Monday, June 25, 2012


மல்லிகை என்னும் மாசிகையில் ”படிக்காதவர் படிப்பித்த பாடங்கள்” என்னுத் தலைப்பில் ஒரு வருடம் தொடராக எனது தந்தையாரைப் பற்றி எழுதியவை ”அப்பா” என நூலாக வெளிவந்தது.
நிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு ”பிரேம சாரிகாவ”-( காதல் யாத்திரை) என சிங்கள மொழிபெயர்ப்பில்...
நிர்வாணம் சிறுகதைத் தொகுப்பு
 மீண்டும் இந்தியாவில் மீள் பிரசுர மானது

1991ல்  வெளியாகிய நிர்வாணம் சிறுகதைத்தொகுப்பு அட்டைப்படம்


நண்பர் இணுவை.தம்பு சிவாவின் ”முதுசம்” சிறுகதை நூல் வெளியீட்டு விழாவில்....( படம்- கே.பொன்னுத்துரை-லேக் ஹவுஸ்)

கொஞ்சம் சிரிக்கச் சொல்லி எடுத்த படம்- 2001 ல்
1963ல் க.பொ.த (சா-த) பரீட்சைக்கு தோற்றுபவர்களுக்கு அடையாள அட்டை அவசியம்- தேசிய அடையாள அட்டை அறிமுகம் இல்லாத அந்த நாட்களில்அட் அஞ்சல் திணைக்கள அடையாள அட்டைக்காக எடுத்த புகைப்படம்- ‘சுதந்திரன்‘ வாரப்பத்திரி கையில் ” மந்திரக் கண்ணாடி” என்ற  எனது சிறுவர் தொடர்கதையை பிரசுரித்து இறுதியில் ”மந்திரத் தொடர்கதை மருமகன் என மேலேயுள்ள படத்தையும் வெளியிட் டனர்



1987ல் இப்படித்தான்............

Wednesday, June 20, 2012

அந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி


அந்த நாட்களை அசை போட வைத்த இசைக்கச்சேரி

                                                                                                உடுவை.எஸ்.தில்லைநடராசா                                        www.uduvai.blogspot.com
  லங்கையில் மட்டுமல்லாது உலகெங்கும் நன்கு அறியப் பட்டவீரகேசரிபத்திரிகையின் 80ஆவது ஆண்டு நிறைவு விழாவையொட்டி ஒழுங்கு செய்த நிகழ்ச்சிகளில் ஒன்றான கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி சிவசிதம்பரத்தின் இன்னிசைக்கச்சேரியை சென்ற சனிக்கிழமை மாலை கொழும்பு பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்பத்தில் கேட்டின்புற்ற போது அது அந்த நாட்களை மீண்டும் அசைபோட வைத்த இசைக்கச்சேரியாகவும் அமைந்திருந்தது.

     இலங்கையில் ஆலய உற்சவ காலங்களில் தமிழ் நாட்டிலிருந்து இசைக்கலைஞர்கள், தவில் நாதஸ்வர வித்துவான்கள், நடனக் கலைஞர்கள் அடிக்கடி வந்து போன காலம் ஒன்றிருந்தது. சில காலம் தடைகளால் ஏற்பட்டிருந்த வெற்றிடம்- 70களின் பிற்பகுதியில் இல்லாமற்போக மீண்டும் தமிழகக் கலைஞர்கள் வந்து போக ஆரம்பித் தனர். அக்காலத்தில் இலங்கை ரசிகர்கள் முன்னிலையில் நேரடியாக இன்னிசைக் கச்சேரி செய்தவர்களுள் கே.பி.சுந்தராம்பாள், மதுரை சோமு, சீர்காழி கோவிந்தராஜன், சூலமங்கலம் சகோதரிகள் குறிப்பிடத் தக்கவர்கள். சீர்காழி கோவிந்தராஜன் சுட்டிபுரம், புங்குடுதீவு, புன்னாலைக்கட்டுவன் ஆகிய இடங்களிலும், மதுரை சோமு புன்னா லைக்கட்டுவனிலும், கே.பி.சுந்தராம்பாள் மாவிட்டபுரத்திலும், சூல மங்கலம் சகோதரிகள் இணுவிலிலும் நீண்ட நேரம் கச்சேரி செய்து மக் களை மகிழ்ச்சிப் பரவசத்திலும் பிரமிப்பிலும் ஆழ்த்தியவர்கள்

     ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் வெகுநேரத்திற்கு முன்பாக மேடை யருகே அமர்ந்து கொள்வதும், தங்களுக்குப் பிடித்தமான பாடலைப் பாடச்சொல்லி துண்டில் எழுதிக்கொடுப்பதும் வழக்கம். இசைக்கச்சேரி நடைபெறும் இடங்களை அடுத்துள்ள மதிற்சுவர்கள், வீட்டுக்கூரைகள், மரக்கொப்புகள் ஆகியனவும் பாட்டுக்கேட்போரின் ஆசனங்களாகப் பயன்படும்.

     மாவிட்டபுரத்தில் கே.பி.சுந்தராம்பாள் பக்திப் பாடல்களுடன் கச்சேரியை ஆரம்பித்தபோது சில இளைஞர்கள் படப் பாட்டுகளைப் பாடும்படி துண்டு எழுதிக் கொடுத்தனர்.பாடுறன்பா…… முதல்ல முருகன் மேல பாடிட்டு….  அப்புறம் படப்பாட்டு என்று சொல்லிக் கொண்டே
ஞானப் பழத்தைப் பிழிந்து….” என ஞானப்பழம் பிழிய ஆரம் பித்தார். வயதானாலும் வெண்கலக்குரலால் இளைஞரான சுந்தராம்பாள் இளைஞர்களைத் தன் வசப்படுத்தி விட்டார். தன் விருப்பப்படி பாடல்களைத் தேர்ந்து பாடி எல்லோரையும் திருப்திப்படுத்தினார்.

     புன்னாலைக்கட்டுவனில் மதுரை சோமு சாஸ்திரீய சங்கீதப் பாடல்களைப் பாடிக் கொண்டிருந்த போது ‘தெய்வம்‘ படப் பாடலைப் பாடுமாறு சிலர் பெருத்த குரலில் கத்தினார்கள்.-

-”பாட்டு வேணுமா ?-படப்பாட்டு வேணுமா ?-
தெய்வம் படப்பாட்டு வேணுமா? படப் பாட்டு
தெய்வம் படப்பாட்டு பாட பணம் வேணுமே “

-    என்று பாடலால் அடுக்கடுக்காக ரசிகர்களிடம் கேள்விக் கணைகள் தொடுத்த பின்-‘மருதமலை மாமணியே !‘பாடலைப் பாடினார். தெய்வம் படத்தில் சில நிமிடங்கள் மட்டும் இடம் பெற்ற-‘மருதமலை மாமணியே பாடலை மிகவும் விஸ்தாரமாக பல சங்கதிகளுடன் சுமார் அரைமணி நேரம் வரை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

1978 இல் திருச்சிக்கும் பலாலிக்கும் இடையே சாதாரண பிரையாணிகள் வந்துபோகக்கூடிய சிவில் விமானப்போக்குவரத்து
அனுமதிக்கப்பட்ட காலம். சூலமங்கலம் சகோதரிகள் திருச்சியிலி ருந்து மாலை 7 மணிக்கு பலாலிக்குப் புறப்பட்டு இணுவில் கோவிலில் இரவு 9 மணிக்கு கச்சேரி ஆரம்பிப்பதாகவும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் இரவு இரவு 9.30 மணி முதல் இரவு 11 மணிவரை சூலமங்கலம் சகோதரிகளின் கச்சேரியை நேரடி ஒலிபரப்பு செய்வதாகவும் ஏற்பாடு. எதிர்பாராத விதமாக திருச்சியிலிருந்து விமானம் புறப்படுவதில் தாமதம். சங்கீத வித்துவான் பொன்.சுந்தரலிங்கம், இணுவில் என்.வீரமணிஐயர் ஆகியோரால் நிலைமை சமாளிக்கப்பட சூலமங்கலம் சகோதரிகள் நள்ளிரவுக்கு சற்று முன்பாக பலாலி வந்திறங்கி இணுவிலில் அதிகாலை வரை இன்னிசைக்கச்சேரி செய்து பொழுது விடிவதற்கு முன்பாக விமானமேறி தமிழ்நாடு சென்றதும் ஒரு கதை. கச்சேரி கேட்ட சில ரசிகர்கள் யாழ்ப்பாணத்தில் தங்கள் இருப்பிடங்களைச் சேர்ந்த போது நண்பகலாகி விட்டது.

     இப்படிப் பல சங்கதிகளை கடந்த சனிக்கிழமைக் கச்சேரி நினைக்க வைத்தது. அந்த நினைவுகளும் ஒரு வகைச்சுகம் ! ஒரு வகை இன்பம் !!.

     முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன் கொடிகாமம் பருத்தி த்துறை வீதியில் அமைந்துள்ள சுட்டிபுரம் அம்மன் ஆலயத்தில் சீர்காழி கோவிந்தராஜனின் கச்சேரியை நேரடியாகக் கேட்கும் வாய்ப்பு முதலில் கிடைத்தது. சபையை நாடி பிடித்துப்பார்த்து, சபையின் சின்னச்சின்ன அசைவுகளையும் தன் இசை நிகழ்ச்சிக்கு ஏற்ற வகையில் பயன்படுத்தி, ஆரம்பம் முதல் இறுதிவரை அநேகமாக எல்லோரையும் கவர்ந்திழுத்துக் கச்சேரி செய்வதில் வல்லவர்-சீர்காழி கோவிந்தராஜன். சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு திருக்கோணமலை இசை நிகழ்ச்சிக்கு வந்த கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சிதம்பரத்தை, இந்துசமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்திலும் கச்சேரி ஒழுங்கு செய்திருந்தது. இசை மாமணி சீர்காழி கோவிந்த ராஜனைப்போலவே உருவமும் குரலும் கொண்ட அவரது மகன் கலைமாமணி பத்மஸ்ரீ டாக்டர் சிதம்பரம் கச்சேரி செய்த போதும் தந்தையாரையே எங்கள் அகத்திரையில் காண முடிந்தது.

     தந்தைக்குப் பெரும் புகழைப் பெற்றுக்கொடுத்த-

‘சின்னஞ் சிறு பெண் போலே சிற்றாடை இடையுடுத்தி..‘

!உலகம் சமநிலை பெற வேண்டும்-உயர்வுதாழ்விலா நிலை வேண்டும்‘

தேவன் கோவில் மணி ஓசை-நல்ல செய்திகள் சொல்லும் மணி ஓசை‘

பாடல்களை சீர்காழிசிதம்பரம் மிக அருமையாகவும் இனிமையாக வும் பாடினார். அதே போல தத்துவப்பாடல்களான-

     ‘தாயிற் சிறந்த கோவிலுமில்லை-
     தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
     அன்னை தந்தை தான் அன்பின் எல்லை‘

     ‘நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
 நாடே இருக்குது தம்பி- நல்ல
பெயரை வாங்க வேண்டும்-பின்பு
ஊரை வாங்க வேண்டும்‘

ஆகியவற்றையும் தந்தையைப்போல தெளிவாக உச்சரித்து அழ காகப் பாடினார்.

     வண்ணத் தமிழ்ப் பெண்ணொருத்தி என்னெதிரில் வந்தாள்- கண்ணசைவில் கோடி கோடி கற்பனைகள் தந்தாள்

     ஓடம் நதியினிலே-ஒருத்தி மட்டும் தரையினிலே

 -ஆகிய திரைப்படப் பாடல்களும் நன்றாக இருந்தன.

     விரும்பும் பாட்டை துண்டில் எழுதிக்கொண்டு சென்றபோது. அதை வாங்கி ஆரம்பித்தார்-

     ‘எங்கிருந்தோ வந்தான்- இடைச்சாதி நானென்றான்‘

     பின்னர் பாட்டு எழுதிய துண்டைச் சபைக்குக் காட்டி-அத் துண்டால் தன்னையும் காட்டி

     ‘சொன்னபடி கேட்டிடுவான்- சிங்காரப் பாட்டிசைப்பான்‘- எனப் பாடியதும் சபையோர் மகிழ்ச்சியால் கை தட்டினார்கள்.

     அதே பாடலில்-‘ பற்று மிக ‘ என்ற அடிகளை இரு தடவை
அழுத்திப்பாடி, பின்பு கைக்கடிகாரத்தைப் பார்த்தபடி மாற்றிப் பாடினார்-‘ பத்து மிக ‘-‘ பத்து மிக ‘அப்போது நேரம் இரவு பத்து மணியைத் தாண்டி விட்டதால் ரசிகர்கள் சிரிப்புடன் கரகோஷம் செய்தனர்.

     தந்தையார் சீர்காழி கோவிந்தராஜனும் இப்படித்தான் சுட்டிபுர த்தில் கச்சேரி செய்தபோது-ஓரொன்று ஒன்று-தெய்வம் ஒன்று-என்ற பாடலைப்பாடிய போது மணிக்கூட்டைப்பார்த்து-‘இப்போ மணி ஒன்று‘ எனப் பாடினார். அப்போது இரவு ஒரு மணி என்ப தால் ரசிகர்கள் கை தட்டினார்கள்.

     சீர்காழி லண்டன் முருகன் கோவிலுக்கு சென்ற போது தமிழ் மொழி தெரியாதவர்களுக்காக கர்நாடக ராகத்தில் Lord Muruga London Muruga என ஆங்கிலத்தில் பாடிப்பாராட்டுப் பெற்றார. அப்பாடலை லண்டன் BBC ஒலி பரப்ப- வானொலி ரசிகர்களுக்காக மீண்டும் மீண்டும் ஒலிபரப்பானது. கலைமாமணி சிவசிதம்பரம் பம்பலப்பிட்டியில் அப்பாடலையும் பாடி மகிழ்வித்தார்.

     பாவேந்தர் பாரதிதாசனின்-

     ‘புதியதோர் உலகம் செய்வோம்-கெட்ட
     போரிடும் உலகத்தை வேரொடு சாய்ப்போம்‘

என்று ஆவேசமாகப் பாடிய டாக்டர் சிதம்பரம், அடுத்து அமைதியாக-

‘தலைவாரி புச்சூட்டி உன்னைப் பாடசாலை போ என்று சொன்னாள் உன் அன்னை‘

-என்று பாடி வேறு வேறு உணர்ச்சிகளையும் கொட்டினார்.

     சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன் இருவரும் இணைந்து பாடி புகழ்பெற்ற பாடலான-

திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்

     பாடலை தனி ஒருவராகப்பாடித் தன் திறமைகளையும் வெளிக்கா ட்டினார் டாக்டர்-சிவசிதம்பரம்.

     சீர்காழி கோவிந்தராஜன் கச்சேரி செய்யும் போது ரசிகர்கள் தாம் விரும்பும் பாடலைப் பாடச் சொல்லி சிறிய துண்டில் எழுதி, ரசிகர்கள் பலரைக் கடந்து மேடையருகே வரும் போது, ஒவ்வொருவரது வருகை யையும்- செய்கையையும் பாட்டில் ஏற்றி சபையைப்பரவசப் படுத்தி சிரிக்கவும் கைதட்ட வைப்பதிலும் கெட்டிக்காரர்- சீர்காழி- உதாரணத்தக்கு சில---

     துண்டோடு வருகின்றவரைப் பார்த்தப் பாடுகின்றார்-

”வருகுதய்யா……சிரிப்புத்தான்   வருகுதய்யா..”

     இன்னொருவரிடமிருந்து துண்டை வாங்கியபின் பாடுகின்றார்-

” எதற்கு….அமுதும் தேனும் எதற்கு…நீ அருகில் இருக்கையிலே..”

     துண்டு கொடுக்க வந்தவர், தடுமாறி நின்றபோது பாடுகிறார்-

” வந்ததேனோ..நீ தான் வந்ததேனோ-
 வானமீதில் நீந்தியோடும் வெண்ணிலாவே”

     பத்மஸ்ரீ சிவசிதம்பரமும் தந்தையின் பாணியைப் பின்பற்றி சம யோசிதமாக பாடல்களை நகர்த்திக் கொண்ட சென்று சபையோரின் கர கோஷங்களையும் பாராட்டுகளையும் பெற்றார். புன்னாலைக்கட்டு வனில் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது காலை மூன்று மணியிருக்கும். மேடைக்கு சிறிது தள்ளி நாலுபேர் நிலத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். சீர்காழி பாடுகின்றார்-

”சமரசம் உலாவும் இடமே- நம் வாழ்வில் காணா
 சமரசம் உலாவும் இடமே-

-என ஆரம்பித்து-

” எல்லோரும் ஒன்றாய் உறங்குவார் இங்கே-
 எல்லோரும் ஒன்றாய் உறங்குவார் இங்கே-”

-    என திருப்பித் திருப்பி பாடியதும், உறக்கத்திலிருந்து அந்தநால்வர்
மட்டுமல்ல- அரைகுறைத் தூக்கத்திலிருந்த எல்லோரும் விழித்து விட்டார்கள்.
     அக்காலத்தில் DIGITAL புகைப்படக் கருவிகளில்லை., FILM ROLL போட்டு FLASH BULB போட்டு படம் எடுக்கும் கமராவுடன் படம் எடுக்க வந்தவரைப் பார்த்து சீர்காழி பாடுகின்றார்-

” கண்ணன் வந்தான்-இங்கே கண்ணன் வந்தான்- கையில் தீபம் கொண்டு கண்ணன் வந்தான்”

     பம்பலப்பிட்டியில் கச்சேரியை நிறைவு செய்வதற்கு முன் ஊரின் சிறப்புகளைச் சித்தரிக்கும்-

” கொங்க நாட்டுச் செங்கரும்பே ! காவேரி வெற்றிலையே ! சிவபுரி புகையிலையே ! சேலத்து மாம்பழமே ! பண்டுருட்டிப் பலாப்பழமே !”

-என்று பாடி சிரிக்கவும் வைத்தார். மொத்தத்தில் “வீரகேசரி“யின் பாராட் டத்தக்க பல பணிகளுள் இன்னிசைக் கச்சேரியும் ஒன்று. மீண்டும் அந்தப் பழைய பாடல்களை அசை போடுகின்றேன்.

நன்றி --11-09-2010 வீரகேசரியில் பிரசுரமானது

Tuesday, June 19, 2012

இது உண்மை


இது உண்மை     http://profile.ak.fbcdn.net/hprofile-ak-snc4/174245_100000030961345_994370231_q.jpg www.uduvai.blogspot.com


சிறு வயதில்
சில நூலோடு பொழுது போனது
சில விளையாட்டிலும் போனது பொழுது
சகோதரங்களுடன் சண்டைபிடித்ததும் சந்தோஷம்
பெற்றோரிடம் அடி பேச்சு வாங்கினதும்
மற்றவரை மட்டம் தட்டினதும், மற்றவரால்
மட்டம் தட்டப்பட்டதுமாகக் கழிந்த காலம்

இள வயதில்

முகம் பார்க்கும் கண்ணாடி முன் நேரமெல்லாம்
முகம் காட்டவும் முகங்கள் காண்பதற்காகவும்
தலை வாரி,வண்ண மா தடவி தெருவோரம்
தேரென வருவோர் தரிசனத்தில் போனது பொழுது

இப்போதெல்லாம்

கணனித்திரையில் காலம் போகிறது
இணையத்தளம் மின்னஞ்சல் வதனநூல் என
வரிகள் படிப்பதிலும் வடிவங்கள் பார்ப்பதிலும்
நாளும் பொழுதும் ஓடியே போய்விடுகிறது.

இன்னும் சில நாளில்

நோயிலும் பாயிலும் பொழுதைப்போக்கிட வேண்டும்
பாடையில் சுடலை போய்ச்சேரும் வரை…

                               உடுவை.