Thursday, November 29, 2007

இப்படியுமொரு காலம் இருந்ததே தெரியுமா?



பொதுவாக சம்பவங்களைக் குறிப்பிடும்போது கூடவே காலத்தையும் குறிப்பிடுவது வழக்கம். சில வேளைகளில் கி.மு- கி.பி.என்றும் நூற்றறாண்டு எனவும் குறிப்பிடுவதும் உண்டு. நான் தெரிவிக்கும் சம்பவங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதியல்ல கடந்த வருடம். அதற்கு முந்திய வருடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம்.

ஆம்

அண்மையில் நடைபெற்ற தேர்தலையடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வடபகுதிக்கும் வன்னிக்கும் அத்தியாவசியப் பொருட்ககளை அனுப்பவும் பாதைத்தடைகளை அகற்றவும், தரை வழிப்பாதையைத் திறக்கவும் நடவடிக்கை எடுப்பதுபற்றிப் பேசப்படுகிறதல்லவா?

1977 இலும் ஒரு தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்களுக்கு அறிமுகமான வசதியான விடயங்களில் சொகுசு பஸ் வண்டிச் சேவையும் ஒன்று. குறிப்பாக நாட்டின் தலைநகரான கொழும்புக்கும் இடையே புகையிரதமே பிரதானமான போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. ஆனால் பணவசதிபடைத்தவர்களுக்குக்கும் நேரத்தை மிக முக்கியயமாகக் கருதியவர்களுக்கும் சொகுசு பஸ் வண்டிகள் பயணத்தை எளிதாக்கின.

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருப்பிடங்களில் இரவுச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு சொகுசு பஸ் வணண்டியில் அமர்வார்கள். இருக்கையோடு இணைத்துள்ள விசையை அழுத்தினால் அவை சாய்மனைக்கதிரையாக கட்டிலாக மாறி களைப்பே தெரியாத பயணமாக மாறிவிடும்.

குளிரூட்டி உடலுக்கு இதமளிக்கும். ஒலிபெருக்கி பாடலிசைக்கும். தொலைக்காட்சியில் ஓரிரு சினிமாப்படங்களையும் பார்க்கும் வசதி. புறக்கோட்டை அல்லது யாழ்ப்பாணம் பஸ்நிலையம் சென்று தான் ஆசனம் பிடிக்க வேண்டுமென்பதில்லை. முன் கூட்டியே ஆசனப்பதிவு இதர ஒழுக்கு செய்யும் போது வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி , பருத்தித்துறை, காங்கேசன்துறை, கொடிகாமத்திலிருந்து பிரயாணம் செயக்கூடிய வசதியும் இருந்தது. அந்தக்காலம் அப்படியொன்றும் அதிக தூரதத்தில் இருக்கவில்லை.

1967ஆம் ஆண்டு கொழும்பில் வேலைகிடைத்தது. அப்படியொன்றும் பெரிய வேலை யல்ல . எழுதுவினைஞர் வேலை . எண்பது ரூபா சம்பளம். வாழ்க்கைப்படி, விசேடபடி என்று பல படிகளைச் சம்பளத்தோடு சேர்த்துத் தந்தாலும் மொத்த வருமானம் 200 ரூபாவுக்கும் குறைவானதே! அதில் அப்படி இப்படி கழிவு போக நூற்றுமுப்பது அளவில் கைக்கு வரும் சம்பளம் வாங்கிய உடனே பெரிய தபால் அலுவலகத்தில் கிய+வரிசையில் நிற்க ஐம்பது ரூபா மணி ஓடராக மாறி யாழ்ப்பாணம் சென்றுவிடும்.

‘சமரி’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கூட்டுவிடுதி வாழ்க்கை. அவ்விடுதியில் நான்கு பேர் தங்கும் அறைக்கு மாத வாடகை நூற்று ரூபா. அதில் என் பங்கு இருபத்தைது ரூபா. மிகுதியில் மறுமாத சம்பளம் வரை உணவு உட்பட சகலதுக்குமாக சரியாகத்திட்டமிட்டாலும் சம்பளத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன் சட்டைப்பையையும் வயிற்றையும் மாறிமாறித்தடவும் வாழ்க்கை தான். அப்போதுதெல்லாம் சனிக்கிழமைகளிலும் ஒரு மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். இருபத்திமூன்றாம் திகதியன்று ஒருசனிக்கிழமை அலுவலகத்திலுருந்து புறப்பட்டு மதிய உணவு என்ற பெயரில் சிலவற்றை உள்ளே தள்ளிக்கொண்டு கொட்டாஞ்சேனையில் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன்.

கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு பஸ் கட்டணம் ஐந்து சதம் தான் ஆனாலும் அதை பிடிச்சம் பிடிக்க சில நாட்களில் நடந்து போவுது வழக்கம். அந்த சனிக்கிழமை நடந்து சென்றபோது சட்டைப்பைக்குள் விரல்களை விட்டு சில்லறைகளைத் தடவியபோது ஒருவித திருப்தி.

ஐம்பது ஒன்று. இருப்த்தைந்து இரண்டு, நாலு பத்து எல்லாமாக ஒரு ரூபா நாற்பது சதம். திங்கட்கிழமை வரையும் சமாளிக்கலாம். திங்கட்கிழமை சம்பளம் வந்து விடும் இப்பபோய் நடந்த களைப்பு தீர நல்லாக நித்திரை கொள்ளவேண்டும்.

அறைக்கதவில் ஒரு தந்தி செருகப்பட்டிருந்தது. எடுத்து பிரித்தேன். அன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தந்தையார் அனுப்பியிருந்த தந்திதான் அது. இலங்கையில் தந்திகள் தபால் கந்தோரில் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் சில மணி நேரத்தில் சரியான விலாசங்களைச் சென்றடைந்த காலம் என ஒன்றிருந்து.

யாழ்ப்பாணத்தில் காலை பத்து மணிக்கு ஒப்படைத்த தந்தி கடமையுணர்ச்சியிள்ள உத்தியோகத்தர்களால் நான் தங்கியிருந்த அறை வரை வந்த நானில்லாத வேளையிலும் யாரோ ஒருவரால் பொறுப்பு ஏற்கப்பட்டு அறை கதவில் அழகாகச் செருகப்பட்டிருந்தது.

தந்தியை பிரித்துப்படித்த போது தடுமாறி விட்டேன் ‘’ அம்மாவுக்கு சுகமில்லை. உடனே வரவும் -அப்பா’’ தந்தியைப்படித்ததும் எல்லாவற்றையும் மறந்தேன். ஒரே கவலையாக இருந்தது. சட்டையைக் கழற்றி ஆணியில் கொழுவி விட்டு கட்டிலில் படுத்துகொண்டு கூரையைப் பாரத்த வண்ணம் யோசித்தேன்.

‘’ அறிவு தெரிந்த பருவம் முதல் என்னை ஆளாக்கிய அம்மாவின் தியாக உணர்வுகள், செம்மையான வழிகாட்டுதல்கள், அன்பான அரவணைப்புகள், அடிப்பது போலக்கடித்தது இலாவமாகத் தன்வழிப்படுத்தி திருந்த வைக்கும் திறன்’’

‘’அவசரமில்லாவிட்டால் அப்பா தந்தியடித்திருக்கமாட்டார்’’

‘’கந்தோர் நாளென்றால் இலவச புகையிரத ஆணைச்சீட்டு எடுத்திருக்கலாம். சிறிதளவு பணம் இருந்தாலும் சமாளிக்கலாம்’’
‘’டக்டக், டக்டக்’’தடதடவென்று அறைக்கதவைத்தட்டிய வண்ணம் அடுத்த அறை வாசி சிங்கம் உள்ளே நுழைத்தார். அவர் வந்த பரபரப்பில் என்ன யோசித்தேன் என்பதையும் மறந்து விட்டேன்.

‘’நடா காரொண்டு மன்னாரக்குப் போகுது. நான் அதிலை ஊருக்குப் போறன். வர ஒரு கிழமையாகும். இந்த வாடகைக்காசை டலிமா மாஸ்டரிடம் கொடு’’ சொல்லிய வண்ணம் எனது கையில் இருபத்தைந்து ரூபாவை வைத்தவர் எனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அறையிலிருந்து வெளியேறினார். அறைக்கு வெளியே கார் புறப்படும் ஒசை கேட்டது. மன்னார் வங்காலையைச் சேர்ந்த சிங்கம் எனது அடுத்த அறையில் தங்கியிருந்தார். அவர் தந்த இருபத்தைந்து ரூபாவை பலதடவை மாறி மாறிப் பாரத்தேன். ஆச்சரியம்! மகிழ்ச்சி’’

இன்று இரண்டு மூன்று இலட்சம் ரூபாவை யாராவது சும்மா தந்தால் கூட அன்றைய மகிழ்ச்சி வருமா என்பது சந்தேகம் தான்!

மணிக்கூமட்டைப் பார்த்தேன். மாலை ஆறு மணி கடந்து ஐந்து நிமிடம். அவசரம் அவசரமாக சட்டையை மாட்டினேன். காரம் துவாய் வேறு தேவைப்படுமா தேவைப்படாதா என்று எண்ணாமல் சில பொருட்கள் சிறிய பையில் திணிப்பு.

நாலு வாரத்தைகள் கடதாசியில் ‘’யாழ்ப்பாணம் அவசரமாகப்போறன் - நடா’’ என்று கிறுக்கி அதனைக் கதவிடுக்கில் செருகி வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாக கொட்டாஞ்சேனை பஸ் நிலையம்.கோட்டை புகையிரத நிலையத்தில் பத்து ரூபா நோட்டை டிக்கட் பெறும் கவுண்டரில் வைத்தேன். யாழ்ப்பாணம் செல்வதற்க்கான டிக்கட்டும் பத்துசதம் சில்லறையும் எனக்கு கிடைத்தது.

இரவு 7.15 மணிக்குப் புறப்பட்ட புகையிரதம் காலை 6மணிக்கு முன்பாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஆனாலும் அது சில இடங்களில் மெதுவாகச் செல்லும் போதும் நேரெதிரே வரும் மற்றொரு புகையிரதத்துக்கு வழிவிடுவதற்காக நின்ற போதும் வயதான பிரயாணிகள். ‘’இந்த யாழ்ப்பாணமெயில் இப்படித்தான் சரியான சிலோ உவன் ட்ரைவர சரியில்லை. ஒரு பிடி பிடிச்சுக் கொண்டு போயிருக்கலாம். ஓவர் ரைம் எடுக்கின்றதுக்காகச் சிலோவாகப் போறன் ‘’ என சாரதியையும் புகையிர திணைக்களத்தையும் திட்டித் தீர்த்தார்கள்.

நான் வயது அனுபவமும் குறைந்தவனாக இருந்தால் யாரையும் ஏசவில்லை. ஒருவேளை வளர்ந்த பின் வயதானபின் இன்னும் அந்த புகையிரதத்தில் பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்திந்தால் அவர்களைப் போல் திட்டியிருப்பேனோ என்னவோ?

யாழ்ப்பாணத்தில் தந்தையார் வேலை செய்யத கடைக்குச் சென்றேன்.

‘’ தம்பி!’’ என்னை கண்டதும் அப்பா சிரித்தாரா? அம்மாவை எண்ணி அழுதாரா? அவரை கேடக வேண்டும். தந்தையார் சொன்னபடி யாழ். பெரியாஸ்பத்திரி சென்று காவலாளியை கெஞ்சி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அம்மாவைப் பார்த்தபோது தான் நிம்மதி. என்னை பார்த்தும் அம்மாவுக்கு அரைவாசி வருத்தம் மாறி விட்டது போலும். நன்றாகச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

நாங்கள் சிரிப்பதைக் கண்டு பொறாமைப்பட்ட நேர்ஸ் ‘’டொக்டர் வாறார்!’’ என்றபடி என்னை விரட்டி வெளியே அனுப்பி விட்டார்.

காவலாளியின் கருணையோடு களவாக ஆஸ்பத்திக்குள் நுழைந்து அம்மாவைப் பாரத்த கதையை அப்பாவிடம் சொன்னேன். பின்னர் மத்தியானம் பன்னிரெண்டு மணிமுதல் ஒரு மணிவரை அம்மாவின் அருகிலேயே நின்றேன்.

அம்மா என் மீது மட்டும்தான் பாசமென்றிமில்லை- ‘’ தம்பி வந்தனி தங்கச்சி தம்பியையும் பார்த்து ஆறுதல் சொல்லிப் போட்டுவா’’

அம்மாக்கு வந்த சாப்பாட்டில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு விட்டு யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் ஒரு பிஸ்கட் பெட்டியை வாங்கி கொண்டு சொந்தக் கிராமாகிய உடுப்பிட்டிக்குக் சென்றேன்.

தம்பி தங்கைக்கு ஆறுதல் சொல்லி விட்டு மீண்டும் பஸ்ஸில் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவிலுள்ள உடுப்பிட்டிக்கு சென்று திரும்ப இரண்டு மணித்தியால நேரமும் ஒரு ரூபா பத்து சதமும் போதும். ஏனென்றால் இடையிடையே சோதனை முகாம்களும் வீதித்தடைகளும் இல்லை. அறுபது சதம் கொடுத்தால் ஐந்து சதம் கொடுத்தால் ஐந்து சதம் மிகுதி தரக்கூடிய பஸ் நடத்துநர்களும் சேவையிலிருந்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மீண்டும் ஆஸ்பத்திரியில் நுழைந்தேன். அப்பாவும் வந்திருந்தார். அம்மாவுக்கு மத்தியானம் இருந்ததைவிட நல்ல சுகம். அம்மாவின் கேள்வியா அல்லது வேண்டுகோளா?

‘’தம்பி இரண்டு மூண்டு நாளைக்கு நிண்டு போனாலென்ன?’’

‘’தந்தி கிடைத்தவுடனே வந்தவன். லீவும் எடுக்கயில்லை. போகாவிட்டால் வேலையாலை நிப்பாட்டினாலும் நிப்பாட்டிப் போடுவாங்கள்’’ அம்மாவைச் சமாளித்தார் அப்பா.

ஆறுமணிக்கு பார்வையாளர் வெளியே செல்ல வேண்டிய நேரம். அப்பாவும் புகையிரத நிலையம் வரை கூடவே வந்தார். திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு முன்பாக கொட்டஞ்சேனை அறைக்கு சென்றவுடன் அறைவாசிகளிடம் சொன்னேன்.

‘’கடவுள்தான்..... தந்தியை பார்த்திட்டு காசில்லையே எண்டு முழுசிக்கொண்டிருந்தன். சிங்கமண்ணை இருபத்தைஞ்சி சதத்துக்கு ஒருபிஸ்கட் பெட்டி பேந்தும் திரும்பி வர ரயில் டிக்கட் எல்லாச் செலவும் போக இன்னும் கொஞ்ச சில்லறை மிச்சமிருக்கு.

சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளின் மீது விரல்கள் தாளமிட்டன.

‘’தம்பி நீ பெரிய பிழைவிட்டிட்டாய்’’ என்று பத்மநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.

‘’ஏனண்ணே ‘’ என்று நான் கேட்டதும்

‘’இன்னொரு ஐந்து ரூபா செலவைக் குறைச்சிருக்கலாம். உனக்கு அனுபவம் காணாது’’ என்ற பத்மநாதன் தொடர்ந்தார்.

‘’ஒரு விக்எண்ட் டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் போனால் பதினைஞ்சு ரூபாயோடை போய்வந்திருக்கலாம்;’’

பின்னர் தான் தெரிந்த கொண்டே தூர இடங்களுக்கு வார இறுதி டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் வாங்கினால் ஒன்றரைக் கட்டணத்தில் இருவழிப் பயணம் செய்யலாம்.

அதாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போக பத்து ரூபா மீண்டும் அங்கிருநந்து வர பத்து ரூபா என்றால் வெள்ளிக்கிழமை பதினைநடத ரூபா கொடுத்து டிக்கட் வாங்கினால் அதே டிக்கட்டில் திங்கட்கிழமை திரும்பி வரலாம்.


பாதுகாப்பு அமைச்சு அனுமதி, தடை முகாம், அடையாள அட்டை என்ற சொற்களைக் கேள்விப்படாத காலத்தில் விடுதலைகூட எடுக்காமல் இருபது ரூபா செலவில் யாழ்ப்பணம்சென்று திரும்பியவர்களும் கொழும்பில் வாழ்ந்திருக்கின்றார்கள்.



நன்றி
வீரகேசரி(வார மலர்)
27-01.2002

Friday, November 23, 2007

தலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்து - ஒரு அவுஸ்ரேலியா அனுபவம்.

அரச நிர்வாகத்துறையில் நிறைவேற்று உத்தியோகத்தர் என்பதால் கையெழுத்து வைப்பதும் என் கடமைகளில் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கான கையொப்பங்கள். அத்தகைய கையெழுத்துக்களில் ஒன்று ஒருவரின் தலையெழுத்தைத் தீர்மானித்தது.

80 களின் நடுப்பகுதியிலிருந்து வட பகுதி மக்களின் பல்வேறு தேவைகளுக்கும் ஈடுகொடுக்க கூடிய அமைப்பாக கூட்டுறவு இயக்கம் பணி புரிந்தது. உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் கொள்வனவு செய்ய கூட்டுறவு சங்கம், தட்டுப்பாடான பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள கூட்டுறவுக் கடை, அரசாங்க ஊழியர்களி;ன் மாதாந்த சம்பளக் காசோலைகளைக் காசாக மாற்றிக் கொள்ள கூட்டுறவுச் சங்கக் கணக்கு....

இப்படிப் பல நடவடிக்கைகளால் வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளராகிய எனது வேலைப்பளு மிகமிக அதிகமானது.

பாதுகாப்புப்படையினரின் கெடுபிடிகள், இயக்க தலையீடுகள், மோதல்கள் என்பனவற்றுக்கு தினமும் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

எனது கடமைகளை எளிதாக்கிய கூட்டுறவு ஊழியர்கள் சிலர் சொல்லியும் சொல்லாமலும் இடமாற்றம் பெறுவதிலும் வேறு வேலைகளைப் பெறுவதிலும் அக்கறை செலுத்தினர். இந்நிலையில்

“வணக்கம் சேர், மன்னிக்க வேணும்” குரல் கேட்டு நான் தலையை நிமிர்த்திய போது அபிவிருத்திக்கு பொறுப்பான கூட்டுறவு உத்தியோகத்தர் சற்குணலிங்கம் -

உள்ளே நுழைவதா? – நுழையாமல் வெளியே செல்வதா? என இரண்டு மனங்களுடன் தத்தளிப்பதை உணர்ந்தேன்.

சற்குணலிங்கத்தைப் பற்றி நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். பல உத்தியோகத்தர் தொழில் புரியப் பயப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் தங்கியிருந்து கடமை செய்தவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலும் தங்கியிருந்து வேலை செய்தவர். தங்குமிடப் பிரச்சனை, சாப்பாட்டு பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, என எந்த சாட்டுப்போக்கும் சொல்லாது நம்பிக்கையுடன் கடமைகளைப் பொறுப்புணர்ந்து செய்பவர்.

“சற்குணம் என் பிரச்சனை? என்றதும் அவர் மெதுவாக பெரிய குண்டைத் தூக்கி போட்டார்.

“சேர்.. எனக்குத் தெரியும். இப்ப உங்களுக்கு ஆள் பற்றாக்குறை பல பிரச்சனைகள். வேலைகளும் கூட....” என்று சொல்லிய வண்ணம் வெளிநாடு செல்வதற்கான விடுதலை விண்ணப்பத்தை என்னிடம் தந்தார்.

சற்குணலிங்கத்தி;ன குடும்ப பொறுப்புக்களையும் அரசாங்க சம்பளத்தை கொண்டு சமாளிக்க முடியாததால், மேலதிக செலவுக்காக விவசாயம் செய்யப்புறப்பட்டு நட்டப்பட்டதையும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் ஊழியர் பற்றாக்குறையையும் , வேலைப்பளுவையும் பார்க்காமல் சற்குணலிங்கத்தின் விடுதலைப் விண்ணப்பத்தில் வைத்த கையெழுத்து , அவரது தலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்தாகி விட்டது. விடுதலையில் அவுஸ்ரேலியா சென்றவர் அங்கேயே நிரந்தரமாகத் தாங்கி விட்டார். மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டார்.

அவரிடமிருந்து வாழ்த்து மடல்களும் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. பதில் கடிதங்கள் நான் அனுப்புவதில்லை. அவர் தொடர்ந்து தொடர்பை பேணியதுடன் என்னையும் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்க அழைப்பு அனுப்பினார். மௌனம் எனது பதிலாகியது.

2001 இல் புலமைப் பரிசில் பெற்று நியூசிலாந்து சென்று வந்த வீரகேசரி செய்தியைப் படித்த அவர் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அழைத்தார்.

இரண்டு வருடங்களுக்குப் பின் வருவேன் என்று சொல்லியதை உண்மையாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து, சுமார் சொல்லிய தவணைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து வந்த பதிவுத் தபாலைப் பிரித்தேன்.

அவுஸ்ரேலியா விசா பெறுவதற்கான பத்திரங்கள், கடிதங்கள் ஆகியவற்றுடன் ஆரம்ப செலவுக்கான ஆயிரம் டொலர் வங்கி வரையும் இருந்தன. அழைப்பை ஏற்று அவுஸ்ரேலியா சென்றேன்.

அவுஸ்ரேலியா தொழில் வாய்ப்புக்களை பற்றி அவரிடம் கேட்டேன். “ நான் வந்த புதிதில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதில் எதுவித கஸ்ரமும் இருக்க வில்லை. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய சப்பாத்து தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டேன். முன் அனுபவம் இருக்கா? என்ற ஒரே கேள்வி மட்டும் கேட்டார்கள். “ஓம்” இலங்கையிலிருந்த போது இரத்மலானையில் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்தேன் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். உடனடியாக வேலை கிடைத்து விட்டது” என்றார்.

வேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லையா? என்றேன் நான்.

“இல்லை சேர், இங்கே பெயர், வயது, ஆணா, பெண்ணா, அரசியல்வாதிகளின் சிபார்சு கடிதம் எதுவும் அவசியமில்லை என்று பதிலளித்தவாறு அனுபவங்களை தொடர்ந்தார்.

நான் ஒரு காலமும் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை. என்னை பெரிய இயந்திரங்களுக்கு முன்னால் கொண்டு போனதும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, இரத்மலானை தொழிற்சாலையில் வேறு வகையான இயந்திரங்கள். இங்கே புது மாதிரியான இயந்திரங்கள் என்றதும் அந்த இயந்திரங்களை இயக்கும் முறைகளைச் சொல்லித் தந்தார்கள். பழகி விட்டேன்.

போன புதிதில் பொதுவாக பஸ் மூலம்தான் தொழிற்சாலைக்குப் போனேன். இரண்டு நாட்கள் வேலை செய்து மூன்றாவது நாள் போகவில்லை. வீட்டில் நின்று விட்டேன். தொழிற்சாலை மனேஜர் வீடு தேடி வந்து வேலைக்கு வரச் சொன்னார்.

அது மட்டுமல்ல, ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் வேலை செய்யச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து பெற்ற இரட்டிப்புச் சம்பளத்தில் ஒரு பழைய காரையுமு; வாங்கினேன்” என்றார். எனது சந்தேகம் “ ஒரு நாள் உழைப்பில் வாங்கிய கார் ஓடுமா”? “ இரண்டு வருடங்கள் அந்தக் காரை பாவித்த பின்னர் விற்றுவிட்டேன். இங்கே காரும் நடமாடும் தொலைபேசியும் அவசியம். பஸ்சிலையோ அல்லது ரெயினிலையோ போறதை விட சொந்த கார் வைத்திருக்கிறது இலாபம். நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போய் வரலாம்” என்றார்.

உண்மைதான். சற்குணலிங்கத்தின் வீட்டில் ஐந்து கார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு கார். ஒவ்வொருவரிடமும் கையடக்க தொலைபேசி. சற்குணலிங்கத்திற்கு ஆண்பிள்ளை ஒன்று. பெண் பிள்ளைகள் மூவர். சிறியவர்களாய் இருந்த போது படிப்புச் செலவு சற்குணலிங்கத்தினுடையது. அவர்கள் வளர்ந்ததும் உழைத்துக் கொண்டே படித்தார்கள். படித்துக் கொண்டே உழைத்தார்கள். பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்து நிரந்தரமான வேலைகளையும தேடிக் கொண்டார்கள்.

அது பற்றி அவரின் மூத்த மகள் சுஜிவாவிடம் கேட்டேன். சுஜிவாவின் விளக்கம் “ அங்கிள் இங்கே தொழிற்சாலைகள் , விற்பனை நிலையங்கள் பல இருக்கின்றன. சில நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து இருக்கும். சில நேரம் எங்களுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலம் வேலை செய்வதற்கு வசதியிருந்தாலும் வேலை கிடைக்கும்.

ஒரு மணித்தியாலம் வேலை செய்தால் 21 டொலர் சம்பளம் கிடைக்கும். எங்களுக்கு படிப்பு, விரிவுரைகள் இல்லாத போது கேட்டால் வேலைக்கு வரச் சொல்லுவார்கள். சில விற்பனை நிலையங்களில் சம்பளத்தை விட விற்பனையாகும் பொருட்களின் விலையில் குறிப்பிட்ட வீதத்தை ஊக்குவிப்பாகவும் தருவார்கள்.

எல்லாம் வேலை செய்கின்றவர்களையும் நிர்வாகத்தையும் பொறுத்தது. செல்போனில் நேரத்தைச் சொல்லி வேலை ஒழுங்கை மேற்கொள்வோம். ஒவ்வொருவரிடமும் கார் இருப்பதால் போக்குவரத்துப் பிரச்சனை இல்லை.

சற்குணலிங்கத்தின் கடைசி மகளான சுமணா மருத்துவ கல்லூரி. நூலகத்துக்கு இரவு பதனொரு மணி போல எங்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பல்கலைகழக மாணவர்கள் நூலகத்தையும் கணனிக் கூடத்தையும நள்ளிரவிலும் பயன்படுத்தக் கூடிய வசதியைப் பார்த்து பிரமி;த்தேன்.

எதுவித பயமும் இல்லாமல் இரவில் பெண்கள் கார் ஓட்டிச் செல்லலாம். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கலாம்” என்பதை அவரின் இரண்டாவது மகள் லக்சிகா நிரூபித்துக் காட்டினார்.

மாதச் சம்பளம், நாட்கூலி என்ற சொற்களுக்கு பழக்கப்பட்ட எனக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு கிடைத்தால் அந்த நேரத்திலும் உழைத்து பணம் தேடக் கூடிய வசதியை அவுஸ்ரேலியாவில் காண ஆச்சரியமாக இருந்தது.

கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சற்குணலிங்கத்தின் மகன் லக்சன், அவர் பகுதி நேர வேலை செய்யும் எரிபொருள் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பன்னிரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம். அங்கே பல்வேறு பொருட்கள் விற்பனைக்கிருந்தன. லக்சன் ஒருவர் மட்டும் கணனியுடன் எரிபொருள் நிலையம் முழுவதையும் நிர்வாகித்தார். வண் மன் சோ.

ஒரு நாள் மாலை ஏழுமணி சற்குணலிங்கத்துடன் வீட்டுக்குத்திரும்பியதும் திருமதி சற்குணலிங்கம் பேப்பர் போடுற வேலை இருக்கு என்றார்.

இலங்கையில் காலையில் பல செய்தித்தாள்களும் மாலையில் சில செய்தித்தாள்களும் வெளிவருவதை அறிவேன். அவற்றை வீட்டுகளுக்கு சென்று விநியோகிப்பதை “பேப்பர் போடுதல்” என அறிந்திருந்த எனக்கு அவுஸ்ரேலியாவில் “பேப்பர் போடுதல்” சற்று வித்தியாசமாகப்பட்டது.

வர்த்தக நிறுவனங்கள், தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக அதிக அளவில் சந்தைப்படுத்துவதற்காக விதவிதமான விளம்பரத்தாள்களை தயாரித்து வைத்து இருப்பார்கள். அந்த விளம்பரத்தாள்கள் எல்லோரது வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட வேண்டுமென்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

அதற்காக வீதிகளை பகிர்ந்து சிலரை ஒழுங்கு செய்திருப்பார்கள். விளம்பரத்தாள்களை வீடுகளிலுள்ள தபால் பெட்டில் போடும் வேலைதான் “பேப்பர் போடுதல்” விளம்பரதாள்களின் எண்ணிக்கை அளவுகளைப் பொறுத்து விநியோகத்துக்கான கூலி வழங்கப்படும்.

திருமதி சற்குணம் சொன்னார் “இது நடை – நல்ல உடற்பயிற்சி. நாங்கள் பின்னேரம் நடந்து கொண்டே தபால் பெட்டியில் போடுவோம்”

நடப்பது நல்லது என்பதால் நானும் அவர்களுடன் கூட நடந்து சென்றேன்.

சற்குணலிங்கம் இடையிடையே குனிந்து சில பொருட்களை எடுத்து சட்டைப் பொக்கற்றில் போட்டதை அவதானித்தேன்.

“இங்கிருக்கும் சிலருக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை. சில்லறைக் காசுகளை தெருவோரம் வீசி விடுவார்கள். நான் கண்டால் அவற்றை எடுத்து வேறாக ஒரு பெட்டியில் போட்டு வைப்பேன். அப்படிப் போட்டு வைத்த பணத்தில் புத்தகங்கள் வாங்குவேன் என்றார் சற்குணலிங்கம்.

எனது சுமாரான மதிப்பீட்டின் படி நாப்பதினாயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் அவரின் வீட்டு அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வீதியில் இன்னுமோரிடத்தில் ஒரு புதிய காட்போட் பெட்டி அக்கம் பக்கம் யாருமில்லை. மெதுவாகக் காட்போட் பெட்டியைத் திறந்தேன். உள்ளே ஒரு தொலைக்காட்சி பெட்டி. புதிது போலவே தோற்றமளித்தது. எனது ஆச்சரியத்திற்கு பதில் கிடைத்தது.

இது நல்ல ரிவிதான். புதிய மொடல் வாங்கியதும் பழையதை வெளியே வைத்துவிடுவார்கள். சிலர் இதைக் கொண்டு போய் பாவிப்பர்கள். இதில் இன்னொரு விடயம் எப்படி பாவிப்பது என்ற ஐளெவசரஉவழைn அயரெயட உம் உண்டு. எடுத்துக் கொண்டு போகின்றவர் கஸ்ரப்படக் கூடாது என்பதற்காக பணம் கொடுத்து வாங்கிய பற்றுச் சீட்டையும் பெட்டிக்குள் வைத்திருபார்கள்.

ஒரு கணம் யோசித்தேன் ‘ எவ்வளவு நல்ல மனம்”

தோட்ட வேலைகளுக்குப் பழக்கப்பட்ட எனது நண்பர் கூரையிலிருந்து விழும் தண்ணீரைப் பயன்படுத்தி வெங்காயம், மரக்கறி, கறிவேப்பிலை தோட்டமும் வைத்திருக்கிறார். சுமார் பத்து கறி வேப்பிலை கொண்ட சிறு பிடியின் விலை ஒரு டொலர்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தோர் திட்டம் போட்டு வாழ்வதால் செலவைச் சுருக்கி மிச்சம் பிடிக்கின்றனர்.

நமது நாட்டில் பெற்றோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும். ஒரு போதும் இறங்காது. ஆனால் அவுஸ்ரேலியாவில் வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கற்கிழமை வரையும் நீண்ட தூரங்களுக்காக வாகனங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நாட்களில் பெற்றோல் டீசல் விலை உயர்ந்திருக்கும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும் வரை விலை குறைந்திருக்கும்.

இதை நன்கு புரிந்து கொண்ட நம்மவர்கள் செவ்வாய்க்கிழமைக்குப்பின் பெற்றோல், டீசல் கொள்ளவனவு செய்ய ஆரம்பித்து வியாழக்கிழமையுடன் நிறுத்திக்கொள்வார்கள். மறுபடியும் தேவைப்பட்டால் அடுத்த செவ்வாய்க்கிழமை வரும் வரை காத்திருப்பார்கள்.

வங்கி நடைமுறைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். வங்கி வாசலுக்கு சென்றதும், உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். கையெழுத்து வைக்க தெரிந்தால் போதும் வங்கி கடன் தரும். சம்பளக் கொடுப்பனவுகள் யாவும் வங்கி மூலம் செலுத்தப்படுவதால் வங்கி எளிதாக கடன் அறவீடுகளைச் செய்து விடும்.

ஒரு வர்த்தக வங்கியில் வாடிக்கையாளர் ஐந்து நிமிடத்திற்கு மேல் தமாதிக்க நேரிட்டால் அந்த வங்கி வாடிக்கையாளரைத் தாமதிக்க வைத்ததற்காக ஒரு கொடுப்பனவை செய்கிறது. அவ்வளவு துரித நடவடிக்கைகள் வங்கியில்.

நண்பர் இல்லத்தில் ஐந்து கார்கள் இருப்பதால் எனது சந்தேகம் அவர் சொன்னார். “கார் வாங்கிறது சுகம். கார் ஒட்டுவதற்கான லைசென்ஸ் பெறுவது கஸ்ரம்” சோதனைகளில் திருப்தியான பின்பே அனுமதிப்பத்திரம் கிடைக்கும்.

நம் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர் ஒருவர் மோட்டார் வாகன பரிசோதகருக்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக “அன்பளிப்பு” கொடுக்க முயன்றார்.

காரை நன்றாக ஓட்ட முடியுமானால் சைசென்ஸ் தருவேன். உன்னிடம் அன்பளிப்பு வாங்கி லைசென்ஸ் தந்தால் நாளை பலர் வீதியி;ல் வாகன விபத்தில் இறக்கக் கூடும். சிலவேளை அவர்களில் நானும் ஒருவனாக இருக்கக் கூடும்” என்றாராம் மோட்டார் வாகன பரிசோதகர்.

அங்கே மொழிபெயர்ப்பாளர்கள் வீட்டிலிருந்தே மொழி பெயர்க்கலாம். உதாரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் தமிழ் நோயாளிக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் டொக்டர் நோயாளிக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்து வைத்தியம் செய்கிறார்.

சற்குணலிங்கம் அவுஸ்ரேலியாவில் இருந்தாலும் பிள்ளைகளை நாட்டுப்பற்றுடன் வளர்த்து வருகிறார். சுத்தமான தமிழ் மொழியில் கதைக்கின்றார்கள்.

சமய வழிபாட்டுக்காக தனியாக ஒரு அறையை புனிதமாகப் பேணி வருவதுடன் இலங்கை நினைவாக இலங்கை பட உருவமுள்ள மரச் சட்டத்தில் மணிக்கூட்டை பொருத்தி வைத்திருக்கிறார்கள். மணிக்கூடும் இலங்கை நேரத்தை காட்டுகிறது. பல வீடுகளில் உட்புறத்தில் வளர்க்கப்படும் “காசு மரம்” இவர் வீட்டிலும் உள்ளது. அந்த மரத்தை நீருற்றி நன்றாக வளர்;த்தால் பணம் பொழியும் என்ற நம்பிக்கை நம்மவரிடம் காணப்படுகின்றது. பிள்ளைகளின் படிப்பு முடிந்து தொழிலும் தேடிக் கொண்டதால் அவரை இலங்கை வருமாறு அழைத்தேன்.


ஒரு முறை வரவேண்டும் ஓமந்தையில் ஒரு இருக்கிறது என்றார்.

“காணியை விற்பதற்கா”? என்று கேட்டேன்.
“இல்லை” என தலை அசைத்த சற்குணலிங்கம் சொன்னார்.

“ஏதாவது பொதுத்தேவைக்கு அந்த காணியை அன்பளிப்பு செய்ய விரும்புகின்றேன். பிள்ளைகளுக்கு இங்கேயே வீடு வாசல் எல்லாம் உண்டு. அந்தக் காணியை வந்து அன்பளிப்பாக வழங்க வேண்டும். முதலில் பிள்ளைகளுக்கு துணை கிடைக்கட்டும்” என்றார்

சற்குணலிங்கத்தின் தலையெழுத்தை என் கையெழுத்து மாற்றியிருக்காவிட்டால் ஓமந்தைக் காணி சீதனக் காணியாகவும் மாறியிருக்கலாம்.


26.06.2005
வீரகேசரி வாரமலர்

Tuesday, November 13, 2007

சுடரொளி தந்த சுவை

‘’மனோலயம்'' நூல் வெளியீட்டு விழாவில் இடம் பெற்ற நகைச்சுவையான உரையின் சில பகுதிகள். சுடரொளி பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அந்த பகுதியை உங்களுக்கு தருகின்றேன்.

1) புலம்பல்கள் பல ரகம்

‘’மனோலயம் நினைவு மலர் வெளியீட்டு விழாவிலே வாய்விட்டுச் சிரிக்க நல்ல நகைச்சுவை கதைகள் கிடைத்தன. ‘என்ன. நினைவுமலர் விழாவில் வாய்விட்டு சிரிக்க நகைச்சுவை கதைகளா?’

அப்புடின்னு கேட்கத் தோணல்ல. சொற்பொழிவுன்னா நாலும் இருக்கனும், நகைச்சுவை கட்டாயம் இருக்கனும். இந்தமலர் வெளியீட்டு விழாவிலே பேசுனவங்க சபாஸ் போடுற மாதுரி நன்னா பேசுனாங்க’’

‘’அடி சக்கை”

‘’கல்வி அமைச்சு மேலதிகச் செயலர் தில்லைநடராஜா இருக்காங்களே! அவுக ஒரு புலம்பல் கதை சொன்னாங்க’’

‘’சொல்லுதியலா!’’
‘’ ஒரு அந்தியேட்டி கிரியை நிகழ்வு. குடும்ப உறவினர் பெயரெல்லாம் வைச்சு ஆச்சி புலம்பல், ஆத்தா புலம்பல், பொஞ்சாதி புலம்பல்ன்னு கல்வெட்டு பதிவு செய்வாங்கலாமில்லலே. அது நடந்து கிட்டிருக்கு’’

‘’ஒருத்தர் இதை எல்லாம் பார்த்துக்கிட்டு இருக்கார். கண்ணு கலங்குகிறது. கை பிசைஞ்சிக்கிட்டு இருக்கு. பதிவுசெய்ரவருக்கு கையும் ஒடல்ல காலும் ஒடல்ல. அவரைப் பாரத்து நீங்க யாரு ? உங்க பேரு என்ன ? உங்களுக்கு என்ன வேனுமின்னு பதறிப் போய் கேட்கிறாரு.’’

‘’ஐயா சாமி!இவுக நமக்கே கொஞ்சம் பணம் தரணும். எப்புடி கேட்கிறதுன்னு தெரியல்ல. அதுதான் நம்ம பேரையும் பதிங்கன்னு சொல்லுதேன்.’’

‘’அடப்பாவி!’’
‘’ஆமா! இதை எப்படித்தான் பதியுறது?’’
‘’கடன்காரர் புலம்பல்ன்னு பதிஞ்சிட்டாப் போரது.’’





2) ஆட்டிப் படைக்கும் பப்ளிசிட்டி மோகம்


‘’பப்ளசிட்டி இருக்கே இதுவொரு பொல்லாத பிசாசு. சாதாரண மனிதன் முதல் அரசியல்வாதி, எழுத்தாளன், ஆட்சிட்யாளன் வரை எல்லோரையும் புடிச்சு. லோ லோன்னு ஆட்டி கைச்சிக்கிட்டிருக்கு. இதுலே இன்னொரு விசயம்என்னா அது பல விதத்திலும் புத்துப் பாம்பு மாதுரி தலையை வெளியிலே நீட்டும். இவுகளுக்கு அவுக பப்ளிசிட்டிக்காக இந்த பாடுபடுரது மத்தவங்க கண்ணுக்கு கேளிக்கையாக படுரது வெளங்கவே வெளங்காதாம்”

‘’அடப்பாவமே!’’
‘’இவ்வளவுக்கும் அவுக படுகிற பாடு ரொம்பவும் நையாண்டியாக இருக்கும். நம்ம தில்லைநடராஜா அவுக இதுக்குப் பொருத்தமாக அவுக கலந்துகின்ன விழாவிலே நடந்த ஒரு சமாசாரத்தை மனோலயம் நூல் வெளியீட்டு மேடையிலே சொன்னாங்க. இவுகமேடையிலே இருந்தப்போ ஒருத்தர் அடிக்கடி கிட்ட வந்து காதுல குசுகுசுத்தாராம்.’’
‘’அப்படி என்ன ரகசியம்’’
‘’பெருசா ஒன்னுமில்லே. காவற்காரன்
கந்தசாமியை காணவில்லை. அறிவிப்பைக் கேட்டவுடன் கந்தசாமி மேடைக்கு வரவும்! இதுதான் அவரு சொன்னது.’’

‘’ஐய்யய்யோ, பாவம் மனு~னுக்கு என்ன ஆச்சுதோ?’’

இப்புடி நாலைஞ்சு முறை அந்த ஆளு வந்து ஸ்பீக்கர்லே அறிவிக்கச் சொல்லிட்டாரு.’’

‘’ஆகா ! இப்புடி அசட்டை பண்ணலாமோ?’’

‘’கூடாதுதான் ரொம்பவும் பிசியாக இருந்தால மறந்துட்டாரு. அப்ப்புறம் பரிதாபம் தோணிடிச்சி. ஆமா ! இந்த காவற்காரன் கந்தசாமி யாருன்னு, சொன்னவனைக் கேட்டாரு.”

‘’அது நாம தாங்கன்னு அந்த ஆளு தலையை சொரிஞ்சின்னு நின்னான்.’’
‘’ஏலே! ஏண்டா இப்புடி அறிவிக்கச் சொன்னே?’’
‘’அவொன்னும் இல்லே சாமி. எல்லோரும் நான்தான் காவற்காரன் கந்தசாமின்னு தெரியட்டுமேங்கிற ஆசைதான்.’’

‘’அடப்பாவி’’



நன்றி-சுடரொளி(சிறிமான் சஞ்சாரி)
நவம்பர் 11- 17, 2007

Monday, November 12, 2007

அதிர்ச்சி வைத்தியம் (அப்பா நூலின் தொடர்)

ஆச்சி சொன்ன அப்பாவின் கதை இது –

தைப்பொங்கலன்று காலை மழை இடையிடையே மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையினால் நிலம் ஈரமாகவே இருந்தது. இருந்தாலும் முற்றத்தில் பொங்க வேண்டும் என்பதற்காக நீள வாங்கொன்றை கதிரை மேல் சாய்வாகப் போட்டு அதன் கீழ் அம்மா பொங்கிக் கொண்டிருந்தார். நிலத்தில் போத்தல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பொங்கல் இறக்குவதற்கு முன்பாக கொளுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த சீன வெடிகளை சில கதிரையில்.

கிணற்றிலிருந்து தண்ணீர் குடத்துடன் பொங்குமிடம் நோக்கி வந்து கொண்டிருந்த அப்பாவின் பார்வையில் - நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த சிறு குழந்தையாகிய நான் மெதுவாக எழும்ப முயன்று எட்டி கதிரையிலிருந்த வெடியை எழுத்து நிலத்திலிருந்த போத்தல் விளக்கு நெருப்பில் வெடித்திரியைக் கொளுத்தி விட்டேனாம். யாருமே என்னை கவனிக்கவில்லை.

ஒரே ஓட்டமாக ஓடி வந்த அப்பா என் முதுகில் ஓங்கி ஓர் அடி. “அம்மா” என்ற அலறலுடன் விரிந்த என் கையிலிருந்து விழுந்த வெடிவெடித்த போதுதான் அம்மாவுக்கு நடந்தது தெரியுமாம். ஒரு பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. சற்று தாமதித்திருந்தாலும் என் கையிருந்துதான் வெடித்திருக்குமாம். சில வேளைகளில் போத்தல் விளக்கு கூட சிதறியிருக்குமாம்.

இந்தக் கதையைத் தந்தையிடம் கேட்ட போது –

இப்படியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு கட்டளையிடாமல் உடன் செயற்பட வேண்டுமெனவும், ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி காரியத்தை சாதிக்க வேண்டும். சில வேளைகளில் தம்பி நல்ல பிள்ளை வெடியைக் கீழே போடு என்று சொல்ல நினைத்தால் - சொல்வதற்கு முன்பாக வெடி வெடித்து விடவும் கூடும்” எனவும் தெரிவித்தார்.
(அப்பா நூலின் முற்பகுதிகளை அப்பா என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Wednesday, November 7, 2007

தீப ஒளி





தீப ஒளித்திருநாள்
தீபாவளித் திருநாள்
தீப ஒளி உலகெல்லாம் வீசி
தீயவை மறையட்டும்

நடப்பவை நல்லதாகட்டும்
இனிய நாளிள் மகிழ்ந்திடுவோம்
எல்லோரும் இனிமையாக வாழ
இறைவனை வணங்குவோம்.