Friday, January 4, 2008

பயிற்சி அனுபவங்கள்

சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சில நாட்களுக்குள் ஆரம்பமாகிவிட்டது. தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த உற்சவம், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதால் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சாரணர்களும் உதவிக்கு அழைக்கப்படுவது வழக்கம். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி சாரணர் இயக்க மாணவர்களோடு இணைந்து கொண்டு நானும் சென்றேன்.

நாங்கள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இடத்துக்குச் சிறிது தூரம் தள்ளி வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிச் சாரணர்கள் கூடாரம் அமைத்திருந்தார்கள். ஒரு நாள் மதிய உணவுக்குப் பின் சாரண ஆசிரியர் நீலகண்டன் எங்களை அழைத்து, “இன்று மாலை சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் உங்களுடன் கலந்து பழக வருகிறார்கள். சிநேக பூர்வமான விளையாட்டுகளும் இடம்பெறும்” என்றார்.

சிதம்பராக்கல்லூரி மாணவர்களும், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவர்களும் சம்பிரதாயபூர்வமான அறிமுகம் - விளையாட்டுகள் என்று ஈடுபட்டிருந்த வேளை, எங்கள் கல்லூரி சாந்தன், நீளமான கயிற்றைக் கொண்டு வந்தான் - “கயிறு இழுப்புப் போட்டி”

முதல் தடவை எங்கள் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை கயிறிழுத்தல் ஆரம்பமான சில விநாடிகளில்.... “ஐயோ அம்மா” என்று சாந்தன் விழுந்து விட்டான். சுற்றி ஒரு கூட்டம்.

உடனே சுறுசுறுப்பாகச் செயற்பட்டேன் - “சேர்! ஒரு கார் பிடிச்சு வரட்டோ?”

நீலகண்டன் ஆசிரியர் கோபித்தார் “சத்தம் போடாமல் உன்ர வேலையைப் பார்”

நிலத்தில் விழுந்து கிடந்த சாந்தன் வலது கையால் வயிற்றை அமத்திப் பிடித்தபடி அலறினான்: “அம்மா...அம்மா”

மைதானத்தில் மாலை நேர வெய்யில் சுட்டெரித்ததால் எல்லோருமாகச் சேர்ந்து சாந்தனை வேலியோர மரநிழலின் கீழே தூக்கிச் சென்றனர்.

எங்கள் கல்லூரி பெரிய மாணவர்கள் அமைதியாக இருந்து அவதானித்தபடி இருந்தனர். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் சாந்தனைக் கேள்வி கேட்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தனர். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, சாந்தன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்தான். “இப்ப கொஞ்சம் சுகம்”

“ஆஸ்பத்திரிக்குப் போவமா?” – ஆசிரியர் நீலகண்டன் கேட்டார்.

“இவரும் ஒரு ஆசிரியரா?” பத்து நிமிடத்துக்குப் பிறகு கேட்கிறார்?” – ஆசிரியர் நீலகண்டன் மீது ஒரு விதமான வெறுப்பு.

மரத்தின் மேல் ஏறி....

அப்போது உயரமான மரத்தின் கிளையொன்றில் ஏறியிருந்து கீழே நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த இராஜேந்திரனை ஆசிரியர் நீலகண்டன் கண்கள் நோக்குகின்றன.

அவரது கோபம் - “உங்கை என்னடா செய்யிறாய்? இறங்கடா கீழை”

இராஜேந்திரன் விரைவாகக் கீழே இறங்க முயற்சிக்கும் போது அவனது ஒரு மரக்கிளைகளுக்கிடையே சிக்குபட்டுவிடுகிறது. அவனது அலறல் பயங்கரமாயிருந்தது.
“அம்மா...அம்மா..”. அதைவிடப் பயங்கரமாயிருந்தது ஆசிரியரது சத்தம் “இறங்கடா...இறங்கடா..”

இராஜேந்திரன் அழுதான் - “ஐயோ சேர் கால் மடங்கியிடுத்து. இழுக்க முடியாமல் கிடக்கு”

நாங்கள் எல்லோரும் நன்றாகப் பயந்தோம்.

உடனடியாகச் சிதம்பராக் கல்லூரி மாணவர் இருவர் மரத்தில் ஏறினார்கள். ஒருவன் மரத்திலிருந்த வண்ணம் கயிற்றை மேலே எறியச் சொன்னான். இருவரும் கயிற்றில் ஓர் ஊஞ்சல் போலச் செய்து, அதில் இராஜேந்திரனை உட்கார வைத்து பத்திரமாகக் கீழே இறக்கினார்கள்.

“ஓரிடத்திலை கூட்டமாக நில்லாதையுங்கோ, சுத்திவர நி;ல்லுங்கோ. காற்று வரட்டும்” என்று சொல்லிய வண்ணம் வேலியருகே சென்ற ஆனந்தன், “அம்மா அம்மா!” என்று பிடரியைக் கைவிரல்களால் தடவியபடி அழுதான் - “கம்பி வேலி சேர்...ஆணி குத்திப் போட்டுது” ஆனந்தன் அழுது கொண்டிந்தான்.

சிதம்பராக் கல்லூரி மாணவன் ஒருவன் ஆனந்தனின் தலையில் ஆணி குத்திய இடத்திலுள்ள மயிர்களை விரல்களால் விலத்தி அடையாளம் வைத்து, “கத்தரிக் கோலைக் கொண்டு வாங்கோ” என்றான்.

என் மனம் கவலைப்பட்டது – “சாந்தன் வயிற்று வலியால் அவதிப்படுகின்றான்; இராஜேந்திரன் கால் மடங்கிக் கஷ்டப்படுகின்றான்;;: ஆனந்தன் தலையில் ஆணி குத்தி அவதிப்படுகின்றான்;: என்ன கஷ்ட காலம்”?

நான் கவலைப்படும் போது மாணவர்கள் பலர் சிரித்தார்கள். ஆசிரியர் நீலகண்டனும் சிரித்தார். சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் சிரித்தனர். விடயம் இதுதான் -

சாரணர்கள் முதலுதவிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் முதலுதவி அளிக்கத்தக்க அறிவையும் தகைமையும் பெற்றுவிட்டனரா என்பதைச் சோதனை செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது, சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் பிரமாதமாக நடித்தனர். இவர்களின் நடிப்பை நிஜமென நினைத்துக் கார் பிடிக்கப் புறப்பட்டதை இப்போது நினைத்தாலும்...

இப்படித்தான்...

எழுபதுகளில் தந்தி ஒன்று அனுப்புவதற்காக யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குச் சென்றேன். தபால் கந்தோரில் ஒரேயொரு உத்தியோகத்தரைத் தவிர மற்றைய எல்லோரும் கந்தோரின் பின்பக்கம் சென்றனர். நானும் சென்றேன். வரிசையாக நின்ற பலர் ஒவ்வொருவராகத் தந்திக் கம்பத்தின் மேலே ஏறி இறங்கியதை அவதானித்தேன். நீளக் காற்சட்டை அணிந்திருந்த சிலரும் காற்சட்டையைச் சுருட்டி மடித்துச் செருகிக் கொண்டு தந்திக் கம்பத்தில் ஏறி இறங்கினார்கள்.

அங்கிருந்த ஒருவரிடம் “என்ன விளையாட்டு இது என்றேன்”

“விளையாட்டல்ல....இன்ரவியூ...நடக்கிறது. இவை லைன்ஸ்மென் வேலைக்கு அப்ளிக்கேஷன் போட்டவை. கம்பத்திலை ஏறத் தெரியாட்டி வேலை செய்ய முடியாது: அதுதான்” என்றார் ஒருவர்.

கவர்னர் சந்திப்பு; 1990 நடுப்பகுதியில் பிரச்சினைகள் நிறைந்த அவசர காலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு, திருகோணமலையில் எனது வதிவிட இல்லத்துக்கு வந்த பிரதம செயலாளர் திரு.கணேசநாதன் - “அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு கவர்னர் தன்னைச் சந்திக்கட்டாம்” என்றார்.

அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் கணேசநாதன் காட்டிய கதிரையில் அமர்ந்து கொண்டேன்.

ஆளுநரிடமிருந்து வரும் கடிதங்கள், கோவைகளைப் பார்வையிட:டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அடுத்த உத்தியோகத்தர்களுக்கு அனுப்ப வேண்டும். உத்தியோகத்தர்களிடமிருந்து ஆளுநருக்கு அனுப்புவனவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஆளுநரின் அழைப்பு.

“நானும் செயலாளர் கணேசநாதனும் கொழும்பக்குப் போகின்றோம. அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும்” என்றார்.

அவசர காலத்தில் அலுவலகக் கடமைகளைச் சரியாக நிறைவேற்றும் தகைமையைச் செயல் ரீதியாகப் பரீட்சித்துப் பார்த்த ஆளுநரும் செயலாளரும் திருப்திப்பட்டு, அலுவலகத்தை என்னிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர் எனப் பின்னரே அறிய முடிந்தது.

1994 இல் பாங்கொங் நகரில் ஆசிய பயிற்சிக் கல்லூரில் (ATI) நான்கு வார கால ‘இடர்கால முகாமைத்துவம்’ பயிற்சிக்கச் சென்றிருந்தேன்.

பல நாடுகளைச் சேர்ந்த புதிய முகங்கள் - புதிய அனுபவங்கள் - பத்து நாள் பயிற்சி முடிந்துவிட்டது.

காலையில் எழுந்து ஒரு தேநீர் குடித்தால்தான், சற்றுச் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.

பதினோராவது நாள் வழமையைவிட சிறிது முன்னதாக விழித்துக் கொண்ட நான் ‘எப்போது ரீ குடிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் கதவருகே சென்றேன். கதவுக்குக் கீழிருந்த சிறு இடைவெளியூடாக இரண்டு கடிதங்கள் அறையினுள்ளே தள்ளப்படடிருந்தன. ஒன்று எனக்கு – அடுத்த கடிதம் எனது அறை நண்பனுக்கு.

கடிதத்தில் காணப்பட்ட தகவல்

‘அவசர அறிவித்தல்’

பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இரண்டு எரிமலைகள் நள்ளிரவுக்குப் பின், சீற ஆரம்பித்துவிட்டன. எந்த நேரம் என்ன நடக்குமென்று சொல்லத் தெரியாது. எனவே வெளிநாட்டவரைப் பாதுக்காப்பாக வெளியேற்ற, தாய்லாந்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற் கட்டமாக இந்த விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டாவது மாடியிலுள்ள மகாநாட்டு மண்டபத்துக்குக் காலை 7.00 மணிக்குச் சமூகமளிக்கவும்.

அந்த அறிவித்தல் என்னை மட்டுமா அதிர்ச்சிக்குள்ளாக்கியது?

‘பாங்கொக் நகரை முழுமையாகப் பார்க்க முடியவில்லை?’

‘ஊருக்குக் கொண்டு போவதற்கான பொருட்கள் வாங்கவில்லையே?’

‘பயிற்சி அரைகுறையாக இருக்கிறதே?’

ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் வித்தியாசமான ஏக்கங்கள்.

மகாநாட்டு மண்டபத்தில் பயிற்சி இணைப்பாளர் எங்களசை; சந்தித்தார்.

‘வணக்கம்! திடீரென்று ஏற்பட்ட நிலைமைக்கு வருந்துகின்றோம். வெளிநாடுகளிலிருந்து வந்த உங்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றோம். இப்போது எரிமலைகளின் சீற்றம் அதிகரித்து நிலை உக்கிரமடைந்து வருவதால் பாங்கொங் நகரிலுள்ளோரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் உங்களை மாத்திரம் அனுப்புவது சாத்தியமல்ல. இங்கு பல அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்’

இணைப்பாளர் ஒவ்வொருவரையும் அறிமுகஞ் செய்து வைத்தார்.

‘இவர் எரிமலை தொடர்பான தகவல்களைத் தருவார்’

‘இவர் பொலிஸ் பகுதிப் பொறுப்பதிகாரி’

‘இவர் காலநிலை அவதான நிலையத்தைச் சேர்ந்தவர்’

‘இவர் தொடர்பாடல் வேலைகளைக் கவனிப்பார்’

தொடர்ந்து இணைப்பாளர் சொன்னார்;: ‘உங்களை நான்கு ஆட்கள் கொண்ட குழுவாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்புவோம். இந்த அதிகாரிகள் தேவையான தகவல்களைத் தருவார்கள். கட்டுப்பாட்டறையில் உங்களுக்குத் தேவையான காகிதாதிகள், தொலைபேசி, கணனி ஆகிய உண்டு. விரைவாகத் திட்டங்களைத் தயாரித்தால் எல்லோரையும் எரிமலைச் சீற்றததிலிருந்து பாதுகாத்து வெளியேற்ற முடியும்’

நானும் வேறு மூன்று பயிற்சியாளரும் தலைவிதியை நொந்து, இறைவனை வேண்டி எங்களுக்கென தரப்பட்டுள்ள கட்டுப்பாட்டறைக்குச் சென்று சுமார் மூன்று மணித்தியாலயலங்கள் செலவிட்டுப் பல்வேறு அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்று, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றக் கூடிய திட்டத்தைத் தயாரித்தோம்.

பத்து மணியாகிவிட்டது. மற்ற நண்பர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு திட்டம் பூர்த்தியான மகிழ்ச்சியுடன் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கட்டுப்பாட்டறையினுள் நுழைந்தோம்.

மூன்று மணிநேரமாகப் பாடுபட்;டுத் தயாரித்த திட்டம், கடதாசிகள், கிழிந்தும் நீரில் நனைந்தும் நிலத்தில் கிடந்தன. அறையெல்லாம் அலங்கோலம். அழகான கையெழுத்துடன் கூடிய அறிவிப்பு ஒன்றுதான் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

‘இப்படியான நெருக்கடி நேரத்தில், எல்லோரும் கட்டுப்பாட்டறையை விட்டுப் போயிருக்கக் கூடாது. மழையும் காற்றும் நீங்கள் தயாரித்த திட்டக் கடதாசிகளைச் சேதப்படுத்திவிட்டது. மீண்டும் தயாரித்து, பயிற்சி இணைப்பாளர்களிடம் கொடுக்கவும்’ – என்ற அறிவித்தல் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

யாரை நோவது –

செய்த வேலைகளை மீண்டும் செய்து தயாரித்தோம். முதலில் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. பின்னர் முப்பது நிமிடத்தில் செய்து முடிந்துவிட்டோம்.

திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் செய்யும் போது விரைவாகவும், சரியாகவும் செய்ய முடியும் என்பதோடு, கட்டுப்பாட்டறையில் ஒருவராவது உணவு, உறக்கம் மந்து கடமையாற்ற வேண்டும் என்பதையும் சொல்லித் தந்த பயிற்சி இணைப்பாளர் ‘எரிமலைக் குமுறலும்’ பயிற்சிக்காகத் தயாரிக்கப்பட்ட நாடகம் என்றார்.

பயிற்சின் போது 28 பயிற்சியாளர்களை அழைத்துக் கண்களைக் கட்டி 80 அடி நீளமான கயிற்றைத் தந்து அக்கயிற்றில் ஒரு சற்சதுரம் போடச் சொன்னார்கள். சுமார் அரை மணி நேரம் ஒவ்வொருவரும் நன்றாகச் சத்தமிட்டுக் கத்தினோம். உருப்படியாக ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் எங்களுக்குள் ஒரு தலைவரைத் தெரிந்தெடுத்தோம். தலைவருக்கு, சிலர் தங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைத் தெரிவித்தனர். தலைவர் ஆலோசனைகளை உள்வாங்கிய பின்னர், கட்டளைகளைப் பிறப்பித்தார்.

’80 அடி நீளமான கயிற்றை இரண்டாக மடித்தால் 40 அடி நீளமாகக் குறையும்” ஒவ்வொரு 40 அடி நீளமான கயிற்றையும் பதினான்கு பேர் பிடிக்கவும்.

அடுத்த கட்டளை:

40 அடி நீளமாகக் குறைந்த கயிற்றை மீண்டும் இரண்டாக மடித்து 20 அடியாகக் குறைத்து 20 அடி நீளமான கயிற்றை ஏழு பேர் பிடிக்கவும்.

அடுத்த கட்டளை:

‘ஒன்று, ஏழு, பதினான்கு, இருபத்தியொன்று எண்ணுக்குரியவர்கள் 90 பாகை கோணத்தில் கயிற்றைப் பற்றிக் கொண்டு, ஒன்று எண்ணுக்குரியவருக்குப் பக்கத்தில் இருபத்தியெட்டு எண்ணுக்குரியவரை நிற்கச் சொன்னார்.

ஒரு சற்சதுரம் உருவாகிவிட்டது.

தீயணைப்பு வேலைகளை மேற்கொள்ளும் போது கண்களை மூடிக்கொண்டு இடம் வலம் - மேலே கீழே என்று மாறி மாறிச் சொல்லும் போது இத்தகைய பயிற்சிகள் உதவியாயிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


பயிற்சி அனுபவங்கள் பயன் நிறைந்தவையாக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.

Thursday, January 3, 2008

யாராவது வந்தார்களா ? ஏதாவது தந்தார்களா ?

சாதாரண மனிதர்கள் சில தேவைகளை நிறைவேற்ற சில உத்தியோகத்தர்களை நாடும் வேளைகளில் அவர்களைத் திருப்திப்படுத்தா விட்டால் மாறி மாறி அலைவது ஒருபுறம். தமக்குத தேவையானவற்றை எளிதாக பெற்றுக்கொள்ள சில்லறைகளை செலவிடத்தயங்கினால் - தாமதித்தால் பெருந்தொகை செலவாவதுடன் பெருஞ்சிரமங்களுக்கும் முகம் கொடுக்கவும் நேரிடுகிறது. இப்படியாகத் திருப்திப்படுத்தல் ‘இலஞ்சம்’ கொடுத்தல் என பொதுவாக சொல்லப்படுகின்ற போதும் ‘கையூட்டு’ ‘சந்தோஷம்’ ‘அன்பளிப்பு’ ‘SOME THING’ என வேறு வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. இவ்விடயம் பணம் கொடுத்தலாக- பொருள் வழங்கலாக இடம் பெறுகிறது. வேறு வகையாகவும் திருப்திப்படுத்தல் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது அலுவலகம் ஒன்றில் இடம் பெற்ற சம்பவம்- அந்த அலுவல கத்தில் பிரதம எழுதுநர் பல அதிகாரங்களையும் கொண்டவர். அலுவலகத் தில் கடமையாற்றும் மற்றவர்கள் விடுதலைக்கான அனுமதி சில வகையான கொடுப்பனவு அனுமதி ஆகியவற்றுக்கு பிரதம எழுதுநரின் தயவில் தான் தங்கியிருக்க வேண்டும். அடிக்கடி ஒரு சிகரெட் என ஊதித் தள்ளினால் தான் பிரதம எழுதுநர் இயங்குவார். ஒரு நாளாவது பணம் கொடுத்து சிகரெட் வாங்க மாட்டார். “தம்பி ஒரு சிகரெட் கடனாக- பிறகு வாங்கிப்போட்டுத் தாறன்” என்ற வார்த்தைக்கு சிகரெட்டை இழப்பது அவரு க்கு முன்னால் அமர்திருக்கும் இளைஞன் தான். தினமும் சிகரெட் கடனாகப் பெறுவாரே தவிர திருப்பிக் கொடுப்பதில்லை. தினமும் ஏமாந்து கொண்டிரு ந்த இளைஞன் மனதில் ஒரு புதிய சிந்தனை. சிகரெட்டுக்குப்பதிலாக ஒரு சுக்கானும் அதனுள் போட்டுப் புகைக்க புகையிலைத்தூளும் வாங்கினான்.

இரண்டு நாள் பிரதம எழுதுநரின் முன்னால் அலட்சியத்துடன் ஆனந்தமாக சுக்கானைப்புகைத்தான். அவனது; ஆனந்தம் நீடிக்கவில்லை. பிரதம எழுதுநரும் யாரிடமிருந்தோ அன்பளிப்பாக ஒரு சுக்கானைப்பெற்று விட்டார். அடிக்கடி பிரதம எழுதுநரின் உபத்திரவம்: “ தம்பி கொஞ்சம் தூள்”.
சிகரெட்டை இழந்த இளைஞன் புகையிலைத்தூளையும் பிரதம எழுதுநரிடம் இழந்தான்.

அந்தக் கந்தோருக்கு அவர் பெரியவர். காலையில் வழமையைவிட தாமதமாக வந்தவர் மலசலகூடத்தை பார்வையிட்ட பின் பொருட்கொள்வனவுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரைக் கூப்பிட்டு மலசலகூடத்தில் வாளியில்லை என கடிந்து கொண்டார். சில நிமிடங்களில் புதிய வாளி வந்து சேர்ந்தது. காலையில் கந்தோருக்குப் பிந்தி வந்த பெரியவர் மாலையில் பிந்திப்புறப்பட்ட போது புதிய வாளியும் அவருடன் சேர்ந்து புறப்பட்டது.
முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் வடபகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக சடைத்து வளர்ந்திருந்த பூவரசமரத்தின் கீழ் நின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் பக்கத்தில் மாட்டு வண்டிலொன்று வந்து நின்றது. வண்டியை ஓட்டி வந்தவன் கான்ஸ்டபிளைக் கேள்விக்குறியோடு பார்த்தான்- “ ஐயா ! குழை விக்கிறதா ?”
–கான்ஸ்டபிள் வண்டிக்காரனிடமிருந்து பொலிஸ் நிலைய குழைக்கு விலையாக பணத்தையும் பெற்றுக்கொள்ள வண்டிக்காரன் மரங்களில் ஏறி குழைமுழுவதையும் வெட்டி கட்டி வண்டியில் ஏற்றும் போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியான இன்ஸ்பெக்டர் வந்து விட்டார். இன்ஸ்பெக்டரின் மிரட்டலுக்குப் பயப்படாமல் வண்டிக்காரன் சொன்ன பதில்: “ பெரிய ஐயாவோடை கதைச்சு காசு குடுத்துத்தான் குழை வெட்டினனான்”. தன்னை விட யார் பெரிய அதிகாரி அந்தப்பொலிஸ் நிலையத்தில் என இன்ஸ்பெக்டர் தடுமாற அவ்விடத்துக்கு வந்த கான்ஸ்டபிளின் சிரிப்பு: “ மரம் முழுக்க மயிர் க்கொட்டிப்புழு. நான் தான் வெட்டச்சொன்னனான்”. பின்பு கூலி கொடுத்து குழை வெட்டி இடம் துப்பரவாக்கியதாகவும் பணம் பெற்றுக்கொண்டதாகவும் ஒரு செய்தி.

பல ஆண்டுகளுக்கு முன் உயரதிகாரிகள் கந்தோர் வேலைகளோடு மட்டும் இருக்கக்கூடாது. விவசாயம் வீட்டுத்தோட்டம் முதலியவற்றிலும் ஈடுபட்டு மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தல் வழங்கப் பட்டது மலையகத்தில் கடமையாற்றிய அதிகாரிக்கு வாய்ப்பாகப் போய் விட்டது. அலுவலகமருகே அவரது உத்தியோக வதிவிடம் அமைந்தது இன்னும் வாய்ப்பாகப் போய்விட்டது. கந்தோர் கணக்கில் விதை பொருள் பசளை கருவிகள் வாங்கப்பட்டன. ஊழியர்கள் கடமை நேரத்திலும் தோட்ட வேலைகளில் ஈடுபட்டனர். நல்ல விளைச்சல். விளைந்தவற்றை என்ன செய்ய வேண்டுமென அறிவுறுத்தல் வராததால் அதிகாரி அவற்றை உள்ளுர் விளை பொருள் வாங்கி கொழும்புக்கு அனுப்பும் கமிஷன் ஏஜண்டிடம் கொடுத்தார். அதிகாரி என்பதால் விலையோ எடையோ குறைக்க முடியாது என கவலைப்பட்ட கமிஷன் ஏஜண்டுக்கு இன்னொரு கவலையும் சேர்ந்து கொண்டது. பீற்றூட் கரட் உருளைக்கிழங்கு ஆகியவற்றுடன் சேர்த்து வரும் மண்ணையும் சேர்த்து நிறுத்து அந்தந்த கிழங்கு வகைகளுக்குரிய விலை போட்டு மண்ணையும் கொள்வனவு செய்ய வேண்டுமென்ற கவலைதான்.

வருட ஆரம்பத்தில் இடமாற்றம் பெற்று வந்த அதிகாரியை அவ்வூர் பிரமுகர்கள் வரவேற்றார்கள். நன்றி தெரிவித்த அதிகாரி முன்பிருந்த அதிகாரிக்கு வழங்கிய ஒத்துழைப்பைப் போல தனக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார். அன்று மாலை ஒரு பிரமுகர் அதிகாரியின் அறைக்குள் நுழைந்து அதிகாரியின் மேசை லாச்சியை மெதுவாகத் திறந்தார். பின் தொடர்ந்தவர்கள் ஒவ்வொருவரும் லாச்சிக்குள் ஒவ்வொரு பார்சலை வைத்துவிட்டுச் சென்றனர். பார்சல் ஒவ்வொன்றும் பணக்கட்டு என்பது வெளி வராத செய்தி.

பதவி நிலை உத்தியோகத்தரின் பாரியாருக்கு நகையாசை வர அவர் கணவர் அதை முதலாளிக்கு மொழி பெயர்க்க முதலாளி தொகை எழுதி ஒரு காசோலையைக்கிழித்தார். காசோலை கை மாறியபின் தான் எதிர்பார்த்த தொகைக்கும் எழுதப்பட்ட தொகைக்கும் இடையேயுள்ள இடைவெளி தெரிந் தது. சொறி சொல்லி முதலாளி நீட்டிய காசோலைப்புத்தக புதுத்தாளில் எழுதப்பட்ட தொகை ரொம்ப அதிகமானாலும் தொகைக்கு கீழே முதலாளி யின் கையொப்பம் பதிந்தது. அது சந்தோஷக் கையொப்பம்

காவல் நிலையம் கொண்டு வரப்பட்டவனின் சட்டைப்பையை சோதனையிட்ட அதிகாரி நல்லவர். பையிலிருந்த விலை உயர்ந்த சிகரெட் அடங்கிய பெட்டியை எடுத்து இன்னொருவரிடம் கொடுத்து பக்கத்திலுள்ள கடைக்கு அனுப்பினார். சென்றவர் திரும்பிய போது அதிகாரி அவரிடமிருந்து விலை குறைந்த உள்ளுர் சிகரெட்டையும் மிகுதிக்காசையும் பெற்று தனது பையில் பக்குவப்படுத்திக்கொண்டார்.

அவர் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெறவருபவரிடம் வாகன ஓட்டத்தை பரீட்சிக்கும் போதே சந்தோஷத்தை வாங்கி விடுவார். திணைக்கள அதிகாரிகள் பல முறை முயன்றும் கையும் மெய்யுமாகப்பிடிக்க முடியவில்லை. கடைசி முயற்சியாக திணைக்கள உயரதிகாரி ஒருவர் வேறு பெயருடன் மாறு வேடத்தில் வித்தியாசமான விலாசத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரியாக பரீட்சகருடன் காரில் ஏறி காரைச் செலுத்திய வண்ணம் சட்டைப் பையிலிருந்து எடுத்த என்வலப்பை நீட்டினார். என்வலப்பில் அவரை மாட்டுவதற்காக கையெழுத்து வைக்கப்பட்ட பெருந்தொகைக்குரிய பணத்தாள் மடித்து வைக்கப்பட்டிருந்தது.

‘சடின் பிரேக்’ என பரீட்சகர் கத்த- மாறு வேடத்தில் சென்றவர் காரை நிறுத்த-‘கெட்டிக்காரன்’ என்று சொல்லிக்கொண்டே பரீட்சகர் என்வலப்பை வாங்காமல் காரை மீண்டும் இயக்கச்சொல்லி இன்னுமொரு இடத்துக்கு வழி காட்டி அழைத்துச்சென்றார். அந்த இடம் எரிபொருள் நிரப்பு நிலையம்.

கட்டளை பிறப்பிக்க காருக்கு பெற்றோல் இரண்டு லீட்டர் நிரப்பப் ;பட்டது. பரீட்சைக்குச் சென்றவர் என்வலப்பிலிருந்த பணத்தை எரிபொருள் நிரப்பியவரிடம் கொடுக்க மிகுதிப்பணத்தை எரிபொருள் நிரப்பியவரிடம் பெற்றுக் கொண்ட பரீட்சகர் மீண்டும் ‘கெட்டிக்காரன்’ என்ற வண்ணம் காரை செலுத்துமாறு கட்டளையிட்டார்.

முன்பு அபிவிருத்தி அடையாத பிரதேசங்களில் பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படாததால் அந்தப்பிரதேசங்களுக்கு பொறுப்பாக இருந்த உதவி அரசாங்க அதிபர்கள் பொலிஸ் கடமைகளையும் செய்தனர். உதவி அரச அதிபர் பணிமனையில் ஆட்களை அடைத்து வைப்பதற்காக பாதுகாப்பு ஏற்பாடுகளுடனும் கம்பிக்கதவுடனும் கூடிய அறையொன்றும் அமைக்கப்பட்டி ருக்கும். குழப்பம் விளைவிப்போர் உதவி அரச அதிபரால் உள்ளே தள்ளப் பட்டு கம்பி எண்ணிய காலமும் இருந்தது. பொலிஸ் கடமைகளை செய்தவர் லஞ்சம் வாங்குவதிலும் வல்லவர் என்ற செய்தி அந்தப்பக்கத்தில் பரவியது. எப்படியும் அவரை மாட்டிவிடவேண்டும் என ஒருவர் ஓடித்திரிந்த சங்கதியும் உதவி அரச அதிபர் காதில் விழுந்து விட்டது.

ஒரு புதன்கிழமை பொது மக்கள் கூடும் நாளில் மாட்டிவிட நினைத்தவர் கையில் பெரிய கோவையுடன் காத்திருந்தார். கோவையினுள் இலஞ்ச திணைக்கள உத்தியோகத்தர்கள் கையொப்பமிட்ட காசு மறைத்து வைக்கப் பட்டிருந்தது. மக்களோடு மக்களாக இலஞ்ச திணைக்கள உத்தியோகத்தர் இருவர் வேட்டைக்கு ஆயத்தமாக இருந்தனர். உதவி அரச அதிபர் ஒவ்வொருவராக உள்ளே அழைக்க வரிசை நகர்ந்தது. அவரைக் காசு கொடுத்து பிடித்துக்கொடுக்க திட்டமிட்டவரும்-கையும் மெய்யுமாக பிடிக்க எண்ணி கொழும்பிலிருந்து வந்தவர்களும் அவரது அறையை நோக்கி மெதுவாக நகர்ந்தனர். புதுமுகங்களைக்கண்டு சந்தேகம் கொண்ட ஒரு உள்ளுர்வாசி ஒரு துண்டில் செய்தியை எழுதி சிற்றூழியர் மூலம் விரைவாக உள்ளே அனுப்பினார். உதவி அரச அதிபர் அச்செய்தியை வாசிக்கவும் பிடித்துக் கொடுக்க திட்டமிட்டவர் உள்ளே நுழைந்து காசை நீட்டவும் சரியாக இருந்தது.

கதிரையை இழுத்துக்கொண்டே எழும்பிய உதவி அரச அதிபர் தட தடவென வந்தவர் கன்னத்தில் அறைந்தார்: “ என்னடா காசு தந்து இலஞ்சம் கொடுத்து அலுவல் பார்க்கலாம் எண்டு நினைச்சாயோ. உன்னை என்ன செய்யிறன் பார்” என்று கத்திக்கொண்டே கம்பிக்கதவுக்கு பின்னால் தள்ளி அறையைப் பூட்டி விட்டார். மாலை ஆறு மணிக்கு ஆட்கள் வெளியேற- ஊழியர்களும் வெளியேற கையும் மெய்யுமாக பிடிக்க வந்தவர்களும் வெளி யேற- உதவி அரசாங்க அதிபர் கம்பிக்கதவைத் திறந்து கோவையையும் காசையும் பறித்தார்: “என்னைப் பிடிச்சுக் குடுக்கவோ பாக்கிறாய். ஓடு. ஓடித்தப்பு.”

சில கடைகளுக்கு முன்னால் ஒரு பலகையில் ‘விலைப்பட்டியல்’ என எழுதி பொருட்களின் பெயரும் விலைகளும் குறிக்கப்பட்டிருக்கும். குறித்த விலையைவிட கூடிய விலைக்கு விற்றால் அல்லது நிறை குறைத்து விற்றால் அல்லது தரக்குறைவான பொருளை விற்றால் நடவடிக்கை எடுக்க சில பரிசோதகர்கள் இருப்பார்கள். அவர்களை கடைகாரர் ஒழுங்காக கவனித்தால் வியாபாரம் லாபமாக இருக்கும் என பலர் சொல்லக்கேட்டிருக்கின்றேன். இப்பரிசோதகர்கள் சிலர் பணம் கொடுக்காமல் தமக்கு தேவையானவற்றை கடைகளிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் ஒரு பரிசோதகர் பல பொருட்களை வாங்கி பணமும் கொடுத்தார். மிகுதிப்பணத்தைக் கொடுத்த முதலாளி பின்னர் தெரிவித்த தகவல்: ‘இரண்டாயிரம் ரூபா பெறுமதியான பொருட்களை வாங்கி ஐந்நூறு ரூபா பணம் கொடுத்ததாகவும்-தான் BALANCE என்று சொல்லி நாலாயிரம் ரூபா கொடுத்ததாகவும் சொன்னார்’- சரியான கணக்கு தான்.

வெளிநாடுகளிலும் நான் கண்ட காட்சி. லைசென்ஸ்-பெர்மிட் போன்ற அனுமதிப்பத்திரங்களை அல்லது பிரதிகளை தாமதமின்றிப்பெற வேண்டுமானால் விசேட கொடுப்பனவு செய்ய வேண்டும். அக்கொடுப்பனவு SPEED MONEY என அறவிடப்படுகிறது. சில இடங்களில் அந்த அறவீடுகளுக்கு பற்றுச்சீட்டுகளும் வழங்கப்படுகிறது. சில உத்தியோகத்தர்கள் பெறும் விரைவுக்கட்டணம் SPEED MONEY அவர்களின் பைகளை நிரப்பும் வேளை சில சந்தர்ப்பங்களில் கடவுச்சீட்டு அடையாள அட்டை போன்றவற்றை அதே நாளில் SAME DAY SERVICE பெறுவதற்காக பகிரங்கமாகவும் பணம் அறவிடப்படுகிறது.

இந்திய தலயாத்திரையின் போது ஸ்பீட்மணிக்கு இன்னோர் அர்த்தமும் அறிந்து கொண்டேன். சுவாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்தால் சில தரகர்கள் விரைவுக்கட்டணம் வாங்கிக்கொண்டு + வரிசையை முறித்துக்கொண்டு தங்கள் தைரியத்தாலும் செல்வாக்காலும் மூலஸ்தானத்துக்கே அழைத்துச் சென்று தெய்வவிக்கிரகமருகே நின்று தரிசிக்க வாய்ப்பை ஏற்படுத்தித்தருவார்கள்.

மக்களுக்கும் அநேகமான அலுவலகங்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக செயற்படும் உத்தியோகத்தர்கள் தற்போதைய பதவிப்பெயர் ‘கிராம சேவை உத்தியோகத்தர்’. முன்னைய காலத்தில் இவர்கள் ‘விதானையார்’ என அழைக்கப்பட்டனர். கிராமப்புறங்களில் விதானையார் குட்டி ராஜாக்கள் தான். அரிசிக்கூப்பன் வழங்குதல்-வாக்காளர் பட்டியல் பதிவு-வதிவிடத்தை உறுதி செய்தல்-சான்றிதழ் வழங்கல்- டீ.ஆர்.ஓ என அழைக்கப்பட்ட பெரும் பாக இறைவரி உத்தியோகத்தருக்கு சிபார்சுக்கடிதம் கொடுத்தல் உட்பட கிராமத்துச் சண்டை சச்சரவுகளையும் தீர்த்து வைப்பவர் ‘விதானையார்’.

பல ஆண்டுகளுக்கு முன் இடையிடையே என் நண்பரைத் தேடி அவர் வீட்டுக்கு செல்வேன். நண்பரின் தந்தையாரும் ஒரு விதானையார். எனவே அவர் வீட்டில் இல்லாத நேரங்களிலும் அவரைத்தேடி பலர் வருவார்கள். சில கடிதங்கள் விண்ணப்பங்களுடன் பணம் உட்பட பலவிதமான பொருட்களும் வந்து சேரும். ‘லஞ்சம்’ வாங்கக்கூடாது எனச் சொல்லும் விதானையார் அன்பளிப்பு வாங்கலாம்- சந்தோ~மாக தருவதை வாங்கலாம் என்பார். விதானையார் சந்தோ~மாக வாங்கும் பொருட்களில் சாராயமும் அடங்கும். கல்லோயாவில் கரும்பிலிருந்து பெறப்படுவது ‘கல்’ எனவும் களுத்துறையில் தென்னங்கள்ளிலிருந்து பெறப்படுவது ‘பொல்’ எனவும் அழைக்கப்படும். அவை அடையாளம் காணப்படுவதற்காக வேறு வேறு கலர் மூடிகள் போத்தலின் மேல் பொருத்தப்பட்டிருக்கும். விதானையாருக்கு மிக விருப்பமானது- தென்னஞ்சாராயம். அப்போத்தலின் மேல் மூடி பச்சை நிறமாதலால் விதானையாரும் பொது மக்களும் பயன்படுத்தும் குறியீடு- ‘பச்சை மூடி’ ஒரு காரியத்தை நிறைவேற்ற எத்தனை பச்சை மூடி தேவையென விதானையார் தெரிவிப்பார். சிலர் தாமாகவே கொடுக்க எண்ணியுள்ள பச்சை மூடிகளின் எண்ணிக்கையையும் முன்கூட்டியே தெரிவிப்பார்கள்.

வெளியே சென்று வீட்டுக்கு வந்ததும் விதானையாரின் முதலாவது கேள்வி: “ யாராவது வந்தார்களா? ஏதாவது தந்தார்களா?”

ஒரு தடவை “ ஓம். நாலு பச்சை மூடி தந்தார்கள்” என என் நண்பர் விதானையாரான அவர் தந்தையிடம் கையளித்த சிறு என்வலப்பில் தென்னஞ்சாராயப் போத்தலுக்கு மேல் மூடப்பட்டு வரும் தகர மூடிகள் மட்டும் நான்கு வைக்கப்பட்டிருந்தது. சாராயப்போத்தல்கள் இல்லை.

அந்த சம்பவத்தின் பின் அவர் கேட்பதேயில்லையாம்- “யாராவது வந்தார்களா? ஏதாவது தந்தார்களா?”

நேர்முகப்பரீட்சைக்கு வரவும்

(கடந்த பல ஆண்டுகளாக நேர்முகப்பரீட்சைகளின் போது பெற்ற அனுபவங்களால் உருவான ஆக்கம் இது.)

புதிய நியமனங்கள் வழங்குவதற்கு முன் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்காக அல்லது பதவியுயர்வுகள் வழங்கத்தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்காக நேர்முகப்பரீட்சை நடைபெறுவதுண்டு. ஆட்சேர்ப்புத் திட்டத்தில் உள்ளவாறு அல்லது சேவைப்பிரமாணத்தில் தெரிவிக்கப்;பட்ட வாறு எழுத்துப்பரீட்சை முடிவடைந்ததும் அல்லது எழுத்துப்பரீட்சை முடிவுகள் வெளியானதும் நேர்முகப்பரீட்சை நடைபெறும். முன்பு நேர்முகப் பரீட்சையில் பெறும் புள்ளிகளின் அடிப்படையில் உயர்பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டாலும் அண்மைக்காலமாக சிறிய பதவிகளுக்கான நியமனங்களுக்காகவும்; நேர்முகப்பரீட்சைகள் நடைபெறுகின்றன.

எத்தனை வெற்றிடங்கள் நிரப்பப்படும் என எண்ணிக்கை தீர்மானித்த பின் அது போல மும்மடங்கு எண்ணிக்கையானவர்கள் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்படுவர். சில நியமனங்களுக்காக அல்லது சில பதவியுயர்வுகளுக்காக நடைபெறும் நேர்முகப்பரீட்சைகளின் போது புள்ளிகள் வழங்கப்படுவதில்லை. பரீட்சார்த்திகளின் வயது வதிவிடம் கல்வித்தகைமை இதர தகைமைகளை உறுதிப்படுத்துவதற்கான சான்றிதழ்கள் மட்டும் பரிசீலிக்கப்படு;ம். பொதுவாக பதவியை விரும்பும் விண்ணப்பதாரிகளின் உளச்சார்பு அறிவு ஆற்றல் ஆளுமை-விசேட திறமைகள் அனுபவம் பலம் பலவீனம் ஆகியவற்றை சில நிமிடங்களுக்குள் மதிப்பிடும் நோக்கோடு நேர்முகப்பரீட்சை நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு பதவிக்கான அடிப்படைத்தகைமைகள் இருந்;து விண்ணப்பித்ததும் நேர்முகப்பரீட்சைக்கு வரச்சொல்லி அழைப்புக்கடிதம் வரும் - நியமனம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் நேர்முகப்பரீட்சைக்கான ஆயத்தங்களைச் செய்வது அவசியம். நேர்முகப்பரீட்சைக்கு வரவும் என வரும் கடிதங்களில் சமர்ப்பிக்க வேண்டிய சாதனங்களின் பட்டியல் தரப்படும். எனினும் பின்வருபவற்றை முதலில் தயாராக வைத்திருந்தால் கடைசிநேர நெருக்கடியைத்தவிர்த்துக்கொள்ளலாம்.
• பிறப்புச்சான்றிதழ் -உறுதிப்படுத்தப்பட்ட ஆங்கில மொழிபெயர்ப்பு நல்லது
• தேசிய அடையாள அட்டை- பழையதாக இருந்தால் அல்லது சேத
மடைந்திருந்தால் புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
• திருமணத்தின் பின் அல்லது பெயர் மாற்றம் செய்திருப்பின் அதற் கான ஆதாரங்கள் சத்தியக்கடதாசி தயாராக வைத்திருத்தல் -எல்லா சாதனங்களிலும் பெயரும் பிறந்த திகதியும் ஒரேமாதிரி இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
• ஏற்கெனவே வேலை செய்பவர்கள் தொழில்கொள்வோர் வழங்கிய அடையாள அட்டையையும் வைத்திருப்பது பயனுள்ளது.
• க.பொ.த.(சா.த)-க.பொ.த.(உ.த) சான்றிதழ் -சில பதவிகளுக்கு ஆங்கிலமொழித்தகைமை இச்சான்றிதழ்களிலிருந்து மதிப்பிடப் படும். சகல சான்றிதழ்களின் மூலப்பிரதிகளையும் உறுதிப்படுத்தப் பட்ட போட்டோ பிரதிகளையும் கொண்டு செல்ல வேண்டும். குறிப் பாக சான்றிதழின் முன் பக்கத்தி;ல் பாட எண்ணும் மறுபுறத்தில் பாட விபரமும் இருப்பதால் இரண்டு பக்கங்களையும் போட்டோ பிரதி செய்து உறுதிப்படுத்த வேண்டும்.
• கலைமானி விஞ்ஞானமானி போன்ற முதல் பட்டச்சான்றிதழ் - பட்டப்பின் படிப்பு சான்றிதழ் - முதுமானி பட்டச்சான்றிதழ்- கலாநிதி பட்டச்சான்றிதழ் ஆகியன. ஓவ்வொரு சான்றிதழுக்கும் புள்ளிகள் வழங்கும் நேர்முகப்பரீட்சைகளும் உண்டு. பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் சான்றிதழுடன் ( CEREMONIAL CERTIFICATE) ஏனைய விபரமடங்கிய கடிதத் (DETAILED LETTER) தையும் கொண்டு செல்ல வேண்டும்.
• பதவியுயர்வுக்கான நேர்முகப்பரீட்சையானால் முதலாவது நியமனக் கடிதம் - நியமனத்தை நிரந்தரமாக உறுதி செய்த கடிதம் -தடை தாண்டல் பரீட்சை சித்தியடைந்த கடிதம் அல்லது அப்பரீட்சையிலி ருந்து விலக்களிக்கபட்ட கடிதம்
• வேறு பதவி உயர்வுகளுக்கு ஆதாரமான கடிதங்கள்.
• பயிற்சிகளின் போது பெற்ற சான்றிதழ்கள்
• கிடைத்த பாராட்டுக்கள் - விதந்துரைகள்
• பத்திரிகை – சஞ்சிகைகளுக்கு எழுதிய ஆக்கங்கள் உட்பட வெளியிட்ட நூல்கள்.
• கடந்த கால செயற்பாடுகளை நிரூபிக்கக்கூடிய செய்திகள் படங்கள்.
• போட்டிகளில் பெற்ற சான்றிதழ் பரிசில்கள் விருதுகள்
• ஏற்கெனவே பதவி வகிப்பவர்கள் உயர்வுக்கான நேர்முகத் தேர்வுக்குத் தோன்றும் போது சம்பள ஏற்றங்கள் யாவற்றையும் பெற்றுக்கொண்டதற்கான கடிதமும் அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரணை எதுவும் இல்லை என்ற கடிதமும் அவசியம்.
•C.V .என ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லப்படும் சுய விபரத் திரட்டு.(இதை மனப்பாடம் செய்தால் உங்களைப்பற்றிய தகவல் களைத் தடுமாற்றமின்றி சமர்ப்பிக்க முடியும்)

மேலே தரப்பட்டவற்றை விட வேறு சாதனங்கள் விபரங்கள் தேவை என கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவற்றையும் தயார் செய்தல் வேண்டும். சான்றிதழ் கடிதம் முதலியவற்றின் மூலப்பிரதிகளை (ORIGINALS) கண்ணாடிக்கடதாசி கொண்ட கோவை (CLEAR FILE) யில் ஒழுங்காக வைத்திருந்தால் சேதமடையாமல் அழுக்காகமல் அவற்றைக் காண்பிக்கக் கூடியதாக இருக்கும். நேர்முகப்பரீட்சை நிறைவானதும் மூலப்பிரதிகளைக் கவனமாக திருப்பப் பெற்றுக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்தப்பட்ட போட்டோ பிரதிகள் நேர்முக பரீட்சைச்சபையால் நியமன அதிகாரிக்கு அனுப்பப்படுவதால் அவை திருப்பப் பெற முடியாது.

ஆரம்பத்திலேயே நல்ல அபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு நம்பிக் கையும் பயிற்சியும் திட்டமிடலும் தேவை. பரீட்சை நடைபெறும் இடம் எங்கே உள்ளது? எப்படி செல்ல வேண்டும்? தூரம் முதலியவற்றை முன்கூட்டியே அறிந்து குறிப்பிட்ட நேரத்துக்கு முன் பரீட்சை நடைபெறும் இடத்தில் இருப்பதை நிச்சயித்துக்கொள்ள வேண்டும்.

அழகாகவும் சுத்தமாகவும் ஆடை அணிந்து செல்வதுடன் தலை ஒழுங்காக வாரிவிடப்பட்டிருக்க வேண்டும். மிதமிஞ்சிய ஒப்பனை வாசனைத்திரவியம் ஆகியவற்றை பரீட்சையாளர்கள் விரும்ப மாட்டார்கள். அவர்களை அவமதிப்பது போல படாரென அறையினுள் நுழைவது – அவர்களது மேசையில் அனுமதியில்லாமல் கைப்பை பெட்டி போன்றவற்றை வைப்பது – கைகளைக் காட்டிக்கதைப்பது – அவசியமற்ற அங்க அசைவுகள் -போகச் சொல்லிய பின்னும் தாமதிப்பது ஆகிய நடவடிக்கைகள் நல்லபிப்பிராயத்தை உருவாக்காது.

இப்போது அநேகமானவர்கள் கைத்தொலைபேசி வைத்திருப்பதால் பரீட்சைக்கு செல்ல முன் அதன் இயக்கத்தை நிறுத்துவதன் மூலம் அசௌ கரியங்களை தவிர்த்துக்கொள்ளலாம். அழைக்கப்பட்ட பின் அறையினுள் செல்லும் போது நீங்களே Good Morning – Good Afternoon சொல்லி நல்ல சூழலை உருவாக்கி இருக்கையில் அனுமதியுடன் அமர்ந்து சந்தர்ப்பத்திற்கேற்ப Thanks – Yes Sir – Sorry Sir சொல்வதுடன் பணிவாகவும் மரியாதை யாகவும் தகவல்களைத் தெரிவிப்பது சிறந்தது.

நேர்முக பரீட்சைச்சபையில் மூன்று பேர் அல்லது ஐந்து பேர் இருப்பார்கள். மெல்லிய சிரிப்புடன் அவர்கள் முகம் பார்த்து அளவான தொனியில் தெளிவாக பதிலளிப்பது சிறந்தது. முகத்தை விகாரமாக வைத்துக்கொண்டோ அல்லது அசட்டுத்தனமாக சிரித்துக்கொண்டு குனிந்தவண்ணம் குரலைத் தாழ்த்தியோ உயர்த்தியோ கதைப்பதால் எதையும் சாதித்து விட முடியாது. கவனமாக காது கொடுத்து வினாக்களை விளங்கி திறமைகளை யும் அனுபவத்தையும் வெளிக்காட்டத்தக்க வகையில் விடையளிக்க வேண்டும். கண்ணடிப்பது கையைப்பிசைவது தலையைச்சொறிவது ஆகியவற்றைத் தவிர்த்துக்கொள்ளளல் நல்லது.
தவறான பதில் - ஊகிக்கிறன் -பிழையில்லை –சரியில்லை என பட்டும் படாமலும் சொல்வதன் மூலமோ மற்றவர்களைக்குறை கூறுவதன் மூலமோ புள்ளிகள் பெற்று விட முடியாது.

‘நேற்று தான் நேர்முகப்பரீட்சைக்கான கடிதம் கிடைத்ததால் சாதனங்கள் கொண்டு வரவில்லை – வரும் வழியில் பஸ் விபத்து – நெருங்கிய உறவினர் காலமாகி விட்டார் -முன்பும் பல தடவை வந்தனான்’ என எடுத்துரைத்து அதிக புள்ளி பெற முடியாது. கேள்விகளுக்குப் பதிலளிக்கலாமே தவிர நீங்கள் பரீட்சை தொடர்பாகவோ வேறு விடயங்கள் தொடர்பாகவோ பரீட்சைச்சபையினரிடம் கேள்வி கேட்டு இக்கட்டான நிலைக்கு ஆளாகக்கூடாது.

பதவியை எதிர்பார்க்கும் நிறுவன ஒழுங்கமைப்பு அட்டவணை Organaization Chart நிறுவனம் தொடர்பான விபரங்கள் -பதவிக்கான பொறுப்புகள் கடமைகள் - அவை தொடர்பாக உங்கள் அறிவு அனுபவம் தொலைநோக்கு மொழியாற்றல் - கணனி அறிவு ஆகியன தொடர்பாக கேள்விகள் எழும் என்ற எண்ணத்துடன் பதிலளிக்க தயாராகச் செல்வது விரும்பத்தக்கது.

சபையிலுள்ளோர் உங்களுக்குத் தெரிந்தவராக இருந்தாலும் கேட்கும் போது உங்கள் பெயர் விபரங்களை கூற வேண்டும். அதாவது அவர்களுக் கும் உங்களுக்கும் முன்னர் அறிமுகம் இல்லாதது போல நேர்முகப்பரீட்சை யில் நடந்து கொள்வது நல்லது. எழுதவேண்டிய தேவையும் எழலாம் என்ற எண்ணத்துடன் பேனாவையும் கொண்டு செல்வது நல்லது.

நேர்முகப்பரீட்சைக்கு செல்ல முன் தெரிந்த சிரேஷ்ட உத்தியோகத்தர் களைச் சந்தித்து ஒரு ஒத்திகை போல உங்களை கேள்விகள் கேட்கச் சொல்லி தயாராகினால் அச்சமும் கூச்சமும் அகன்று நிதானமாக பதிலளிக்கும் அனுபவம் பெறலாம்.

ஒரு தடவை பரீட்சைக்கு சென்றவரிடம் வாசிக்கச்சொல்லி ஒரு கடிதத்தைக் கொடுத்த போது – அவர் கண்ணாடி கொண்டு வரவில்லை என்றதும் சபையினர் ‘அடுத்த தடவை கண்ணாடியையும் கொண்டு வாருங்கள்’ என்று அனுப்பி வைத்தனர்.

ஆங்கில ஆசிரியர் தேர்வுக்கான நேர்முகத்தில் -சபையினர் சொல்லும் ஆங்கிலச் சொற்களுக்கு ஒவ்வொரு ஆங்கில எழுத்தையும் சொல்லி உச்சரிக்க வேண்டும். பரீட்சையாளர் ‘லவ்’ என்றதும் ஒருவர் சிரித்தார். மற்றவர் ஒவ்வொரு எழுத்தாக L – O –V –E சொன்னதும் பரீட்சித்தவர் ‘றோங்’ என்றார். பரீட்சைக்குச் சென்றவர் ஏன் என்று வாதிட்டார். மூன்றாவது பரீட்சார்த்தி L – O –V –E என முதல் சொல்லுக்கு எழுத்து கூட்டியதுடன் இரண்டாம் சொல்லாகிய ‘றோங்’ எனபதற்கு ஆங்கிலத்தில் W –R –O –N –G என ஒவ்வொரு எழுத்தையும் உச்சரித்தார். நேர்முகபரீட்சை சபை யாரைத் தெரிவு செய்தார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.
வீரகேசரி
30-12-2007

Tuesday, January 1, 2008

நான்கு முழ வேட்டி நாலு (அப்பா நூலின் இறுதி இடுகை)

மகாத்மா காந்தியின் போதனைகளாலும் செய்கைகளாலும் கவரப்பட்ட அவர் நாலு முழு வேட்டிதான் உடுத்துவார். அதுவும் வர்ணக் கரை எதுவுமற்ற கதர் வேட்டி. அறுபது எழுபதுகளில் யாழ்ப்பாணத்தில் கதர் வேட்டி அருமையான பொருளாகி விட்டது. “சுதந்திரத்துக்குப் பிறகு கதர் வேட்டி வாங்கக் கூடிய சுதந்திரமில்லை” என்று சொல்வார்.

“நான் உழைக்கிறேன். நல்ல வேட்டி சட்டை வாங்கித் தருகின்றேன்” என்று சொன்னால் “உடுப்பு சுத்தமாக இருக்க வேண்டும். வடிவாக இருக்க வேண்டும். பெருமை தர வேண்டும். விலை கூடினதாக அலங்காரமானதாக இருக்கக் கூடாது” என்று சொல்வார்.

அப்பா கடை வேலையிலிருந்து நீங்கிய பின்பு விரும்பிக் கேட்கும் பொருட்கள் இரண்டு.

ஒன்று – ‘வாசிப்பதற்குச் சில பத்திரிகைகள்’

இரண்டாவது ‘நாலு முழ வேட்டி’

1990 ஜனவரி மாதம் அவராகக் கேட்காமல் நான்கு வேட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். அவருக்கு மகிழ்ச்சி.

மீண்டும் 1990 பெப்ரவரி மாதம் அவரைப் பார்க்கச் சென்ற போது , ‘தம்பி இரண்டு வேட்டி” என்றார்.

“நான்கு வேட்டிகள் எடுத்துக் கொடுத்து ஒரு மாதமாகவில்லை. பிறகும் வேட்டியா? எனது சிந்தனையைப் புரிந்து கொண்ட தந்தையார்.

“தம்பி அந்த வேட்டியள் இருக்கு. அது அங்காலை போறபோது தேவைப்படும்” என்று சொல்லிய தந்தையாரின் கண்கள் வானத்தை நோக்கின. அவை மீண்டும் கீழிறங்கின.

‘இப்போ கட்டுறதுக்கு இரண்டு வேணும்’ என்றார்.

இரண்டு வேட்டிகள் கொடுத்தேன். அவைதான் தந்தையாருக்கென நான் வாங்கிக் கொடுத்த கடைசி வேட்டிகள்.

1990 மார்ச் மாதம் தந்தையார், அவருக்கு விருப்பமான நாலு முழ சாதாரண வேட்டியுடன் தனது யாத்திரையைப் பூர்த்தி செய்து கொண்டாலும் தினமும் எங்கோ ஒரு சந்தர்ப்பத்தில் ஏதோ ஒரு பாடத்தைப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

யானை முகம் கொண்டே முருகன்..

மிகச் சிறிய வயதிலேயே அரசாங்க வேலை பெற்று கொழும்புக்கு வந்த போது வழிபடுவதற்காக சிறிய அளவிலான முருகன் சிலையொன்றையும் எடுத்துக் கொண்டு வந்தேன். சைவசமயமல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த மூதாட்டியொருவருக்குச் சொந்தமான கூட்டுவிடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு செய்து கொண்டேன்.

ஹோலில் வைக்கப்பட்டிருந்த மேசையில் எனது படிப்பு, எழுத்து வேலைகள் செய்தேன். அந்த மேசை மீது முருகன் சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்தேன். அந்தக் கூட்டு விடுதியில் எனது அறைவாசியான ஜெறோம் வேறு மதத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் ஓரளவு சைவசமயம் பற்றி அறிவும் உள்ளவன்.

ஒரு நாள் மாலை நான் கந்தோரிலிருந்து திரும்பி வந்ததும் “நடராசா உன்னுடைய பிள்ளையார் சிலைக்கு நான் பூ வைத்தனான்” என்றார் வீட்டுரிமையாளரான மூதாட்டி.

நான் மெதுவாக சிரித்தேன். “அம்மாச்சி இது பிள்ளையார் சிலையில்லை. முருகன் சிலை”


மூதாட்டி எனது குரலை உயர்த்தினார். “இல்லையில்லை நடராசா, யானை மாதிரியிருக்கிறதுதான் முருகன். இது பிள்ளையார்” என்றார்.

தொடர்ந்து நான் மறுத்தேன் “அம்மாச்சி ஊரிலை இருக்கிற போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்குப் போறனான். இது முருகன் சிலை. யானை முகத்துடன் இருப்பவர்தான் பிள்ளையார்” என்றேன்.

மூதாட்டி “நடராசா, நீ சின்னப்பெடியன். உனக்கு ஒண்டும் தெரியாது. இது பிள்ளையார்” என்றதும்

“ஓம் அம்மாச்சி, நீங்க சொன்னது சரி” என்ற சரணாகதியடைந்ததும் எனது அறைவாசி ஜெறோம் கேட்டான்.

“என்ன மச்சான், சரண்டராகியிட்டாய். இது முருகன் சிலையெல்லே?” என்றான்.

என்றோ ஒரு நாள் அப்பா சொன்னதை ஜெறோமுக்குச் சொன்னேன்.

“நின்று தர்க்கிப்பதில் பலனில்லை. சைவசமய அறிவில்லாதவருடன் ஏன் இவ்விடயத்தை விவாதப் பொருளாக்கி நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டும். ஏதாவது பலன் ஏற்படுமென்றால் விவாதிக்கலாம். விளக்கம் கொடுக்கலாம். இப்போ எனக்கு நேரம் மிச்சம். வீண்வாக்கு வாதம் இல்லை. வீட்டு மூதாட்டியும் சில வேளை திருப்திப்பட்டிருப்பார், தனக்கு எல்லாம் தெரியும் என்று”

இது போன்ற விடயங்களில், விதண்டாவாதம், குதர்க்கம் ஆகியவற்றில் பொன்னான நேரத்தை மண்ணாக்காதிருக்கப் பழகிக் கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

யாழ்ப்பாணத்தில் பெற்றோல் கிணறு - ஒரு அவசரக் குடுக்கை கதை

நாலாம் வகுப்பில் படிப்பித்துக் கொண்டிருந்த ஆசிரியர் சில நாடுகளைக் குறிப்பிட்டு, அங்கேயுள்ள கிணறுகளிலிருந்து ‘மண்ணெண்ணை’ எடுக்கப்படுகிறது என்று சொல்லியதும், நான் அவசரப்பட்டு “தெரியும் யாழ்ப்பாணத்தில் பெற்றோல் செட் சந்தியிலிருக்கும் கிணறுகளிலையிருந்தும் மண்ணெண்ணை எடுக்கினம்” என்று சொல்லியதும் ஆசிரியர் கேலியாகச் சிரிக்க ஆரம்பித்தார். சக மாணவர்கள் என்னைப் பார்த்தனர்.

“ஓம் சேர். பஸ் ஸ்ரான்டிலையிலிருந்து கஸ்தூரியார் றோட்டாலை போற போது, வின்ஸர் தியேட்டர் சந்தியிலை மூண்டு பக்கமும் பெற்றோல் செட் இருக்குது. அந்த பெற்றோல் செட்டிலை மண்ணெண்ணை குடுக்கிறதுக்கு பிறம்பாக ஒரு பைப் வைச்ச டாங் இருக்கு. அதுக்குப் பக்கத்திலை மண்ணெண்ணை கிணறு இருக்குது” என்றேன்.

ஆசிரியர் சிரிப்பை அடக்கிக் கொண்டு “அது மண்ணெண்ணை கிணறுகள் இல்லை. தண்ணீர்க் கிணறுகள். இலங்கையில் எண்ணெய்க் கிணறுகள் இல்லை” என்றார்.

அப்பாவுக்கு இந்த சம்பவத்தைச் சொன்னதும், அப்பா கஸ்தூரியார் றோட்டும், ஸ்ரான்லி றோட்டும் சந்திக்கும் வின்ஸர் தியேட்டர் சந்திக்கு என்னை அழைத்துச் சென்றார். மூன்று எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் தனித்தனியாக மண்ணெண்ணை வழங்குவதற்கான பகுதிகள் இருந்தன. அவற்றுக்கருகே தண்ணீர் எடுப்பதற்காக கிணறுகள் கட்டப்படடிருந்தன. அவற்றைத்தான் தவறுதலாக மண்ணெண்ணைக் கிணறுகள் என எண்ணியதையும் உணர்ந்து கொள்ள அதிக நேரம் பிடிக்கவில்லை.

அப்பா சொன்னார், “எல்லா விடயங்களையும் நன்கு அவதானிக்க வேண்டும். சரியாக ஒரு விடயத்தை அறிந்த பின்புதான் பதில் சொல்ல வேண்டும். அவசரப்பட்டு எதையாவது உளறிக்கொட்டி முட்டாள் பட்டம் எடுக்கக் கூடாது. சந்தேகம் ஏற்பட்டால் தகுந்தவர்களிடம் கேட்டு சந்தேகத்துக்குத் தெளிவு பெறவேண்டும்.


(இதற்கு முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)