Monday, June 18, 2012

சோற்றுக்கடையினிலே…………


சோற்றுக்கடையினிலே…………
                   உடுவை.எஸ்.தில்லைநடராசா

    வீட்டுச் சாப்பாட்டிலேயே வளர்ந்த எனக்கு கொழும்பில் உத்தியோகம் கிடைத்த போது கடைச்சாப்பாட்டை உருசிக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

     முதன் முதலாக புலால் உணவு ஹோட்டலுக்குச் சென்று அங்கிருந்த மேசையின் முன்னால் அமர்ந்தேன். ஐந்து நிமிடங்களாகியும் என்னை ஒருவரும் கவனிக்கவில்லை. அந்த ஐந்து நிமிடத்துக்குள் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளை ஓரளவுக்குக் கவனித்துக்கொண்டேன்.

     ஒருவர் சோற்றைப் போட்டுவிட்டுஎன்ன கறி ?“ என்று கேட்கிறார்.-“என்ன இருக்கு ?“-என்று சாப்பிடப்போனவர் கேட்டதும்-“ஆடு இறால் கோழி, நண்டு, கணவாய்என்பார்

     சாப்பிடுவர்களில் பெரும்பாலானவர்கள்,-“ அதெல்லாம் வேண்டாம், மீன் காணும்என்றதும் சோறு போடுபவர் வேண்டா வெறுப்பாக-“மீனாம் மீன்என்று சொல்லிக்கொண்டே அடுத்தவர்களுக்குச் சோறு போடுகிறார். இடையிடையே அவர் சொல்லிக்கொள்ளும் வார்த்தைகள்-

     “தம்பி இஞ்சாலை கோழி

     “ஆட்டைக் கொண்டு வா

     “ஐயாவுக்கு அவிச்சதிலை ஒண்டு

     “பைப்படி இறைச்சி

     அவர் சொன்னவற்றுள்பைப்படி இறைச்சிஎன்ற சொல் என் செவிகளில் உரமாக விழுந்து நெஞ்சில் நன்றாகப் பதிந்து என்னைச் சிந்திக்க வைத்தது. “பைப்படி இறைச்சிஎன்றால் என்ன இறைச்சி ? ஆட்டிறைச்சி- மாட்டிறைச்சி கோழி, பன்றியெல்லாம் சாப்பிட்டிருக்கிறேன். “பைப்படி இறைச்சிஎன்று கேள்விப்பட்டது கூட இல்லையே ! என்று சிந்தனைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது-

     எனக்கும் இலை போடப்பட்டு சோறு படைக்கப்பட்டது. “ஐயாவுக்கு என்ன கறி ?“ சோறு போட்டவர் கேட்டார்.

     கறி என்றதும்பைப்படி இறைச்சிநினைவுக்கு வந்தது. அதை உருசித்துப் பார்க்க வேண்டுமென மனதில் எண்ணிக் கொண்டுபைப்படி இறைச்சிகொண்டு வாங்கோ “- என்றேன்.

     “பைப்படி இறைச்சியோ ? அது என்ன தம்பி ?“ –என்று கேட்டார்- சோறு போட்டவர்.

     ‘எனக்குத்தான் பைப்படி இறைச்சியென்றால் என்னவென்று தெரியவில்லை- சொன்னவருக்கும் தெரியவில்லையே‘ என எண்ணியபடி, ‘இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல் பைப்படி இறைச்சி எண்டு நீங்கள் தானே சொன்னனீங்கள் ? அது தான் எனக்கும் வேணும்!‘ என்றேன்.

     அவர் சிரித்துவிட்டு, மூலையிலிருந்த மேசையைக்காட்டி, அதிலை இருந்தால் தான் பைப்படி இறைச்சி கிடைக்கும் என்றார்.

     ‘ அதேனப்படி ? இந்த மேசையிலிருந்தால் போடக்கூடாதோ ?‘ என்று சந்தேகத்துடன் கேட்டேன்.

     அவர் திரும்பவும் சிரித்து விட்டு, ‘தம்பி ! அந்த மேசை தண்ணி வாற பைப்படிக்குப் பக்கத்திலை இருக்கு. அதிலை இருக்கிற ஆக்கள் இறைச்சி கேட்டால் பைப்படி இறைச்சி எண்டு சொன்னால் தான் கறி வைக்கிறவருக்கு டக்கெண்டு தெரியும்‘ என்று விளக்கம் கொடுத்தார். அவரது விளக்கத்தைக் கேட்ட எனக்கு சிரிப்பு வந்தது.

     சோறு வைப்பவர் சொல்லுகின்ற வார்த்தைகளைப் பாருங்களேன்.-ஒவ்வொன்றும் கேள்விப்படாத முறையில் சொல்கிறார்.

     ‘ ஐயாவுக்கு ஆடு ‘

     ‘ தம்பி இவருக்குக் காலை உடை‘

     ‘ கோழி ஒண்டு- இறைச்சி ஒண்டு‘

     ‘ ஈரலை இப்பிடிக் கொண்டு வா‘

     ‘ இஞ்சாலை நண்டு‘

     ‘ எங்கை கோழியைக் காணயில்லை‘

     ‘ இவருக்கு இரண்டாம் தரம் மரக்கறி‘

     ‘ இவருக்கு வெண் கோழி…..‘

     ‘ இரசம் கிளாஸ் இரண்டு ‘

     முதன் முதலாக ‘தம்பி இவருக்குக் காலை உடை‘ என்று சொன்னபோது நான் ஏதோ சண்டை வரப்போகுதாக்கும் என்று பயந்து விட்டேன். பின்பு நண்டுக்காலை உடைப்பதற்குத்தான் ‘ இவருக்குக் காலை உடை‘ என்று சொன்னதைப்புரிந்து கொண்டேன்.

     இப்படித்தான் ‘அறையிக்கிளை ஆடு போய் விட்டதாக்கும்- அதை வெளியே துரத்துவதற்காகத் தான் அறையிக்கிளை ஆடு‘ என்று சொல்லுகிறார் என்பது பின்பு தான் தெரிய வந்தது.

     திருமணம் செய்த புதிதில் நானும் மனைவியும் கோல்பேஸ் கடற்கரைக்குப் போய்விட்டு இரவுச் சாப்பாட்டுக்கு சோற்றுக் கடைக்குச் சென்று ஒரு அறையினுள் அமர்ந்தோம். எங்களைத்தவிர வேறு சிலரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். சோறு வைப்பவரின் வாயிலிருந்து பிறக்கும் வசனங்களை ‘மிஸிஸ்‘ நன்றாக இரசித்துக் கொண்டு சாப்பிட்டார்.

     தீடீரென்று மிகவும் சிரமப்பட்டு தனது கால்களைத் தூக்கி கதிரைக்கு மேல் போட்டுக் கொண்டு ‘ஐயோ….ஐயோ..‘ என்று கத்தினார்.

     நான் என்னவோ ஏதோவென்று துடித்துக்கொண்டு ‘என்ன?  என்ன?‘ என்று கேட்டேன்.

     ‘ஐயோ ! அறையிக்கிளை நண்டு எண்டு சொல்லுது- சோறு வைக்கிற மனிசன்- எனக்குப் பயமாக்கிடக்கு‘ என்றாள்- மனைவி.

     நான் சிரித்துக்கொண்டே சோற்றுக்கடைச் சம்பவங்களை விளக்கிச் சொல்லியும் என் மனைவியின் பயம் தெளியவில்லை.

(1967ல் பிரசுரமாகி 2000ம் ஆண்டு வெளியாகிய கல்யாணம் முடித்துப்பார் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.)

குறிப்பு-(20120) இதை எழுதிய நாட்களில் கொழும்பு கோட்டை ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள யாழ்ப்பாண ஹோட்டல்களிலும்-ஒழுங்கைகள் பலவற்றில் விளம்பரப்பலகை இல்லாமல் இயங்கிய ஹோட்டல்களிலும்- சாப்பிட்ட நினைவுகள் மறக்கமுடியாதவை. சில வேளைகளில் முதலாளி காசாளர் உட்பட பரிமாறுவோர் மேற்சட்டை அணியாமல் சாரத்தை மடித்துக்கட்டிய வண்ணம் காட்சியளிப்பார்கள். சுவையான முழு உணவை இலங்கைக்காசில் இரண்டு மூன்று ரூபாவுக்குள் சாப்பிட்டு முடித்து விடலாம். அந்தக் காலத்து மறக்கமுடியாத உணவுவகைகள்- இப்போது நட்சத்திர ஹோட்டல்களில் –‘யாழ்ப்பாண விருந்துஎன பிரபல விளம்பரங்களுடன் பரிமாறப்படுகிறது- குளிரூட்டிய அறைகள் விநோத உடையணிந்த ஊழியர்கள்-வாழையிலை கைகளுக்குப்பதிலாக பீங்கான் கோப்பைகள் முள்ளுக்கறண்டிகள்- கட்டணம் ரூபா 1500 ல் ஆரம்பமாகி 2500 வரை செல்லும்.- வரிகள் டிப்ஸ் தனித்தனி.

No comments: