Tuesday, January 1, 2008

யானை முகம் கொண்டே முருகன்..

மிகச் சிறிய வயதிலேயே அரசாங்க வேலை பெற்று கொழும்புக்கு வந்த போது வழிபடுவதற்காக சிறிய அளவிலான முருகன் சிலையொன்றையும் எடுத்துக் கொண்டு வந்தேன். சைவசமயமல்லாத வேறு மதத்தைச் சேர்ந்த மூதாட்டியொருவருக்குச் சொந்தமான கூட்டுவிடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு செய்து கொண்டேன்.

ஹோலில் வைக்கப்பட்டிருந்த மேசையில் எனது படிப்பு, எழுத்து வேலைகள் செய்தேன். அந்த மேசை மீது முருகன் சிலையை வைத்து தினமும் வழிபட்டு வந்தேன். அந்தக் கூட்டு விடுதியில் எனது அறைவாசியான ஜெறோம் வேறு மதத்தைச் சேர்ந்தவன். ஆனாலும் ஓரளவு சைவசமயம் பற்றி அறிவும் உள்ளவன்.

ஒரு நாள் மாலை நான் கந்தோரிலிருந்து திரும்பி வந்ததும் “நடராசா உன்னுடைய பிள்ளையார் சிலைக்கு நான் பூ வைத்தனான்” என்றார் வீட்டுரிமையாளரான மூதாட்டி.

நான் மெதுவாக சிரித்தேன். “அம்மாச்சி இது பிள்ளையார் சிலையில்லை. முருகன் சிலை”


மூதாட்டி எனது குரலை உயர்த்தினார். “இல்லையில்லை நடராசா, யானை மாதிரியிருக்கிறதுதான் முருகன். இது பிள்ளையார்” என்றார்.

தொடர்ந்து நான் மறுத்தேன் “அம்மாச்சி ஊரிலை இருக்கிற போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொண்டமானாறு செல்வச் சந்நிதி முருகன் கோவிலுக்குப் போறனான். இது முருகன் சிலை. யானை முகத்துடன் இருப்பவர்தான் பிள்ளையார்” என்றேன்.

மூதாட்டி “நடராசா, நீ சின்னப்பெடியன். உனக்கு ஒண்டும் தெரியாது. இது பிள்ளையார்” என்றதும்

“ஓம் அம்மாச்சி, நீங்க சொன்னது சரி” என்ற சரணாகதியடைந்ததும் எனது அறைவாசி ஜெறோம் கேட்டான்.

“என்ன மச்சான், சரண்டராகியிட்டாய். இது முருகன் சிலையெல்லே?” என்றான்.

என்றோ ஒரு நாள் அப்பா சொன்னதை ஜெறோமுக்குச் சொன்னேன்.

“நின்று தர்க்கிப்பதில் பலனில்லை. சைவசமய அறிவில்லாதவருடன் ஏன் இவ்விடயத்தை விவாதப் பொருளாக்கி நேரத்தையும் சக்தியையும் செலவிட வேண்டும். ஏதாவது பலன் ஏற்படுமென்றால் விவாதிக்கலாம். விளக்கம் கொடுக்கலாம். இப்போ எனக்கு நேரம் மிச்சம். வீண்வாக்கு வாதம் இல்லை. வீட்டு மூதாட்டியும் சில வேளை திருப்திப்பட்டிருப்பார், தனக்கு எல்லாம் தெரியும் என்று”

இது போன்ற விடயங்களில், விதண்டாவாதம், குதர்க்கம் ஆகியவற்றில் பொன்னான நேரத்தை மண்ணாக்காதிருக்கப் பழகிக் கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: