் நல்ல கறுத்த மயிர்: அந்தக் கூர் மீசையும்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டே புன்னகை ஒன்றை வெளிப்படுத்துகின்றாள். லலிதா தன்னைத் தான் பார்த்துச் சிரிப்பதாக நினைத்த காந்தனுக்குச் சிரிப்பு வருகின்றது. காந்தன் சிரிக்கும் போது கன்னங்கள் இரண்டிலும் குழி விழுவதைக் கவனித்தாள் லலிதா.

“சிரிக்கிற போது கன்னத்தில் குழி விழுந்தால் பின்னுக்குப் பெரிய பணக்காரராக இருப்பினம் எண்டு ஆச்சி அடிக்கடி சொல்லுகிறவ, இவரைப் பார்த்தால் இப்பவே செல்லப்பிள்ளை மாதிரித் தெரியுது” என்று எண்ணிக்கொண்டு வந்த லலிதாவின் உள்ளம் காந்தனின் உள்ளத்தோடும் கலந்து உறவாட விரும்பியது.

(2)

கோட்டையில் இருந்து புறப்பட்ட புகையிரதம் பொல்காவலையைக் கடந்து சென்றுகொண்டிருந்தது. லலிதா சாப்பிடும் அழகைச் சிறிது நேரம் இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்த காந்தன் “டொயிலெட்” டுக்குப் பக்கத்தில் வந்து நின்றான். சாப்பாடு சுற்றி வந்த கடதாசியை யன்னலுக்கூடாக வெளியே வீசிவிட்டு கை கழுவுவதற்காக “டொயிலெட்”டுக்கு வந்தாள் லலிதா. ஆட்கள் அதிகமாக இருந்ததால் “டொயிலெட்” டின் அருகில் நின்ற காந்தனை லேசாக இடித்துக்கொண்டு , நுழைந்தாள் அவள்.

‘டொயிலெட்’ டின் உட்பக்கப் பூட்டு உடைந்துவிட்டதால், லலிதா கையைக் கழுவும் போது சரியாகச் சாத்தப்படாத கதவின் இடைவெளிய+டாக அவளைக் கண்ட காந்தன், “நல்ல வெள்ளைக் கால்” என எண்ணி மகிழ்ந்தான்.

கைகழுவிவிட்டுத் தன் இருப்பிடத்துக்கு லலிதா சென்றபோது அவனும் அவளும் எதிர்பார்த்தது நடந்தது. ஒரு கணப்பொழுது நேரம் இருவரின் உடலும் ஒன்றோடொன்று உரசுப்பட்டது.

“இது நல்ல இதமாயிருக்கு” இருவரின் இதயங்களும் இப்படி எண்ணின.

மாகோ புகையிரத நிலையத்துக்குச் சமீபமாக றெயின் வந்தபோது பெரும்பாலானவர்கள் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருந்தார்கள்.காந்தனையே கவனித்துக்கொண்டு வந்த லலிதாவின் கண்களையும் தூக்கம் தன்வசப்படுத்தித் தழுவிக்கொண்டது.

“ஆழ்ந்த உறக்க நிலையிலும் அழகாகவே இருக்கிறாள்” என்று எண்ணியபடி, அவளையே பார்த்துக்கொண்டிருந்த காந்தனுக்கும் படுக்க வேண்டும் போலத் தோன்றியது. கையில் வைத்திருந்த பேப்பரைக் கதவுக்கு அருகில் விரித்து உறங்க ஆரம்பித்தான்.

(3)

காந்தனும் லலிதாவும் தங்களை மறந்த உறக்கநிலையில் இன்பக் கனவு கண்டுகொண்டிருந்தார்கள். கோட்டையிலிருந்து காங்கேசன்துறையை நோக்கிப் புறப்பட்ட புகையிரதமும் , காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கிப் புறப்பட்ட புகையிரதமும் அனுராதபுரத்தில் ‘செரியோ’ சொல்லிவிட்டுத் தங்கள் பிரயாணங்களைத் தொடர்ந்தன. மதவாச்சியில் மன்னார் பெட்டியைக் கழற்றிவிட்டு புகையிரதம் புறப்பட்டதும் லலிதா விழித்துக்கொண்டாள். காந்தனைக் காணாதால் பெட்டி முழுவதும் தேட ஆரம்பித்தன அவள் கண்கள். ஆசை மிகுதியால் “சீற்றில்” இருந்து எழுந்து அங்குமிங்கும் பார்க்கும் போது கதவருகில் படுத்திருக்கும் காந்தனைக் கண்டாள்.

உறங்கிக் கொண்டிருக்கும் அவனது தோற்றம் சினிமாப் படங்களில் நடிகர்கள் உறங்கும் கட்டம் போலக் கவர்ச்சியாக இல்லை. நீல நிற டெரிலின் சேட் கசங்கிக் காணப்பட்டதோடு, றெயில் பிரயாணத்துக்கே உரிய கறுத்த அடையாளச் சின்னங்களையும் பல இடங்களில் பதித்து வைத்திருந்தது. அவனது அவனது வாயில் இருந்து நீர் சிரித்தால் குழி விழும் கன்னங்களில் வெள்ளையாக உறைந்திருந்தது. கவனத்தைக் தன் பக்கம் கவர்ந்த கையிலுள்ள கறுத்த மயிர்களும் கிறீஸ் போன்ற ஏதோ ஒரு பொருளால் மறைக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் காந்தனைக் கண்டபோது- அவன் மீது அருவருப்பான அபிப்பிராயம் உண்டாகியது லலிதாவுக்கு.

“போயும் போயும் இந்தக் குரங்கையா.....” – முணுமுணுத்துக்கொண்ட உள்ளம் அவளை அப்படியே இருத்தியது.

“வவுனியா வந்திருந்தது” யாரோ சொல்லியது காந்தனின் காதில் தெளிவாக விழுந்தது. எழுந்து லலிதாவைப் பார்த்தான்.

லலிதாவின் நலல அழகான சுருள் மயிர் குலைந்து காற்றில் பறந்து திரிந்ததைக் காந்தனின் கண்கள் கண்டன. உறங்கும்போது தலைமயிர் முகத்திலும் விழுந்ததால் லலிதாவின் முகத்தில் எண்ணைத் தன்மையும் காணப்பட்டது. கண்களும் பீளையைக் கக்கி இருந்தன. வேண்டா வெறுப்புடன் பார்க்கும் கண்கள் பயங்கரத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியது காந்தனின் மனதில்.

“சீ.....போயும் போயும் இவளை லவ் பண்ண நினைச்சேனே!” என்று தன்னைத் தானே நொந்துகொண்டான் காந்தன்.

கோட்டையில் புகையிரதம் புறப்பட்டபோது லலிதாவும் காந்தனும் எண்ணிய எண்ணங்கள் கொடிகாமத்தை வந்து அடைந்தபோது முற்றாக மாறிவிட்டன. காந்தனைப் பார்க்க விரும்பாத காரணத்தால் லலிதா யன்னலுக்கூடாக வெளியில் தன் பார்வையைப் படரவிட்டாள்.

கொழும்பு கோட்டையில் ஆரம்பமான காதல் நினைவுகள் மாகோ வரும் வரையில் படிப்படியாக வளர்ந்து, மதவாச்சியிலிருந்து படிப்படியாக மறைய ஆரம்பித்து யாழ்ப்பாணம் வந்தபோது...

“அவள் இறங்கின பக்கத்தாலை நான் இறங்கக் கூடாது” என்று நினைத்தபடியே சூட்கேசைத் தூக்கிக் கொண்டு , பிளாட்பாரம் இல்லாத பக்கத்துக் கதவைத் திறந்து புகையிரதத்திலிருந்து இறங்குகின்றான் காந்தன்.


தினகரன் 1971
இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

Thursday, August 16, 2007

நஞ்சு கேட்ட அகதித் தாய் - அந்தப் பரபரப்பான பிபிசி பேட்டி

யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்த வேளையில் நான் கிளிநொச்சியின் அரச அதிபராக பணியாற்றிமை குறித்தும், அந்த இடப்பெயர்வு குறித்து நான் பிபிசியின் தமிழோசைக்கு அளித்த செவ்வியின் எதிர்வினைகள் குறித்தும் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பிபிசியிக்கு செவ்வி அளித்த நாள் தொடர்பாகவும் அதற்கு சில நாட்கள் முந்தியதான குறிப்பை வழங்கலாம் என இருக்கின்றேன்.

04- நவம்பர் 1995 – திருகோணமலைக்கு கூட்டம் ஒன்றுக்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த நான் வவுனியாவுக்கு வந்த போது, அங்கு யாழ்ப்பாணத்தில் இருந்து, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பெருமளவிலான மக்கள் வந்து கொண்டிருப்பதான செய்தி கிடைத்தது. அங்கிருந்து அவசர அவசரமாக கிளிநொச்சிக்கு புறப்பட்டு கிளிநொச்சியை அடைய நள்ளிரவு ஆகிய இருந்தது.

05- நவம்பர் 1995 – காலை எழுந்து பார்த்ததும் கிளிநொச்சி நகரத்தின் வீதியின் கரைகள், கடை வாசல்கள், பொது இடங்கள் எல்லாவற்றிலும் யாழ்ப்பாண மக்கள் நிறைந்து இருந்தனர். நகரப்பகுதிக்கு சென்று அங்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் ஒழுங்குகளை செய்து விட்டு, கிளிநொச்சி செஞ்சிலுவை சங்க தலைவர் பொன். விநாயகமூர்த்தியுடன் கிளாலிக்கு சென்று அங்கு வரும் மக்களுக்கான உணவு, ஏனைய ஏற்பாடுகள், தொடர்ந்து கிளிநொச்சிக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தும் விட்டு, மாலையில் கச்சேரிக்கு திரும்பிய போது , கொழும்பில் இருந்து உடனே அங்கு வருமாறான செய்தி கிடைத்திருந்தது. இரவிரவாக பொற்றோல்மக்ஸ் கொளுத்தி வைத்து நானும் இன்னும் சில அதிகாரிகளுமாக அறிக்கைகள் தயார் செய்ய ஆரம்பித்தோம்.

06- நவம்பர் 1995 செஞ்சிலுவை சங்க வாகனத்தில் வவுனியாக்குள் நுழைந்த போது பிரவுண் அண்ட் கொம்பனிக்கு அருகாமையில் வன்னிக்குள் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகவியாளர்கள் குவிந்து இருந்ததை கண்டேன். அவர்கள் எமது செஞ்சிலுவை சங்க வாகனத்தை துரத்தியபடி வவுனியா கச்சேரிக்குள் நுழைந்த என்னை சுற்றிக்கொண்டனர். என்னால் முடிந்தளவு தகவல்களை சொல்லி, கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசர நிலையையும் கூறினேன். அப்போது பிபிசியின் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் நீங்கள் கொழும்பு போவதாக சொல்லுகின்றேன். ஆனந்தி தொடர்பு கொள்ளுவார் என்று சொன்னார். (ஆனந்தி அன்றிரவு பிபிசியில் சொன்ன செய்திக்குறிப்பை ஒலிப்பதிவாக இங்கே கேட்கலாம்)

07- நவம்பர் 1995 கொழும்பில் நடந்த கூட்டத்தில் வடக்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டோம். அன்று மாலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பொன்னபலம் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். மாலை 7 மணியளவில் நான் பிபிசி ஆனந்திக்கு அந்த பேட்டியை அளித்தேன். (மேலதிக விபரங்களை எனது செவ்வியில் இங்கே கேட்கலாம்)

Wednesday, August 15, 2007

ஒரு பரபரப்பான பிபிசி பேட்டி – கேட்கத் தயாராகுங்கள்.

நவீன வரலாற்றில் இடம்பெற்ற மிகப்பெரிய இடப்பெயர்வுகளில் ஒன்றெனக் கருதக் கூடிய யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்த போது, யாழ்ப்பாணத்திற்கு அடுத்த மாவட்டமான கிளிநொச்சியின் அரசாங்க அதிபராக நான் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். குறுகிய காலத்தில் ஏறத்தாள ஐந்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்தது குறித்தும் அங்கு நான் கண்ட மனித பேரவலங்கள் குறித்தும் பிபிசியின் தமிழோசைக்கு 1995 நவம்பர் 7 திகதி நான் பேட்டியாக கொடுத்த போது ஏற்பட்ட எதிர்வினைகள் அதிகம். மறுநாள் அனேக பத்திரிகை அதை முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது என்பதும் , நான் எதிர்கொண்ட நபர்களும் அதற்கு சாட்சி. அவ்வாறான எதிர்வினைகள் சிலவற்றை பட்டியலிட்ட பின்னர் அந்த பிபிசி பேட்டியை ஒலி வடிவில் தரலாம் என நினைக்கின்றேன்.

01. எனது பிபிசி பேட்டியை ஹொங்கொங் ஜேர்னல் பத்திரிகை வெளியிட்டு அதை அங்கிருந்து எனக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

02. அப்போது இந்த பிபிசி தமிழோசைக்கு பொறுப்பாக இருந்தவரும், என்னை பேட்டி கண்டவருமான ஆனந்தி 1997 இல் இலங்கை வந்திருந்த போது , வவுனியாவில் இருந்த என்னை பார்ப்பதற்கு கொழும்பில் இருந்து வந்து, தனது பேட்டி கண்டவற்றில் மேலதிகாரிகளின் பாராட்டை பெற்ற இரண்டு பேட்டிகளில் இது ஒன்றெனவும் தெரிவித்து இருந்தார்.

03. 1999 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதமளவில் உத்தியோக பூர்வ விடயமாக சீனா சென்றிருந்த போது, சாங்காய் தொலைக்காட்சி கோபுரத்தை பார்க்க சென்றபோது, அங்கு தமிழ்ப் பெண்கள் போல உடையணிந்து இருந்தவர்களை காட்டிய அப்போதைய இலங்கை கல்வியமைச்சர் றிச்சட் பத்திரண “தில்லை, உங்கட ஆட்கள் போல தான் இருக்கு கதைச்சு பாருங்கோ” என்ற போது நான் அவர்களுடன் கதைத்தேன். நீங்கள் இலங்கையில் இருந்த வந்திருக்கின்றீர்களா? எனக் கேட்டேன். அவர்கள் இல்லையெனவும் தாங்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் எனவும் சீனாவில் இருக்கும் தனது உறவினர் வீட்டுக்கு வந்ததாகவும் சொன்ன பின்னர், நீங்கள் இலங்கையில் இருந்தா வந்து இருக்கின்றீர்கள் என்று என்னிடம் கேட்டனர். நான் ஓம் எண்டதன் பின்னர் என்னிடம் கேட்டனர் உங்களுக்கு தில்லைநடராஜாவை தெரியுமா என்று. நான் என்னை சுதாகரித்துக் கொண்டே கேட்டேன். “எந்த தில்லைநடராஜாவை கேட்கிறீயள், அங்க கன தில்லைநடராஜாக்கள் இருக்கினம்” என்றதும் அவசரமாக இடைமறித்து “இல்லை இல்லை கலெக்டர் தில்லைநடராஜா பேட்டியெல்லாம் கொடுப்பார்” என்றனார். அது நான் தான் என்றதும் அந்த பிபிசி பேட்டியை கேட்டு தாங்கள் அன்றிரவு முழுக்க அழுததாகவும், சொல்லி ஆட்டோகிராப் பெற்றுக்கொண்டும், என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டும் சென்றனர்.

04. 2006 இல் சிட்னி பல்கலைகழகத்தை சேர்ந்த நண்பர் காந்தராஜா இலங்கை வந்திருந்த போது புத்தகங்கள் வாங்குவதற்கான பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு அவரை அழைத்து சென்றேன். புத்தகங்கள் வாங்கி முடிய அருகில் இருந்த தேனீர் கடைக்குள் நுழைந்தோம். தேனீர் அருந்தி முடிந்ததும் காசை கொடுக்க , கடைக்காரர் ஆயிரம் ரூபா மாற்றி தரமுடியாது என்று சொன்னார். இதை கேட்ட கந்தராஜா “இவர் யார் தெரியுமா இவர் தான் தில்லைநடராஜா” என்ற போது “ஓ பேட்டி கொடுத்த சேரா” எனக் கேட்டபடியே..தனது வீட்டுக்கு போன் செய்து தனது மனைவியிடம் “நீ அன்னைக்கு பிபிசி பேட்டி அழுதபடி இருந்தியே, அந்த பேட்டி கொடுத்த சேர் நம்மட கடைக்கு வந்திருக்கார்” என்று சொன்னதோடு, ஆயிரம் ரூபா காசையும் மாற்றி தந்தார்.
(இது 1995-11-08 ஈழநாதத்தில் வந்த செய்தி)

Photo Sharing and Video Hosting at Photobucket

இதை தொடர்ந்து பேட்டி அளிக்கப்பட்ட நாள் குறித்தும், அதற்கு முந்திய சில நாட்கள் குறித்தும் பதிவிட்ட பின்னர் எனது அந்த பிபிசி பேட்டியை ஒலிவடிவில் தரலாம் என நினைக்கின்றேன்.

Saturday, August 11, 2007

நிர்வாணம்.



வேலையை முடித்துக்கொண்டு காரியாலயத்திலிருந்து வெளியேறிய சந்திரன் யோர்க் வீதி வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். யோர்க் வீதியின் இரண்டு பக்கங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சந்திரனின் கண்களைக் கவர்ந்தன. ‘பென்ஸ்’ ‘ஹம்பர்’ ‘பிளைமவுத்’ ஒவ்வொரு காரின் பெயரையும் வாசித்துக்கொண்டு வந்த சந்திரனின் மனம், “சீ..ஒரு சுவீப் விழுந்துதெண்டாலும் என்ன சுதியாக ஓடித்திரியலாம்” என்று எண்ணியது.


“பெரிய கார்தான் இல்லாட்டிலும் ஒரு மொரிஸ் மைனர் இருந்தாலும் காணும்” என யோசித்துக்கொண்டு வந்த சந்திரனின் தோளை உரிமையுடன் ஒரு கரம் பற்றியது. அந்தக் கரத்துக்குரிய பாலன், “ஹலோ” என்றான்.


“ஐ சே...நீயா?” சந்திரனின் குரலில் அலட்சியம் நிறைந்திருந்தது.

“ஓ..நான் தான். என்ன கார்களைப் பார்த்துக் கொண்டு போறாய்? உந்தக்கார்கள் விலைக்கு விக்கிறயில்லை” பாலன் பகிடியாகச் சொன்னான்.

“வித்தாலும் நான் வாங்க மாட்டன். எங்கடை இரு நூறு ரூபாச் சம்பளத்திலை ஒரு சைக்கிளை வாங்க முடியாமலிருக்கு. பிறகு எப்படிக் கார் வாங்க முடியும்?” சொல்லிக் கொண்டே வந்த சந்திரன் ஒரு காருக்குப் பக்கத்தில் நின்ற சிறுமியைக் காட்டி “சீ தற் கேர்ள்” என்றான்.

காருக்குப் பக்கத்தில் நின்ற சிறுமியின் மேல் பாலனின் பார்வை பதிந்தது. அடுத்த நிமிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டே, “பெரிய கன்றாவியாக இருக்கு: அன்சகிக்கெபிள்” என அருவருத்தான். சிறுமி ஆடையெதுமின்றிப் பிறந்த மேனியுடன் நின்று கொண்டிருந்ததைப் பார்ப்பதற்கு சந்திரக்கும் பாலனுக்கும் அருவருப்பாக இருந்தது.

நாலு அல்லது ஐந்து வயது தான் இருக்கும் அச்சிறுமிக்கு: செக்கச்சிவந்த மேனியென்றாலும் நிர்வாணக் கோலத்தில் பார்க்கும் போது ஒரு மாதிரி இருக்காதா?

நிர்வாணமாக நின்ற சிறுமியைப் பார்ப்பதற்கு மற்றவர்கள் விரும்பாவிட்டாலும், மற்றவர்களைப் பார்ப்பதற்கு சிறுமி அருவருக்கவில்லை. ஓடிவந்து சந்திரனின் காலைத் தனது சிறு கையால் சுரண்டிக் கொண்டே, “ஐயா...ஐயா ஒரு அஞ்சு சதம் தாங்கோ” என்றாள்.

சந்திரன் தன் கைகளால் சிறுமியின் கையைத்தட்டிவிட்டு ‘சீ அங்காலை போ” எனத் தள்ளினான்.

சந்திரனால் தள்ளி விடப்பட்ட சிறுமி, ஐயா ஐயா வென்று பாலனின் காலைப் பிடித்துக்கொண்டு கையை நீட்டினாள்.

“என்னட்டைக் காசில்லை...சும்மா கரைச்சல் படுத்தாதை” பாலனும் சின்னப் பெண்ணைத் தள்ளிவிட்ட போது அவள் நிலத்தில் விழுந்து விட்டாள்.

நிலத்தில் விழுந்தவளுக்கு எங்கிருந்துதான் துணிச்சலும் அறிவும் வந்ததோ தெரியவில்லை.

“ஐயா காசுதர விருப்பமில்லையெண்டால் விருப்பமில்லையெண்டு சொல்லுங்கோ. ஏன் காசில்லையெண்டு பொய் சொல்றீங்க?” துடுக்காகக் கேட்டுக்கொண்டே நிலத்திலிருந்து எழும்பியவள் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டாள்.

“ஏன் காசில்லையெண்டு பொய் சொல்லுறீங்க” சிறுமி சொன்னது பாலனுக்கும், சந்திரனுக்கும் முகத்திலடித்ததைப் போலிருந்தது.

“பார்த்தியா மைச்சான்! அந்தப் பிச்சைக்கார நாய் சொல்லுறதை..” – தன்னை ஒரு சிறுமி
அவமானப்படுத்திவிட்டாளே என்ற வேதனை பாலனுக்கு,

“உதுகள் உப்படித்தான் சில தாய் தகப்பன் தங்கடை விருப்பப்படி பெத்துத்தள்ளி விடுகிறது. பிள்ளையளின்ர சாப்பாட்டைப் பற்றியோ, உடுப்பைப் பற்றியோ, படிப்பைப் பற்றியோ அவைக்கு அக்கறையில்லை. பெத்தால் போதும் என்ற நினைப்பு சில பேருக்கு பிள்ளையளைச் சரியானபடி வளத்தால் அதுகள் ஏன் இப்படி றோட்டு வழிய வாறவை, போறவையட்டைக் கையேந்திக்கொண்டு திரியப்போகினம்? இதுகளைப்பற்றிக் பெத்தவை யோசிக்கிறயில்லை?” – நாலும் தெரிந்தவன் போலப் பேசினான் சந்திரன்.

“அவை பெத்தாலென்ன- விட்டாலென்ன- அவள் நிலத்திலை கிடந்து கொண்டு சொன்னதைக் கேட்டியா? முளைக்கக்கு முந்தி அந்தச்சின்னன் விண்ணானிச்சதைப் பார்க்க எனக்கு ஏதோ மாதிரிக் கிடக்கு” வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகள் பாலனின் மனதைப் பிரதிபலித்தன.

“அந்தப் பெட்டைக்கு அப்படிச் சொல்லச் சொல்லித் தாய் தகப்பன் சொல்லிக் குடுத்திருப்பினம். அதைப்பற்றி வொறி பண்ணாதை” என்றான் சந்திரன்.

சிறுமியைப் பற்றிய சிந்தனையோடு நடந்து கொண்டிருந்த சந்திரனையும், பாலனையும் கடைச்சுவரில் ஒட்டப்பட்டிருந்த ஆங்கில சினிமாப்பட நோட்டீஸ் தன் பக்கம் திருப்பியது.

“மைச்சான் நல்லவேளை. நான் இந்த இங்கிலிஸ் படத்துக்குப் போகவெணுமெண்டு யோசித்துக் கொண்டு வெளிகிட்ட நான் அதுக்கிடையில் உடுப்பில்லாமல் நிண்ட பெட்டையைக் கண்ட உடனை மறந்து போனேன்” ஆங்கிலப் படத்திற்கு போக வேண்டுமென்றான் சந்திரன்.

“எப்பிடி மச்சான், நல்ல படமா?” பாலன் படத்தைப்பற்றி அறியத் துடித்தான்.

“பைன் சோவா இருக்கும் மச்சான். யூ னோ வை? லாஸ்ற் வீக் நான் ஒரு இங்கிலிஸ் படம் பார்த்தபோது சோர்ட்ஸ் போட்டுக் காடடினவங்கள். ஹீரோயின் புல் நேக்கட்டிலை ஒரு டான்ஸ், பைன் மச்சான் பைன்.” ஆங்கிலப் படங்களைப் பற்றிக் கதைப்பதே தனக்குப் பெருமை என நினைப்பவன் சந்திரன். அதனால் தான் படங்களைப் பற்றி பேசும் போது தன்னால் முடிந்தளவுக்கு இடையே ஆங்கிலச் சொற்களைப் புகுத்திக் கதைப்பான்.

பாலனுக்கும் அந்தப் படத்தின் மேல் விருப்பம் பிறக்கவே, “நானும் வரலாம்தான்: வேறையொரு அப்பொயின்மென்ற இருக்கு” என்றான்.

சந்திரன் அலட்சியமாக, அதைக் கான்ஸல் பண்ணிப் போட்டு வா மைச்சான். முந்த நாள் எங்கடை கிறிஸ்ரி பாத்தவர் பைன் ஸ்றிப்ரீஸ் டான்ஸ்ஸாம்...நேற்றும் மிஸ் பண்ணியிட்டன். இண்டைக்கு எப்படியும் பார்க்க வேணும்” என்றான்.

“சரி மைச்சான்: ரையுமாகுது. கெதியாக நட: இல்லாட்டி டிக்கட் எடுக்கேலாது” சந்திரனை விரைவாக நடக்கச் சொல்லிக் கொண்டு , தானும் நடந்தான் பாலன்.

“போன மாதமும் அவளின்ர படமொண்டு பார்த்தனான். அவளின்ர நேக்கட் டான்ஸ் பார்த்தாலே போது அதுக்கே காசு குடுக்கலாம். அவளைப் போலை ஒருத்தரும் டான்ஸ் ஆடமுடியாது. பார்த்த படங்களின் பெயரும் தெரியாது. பார்க்கப்போகும் படத்தின் பெயரும் புரியாது. நடனமாடுபவளின் பெயரும் சரியாக உச்சரிக்க முடியாததால் அவள் என்றே குறிப்பிட்டான் சந்திரன். ஒருவரிடம் வெறுக்கும் காட்சியை இன்னொருவரிடம் காணத்துடிப்பதுதானே மனித மனம். வறுமையினால் நிர்வாணத்துடன் நின்ற சிறுமிறை “ஆபாசம், அன்சகிக்கேபிள்” என்று அருவருத்த சந்திரனும், பாலனும் எவளோ ஒருத்தி நிர்வாணமாக நடனமாடுகிறாளாம் அதைப் பார்க்க ஓடுகிறார்கள், என்ன விபரிதமான உலகம் இது?

கலைமலர் 1969
மறுபிரசுரம்ஈழநாடு 1974
இலங்கை வானொலியிலும் ஒலிபரப்பப்பட்டது.

Saturday, August 4, 2007

பிரபலம்

கோட்டைப் புகையிரத நிலையத்துக்கு முன்பாக உள்ள பூந்தோட்ட வீதியிலிருந்து முளைத்துச் செல்லும் கிளை வீதியொன்றின் வழியாகப் பலர் மத்தியான உச்சி வெய்யிலையும் பொருட்படுத்தாது சென்றனர். அவர்களில் அநேகமானவர்கள் அரசாங்க அலுவலகங்கிலும், கூட்டுத்தாபனங்களிலும் வேலை பார்க்கும் உத்தியோகத்தவர்களாவர். வெய்யில் என்றால் வயிறு கேட்குமா?

அந்தச் சிறிய வீதிலுள்ள கடையொன்றில் மத்தியானச் சாப்பாட்டுக்காக நடுத்தரக் குடும்பத் தலைவர்களும், புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்களும் செல்வது வழக்கம். விலைவாசி உயர்ந்து விட்ட இந்த நாட்களிலும் சிக்கனச் செலவில் சிறந்த சாப்பாட்டை அங்கே பெற்றுக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை அநேகமானவர்களுக்கிருந்தது.

பூந்தோட்ட வீதி வழியாக ஒரு கட்டையனும் ஒரு நெட்டையனும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். கட்டையனின் பெயர் கந்தசாமி. நெட்டையனின் பெயர் ஜெறோம். ஒரே கந்தோரில் வேலை செய்வதால் இருவரும் நண்பர்கள்.

“மைச்சன் இண்டைக்கு எங்கே சாப்பிடுவோம்” ஜெறோமைக் கேட்டான் கந்தசாமி.

“ நீ எங்கை கூட்டிக்கொண்டு போறியோ, அங்கை வாறன்” என்றான் ஜெறோம்.

“கி.வா.ஜகந்நாதன் சொன்னமாதிரி “பைனான்சியல் புரொப்பிளமாக் கிடக்கு. அ...பரவாயில்லை: இண்டைக்கு இஞ்சை போவம்.” சொல்லிக்கொண்டே, பூந்தோட்ட வீதியிலிருந்து பிரிந்து செல்லும் சிறிய வீதி வழியாகத் திரும்புகின்றான் கந்தசாமி. அவனைத் தொடர்ந்து ஜெறோமும் அந்தச் சிறிய வீதியில் நடக்கின்றான்.

“ஐயா வாங்கோ” என்று கந்தசாமியையும் ஜெறோமையும் வரவேற்றார். சாப்பாட்டுக் கடை வாசலில் நின்ற கிழவர். இருவரும் கைகளைக் கழுவிக் கொண்டு சாப்பாட்டு மேனையின் முன்னால் அமர்ந்தார்கள்.

ஒருவர் இரண்டு இலைகளைப் போட்டுவிட்டு, தண்ணீர்ச் செம்பையும் கொண்டு வந்து வைத்தார். இன்னொருவர் பாத்திரத்திலிருந்த சோற்றை இலைகளில் கொட்டிக் கொண்டு “ஐயாவுக்கு என்ன கறி வைப்பம்?” – என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு பதிலாக “ஆடு, இறால்,கோழி, நண்டு” என்று பல விடைகளை அடுக்கிக்கொண்டு போனார்.
“எங்களுக்கு அதொண்டும் வேண்டாம்,மீன் கொண்டு வாங்கோ”

மீன் வேண்டுமென்றான் கந்தசாமி. ஆட்டிறைச்சி சாப்பிட ஆசை இருந்தாலும் அதற்கு அவனது பொருளாதார நிலை இடம் கொடுக்காது. கடன் கிடன் வாங்கிச் சாப்பிட்டாலும் சம்பளத்தன்று கையைக் கடிக்கும். வீட்டுக்கு அனுப்பும் காசைத்தான் குறைத்து அனுப்ப வேண்டும். சோறு வைத்தவர், “மீனாம் மீன்” என்று கத்திவிட்டு மற்றவர்களுக்குச் சோறு வைக்கிறார். சாப்பிடுபவர்களின் விருப்பத்தைப் பொறுத்து “ஐயாவுக்கு ஆடு” “இஞ்சாலை ஒரு கோழி” கணவாய் கொண்டு வா” “தம்பி ஒரு முட்டை இப்படியான கட்டளைகளை அடிக்கடி பிறப்பித்துக்கொண்டிருந்தார்.

ஜெறோமுக்கும் கந்தசாமிக்கும் மரக்கறி வந்துவிட்டது. மீன் குழம்பு வரச்சிறிது தாமதம். மீன் வரும் வரையில் காத்திருக்கத் தயாராக இல்லை இருவரும்.கத்தரிக்காயக் கறியுடன் சோற்றைப் பிசைந்து கொண்டே, “மைச்சான் இந்தக் கல்லுக்குவியலுக்கை இடைக்கிடை சோறும் கிடக்கு” என்று ஜெறோம் சொல்லியதும் கந்தசாமிக்குச் சிரிப்பு உண்டாகியது.
“பெரிய பகிடி விடுறாய். உன்ர சொந்தமோ? என்று கேட்ட கந்தசாமி சோற்றைக் குழைத்த போது
“ஐயா கொஞ்சம் கையை எடுங்கோ, குழம்புவிட” என்றார் மீன் குழம்பு விநியோகஸ்தர்.

“மைச்சான், ஒரே முள்ளாக்கிடக்கு இது என்ன மீன்..” என மீனின் இனத்தை ஜெறோமிடம் வினவினான் கந்தசாமி.

“கொய் மீன். முள்ளெண்டாலும் நல்ல ருசி” என்று சொல்லிவிட்டு பொரிச்ச மீனை ஒரு கடி கடித்தான் ஜெறோம்.

இரண்டாம் தரமும் சோறு வைத்தாகிவிட்டது. கந்தசாமி ஹோர்லிக்ஸ் போத்தலோடு சொதியைத் தன் இலையில் ஊற்றியபோது, மீன் குழம்பு விநியோகஸ்தர் ஓடிவந்து, ஐயா கலக்கிப் போட்டு ஊத்துங்கோ. இல்லையெண்டால் பிறகு சாப்பிட வாற ஆக்கள் வெறும் தண்ணியைத்தான் ஊத்திச் சாப்பிட வேண்டிவரும்” என்று சொல்லிக் கொண்டே போத்தலின் வாயை உள்ளங்கையால் பொத்திக்கொண்டு போத்தலை ஒருதரம் ஆட்டிச் சொதியைக் கலக்கி வைத்தார்.
சாப்பிட்டு முடியப் போகும் தருணத்தில் கந்தசாமி தன் இலையிலிருந்த கொய்மீன் முட்களை ஜெறோமின் இலையில் தூக்கி வைத்தான். இப்படிச் செய்ததில் அவனுக்கொரு மகிழ்ச்சி. நண்பர்களோடு சாப்பிடும்போது பக்கத்திலிருப்பவரின் பப்படம், பொரியல் முதலியவற்றை ‘அபக்’ கென்று எடுத்துச் சாப்பிடுவது, பாயாசம், மோர் முதலியவற்றில் வாய் வைப்பது கந்தசாமிக்கு பிரியமான செயல்கள்.

கந்தசாமியின் செயல்கள் ஜெறோமுக்குக் கோபத்தை உண்டாக்கவில்லை. ஒரு சிரிப்பைத்தான் வரவழைத்தது. கந்தசாமியும் சிரித்துக்கொண்டே “என்ன விசயம் சிரிக்கிறாய் மைச்சான்” என்று கேட்டான்.

“இல்லை மைச்சான். நான் கனக்க மீன் திண்டனான் எண்டு பார்க்கிறவங்கள் நினைக்கட்டுமெண்டு நினைச்சுத் தான் உன்ர இலையிலிருந்த முள்ளை என்ர இலையில வைச்சனி. நீ நினைச்சதுக்கு மாறாக ஆரும் நினைச்சாங்களெண்டால்...” என்றிழுத்தான் ஜெறோம்.

“எப்படி நினைப்பினம்?” என்று கேட்டுவிட்டு இல்லையின் நாலா பக்கமும் சிதறிக்கிடந்த சோற்றுப் பருக்கைக்ள் கறி முதலியவற்றை வலக்கையால் ஒதுக்கி இலையின் நடுப்பகுதிக்குக் கொண்டு வந்தான் கந்தசாமி.

“நீ மீனோடை சேர்த்து முள்ளையும் திண்டிட்டாய் என்று எண்ணி, பாக்கிறவங்கள் சிரிப்பார்கள்” சொல்லிக் கொண்டே ஜெறோம் இலையைத் தூக்கிக் கொண்டு கை கழுவும் தொட்டிக்குப் போனான்.

சாப்பாட்டை முடித்துக் கொண்டு கந்தோருக்குச் சென்ற கந்தசாமி, பக்கத்திலிருந்த பாலசிங்கத்திடம் வாரப் பத்திரிகையொன்றை வாங்கினான்.

மின்சார விசிறியின் கீழிருந்து வாரப் பத்திரிகையின் பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தான். பத்திரிகையிலுள்ள துணுக்குகளையும், சிறு விடயங்களையும்; தான் முதலில் வாசிப்பது கந்தசாமியின் வழக்கம். துணுக்குகளை வாசித்துக்கொண்டு வரும்போது, பெர்னாட்சாவின் படத்தோடு பிரசுரிக்கப்பட்டிருந்த துணுக்கொண்றையும் வாசிக்க நேர்ந்தது.

“ஒரு நாள் பெர்னாட்சாவும் அவரது நண்பர் ஒருவரும் பேரீச்சம் பழம் சாப்பிட்டு விட்டதால், அவருடைய கோப்பையில் பழத்தின் கொட்டைகள் அதிகமாக இருந்தன. நண்பர் அந்தக் கொட்டைகளைத் தூக்கி பெர்னாட்சா கொட்டைகள் போட்ட கோப்பையில் கொட்டினார். அப்போது பெர்னாட்சா சிரித்துக்கொண்டே “ நண்பரே! இந்தச் செயகையால் தான் அதிகம் பேரீச்சம்பழம் சாப்பிட்டுவிட்டதாக யாரும் நினைக்கமாட்டார்கள். பதிலாக நீங்கள் பழத்தோடு கொட்டைகளையும் சாப்பிட்டு விட்டதாக எண்ணிக்கேலி செய்வார்கள்” என்றார்.

இந்தத் துணுக்கை வாசித்த கந்தசாமிக்குக் சிரிப்புடன் சிந்தனையும் வந்தது.

“பெர்னாட்சா சொல்லிய துணுக்கு என்றபடியால் படத்தோடு பெரிய பகிடியாகப் பேப்பரிலை போட்டிருக்கிறாங்கள். ஜெறோமும் சாப்பிடும் போது சரியாக இப்படித்தானே ஒரு பகிடி விட்டவன். நான் அதை மறந்து போனேன்” என்று சிந்தனையில் மூழ்கினான் கந்தசாமி.

பெரியவர்களின் சிறிய திருவிளையாடல்களையும் பெரிதாக வெளியிடும் பத்திரிகைகளும், வானொலியும் சிறியவர்களின் பெரிய விடயங்களைக் கூடப் பிரபலப்படுத்தமாட்டார் என்பது கந்தசாமிக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

தினகரன் 1968
வானொலியிலும் ஒலிபரப்பட்டது.

Friday, August 3, 2007

சந்நிதிக் கோயில் சாப்பாடு



“அரோகரா...அரோகரா...”

செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா...” ஒலி கோவிலை அதிரக் செய்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தை மூடியிருந்த திரை விலகியதும் ஐயர் வேல்முருகனுக்குத் தீபாராதனை செய்யும் காட்சியை கண்ட பக்தர்கள் தம்மை மறந்து பக்திப்பரசவத்தில் சுத்திக் கொண்டிருந்தார்கள்.

“கந்தனுக்கு அரோகரா”“முருகனுக்கு அரோகரா”வேலனுக்கு அரோகரா”“முருகா முருகா”

அடியார்களின் ஓசையோடு ஆலயமணியின் ஓசையும் சேர்ந்து கொண்டது. பூசை நல்ல படியாக நடந்துகொண்டாக எண்ணியவர்கள். தங்கள் கைகள் தட்டிக்கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கு முன்பு எழுந்த “முருகனுக்கு அரோகரா” பேரோலி அடங்கிவிட்டது. “டாங்..டாங்” என்றொலித்த பெரிய மணியும் உறங்கிவிட்டது. நாதஸ்வரம், மேளம் வாசித்தவர்களும் எங்கோ சென்று விட்டார்கள். சங்கு கூட நந்தியின் கால்களுக்கிடையில் அடைக்கலம் புகுந்து கொண்டது. எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. அவற்றில் பூசையின் போதிருந்த பிரகாசம் இல்லை. சாம்பிராணி, ஊதுபத்தி முதலியவற்றின் மணமும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே சென்றது.

மூலஸ்தானத்தை விட்டிறங்கிய ஐயர், தனது கையிலுள்ள தட்டத்திலிருந்த விபூதியை எடுத்து சனங்களுக்கு வினியோகம செய்து கொண்டு வந்தார்.

“முருகா” என்று சொல்லிய வண்ணம் சனங்கள் விபூதியை வாங்கி நெற்றியிலும் கைகளிலும் பூசிக்கொண்டார்கள். ஒரு சிலர் ஐயரின் கால்களில் வீழ்ந்து வணங்கும் போது, ஐயர் அவர்களின் தலைகளில் விபூதியைத் தூவி ஆசீர்வாதம் செய்தார்.

விபூதி விநியோகத்தைத் தொடர்ந்து சந்தனம், குங்குமம், மலர்கள் ஆகியவற்றையும் அங்கு நின்றவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பின், ஐயர் தீர்த்தச் செம்புடன் வருகிறார்.

இரண்டு கரங்களாலும் தீர்த்தததை வாங்கி வாயிலும் ஊற்றித் தலையிலும் தெளித்த பின்பு , ஈரக்கைகளை கண்களிலும தடவிக் கொண்டார்கள் பலர்.

:என்ர ராசா..ஐயாவிட்டை தீர்த்தம் வாங்கிக் குடியுங்கோ” எவளோ ஒரு தாய் மகனுக்கு கட்டளை பிறப்பித்ததும்,
“ஐயா தீர்த்தம்” என்று இரண்டு கைகளையும் நீட்டி தீர்த்தத்தை வாங்கி ஒரு மடக்கில் குடித்தது குழந்தை. தீர்த்தம் தேன்போல இனித்ததோ அல்லது மருந்து போல கசத்ததோ குழந்தையைத் தான் கேட்கவேண்டும்.

மகன் தீர்த்தம் பருகிவிட்டதைக் கண்டு மனமகிழ்ந்த தாய், குழந்தைக்கு மற்றுமொரு கட்டளையை இட்டாள். “ராசா...கையைக் கண்ணில் துடையுங்கோ..”
“ஏனம்மா..?” என்று கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திராமல் ஈரக்கைகளால் கண்களைத் தடவினான்.
குழந்தையின் கேள்விக்கு-
“தீர்த்தம் கண்ணிலை பட்டால் நோய் துன்பங்கள் வராது. கண் குருடாகாது” என்று மறுமொழி சொன்னார் கந்தசாமி.
பிள்ளையார் வாசலின் முன்னாலுள்ள கோயிலுக்குப் பக்கத்தில் நின்ற குருடனின் மேல் குழந்தையின் கவனம் சென்றது.

“தீர்த்தம் படாதபடியாலோ அந்த மாமாவுக்குக் கண் தெரியாமல் போனது?” குழந்தை , கந்தசாமியைப் பார்த்துக் கேட்டது.

“ஓம் கடவுளைக் கும்பிடவேணும். திருநீறு வாங்கிப் பூசவேணும். பொட்டு வைக்கவேணும். வில்வம் வேண்டி காதிலை வைக்கவேணும். தீர்த்தம் வாங்கிக் குடிக்க வேணும் இல்லையெண்டால் கண் குருடாய் போயிடும்” கண்டிப்பான குரலில் சொல்லிக் கொண்டு வந்த கந்தசாமி குரலைச் சிறிது மாற்றி கொண்டு மகனைக் “கவனமாக வளருங்கோ, நல்ல கெட்டிக்காரனாக வருவான்” என்றார்.

“அவன் உப்பிடித்தான் அண்ணை, எதுக்கெடுத்தாலும் ஒவ்வொண்டு சொல்லமால் இருக்கமாட்டன். ஐயோ..தகப்பனைப் படுத்திறபாடு. தங்கச்சியாக்கள் மத்தியானம் செல்லையா மடத்திலை அன்னதானம் குடுக்கினம் . அண்ணை...அப்ப நாங்கள் வரப்போறம். கூடமாட ஏதுவும் செய்து குடுக்க வேணும்” சொல்லிவிட்டு குழந்தையையும் கூட்டிக்கொண்டு சென்றாள் தாய்.

முருக பக்தர்கள் கோவிலின் நான்கு வாசல்களாலும் வெளியேறிக் கொண்டிருக்க, ஒரு சிலர் மாத்திரம் ஆறுமுகசுவாமி வாசலின் முன்னால் பக்திப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தாயும் மகனும் சென்ற பின்னர் கந்தசாமி தனது இடுப்பிலிருந்த பட்டுச்சால்வையை அவிழ்த்து நன்றாக இறுக்கிக் கட்டிக்கொண்டு பக்திப் பாடல்கள் பாடுவோரோடு சேர்ந்து கொண்டார்.

அருணகரிநாதரின் திருப்புகழும், பித்துக்குளி முருகதாஸின் பாடல்களும் பாடுவோர் வாயிலிருந்து தேனாக ஒழுகியது. அவர்களோடு சேர்ந்துகொண்ட கந்தசாமி பக்தியுணர்ச்சியோடு பாடியதாகத் தெரியவில்லை. ஏதோ கடமைக்காக வாயைமட்டும் அசைத்த வண்ணமிருந்தார். மனம் மத்தியான உணவைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்தது.

“சீ..நான் அவளோடு செல்லையா மடத்துக்குப் போய் உதவியள் செய்து கொடுத்தால் மத்தியானம் நல்ல வடிவாகச் சாப்பிடலாம், இண்டைக்கு வெள்ளிக்கிழமைதானே. எல்லா மடத்திலையும் சோறு குடுப்பினம். இருந்தாலும் தெரிஞ்ச ஆக்கள் தாறதைப்போல வராது”

“அ..இதிலை இவங்களோடை பாடிக்கொண்டிருந்து என்ன புண்ணியம் ? ஒரு தேத்தண்ணிகூடக் கிடையாது”

“மடத்துக்கம் போகலாம்தான். தற்செயலாக ஆரும் பார்த்தால் ஏதும் நினைப்பாங்கள். ஒவ்வொரு கிழமையும் மடங்களில் போய் உதவி செய்திருந்தால் பரவாயில்லை. இண்டைக்குப போக சா...” அலைபாய்ந்த எண்ணங்களை ஒருவாறாக அடக்கிக் கொண்டு “பாடி முடிஞ்ச உடனே போவம்” என்ற முடிவுக்கு வந்தார்.

அன்னதானச்சோறு சாப்பிடுவதற்கு ஆசைப்படுவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பலர் பஞ்சத்தில் அடியுண்டு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லாததால் அன்னதானச் சோற்றுக்காக அடிபடுகிறார்கள். இரண்டாவத வகையினர் ‘மடங்களில் வழங்கப்படும் தானச்சோறு கடவுளின் சோறு, கோவில் சோற்றில் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். என்பதற்காகச் சாப்பிடுவார்கள், இதில் கந்தசாமி முதலாவது வகையைச் சேர்ந்தவர்.

கந்தசாமியை முதன்முதலாகப் பார்ப்பவர்கள், “அவர் வறுமையில் வாடுகிறார்” என்று சொன்னால் நம்பமாட்டார்கள்தான். “அவருக்கென்ன? நல்ல தோற்றம், பட்டுவேட்டி சால்வையெல்லாம் கட்டியிருக்கிறார்கள். கையிலே மணிக்கூடு, இடுப்பில் பளபளக்கும் பட்டுச் சால்வைக்கூடே பெரிய தோல் மணிபர்ஸ் தலைi நீட்டிப் பார்க்கிறது. அதற்குள் எப்படியும் ஐந்து பத்து ரூபாவென்றாலும் இருக்கும். அவரிடம் காசில்லையென்று சொன்னால் நான் நம்பவே மாட்டேன்” என்று சொல்பவர்களுக்கு அவருடைய உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

பல வருடங்களுக்கு முன் கொழும்பிலுள்ள கொம்பனியொன்றில் வேலை பார்த்தபோது வாங்கின கைகடிகாரமும், பட்டுவேட்டி, சால்வையும் மணிபர்ஸ்சும்தான் கந்தசாமியைப் பணக்காரரென்று பல பேருக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தன.

ஒரேயொரு மகளுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்த சந்தோசத்தில் கண்ணைமூடிவிட்டாள் கந்தசாமியின் மனைவி. ஈமக்கிரிகைகள் முடிந்த ஒரு சில நாட்களுக்குள் மகளும் மருமகனும் வீடு காணியெல்லாhவற்றையும் ‘சீதனம்’ என்ற பெயரால் அபகரித்துக்கொண்டு கந்தசாமியோடு கோபம் என்று சொல்லி கதையாமல் விட்டுவிட்டார்கள். தனது தங்கையின் குடும்பத்தோடு ஒட்டிக்கொண்ட கந்தசாமியைக் கொம்பனி வேலையும் வெறுத்து ஒதுக்கிவிட்டது.

இல்லானை இல்லாளும் வெறுத்து ஈன்றெடுத்தாய் கூட வேண்டாத நில உலகத்தில் நிலவுபோது - கூடப் பிறந்தவள் எப்படிக் 4ட்டி வைத்திருப்பாள்? இரவுப் பொழுதை நித்திரையில் கழிப்பதற்காக மாத்திரம் தங்கையின் வீட்டுக்குச் செல்வார் கந்தசாமி.

வெள்ளிக்கிழமைகளில் சந்திநி கோவிலிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுரக் கோவிலிலும் ஆளைக்காணலாம். மற்றும்படி அந்தச் சுற்றுவட்டாரத்தில் திருவிழாக்கள் இல்லாத நாட்களில் வாசிகசாலையிலோ அல்லது புளியமர நிழலிலோ தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்.

வருமானமில்லாத நிலையிலும் கந்தசாமி பட்டுவேட்டியுடன் கோவிலுக்குப் போவதையிட்டுத் தவறாக எதுவும் சொல்லமுடியாது, அவரிடம் கிழியாத வேட்டி என்ற பெயரோடு இருப்பது அந்தப் பட்டுவேட்டி ஒன்றுதான். இடுப்பில் செருகியிருக்கும் மணிபேர்ஸில் இருபது சதம்தான் இருக்கிறது. கையில் கட்டியிருக்கும் மணிக்கூடு மாத்திரம் ஒழுங்காக நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

எது எப்படி இருப்பினும் கந்தசாமியிடம் ஒரு தனிக் கவர்ச்சி ‘பேர்சனால்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே: அந்தக் கவர்ச்சியாக இருக்கலாம். யாராயிருந்தாலும் சரி , முதல் சந்திப்பிலேயே சிநேகிதம் கொள்ளும் அளவுக்கு நடந்துவிடுவார்.

“என்ன கந்தசாமியண்ணை...கடுமையாகக் கனக்க யோசிக்கிறியள்?’ அவருக்குப் பக்கத்திலிருந்தவர் கேட்ட போதுதான் நினைவலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் கந்தசாமி. “ஒண்டுமில்லை” என்று சொல்லி முடிப்பதற்கும் பக்திப்பாடல் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் ‘நமப்பார்பதி பதே’ சொல்வதற்கும் சரியாக இருந்தது.

கச்சேரி முடிகிறதே என்ற மகிழ்ச்சியில தங்கள் சத்தத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்கள்.”ஹர ஹர மகாதேவா!”
‘தென்னாடுடைய சிவனே போற்றி’ தலைமை தாங்கியவரின் குரலைத் தொடர்ந்து எல்லோருடைய குரல்களும் ஒரே நேரத்தில் எதிரொலித்தன.

‘எந்நாட்டவர்களுக்கும் இறைவா போற்றி!’
பக்திப் பாடல்களைப் பாடியவர்களும் ஒவ்வொருவராக எழுந்து சென்றனர். கந்தசாமி கைகடிகாரத்தைப் பார்த்து எழுந்து சென்றனர். கந்தசாமி கைகடிகாரத்தைப்பார்த்து ‘பத்தே முக்கால் மணி’ என்று தனக்குள் சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்வையைப் படரவிட்டபடி நடந்துவந்து பிள்ளையார் வாசலின் முன்னாலுள்ள கேணிக்கட்டில் அமர்ந்து கொண்டார். மத்தியான உணவு பற்றி சிந்தனை மீண்டும் அவருள்ளத்தில் தலை தூக்கியது.

‘இப்ப செல்லையா மடத்துக்குப் போகலாம்தான்....’ என எண்ணிய மறுகணமே கமதை மாற்றிக் கொண்டார். மனித மனமல்லவா! காலத்துக்குக் காலம், கணத்துக்குக் கணம் அது மாறிக்கொண்டுதானே இருக்கும்.

“வேண்டாம், ஒரு பன்னிரண்டு மணிக்குக் கொஞ்சம் முன்பின்னாகப் போவம் அவளோடை காலமையும் கதைச்சனான்தானே! அதிலை போய் தங்கச்சியெண்டால் வடிவாகக் கவனிப்பாள்” என்று யோசிக்கும் போது ஒரு கிழவனும் கேணிக்கட்டில் வந்து குந்தினான்.

“ஐயா நேரம் என்னவோ?” எதற்கோ அவசரப்பட்ட கிழவன்தான் நேரத்தை அறியத் துடித்தான். “பதினொரு மணி” வேண்டா வெறுப்பாக நேரத்தை சொன்ன கந்தசாமி முகத்தை மறுபக்கம் திருப்பினார். அங்கே பிச்சைக்காரக் குருடனொருவன் நின்று கொண்டிருந்தான்.

கிழவன் கந்தசாமியுடன் கதைக்க ஆரம்பித்தான். “இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்கு. மடங்களில் பன்னிரண்டு மணிக்குத்தானே அன்னதானம் குடுப்பினம் என்னய்யா..?”

கந்தசாமி ஒன்றும் பேசவில்லை. பணக்காரர்களோடும் பெரியவர்களோடும் எடுத்த எடுப்பிலேயே சிநேகம் வைத்துக்கொள்ள முயலும் கந்தசாமிக்கு ஏழை எளியவர்களென்றால் பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் அந்தக் கிழவனுடனும் அவர் ஒன்றும் கதைக்க விரும்பவில்லைப்போலும்.

பிச்சைக்காரரைவிடக் கேவலமான நிலைக்குத் தான் தள்ளப்பட்டு விட்டதைப்பற்றி கந்தசாமி சிந்தித்ததே இல்லை.
கிழவன் மீண்டும் கதைக்க ஆரம்பித்தான். “ஐயா வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழா நேரத்திலேயும் சோறு குடுக்கிற மாதிரி ஒவ்வொரு நாளும் குடுத்தினமெண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்....சும்மா வெள்ளிக்கிழமை வேளையிலே மட்டும் அவிச்சுக் கொட்டுகிறதாலை ஒரு புண்ணியமுமில்லை. வேண்;டாம் வேண்டாமெண்டு சொல்லவும் சோத்தைக் கொண்டுவந்து கொட்டுவினம். எவ்வளவு சோறு இண்டைக்கு மண்ணாகப் போகும். சடடி பானையளோடை கிடந்து சிந்திக் சீரழியும். எல்லோரும் ஒண்டு மண்டியாகக் கொண்டுவந்து கொட்டாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வந்து அன்னதானம் குடுத்தினமெண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும். என்னைப் போல ஏழை எளியதுகளும் வயிறாரத் தின்னுங்கள்’ எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து அறிந்தவன் போல அந்தக் கிழவன் பேசிப்பயனென்ன, அன்னதானம் கொடுப்பவர்களல்லவா அதை உணர்ந்து நடக்க வேண்டும்.
எவ்வளவோ கதைத்தும் கந்தசாமி ஒன்றுமே சொல்லாத போதும் கிழவன் விடுவதாக இல்லை.

“ஐயா இந்தக் கோவில்களிலே வெடியள். வாணங்கள் , சின்னமேளம், பெரியமேளம் , சிகரம், சப்பறம் எண்டு சில வழிக்கிற காசெல்லாத்தையும் வறுமைப்பட்டதுகளுக்குக் குடுத்தால் அதுகள் வயிறு நிறையச் சாப்பிடுங்கள்” சாப்பாட்டைப்பற்றியும் ஏழைகளைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தான் கிழவன்.

சாப்பாட்டைப் பற்றி கந்தசாமியின் வாய் பேசாவிட்டாலும் உள்ளம அதைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தது.
மனிதர்களாகிய எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. சில நேரத்தில் சில பொருட்களின்மேல் நாட்டம் ஏற்படுகின்றது. கிழவனைப் போல சிலர் வெளிப்படையாகப் பேசுவார்கள். கந்தசுவாமியைப் போன்றவர்கள் கௌவரத்துக்குப் பயந்து ஆசைகளையெல்லாம் மனதுக்குள்ளேயே மறைத்து வைத்திருப்பார்கள்.

கேணியின் முன்னால் நின்ற குருட்டுப்பிச்சைகாரனை சிறுவனொருவன் மோதி விழுத்திவிட்டான். அவன் வேறு யாருமல்ல- தாயுடன் கூட இன்று தீர்த்தம் வாங்கிப் பருகிய அந்தச் சிறுவன்தான்! பலூன்காரன் ஒருவன் அவனைக் கலைத்துக் கொண்டோடிவரும் போது குருடனை மோதி விழுத்தி விட்டு “மாமா அடிக்க வாறன்” என்று கந்தசாமியின் பின்னால் ஓடி ஒளிந்துக்கொண்டான். சிறுவனின் கையில் தாராவைப் போன்ற பலூன் ஒன்றிருந்தது.
சிறுவனைக் கந்தசாமி தன் கைகளில் பிடித:துக் கொண்டு கலைத்து வந்த பலூன்காரனிடம், “என்ன நடந்தது” என்று அதிகாரத்தோரணையில் கேட்டார்.

பலூன்காரன் குழைந்த வண்ணம், “ஐயா” இந்த பொடியன் என்னட்டையிருந்த தாராபலூனை அறுத்துக் கொண்டோடி வந்திட்டுத்து. அது இருவத்தைஞ்சியாம் விக்கிற பலூன் ஐயா...” என்றான். கோபத்துடன் சிறுவனைக் கலைத்துக்கொண்டுவந்த பலூன்காரன் குழைந்து நின்றதற்குக் காரணம், எப்படியாவது கந்தசாமியிடமிருந்து இருபத்தைந்து சதம் வாங்கவேண்டும் என்பதற்கே! கந்தசாமி இருபத்தைந்து சதம் கொடுத்துப் பலூன் வாங்கிக் கொடுப்பதற்கு எங்கே போவார்?

“தம்பி! அந்த பலூன் வேண்டாம். அதைக் குடுத்திடுங்கோ” கந்தசாமியின் வேண்டுகோளுக்கு சிறுவன் பணியவில்லை.
“நான் மாட்டன் எனக்கு இந்த பலூன்தான் வேணும். அம்மாவிட்டைக் கேட்டனான். அவ வேண்டித்தரமாட்.டன் எண்டு சொன்னவ. நீங்க வேண்டித் தாங்கோ மாமா” சிறுவன் கெஞ்சினான். சிறுவனின் கெஞ்சுதல் அழுதையாக மாறக் கந்தசாமி பலூனைப் பறித்து பலூன்காரனிடம் கொடுத்துவிட்டு பின்வருமாறு சொன்னார். “தம்பி அம்மாவிடம் சொல்லி உங்களுக்குப் பெரிய தாரா பலூன் வாங்கித்தாறன். இதுக்கெல்லாம் அழக்கூடாது. நீங்கள் நல்ல பிள்ளையெல்லா..! ஏன் அந்த பலூனை அறுத்துக்கொண்டு வந்தனீங்கள்? களவெடுக்கிறது மற்ற ஆக்களெட்டையிருக்கிற சாமானைப் பறிக்கிறது கூடாத பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய்யக் கூடாது. அழாதையுங்கோ.”

அழுகைக்கிடையே, “ அம்மாவிட்டை கேட்டனான். அவ வேண்டித் தரமாட்டன் எண்டு சொன்னவ. அதுதான் நான் அறுத்தனான். அவன் அடிக்கவர நான் ஓடியந்தநான் “ என்றான் சிறுவன்.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவன் சொன்னான்: “ஐயா அந்தப் பிள்ளைக்கு ஒரு பலூன் வாங்கிக் குடுங்கோ. அது அழாது. குழந்தைப் பிள்ளையள் பலூனையும் இனிப்பையும் கண்டால் ஆசைப்படுங்கள். நாங்களும் அந்தப் பருவத்தில் அப்பிடித்தானே இருந்திருப்பம். அதுகள் ஆசைப்படுகிறத வேண்டிக் கொடுத்தால் குழந்தைகள் களவெடுக்காது: பொய் சொல்லாது- சின்னப்பிள்ளையள் ஏதுவும் கேட்க, வேண்டிக் குடுக்காவிட்டால்தான் தாங்கள் விரும்பின பொருளைக் களவெடுக்கத் துணிகின்றன. பிறகு அந்தப் பொருளைக் கண்டிட்டு தாய்தகப்பன் ‘ எங்கை எடுத்தனி? எப்படி வந்தது? எண்டு வெருட்டினால் குழந்தையள் பொய் சொல்லுங்கள்.

கந்தசாமி தனக்கு வந்த கோபத்தைக் கிழவன் மீது காட்டமுடியாமல் தவித்தார். அந்தப் பலூனை எப்படியாவது விற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கேணிப்பக்கத்தில் இன்னமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் பலூன்காரன்.
“மாமா ஒரு பலூன்...நான் பிறகு கேக்கயில்லை” சிறுவன் மீண்டும் கெஞ்சினான்.

“பலூனா வேண்டும் நல்ல உதைதான் தரவேணும் இனி பலூன் எண்டு கேட்டால் “பல்லைக்கடித்து, கிழவன் மீது வந்த கோபத்தைச் சிறுவன் மீது தீர்த்துக்கொண்டார் கந்தாமி.

கிழவன் வேட்டியில் செருகியிருந்த கடுதாசிச் சரையைக் எடுத்து விரித்த போது , கந்தசாமி நன்றாக உற்றுபார்;த்தார். கடுதாசிச் சரையினுள் சில்லைறைக் காசுளோடு இரண்டு பத்து ரூபா நோட்டுகளும் இருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை, கந்தசாமியின் கண்கள்.

அவர் ஒரு நிமிடம் யோசிப்பதற்குள் இருபத்தைந்து சதக்குத்தியொன்றை சிறுவனிடம் கொடுத்தான் கிழவன். உடனே காசு கைமாறியது. சிறுவன் தாரா பலூனை வாங்கிவிட்டான்.

கந்தசாமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் கதைக்காரக் கிழவன் மீண்டும் கதைத்தான்.
“குழந்தப்பிள்ளையள் இருக்கிற பக்கமாக பலூன்காரரும் முட்டாசுக்காரரும் வரக்கூடாதெண்டு ஒரு சட்டம் வைக்கவேணுமய்யா குழந்தைப்பிள்ளையள் கண்டால் “அதைவேண்டித்தா, இதைவேண்டித்தா” எண்டு கரைச்சல் படுத்துங்கள்தான். எல்லர்தகப்பனுக்கும் வாங்கிக் குடுக்க வசதியிருக்குமோ? வேண்டிக்குடுக்காமல் குழந்தையளைக் கோவிச்சால் கோயிலுக்கு வந்து கும்பிட்ட வலன் போச்சுதே!”

“எல்லாத் தாய் தகப்பனும் வாங்கிக்குடுக்க வசதியிருக்குமோ” கிழவன் சொன்னது செவிகளில் எதிரொலித்தது கந்தசாமியை மனம் நோகவைத்தது. “யாரோ பெற்ற பிள்ளையோடு உறவுமுறை கொண்டாடப் போய்” கிழவன் தன்னைக் குத்திக் காட்டுகிறானே!

தாரா பலூனைவைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி. கிழவனின் உள்ளத்திலும் பிரபலித்தது. “தம்பி, இது நல்ல பலூன் என்ன, உடையாமல் வைச்சு விளையாட வேண்டும். இனிமேல் பலூன் வேண்டித்தரச்சொல்லி கரைச்சல் படுத்தகூடாது” யாரோ பெற்ற பிள்ளைதான் என்றாலும் எவ்வளவு அன்பாகச் சொன்னான் கிழவன்.

மகனைத் தேடித்கொண்டு வந்த தாயும் கேணியடிக்கு வந்து சேர்ந்தாள். கந்தசாமியை நோக்கி மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவள் மகனைப் பார்த்தும் முகத்தில் சிறிது கோபத்தை வரவழைத்துக்கொண்டே கேட்டாள். “சுகுமார் உனக்கு இந்த பலூன் எங்கே கிடைத்தது?’

பதில் சொல்லப் பயந்த சுகுமாரன் கிழவனைப் பார்த்து கையைக் காட்டினான். “அது நான்தான் வாங்கிக் குடுத்தனான் அம்மா” கிழவன் சொல்லியதும் தாயைப் பார்த்த சுகுமாரனுக்கு துணிவு வந்துவிட்டது.

“இந்த மாமாவட்டைக் கேட்டனான். அவர் வேண்டித்தரமாட்டன் எண்டு சொன்னவர், உடனை இந்த அப்பா வேண்டித்தந்தவர்” என்றான் சுகுமாரன்.

தாய் குழந்தையைத் தடவிவிட்டு “அப்படியெல்லாம் வாங்கக்கூடாது ராசா. இந்தாங்கோ இந்த இருபத்தைந்து சதத்தை அந்த அப்பாவிட்டைக் குடுங்கோ” என்று சொல்லி முடிக்கவில்லை.

“அம்மா எனக்குக் காசு வேண்டாம்” குழந்தை ஆசைப்பட்டுது வாங்கிக் குடுத்தனான். நானும் பிள்ளைகுட்டிக்காரன். எங்கடை பிள்ளையளும் எங்கேயெங்கே என்னத்திற்கு அந்தரிக்குதுகளோ அதுகளுக்கும் ஆரும் உதவி செய்ய வேணும். காசை மறுத்தான் கிழவன்.

பரவாயில்லை என்று சொல்லி நன்றிப்பார்வையோடு காசைக் கொடுத்த பின்பு சொன்னாள். நல்ல வேளையப்பா நான் சமையலிலை இருந்தாற் போலை பிள்ளையைக் கவனிக்கவே இல்லை. சமைச்ச பிறகு பார்த்தால் காணயில்லை..ம்..முருகன்தான்.

“அம்மா சனசந்தடியுள்ள இடங்களுக்குச் சின்னஞ்சிறுகளைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள்தான் கவனிக்கவேணும். பிராக்கு கண்ட இடத்திலை பிள்ளையள் நிண்டிடும்” கிழவன் சொல்லிவிட்டு, சாப்பிடப் போவதற்காக வேட்டியை இறுக்கி கட்டினான்.

“அப்பா! செல்லையா மடத்திலை நாங்கள்தான் அன்னதானம் குடுக்கிறம்..நீங்கள் வாருங்கோ...” என்று சொன்னவள் கந்தசாமியையும் பார்த்து “அண்ணை நீங்களும் வாருங்கோ” என்று அழைப்பு விடுத்தாள்.

அழைப்பை ஏற்ற கந்தசாமியும் கிழவனும் தாயையும் மகனையும் பின்தொடர்ந்து செல்லையா மடத்தினுள் புகுந்தனர். எதிர்பாராத விதமாகப் பந்தியிலும் கந்தசாமிக்குப் பக்கத்திலேயே குந்திக்கொண்டான் கிழவன். சோறும் கறிகளும் பரிமாறப்பட்டன.

“அய்யா பார்த்தீங்களே! பூசனிக்காய் புடலங்காய் எண்டு ஏழெட்டுக் கறிபோடுற காசுக்கு, கோவா பீற்றூட் எண்டு ரெண்டு மூன்று நல்ல கறியள் போட்டாலும் காணும்...” கிழவன் சொல்லி முடிப்பதற்குள்.... “சும்மா சத்தம் போடாமல் சாப்பிடு” கந்தசாமியின் குரலில் கண்டிப்பு நிறைந்திருந்தது. கிழவனிடமிருந்த இருபது ரூபாதான் அவன் மீது கந்தசாமிக்குப் பொறாமையை ஏற்படுத்தியது.

மனிதனின் ஆசைக்கு எல்லையில்லை. ஒரு பொருளை அடையவேண்டுமென்று துடியாயத் துடிக்கிறான்: படாத பாடுபடுகின்றான். அந்தப் பொருளை அடைந்தபின் இன்னொரு பொருளில் ஆசை வைக்கிறான். மத்தியான உணவுப்பிரச்சனை முடிந்ததும் பணப்பிரச்சனை எழுகிறது. கிழவனின் பணத்தை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டுமென்ற கெட்ட சிந்தனையுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கந்தசாமி இலையிருந்த சோற்றை முடிக்குமுன் கிழவன் எழுந்துவிட்டான்.

கிழவனின் மடியிலிருந்த கடதாசிச் சரை கீழே விழுந்ததை ஒருவருமே கவனிக்கவில்லை- கந்தசாமியைத் தவிர.

“அவங்க எழும்பினால் பரவாயில்லை. நீங்க ஆறுதலாகச் சாப்பிடுங்கோ” சுகுமாரனின் தாய் கந்தசாமிக்குச் சொன்னாள்.
கையைக் கழுவிவிட்டு, காசைத் தேடிக்கொண்டு வந்த கிழவன் கண்ட காட்சி....

கந்தசாமி கிழவனின் கடுதாசிச் சரையை காலால் இழுத்து, கைகளுக்கு மாற்றி அதிலிருந்து இரண்டு பத்து ரூபா நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, சரையை அப்படியே நழுவவிட்டார்.

“அய்யா...உங்களுக்குக் காசு தேவையெண்டு கேட்டிருந்தால் நானே தந்திருப்பேன். களவெடுக்கிறது கூடாத பழக்கமெண்டு அந்தக் குழந்தைக்குச் சொன்ன நீங்களே களவெடுத்தியள்- பரவாயில்லை” சொன்னதும் சொல்லாததுமாக மடத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தான் கிழவன்.

கந்தசாமியின் முகம் அவமானத்தால் வெளுத்தது, நிலத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கிழவனின் கடுதாசிச் சரையைப் பார்க்கிறார். சில்லறைக் காசுகளைச் சுற்றியிருந்த கடதாசியில் அச்சிட்டிருந்த, “மற்றவரை மன்னிக்கும்போது மனிதன் தெய்வமாகிறான். மன்னிக்காதவன் மனிதனாகவே இருக்கிறான்” என்ற மணி மொழியைத் தவிர மற்ற எழுத்துக்களைக் கந்தசாமியால் வாசிக்க முடிக்கவில்லை.

ஈழநாடு 1970

Wednesday, August 1, 2007

அறிமுகம்

தில்லைநடராஜா என்பது எனது பெயர். கலை, இலக்கிய உலகில் உடுவை எஸ். தில்லைநடராஜா என்றும் உடுவை என்றும் அறியப்பட்ட நான் தற்போது பணியாற்றுவது இலங்கை கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராக. 1965 ஆம் ஆண்டு இலங்கை அரசினால் நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் பின்னர் அரசு சேவையில் நுழைந்தேன். அப்போதிலிருந்து 1978 வரை இலங்கைப் பொலிஸ் தலைமைச்செயலகத்தில் வேலை. பின்னராக இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையின் பின்னர்

1978 – 1980 வரை மட்டக்களப்பிற்கான கூட்டுறவு உதவி ஆணையாளர்
1980-1982 வரை மன்னார் கூட்டுறவு உதவி ஆணையாளர்.
1982-1988 வரை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கூட்டுறவு ஆணையாளர்
1988-1989 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான மீன்பிடித் திணைக்கள பணிப்பாளர்.
1989-1990 வரை வடக்குகிழக்கு மாகாணத்திற்கான கூட்டுறவு, உணவு மற்றும் வர்த்தக அமைச்சின் பிரதிச் செயலாளர்.
1990-1991 வரை வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளரர்
1992-1995 வரை வவுனியா அரச அதிபர்
1995-1998 வரை கிளிநொச்சி அரச அதிபர்
1998-1999 வரை இந்து கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளாராகவும் பணிபுரிந்தேன்.

2000 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கை கல்வி அமைச்சியின் மேலதிக செயலாளராகவும் பணிபுரிந்த வண்ணம் உள்ளேன்.

கலை இலக்கிய துறையில் எனது ஈடுபாடு என்பது எனது மாணவப்பருவத்திலே உருவானது. அது வானொலி நாடகமாக, சிறுகதையாக, பத்திரிகை ஆசிரியனாக, நடிகனாக, நிகழ்ச்சி தொகுப்பாளனாக என்னை மாற்றியது. எனது முதலாவது சிறுகதைத் தொகுப்பான “நிர்வாணம்” 1990 இல் வெளியானது. தமிழ்நாட்டின் கோவை லில்லி தேவசிகாமணி நினைவு விருது பெற்ற இந்த நூலின் தலைப்பே இந்த வலைப்பதிவின் தலைப்பாகி இருக்கிறது. 1947 இல் யாழ்ப்பாணம் உடுப்பிட்டியில் பிறந்த நான் எனது கிராமத்தின் பெயரை உடுவை எனவாக்கி உடுவை.எஸ். தில்லைநடராஜா ஆனேன்.இதுவரையில்

நிர்வாணம் (சிறுகதைத் தொகுப்பு)
கடற்கன்னி (சிறுவர் கதை)
மந்திரக்கண்ணாடி (சிறுவர் கதை)
நம்பிக்கையோடு நிம்மதியை நாடும் யாழ்ப்பாணம் (1994 இல் யாழ்ப்பாணத்தில் எனது நேரடி அனுபவம்)
கல்யாணம் முடித்து பார் (நகைச்சுவை கதைகள்)
அப்பா (எனது அப்பா பற்றிய உணர்வு- இந்தியா ஜனாதிபதி அப்துல் கலாமின் பாராட்டு பெற்றது)

என சில நூல்களை வெளியிட்டு இருக்கின்றேன். இது தவிர நீங்கள் அறிந்திருந்த மேடை நாடகங்கள், வானொலி நாடகங்களிலும் நான் தோன்றி இருக்கின்றேன்.