Friday, November 23, 2007

தலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்து - ஒரு அவுஸ்ரேலியா அனுபவம்.

அரச நிர்வாகத்துறையில் நிறைவேற்று உத்தியோகத்தர் என்பதால் கையெழுத்து வைப்பதும் என் கடமைகளில் ஒன்று. தினமும் நூற்றுக்கணக்கான கையொப்பங்கள். அத்தகைய கையெழுத்துக்களில் ஒன்று ஒருவரின் தலையெழுத்தைத் தீர்மானித்தது.

80 களின் நடுப்பகுதியிலிருந்து வட பகுதி மக்களின் பல்வேறு தேவைகளுக்கும் ஈடுகொடுக்க கூடிய அமைப்பாக கூட்டுறவு இயக்கம் பணி புரிந்தது. உணவுப் பொருட்களும் அத்தியாவசியப் பொருட்களும் கொள்வனவு செய்ய கூட்டுறவு சங்கம், தட்டுப்பாடான பொருட்களை கட்டுப்பாட்டு விலையில் பெற்றுக்கொள்ள கூட்டுறவுக் கடை, அரசாங்க ஊழியர்களி;ன் மாதாந்த சம்பளக் காசோலைகளைக் காசாக மாற்றிக் கொள்ள கூட்டுறவுச் சங்கக் கணக்கு....

இப்படிப் பல நடவடிக்கைகளால் வவுனியா கூட்டுறவு உதவி ஆணையாளராகிய எனது வேலைப்பளு மிகமிக அதிகமானது.

பாதுகாப்புப்படையினரின் கெடுபிடிகள், இயக்க தலையீடுகள், மோதல்கள் என்பனவற்றுக்கு தினமும் முகம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை.

எனது கடமைகளை எளிதாக்கிய கூட்டுறவு ஊழியர்கள் சிலர் சொல்லியும் சொல்லாமலும் இடமாற்றம் பெறுவதிலும் வேறு வேலைகளைப் பெறுவதிலும் அக்கறை செலுத்தினர். இந்நிலையில்

“வணக்கம் சேர், மன்னிக்க வேணும்” குரல் கேட்டு நான் தலையை நிமிர்த்திய போது அபிவிருத்திக்கு பொறுப்பான கூட்டுறவு உத்தியோகத்தர் சற்குணலிங்கம் -

உள்ளே நுழைவதா? – நுழையாமல் வெளியே செல்வதா? என இரண்டு மனங்களுடன் தத்தளிப்பதை உணர்ந்தேன்.

சற்குணலிங்கத்தைப் பற்றி நான் மட்டுமல்ல பெரும்பாலானவர்கள் நல்ல அபிப்பிராயம் வைத்திருந்தார்கள். பல உத்தியோகத்தர் தொழில் புரியப் பயப்பட்ட நெடுங்கேணிப் பகுதியில் தங்கியிருந்து கடமை செய்தவர். யாழ்ப்பாண மாவட்டத்தில் நெடுந்தீவிலும் தங்கியிருந்து வேலை செய்தவர். தங்குமிடப் பிரச்சனை, சாப்பாட்டு பிரச்சனை, போக்குவரத்து பிரச்சனை, என எந்த சாட்டுப்போக்கும் சொல்லாது நம்பிக்கையுடன் கடமைகளைப் பொறுப்புணர்ந்து செய்பவர்.

“சற்குணம் என் பிரச்சனை? என்றதும் அவர் மெதுவாக பெரிய குண்டைத் தூக்கி போட்டார்.

“சேர்.. எனக்குத் தெரியும். இப்ப உங்களுக்கு ஆள் பற்றாக்குறை பல பிரச்சனைகள். வேலைகளும் கூட....” என்று சொல்லிய வண்ணம் வெளிநாடு செல்வதற்கான விடுதலை விண்ணப்பத்தை என்னிடம் தந்தார்.

சற்குணலிங்கத்தி;ன குடும்ப பொறுப்புக்களையும் அரசாங்க சம்பளத்தை கொண்டு சமாளிக்க முடியாததால், மேலதிக செலவுக்காக விவசாயம் செய்யப்புறப்பட்டு நட்டப்பட்டதையும் நன்கு அறிந்து வைத்திருந்ததால் ஊழியர் பற்றாக்குறையையும் , வேலைப்பளுவையும் பார்க்காமல் சற்குணலிங்கத்தின் விடுதலைப் விண்ணப்பத்தில் வைத்த கையெழுத்து , அவரது தலையெழுத்தை தீர்மானித்த கையெழுத்தாகி விட்டது. விடுதலையில் அவுஸ்ரேலியா சென்றவர் அங்கேயே நிரந்தரமாகத் தாங்கி விட்டார். மனைவியையும் நான்கு பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டார்.

அவரிடமிருந்து வாழ்த்து மடல்களும் கடிதங்களும் வந்து கொண்டிருந்தன. பதில் கடிதங்கள் நான் அனுப்புவதில்லை. அவர் தொடர்ந்து தொடர்பை பேணியதுடன் என்னையும் அவுஸ்ரேலியாவில் நிரந்தரமாக தங்க அழைப்பு அனுப்பினார். மௌனம் எனது பதிலாகியது.

2001 இல் புலமைப் பரிசில் பெற்று நியூசிலாந்து சென்று வந்த வீரகேசரி செய்தியைப் படித்த அவர் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு அழைத்தார்.

இரண்டு வருடங்களுக்குப் பின் வருவேன் என்று சொல்லியதை உண்மையாக எடுத்துக் கொண்டு ஒவ்வொரு மாதமும் தொல்லை கொடுக்க ஆரம்பித்து, சுமார் சொல்லிய தவணைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு அவரிடமிருந்து வந்த பதிவுத் தபாலைப் பிரித்தேன்.

அவுஸ்ரேலியா விசா பெறுவதற்கான பத்திரங்கள், கடிதங்கள் ஆகியவற்றுடன் ஆரம்ப செலவுக்கான ஆயிரம் டொலர் வங்கி வரையும் இருந்தன. அழைப்பை ஏற்று அவுஸ்ரேலியா சென்றேன்.

அவுஸ்ரேலியா தொழில் வாய்ப்புக்களை பற்றி அவரிடம் கேட்டேன். “ நான் வந்த புதிதில் தொழில் வாய்ப்புக்களை பெறுவதில் எதுவித கஸ்ரமும் இருக்க வில்லை. பெரிய பெரிய தொழிற்சாலைகளில் வேலைக்கு ஆட்கள் தேவை என்ற விளம்பரம் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய சப்பாத்து தொழிற்சாலைக்குள் நுழைந்து விட்டேன். முன் அனுபவம் இருக்கா? என்ற ஒரே கேள்வி மட்டும் கேட்டார்கள். “ஓம்” இலங்கையிலிருந்த போது இரத்மலானையில் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்தேன் என்று ஒரு பொய்யைச் சொன்னேன். உடனடியாக வேலை கிடைத்து விட்டது” என்றார்.

வேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லையா? என்றேன் நான்.

“இல்லை சேர், இங்கே பெயர், வயது, ஆணா, பெண்ணா, அரசியல்வாதிகளின் சிபார்சு கடிதம் எதுவும் அவசியமில்லை என்று பதிலளித்தவாறு அனுபவங்களை தொடர்ந்தார்.

நான் ஒரு காலமும் சப்பாத்து தொழிற்சாலையில் வேலை செய்யவில்லை. என்னை பெரிய இயந்திரங்களுக்கு முன்னால் கொண்டு போனதும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, இரத்மலானை தொழிற்சாலையில் வேறு வகையான இயந்திரங்கள். இங்கே புது மாதிரியான இயந்திரங்கள் என்றதும் அந்த இயந்திரங்களை இயக்கும் முறைகளைச் சொல்லித் தந்தார்கள். பழகி விட்டேன்.

போன புதிதில் பொதுவாக பஸ் மூலம்தான் தொழிற்சாலைக்குப் போனேன். இரண்டு நாட்கள் வேலை செய்து மூன்றாவது நாள் போகவில்லை. வீட்டில் நின்று விட்டேன். தொழிற்சாலை மனேஜர் வீடு தேடி வந்து வேலைக்கு வரச் சொன்னார்.

அது மட்டுமல்ல, ஒரு ஞாயிற்றுக்கிழமை முழுநாளும் வேலை செய்யச் சொன்னார். ஞாயிற்றுக்கிழமை வேலை செய்து பெற்ற இரட்டிப்புச் சம்பளத்தில் ஒரு பழைய காரையுமு; வாங்கினேன்” என்றார். எனது சந்தேகம் “ ஒரு நாள் உழைப்பில் வாங்கிய கார் ஓடுமா”? “ இரண்டு வருடங்கள் அந்தக் காரை பாவித்த பின்னர் விற்றுவிட்டேன். இங்கே காரும் நடமாடும் தொலைபேசியும் அவசியம். பஸ்சிலையோ அல்லது ரெயினிலையோ போறதை விட சொந்த கார் வைத்திருக்கிறது இலாபம். நினைச்ச நேரம் நினைச்ச இடத்துக்குப் போய் வரலாம்” என்றார்.

உண்மைதான். சற்குணலிங்கத்தின் வீட்டில் ஐந்து கார்கள். ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு கார். ஒவ்வொருவரிடமும் கையடக்க தொலைபேசி. சற்குணலிங்கத்திற்கு ஆண்பிள்ளை ஒன்று. பெண் பிள்ளைகள் மூவர். சிறியவர்களாய் இருந்த போது படிப்புச் செலவு சற்குணலிங்கத்தினுடையது. அவர்கள் வளர்ந்ததும் உழைத்துக் கொண்டே படித்தார்கள். படித்துக் கொண்டே உழைத்தார்கள். பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்து நிரந்தரமான வேலைகளையும தேடிக் கொண்டார்கள்.

அது பற்றி அவரின் மூத்த மகள் சுஜிவாவிடம் கேட்டேன். சுஜிவாவின் விளக்கம் “ அங்கிள் இங்கே தொழிற்சாலைகள் , விற்பனை நிலையங்கள் பல இருக்கின்றன. சில நிலையங்கள் 24 மணிநேரமும் திறந்து இருக்கும். சில நேரம் எங்களுக்கு ஒரு மணித்தியாலம் இரண்டு மணித்தியாலம் வேலை செய்வதற்கு வசதியிருந்தாலும் வேலை கிடைக்கும்.

ஒரு மணித்தியாலம் வேலை செய்தால் 21 டொலர் சம்பளம் கிடைக்கும். எங்களுக்கு படிப்பு, விரிவுரைகள் இல்லாத போது கேட்டால் வேலைக்கு வரச் சொல்லுவார்கள். சில விற்பனை நிலையங்களில் சம்பளத்தை விட விற்பனையாகும் பொருட்களின் விலையில் குறிப்பிட்ட வீதத்தை ஊக்குவிப்பாகவும் தருவார்கள்.

எல்லாம் வேலை செய்கின்றவர்களையும் நிர்வாகத்தையும் பொறுத்தது. செல்போனில் நேரத்தைச் சொல்லி வேலை ஒழுங்கை மேற்கொள்வோம். ஒவ்வொருவரிடமும் கார் இருப்பதால் போக்குவரத்துப் பிரச்சனை இல்லை.

சற்குணலிங்கத்தின் கடைசி மகளான சுமணா மருத்துவ கல்லூரி. நூலகத்துக்கு இரவு பதனொரு மணி போல எங்களை அழைத்துக் கொண்டு சென்ற போது பல்கலைகழக மாணவர்கள் நூலகத்தையும் கணனிக் கூடத்தையும நள்ளிரவிலும் பயன்படுத்தக் கூடிய வசதியைப் பார்த்து பிரமி;த்தேன்.

எதுவித பயமும் இல்லாமல் இரவில் பெண்கள் கார் ஓட்டிச் செல்லலாம். கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கலாம்” என்பதை அவரின் இரண்டாவது மகள் லக்சிகா நிரூபித்துக் காட்டினார்.

மாதச் சம்பளம், நாட்கூலி என்ற சொற்களுக்கு பழக்கப்பட்ட எனக்கு ஒரு மணித்தியாலம் ஓய்வு கிடைத்தால் அந்த நேரத்திலும் உழைத்து பணம் தேடக் கூடிய வசதியை அவுஸ்ரேலியாவில் காண ஆச்சரியமாக இருந்தது.

கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சற்குணலிங்கத்தின் மகன் லக்சன், அவர் பகுதி நேர வேலை செய்யும் எரிபொருள் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். பன்னிரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் எரிபொருள் நிரப்பலாம். அங்கே பல்வேறு பொருட்கள் விற்பனைக்கிருந்தன. லக்சன் ஒருவர் மட்டும் கணனியுடன் எரிபொருள் நிலையம் முழுவதையும் நிர்வாகித்தார். வண் மன் சோ.

ஒரு நாள் மாலை ஏழுமணி சற்குணலிங்கத்துடன் வீட்டுக்குத்திரும்பியதும் திருமதி சற்குணலிங்கம் பேப்பர் போடுற வேலை இருக்கு என்றார்.

இலங்கையில் காலையில் பல செய்தித்தாள்களும் மாலையில் சில செய்தித்தாள்களும் வெளிவருவதை அறிவேன். அவற்றை வீட்டுகளுக்கு சென்று விநியோகிப்பதை “பேப்பர் போடுதல்” என அறிந்திருந்த எனக்கு அவுஸ்ரேலியாவில் “பேப்பர் போடுதல்” சற்று வித்தியாசமாகப்பட்டது.

வர்த்தக நிறுவனங்கள், தங்களது பொருட்களை விளம்பரப்படுத்துவதற்காக அதிக அளவில் சந்தைப்படுத்துவதற்காக விதவிதமான விளம்பரத்தாள்களை தயாரித்து வைத்து இருப்பார்கள். அந்த விளம்பரத்தாள்கள் எல்லோரது வீடுகளுக்கும் விநியோகிக்கப்பட வேண்டுமென்பது அவர்கள் எதிர்பார்ப்பு.

அதற்காக வீதிகளை பகிர்ந்து சிலரை ஒழுங்கு செய்திருப்பார்கள். விளம்பரத்தாள்களை வீடுகளிலுள்ள தபால் பெட்டில் போடும் வேலைதான் “பேப்பர் போடுதல்” விளம்பரதாள்களின் எண்ணிக்கை அளவுகளைப் பொறுத்து விநியோகத்துக்கான கூலி வழங்கப்படும்.

திருமதி சற்குணம் சொன்னார் “இது நடை – நல்ல உடற்பயிற்சி. நாங்கள் பின்னேரம் நடந்து கொண்டே தபால் பெட்டியில் போடுவோம்”

நடப்பது நல்லது என்பதால் நானும் அவர்களுடன் கூட நடந்து சென்றேன்.

சற்குணலிங்கம் இடையிடையே குனிந்து சில பொருட்களை எடுத்து சட்டைப் பொக்கற்றில் போட்டதை அவதானித்தேன்.

“இங்கிருக்கும் சிலருக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை. சில்லறைக் காசுகளை தெருவோரம் வீசி விடுவார்கள். நான் கண்டால் அவற்றை எடுத்து வேறாக ஒரு பெட்டியில் போட்டு வைப்பேன். அப்படிப் போட்டு வைத்த பணத்தில் புத்தகங்கள் வாங்குவேன் என்றார் சற்குணலிங்கம்.

எனது சுமாரான மதிப்பீட்டின் படி நாப்பதினாயிரம் ரூபா பெறுமதியான புத்தகங்கள் அவரின் வீட்டு அலுமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

வீதியில் இன்னுமோரிடத்தில் ஒரு புதிய காட்போட் பெட்டி அக்கம் பக்கம் யாருமில்லை. மெதுவாகக் காட்போட் பெட்டியைத் திறந்தேன். உள்ளே ஒரு தொலைக்காட்சி பெட்டி. புதிது போலவே தோற்றமளித்தது. எனது ஆச்சரியத்திற்கு பதில் கிடைத்தது.

இது நல்ல ரிவிதான். புதிய மொடல் வாங்கியதும் பழையதை வெளியே வைத்துவிடுவார்கள். சிலர் இதைக் கொண்டு போய் பாவிப்பர்கள். இதில் இன்னொரு விடயம் எப்படி பாவிப்பது என்ற ஐளெவசரஉவழைn அயரெயட உம் உண்டு. எடுத்துக் கொண்டு போகின்றவர் கஸ்ரப்படக் கூடாது என்பதற்காக பணம் கொடுத்து வாங்கிய பற்றுச் சீட்டையும் பெட்டிக்குள் வைத்திருபார்கள்.

ஒரு கணம் யோசித்தேன் ‘ எவ்வளவு நல்ல மனம்”

தோட்ட வேலைகளுக்குப் பழக்கப்பட்ட எனது நண்பர் கூரையிலிருந்து விழும் தண்ணீரைப் பயன்படுத்தி வெங்காயம், மரக்கறி, கறிவேப்பிலை தோட்டமும் வைத்திருக்கிறார். சுமார் பத்து கறி வேப்பிலை கொண்ட சிறு பிடியின் விலை ஒரு டொலர்.

இலங்கையில் இருந்து புலம் பெயர்ந்தோர் திட்டம் போட்டு வாழ்வதால் செலவைச் சுருக்கி மிச்சம் பிடிக்கின்றனர்.

நமது நாட்டில் பெற்றோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை ஏறிக் கொண்டே செல்லும். ஒரு போதும் இறங்காது. ஆனால் அவுஸ்ரேலியாவில் வெள்ளிக்கிழமை தொடக்கம் திங்கற்கிழமை வரையும் நீண்ட தூரங்களுக்காக வாகனங்கள் ஓடிக் கொண்டிருப்பதால் அந்த நாட்களில் பெற்றோல் டீசல் விலை உயர்ந்திருக்கும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரையும் வரை விலை குறைந்திருக்கும்.

இதை நன்கு புரிந்து கொண்ட நம்மவர்கள் செவ்வாய்க்கிழமைக்குப்பின் பெற்றோல், டீசல் கொள்ளவனவு செய்ய ஆரம்பித்து வியாழக்கிழமையுடன் நிறுத்திக்கொள்வார்கள். மறுபடியும் தேவைப்பட்டால் அடுத்த செவ்வாய்க்கிழமை வரும் வரை காத்திருப்பார்கள்.

வங்கி நடைமுறைகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். வங்கி வாசலுக்கு சென்றதும், உதவி செய்யக் காத்திருக்கிறார்கள். கையெழுத்து வைக்க தெரிந்தால் போதும் வங்கி கடன் தரும். சம்பளக் கொடுப்பனவுகள் யாவும் வங்கி மூலம் செலுத்தப்படுவதால் வங்கி எளிதாக கடன் அறவீடுகளைச் செய்து விடும்.

ஒரு வர்த்தக வங்கியில் வாடிக்கையாளர் ஐந்து நிமிடத்திற்கு மேல் தமாதிக்க நேரிட்டால் அந்த வங்கி வாடிக்கையாளரைத் தாமதிக்க வைத்ததற்காக ஒரு கொடுப்பனவை செய்கிறது. அவ்வளவு துரித நடவடிக்கைகள் வங்கியில்.

நண்பர் இல்லத்தில் ஐந்து கார்கள் இருப்பதால் எனது சந்தேகம் அவர் சொன்னார். “கார் வாங்கிறது சுகம். கார் ஒட்டுவதற்கான லைசென்ஸ் பெறுவது கஸ்ரம்” சோதனைகளில் திருப்தியான பின்பே அனுமதிப்பத்திரம் கிடைக்கும்.

நம் நாட்டிலிருந்து புலம் பெயர்ந்தவர் ஒருவர் மோட்டார் வாகன பரிசோதகருக்கு அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக “அன்பளிப்பு” கொடுக்க முயன்றார்.

காரை நன்றாக ஓட்ட முடியுமானால் சைசென்ஸ் தருவேன். உன்னிடம் அன்பளிப்பு வாங்கி லைசென்ஸ் தந்தால் நாளை பலர் வீதியி;ல் வாகன விபத்தில் இறக்கக் கூடும். சிலவேளை அவர்களில் நானும் ஒருவனாக இருக்கக் கூடும்” என்றாராம் மோட்டார் வாகன பரிசோதகர்.

அங்கே மொழிபெயர்ப்பாளர்கள் வீட்டிலிருந்தே மொழி பெயர்க்கலாம். உதாரணமாக ஆஸ்பத்திரிக்கு செல்லும் தமிழ் நோயாளிக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் டொக்டர் நோயாளிக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்து வைத்தியம் செய்கிறார்.

சற்குணலிங்கம் அவுஸ்ரேலியாவில் இருந்தாலும் பிள்ளைகளை நாட்டுப்பற்றுடன் வளர்த்து வருகிறார். சுத்தமான தமிழ் மொழியில் கதைக்கின்றார்கள்.

சமய வழிபாட்டுக்காக தனியாக ஒரு அறையை புனிதமாகப் பேணி வருவதுடன் இலங்கை நினைவாக இலங்கை பட உருவமுள்ள மரச் சட்டத்தில் மணிக்கூட்டை பொருத்தி வைத்திருக்கிறார்கள். மணிக்கூடும் இலங்கை நேரத்தை காட்டுகிறது. பல வீடுகளில் உட்புறத்தில் வளர்க்கப்படும் “காசு மரம்” இவர் வீட்டிலும் உள்ளது. அந்த மரத்தை நீருற்றி நன்றாக வளர்;த்தால் பணம் பொழியும் என்ற நம்பிக்கை நம்மவரிடம் காணப்படுகின்றது. பிள்ளைகளின் படிப்பு முடிந்து தொழிலும் தேடிக் கொண்டதால் அவரை இலங்கை வருமாறு அழைத்தேன்.


ஒரு முறை வரவேண்டும் ஓமந்தையில் ஒரு இருக்கிறது என்றார்.

“காணியை விற்பதற்கா”? என்று கேட்டேன்.
“இல்லை” என தலை அசைத்த சற்குணலிங்கம் சொன்னார்.

“ஏதாவது பொதுத்தேவைக்கு அந்த காணியை அன்பளிப்பு செய்ய விரும்புகின்றேன். பிள்ளைகளுக்கு இங்கேயே வீடு வாசல் எல்லாம் உண்டு. அந்தக் காணியை வந்து அன்பளிப்பாக வழங்க வேண்டும். முதலில் பிள்ளைகளுக்கு துணை கிடைக்கட்டும்” என்றார்

சற்குணலிங்கத்தின் தலையெழுத்தை என் கையெழுத்து மாற்றியிருக்காவிட்டால் ஓமந்தைக் காணி சீதனக் காணியாகவும் மாறியிருக்கலாம்.


26.06.2005
வீரகேசரி வாரமலர்

No comments: