Wednesday, September 26, 2007

பால் மா (அப்பா தொடர்-11)

ஒரு தடவை அம்மாவுக்கு வருத்தம்.‘’நெஸ்பிறே’’ பால்மாவைக் கரைத்தேன். பால்மா கட்டி கட்டியாக மிதந்து கொண்டிருந்து.
அதைப் பக்குவமாகக் கரைக்க தந்தைதான் சொல்லிக் கொடுத்தார். கிளாஸில் முதலில் சீனியைப் போட்டு இரண்டையும் நன்கு கலக்கிய பின் சுடு தண்ணீர் ஊற்றிக் கலக்கினால் பால் கட்டிபடாது.

சுவையாக இருக்க வேண்டுமானால் இன்னொரு கிளாஸை எடுத்து சற்று உயரத்திலிருந்து மறு கிளாஸ்க்கு ஊற்ற வேண்டும்.
இரண்டு தரம் ஆற்றினால் சூடு குறைந்து சுவை பெருகுமாம். காற்றுத் தேநீருடன் சேருந்து விடுமாம். அதுதான் கடையில் பருகும் தேநீர் சிலவேளையில் சுவையாக இருக்கிறதோ?

அப்பா வருவார்..........

ok.....ok...


சாதாரண மனிதனான எனக்கும் பலவீனங்களுக்கு மத்தியில் சிறிது பலமும் இருக்கிறது.ஓரளவுக்கு எனது பலவீனங்கள் எனக்குத்தெரிந்தாலும்- எனது பலவீனங்கள் என்னவென்று மற்றவர்களுக்குத்தான் நன்கு தெரியும். பலம்…படிப்பேன் - படிப்பேன்--மற்றவர்களைப்படித்துக் கொண்டேயிருப்பேன்.

பள்ளிகூட வாழ்வில் படித்ததால் பரீட்சையில் சித்தி. வேலை கிடைத்தது. வேலை கிடைத்தபின் கிடைத்த வேளைகளில் படித்தேன். உயர்வை அடைய முடிந்தது. கடமையைச் சரியாகப்படித்ததால் வெற்றியின் உச்சத்தைத் தொட முடிந்தது. ஆட்களைப் படிப்பதும் ஒரு பாடம். தொடரும் அந்தப்படிப்பைத் இடைவிடாது தொடர்வதால் தொடர்ந்தும் வேலையில் நிலைக்க முடிகிறது. தொல்லைகளில் தப்ப முடிகிறது.

அப்போது அரசஅலுவலகமொன்றில் கடன் வழங்கும் விடயங்களுக்குப் பொறுப்பான எழுதுவினைஞன் நான். எனது மேலாளாரான பிரதம எழுதுனர் தினமும் காலையில் வந்தவுடன் சிலரது கடன் விண்ணப்பங்களை என்னிடம் தந்து எப்படியாவது எல்லாவற்றையும் சரியாக்கி மதிய உணவுக்கு முன்பாகத்தரும்படி வற்புறுத்துவார். கடன் விண்ணப்பதாரியினை உறவினர் அல்லது நண்பர் என்று சொல்லுவார். நானும் எனது மேலாளர் என்பதால் விடயத்தை முடித்துக்கொடுப்பேன். உண்மையென்ன வென்றால் கடன் விடயத்தை நான் முடித்துக்கொடுக்க விண்ணப்பம் காவிவரும் மேலாளருக்கு சமிபாட்டு ஊக்கியும் மதிய உணவும் கிடைக்கும். ஒருநாள் காலை “ அண்ணனுக்கு கொஞ்சம் அவசரம.; இதை உடனடியாகச் செய்து தா “ என்றார். “அண்ணாவுக்கா அவசரம் அல்லது உங்களுக்கா அவசரம் “ –என மனதுக்குள் கேட்டபடி கடன் விண்ணப்பத்தை மற்றக்கடிதங்களுடன் கலந்து விட்டேன். நேரம் விரைவாக நகர்ந்து மத்தியானமாகிவிட்டது.

மேலாளர் சினத்துடன உரத்துக்கதைக்க- நானும் குரலை உயர்த்த முழுக்கந்தோரும் எங்களைச்சுற்றிக்கொண்டது.

“சரி- உங்கடை அண்ணாவின்ர பெயரைச் சொல்லுங்கோ. உடனை செய்து தாறன்” என்றதும் மேலாளர் தடுமாறினார்.

சந்தர்பத்தை பயன் படுத்தி ‘அண்ணாவின் பெயரைச் சொல்லச்சொல்லி’ வற்புறுத்தினேன்.

“மறந்து போனன்-வரட்டும் கேட்டுச்சொல்லுறன் “ என்றார்.

‘உவருக்கு கடன் எடுக்கிறவன் தின்னக்குடிக்க வாங்கிக்குடுக்கிறவன் எல்லாரும் சொந்தக்காரர். எல்லாருடைய பேரும் என்னெண்டு நினைவிலை வைச்சிருக்கிறது’-தமையனின்ரை பேரையும் மறந்து போனான் போலை..’ இது மற்றவர்களின் அவதானம். அவர் பிறகு தொந்தரவு தரயில்லை.

இரண்டு வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் சக கலைஞர்களுடன் சகஜமாகப் பழகுவார்கள். ஒருவர் நேரடியாகவே விடயத்துக்கு வருவார்- ‘ஒரு பத்து ரூபா தா’—காசில்லை எனப்பதில் சொன்னால்-‘காசில்லையா…அப்ப ஒரு ஐந்து ரூபா தா’


-2-


மற்றவர் ஒரு இரகசியம் என்றபடி காதுக்கு கிட்ட வருவார்-‘ஒரு பகிடி சொல்லுறன்-சிரிக்கக் கூடாது. ஒருதருக்கும் சொல்லக் கூடாது. வவுச்சர் எடுத்து பத்து ரூபா தா’ என்பார். ஏப்படிச்சிரிக்க முடியும்.

ஒருநாள் இந்த தயாரிப்பாளர்களுடன் கதைத்துக்கொண்டிருந்த போது சற்று தொலைவில் வானொலிநிலையத்தலைவர் வருவதை அவதானித்து விரைந்து அவரருகே சென்று தொடர்பில்லாமல் இரண்டொரு கதைகளைச்சொல்லிவிட்டு மீண்டும் தயாரிப்பாளர் பக்கம் வந்தேன். “ அவருக்கு முந்தியே என்னைத்தெரியும். இப்ப பழைய கதைகளை நினைப்பூட்டிப்போட்டு வாறன் “ என்றேன். அதன் பிறகு தயாரிப்பாளர்கள் காசு கேட்பதில்லை. காதுக்குள் இரகசியம் சொல்வதில்லை.

மன்னாரில் கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய போது சங்குப்பிட்டியிலிருந்து கேரதீவு செல்லும் பஸ்ஸில் நிறைய பிரையாணிகள். ஆசனத்தில் அமர்ந்திருந்த என்னருகே நின்றவர் சிரித்துக்கொண்டே என்னிடம் கதை கொடுத்தார்.


அவர்- ‘நீங்கள் கச்சேரியிலையோ வேலை’
நான்- ‘இல்லை-கூட்டுறவு கந்தோரிலை’
அவர்-‘ ஆர் கூட்டுறவு ஆணையாளர்’
நான்-‘தில்லைநடராசா’
அவர்-‘அ.அவரா. அவரை நல்லாகத்தெரியும். நான் என்ன சொன்னாலும் செய்வார்’
நான்-‘அவரை என்னெண்டு உங்களுக்குத்தெரியும்”
அவர்-‘நாங்கள் ஒண்டாகப்படிச்சனாங்கள்’
நான்-‘நான் தான் கூட்டுறவு உதவி ஆணையாளர் தில்லைநடராசா. நான் உங்களோடை படிக்கயில்லை’
என்னோடு படித்ததாக எனக்கு கதை சொல்லும் ஒருவர்;
நான் படித்தது—“பஸ்ஸிலை சீற் பிடிக்க எப்பிடியெல்லாம் கதை விடுறாங்கள்’

1989ல் வடகிழக்கு மாகாணசபையில் நானும் ஒரு திணைக்களத்தலைவர். இன்னொரு திணைக்களத்தலைவராக எல்லா இடமும் ஓடித்தோற்றுப்போனவர் ஒருவர் என்னைத் தனது நண்பனாக்கிக்கொண்டார். தனக்கு மட்டுமே திறமையும் தகுதியும் இருப்பதாகவும் மற்றவர்கள் பந்தம் பிடித்து பதவிகள் பெற்றதாகவும் குறைகள் சொல்லித்தரிவார். அவரிடம் எச்சரிக்கையாக பழக எண்ணி எனது தகுதிகளையும் குறைத்தே அவரிடம் தெரிவித்தேன். இருந்தாலும் அவர் எல்லோரிலும் குறைகண்டு அவற்றைப்பற்றியே சொல்லிக்கொண்டு திரிவார்.


திடீரென என்னை பதில் செயலாளராக ஆளுநர் நியமனம் செய்தபின் எல்லோரிடமும் குறைகாணும் பேர்வழி என்னை அணுகி தனது பதவி உயர்வுக்கு நான் உதவ வேண்டினார். நாளாக நாளாக வேண்டுகோள் வற்புறுத்தலாகி உபத்திரவமாக வளர்ந்தது பின்னர் தினம் என்னைத்திட்டும் மொட்டைக்கடிதங்களாக ஆளுநரின் அஞ்சல் பெட்டியை நிறைத்தன. ஆளுநர் நட்புரிமையுடன் என்னையழைத்து மொட்டைக்கடிதங்களைக்காட்டினார்.சூத்திரதாரியைக்காண்பதில் எனக்கு சிரமமிருக்கவில்லை.


இனி இப்படியான கடிதங்கள் வராது என ஆளுநரிடம் தெரிவித்த பின் நான் ஊகித்த மொட்டைக்கடித தயாரிப்பாளருடன் வேறு இருவரையும் அழைத்து- ‘நல்ல முறையில் சாத்தியக்கூற்றறிக்கை தயாரிக்கும் ஒருவரை ஆளுநர் திணைக்களத்தலைவராக நியமிக்க விரும்புறார். ஒரு கிழமைக்குள் தயாரித்து ஆளுநர் ஏற்றுக்கொண்டால் அவர் திணைக்களத் தலைவர்’ என்றேன். மொட்டைக்கடிதங்கள் நிறுத்தப்பட்ட இரகசியத்தை ஆளுநர் அறிந்து அவரை எச்சரித்ததாக தகவல்.

கொழும்பில் எனது கடமைக்கு பெற்றோலில் இயங்கும் கார். கந்தோரில் கடமையாற்றும் மற்றவர்கள் நீண்ட தூரம் ஓடித்திரிய டீசலில் ஓடும் ஜீப். டீசல் வாகனம் சொகுசு குறைந்தாலும் செலவு குறைவு. ஜீப் சாரதி கதாநாயக நடிகர் மாதிரி வடிவு-வயது குறைவு.கார் சாரதி வில்லன் மாதிரி- பயங்கர உருவம்.

எனக்குக் கட்டளையிடும் பெண்அதிகாரியிடமும் ஒரு கார். இருந்தாலும் வாரஇறுதியில் எனது டீசல் ஜீப்பில் உல்லாசம் செல்வது பெற்றோல் செலவைக் குறைப்பதற்காக என நம்பினேன்.

ஒருவருக்கும் சொல்லாமல் சாரதிகளின் வாகனங்களை மாற்றியபின் சனிக்கிழமை காலை பெண்அதிகாரியை ஏற்றிச்செல்லச்சென்ற வாகனச்சாரதியின் வில்லன் தோற்றத்தால் என் தொலைபேசி ஏசியது. ‘ என்ன தில்லை. ரௌடி மாதிரி ஒரு ட்ரைவரை அனுப்பியிருக்கிறியள். நான் பெம்பிளை. அதுவும் தூரப்பயணம்’

நான் அமைதியாகச்சொன்னது- ‘மடம் டீசல் வாகனம் எண்டால் இவர் தான் ட்ரைவர். மற்ற ட்ரைவர் தான் வேணுமெண்டால் பெற்றோல் காரைத்தாறன்.’

அதற்குபின்னர் வாகன வேண்டுகோளுமில்லை-சாரதிக்கு கட்டளையுமில்லை.

இவரை உங்களுகுத் தெரியும்- என்னிடமில்லாத கைத்தொலைபேசி நம்பரைத் தரச் சொல்லி ஒரே கரைச்சல். சிலநேரம் வீட்டிலுள்ளவர்களிடம் தொடர்பு கொண்டு நான் கைத்தொலைபேசி நம்பர் கொடுத்ததாகவும்- அது தொலைந்து போனதால் திரும்ப சொல்லச் சொல்லியும் கேட்பார். கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் சந்தித்த போது நம்பரைச் சொன்னால்தான் போகவிடுவன் என வழியை மறித்தார்.

ஒருவாறாகச்சமாளித்து நானும் ஒரு கைத்தொலைபேசி இலக்கம் சொல்ல இவர் எழுதிக்கொண்டார். சில நாட்களுக்குப்பின் மீண்டும் தமிழ்ச் சங்கத்தில் சந்தித்த போது-


‘என்னை ஏமாத்திப் போட்டியள். நீங்கள் தந்த நம்பர் எப்ப எடுத்தாலும் பிஸி பிஸி எண்டு சொல்லுது’ என்றார். நான் சிரித்தேன்-‘இப்ப ஒருக்கால் எடுங்கோவன்”

அவர் நம்பரை அழுத்திய பின் ’இப்பவும’ பிஸி’ என்றார்.

அவருடைய கைத்தொலைபேசி இலக்கத்தையே எனது இலக்கம் என நான் சொன்னது அவருக்குத்தெரியாது.

இவர் ஒரு vvip (வி வி ஐ பி). உயர்நிலையில் இருப்பதால் மற்றவர்களை மட்டம் தட்டுவார். கண்டபடி திட்டுவார். திட்டும் போது நாலுகால் உள்ளவற்றில் கதிரை மேசை தவிர மற்றச்சொற்களைத் தாராளமாகப்பயன்படுத்துவார். – மாடு-கழுதை-நாய்-பன்றி-

ஒரு தடவை நானும் மாட்டுப்பட்டனான்தான். பின்னர் அவரை நான் படித்தேன். அந்த முக்கிய புள்ளிக்கு ஆங்கிலம் சரியாகத்தெரியாது. தப்பித்தவறி என்னை பார்த்தால் எனக்குத்தெரிந்த ஆங்கிலத்தில் விளாசுவேன். அவரும் ஆங்கிலம் தெரிந்தமாதிரிக் காட்டிக்கொள்வார். ஓகே. ஓகே.

ஒரு தடவை ஆங்கிலத்தில் அவரது குறைகளைச்சொன்னேன். அப்போதும் அவர்

சொன்னது—


ஓகே. ஓகே.

Sunday, September 23, 2007

‘மினரல் வோட்டர்’’ (அப்பா தொடர்-10)

‘கட்டி!’ இப்படித்தான் அப்பா என்னை அழைப்பார்.அம்மாவை ‘ராசா’ என்று அழைப்பார். வீட்டிலும் கடையிலும் எல்லோருடனும் மரியாதையாக பழகுவார். ‘ எடேய்...... எடியே! வாடா..... போடா....... சொற்கள் ஊர் முழுவதும் கேட்டாலும் எங்கள் வீட்டு அகராதியில் இல்லை.

கோவில் திருவிழாவில் பகல் நேரத்தில் எல்லோரையும் தன்பால் கவரும் கடை ‘சர்பத் கடை’ சிவப்பு, ஒரேஞ், பச்சை, மஞ்சள், ஊதா, என பல வர்ணங்களில் சர்பத் கடையில் வைத்திருப்பார்கள், நிறமும் மணமும் கவரும், பாடசாலை மாணவனான நான் எப்படியோ காசைதிரட்டி கொண்டு அடுத்தடுத்து ஒவ்வொரு நிறங்களில் சர்பத் குடிப்பதை அப்பா கவனித்து விட்டார்.

அன்பாக அழைத்து ‘சர்பத் தயாரிப்பதற்கான மூலம் பொருட்கள் ஒன்றுதான் நிறத்தில் ஒன்றுமில்லை. ஏறக் குறைய எல்லாம் ஒரு வகையான சுவைதான். ஆனால் எல்லாவற்றிலும் இரசாயனப் பொருள இருக்கும். சுத்தமான தண்ணீர் தான், தாகத்தைப் போக்கும். உடம்புக்கும் விக்கினமில்லை’ என்றார்.

இன்று கூட பல விருந்துகளில் பல வகையான குளிர்பானங்கள் பரிமாறப்படும் போது எனக்கு விருப்பமானது ‘’மினரல் வோட்டரே’’!

அப்பா வருவார்...............

Saturday, September 22, 2007

‘’குடையைக் கண்டனீங்களோ?”


“குடையைக் கண்டனீங்களோ ?” –வழமை போல ஒவ்வொரு நாளும் காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து கடைக்குப் புறப்படும் போது இடம்பெறும் குடை தேடு படலம் தான்-
“குடையைக் கண்டனீங்களோ ?”

வீட்டுக்கும் கடைக்கும் இடைத்தூரம் அதிகமில்லை. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு மூன்று நிமிட நேர நடை அல்லது மூன்னூறு மீற்றர் தூரம். ஒவ்வொரு நாளும் சொல்லி வைத்தாற் போல ஆறு மணிக்குப் போகத்தான் வேணும்-தினசரிப்பேப்பர் எடுப்பதற்கு.

மழைபெய்யயில்லை..மழைக்குணமும் இல்லை. ஆறு மணிக்கு வெய்யில் அடிக்காதென்றும் தெரியும். ஆனாலும் ஒரு காரணத்தோடு தான் குடையோடு போறனான்.
சின்னஞ்சிறு பருவத்திலிருந்து நானும் குடையும்- குடையும் நானும் சேர்ந்தே இருந்திருக்கின்றோம். குடை என்னைப்பிரிந்திருந்தாலும் நான் குடையைப்பிரிந்ததில்லை.
அந்தநாட்களில்…ஐம்பதுகளில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்பில் எனக்குப்பிடித்தமான விளம்பரப்பாடல்களில் “மான் மார்க்குடைகள்- மழையோ வெய்யிலோ மான் மார்க்குடைகள்” பாடல் முதலிடம் அரை நூற்றாண்டுக்குப் பின்னும் அந்தப்பாடலை மறக்க முடியவில்லை.

அந்த நாட்களில் ஆண்கள் பாவிக்கும் குடை பெரிதாகவும் வளைந்த பிடி கொண்டதாகவும் இருக்கும்। பெண்கள் பாவிக்கும் லேடிஸ் குடை சிறிதாகவும் எடின்பரோ கோமகன்-எலிசபெத் மகாராணி படம் கண்ணாடிக்குள் வைக்கப்பட்ட பிடி கொண்டதாகவும் இருக்கும்। சிறுவர்களுக்கு மிகவும் சிறிய குடையும் இருந்தது. எல்லாக்குடைக்கும் கறுத்த நிற பருத்திநூலால் செய்யப்பட்ட துணி. கறுத்தநிற பருத்தித்துணி வெப்பத்தை கடத்தாது-
தலையைச்சூடாக்காது என ஆசிரியர் சொன்னதும் நினைவிலுண்டு. குடைக்கம்பியொன்றில் MADE IN ENGLAND என்று அச்சிடப்பெற்ற அட்டை இருக்கும். இங்கிலாந்தில் செய்யப் பட்ட குடையில் அந்த நாட்டு அரசர்- அரசிப்படத்தை வைப்பது தவறில்லை.

முன்பு லேடிஸ் குடையைக் கொண்டு போறதென்றால் எனக்குச்சரியான வெட்கம். இப்போது குடைகள் எல்லாம் கலர் மயம். கறுப்புக்குடை குறைவு. மடக்குக்குடை தான் அதிகம். ஆண் பெண் சிறுவர் என்ற வித்தியாசம் இல்லாமல் யாரும் எந்தக்குடையையும் பிடிக்கலாம். ஆனாலும் சிலர் ஆடைகளுக்குப் பொருத்தமான கலரிலை விதம் விதமான குடைகளும் வைத்திருக்கிறார்கள். குடை சிறிதாகவும் மடக்கத்தக்கதாகவும் இருப்பதால் ஆண்கள் காற்சட்டைப் பொக்கற்றுக்குள்ளும் பெண்கள் கைப்பைக்குள்ளும் குடையை மறைத்துக்கொண்டு போவது இரவல் கொடுப்பதற்குப் பயந்தல்ல- மறக்காமலிருப்பதற்காகவும் மற்றப்பிரச்சனைகள் வராமலிருப்பதற்காகவும் தான். மடக்குக் குடை வாங்குவதற்கு முதல் பல தடவை பல குடை தொலைத்த அனுபவம் நிறையவே உண்டு. குடை தொலைத்த அனுபவங்கள் மட்டுமல்ல....

ஒருநாள் காலையில் கந்தோருக்குப் போகும் வழியில் குடை தொலைந்து விட்டது. மத்தியானம் மழை பெய்ததால் சாப்பிடப் போவற்காக சக ஊழியரிடம்-“ குடையைக் கொஞ்சம் இரவல் தாறீங்களோ ?” எனக்கேட்ட போது- “ தம்பி கொஞ்சக்குடையைக் கொண்டு போனால் மழையிலை நல்லா நனைவியள். முழுக்குடையையும் கொண்டு போங்கோ. பிறகு திருப்பிக் கொண்டு வந்து தாங்கோ” என்றார்.

-2-

இன்னுமொரு மழை நாள். பஸ்ஸில் அதிக கூட்டம். சீற்றில் வலு குசாலாக் குந்தி இருந்து பயணம் செய்த எனது முதுகில் என்னருகே நின்றவரின் கையில் நீட்டிக்கொண்டிருந்த நீளக்குடைகாம்பு சாரதி போடும் ஒவ்வொரு தீடீர் பிரேக்குக்கும் ஒவ்வொரு குத்து. நியாயமாகப்பார்த்தால் திடீர் பிரேக் போடும் சாரதியோடு தான் சண்டை பிடிக்க வேணும். சக பிரையாணிகள் ஆதரவு தரமாட்டார்கள் என திடமாக நம்பியதால் கோபமாக குடையோடு நின்ற பிரையாணியைப்பார்த்தேன்.-“உங்கடை குடை நெடுக என்ரை முதுகிலை குத்துது. பொறுமைக்கும் எல்லை ஒரளவு இருக்கு”.

அவர் மிக நிதானமாச்சொன்னார்-“ சொறி. தம்பி இது என்ரை குடையில்லை. இரவல் வாங்கின குடை”.

அவரை நன்றாக உற்றுப்பார்த்த போது தான் அடையாளம் காண முடிந்தது. அவர் எனக்கொரு வகையில் தாத்தா முறை. எழுந்து எனது சீற்றைக் கொடுத்து விட்டு பக்கத்தில் நின்ற போது பஸ் நடத்துனர் ‘முன்னுக்குப் போ..முன்னுக்குப்போ’ என என்னை ஒரேயடியாக முன்னுக்குத்தள்ளி விட்டார். அவருக்கு வேணும்- நல்லாக வேணும்-

பஸ்ஸிலிருந்து யாரோ இறங்குவதற்காக மணியடிக்கும் சத்தம். பஸ் நிறுத்தினால் இறங்குவார் ஒருவருமில்லை. மீண்டும் மணியடிக்கும் சத்தம். பஸ் நின்றது. ஒருவரும் இறங்கவில்லை. இப்படி இரண்டு மூன்று தடவை. சாரதிக்குச்சரியான கோவம்- “நீ என்ன கொண்டக்டர் வேலை. நெடுக மணியடிக்கிறாங்கள். நிப்பாட்டினால் இறங்கிறாங்களில்லை.

பிறகு தான் என்ன நடந்தது எனத்தெரிந்தது- தாத்தாவின் கையிலிருந்த குடைத்தடி மணியடிக்கிற கட்டையிலை ஒவ்வொரு தடவையும் இடிக்க இடிக்க மணி அடிக்க அடிக்க சாரதிக்குக் கோபம் வரும் தானே ? என்னை தாத்தாவுக்குப் பக்கத்தில் நிற்க நடத்துநர் விட்டிருந்தால் சாரதியிடம் ஏச்சு வாங்கியிருக்க மாட்டார்.

முன்பு வீதிக்கு வீதி குடை திருத்திக் கட்டிக் கொடுப்பவர்களுடன் வீடு வீடாகச்சென்று குடை திருத்திக் கட்டிக்கொடுப்பவர்களும் இருந்தனர். கொழும்புக்கு நான் வந்த புதிதில் வாடகைக்கு அறை தந்த அம்மாச்சி வீட்டுக்கும் ஒரு குடை கட்டுறவர் வநதார். குடை கட்டி முடிய ஐந்து ரூபாவாவது கொடுக்க வேண்டி வரும் என அம்மாச்சி எதிர்பார்த்தார். ஆனால் குடை கட்டியவரோ ஒரு ரூபா போதும் ‘ என்றார்

அம்மாச்சிக்கு புளுகம் தாங்க முடியயில்லை.- “கொஞ்சம் இரு. பக்கத்து வீட்டிலையும் பழங்குடை கட்டக் கிடக்கெண்டு சொன்னவை” என்று புறப்பட்ட அம்மாச்சி அக்கம்பக்கத்து வீட்டாருடன் புளுகத்தைப்பகிர்ந்து பழையகுடைகளுடன் வீட்டுக்குத் திரும்பிய போது குடை கட்டுபவரும் இல்ல. பெறுமதியான பொருட்களும் இல்லை

இன்னுமொரு முறை குடை தொலைந்த போது – நடைபாதை வியாபாரி என்னை நட்பு பாராட்டி அழைத்தான்- “ யப்பான் குடை..சரியான மலிவு யப்பான் குடை”

குடையை வாங்கி வடிவாகப்பார்த்தேன். முந்திய காலக்குடைகளில் MADE IN ENGLAND என இருப்பது போல யப்பான் மொழி எழுத்துக்கள் இருந்தது. மாற்றிய பணமில்லாததால் குடை வியாபாரியிடம் ஐந்நூறு ரூபா கொடுத்து மிகுதி நானூறு வாங்க முதல் அவனைப் பொலிசார் பிடித்துக்கொண்டு சென்றனர்- குடைகளோடு சேர்த்து. மிகுதிப்பணத்தை வாங்கித்தரும் படி கேட்ட என்னையும் பொலிசார் நீதிமன்றம் கொண்டு சென்றனர் குடை வியாபாரியோடு சேர்த்து.


-3-

நீதிமன்றில் வழக்கு-‘ இலங்கையில் செய்த குடைகளை யப்பானில் செய்த குடைகள் என மக்களை ஏமாற்றினது குற்றம்’

யப்பான் மொழி தெரிந்தவர் நீதிமன்றுக்கு வரவழைக்கப்பட்டார். அவர் மொழிபெயர்த்துச் சொன்னார்-“ இக்குடை இலங்கையில் செய்யப்பட்டது “ என யப்பானிய மொழியில் எழுதப்பட்டிருக்கிறது. வழக்குத் தள்ளுபடி. இப்போதும் யப்பான் குடை போல பல பொருட்கள் நடைபாதையில்..

“என்ரை குடையைக் கண்டனீங்களோ ?”

“ஓ….குடை. கண்டறியாத குடை. இப்ப என்ன அடை மழையோ ? குடை பிடிக்க.”-இப்படி யார் அர்ச்சனை செய்வார்களென திருமணமானவர்களுக்குத்தெரியும். தினம் தினம் அர்ச்சனை வாங்கும் ஆசாமிக்கு ….

“என்ரை குடையைக் கண்டனீங்களோ ?” – பேப்பர் கடைக்குப் போற வழியில் ஒரு நாய். மிகவும் மெலிந்து கனத்தைக்கு போவதற்கு நாட்களை எண்ணும் நாய். அது என்னோடு சோலி சுரட்டுக்கு வரயில்லை. ஒருக்கால் நிமிர்ந்து பார்த்த போது நான் செருமி பயம் காட்டிப் போட்டேன். பிறகு பயமில்லை என நினைத்தேன்.

பேப்பர் கடைக்குப் பக்கத்திலுள்ள பாண் நல்ல ருசி. இடையிடை பாண் கடைக்குப் போய் வரும் போது தான் அந்த நாய் என்னைச் சோதனையிட வரும். நான் குரலை உயர்த்தி தமிழில் “ அடி “ என சொன்னதும் அந்த நாய் எனக்கு வழி விடும். அந்த நாய்க்கு தமிழ் மொழி தெரியுமென நினைக்கின்றேன்.

திடீர் திடீரென சோதனை நிலையங்கள் - அப்படியாக ஒரு சோதனை நிலையம் பேப்பர் கடைக்குப் போகும் வழியில் தோன்றி விட்டது. அடையாள அட்டை கைவசமுள்ள தால் அவர்களைப்பற்றிக் கவலையில்லை. எங்கிருந்தோ ஒரு நாய் அந்தச்சோதனை நிலையத்துக்கருகே நிரந்தர வசிவிடவாசியாகிவிட்டது. நாய்களிரண்டும் நல்ல சிநேகமாகியும் விட்டன.

“அடி” எனச்சொல்லு முன் வழி விட்ட பழைய நாய்க்கு இப்போது புது உற்சாகம். உர்க்க குரைத்துக்கொண்டு கடிக்க வாறதும் அந்த நாய் அதற்குப்பக்கத்துணையாகப் பாய்ந்து பாய்ந்து வாறதும் உங்களுக்கென்ன தெரியும் ? அது சரி…

“ என்ரை குடையைக் கண்டனீங்களோ ? “

Thursday, September 20, 2007

சில்லறைக்காசு (அப்பா தொடர் -9)


ஐம்பதுகளில் ஒரு சதம் இரண்டு சதம் போன்ற சில்லறைக் காசுகளுக்கும் பெறுமதி இருந்தது. ஒரு தடவை அப்பா பத்து ரூபா பெறுமதியான ஒரு சதம் இரண்டு சதம் அடங்கிய நாணயங்களை ஒரு சிறு அட்டைப் பெட்டியில் வைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். ஏதாவது உண்டியல் உடைத்தீங்களா? என்று உறவினர் கேலி செய்த போது பள்ளிக் கூட மாணவனாக இருந்த எனக்கும் ஏதோ போலத் தெரிந்தது. ஒரு பத்து ரூபா தாள் கொண்டு வந்திருந்தால் அம்மாவும் சந்தோசப்பட்டிருப்பா போலத் தோன்றியது. ஆனால் அப்பாவோ இதன் உண்மையையான பெறுமதி பத்து ரூபாவை விடப் பல மடங்கு. பெறுமதி என்பதை விடச் சில்லறையால் வரும் திருப்திக்கு அளவில்லை என்றார்.

அடுத்த நாள் தந்தையுடன் யாழ்ப்பாணத்திற்கு பஸ்சில் புறப்பட்டேன். தந்தையார் தந்த ஒரு ரூபாவை பஸ் கொண்டக்ரரிடம் கொடுத்து ஒன்றரை டிக்கட் வாங்கினேன். முழு டிக்கட் 55சதம் - அரை டிக்கட் 28 சதம். மிச்சக் காசு மிச்சக் காசு என்று பல முறை கத்தி அழாக்குறையாகக் கெஞ்சி 10 சதம் தான் கொண்டக்ரரிடமிருந்து வாங்க முடிந்தத. ஏழு சதம் கிடைக்கவேயில்லை. எனக்கோ சரியான கவலை.


‘கட்டி! மூன்று சதம் சில்லறையிருந்திருந்தால் ஏழு சதத்தை இழக்க வேண்டியிருக்காது. இதைதான் சில்லறையின் பெறுமதி அதிகம் என்றேன். சிறு இழப்புக் கூட இல்லாவிட்டால் அது திருப்திதானே என்றார். உண்மைதான் . இதனால் இப்போது கூட எப்போதும் வீட்டில் சில்லறைக் காசு வைத்திருப்பேன்.


அதனால் காலையில் பத்திரிகை. பாண் வாங்கும்போது கூட பிரச்சினையில்லை. சில்லறையில்லையென்று விற்பனையாளரிடம் பணத்தை இழக்கும் நெருக்கடியும் இல்லை.

அப்பா வருவார்........

Sunday, September 16, 2007

தும்மல் வந்தால் கவனம் (அப்பா தொடர்-08)ஒரிடத்திற்க்குப் போவதற்க்கு முன்பாக இட அமைவு பற்றியும் தெளிவான தகவல்களைப் பெற வேண்டுமென்று வற்புறுத்துவார்.தந்தையாரின் இந்த அறிவுரையைக் கடைப்பிடிக்கததால் இரண்டு முறை தடுமாறியிருக்கின்றன்.

ஒரு முறை வவுனியாவிலிருந்து வந்து கொண்டிருந்த போது இலங்கையில் தயாரன ‘’இதயராகம்” படத்தைப் பார்க்க வேண்டுமென்ற எண்ணத்துடன் விரைந்து வந்த போது வழியில் சிறிது தாமதம். இரவு ஏழு மணிக்கு தியேட்டருக்குள் நுழைந்து சில நிமிடங்கள் சென்ற பின்தான் வேறு ஒரு தியேட்டருக்கு மாறி வந்துவிட்டதையும் இதயராகம் படத்துக்கு பதிலாக ஏற்கனவே பார்த்த ‘’ஒளி விளக்கு’’ படம் ஒடிக் கொண்டிருப்பதையும் அறிய முடிந்தது.


பம்பலப்பிடடி இந்துக் கல்லுர்ரி மண்டபத்தில் எனது பழைய கல்லூரியான உடுப்பிடடி அமெரிக்கன் மிசன் கல்லூரியின் வருடாந்த பொது கூட்டம் நடப்பது வழக்கம். திகதியையும் நேரத்தையும் மட்டும் குறித்துக் கொண்டு வழக்கம் போல சென்ற பின்னர் தான் கூட்டம் நடை பெற்ற இடம் வேறோரிடம் என்பதைத் தெரிந்து கொண்டேன்.


சாப்பாட்டுக் கடையில் இளைஞரொருவர் இடையிடையே தும்மிக் கொண்டு மிளகாய் வெட்டும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்। இதனை பார்வையிட்ட தந்தை இருமல் - தும்மல் வருவது போலத் தோன்றும் போது ஆயுதங்களைப் பாவித்து எந்த வேலையையும் செய்யக் கூடாது. இருமல்- தும்மல் அடக்க முடியா விட்டால் கையில்லுள்ள ஆயுதங்களைத் தரையில் வைக்க வேண்டும் என்று சொல்லுவார். தந்தையின் சொல்லை, ‘சும்மா போங்கய்யா’ என்று எள்ளி நகையாடிக் கொண்டு இளைஞர் மிளகாய் வெட்டும் வேலையைத் தொடர்ந்தும் செய்தார். திடீரென்று ஒரு பெரிய தும்மல், மிளகாய் வெட்டிக் கொய்டிருந்த வலது கை இடது கை விரலை வெட்ட வலி பொறுக்காது கையிலிருந்து விழுந்த கத்தி அவர் காலையும் பதம் பார்த்தது.

இருமல், தும்மல் வரும்போது மட்டுமல்ல, தலைவலி, மயக்கம், உடல் அசதி இருக்கும் போது ஆயுதங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வதோடு, கண்ணாடியில் முகம் பார்த்தல், முகச்சவரம் செய்தல்
ஆகியவற்றையும் தவிர்த்துக் கொள்ள வேண்டுமென்பார்.

அப்பா வருவார்............
முன்னைய இடுகைகள் ‘’அப்பா''என்னும் வகைப்படுத்தலினுள்

Friday, September 14, 2007

பயணம் புறப்பட முன் (அப்பா தொடர் -07)


பொருட்களைப் பயன்படுத்த வேண்டும், சிந்தக் கூடாது என்று சொல்வார். பாடசாலை நாட்களில் பற்பசையில்லை.பற்பொடி தான் பாவனையில் இருந்தது. ஒருசிறு துகள் கூட வீணாகக் கூடாது என்பதற்காக முகப்பவுடர் பயன்படுத்திய பின் எறியும் சிறு தகரப் பேணியைத் துப்பரவாக்கி அதனுள் பற்பொடியைப் போட்டு வைக்கச் சொல்லுவார். மூடித் துவாரங்களுடாக வரும் பற்பொடியின் அளவு போதுமானதாக இருக்கும். அப்போது பற்பொடியின் விலை பத்துச் சதம் தான். ஆனாலும் அதையும் வீணாக்கன் கூடாது என்பதே தந்தையின் கொள்கை.

இப்போதுள்ளது போல் குமிழ்முனைப் பேனாவும், பிளாஸ்டிக் போத்தலும் இல்லாத காலம். எழுதுவதற்க்கு மையும் தலை அலங்காரத்துக்கு எண்ணையும் கொண்டு செல்லக் கண்ணாடிப் போத்தல் பயன்படுத்தப் பட்ட காலம். அதற்காக அளவில் சிறிய நன்கு மூடத்தக்க போத்தல்களை சிறிய அட்டைப் பெட்டியில் பழைய சீலைகளைச் சுற்றி வைக்கும் படி சொல்லித் தந்தார் அதனால் போத்தல் உடைந்து பொருள் பழுதாக வாய்ப்பில்லை.

வெளியே ஒரிடத்தில் தங்கியிருந்து புறப்படுவதற்கு முன்பாக எல்லாப் பொருட்களையும் மேசையில் அல்லது கட்டிலில் அடுக்கி வைத்துப் பின்னர் இவற்றைப் பையில் எடுக்க வேண்டும். குளியலறை, அலுமாரி போன்றவற்றில் பொருட்கள் ஏதாவது வைத்து விட்டோமா என்று சரி பார்க்க வேண்டுமென்றும் சொல்லுவார்அண்மையில் மிகமிக முக்கிய இடத்தில் இருக்கும் ஒரு பிரமுகர் அண்டைய நாட்டுக்கு மனைவியுடன் சென்று உத்தியோக பூர்வ விடயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது விமான நிலையம் வரை வந்து அவசரம் அவசரமாகத் தங்கியிருந்த ஹோட்டலுக்குத் திரும்பிச் சென்றதற்குக் காரணம் குறிக்கும் போது கழற்றி வைத்த சங்கிலியை எடுக்க மறந்ததேயாகும்.

அப்பர் வருவார்...............
முன்னையஇடுகைகள்''அப்பா’’ என்னும்வகைப்படுத்தலினுள்...

Thursday, September 13, 2007

சின்னச் சின்ன விசயங்கள்.(அப்பா தொடர் 6)

அரசாங்க வேலையில் சேர்ந்த பின் விடுதலையில் ஊருக்குச் சென்று மீண்டும் புறப்பட ஆயத்தமான போது, தந்தையார் பல் விளக்கும் தூரிகையையும் சவர அலகையும் கொண்டு வந்து தந்தார். அவை குளியலறையில் நான் எடுத்து வர மறந்த பொருட்கள். அவர் சொன்ன அறிவுரை

ஓரிடத்திற்கு புறப்படுவதற்கு முன்பாக –அந்த இடத்துக்குப் போய்ச் சேர்ந்து விட்டதாக கற்பனை செய்து என்ன செய்யப் போகின்றோம் என்பதை எண்ணித் தேவையான பொருட்களைப் பட்டியல் போட்டு அவற்றை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னார்.

பற்பசையிலிருந்து உத்தியோக பூர்வக் கூட்டத்துக்குத் தேவையான சகல பொருட்களையும் - அதாவது காலையில் எழுந்து பல் துலக்குதல், முகச்சவரம், குளியல், உத்தியோக உடை எனப் பட்டியல் போட்டு எடுத்து வைத்து விடுவேன். காலையில் எழுந்து சவர அலகு தேடித் திரியும் உத்தியோகத்தர்கள், கூட்டத்துக்கு முன்பாக கழுத்துப் பட்டி (டை) தேடும் உத்தியோகத்தர்கள் போன்றோரின் நிலை எனக்கு ஏற்படாததற்குக் காரணம் தந்தையின் வழிகாட்டுதலேயாகும். அது மட்டுமல்ல பிரயாணப்பையில் முகச்சவரம் செய்வதற்குரிய பிளேட்டைத் தீப்பெட்டிக்குள் வைக்க வேண்டும் என்பது போன்ற சின்னச் சின்ன விடயங்களைக் கூடச் சொல்லித் தந்ததை, ஒரு முறை நண்பர் ஒருவர் பிளேட் தேட பையில் கையை விட்டுத் துளாவி இரத்தம் சிந்தும் கையுடன் துடித்ததும், உடுப்புக்களில் இரத்தக் கறை படிந்ததும் நினைவுக்கு வர எப்படித் தந்தையாரால் சிறு விடயங்களையும் அவதானித்து அறிவுரை வழங்க முடிகிறது என ஆச்சரியப்பட்டிருகின்றேன்.
அப்பா வருவார்....
முன்னைய இடுகைகள் 'அப்பா' என்னும் வகைப்படுத்தலினுள்

Wednesday, September 12, 2007

இருட்டில் நடக்க முடியும் (அப்பா-05)

(அப்பா நூலின் தொடர்)
நான்காம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருந்த போது, தந்தையாருக்குக் கொதிக்கிற எண்ணெய் கண்ணில் தெறித்துக் காயங்களுடன் ஆஸ்பத்திரயில் இருக்கும் செய்தி அறிந்து அம்மாவுடன் சென்றேன்.

வழமையாகப் பெரிய பாத்திரமொன்றில் தேங்காய் எண்ணெயைச் சூடாக்கி பலகாரங்கள் செய்த பின், பாத்திரத்திலுள்ள தேங்காய் எண்ணெய்யை ஒரு தகரத்தில் ஊற்றிவிட்டு அடுத்த வேலைகளை ஆரம்பிப்பது வழக்கம்.


அன்றைய தினம் தவறுதலாகப் பலகாரங்களைப் பாத்திரத்தினுள் போட்டபோது கொதிக்கின்ற எண்ணெய் தெறித்து கண்களிளும் முகத்திலும் பட்டுவிட்டது. யாரும் கிட்ட வரவேண்டாம் என்று சொல்லிய தந்தை, பாத்திரத்தைக் தூக்கிச் சூடான எண்ணெயைத் தகரத்தில் ஊற்றி விட்டு எண்ணெய் பாத்திரத்தைக் கிணற்றடியில் வழமையாக வைக்கும் இடத்தில் வைத்து விட்டு நடந்ததைச் சொல்லி, மற்றவர்களின் துணையோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.

கொதி எண்ணெய் தெறித்து, பார்க்க முடியாத நிலையிலும்; தந்தையாரின் செயல் பலருக்கு வியப்பைக் கொடுத்தது. அவர் சொன்னார் ‘’அடுப்பிலிருந்து ஏழு அடி தள்ளி எண்ணெய் ஊற்றி வைக்க வேண்டிய தகரம், பின்னர் இடது புறம திரும்பி நாலு அடி நடக்க வாசல் -பின்னரும் இடது புறமாக நடக்க கிணற்றடி தூரம், திசை ஆகியவற்றைக் கவனித்தால் இருட்டிலும் நடக்க முடியும் என்பார். .
(அப்பா வருவார்.....
முன்னைய இடுகைகள்''அப்பா'' என்னும் வகைப்படுத்தலில்

குறைவான தொழில் (அப்பா – 04)

மட்டக்களப்பு கூட்டுறவு உதவி ஆணையாளராகக் கடமையாற்றிய போது, திறந்த வெளியரங்கில் காலை ஆறுமணிக்குக் கொடியேற்ற நிகழ்வுடன் சர்வதேச கூட்டுறவாளர் விழாவை ஆரம்பிப்பதாக ஒழுங்குகள் செய்யப்பட்டன.

திறந்த வெளியரங்குக் காவலாளிகள் இல்லாததால் காலை ஐந்து மணிக்குக் கொடிமரம், கயிறு இதர பொருட்கள் ஆகியவற்றை லொறியில் கொண்டு சென்றோம்.

ஆறுமணிக்கு சில நிமிடங்கள் இருக்கையில் பல உத்தியோகத்தர்கள், பொது மக்கள் வந்து விட்டனர். சிற்றூழியர் ஒருவரும் வரவில்லை. ஒவ்வொருவரது முகத்தையும் பாரத்தேன்.

ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்ததவரை – வராத சிற்றூழியரை இடைநிறுத்துவது. சேவையிலிருந்து விலக்குவது பற்றிக் கதைத்தார்கள். எனது நினைவு தந்தையார் வேலை செய்த சாப்பாட்டுக் கடையை நோக்கிச் சென்றது.

ஏதோ பிரச்சினை. இரண்டு நாட்கள் நகரச் சுத்திகரிப்பு தொழிலாளர் வரவில்லை. எச்சில் இலைத் தொட்டியில் நிரம்பியுள்ளது. மாற்று வழி இல்லாததால் கடையைப் பூட்டுவோம் என்றார் முதலாளி.

‘’தேவையில்லை’’ என்று சொன்ன சிங்காரம்பிள்ளை ஒரு பெரிய காட்போட் பெட்டியை எடுத்து வந்து இலைகளை அள்ளிப் பின்புறம் கொண்டு சென்றார். குழிவெட்டி அவற்றைப் புதைத்தார். முதலாளிக்கு மட்டுமல்ல – வழக்கமாக சாப்பிட வருபவர்களுக்கு ஆச்சரியமும் மகிழ்ச்சியும்.

சிங்காரத்தின் மகனல்லவா – தில்லை . கையிலிருந்த மணிகூட்டைக் கழற்றி ஒருவரிடம் கொடுத்துவிட்டு, அலவாங்கை எடுத்துக் கொண்டு நிலத்தில் குத்தினேன். எத்தனை பேர் சுற்றி வந்தார்கள் என்று தெரியாது. கணப் பொழுதில் கொடி மரங்கள் நாட்டப்பட்டுக் கடமைகள் முடிவடைந்தன. இச் சம்பவத்தின் பின் இக்கட்டான வேளைகளில்....

‘இது ஒரு குறைவான தொழில் - எப்படி செய்வது?’

‘அது பெரிய வேலை எப்படி செய்வது?’

என எண்ணுவதில்லை, முந்திக் கொள்வேன், விடயம் பூர்த்தியாகி விடும்.

இன்னுமொரு சம்பவம். தொலைபேசி உட்பட எதுவித நவீன சாதனங்களும் கிளிநொச்சிக் கச்சேரிக்குக கிடைக்கத 90களின் பிற்பகுதியில் கச்சேரி கடிதத்தலைப்பு செல்வாக்குள்ள அங்கீகரிக்கப்பட்ட சாதனமாகத் திகழ்ந்தது. முக்கியமான பொருட்களைக் கிளிநொச்சிக்குக் கொண்டு வரவும், கிளிநொச்சியிருந்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லவும் மாத்திரமன்றி கச்சேரிக் கடிதத்தலைப்பில் அரச அதிபரின் சிபார்சுடன் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நடமாடியோர் மீது கெடு பிடிகள் இல்லையென்று சொல்லலாம். . கடிதத்தலைப்பின் தேவை அதிகமாக இருந்தாலும் அவற்றைக் கொழும்பிலேயே அரச அச்சகக் கூட்டுதாபனம் மூலம் அச்சிட வேண்டிய நிலை . கூட்டுத்தாபன விநியோகப் பகுதி விமானப்படைத் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக அமைந்திருந்தால் வாகனத்தை நிறுத்தி வைக்க முடியவில்லை. 5000 கடிதத்தலைப்புகளைப் பொறுப்பேற்று கிளிநொச்சிக்கு கொண்டு செல்ல வேண்டும.;

முப்பது வருடங்களுக்கு முன்பாக கிளார்க்காக வேலை செய்த கொழும்பில் தவறுதலாகப் பென்சில் கீழே விழுந்தாலும் விழுந்த மறுகணமே எடுத்துக் கொடுப்பதற்க்கு பியோன் ஒடி வந்த சம்பவங்களைச் சுகமாக நினைத்துக் கொண்டு, சட்டைக் கொலரின் மத்தியில் தொங்கிக் கொணடிருந்த கழுத்து பட்டியைத் தூக்கி பின் புறமாகப் போட்டுவிட்டு இரு கைகளையும் நீட்டினேன். அவற்றின் மேல் தூக்கி வைக்கப்பட்ட 5000 கடிதத்தலைப்புகளையும் பிரதான வீதியொன்றினுடாக சுமந்து கொண்டு சுமார் 400யார் தூரம் நடந்து சென்று வாகனத்தில் ஏற்றினேன்.

உலகம் பழித்து ஒதுக்கும் வேலையானால் செய்யாமல் விடலாம். மற்றவற்றைச் செய்ய ஏன் வெட்கப்பட வேண்டும்.

Tuesday, September 11, 2007

ஒரு வடையும் ஐந்து மிளகாய் துண்டுகளும் (அப்பா- 03)

(அப்பா நூலின் தொடர்)
1961ம் ஆண்டு யாழ்ப்பாணச் சத்தியாக்கிரகத்தை அடுத்து இராணுவத்தினர் குவிக்கப்பட்ட நேரத்தில் - ஒரு விருந்துக்காக இரண்டாயிரம் உழுந்து வடைகள் தயாரிக்கும் பொறுப்பு தந்தையாரிடம் ஒப்படைக்கப்பட்டது. கூடவே ஒரு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.

நிபந்தனை இதுதான் - ஒவ்வொரு வடைக்குள்ளும் ஐந்து துண்டு மிளகாய் இருக்க வேண்டும்.

சாதாரணமான கடையில் மிளகாய்த் துண்டுகளை எண்ணி வடையில் வைத்துச் சுடுவதும், இராணுத்தினர் தொடர்பும் பிரச்சினை என்பதால் இந்த ஓடரை எடுத்துக் கொள்ள முதலாளி விரும்பவில்லை. ஆனால் தந்தையார் துணிந்து விட்டார்.

இரண்டாயிரம் வடையையும் வாங்கி செல்ல வந்த இராணுவ அதிகாரி ‘’ஒவ்வொரு வடையிலும் சரியாக ஐந்து மிளகாய்த் துண்டுகள்; இருக்குமா? எனக் கேட்டார்.


‘’ஒ.....அதெல்லாம் சரியாக இருக்கும்’’ என்று தந்தையார் பதிலளித்துதான் தாமதம். இராணுவ அதிகாரி வடையை மெதுவாக கிள்ளி மிளகாய் துண்டுகளை எண்ணிப் பார்த்து விட்டு கோபமாக “நாலு துண்டுகள் இருக்கு’’ என்றார்.

தந்தையார் சிறிதும் பதட்டப்படாமல், இரண்டொரு வடையில் நாலு துண்டுகள் வைத்தாக நினைவு. மற்றதெல்லாத்துக்கும் சரியாக ஐந்து துண்டு மிளகாய்;;’’ என்று சொல்லிக் கொண்டே ஒரு வடையை எடுத்து, மெதுவாக நுள்ளி மூன்று மிளகாய் துண்டுகளை அதிகாரியின் கையில் கொடுத்து, மிகுதி வடையைத் தமது வாயில் போட்டு ‘’அம்மா உறைக்குதே. நாலு ஆ....ஐந்து.....ஸ்.....’’என்று கணக்குக் காட்டினார். பணம் கொடுத்து முதலாளின் வயிற்றில் பால் வார்த்தார்.

‘’தொழிலைச் சரியாகச் செய்கிறோமென்றால் ஆமிக்கு மட்டுமில்லை – யாருக்குமே பயப்பிட வேண்டாம்’’ என்பது தந்தை கூறியது. போராட்டப் பிரதேசங்களில் பொறுப்பான வேலைகளைச் செய்யும் போதும் இராணுவத்தினருடன் உரையாடும் போதும் நினைவுக்கு வரும் அப்பேச்சு என்னைப் பொறுத்தளவில் தொழிலைச் சரியாகவே செய்கின்றேன்.
அப்பா வருவார்....
முன்னைய இடுகைகள் "அப்பா" என்ற வகைப்படுத்தலிலுள்...

Saturday, September 8, 2007

முன் ஆயத்தம் - (அப்பா 02 )

(அப்பா நூலின் தொடர்)

கல்லூரி நாட்களில் தந்தையாருடன் கடையில் தங்கியிருந்திருக்கிறேன். காலை ஐந்து மணிக்கு முன்பாகக் கடமைகளை ஆரம்பித்து விடுவார். சாதாரணமாக இரவு பத்து மணிவரை கடையில் வியாபாரம் நடைபெறும். அதன்பின் தந்தையார் தினசரிப் பத்திரிகைகள், சஞ்சிகைகள் போன்றவற்றை வாசிப்பார். யாராவது “பகல் பொழுது முழுவதும் வேலை செய்வதால் சிறிது நேரம் ஓய்வு எடுக்கக் கூடாதோ?” என்று கேட்டால் - ‘பகல் முழுவதும் வேலை செய்கிறேன். வாசிப்புத்தான் எனக்கு ஓய்வு’ என்பார். சாதாரணமாக அவர் வேலை செய்யும் வேளைகளில் கடையில் வேலை செய்வோர் மட்டுமல்ல – வேறு பல முதலாளிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பல தரத்தவர் அவருடன் உரையாடி நாட்டு நடப்புக்களைத் தெரிந்து கொள்வார்கள். தந்தையாரும் மற்றவர்களும் உரையாடும் போது தெரிந்து கொண்டவை பொது அறிவையும் விவேகத்தையும் என்னுள் உருவாக்கியது.

கல்யாணக் காலங்களில் விசேட பலகாரங்களை தயாரிக்கும் பொறுப்புத் தந்தையாருக்குக் கொடுக்கப்படும். வழமையான வேலைக்குப் பின்பே அதாவது இரவு பத்து மணிக்கு பின் விசேட வேலைகள் ஆரம்பமாகும். இடையில் மின்சாரம் தடைப்பட்டாலும் கடமை தொடர்ந்து நடைபெற வேண்டுமென்பதற்காக ‘பெற்றோல் மக்ஸ்’ – ‘அரிக்கன் லாம்பு’ என்பவை மட்டுமல்ல – பற்றறியுடன் கூடிய மின்விளக்கும் தயாராக வைத்திருப்பார். உணவுகளைத் தயாரிக்கும் போது எந்த இடையூறுகளாலும் சுவையும் தரமும் கெட்டுவிடக் கூடாது என்பார். அவரிடம் கற்ற பாடம்தான் கடமைகளைச் செய்யும் போது எந்தெந்த இடையூறுகள் தடைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்து மாற்று ஒழுங்குகள் பலவற்றை தயார் செய்தால் ஒன்றில்லா விட்டால் இன்னொன்று மூலம் நோக்கங்களை அடையக் கூடியதாயிருக்கும்.

குறிப்பாக வன்னியில் கிளிநொச்சி நகரில் போர் மேகங்கள் சூழ்ந்த போது பாதுகாப்பான பகுதிகளுக்கு அலுவலகங்களைக் கொண்டு சென்றதும் பெறுமதியான கோவைகள், கடிதங்கள், சாதனங்கள் சேதமின்றித் தக்க வைத்திருப்பதற்கும் முன்கூட்டியே மாற்று ஒழுங்குகளைத் தீர்மானித்துச் செயற்டுத்தியதுதான் காரணம்.

திடீரென இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையே முல்லைத்தீவில் ‘போர்’ பெரிதாக வெடித்த போது முக்கியமான சாதனங்களை கூட எடுக்க முடியாமற் போய் விட்டதாகத் தெரிந்து கொண்ட செய்தி என் மனதில் நன்றாகப் பதிந்திருந்தது.

1995 இல் கிளிநொச்சி அரச அதிபர் பதவியை ஏற்ற நாள் தொடக்கம் ஏற்படலாமென எதிர்பார்த்த எந்தவித அசம்பாவிதங்களுக்கும் முகம் கொடுக்க கிளிநொச்சி மாவட்ட அரச உத்தியோகத்தர்களைத் தயார்படுத்தி வைத்திருந்தேன். 1996 நடுப்பகுதியில் கிளிநொச்சி நகரில் போரினால் அவலங்கள் ஏற்படுவதற்கு முன்பாக மாற்று ஒழுங்குகளின் பிரகாரம் அரசாங்க அலுவலகங்கள் யாவும் அக்கராயன், ஸ்கந்தபுரம் பகுதிகளுக்கு அவசரம் அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டன. அதற்கு முன்பான கடிதங்கள் கோவைகள் சாதனங்கள் ஆகியவற்றைப் பகிரங்கப்படுத்தாமல் பாதுகாப்பாக எடுத்துச் சென்றதால் எந்தவொரு சாதனமும் தொலையவில்லை- சேதப்படுத்தப்படவில்லை.
அப்பா வருவார்...

முன்னைய இடுகைகள் 'அப்பா' என்னும் வகைப்படுத்தலிலுள்..

Friday, September 7, 2007

கவனமாய் பாருங்கோ குருவி வரும்!!

(அப்பா நூலின் தொடர் 01)
எனது ஆசிரியர்கள், மேலதிகாரிகள், நண்பர்கள் காட்டிய வழிகள் உயர்ந்த நிலையை பெற உதவினாலும் இன்னுமொருவர் படிப்பித்த பாடங்கள் நாளாந்த நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவுகின்றன.

அவர் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஐந்தாறு வயதில் இரண்டு மைல் தூரம் நடந்து சென்று தொழில் பார்த்து தினக் கூலியாக இரண்டு சதம் பெற்று, எட்டு வயதில் பெற்றோரையும் பிறந்த ஊரையும் விட்டு வெகு தொலைவுக்கு அப்பால் தொழில் தேடிக் கொண்டவர்.

சொந்த முயற்சியால் எழுத்துக் கூட்டிப் பத்திரிகை சஞ்சிகை வாசிப்பின் மூலம் பல விடயங்களைக் கிரகித்து நல்லவற்றையும் நல்லவையல்லாதவற்றையும் எடை போடத்தக்க தகமை பெற்றவரானார்.


அவர்-
திரு.சிங்காரம்பிள்ளை – எனது தந்தையார்
யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடையில்
‘’சமையல்’’ அவரது தொழில்.

யாழ்ப்பாண நகரில் குறுக்கும் நெடுக்குமாகப் பல வீதிகள் அமைந்த போதும், பிரசித்தமான வீதிகள் மிகச் சிலவே. அத்தகைய பிரசித்தமான சில வீதிகளில் கண்டி வீதி, பருத்தித்துறை வீதி மானிப்பாய் வீதி, காங்கேசன்துறை வீதி என ஊர்களுக்குச் செல்லும் பாதைகளைக் காட்டுகின்ற வீதிகளில் ஒன்று காங்கேசன் துறை வீதி, காங்கேசன்துறை வீதியை ஆங்கிலத்தில் சுருக்கமாக கே.கே.எஸ், றோட் என அழைப்பார்கள். ஆங்கில மொழி தெரியாதவர்கள் நாவிலும், கே.கே.எஸ் றோட் நடம் புரிந்தது.

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான சாப்பாட்டுக் கடைகளில் ‘’லக்சுமி விலாஸ்’’ குறிப்பிடத்தக்கது. தில்லைவனம்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘’லக்சுமி விலாஸ்’’ அநேகமாக எல்லோராலும் ‘’தில்லைப் பிள்ளை கிளப்’’ என்றே அழைக்கப்பட்டது. வீதியால் போவோர் வருவோரைக் கவர்ந்திழுக்கக் கூடிய காட்சிப் பெட்டிகள் அமைந்த கடையல்ல ‘’தில்லைப்பிள்ளை கிளப்’’ வாடிக்கையாளரின் சைக்கிள் வண்டிகள் நிறுத்தக்கூடிய சிறு ஒழுங்கை போன்ற முகப்பைக் கொண்ட தில்லைப்பிள்ளை கிளப்பில் அலங்காரப் பொருட்கள், கவர்ச்சிப் பொருட்கள் என எல்லவற்றையும் காண முடியாது.

டிக்காசன் காப்பி, எண்ணெய் தோசை,மசாலாத் தோசை என்றும் நினைவுக்கு வரும் முதல் தர ஹோட்டலாக தில்லைப்பிள்ளை கிளப் விளங்கியது.

கலப்படம் இல்லாத சுத்தமான உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘’தில்லைப்பிள்ளை கிளப்பில்" அப்பா சிங்காரம் பிள்ளையும் ஒரு தொழிலாளி.

இரண்டாவது வகுப்பில் நான் படித்துக் கொணடிருந்த வேளை புகைப்படம் பிடித்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் வாஸன் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றனர்.

படப்பிடிப்பாளர் ‘’கண் வெட்டாமல் பார்க்க வேணும்" "அச்ச பிள்ளை ஸ்மைல் பிளீஸ்’’ எவ்வளவோ சொல்லி பாரத்தார். கமராவை பார்த்த வண்ணம் அதற்கு முன்பாக என்னை இருத்தி படம் பிடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

தந்தையார், புகைப்படக் கருவியில் பொருத்தப்பட்டிருந்த வட்டக் கண்ணாடியைக் காட்டி. ‘’தம்பி சிரித்துக் கொண்டே இந்தக் கண்ணாடியைப் பாருங்கோ இதிலையிருந்து ஒரு குருவி பறந்து வரும்" என்றார்.

குருவி பறந்து வரும் என்ற எண்ணத்துடன் சிரித்த முகத்துடன் இருந்தேன். ‘’ரெடி’’ "தாங் யூ’’ சொன்னது எனக்குக் கேட்கவில்லை. சில நாட்களில் அழகான புகைப்படம் கிடைத்தது.
(இதுதான் அந்தப் படம்)

பின்னரும் சில சந்தர்ப்பங்களில் புகைப்படக் கருவியிலிருந்து குருவி பறந்து வரும் எனக் காத்திருந்தேன். குருவி வராவிட்டாலும் படங்கள் நன்றாக அமைந்து விட்டன.

முதன் முதலாக தொழில் வாய்ப்புத் தேடி விண்ணப்பம் அனுப்பிய போதுதான் நான் எப்போது பிறந்தேன் என அறிந்து கொண்டேன். பிறந்த திகதி எனக் குறிப்பிட்டிருந்த கூட்டில் எழுத வேண்டிய தகவலுக்காகவே பெற்றோரிடமிருந்து பிறந்த திகதியைக் தெரிந்து கொண்டேன். எனது பள்ளிப் பருவத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று நடைபெற்ற சம்பவங்கள் எதுவும் இருந்தாக நினைவில் இல்லை. என் வீட்டில் மட்டுமல்ல கல்லூரியிலும் ஊரில் இல்லை. இல்லவேயில்லை.

இப்போதெல்லாம் சாதாரண வாழ்வுக்குக் கஷ்ரப்படும் குடும்பங்களில் கூட, வீடியோ, புகைப்படம் இத்தியாதிகள் இல்லாவிட்டால் பிறந்தநாள் கொண்டாட்டம் நிறைவுள்ளதாக அமையாது. தின்பண்டங்கள் மத்திலும், விளையாட்டுப் பொருட்களுக்கு மத்திலும், குழந்தைகளை விதவிதமான புது உடைகளுடன் படமெடுப்பதை எல்லோரும் விரும்புகின்றனர். பிறந்த நாள் நிகழச்சிகளுக்கு என்னை அழைப்பவர்களின் நோக்கங்களில் ஒன்று தந்தை சொன்ன மந்திரத்தைச் சொல்லி தந்திரமாக அழுகின்ற குழந்தைகளையும் சிரிக்க வைத்து புகைப்படத்தினுள் விழுத்தி விடுவேன்.

அப்பா வருவார்...........

(அப்பாவை பற்றி "அப்பா" வகைப்படுத்தலுக்குள் படிக்கலாம்)

அப்பா பற்றியும் "அப்பா" நூல் பற்றியும்

எனது அப்பா பற்றிய நினைவுகளே மல்லிகை பந்தல் வெளியீடாக “அப்பா” என்னும் பெயரில் வந்து இருக்கின்றது. இது ஏற்கனவே மல்லிகை இதழில் "படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்" என்னும் பெயரில் தொடராக வெளிவந்திருந்தது. இந்த நூலை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் பார்த்து பாராட்டி கடிதம் அனுப்பி இருந்தார்.

இந்த நூல் 2003 ஆண்டு வெளிவந்து இருந்தது. இந்த நூல் தொடராக இவ்வலைபதிவில் வரும். அதை அப்பா என்ற வகைப்படுத்தலிலுள் சென்று பார்க்கலாம். நூலின் இறுதி அட்டையில் எனது அப்பாவை பற்றி வந்த குறிப்பு இது.

உலகப்பிரசித்தி பெற்ற கன்னியாகுமரிப் பிரதேசத்தை அடுத்துள்ள ஊர்தான் ஆரல்வாய் மொழி. அங்கு 1911 ஆம் ஆண்டில் சிவகாமிநாதபிள்ளை – பார்வதி அம்மாவுக்குப் பிறந்தவர்தான் சிங்காரநாதபிள்ளை. வாழ்க்கை வசதியற்ற காரணத்தால் படிப்பதையே கைவிட்டு விட்டுத் தனது எட்டாவது வயதில் கொழும்பு வந்தவர், இவர். பின்னர் யாழ்ப்பாணம் வந்தவரைத் தில்லைப்பிள்ளை கிளப் உள்வாங்கிக் கொண்டது. செய்யும் மீது தேவதா விசுவாசம் கொண்ட சிங்காரம்பிள்ளை கட்டம் கட்டமாகத் தன்னை மேம்படுத்திக் கொண்டதுடன் தான் தொழில் செய்துவந்த நிறுவனத்தையும் வளர்த்துக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து உடுப்பிட்டியைச் சேர்ந்த இராசம்மாவை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டார். இந்தியா சுதந்திரமடைந்தது. அப்போது பிறந்த மகனுக்குச் சுதந்திரன் எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தார். மகளுக்கு பரதாமணி என நாமமிட்டார். உழைப்பை மாத்திரம் நேசித்து வந்த இவர் அதிகம் ஆசைப்பட்டவரல்ல. நேர்மையாகவும், நெஞ்சு நிறைந்த நட்புணர்வுடனும் கடைசி வரையும் உழைத்து வந்த இவர் 1990 இல் உயிர் நீத்தார்.

Thursday, September 6, 2007

எனது நூல்களின் அறிமுகம் - நிர்வாணம்.

எனது முதலாவது சிறுகதை தொகுதியான “நிர்வாணம்” 1991 இல் கொழும்பில் வெளியீட்டு வைக்கப்பட்டது. இத் தொகுப்பினை திருகோணமலை தாகம் கலை இலக்கிய வட்டம் வெளியீட்டு இருந்தது. 1967 தொடக்கம் 1975 வெளியான எனது பன்னிரன்டு கதைகளின் தொகுப்பே நிர்வாணமாகும். கொழும்பு வெளியீட்டுக்கு பின் மட்டக்களப்பு, திருகோணமலை , வவுனியா ஆகிய இடங்களில் அறிமுக விழாவும் இடம் பெற்றது. இந்த நூலுக்கு 1993 கோவை லில்லி தேவசிகாமணி பரிசுதிட்டத்தின் கீழ் விருது கிடைத்தது.


(சிங்கள பதிப்பின் அட்டைப்படம்)

தமிழ்நாட்டில் நியூ செஞ்சரி புக் ஹவுஸினால் இரண்டாம் பதிப்பும் (1994), கலைஞன் பதிப்பத்தினால் மூன்றாம் பதிப்பும் வெளியானது. சிங்கள மொழியில் இரு பதிப்புக்களாக “காதல் யாத்திரைகள்” “தமிழ்ச் சிறுகதைகள்” என்னும் பெயரிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு இச்சிறுகதைகள் யாவும் தினகரன் , ஈழநாடு , ராதா, கலைமலர், மல்லிகை, மாணிக்கம் ஆகிய பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன. அத்தோடு அனேகமான சிறுகதைகள் இலங்கை வானொலியிலும் அந்தந்த காலப்பகுதியில் ஒலிப்பரப்பட்டுள்ளன.
(தமிழ்நாட்டுப் பதிப்பின் அட்டைப்படம்)

இச்சிறுகதை தொகுதியில் உள்ள அனைத்துச் சிறுகதைகளும் இந்த வலைப்பதிவில் நிர்வாணம் என்னும் வகைபடுத்தலுக்குள் அடங்கியிருக்கின்றன.

Sunday, September 2, 2007

அப்பக்கடை நடக்கிறது

ஹாய்....ஹாய்... கோழியளும் விடாதுகளாம். இந்த அப்பத்தைச் சுட்டு ஒப்பேற்றிப்போட்டு ஒருக்கால் கோயிலடிக்கும் போட்டு வரலாமெண்டால்....

வாணை செல்லாச்சி. என்ன அப்பம் வாங்கவோ? கொஞ்சம் இரணை, சுட்டுத்தாறன். இண்டைக்கு எழும்பவும் பிந்திப்போச்சு: கடைசி வெள்ளிக்கிழமையாகவும் கிடக்குது: ஒருக்கால் சன்னதி கோயிலுக்கும் போட்டு வரவேணும். பிறகு செல்லாச்சி எப்பிடி உங்கட பாடுகள்.

“ஓ..நீ....சொன்னது மெய்தான். அப்பம் சுட்டு விக்கிறதிலை இப்ப ஒண்டும் அவ்வளவு ஆதாயமில்லை. எனக்கென்ன வீடுகட்ட, கார் வாங்கவே காசு? அண்டாடம் சீவியம் ஓடினால் காணும். அதோடை அப்பம் சுட்டு விக்கிறது எனக்குப் பொழுது போக்காகவும் இருக்கும். மாவும் விலையேறியிட்டுது. தேங்காயும் நாப்பத்தைஞ்சியாம் விக்கிறாங்கள். இந்த அறாவிலை குடுத்து சாமான் சக்கட்டு வாங்கி எட்டுச் சதத்துக்கு ‘பாலப்பம்’ விக்கிறது கெட்டித்தனம்தான். உங்கை கடைவழிய வெள்ளையப்பமே பத்துச் சதத்துக்கு விக்கிறாங்கள். சனம் கடையிலயெண்டால் கனகாசு குடுத்து வாங்குங்கள், எங்களெட்டையெண்டால் நொட்டை சொட்டை கதைக்குங்களே ஒழிய காசு கூட ஒழுங்காகத் தராதுகள்.

இஞ்சைபார் செல்லாச்சி. அப்ப ஒருக்கால் நாரிப்பிடிப்பெண்டு ஆஸ்பத்திரியிலை போய்ப் படுத்தனான் தானே. அப்ப மகன் வந்து- “அப்பச்சட்டியோடை இருந்து தான் நாரிப்பிடிப்பு வந்தது. இனிமேல் அப்பம் சுடவேண்டாம். நான் மாசாசமாசம் அம்பது ரூபா அனுப்புவன்” எண்டு சொன்னவன்.

உங்கை இப்ப கன இளந்தாரிப் பெடியளுக்கும் நாரிப்பிடிப்பு வருகுது. அவங்களெல்லாம் அப்பச்சட்டியோட இருந்தே நாரிப்பிடிப்பு வாறதெண்டு யோசிச்சுப்போட்டு, ஆசுபத்திரியாலை வந்த உடனை அப்பச்சட்டியைத் தூக்கினன். அவன் மகனும் சொன்ன மாதிரி இரண்டு மூண்டு மாதம் அம்பது ரூபா அனுப்பினான். அம்பது ரூபா வர வர நாப்பது முப்பது ரூபாவாகக் குறைந்து இ;பப பத்து ரூபாவாக வந்து கொண்டிருக்குது. அதுக்காக நான் அவனைக் குறைசொல்லயில்லை. அவனுக்கு என்ன கஸ்டமோ- துன்பமோ. பிள்ளை குட்டியள் இப்படித்தான் இருந்தாப்போலை ஒரு உசாரிலை அல்லது பிறத்தியாருக்கு முன்னாலை ஐயாவுக்கு நூறு ரூபா அனுப்புவன் எண்டு சொல்லுங்கள். ஆனால் அப்படி அனுப்புறதெண்டால் என்ன இலேசான அலுவலே? அல்லது அது வருமெண்டுபார்த்துக் கொண்டிருக்கிறது தான் தாய் தகப்பனுக்கு வடிவே?

எனக்கென்ன- அப்பக்கடை பிழையில்லாமல் நடக்குது. நான் ஏன் அவையிவைக்குப் பயப்பட வேணும்? எனக்கொரு புரு~ன் முருகாத்தை, அவரும் முந்தி மேசன்மாரோடை போய் உழைச்சுக்கிழைச்சுத் திண்டு கொண்டிருந்தவர். பேந்து இவன் பொடியன் மாசம் மாசம் கொஞ்சக் காசு அனுப்பத் தொடங்கின உடனை உழைப்பை விட்டிட்டார். அவன் அனுப்பிற காசுக்கு இரண்டு மூண்டு நாளைக்கு வடிவாகச் சமைச்சுத் திண்டிட்டு பிறகு அங்காலை இஞ்சாலை ஆலாய்ப் பறக்கிறது. முருகாத்தையின்ரை சீவியம் இப்பிடி ஓடுது.

இல்லைச் செல்லாச்சி, அப்பக்கடை நடக்கிறபடியால் அவையிவையின்ர கையைப் பாராமல் என்ர சீவியம் ஓடுது. மனிசராகப் பிறந்ததுகள் நோய் நொடி வந்து பாயிலை படுக்கு மட்டும் ஏதாவது தொழில் செய்து கொண்டிருக்க வேணும். அப்பத்தான் மற்றவைக்குப் பயப்பிடாமல் எங்கடை விருப்பப்படி வாழலாம்.

பார்த்தியே பார்;த்தியே, செல்லாச்சி. தொழில் செய்ய வேணுமெண்டதுக்காக- “எல்லோரும் அப்பம் சுட்டால் ஆர் வாங்கிறது?” எண்டு கேட்கிறாய். நான் அப்பம் சுட்டாப் போலை எல்லாரும் அப்பம் சுடவேணுமே? ஒவ்வொருத்தரும் ஒவ்வொண்டைச் செய்யிறது தானே, சீதவன் சந்தைக்குப் போகுது. கொடிகாமச் சந்தையிலையும் சாவகச்சேரிச் சந்தையிலையுமு; விக்கிறதை வாங்கிக் கொண்டு வந்து உடுப்பிட்டிச் சந்தையிலை விக்கிறதிலைதானே அதுகள் எழெட்டுப்பேர் சீவிக்குதுகள். பொன்னர் கீரைக்கட்டுத் தூக்கித் தானே மருமகனுக்கு லொறி வாங்கினதும் - மகளுக்கு நகை நட்டு செய்ததுமு; - இராசம்மா கிழங்கு அவிச்சு ஒடியல் காயப்போட:டுத்தானே மாளிகை மாதிரி ஒரு வீடு கட்டினவள்.

எதுக்கும் ஒரு முயற்சி வேணும். அல்லது ஒண்டும் செய்ய முடியாது. “ஒரு காரியத்தைச் செய்வன் செய்வன்” எண்டு முருகாதi;த மாதிரிச் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. செய்து காட்டவேணும். அதுக்கு நடக்கக்கூடிய காரியமாக ஓரளவு யோசிச்சுச் செய்ய வேணும். எடுத்த உடனே என்னெண்டு லாபநட்டம் சொல்லுறது. இஞ்சை நானும் அப்பக்கடை தொடங்கின உடனை இரண்டு மூண்டு ரூபா வியாபாரம் தானே. இப்பவெல்லோ ஏழெட்டு ரூபாவுக்குப் பிழையில்லாமல் நடக்குது.

“ஒரு முழத்துண்டு காணியிலை என்னத்தை வைச்சுப் பயிர் செய்யிற” தெண்டு முருகாத்தை கேட்கிறார். அவன் வேலுப்பிள்ளைக்கும் எங்களளவு காணிதானே. அந்தக் காணியிலை வடிவான கொட்டிலும் கட்டி, கிணறும் வெட்டி நாலைஞ்சு வாழைக்குட்டியும் வைச்சான். “நாலைஞ்சு வாழைக்குட்டியாலை என்ன வரப்பேர்குது?” எண்டு கேட்டதுக்கு.

“வெள்ளிக்கிழமை சாப்பிடுறதுக்கு இலையெண்டாலும் வெட்டலாம்” எண்டான். அந்த நாலைஞ்சு வாழைக்குட்டி நாப்பது அம்பதாயிட்டுது. ஒரு கிழமைக்கு இரண்டு மூன்று வாழைக்குலை விக்கிறான். தின்னவேலியிலை வாங்கிவைச்ச ஒட்டு மாங்கண்டும் நல்லாய்க் காய்க்குது. நல்ல ருசியெண்டபடியால் தானே மகாலிங்கத்தின்ரை குணத்துக்கேற்ற மாதிரி நல்ல பெண்சாதியும், பெரிய வீடும், வடிவான காரும். ஓ..ஒவ்வொருத்தருக்கும் அவையின்ர குணத்துக்குத் தக்க மாதிரித்தான் உத்தியோகங்களும் பெண்சாதியும் வந்து அமையிறது.

இப்பவெல்லோ உதுகள் காசுக்கும் வடிவுக்கும் கலியாணம் முடிக்கிறதுகள். உங்கை காசுக்கும் வடிவுக்கும் கலியாணம் முடிச்ச ஆக்களின்ர பொட்டுக்கேடு எங்களுக்குத் தெரியாதே? அப்புலிங்கத்தின்ர பெடிச்சிக்கு அச்சுவேலியிலிருந்து பணக்கார மாப்பிளையொண்டு கொண்டு வந்தினம். அவன் பெரிய பணக்காரனாம். கொழும்பிலை உத்தியோகம், நாலைஞ்சு வீடு: இரண்டு கார் எண்டு எல்லோருக்கும் புழுகிக்கொண்டு திரிஞ்சினம். அது போதாதெண்டு அப்புலிங்கமாக்களும் இரண்டு லட்சம் ரூபா சீதனமாகக் குடுத்தினம். கடைசியாகக் கண்டதென்ன? அவன் மூண்டு மாதத்திலை பெட்டையை விட்டிட்டு ஓடியிட்டான். காசையும் , காரையும் பாத்தினமேயொழிய வேறையயொண்டையும் பார்க்கயில்லை.

ஏன்? சின்னத்தம்பியின்ரை பெடியனும் வடிவான பெம்பிளையெண்டுதானே ஒரு நர்ஸ் பெட்டையைக் கூட்டிக்கொண்டு வந்தவன். அவளும் அவனை விட்டிட்டுப் போயிட்டாள். வடிவு- காசு எல்லாம் பாக்கத்தான் வேணும். ஓரளவுகுப் பாக்க வேணும்.

செல்லாச்சி கொஞ்சம் இரணை. இந்தா இந்தத் தேத்தண்ணியைக் குடி. இஞ்சை சட்டம்பியாருடைய பொடியனும் வந்திட்டுது. பள்ளிக்கூடம் போறதுகளை முதல் விட்டிட்டு உனக்குச் சுட்டுத்தாறன்.

சீதனம் வாங்கக் கூடாதெண்டு சொல்லயில்லை. தாய் தேப்பனிட்டை வசதியிருந்து மனமொத்துத் தந்தால் வாங்கலாம். “பத்தாயிரம் வேணும் பதினையாயிரம் வேணும்” எண்டு நாண்டு கொண்டு நிண்டால் அவையின்ரை வாழ்க்கை உருப்படாது.

உத்தியோககாரர் எடுக்கிற குறைஞ்ச சம்பளத்திலை வாழேலாது தான். எங்கடை மூத்தவளின்ரை மகன் சுதா கொழும்பிலை ஒரு கட்டுமட்டாகச் செலவு செய்து, வீட்டையும் நூறு நூற்றம்பது அனுப்பிக் கொண்டிருந்தான். அவள் தாயும் இஞ்சினை ஒறுத்து உலவிச்சு சீட்டுப் பிடிச்சு அதை எடுத்து பெட்டையின்ர கலியாணத்தை முடிச்சாள். சுதாவுக்கும் இப்ப பேச்சுக்கால் நடக்குதாம். கலியாணம் முடிச்சால் கொழும்பிலை நாநூறு ஐநூறு எண்டு அச்சவாரம் கட்டி வீடு எடுக்கவேணும். கதிரை மேசையெண்டு சாமான் வாங்க- நகை நட்டுச் செய்ய எப்பிடியெண்டு போனாலும் ஒரு பத்தாயிரமெண்டாலும் வேண்டாமே? அவனும் உழைச்சதையெல்லாம் தாயட்டையும் சகோதரியட்டையும் குடுத்திட்டான். ஓரிடத்துக்குப் போறதெண்டால் சீதனம் வாங்கத்தான் வேணும். அவனுக்கு ஒரு நல்ல காலமிருந்து பணக்கார இடம் சந்திச்சால் சீதனத்தைக் கூடக் குறைய வாங்கலாம். என்னை மாதிரி உன்னை மாதிரி ஒரு வறுமைப்பட்ட குடும்பத்திலை சம்பந்தம் செய்யிறதெண்டால் என்ன மாதிரி கரைச்சல் படுத்தி சீதனம் வாங்கிறது? கிடைச்சதை வைச்சுக் கொண்டு மட்டு மட்டாக வாழுறதுதான்.

“உதார் உதாலை போறது? ஓ...” சுதாவோ....கொழும்பாலை வந்திட்டான் போலை கிடக்குது....

அவனுக்கு நூறு வயதடி செல்லாச்சி. அவனைப் பற்றிக் கதைக்க வந்திட்டான்.

ஓ...அவர் இப்ப வளர்ந்து பெரிய மாப்பிள்ளையாகியிட்டார். என்னோடை கதைக்க வெட்கம். இஞ்சினை வந்த நேரம் போனநேரம் ‘என்னணை ஆச்சி’ எண்டொரு சொல்லு. வந்து அஞ்சாறு நாள் நிண்டு ஊர் உலாத்துவன். போகைக்குள்ள மட்டும் வந்து “போட்டுவாறன் ஆச்சி” எண்டு சொல்லுவ்ன. அவனுக்கு நான் தானே கதிர்காமம் , நயினாதீவு, திருக்கேதீஸ்வரம் எல்லாம் கூட்டிக்கொண்டு போய்க் காட்டினது.

என்னடி உமா? இவளைத் தெரியுமே செல்லாச்சி? மருமேன் ராசர்ர மூத்தமகள் உமா இவள்தான்.

சுதா அண்ணை வந்திருக்கிறாராம். அப்பம் வாங்கி வரட்டாமோடி? ஏன் அவையளுக்கென்ன வந்து கேக்குறதுக்கு? அவன் கொழும்பிலை உத்தியோகமெண்டால் இந்த வீட்டை வரக்கூடாதே?

பாரடி செல்லாச்சி குமரனுக்கு காற்சட்டை சேட்டுப் போட்ட உடனை கிழவியோடை கதைக்க வெக்கமாம். அவள் மூத்தவளின்ர மகனைத்தான் சொல்லுறன். அப்பம் வாங்கியரச் சொல்லி உமாவை அனுப்பியிருக்கிறாளுகள் உமா இஞ்சை அப்பமுமில்லை ஒண்டுமில்லையெண்டு போய்ச் சொல்லடி.

“அப்பத்துக்குக் காசு தருகினமோ?” இஞ்சை அப்பம் விக்கிறதில்லையெண்டு சொல்லடி. காசாம் காசு. அவையின்ர காசு ஆருக்கு வேணும்? உவளுகள் எப்ப காசை கண்டவளுகள்?


உங்கை காசு வைச்சுக்கொண்டு துள்ளினவை எல்லாம் எப்பிடி இருக்கினமெண்டு தெரியும். காசு கொஞ்சம் கிடைச்ச உடனை அவள் பொன்னியும் வள்ளியும் குதிச்ச குதியென்ன! ஆடின ஆட்டமென்ன! இண்டைக்கு என்ன நிலையிலை இருக்கினம்? இதெல்லாம் சுவாமியல்லே எழுதி வைச்சிருப்பார்?

அவள் பொன்னிக்கு அப்பவும் சொன்னனான். சீட்டைக் கீட்டைப் பிடிச்சுக் காசு சேர்க்க வேணுமெண்டு. கேட்டாளுகளே? இப்ப அங்காலை ஒரு நூறு இஞ்சாலை ஒரு அம்பது எண்டு ஓடியோடித்திரியினம். கையிலை வரயிக்கிள்ளை நாலு காசு. சேர்த்தெல்லே வைக்க வேணும். அல்லது அவர் முருகாத்தை மாதிரி பெரிய மீனும் முழுத்தேங்காயும் வாங்கி திண்டிட்டு, அடுத்தநாள் “அவை ஒரு தேத்தண்ணி தருவினமோ” இவை ஒரெப்பன் சோறு தருவினமோ” எண்டு கை நீட்டிக்கொண்டு திரியிறதே...சீ..வெட்கம் கெட்ட வாழ்க்கை.


“உமா கோவிச்சுக் கொண்ட போறாளோ?” போகட்டும். உவைக்கென்ன நான் பயமோ? முருகாத்தை வேணுமெண்டால் பயப்பிடட்டும். அவையட்டை சோத்துக்கும் தேத்தண்ணிக்கும் போறபடியால் முருகாத்தை பயப்படுவர். எனக்கென்ன பயம்? என்ர அப்படிக்கடை நடக்கிறவரைக்கும் நான் ஏன் அவையிவையட்டைப் போகப் போறன்.


செல்லாச்சி கதையோடை கதையாக உன்ரை கடைசிப் பெடியனுக்கும் நேரகாலத்தோடை ஒரு கலியாணத்தை முடிச்சு வைச்சிடு. அது நல்லது. ஏன் தெரியுமோ? இந்தக் காலம் எந்த நேரம் என்ன நடக்குமெண்டு தெரியாது. பிள்ளையளுக்குப் பசி வந்த உடனே இடியப்பமோ புட்டோ கொடுக்கிறம். இல்லையெண்டால் கடைவழிய போய் கண்டதைக் கிண்டதைத் தின்னுங்கள். கலியாணமும் அதுமாதிரித்தான். நாங்களாகப் பார்த்து ஒவ்வொண்டையும் முடிச்சி வைக்காட்டி. அதுகள் சாதி சமயம் பாராமல் ஒவ்வொண்டைக் கொளுவின பிறகு கவலைப்படக்கூடாது.

எனக்கும் மூத்தவளின்ர கலியாணம் ஒரு பிரச்சனையில்லாமல் முடிஞ்சுது. இரண்டாவது பெட்டை நல்லம்மாவை முத்துராசு பார்க்க வந்த போது “என்ன தருவியள்?” எண்டு கேட்டுது மனிதன். “ஒரு பெம்பிளைதான் தருவம்” எண்டு சொல்லி நல்லம்மாவை குடுத்தனாங்கள். நாலு பரப்புக் காணியோடை மூண்டாவது பெட்டையை றைவர் ராசாவுக்கு முடிச்சுக் குடுத்தன்.

அப்ப செல்லாச்சி நீ இந்தா....அப்பத்தைக் கொண்டு போ. நான் இவ்ன் சுதாவுக்கு அப்பத்தைக் குடுத்திட்டு வாறன். என்ன இருந்தாலும் மூத்தவளின்ரை மகன் எல்லே. அவன் என்னோடை கதையாட்டி எனக்கென்ன? கோபத்திலை அப்பத்துக்கு வந்த உமாவையும் ஏசிப் போட்டன்.

“இந்தாடா தம்பி சுதா, இந்தா அப்பம். உனக்கெண்டு சட்டியப்பமும் சுட்டுவைச்சிருக்கிறன். நீ இப்ப கொழும்புக்குப் போன பிறகு என்னோடை கதைக்க வெக்கம் என்ன? ஆ நான் சொன்னதை மனதிலை வைச்சிருக்காதை. நாங்கள் கிழடு கட்டைகள். சாகப்போறனாங்கள். நீங்கள் சந்தோசமாயிருக்க வேணும்.

“என்னைப் பற்றிக் கேக்கிறியே?”


“ஓ...என்ரை அப்பக்கடை பிழையில்லாமல் நடக்குது. அப்பக்கடை நடக்கிற வரைக்கும் என்ரை சீவியமும் நல்லாப் போகும். நான் வாறன் கோயிலுக்குப் போக வேணும்.


தினகரன் - 1976