Friday, February 19, 2016

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது.... உடுவை.தில்லைநடராஜா

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது....

                      உடுவை.தில்லைநடராஜா


யாழ்ப்பாண பல்கலைக் கழக இந்து நாகரிகத் துறையின் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில் உடுவை தில்லைநடராஜாவை தஞ்சாவூர் பல்கலைக் கழக துணைவேந்தர். க.பாஸ்கரன் கெளரவிப்பதையும், ஆய்வடங்கல் நூலை மாநாட்டுத் தலைவர்.பேராசிரியர். மா.வேதநாதன் தில்லைநடராஜாவுக்கு வழங்குவதையும் நிகழ்வில் இடம்பெற்ற சிவநடனத்தையும் சிதம்பரத்திலிருந்து வருகை தந்திருந்த பிரதம குருக்கள் சகிதம் அதிதிகள் அமர்ந்திருப்பதையும் படங்களில் காணலாம்

கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயத்திலும் நம்பிகை வளரத்தொடங்கியது....
                      உடுவை.தில்லைநடராஜா

உலகத்தில் பல்வேறு இனத்தவர் பல்வேறு சமயங்களை பின்பற்றி வெவ்வேறு கடவுள்களையும் வழி படுகின்ற போது, மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று இருப்பதாக  நம்புகின்றனர். இவ்வாறு கடவுள் இருப்பதாக நம்பியே ஒவ்வொரு சமயங்களிலும் நம்பிகை வளர ஆரம்பித்ததாக தெரிவித்தார் உடுவை தில்லைநடராஜா.

யாழ்.பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற இந்து நாகரிகத்துறையின் முதலாவது சர்வதேச சைவ மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அநேகமாக எல்லோரது அனுபவங்களும் அவரவருக்கு ஏற்படுகின்ற போது,வித்தியாசப்படும். ஆயினும் கடவுள் இருப்பதை நம்பி சமயங்களில் நம்பிக்கை  வைத்து சமயச் சடங்குகளைப் பின்பற்றி ஒழுக்க விழுமியங்களுக்கு இணங்க வாழ்கின்றனர். இதில் என் அனுபவத்தினூடாக கூறுவதாயின் நான் கடவுளின் மேல் நல்ல நம்பிக்கை வைத்து முழுமையாக முயற்சிகளை மேற்கொள்ளும் போது நினைத்தவை நிறைவேறுகின்றது. சிறு வயது முதல் ஒழுங்காக கோவிலுக்குப் போவேன். நாயன்மார்கள் ஆன்மீகப் பெரியார்கள் நிகழ்த்திய அற்புதங்களைக்  கேட்டேன். வாசித்தேன். நம்பினேன். 1990 களின் ஆரம்பத்தில் வவுனியா அரச அதிபராகக் கடமையாற்றிய போது வசதியான உத்தியோக வதிவிடம், வாகன சுகம், சேவை செய்ய சேவகர் பலர், அதிகார பலம், நிதி வளம் என் எல்லாம் இருந்த போது வேலைப்பளுவினால் நேரத்தை ஒழுங்கமைத்து கடவுளை வழிபடுவதைக் குறைத்துக் கொண்டேன். சில சமயங்களில் கோவிலுக்குப் போவதில்லை.

 மூன்று ஆண்டுகளுக்குப் பின் கிளிநொச்சிக்கு  அரச அதிபராக மாற்றம் பெற்றேன். எந்த விதமான வசதிகளும் அங்கு இல்லை. போராட்டம் நடைபெற்ற காலம்.  அங்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடமையாற்றிய போது இடைவிடாது கடவுளை வழிபாடு செய்தேன். அந்த நேரத்தில் கடவுளை வழிபட வேண்டிய மனத்தேவையும் ஏற்பட்டது.

நேரத்தை ஒழுங்கமைத்துக் கொண்டு ஒழுங்காக கோவிலுக்குப் போனேன். மூன்று வருட பிரார்த்தனைக்கும் வழிபாட்டுக்கும் பலன் கிடைத்தது  என நம்புகின்றேன். அதன் பயனாக இந்து கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளராக நியமனம் கிடைத்தது. இதுவே கோயில்களுக்கும் செல்லவும் கடமையாகியது. அதற்கு அரச வாகனம் தந்தனர். கதிர்காமம் போன்ற வெளி இடங்களுக்குச் செல்லும் போது தங்குமிட வசதியும் , ஆலய பூஜைகளின் போது முன்னணியில் இருக்கக் கூடிய வாய்ப்பு என்று எல்லாம் அனுபவித்தேன். தொடர் நம்பிக்கையும் இடைவிடா முயற்சியும் பல பதவி உயர்வுகளையும் வசதிகளையும் தந்தது. ஒரு பகுதியாக இலங்கைக்கு வரும் சகல திரைப் படங்களையும் பார்க்க வேண்டும். தமிழ் நூல்களை வாசிக்க வேண்டுமென்பதும் கடமையாகியது. அதற்கு அரசாங்கத்தால் பணமும் தந்தனர். மொத்தத்தில் இறை நம்பிகையாலும் முயற்சியாலும் இன்று வரை  உளநலம் , உடல் சுகம், ஆத்மபலம் உள்ளவனாக வாழ்கின்றேன் என்பதை கூறுவதில் பெருமையடைகின்றேன்.

இன்று சமூகம் குழப்ப மன நிலையிலுள்ளது. மாணவர்கள் பல்வேறு காரணங்களால் குழப்பப் பட்டுக் கொண்டு உள்ளனர். மது, போதை பாவனை, வன்முறை என இளைஞர்களின் செயல் நடத்தைகளும் சமூகத்தைப் பாதிக்கச் செய்கின்றன. இவற்றைக் கட்டுப் படுத்த சட்டம் தான் முன் வர வேண்டும் என்றில்லை. ஒவ்வொரு மனிதர்களும் தம்மையும் தம்மனங்களையும் ஒரு நிலைப்படுத்தும் சிந்தனைக் காரியங்களில் ஈடுபடல் வேண்டும். ஆலய வழிபாடுகள், திருவிழாக்கள்,பஜனைகள்மக்களின் மனங்களை லயிக்கக் கூடியவை. அந்த வழிகளை ஒவ்வொரு சமூகத்தவனும் கடைப் பிடிப்பானாயின் மனநெருக்கடி நிலையினைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

அந்த வகையில் நாம் எப்போதும் இறைபக்தியுடன் இருப்போமானால் தீயசக்திகள் எம்மைச் சூழாது. நாமும் சமூகத்திற்கு மாறும் மன நிலையின்றி சிறந்த பிரஜைகளாக வாழ இறை தரிசனம் வழி காட்டும் என்றார்.
( ப.தர்மினி) 
  நன்றி- வீரகேசரி..16 பெப்பிரவரி 2016

No comments: