Monday, November 12, 2007

அதிர்ச்சி வைத்தியம் (அப்பா நூலின் தொடர்)

ஆச்சி சொன்ன அப்பாவின் கதை இது –

தைப்பொங்கலன்று காலை மழை இடையிடையே மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. முதல் நாள் பெய்த மழையினால் நிலம் ஈரமாகவே இருந்தது. இருந்தாலும் முற்றத்தில் பொங்க வேண்டும் என்பதற்காக நீள வாங்கொன்றை கதிரை மேல் சாய்வாகப் போட்டு அதன் கீழ் அம்மா பொங்கிக் கொண்டிருந்தார். நிலத்தில் போத்தல் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. பொங்கல் இறக்குவதற்கு முன்பாக கொளுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் அம்மா வீட்டிலிருந்து கொண்டு வந்த சீன வெடிகளை சில கதிரையில்.

கிணற்றிலிருந்து தண்ணீர் குடத்துடன் பொங்குமிடம் நோக்கி வந்து கொண்டிருந்த அப்பாவின் பார்வையில் - நிலத்தில் தவழ்ந்து கொண்டிருந்த சிறு குழந்தையாகிய நான் மெதுவாக எழும்ப முயன்று எட்டி கதிரையிலிருந்த வெடியை எழுத்து நிலத்திலிருந்த போத்தல் விளக்கு நெருப்பில் வெடித்திரியைக் கொளுத்தி விட்டேனாம். யாருமே என்னை கவனிக்கவில்லை.

ஒரே ஓட்டமாக ஓடி வந்த அப்பா என் முதுகில் ஓங்கி ஓர் அடி. “அம்மா” என்ற அலறலுடன் விரிந்த என் கையிலிருந்து விழுந்த வெடிவெடித்த போதுதான் அம்மாவுக்கு நடந்தது தெரியுமாம். ஒரு பெரிய விபரீதம் தவிர்க்கப்பட்டது. சற்று தாமதித்திருந்தாலும் என் கையிருந்துதான் வெடித்திருக்குமாம். சில வேளைகளில் போத்தல் விளக்கு கூட சிதறியிருக்குமாம்.

இந்தக் கதையைத் தந்தையிடம் கேட்ட போது –

இப்படியான சந்தர்ப்பங்களில் மற்றவர்களுக்கு கட்டளையிடாமல் உடன் செயற்பட வேண்டுமெனவும், ஏதாவது அதிர்ச்சியை ஏற்படுத்தி காரியத்தை சாதிக்க வேண்டும். சில வேளைகளில் தம்பி நல்ல பிள்ளை வெடியைக் கீழே போடு என்று சொல்ல நினைத்தால் - சொல்வதற்கு முன்பாக வெடி வெடித்து விடவும் கூடும்” எனவும் தெரிவித்தார்.
(அப்பா நூலின் முற்பகுதிகளை அப்பா என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: