Thursday, May 9, 2019

மீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாள ராகங்கள் ”

மீண்டும் மக்களை மகிழ்வில் ஆழ்த்திய “லண்டன் பூபாளராகங்கள் ”
லண்டனிலிருந்து உடுவை.எஸ்.தில்லைநடராசா
கல்விக்கு முக்கிய இடம் வழங்கும் யாழ்ப்பாண மாவட்டத்தில் நெல் வயல்களும் காய்கறித் தோட்டங்களும் செழிப்பாகக் காட்சியளிக்கும் கொம்மந்தறைக்கிராமத்தில் 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட பாடசாலை கம்பா்மலை வித்தியாலயம். முதன் முதலாக 1997 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி கம்பர்மலை வித்தியாலயத்தில் ”பூபாள ராகங்கள்” என்னும் தலைப்பில் முழுக்க முழுக்க தமிழா் பாரம்பாிய இசை,நடன நாடக நிகழ்வுகளை கல்லூாியின் பழைய மாணவா் சங்கத்தின் சாா்பில் ஒழுங்கமைத்து பெருந்திருவிழாவாக்கி கொம்மந்தறைக் கிராமமக்களையும் அயலூர்க் கிராம மக்களையும் மகிழ்வித்தாா்- விழா அமைப்பாளரான மகாலிங்கம்-சுதாகரன்.
1998 ஆம் ஆண்டில் சுதாகரன் லண்டனுக்குச் சென்றதும், அங்கே இயங்கிக் கொண்டிருந்த கொம்மந்தறை கம்பா்மலை பழைய மாணவா் சங்க ஐக்கிய இராச்சியக்கிளையினருடன் இணைந்து கொண்டு, பரவலாக ஆங்கிலமொழி பேசப்படும் லண்டன் மாநகரில் ”பூபாள ராகங்கள்” நிகழ்வை ஒழுங்கு செய்யப் பெருமுயற்சிகள் மேற் கொண்டாா். பழைய மாணவா்கள் பலா் ஒன்றாக இணைய- வா்த்தகப் பெருமக்கள் ஒத்துழைப்பு வழங்க- ஈழத்துக் கலைஞா்களையும் அறிஞா்களையும் ஒன்று சோ்த்து 2000 ஆம் ஆண்டு முதல் 2008 ஆம் ஆண்டு வரையும் ஒன்பது தடவைகள் ஒழுங்காக ஒவ்வொரு ஆண்டும் லண்டன் மாநகரில் ”பூபாள ராகங்கள்” நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. 
தொடா்ச்சியாக ஒன்பது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் மேலும் மேலும் சிறப்பாக மெருகேற்றி ”பூபாள ராகங்கள்” லண்டனில் ஒலிக்க ஆரம்பித்தது. அச்சு மற்றும் மின்னியல் ஊடகங்கள் ஊடாக ”பூபாள ராகங்கள்” தொடா்பான விடயங்களும் பலவர்ணப்படங்களும் தமிழ் மக்கள் வாழுமிடங்கள் எல்லாம் பரவத்தொடங்கியது.
தமிழ்மொழி மூலம் தமிழா் பாரம்பாியக்கலைகளைப் பரப்பிய கம்பா் மலை வித்தியாலய பழைய மாணவா்களின் ஐக்கியராச்சியக்கிளை ”தினக்குரல்” பத்திாிகை ஆதரவுடன், இலங்கையிலும் இலங்கைக்கு வெளியே புலம் சிதறி வாழும் தமிழ் எழுத்தாளா்கள் மத்தியிலும் உல களாவியரீதியில் சிறுகதைப்போட்டிகளை நடாத்தி, சிறந்த படைப்புகளை உருவாக்கியோருக்கு பெறுமதியான பரிசில்களை வழங்கியதோடு, பரிசில் பெற்ற சிறுகதைகளைத் தொகுத்து நூல்வடிவிலும் வெளியிட்டனா்.
”பூபாள ராகங்கள்” நிகழ்வாலும் பாிசில் பெற்ற சிறுகதைத்தொகுப்பு நூல்களாலும் தேடிய செல்வத்தால் கேடில் விழுச்செல்வமாகிய கல்விச் செல்வத்தை கிராம மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்த கம்பா்மலை வித்தியாலயத்தின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்து வந்ததுடன், முன்னணியில் திகழும் மாணவா்களுக்கும், மாணவ மணிகளை உருவாக்கிய ஆசிாியமணிகளுக்கும் விருதுகளும் பாிசில் களும் வழங்கிப் பாராட்டிக் கௌரவித்தனா்.
தீடிரென உள்நாட்டில் உச்சக்கட்டத்தை அடைந்த போராட்டத்தின் விளைவாக லண்டனிலும் பூபாளராகங்களைத் தொடரமுடியாத சிக்கல்கள் ஏற்பட்டன.
இருப்பினும் லண்டனில் வாழும் பழைய மாணவா்களின் அக்கறையும் ஆர்வமும் குறையவில்லை. எப்போது மீண்டும் பூபாளராகங்களை ஒலிக்கச் செய்யலாம் என்பது அவா்களின் எதிா்பாா்ப்பாக இருந்தது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளால் தடைப்பட்ட பூபாள ராகங்கள் மீண்டும் இவ்வாண்டு (2019) ஏப்ரில் மாதம் 27ஆம் திகதி லண்டன் எலியட் கட்டடத்தில் அமைந்துள்ள ஹரோ மண்டபத்தில் வெகு விமாிசையாகக் கொண்டாடப் பட்டது.
மாலை சரியாக ஐந்து மணிக்கு மண்டப வாசலிலிருந்து நாதஸ்வரம் தவில் ஆகிய மங்கல வாத்தியங்கள் ஒலிக்க விருந்தினர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். மங்கல விளக்கேற்றல், மௌன வணக்கம், தமிழ்மொழி வாழ்த்து-வித்தியாலய கீதத்தைத் தொடர்ந்து விழாஅமைப்பாளரும் சர்வதேச ஒருங்கிணைப்பாளரு மான மகாலிங்கம் சுதாகரன் வரவேற்புரை நிகழ்த்தினாா்;. வரவேற்புரையில் கல்லூரியின் வளர்ச்சியை விரித்துரைத்ததுடன் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையிலும் க.பொ.த.(சாதாரண தரப்) பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்று சாதனை நிகழ்த்தி பாடசாலைக்குப் பெருமை சேர்த்த மாணவர்களுக்கு நினைவுச்சின்னமும் பொற்கிழியும் வழங்கி மாணவா்;களின் திறமைகளை ஊக்குவிக்க மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் குறிப்பிட்டாா்;.
கம்பா்;மலை வித்தியாலய பழைய மாணவர் சங்க ஐக்கிய ராச்சியக் கிளைத்தலைவர் இராசரத்தினம் இரகுநாதன் தலைமையுரையில் ' கல்லூரி வைரவிழாவையும் சிறப்பாக் கொண்டாடியதைக் குறிப்பிட்டு, கல்லூரியின் வளர்ச்சிக்கு தொடர்ந்தும் பங்களிப்பு நல்கி வரும் அறிஞர்கள், கலைஞர்கள், வர்த்தகப்பெருமக்கள், ஊடகவியலாளர்கள் அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றி தெரிவித்தாா்;."
காலம் பல கடந்தாலும் வரலாற்று நினைவுகளைப் நிரந்தரப்பதிவுகளாக்கி ' லண்டன் ப+பாள ராகங்கள்-10" என்னும் சிறப்புமலரை நூலாசிரியா்; மகாலிங்கம் சுதாகரன் வெளியிட- நூலின் பிரதிகளை ப.சிவரூபன், இ.உதயானந்தன், டாக்டர்.சரவணகுமார் இராஜநாதன் ஆகியோா்; பெற்றுக் கொண்டனா்;.
இலக்கிய விமா்சகா் மாதவி சிவலீலன், எலிசபெத் மகாராணியின் வாழ்த்துச்செய்தி உட்பட லண்டன் இலங்கை அறிஞா்களின் ஆசிச்செய்திகள், வாழ்த்துச் செய்திகள், நல்ல கருவூலங்கள் நிறைந்த பெறுமதியான மலா் தொடா்பான மதிப்பீட்டுரை நிகழ்த்தியதை அடுத்து, நாட்டிய வித்தகி ராகினி ராஜகோபாலின் “ நாட்டியாலயா” மாணவிகளின் நடன நிகழ்ச்சிகள் சபையோரை மகிழ்வித்தன. வண்ண மயிலாக நடனமாடிய நா்த்தகிகளும் கிராமிய நடனத்தை நிகழ்த்திய மாணவியரும் பாா்வையாளரைப் பரவசப்படுத்தினா்.
ஐரோப்பாவின் முதல் தமிழ்ப் பெண் சுரத்தட்டு வாத்தியக் கலைஞா் களான இசைச்சுடா் துஷி-தனு சகோதாிகளும் நண்பா்களும் வாத்திய இசை வழங்க இடம்பெற்ற கானமழையும் மண்டபம் நிறைந்த மக்களை சந்தோஷத்தில் சஞ்சாிக்க வைத்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்த பொப்பிசைப்பிதா மருத்துவா் நித்தி. கனகரத்தினம், ஈழத்துச் சௌந்தரராஜன் எனப்புகழப்படும்
சங்கீதரத்தினம் நா.இரகுநாதன், கனடாவிலிருந்து வருகை தந்த சுப்பா் சிங்கா் விஜய் தொலைக்காட்சி புகழ் சாிகா நவநாதன் ஆகியோருடன் லண்டனில் வாழும் மஞ்சுளா சத்தியேந்திரன், நவீனா பிரணவன், அபிநயா மதனராஜா, டாக்டா் கிஷாந்தன் குகதாசன், டாக்டா் சரவணகுமாா் இராஜநாதன் மற்றும் சேயோன் இராஜநாதன் ஆகியோரும் இணைந்து கொண்டு இசைவெள்ளத்தால் மக்கள் உள்ளங்களை மகிழ்வில் ஆழ்த்தினா். கானமழையின் ஆரம்பத்தில் மஞ்சுளா சத்தியேந்திரனின் “புத்தம் புதுநாளில்” பாடல் எல்லோருக்கும் புத்துணா்ச்சி அளித்தது.
ரி.எம்.சௌந்தரராஜனோ என ஆச்சரியப்படத்தக்கதாக சங்கீத ரத்தினம் நா.இரகுநாதன், “நான் பாடும் பாடல்..”, “மதுரையில் பறந்த மீன்கொடியை….” பாடல்களைப்பாடி அனைவரையும் மெய்மறக்கச் செய்தாா். தொடா்ந்து ரகுநாதனுடன் சோ்ந்து பாடிய சாிகா நவநாதன், நவீனா பிரணவரூபன், அபிநயா மதனராஜா, மஞ்சுளா ஆகியோரும் நினைவில் நிலைத்து நிற்கும் பாடல்களான- “குயிலாக நான் இருந்தென்ன….குரலாக நீ வர வேண்டும்…”, “கண்ணில் வந்து மின்னல் போல..”, “சிந்து நதியின் மீது…”, ”காதலன் பொன்வீதியில் காதலன் பண்கபாடினான்”, ”மாசில நிலவே நம் காதலை மாநிலம் மகிழ்வுடன் கொண்டாடுதே ” போன்ற பழைய பாடல்களைப்பாடி அந்தநாள் ஆனந்தமான நினைவுகளை மீட்டுத் தந்தனா்.
கனடாவிலிருந்து வந்திருந்த இந்திய விஜய் தொலைக்காட்சி சுப்பா் சிங்கா் புகழ் இலங்கைப்பாடகி சாிகா நவநாதன் “ கண்ணம்மா கண்ணம்மா…” பாடலைப் பாடி அசத்த, நவீனா பிரணவரூபன் “ நின்னுக்கோாி..” பாடலைப்பாடி மெய்சிலிா்க்க வைத்தாா்.
70களில் சனரஞ்சகமான பொப்பிசைப் பாடல்களை எழுதி, இசையமைத்துப் பாடிய பொப்பிசைப்பிதா நித்தி கனகரத்தினம். பூபாளராகங்கள் நிகழ்வுக்காக அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்து,…
“ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே..”
” கள்ளுக்கடைப் போகாதே..உன் காலைப்பிடித்துக் கெஞ்சுகின்றேன்…”
” குடத்தனையிலே நாம குடியிருக்கிறது…கொடிகாமத்தில பாலு விக்கிறது..”
”சோழன் சோறு பொஙகட்டுமா” 
பாடல்களைப்பாடி இனைஞா்களின் உள்ளங்களை மட்டுமல்லாமல் வயதானவா்களின் உள்ளங்களையும் துள்ளி ஆட வைத்தாா்“
டாக்டா் சந்தோஷ் ராஜநாதன் மகன் சேயோனுடன் “அத்தின் தோம்” பாடலைப்பாடி பரவசப்படுத்த- சாிகா நவநாதனும் டாக்டா் திஷாந்தன் குகதாசனும் சந்திரமுகி திரைப்பட பாடலான “ரா..ரா“” வைப்பாடி மேடையைக் கலகலப்பாக்கினாா்கள்.
அந்த அரபிக்கடலோரம், ஊா்வசி, சிக்குப்புக்கு ரெயிலே பாடல்களை வாத்திய இசையால் மாத்திரம் ஓசையெழுப்பி தமிழ்மொழி சரியாகத் தெரியாத ரசிகர்களுக்கும் விருந்து படைத்தனா்- கவினா- சுரேந்திரன்.
நாற்பது ஆண்டுகளாகத் தொடா்ந்து உலகின் பல பாகங்களில் நல்ல தரமான தமிழ் நாடகங்களை மேடையேற்றிய அவைக்காற்று கலைக்கழக பாலேந்திரா-ஆனந்தராணி குழுவினா் தமது குழுவினருடன் சிறந்த நாடகங்களின் சில பகுதிகளைத் தொகுத்து “நீண்ட ஒரு பயணத்தில்…” தலைப்பில் ஆற்றுகையை அளித்து நாடக ஆா்வலா்களை மகிழ்வித்தனா்.
மாத்தளையைப் பிறப்பிடமாகவும் – லண்டனை வாழிடமாகவும் கொண்ட சொலிசிட்டா் –எழுத்தாளா்-கலைஞா் – அரசியல் பிரமுகா் – சமூகசேவையாளா் செல்வா செல்வராஜாவுக்கு இலங்கைக் கல்வியமைச்சின் மேனாள் மேலதிகச் செயலாளா் உடுவை.எஸ். தில்லைநடராசா மூலம் வாழ்நாள் சாதனையாளா் விருது வழங்கிக்கௌரவித்தமையும், கம்பா்மலை வித்தியாலயக் காப்பா ளா்கள் சி.துரைராசா-திருமதி. இ.துரைராசா ஆகியோருக்கு “பூபாளராகங்கள் -10 ” விருதுகள் வழங்கிக் கௌரவித்தமையும் சிறப்பு நிகழ்வுகளாகும்.
அரச அமைச்சா் மாா்க் பீல்ட் பூபாள ராகங்கள் தொடா்பாக தொிவித்த செய்தியில், கடந்த பல வருடங்களாக ஐக்கிய ராச்சியத்துக்கு தமிழ்ச்சமூகம் பங்களிப்பு நல்கிவருவதைப்பாராட்டி, அற்புதமான மாலைப்பொழுதில் ஆனந்தமான பூபாள ராகங்கள் நிகழ்வை ஒழுங்கமைத்த கம்பா்மலைப் பழைய மாணவர் சங்கத்தை வாழ்த்தி சா்வதேச இணைப்பாளா் சுதாகரனின் பணிகளையும் பாராட்டினாா்.
இலங்கைக் கல்வி அமைச்சின் மேனாள் மேலதிகச் செயலாளா் உடுவை.எஸ்.தில்லைநடராசா மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளா் வல்வை.ந.அனந்தராஜ் ஆகியோரும் கலந்து சிறப்பித்த பூபாளராகங்கள் நிகழ்வை ஆனந்தராணி பாலேந்திரா ஆதவன் தொலைக்காட்சி அறிவிப்பாளா் எஸ்.கே.குணா ஆகியோா் சுவையாகத் தொகுத்து வழங்கினாா்கள்.
ஆரம்பநிகழ்வுகளை ஒருமணி நேரம் ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியில் உலகம் முழுவதும் உள்ளோா் பாா்க்கத்தக்கதாக நேரலையில் ஒளிபரப்பியதும் குறிப்பிடத்தக்கது.
Image may contain: Vella Varathan, smiling, standing and eyeglasses


Image may contain: 5 people
Image may contain: Vella Varathan, smiling, standing and eyeglassesImage may contain: 7 people, including Nagamuttu Rakunathan, people standing, wedding and outdoorImage may contain: 3 people, including Arumugam Vishnukumar and Vella Varathan, people on stage and indoorImage may contain: 18 people, including Ragini Rajagopal, S.K. Guna, Kanagaratnam Balendra, Arumugam Vishnukumar, Mathavy Shivaleelan and Vella Varathan, people smiling, people standing and indoor

Friday, February 19, 2016

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது....

                      உடுவை.தில்லைநடராஜா


யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறையின் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில் உடுவை தில்லைநடராஜாவை தஞ்சாவூர் பல்கலைக் கழக துணைவேந்தர். க.பாஸ்கரன் கெளரவிப்பதையும், ஆய்வடங்கல் நூலை மாநாட்டுத் தலைவர்.பேராசிரியர். மா.வேதநாதன் தில்லைநடராஜாவுக்கு வழங்குவதையும் நிகழ்வில் இடம்பெற்ற சிவநடனத்தையும் சிதம்பரத்திலிருந்து வருகை தந்திருந்த பிரதம குருக்கள் சகிதம் அதிதிகள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது....
                      உடுவை.தில்லைநடராஜா

உலகத்தில் பல்வேறு இனத்தவர் பல்வேறு சமயங்களை பின்பற்றி வெவ்வேறு கடவுள்களையும் வழி படுகின்ற போது, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக  நம்புகின்றனர். இவ்வாறு கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயங்களிலும் நம்பிகை வளர ஆரம்பித்ததாக தெரிவித்தார் உடுவை தில்லைநடராஜா.

யாழ்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்து நாகரிகத்துறையின் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநேகமாக எல்லோரது அனுபவங்களும் அவரவருக்கு ஏற்படுகின்ற போது,வித்தியாசப்படும். ஆயினும் கடவுள் இருப்பதை நம்பி சமயங்களில் நம்பிக்கை  வைத்து சமயச் சடங்குகளைப் பின்பற்றி ஒழுக்க விழுமியங்களுக்கு இணங்க வாழ்கின்றனர். இதில் என் அனுபவத்தினூடாக கூறுவதாயின் நான் கடவுளின் மேல் நல்ல நம்பிக்கை வைத்து முழுமையாக முயற்சிகளை மேற்கொள்ளும் போது நினைத்தவை நிறைவேறுகின்றது. சிறு வயது முதல் ஒழுங்காக கோவிலுக்குப் போவேன். நாயன்மார்கள் ஆன்மீகப் பெரியார்கள் நிகழ்த்திய அற்புதங்களைக்  கேட்டேன். வாசித்தேன். நம்பினேன். 1990 களின் ஆரம்பத்தில் வவுனியா அரச அதிபராகக் கடமையாற்றிய போது வசதியான உத்தியோக வதிவிடம், வாகன சுகம், சேவை செய்ய சேவகர் பலர், அதிகார பலம், நிதி வளம் என் எல்லாம் இருந்த போது வேலைப்பளுவினால் நேரத்தை ஒழுங்கமைத்து கடவுளை வழிபடுவதைக் குறைத்துக் கொண்டேன். சில சமயங்களில் கோவிலுக்குப் போவதில்லை.

 மூன்று ஆண்டுகளுக்குப் பின் கிளிநொச்சிக்கு  அரச அதிபராக மாற்றம் பெற்றேன். எந்த விதமான வசதிகளும் அங்கு இல்லை. போராட்டம் நடைபெற்ற காலம்.  அங்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடமையாற்றிய போது இடைவிடாது கடவுளை வழிபாடு செய்தேன். அந்த நேரத்தில் கடவுளை வழிபட வேண்டிய மனத்தேவையும் ஏற்பட்டது.

நேரத்தை ஒழுங்கமைத்துக் கொண்டு ஒழுங்காக கோவிலுக்குப் போனேன். மூன்று வருட பிரார்த்தனைக்கும் வழிபாட்டுக்கும் பலன் கிடைத்தது  என நம்புகின்றேன். அதன் பயனாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக நியமனம் கிடைத்தது. இதுவே கோயில்களுக்கும் செல்லவும் கடமையாகியது. அதற்கு அரச வாகனம் தந்தனர். கதிர்காமம் போன்ற வெளி இடங்களுக்குச் செல்லும் போது தங்குமிட வசதியும் , ஆலய பூஜைகளின் போது முன்னணியில் இருக்கக் கூடிய வாய்ப்பு என்று எல்லாம் அனுபவித்தேன். தொடர் நம்பிக்கையும் இடைவிடா முயற்சியும் பல பதவி உயர்வுகளையும் வசதிகளையும் தந்தது. ஒரு பகுதியாக இலங்கைக்கு வரும் சகல திரைப் படங்களையும் பார்க்க வேண்டும். தமிழ் நூல்களை வாசிக்க வேண்டுமென்பதும் கடமையாகியது. அதற்கு அரசாங்கத்தால் பணமும் தந்தனர். மொத்தத்தில் இறை நம்பிகையாலும் முயற்சியாலும் இன்று வரை  உளநலம் , உடல் சுகம், ஆத்மபலம் உள்ளவனாக வாழ்கின்றேன் என்பதை கூறுவதில் பெருமையடைகின்றேன்.

இன்று சமூகம் குழப்ப மன நிலையிலுள்ளது. மாணவர்கள் பல்வேறு காரணங்களால் குழப்பப் பட்டுக் கொண்டு உள்ளனர். மது, போதை பாவனை, வன்முறை என இளைஞர்களின் செயல் நடத்தைகளும் சமூகத்தைப் பாதிக்கச் செய்கின்றன. இவற்றைக் கட்டுப் படுத்த சட்டம் தான் முன் வர வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு மனிதர்களும் தம்மையும் தம்மனங்களையும் ஒரு நிலைப்படுத்தும் சிந்தனைக் காரியங்களில் ஈடுபடல் வேண்டும். ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள்,பஜனைகள்மக்களின் மனங்களை லயிக்கக் கூடியவை. அந்த வழிகளை ஒவ்வொரு சமூகத்தவனும் கடைப் பிடிப்பானாயின் மனநெருக்கடி நிலையினைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில் நாம் எப்போதும் இறைபக்தியுடன் இருப்போமானால் தீயசக்திகள் எம்மைச் சூழாது. நாமும் சமூகத்திற்கு மாறும் மன நிலையின்றி சிறந்த பிரஜைகளாக வாழ இறை தரிசனம் வழி காட்டும் என்றார்.
( ப.தர்மினி) 
  நன்றி- வீரகேசரி..16 பெப்பிரவரி 2016

Monday, August 18, 2014

"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் -"உடுவை.எஸ்.தில்லைநடராஜா

"போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும்"

(27-07-2014 யாழ்பாணம் இலங்கைவேந்தன் கலைக் கல்லூரியில் வேதநாயகம் தபேந்திரன் எழுதிய “யாழ்பாணத்து நினைவுகள் –பாகம்-01” நூல் வெளியீட்டு விழாவில் உடுவை.எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )
கிளிநொச்சி செயலகத்தில் கடமையாற்றும் சமூக சேவை உத்தியோகத்தரான திருமிகு வேதநாயகம் தபேந்திரன் கடந்த பல மாதங்களாக இலங்கையின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான தினக்குரலில் அன்றைய யாழ்பாணம் எப்படியிருந்தது ? அங்கு வாழ்ந்த மக்கள் எப்படியிருந்தார்கள் ? கல்வி பொருளாதாரம் விவசாயம் ஆகியவற்றின் போக்கு எப்படிச் சென்றது ? எனத்  தொடர்ந்து எழுதிவருகிறார்  –அவற்றில் முப்பது எழுத்தாக்கங்கள்  நூல் வடிவம் பெற்று வெளியிடப்படும் இந்நிகழ்வுக்கு கல்விச் சமூகத்தின் உயர்மட்டத்தினர் –தமிழறிஞர்கள் உட்பட இவரது மேலதிகாரிகள் மற்றும் சக உத்தியோகத்தர்களும் சமூகமளித்திருப்பது மகிழ்வுக்குரியதாகவும் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டார்களுக்கும் உற்சாகமளிப்பதாகவும் உள்ளது  

கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களாக யாழ்ப்பாண மக்களின் வாழ்வியலைச் சிறந்த முறையில் பத்திரிகைகளில் பதிவு செய்த வேதநாயகம் தபேந்திரனின் பணி பாராட்டுக்குரியது . நான் அரச சேவையில் இணைந்த காலப்பகுதியில் பிறந்த தபேந்திரன் 1985 இல் ஈழநாடு பத்திரிகையில் இந்திராகாந்தி பற்றி எழுதிய கவிதை இவரது கன்னி முயற்சிகளில் ஒன்றாக விளங்கியதோடு பலரது பாராட்டையும் பெற்றது ஏனைய எழுத்தாளர்களிடம் இல்லாத சிறப்பு தபேந்திரனிடம் காணப்படுகிறது இவர் ஆரம்ப காலத்தில் மாணவர்களுக்காக பொது அறிவு நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார்.

கடந்த ஆண்டு “பூத்திடும் பனந்தோப்பு” என்ற  அருமையான நூலொன்றை எழுதி வெளியிட்டிருந்தார் அந்த நூலுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்ததால் இரண்டாவது பதிப்பும் வெளி வந்தது
“யாழ்ப்பாண நினைவுகள் “என்ற நூல் போர்காலச்சுழலில் யாழ்ப்பாண மக்களின் வாழ்வியல் சோகங்களை நாளைய சந்ததிக்கும் எடுத்துச் சொல்லும் ஆவணப் பதிவாக அமைகின்றது. யாழ்.மக்களின் வாழ்வியலில் கடந்த காலங்களில் இடம் பெற்ற மங்கல ,அமங்கல நிகழ்வுகள் ,சந்தைகள் ,தட்டிவான் போக்குவரத்து ,கொம்படி ஊரியான் பாதை ,கிளாலிப்பயணம் மற்றும் பணச் சடங்கு போன்ற பல்வேறு அம்சங்களையும் இந்நூல் படம் பிடித்துக் காட்டுகின்றது.

யாழ்பாண மாவட்டத்துக்கென –யாழ்ப்பாண  மக்களுக்கென விசேடமான பண்பாடு பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வரும் பழக்கவழக்கங்கள் வீடு வளவுகளிலும் அண்டை அயலிலும் கிடைக்கும் மூலிகைகள் வேர் ஆகியவற்றை பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்வுக்கு வழி காட்டும்  மருத்துவம் எல்லாமே தனித்துவமானதாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

யாழ்ப்பாண மாம்பழம் –தோலகட்டி நெல்லிரசம் –பருத்தித்துறை வடை என   ஒவ்வொரு ஊரையும் ஒவ்வொரு பொருட்களுடன் சேர்த்து தென்னிலங்கையில் பொருட்கள் சந்தைப் படுத்தப்பட்டதை நாமறிவோம். நல்ல ருசியான பழங்களுக்கு யாழ்ப்பாண  மண்மட்டுமல்ல...கமக்காரர் கையாண்ட முறைகளும் காரணமே. சிறிதளவு நிலமானாலும் ஒரு மாங்கன்றை வைக்க முன் மாமரத்தின் வகையைப் பற்றி ---அதன்  பரம்பரை பற்றி பார்ப்பார்கள். தின்ன வேலி மரக்கன்று என்றால் அதுவும்...மாங்கன்று ஒட்டு மாங்கன்று என்று தெரிந்து வாங்கி  நாட்டிய பின் சொந்தப் பிள்ளைகளைப் போல் பாராமரிப்பார்கள்.

வாழைக்குலை மரத்தில் இருக்கும்போது இடைப்பழம் பழுத்தபின் தான் குலையை வெட்டிய நாட்களும் நினைவுக்கு வருகிறது . மண்வெட்டியில் கூட யாழ்ப்பாண மண்வெட்டி வித்தியாசமானது; வயல் தோட்ட வேலைகளுக்கு வசதியானது

பனை மரத்தை முழுமையாகப் பயன்படுத்தி வளமாக வாழ்ந்த இனம் . வீடு வேயவும் வேலி அடைக்கவும் பயன்படுத்திய பனையோலை அடுத்த வருடம் இயற்கைப் பசளையாக தோட்டத்துக்குச் செல்லும். அப்போது கூடச் சொல்வார்கள் – “பனையோலையை பசளையாகப் பயன் படுத்தும்போது வேறும் இரண்டு நன்மைகள் கிடைக்கின்றன. ஒன்று -நிலத்தின் கீழ் இருந்து முளைத்து வரும் களைகளின் வளர்ச்சியை தடுக்கும்; மற்றது -பயிர்களுக்கு ஊற்றும் தண்ணீர் உடனேயே நிலத்தின் அடிப்பகுதிக்குச் செல்ல விடாமல்  நிலத்தின் மேல் பகுதியில் தாங்கி வைத்திருப்பதால் பயிர்கள் நீரை உறிஞ்சக் கூடியதாகவும் இருக்கும்”
நேர்மையாக உழைப்பதற்கு வெட்கப்படாதவர்கள் – கிராமத்து வீதிகளால் நடந்து செல்லும்போது மாட்டுச்சாணம் கண்டால் கைகளால் எடுத்துச் சென்று வீட்டில் சேகரித்து –தோட்டத்துக்கு பசளையாக்கி விடுவார்கள். அரிசியில் இருக்கும் குறுணியைக் குப்பையில் கொட்டாமல் அதற்காகவே கோழி வளர்ப்பார்கள். சாப்பிட்டபின் கைகழுவும் இடத்தில் வாழைமரம் வைத்து வாழ்வை வளப்படுத்துவார்கள்

இன்று செல்லிடத் தொலைபேசியில் MIS CALL இருந்தால் –அழைத்தவர் யார் –என்ன விடயம் என்று செய்தி பரிமாற்றம் தேடுவது போல –அந்த நாட்களில் யாழ்பாணத்தில் தேடிப்போவோர் வீட்டில் இல்லாவிட்டால் வீட்டுப்  படலையில் பசுமையான இலைகளுடன் கூடிய கம்பை செருகி விடுவார்கள். வீடு திரும்பியதும் அதைப் பார்வையிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் தகவலைத் தெரிந்து கொள்வார்கள்;செய்திப் பரிமாற்றம் செய்யத் தெரிந்தவர்கள்.

 DOOR CLOSER இணைக்கப்பட்ட கதவுகள் தானாகவே சாத்தப்படுவதுபோல, தானாகவே, வேலிகளில் தானாகவே  சாத்திக் கொள்ளும் சங்கடப்படலையை யாழ்பாணத்து வேலிகளில் காணலாம். தாங்கள் வளர்க்கும் ஆட்டுக்குட்டி வேலியால் அடுத்த வீட்டுக்கு சென்று சேதம் விளைவிக்கூடாது என்பதற்காக A ஏ என்ற ஆங்கில எழுத்து வடிவில் பனைமட்டையை தடையாகக் கட்டி ஆட்டிகுட்டியின் கழுத்தில் மாட்டி  விடுவார்கள்.

விறகடுப்பில்  மண்சட்டியில்  கீரை வகை மர வள்ளிக்கறி எனச் சுவைத்த எங்கள் உணவு , ஊரில் பார்த்து மகிழ்ந்த கோவில் திருவிழா- படித்த  பள்ளிக்கூடம், பாவித்த பழைய சைக்கிள் வண்டிகளை வாங்க விற்க  என ஒரு சைக்கிள் சந்தி ..இப்படியாக  எல்லாம் இன்பம் தந்தன.
...தயாரிப்பாளர்களின் உத்தரவுக்காலதைக் (GUARANTEE PERI0D) கடந்தும் யாழ்ப்பாணத்தவருடன் சீவியம் நடாத்திய A 40 ரகக் கார் –றலி சைக்கிள் – இப்படியாக எல்லாவற்றிலும் ஒருவகைச் சுகம் .. மகிழ்வு நிறைவு திருப்பதி என வாழ்ந்த சமூகம்

உரையை நிறைவு செய்யுமுன் இரண்டு செய்திகள்:-

இன்று வெளியிடப்படும் நூலின் முதல் பிரதியை பெறுவதற்காகவே நூலாசிரியரின் அண்ணா திருமிகு கோ.வேல்நாதன்,  அண்ணி திருமதி .வேல்நாதன் ஆகியோர் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து வருகை தந்துள்ளதாக அறிய முடிந்தது. புலம் சிதறியவர்கள் உறவையும் நட்பையும் வைத்து நூலாக்க முயற்சிகளுக்கு உதவ முன் வருவது கண்டு வணக்கத்துடன் பணிவான நன்றிகளைத் தெரிவித்து, பாராட்டி மகிழ்வதுடன் இவர்களைப்போல் வெளிநாடுகளில் வாழ்வோர் வசதிகள் வாய்ப்புகளைப் பொறுத்து எமது படைப்பாளிகளுக்கு ஆதரவும் உதவியும்  நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

சுவிஸ் என்றதும் பன்னிரண்டு வருடங்களுக்கு முன் பூலோகத்தின் சொர்க்கம் என்று சொல்லப்படும் சுவிஸ் நாட்டில் இருந்த சில நாட்கள் நினைவுக்கு வருகிறது. எங்கு பார்த்தாலும் அழகு! அழகு! கொள்ளை அழகு!!.

எங்கள் வீதிகள் சிலவற்றில் காலணியுடன் நடக்கவே தயக்கம். சுவிஸ் வீதிகளில் விரிப்புகள் இன்றி தூங்கக் கூடிய அளவுக்கு சுத்தமாக தூய்மையாக இருந்தன என்று சொல்வதை விட மனம் கூசாமல் சாப்பாட்டை வைத்து சாப்பிடக் கூடிய அளவுக்கு சொக்கலட் வாசம் வீசும் சுவிஸ் வீதிகள்  இருந்தன என்றாலும் பொருந்தும்.

அந்த சொர்காபுரியிலிருந்து புறப்படுவதற்கு முதல் நாள் மாலையில் ஒரு கூட்டத்தில் பேசினேன் –“ கடந்த சில நாட்களாக சுவிஸில் என்னை உபசரித்த நண்பர்களுக்கு உள்ளம் நிறைந்த நன்றிகள். நாளை மாலை சூரிச் சிலிருந்து கிளம்பும்  விமானம் என்னையும் சுமந்து செல்லும். மறு நாள் எனது சொந்த மண்ணில் ....அந்த மணல் ஒழுங்கைகளில் வெறும் காலுடன் நடப்பேன்

நான் சிறு வயதில் பட்டம் பறக்க விட்ட வல்லைவெளி- பந்தடித்து விளையாடிய  பாலசிங்கம் வீடு- போர்த்தேங்காய் அடித்த உடுப்பிட்டி  வீரபத்திரகோவில்- கிளித்தட்டு மறித்த  கிணற்றடி ...” தொடர்ந்து பேச முடியவில்லை. மண்டபத்திலிருந்த நண்பர்கள் மேடைக்கு வந்து என்னைக் கட்டிப்பிடித்து கண்கலங்கினார்கள்- “ அண்ணா ..நீங்க சொந்த மண்ணுக்குப் போறீங்க ...எங்களால் போக முடியாமல் இருக்கே ..” நானும் அழுதேன். இது தான் யாழ்பாணத்து நினைவுகள் !

அடுத்து ஒரு செய்தி என்பதை விட அன்பான வேண்டுகோள் என்று சொல்வோமா-
பாடசாலைகளில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கும் ஆக்கபூர்வமான பண்பாட்டை வளர்க்க வேண்டும் புத்தகங்களை வாங்கும் பணம் வீண் செலவல்ல அது கல்விக்கான முதலீடாகும்.

பாடசாலைகள் அதிகமுள்ள மாவட்டம் யாழ்பாணம் இங்குள்ள பாடசாலைகளில் இடம்பெறும் பரிசளிப்பு விழாக்களில் பெறுமதிமிக்க நூல்களைப் பரிசாக வழங்க அதிபர்கள் முன் வர வேண்டும் நான் மாணவனாக இருந்த காலத்தில் எனது பாடசாலையில் நடைபெற்ற போட்டியொன்றில் வெற்றியீட்டிய போது “பார்த்தீபன் கனவு “என்ற நாவலைப் பரிசாகத் தந்தார்கள் .அந்த நூலை நான் மட்டுமன்றி எனது வீட்டில் உள்ள உறவினர்கள் ,அயலவர்கள் ,நண்பர்கள் என அனைவரும் விருப்பத்துடன் படித்துப்பயனடைந்தோம் .

புத்தகங்களை மாணவர்களுக்குப் பரிசாக வழங்கும் பண்பாட்டை வளர்ப்பதன் மூலம் அறிவுள்ள சமுதாயத்தை நாம் உருவாக்க முடியும்.இதன் மூலம் புதிய எழுத்தாளர் தோன்றுவார்கள் அண்மைக் காலத்தில் இளைய தலைமுறையினரிடையே வாசிக்கும் வழக்கம் அருகி வருகின்றது இதன் மூலம் இந்தக் கருத்தும் மாறும் நிலை ஏற்படும்.

நாளைய சமுதாயத்தை நல்லதொரு சமுதாயமாக் காண்பதற்காக போட்டிகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு சிறந்த புத்தகங்களை பரிசாக வழங்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.