Wednesday, November 27, 2013

அஸ்மின் எழுதிய "பாம்புகள் குளிக்கும் நதி " கவிதை நூல் வெளியீட்டில் ஆற்றிய உரை

எனது ''பாம்புகள் குளிக்கும் நதி'' நூல் வெளியீட்டு விழாவின்போது கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், எழுத்தாளர் உடுவை தில்லை நடராசா அவர்கள் ஆற்றிய உரை...

இப்போதெல்லாம் தினமும் எங்காவது ஓர் இடத்தில் நூல் வெளியீடு .அதுவும் கவிதை நூல்கள் அதிகம். இன்றும் கூட இளம் கவிஞன் அஸ்மினின் “பாம்புகள் குளிக்கும் நதி “ கவிதை நூல் வெளியீடு வெகு சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது . வழமையான நூல் வெளியீடு போல இல்லாமல் குளிருட்டிய மண்டபம் நிறைய மகிழ்ச்சியான ஆர்வலர்களுடன் பெறுமதியும் கனதியும் இணைந்த கவிதை நூல் வெளியீட்டின் ஒவ்வொரு அம்சமும் வித்தியாசமானதாகவும் சிறப்பானதாகவும் அமைத்திருப்பது பாராட்டுக்கு உரித்தாகும் .

பொன்னாடைகள் பூமாலைகள் புகழ்மாலைகள் என்றில்லாமல் நூலைப் பற் றியும் நூலா சிரியர் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்படும் அதே வேளை பல முக்கியமான தகவல்கள் பல்லூடக வழி தெளிவாக திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கப் பட்டுள்ளது. திரைப்படங்களில் இடம் பெற்ற கவிஞரின் பாடல்களோடு மலேசியாவில் அவரது புலமையையும் திறமையையும் பாராட்டிய அவையையும் நாங்கள் தரிசிக்க முடிந்தது

நெடுந்தூரமிருந்து வருகை தந்த வாசகர் வட்டத்தை வைத்தே நண்பர் அஸ்மினின் நட்பின் வீச்சை எடை போடலாம் 

அழகான அளவான நல்ல நல்ல சொற்களைத் தெரிந்தெடுத்து பொருளும் கருத்தும் சேரத்தக்கதாக அமைத்து விட்டால் அது கவிதை .இசையோடு பா டத்தக்கதாக அமைத்து விட்டால் அது பாடல் .திரைப்படத்துக்கு ஏற்றபடி அமைத்து விட்டால் திரைப்படப்பாடல்.
கவிதையோ பாடலோ எவ்வளவு தான் நன்றாக அமைந்து விட்டாலும் அது திரைப்படம் என்ற வாகனத்துகக்கூடாக பயணிக்கும்போது பலரை சென்றடைகின்றது.
இலங்கையில் சிலர் திரைப்படபாடல்களை எழுதினாலும் அது இலங்கைத் திரைப்படம் என்ற சிறிய வட்டத்துக்குள் –எமது வானொலி எமது தொ லைக்காட்சி என மட்டுப் படுத்தப்பட்டதால் பலரைச்சென்று சேரவில்லை என்பது என கருத்து .இருப்பினும் அஸ்மின் பாடல் எழுதிய நேரம் நல்ல நேரம் .இந்திய திரைபடத்தில் இடம்பெற்று  இந்திய வானொலி –இந்திய தொலைக்காட்சி என பரவலாக ஒலி –ஒளி பரப்பப்பட்டதால் அது பல இடங்களையும் சென்று சேர்ந்திருக்கிறது
அகராதியிலோ அல்லது நாம் பேசுகின்ற .-எழுதுகின்ற மொழியிலோ உள்ள சொற்களை எல்லாம் சாதாரணமாகப் பலர் கருத்தில் கொள்வதில்லை -கவனிப்பதில்லை . கவனம்  எப்படியென்றால் ---
எங்கள் வீட்டுக்கு முன்னால் நல்ல வெள்ளை நிற மல்லிகைப் பந்தல். காலையில் பார்க்கும்போது பூக்கள் மிக அழகாக இருக்கின்றன. அதை  அடுத்த வீட்டுப்பெண் தனது மெல்லிய கைகளால் கொய்து மாலையாகக் கட்டும் போது  அந்த மல்லிகை மாலை மேலும் அழகாக இருக்கிறது. மாலையில் அந்த மாலையை அவள் கூந்தலில் சூடி  வரும் போது இன்னும் மின்னும்  வெகு அழகாக எடுப்பாக இருக்கிறது.

கவிஞர்களும் இப்படித்தான் இனிமையான சொற்களைத் தெரிந்தெடுத்து அழகாக சேர்த்து வார்த்தை ஜாலம் காட்டி மயங்க வைப்பார்கள் . பாரதி பாடினார் அல்லவா  ?

“சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
பிள்ளைக்கனியமுதே –கண்ணம்மா
பேசும் போற்சித்திரமே –
அள்ளியணைத்திடவே –என முன்னே  ஆடி வரும்  தேனே”
பாரதியார் உயிர் பிரிந்த பின் கூட இந்தப்பாட்டின் வரிகளிலிருந்து இரண்டு புதிய பாடல்கள் தோன்றி  இருப்பது போல  நான் உணர்வதுண்டு
ஒரு பாடல் –
பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திட வேண்டும் .அதை அள்ளிக் கையால் அணைத்திட வேண்டும்” .
மற்றது –“ ‘பேசும் பொற் சித்திரமே ‘ என்ற வரி மாறுகிறது –
 “ சித்திரம் பேசுதுதடி-என் சிந்தை மயங்குதடி “
இன்றைய விழா நாயகன் இளங்கவிஞன் அஸ்மின் எழுதிய “பாம்புகள் குளிக்கும் நதி” நூல் வெளியீடு பற்றிய தகவல்கள் சில நாட்களாக முகநூலில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அவற்றில்  ஒருவர் தெரிவித்த கருத்து –‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்பதற்குப் பதிலாக பாம்புகள் குளிக்கும் நதி என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும்  என்பதே அது
கவிஞனுக்குத்தான் எதனை என்னமாதிரி எழுதவேண்டும் என்பது சரியாகத் தெரியும்

.” சின்னஞ்சிறு கிளியே – “ பாடலில் குழந்தை நடந்து வருவதை பார்த்த கவிஞர் குழந்தையை ‘ஆடி வரும் தேனே ‘ என்று அழகாகப் பாடுகிறார் .சிறு குழந்தை நடக்க மாட்டாது –ஓடவும் முடியாது ஆடி ஆடித்தான் தள்ளாடி வரும் .அதனால்தான் பாரதியார் “ஆடி வரும் தேனே “ எனப்பாடுகின்றார் .

யாழ்பாணத்தில் நாங்கள் கீரிமலைக்கு நீந்தப் போவது வழக்கம்  இருந்தாலும் குளிக்கப்   போறோம் என்று தான் சொல்வோம் . அது போலத்தான் அஸ்மின் “பாம்புகள் குளிக்கும் நதியைக் கவிதையில் காண்பிக்கின்றார் 
.
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால்  தமிழ் இலக்கியங்களைச்சிறிது படித்து தமிழ் பாடல்கள் கேட்டு இளைஞனாக  இருந்த காலத்தில்தான் நேரம் போகாது. பிறகு ஒருத்தியை பார்த்த பின் நேரம் கட கட என ஓடத் தொடங்கியது உண்மையாகச் சொன்னால் நேரம் காணாது .நான் இப்படி நினைத்ததை கவிதை மாதிரி எழுதினேன் .பத்திரிகையில் வெளியானது கவியரங்கிலும்  ஏற்றி விட்டார்கள் பத்திரிகைக்காக ஒரு தரம் எழுதியதியதை கவியரங்கில் இரண்டு தரம் வாசித்தேன் இப்படி:-

“நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை
நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை –அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை – அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை “
என்றதும் –
போதும் இறங்குதில்லை’   “போதும் இறங்குங்கோ தில்லை’ –
என கவியரங்கில் இருந்து என்னை இறக்கிவிட்டார்கள்

இப்போது ஒரு திரைப்படப்பாடல் அடிக்கடி ஒலிக்கிறது
பாடல் இதுதான்
 “ பூக்கள் பூக்கும் தருணம் “ பாடலில்
‘நேற்று வரை நேரம் போக வில்லை –உனதருகே
நேரம் போதவில்லை ‘
பாடல் கவித்துவத்துடன் இசையோடு ஓசையும் சேர்ந்து அமைத்தால் செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் தரும்  அது காலமெலாம் நிலைத்திருக்கும்

சிறு வயதில் யாழ் திறந்தவெளியரங்கில் பார்த்து மகிழ்ந்த நாடகம்தான் ‘கண்டி அரசன் ‘ அந்த இசை நாடகத்தில் ஒரிரு  வரிகள்-

 “ மாட்டாள் என்றவள் சொன்னாளா ? -சொன்னாள்  ஐயா சொன்னாள்”
பின்னர் அது போன்ற பாடல் ஒன்றை திரைப்படத்திலும் ரசித்தேன்

“அவளா சொன்னாள் –இருக்காது  அப்படி இருக்கவும் கூடாது  !”-

 என்ற வசனம் பாடல் வரிகளாகி சௌந்தரராஜன் குரலில் பாடலாக ஒலிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைவழங்க சிவாஜி கணேசன் நடிக்க அந்த நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்கிறது

பாடல் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என எம். ஜி. ஆர். கண்ணதாசன்- வாலி போன்றோருக்கு சொல்வாரம் .பாடல் வரிகளுக்கு பல மெட்டுகள் போட்டு ஒலிப்பதிவு செய்து கொடுப்பார்களாம். எம். ஜி .ஆர் .எல்லாவற்றையும் பலமுறை கேட்டு ஒன்றை தெரிவு செய்த பின்னர் இசைத்தட்டாக படம் திரைக்கு வருவதற்கு முன்னரே பாடல் பரவலாக்கப்  பட்டுவிடும் . அப்படி ஒரு பாடல் “ தூங்காதே தம்பி தூங்காதே” ரேடியோவில் தூங்காதே தம்பி தூங்காதே பாடல் கேட்டு எப்போது ‘நாடோடி மன்னன் ‘ படம் வரும் என யோசித்துக்கொண்டே பாடசாலைப் புத்தகங்களை மேசையில் விரித்து வைத்திருப்பேன்., அம்மா யோசிப்பா ‘பொடியன் கடுமையாக படிக்கிறான்- தூங்காமல்- நித்திரை கொள்ளாமல் படிக்கிறான்’

இது போல அந்த நாட்களில் பிரபலமான இன்னும் சில  பாடல்கள் :-

“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும் “
“ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து “
“நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தாங்க “
எத்தனையோ வருடங்களுக்கு முந்திய பாடல் என்றாலும் இப்போதும் கேட்கலாம் போல இருக்கிறது
முதல் முதலாக நடந்த விடயங்களை மறக்க முடியாது  அதுவும் அன்போடு கிடைத்தால் மறக்கவே  முடியாது
பள்ளிக்கூட காலத்தில் வீட்டில் கஷ்டம் அம்மா சோறு தருவா .சில வேளை வெறும் சோறு கறி  இருக்காது உப்புத்தண்ணி தெளித்து அம்மா அதை பக்குவமாக குழைத்து தருவா அந்த சோறு நல்ல ருசி . அன்பையும் பாசத்தையும் குழைத்துத்தருவா . நல்ல ருசி

இன்று பல ஆடம்பர ஹோட்டலில் பல வகை  வகையான கறிகளோடு சாப்பிட்டாலும் அம்மா தந்த உப்புசோற்றுக்கு அவற்றை ஒப்பிட முடியாது. அது தான் அம்மாவின் அன்புகையாலை குழைத்துத் தந்த பாசமும் அன்பும்
என்னைப் பொறுத்த அளவில் அஸ்மினுக்கும் அவரது முதல் திரைப்படப்பாடல் மறக்க முடியாமல் இருக்கும்

எம். ஜி. ஆரின்  ரிக் ஷா  காரன் படத்தில் ‘அழகிய தமிழ் மகள் இவள் என்ற பாடலை கனவுக் காட்சியாக சேர்த்திருந்தார்  படம் வெளியானதும் அவரை வானொலியில் பேட்டி கண்டார்கள்  பிடித்தமான பாடல் எது என்ற கேள்விக்கு எல்லாரும் ‘அழகிய தமிழ் மகள்’ என்ற பாடலை சொல்வார் என எதிர்பார்த்தார்கள் . ஆனால் எம் ஜி ஆர் தனக்கு பிடித்த பாடல் எம். கே. தியாகராஜ  பாகவதரின் ‘மன்மத லீலை ‘ பாடலைச்  சொன்னார் .
கால ஓட்டத்தில் ‘நடக்கும் என்பார் நடக்காது “ என்ற  பாடல்  அல்லது ‘குங்குமம் சிவப்பு கூந்தல் கறுப்பு “ போன்ற பாடல்கள் மறைந்துவிடும் .
ஆனால் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ‘ பாடல் –சீர்காழியின் குரலும் சிவாஜியின் நடிப்பும் மறக்கமுடியாது-நினைவில் இருக்கவே செய்யும்

அஸ்மினின் சில பாடல்களும் நினைவில் இருக்கவே செய்யும்

அஸ்மினிடம் இளமை –இனிமை –திறமை –புலமை எல்லாம் நிறையவே இருக்கிறது .எல்லாவற்றையும் சேர்த்து புதுமையான பாடல்கள் –கனிவான பாடல்கள் அறிவான பாடல்கள்  காலத்தால் அழியாத பாடல்கள் ஆக்கித் தர வேண்டும் எனக் கேட்டு , அவர் கவிதைகளால் பாடல்களால் சமூகம் பயனுற வாழ்த்துகின்றேன்