Tuesday, June 17, 2014

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல் -உடுவை எஸ்.தில்லைநடராசா

உள்ளூர் வளங்களை உச்ச அளவில் பயன்படுத்தி பொருளாதரத்தை மேம்படுத்தல்

வவுனியா கள்ளிகுளம் பொன்.முத்தையா அவர்களின் சிலை திறப்புவிழாவில் பொது சேவை ஆணைகுழு உறுப்பினர் உடுவை எஸ்.தில்லைநடராசா ஆற்றிய உரையிலிருந்து ......


(தொகுப்பு: கரவை க.தே.தாசன்)


அமரர் பொன்.முத்தையா வவுனியாவில் பிரதானமாகக் கிடைக்கும் உள்ளூர் விளைபொருட்களையும் ஏனைய வளங்களையும் கூட்டுறவு அமைப்புகளினூடாக பயன் படுத்தி விவசாயிகளினதும் விலங்குவேளாண்மை செய்வோரினதும் பொருளாதாரத்தையும் வாழ்கைத்தரத்தையும் உயர்த்த வேண்டுமென பல ஆலோசனைகளை காலத்துக்குக்காலம் முன் வைத்தார். அவர் வழங்கிய பெறுமதியான ஆலோசனைகளால் தனிப்பட்டவர்கள் மாத்திரமன்றி பொது நிறுவனங்களும் பெருமளவில் பயனடைந்தன. சாதரணமாக வாழ்பவர்கள் மரணித்த பின் அவரது குடும்பத்தினரால் கூட நினைவு கூரப்படுவது குறைந்து வரும் இந்நாட்களில் திரு.முத்தையா காலமான பின் அவரது பெயரால் “முத்தையா மண்டபம் “அமைக்கப் பெற்று நல்ல நிகழ்வுகள் நடைபெறும் இடமாக மாறியுள்ளது. அவர் இறந்து இருபத்தெட்டு வருடங்களின் பின் அவர் பிரதானமாக வழிகாட்டிய கூட்டுறவுச் சங்க வளவில் அவருக்கு சிலை நிறுவி, அந்த நிகழ்வுக்கு அவரது மனைவி மக்கள் உறவினர் ஊரவரை அழைத்தது மாத்திரமன்றி, வவுனியா மாவட்டத்தில் அவரது காலத்தில் அவரோடு நெருங்கிப் பழகிய மூன்று அரசாங்க அதிபர்களும் சிலை திறப்புவிழாவில் கலந்து கொள்வதிலிருந்து, அவரின் முக்கியத்துவத்தையும், அவர் சமூகத்துக்கு ஆற்றிய சேவைகளையும் உணரக்கூடியதாக உள்ளது.
வவுனியா மாவட்டத்தில் வசதிகள் மிகக்குறைந்த”கள்ளிகுளம்” என்றழைக் கப்படும்பின் தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவரான திரு. முத்தையா பிரித்தா னிய இராணுவத்தில் யுத்தகாலத்தில் சேவைபுரிந்தவர் என்று அறியமுடிகிறது. அதனால் அவர் பல் வேறு தரத்தினரோடு நெருங்கிப் பழகியதால் பெற்றுக் கொண்ட  அறிவு அனுபவம் ஆகியவற்றோடு வவுனியா மாவட்டத்தைப் பற்றி பூரண விபரங்களையும் அறிந்திருந்த ஒருவராகவும் இருந்திருக்கின்றார். தெய்வ நம்பிக்கை மிக்க ஆன்மீக வாதியாகவும் வாழ்ந்திருக்கின்றார்.
1970 களுக்கு முன் வவுனியா பல நோக்குக் கூட்டுறவு சங்கத்தை வழி நடத் தியவர் ..முக்கியமான நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் என்று பெருமைக் குரியவர் அமரர் கள்ளிகுளம் முத்தையா.
1973-74-75  காலகட்டத்தில் வவுனியா  பல நோக்கு கூட்டுறவு  சங்கத்தின் அருகே கடுங் கோடை காலத்திலும் வற்றாத நல்ல தண்ணீர்க் கிணறு இருந்தது., அந்தக் காணியில் ஒரு நெல் குற்றும் ஆலையும் அமைக்கப்பட்டிருந்தது. .அதற்கு அருகாமையில் ஒரு கோழிப்பண்ணை இருந்தது .வவுனியா மக்கள் தரமான கோழி இறைச்சியையும் முட்டையையும் அங்கே வாங்கக் கூடியாதாக இருந்தது.இந்த நிறுவனங்கள் வவுனியா பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமானவை . இது மட்டுமல்ல நொச்சி மோட்டையில் ஒரு ஆடைத்தொழிலகமும் இருந்தது .அந்தக் கிராம மக்களும் அயலூர் மக்களும் வவுனியா நகருக்கு வராமல் தங்கள் தேவையை நிறைவேற்றிக்கொள்ள முடிந்ததுடன் அந்நிறுவனம் பல இளம் பெண்களுக்கு தொழில் வாய்ப்பையும் வழங்கியது.
அப்போதைய   பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் வவுனியா நகருக்கு அண்மையிலுள்ள ஓமந்தை தோடம் பழச் செய்கைக்கு உகந்த இட மென அறிந்து பிபிலை என்னுமிடத்திலிருந்து தோடம்பழக்கன்றுகளை வரவழைக்க முயற்சிகள் மேற்கொண்டும் அன்றையகால சூழ்நிலைகளால் அத் திட்டம் கைவிடப்பட்டது அதே போல வவுனியாவில் பெரும் எண்ணி க்கையான கால் நடைகள் இருப்பதால் அவற்றிலிருந்து பெறப்படும் பால் வவுனியா மக்களின் தேவைக்கு மேல் மித மிஞ்சியதாக உள்ளதால் அவற் றைப் பயன்படுத்தி பால் பதனிடும் சாலை ஒன்றை வன்னியில் ஆரம் பித்து”வன்னிஸ்பிரே” என்னும் வர்த்தகப் பெயருடன் பால் மா விற்பனைக்கு விடப்பட வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது  அது மட்டுமல்ல ..போத்த லில் அடைக்கபட்ட பால் நிறமூடப்பட்ட வாசனைச் சுவையூட்டப்பெற்ற பால் பட்டர் பாலாடைக்கட்டி தயிர் எல்லாவற்றையும் தரமான பொருட்களாக நியாமான விலையில் கிடைக்க வழி வகுத்து போசாக்குச் சத்துள்ள உணவு வகைகளை விநியோகம் செய்வதோடு பொருளாதாரத்தையும் அபிவிருத்தி செய்ய வேண்டும். அண்மையில் பெற்றுக்கொண்ட தகவல்களின் படி சுமார் இருபத்தையாயிரம் பால் தரும் பசுக்கள் இருப்பதாகவும், அவற்றிலிருந்து மாதம் தோறும் சுமார் இரண்டு லட்சம் லீட்டர் பால் பெறப்படுவதாகவும் அறிய முடிந்தது. மேலும்  இரண்டாயிரம் எருமைமாடுகள்,  பத்தாயிரம் ஆடுகள் வளர்க்கப்பட்டு அவற்றின் பயன்களையும் இங்குள்ளவர்கள் பெறுவதாக அறிகின்றேன். வவுனியாவில் வளர்க்கப்படும் கோழிகள் மாதம் தோறும் சாராசரி இரண்டு லட்சம் முட்டைகள் இடுவதாக இன்னொரு புள்ளி விபரம் தெரிவிக்கிறது.
சாதாரணமாகவே பப்பாசிப்பழமும் வாழைப்பழமும் தாரளமாக வவுனியாவில் உண்டு. மாம்பழம் பலாப்பழம் போன்ற பருவ காலப் பழங்களும் உண்டு. மிகையாகக் கிடைக்கும் காலத்தில் பழங்களைப் பதனிட்டு ஜாம் பழரசம் வற்றல் போன்றவற்றை போத்தல், தகரத்தில் அடைத்தும் பிற இடங்களுக்கு அனுப்பலாம்.. சாதாரணமாக எங்கள் சந்தைகளில் தேங்கிக்கிடக்கும் கறிவேப் பிலைக்கும் முருங்கையிலைக்கும் நம்மவர் புலம் சிதறிய நாடுகளில் நல்ல கிராக்கி.
60 களில்       70  களில்    வவுனியா நகரத்திலுள்ள ஹோட்டல்களுக்கு சென்றால்  வேறு ஹோட்டல்களில் காணாத தனித்தன்மையைக் காணக்கூடியதாக இருக்கும். வவுனியாகுளம், நகரோடு இணைந்திருக்கும் வைரவபுளியங்குளம் உட்பட சிறு சிறு குளங்களில் உள்ள  தாமரையிலைகள் சாபாட்டுக்கடை களுக்கு வரும்.அதனால் உள்ளூரில் சிலருக்கு உழைப்பு  சுழல் மாசு அடைவதில்லை. பயன் படுத்திய இலைகள் பின்னர் மண்ணோடு சேர்ந்து உரமாகிறது. இன்று தாமரையிலைகளுக்குப் பதிலாக பொலிதீன் கடதாசி களில் உணவு பரிமாறல்.அதிகமான செலவு ஒரு புறம்.சூழல் மாசடைவது மறுபுறம்.
 கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் நாள்தோறும் பல புகையிரதங்கள் ஓடிய காலத்தை நினைத்துப்பார்க்க ஆசையாக இருக்கிறது.இப்போது வெகு விரைவில் கொழும்பிலிருந்து புறப்படும் புகையிரதம் யாழ்பாணம் வரை செல்லும் என்ற தகவலும் கிடைத்துள்ளது .அந்த நாட்களில் கொழும்பி லிருந்து யாழ்ப்பாணம் வரை “வவுனியா கச்சான்”  “வவுனியா கச்சான்”  என கூவி விற்ற வியாபாரிகள் பலரைக் கண்டிருக்கின்றோம் கட்டுப்படியான விலையில் கிடைக்கும் போசாக்கு நிறைந்த நட்டுநொருக்குத் தீனி வவுனியா கச்சான்.பெரும்பாலும் வறுத்து சிறு பைகளில் அடைக்கக் பட்டாலும் பல்வேறு வகைகளில் பதனிடப் படுவதையும் காணலாம். கச்சானுடன் . .மிளகாய்த்தூள் சேர்த்தால் உறைப்பாக இருக்கும் சீனிப்பாணியில் போட்டு எடுத்தால் மிகச் சுவையாக இருக்கும்   உப்புத்தூள் இட்டால் உவப்பாக இருக்கும்.இவற்றை இங்குள்ள கூட்டுறவு சங்கம்   கொழும்பில் பொருட் காட்சி ஒன்றில்  விற்பனை செய்தபோது அமோகமான வரவேற்பு கிடைத்தது . சாதாரணமாக கச்சான் பருப்புகளை எடுத்துக் கொண்டு கோதுகளை வீசி எறிந்து விடுவார்கள். இந்தியாவில் கச்சான் கோதுகளை கடின அட்டை தயாரிப்பதற்கு கடதாசி தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதாகவும் வயல்களில் உரமாக போடுவதாகவும் பத்திரிகைகள் மூலம் அறிந்துள்ளேன்
இன்று மின்சாரத்தில் இயக்கும் அரவை இயந்திரங்கள் வருவதற்கு முன்பு நல்ல அம்மி ஆட்டுகல்லு கல்லுரல் வவுனியாவிலிருந்தே பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
வவுனியாவிலும் பனைமரங்கள்  உண்டு. இலங்கையில் பொதுவாக ‘சோத்தி ‘என்று தரம் குறைவாகக் கருதி கழித்து விடப்படும் பனைமரங்களில் இருந்து அழகான அலங்காரப் பொருட்கள் செய்வதையும் –அவை வரவேற்பறைகளில் வைக்கபட்டிருப்பதையும் தாய்லாந்தில் பார்த்துள்ளேன். அது மட்டுமல்ல நுங்கை உள்ளுடனாக வைத்து சுசியம் போன்ற ஒருவகைத் தின்பண்டத் தையும் சுவைக்கக்கூடிய வாய்ப்பு அங்கே  கிடைத்தது . எங்கள் பகுதிகளில் கிடைக்கும் வளங்களையெல்லாம் முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்த வேண்டுமென்று அடிக்கடி சொல்வார் அமரர் முத்தையா. முடியமான போதெல்லாம் தெரிந்த விடயங்களையே திருப்பித் திருப்பிச் செய்யாமல் புதுப்புது வடிவம் புது மாதிரி என்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும் என்பார்

வவுனியாவில் சாதாரண விவசாயிகளே கடின உழைப்பால் விவசாய மன்னர்களாக பட்டம், பதக்கம்,பரிசும் வாங்கியிருக்கிறார்கள்.இன்னொரு விடயம் 80களில் வவுனியாவில் கத்தரிக்காய் அமோக விளைசல் காணப் பட்டது. அதனை பிற இடங்களுக்கு சாக்கில் கட்டிக்கொண்டு செல்லும்போது கணிசமான அளவு கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடைவதை அவதா னித்த “வேலு” என்ற விவசாயி  கத்தரிக்காய் நசிந்தும் அழுகியும் சேதமடை வதை தவிர்க்கும் வகையில் புதிய இனம் ஒன்றை அறிமுகம் செய்தார். அது அந்த நாட்களில் “வேலு கத்தரிக்காய்” என் அழைக்கப்பட்டது
வவுனியாவின் வட புறத்தே நெடுங்கேணி பகுதியில் சுத்தமான தரமான தேன்.கிடைக்கும். அதை அளவான போதல்களில் அழகிய லேபல்கள் ஒட்டி சந்தைபடுத்தினால் கணிசமான பணத்தை பெறக்கூடியதாக இருக்கும்
கொழும்பில் சில கடைகளில் வவுனியா அரிசி என்று சொல்லியே விற்பனை செய்வார்கள். ஒரு பிரதான இடத்தில் “ வவுனியா அரிசிக்கடை” என்று பெயர்ப் பலகையே மாட்டப்பட்டிருக்கிறது. வியாபாரத்தை விருத்தி செய்து நெல் அரிசி மட்டுமல்லாது அரிசி மா, அவல் அரிசியையும் அரிசி மாவையும் மூலப்பொருளாகக் கொண்ட உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்து சந்தைப் படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளதாக அமரர் முத்தையா தெரிவித்த ஆலோசனைகளும் கவனத்தில் கொள்ளக்கூடியவை கிடைக்கும். விவசாய திணைக்கள  புள்ளி விபரங்களின் பிரகாரம் கால போகத்தில் சுமார்  ஐம்பதி னாயிரம் மெட்ரிக் தொன்னுக்கு அதிகமான  நெல்லும்  சிறு போகத்தில் அதில் அரைவாசியளவு நெல்லும் விளைவதாக அறிய முடிகிறது 
காலபோக மற்றும் சிறு போக காலங்களில் சோளமும் செய்கை பண்ணப் படுகிறது. இன்று சோளத்தை அவித்து விற்பனை செய்வோரைக் காணலாம். அவித்த சோளம் பயணிபோரின் சிற்றுண்டியாக உள்ளது. அது  ஹோட்டல் களில் சூப் லட்டு உட்பட பலவகையான பண்டங்கள் தயாரிக்கவும் பயன் படுகிறது.வெளி நாடுகளிலிருந்து கவர்சிகரமான பெட்டிகளிலும் பொதிகளிலும் இறக்குமதியாகும் சோளம் தான் கணிசமானோரின் காலை உணவாகவும் உள்ளது. சோளத்தைப் பதனிடல், பொதி செய்தல் ஆகியவற்றோடு விளம்பரம் விநியோகம் ஆகியவற்றையும் சீராகச் செய்வதன் மூலமும் வருமானத்தைப் பெருக்கலாம்
70 கள்   80 களில் உழுந்து செய்கை பண்ணி பெரும் செல்வந்தராக வந்தோ ரும் இருக்கிறார்கள். வவுனியாவில் விளைந்த உழுந்தில் பெருமளவு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. நம்மவர் உழுந்தை தோசை இட்லி வடை என்று சாப்பிட இறக்குமதி செய்தவர்கள் அதனை நீரில் ஊற வைத்து முளை விட்டதும் முழுமையாகவே பச்சையாகச் சாப்பிடுவதை சில நாடு களில் பார்த்திருக்கின்றேன். அதில் தான் போஷாக்கு அதிகமாம். தருவிப் போருக்கு தெரிந்த சங்கதிகள் விளைவிப்போருக்கு தெரியாமலிருக்கிறது என திரு முத்தையா சொல்லியதும் நினைவுக்கு வருகிறது.
1983 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெடித்த கலவர சமயம் பலநோக்கு கூட்டுறவு சங்கம் வெங்காய கொள்வனவு விற்பனை விடயத்தில் பெருந் தொகையை இழந்து எல்லோரும் சோர்ந்து போய் இருக்கையில் வியாபாரம் என்பது எப்போதும் ஒரேமாதிரி இருக்காது . எழுப்பி விழுத்தும்  எதிர்பாராத லாபங்களும் வரும் என்றார்,அமரர் முத்தையா. அது போலவே வவுனியா ஊடாக செல்லும் பாரவூர்திகளில் பொருட்களை இறக்கி ஏற்றும்போது பெற்ற வருமானம் விழுந்த சங்கத்தை எழும்ப வைத்தது.
அமரர்.பொன்.முத்தையா வழங்கிய இன்னொரு சிறந்த ஆலோசனையையும் பதிவு செய்தாக வேண்டும்.  1983 நடுப்பகுதியிலிருந்து உள்நாட்டுப்போர் தொடர் பிரச்சினைகளாகின. ஒரு நாள் மாலை தெற்கிலிருந்து  நூற்றைம்பது பேர் வந்த போது,அவர்களுக்கு  உணவு வழங்க முடியாமல் கச்சேரி உத்தி யோகத்தர் தடுமாறினார்கள். வவுனியா வர்த்தகர்கள் பாண்,ஜாம்,வாழைப்பழம் என்று வாரி வழங்க வந்தவர்கள் வயிறு குளிர்ந்தது ஏனென்றால் அப்போது புனர்வாழ்வு அமைச்சு என் ஒரு நிறுவனம் இருக்கவில்லை.
 பிரச்சினைகள் பெருகிக்கொண்டு போவதை உணர்ந்த வவுனியா அரச அதிபர்.கே.சி.லோகேஸ்வரன், இடம் பெயர்ந்து வருவோர்,போராட்டத்தினால் பாதிக்கப்படுவோர் தொடர்பாக ஆலோசிப்பதற்காக ஒரு கூட்டத்தை கூட்டினார்.அக்கூட்டத்தில் அரச உத்தியோகத்தர்களோடு பொது மக்கள் சார்பில் அமரர்முத்தையா அவர்களையும் அழைத்திருந்தார். கச்சேரியில் நடை பெற்ற கூட்டத்தில்  அரச உத்தியோகத்தர்களுக்கே முன் மாதிரியாக சில  தீர்மானங்களை எடுக்க வழி காட்டியவர் முத்தையா.

சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து வருவோருக்கு முதலில் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்றார்.அது சமைத்த உணவு என்று அழைக்கப்பட்டது. தொடர்ந்து சமைத்த உணவு வழங்க முடியாது,ஆகவே உணவுப்பொருட்கள்.சமைப்பதற்கான உபகரணங்கள்  வழங்க வேண்டுமென்று யோசனை சொன்னார். அதுவே பின்னர் உலருணவு சமையல் பாத்திரங்கள் என்ற பெயரைப் பெற்றது. அரச உத்தியோகத்தர் இடம் பெயர்ந்தாலும் சம்பளம் கிடைக்கும். மற்றவர்கள் தொழில் தொடங்க நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அது போலவே இருப்பிடம் அமைக்கவும்  நிதியுதவி வழங்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்தார். அவை சிறிது சிறிதாக நடைமுறைப்படுத்தப் பட்டது.
1987 இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட பின் “ஒருங்கிணைந்த புனர்வாழ்வு உதவித்திட்டம்” என்பது நடைமுறைப்படுத்த பட்டபோது, சமைத்த உணவு சமையல் பாத்திரங்கள் மீளக் குடியமர்தல் படி ,  உற்பத்தி முயற்சி நன்கொடை வீடமைப்பு உதவி  என்ற பெயர்கள் COOKED MEALS,COOKING UTENSILS, RESETTLEMENT ALLOWANCE,PRODUCTIVE ENTERPRISE GRANT, HOUSING ASSISTANCE ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்யப்பட்டு நாடெங்கும் பரவலாக அறிமுகமானது.