Monday, June 18, 2012

காதற் கடிதங்கள்


காதற் கடிதங்கள்
உடுவை.எஸ்.தில்லைநடராசா

     ‘அத்தான் ! நானும் நீங்களும் காதலால் ஒன்றாகி விட்டோம். மேல் நாட்டுக்குப்போய் உங்கள் இதயத்தை எனக்கும், எனது இதயத்தை உங்களுக்கும் மாற்றிக் கொண்டால் என்ன ?‘
-காதலி எழுதிய கடிதத்தில் காணப்பட்ட பகுதி.

                ஃஃஃ         ஃஃஃ     ஃஃஃ

     ‘அழகில் சீதையையும், அருங்கற்பில் கண்ணகியையும், ஆடலில் மாதவியையும், பாடலில் ஔவையாரையும் ஒத்த என்னருமைக் காதலியே!

உனது கூந்தல் கார்மேகத்தைப் போன்றது. கண்கள் கடல் மீனைப் போன்றது. மூக்கு கிளி மூக்குப் போன்றது. நீ அணியும் குளிர்ச்சிக் கண் ணாடியாற் தான் உலகம் மழையைப் பெறுகின்றது. நீ வாயில் தடவியி ருக்கும் லிப்ஸ்டிக் தான் உனக்கு முன்னால் வரும் வாகனங்களை நிறுத்துகின்றது. சரசரவென்று இருக்கும் உனது அப்பளக்கன்னங்கள் தான் எனக்கு சோற்று நினைவை உண்டாக்குகிறது.


-இப்படித் தொடர்கிறது கலைவகுப்பு மாணவனின் காதல் கடிதம்.

           .ஃஃஃ         ஃஃஃ          ஃஃஃ

-விஞ்ஞானப்பட்டதாரி எழுதிய கடிதம்-

     ‘ நைட்ரிக் அசிட் போன்ற உன் நிறம் என்னை மயக்கி விட்டது. ‘ரோச் லைட் பல்ப்‘ போன்ற உன் கண்களுக்குத்தான் எவ்வளவு ‘பவர்‘ ! இருக்கிறது. ! டெஸ்ட் டியுப் போன்ற உன் பளபளப்பான விரல்களை எந்த நேரமும் தடவிக் கொண்டிருக்க வேண்டும் போலத் தெரிகிறது. வாயுச்சாடி போன்ற உன் கழுத்தில் இருக்கும் நெக்லஸ் நல்ல வடிவு. நிலக்கரிக்குவியலில் நெருப்பு எரிவது போல உனது கறுத்தத் தலையைச் சிவப்பு ரிபன் அலங்கரிக்கும் அழகே அழகு. மொத்ததில் நீ ஒரு விஞ்ஞான ஆய்வு கூடம்.

                ஃஃஃ       ஃஃஃ       ஃஃஃ

     ‘சுசிலாவைப் போல் இனிய குரல் படைத்த இனிமைக் காதலியே!


ஜெயலலிதாவை விட உனது சொக்கு ரொம்ப அழகு. கவர்ச்சி நடிகை விஜவைப் போல உனக்கும் அழகிய பற்களுண்டு. ராஜஸ்ரீயின் சொண்டு- பாரதியின் கண்கள்- ராதிகாவின் மூக்கு-நாட்டியப்பேரொளி பத்மினியின் நெற்றி- புதுமுகம் லலிதாவின் தலையலங்காரம்- நடிகையர் திலகம் சாவித்திரியின் நாடி- இத்தனையும் ஒருங்கமைந்த உன் முகம் என் மனதில் காதல் போதையை உண்டாக்கி விட்டது.

-    சினிமாப் பைத்தியம் எழுதிய கடிதத்திலிருந்து எடுத்தது.

ஃஃஃ       ஃஃஃ            ஃஃ




சந்தையில் காய்கறி விற்கும் கந்தையா, கீரை விற்கும் செல்லாச்சிக்கு எழுதிய கடதாசி-

     ‘ எனக்குப் பிரியமான செல்லாச்சியே!

நான் உன்னை நேசிக்கிறேன். சந்தையிலை கீரைக் கடகத்தோடை உன்னைக் கண்ட பிறகுதான் காதலைப்பற்றி யோசிச்சன். உடனேயே கடதாசி எழுதுகிறன்.


தக்காளிப்பழம் போலக் கன்னமும், தேங்காய்த் தும்பு போலத் தலைமயிரும், நாவல் பழம் போலக் கறுத்தக்கண்ணும், புடலங்காய் போலக் கையளும், கீரைக்கட்டுப் போலை குடும்பிக் கட்டும், வெண்டிக்காய் போலை கூரான மூக்கும், பிலாப்பழச்சுளை போல வாயும்……


இவையெல்லாம் எனக்கு….எனக்கு….எழுத வெக்கமாய்க்கிடக்கு…..

உன்ர கையெழுத்தைப் பாக்க நல்ல ஆசையாய் கிடக்கு. ஆரையட்டை ஏண்டாலும் கேட்டு ஒரு கடதாசி எழுது.

                           -காதலன் கந்தையா


(1967ல் பிரசுரமாகி 2000ம் ஆண்டு வெளியாகிய கல்யாணம் முடித்துப்பார் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.)


    

No comments: