Monday, December 31, 2007

படிப்புகள் பல வகை

எழுது விளைஞன் பதவியிலிருந்து நிர்வாகச் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டதும், கடமைகளைச் சரியாகச் செய்வதற்காக பல விடயங்களை படிக்க வேண்டியிருந்தது. விடுதலையில் செல்லும் போது அரசாங்க நிதிப் பிரமாணங்கள், தாபன விதிக்கோவை என சிலவற்றை காவிச் சென்று படித்தேன்,பாடமாக்கினேன்.

அப்போது அப்பா வெகு சாதாரணமாகச் சொன்னார், ‘’ கட்டி , இவையும் பார்க்கத்தான் வேணும், படிக்கத்தான் வேணும். இன்னுமொரு முக்கிய விடயம். எப்போதும் உங்களுக்கு சில மேலதிகாரிகள் இருப்பாங்கள். சில உங்கடை மட்டத்திலே வேலை செய்யிற உத்தியோகத்தராக இருப்பார்கள். சிலர் டிரைவர். பியோன் என்று உங்களுக்கு கீழை வேலை செய்யிறவங்களா இருப்பார்கள். அவர்களை எடைபோட்டு யார் எப்படியிருப்பாங்க. அவங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது. எப்ப ஒத்துப் போகலாம், எப்ப வெட்டி விடலாம், எப்ப நழுவலாம் என்பதை படிச்சிட்டால் சுகமாக வேலை செய்யலாம்’’ என்றார்.

‘ஆட்களைப் படிக்க வேண்டும’ என்று அறிவுரை வழங்கிய அப்பா, மற்றவர்கள் உன்னைப் படிக்கிறளவுக்கு நீ நடந்து விடாதே’’ என்றும் சொல்லி வைத்தார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

இரவுக் கடிகாரம்

கிராமப்புறங்களில் இரவுத் திருவிழா , நாடகம் , கலைவிழா முதலியன இரவு எட்டு ஒன்பது மணியளவில் நாடகம் பார்க்கப் புறப்பட்டபோது. ‘’கட்டி டோர்ச் லைட்டையும் கொண்டு போங்க. பின்னிருட்டு. லைட்டைக் கொண்டு போனால் திரும்பி வாறதுக்கு சுகமாயிருக்கும்’’ என்றார் அப்பா. வானத்தில் நிலவு இருந்ததால் வெளிச்சம் தேவை யில்லை என்ற எண்ணத்துடன் சென்றுவிட்டேன்.

நாடகம் முடிந்து அதிகாலை மூன்று மணியளவில் இருட்டில் தட்டுத் தடுமாறி வீட்டை வந்தடைந்தபோது அப்பா ஏசுவார் என எதிர்பார்த்தேன். அவர் இன்னுமோர் விடயத்தைச் சொல்லித் தந்தார்.

“ இரவுக் காலம் பன்னிரெண்டு மணித்தியாலம் கொண்ட பகுதி முழு இருட்டான அமாவாசை நாளிலிருந்து பதினைந்து நாளில் பூரண நிலவு தோன்றும். பின்னர் பதினைந்து நாளில் நிலவு தேய்ந்து தேய்ந்து அமாவாசை தோன்றும். மழையில்லாவிட்டால் அமாவாசையின் பின் தோன்றும் நிலவு ஒவ்வொரு நாளும் 45நிமிடம் என வானில் தோன்றும் நேரத்தை அதிகத்துச் சென்று பதினைந்து நாளில் முழு வளர்ச்சி பெற்று மழுநிலவாக பூரணைச் சந்திரனாக பறுவத்தன்று பவனி வரும். பின்னர் ஒவ்வொரு நாளும் இருள்காலம் 45நிமிடங்களால் அதிகரித்துச் செல்லும். மாலையானதும் ஆரம்பமாகும் இருட்டு ‘முன்னிருட்டு’ எனவும் அதிகாலைக்கு முன்பு காணப்படும் இருட்டு ‘பின்னிருட்டு’ எனவும் ஆஙைக்கப்படுகின்றது..

வெளிச்ச வசதி இல்லாத காலத்தில் கிராம மக்கள் போக்குவரத்துச் செய்யும் போது ‘முன்னிருட்டு, ‘பின்னிருட்டு, வேளைகளைக் கவனத்தில் கொண்டு காரியமாற்றினார்கள்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கையும் ஒரு நாட்காட்டியே..

மாணவப் பருவத்தில் திடீரென ஒரு சந்தேகம் May மாதத்தில் முப்பது நாட்களா? முப்பத்தொரு நாட்களா? என்பது தான் சந்தேகம். இந்த சந்தேகம் வருடத்தின் கடைசிப் பகுதியில் வந்தாலும் நாட்காட்டி திகதிகள் கிழிக்கப்பட்டாலும் வேறு சாதனங்களைத் தேடவேண்டிய சூழ் நிலையில் அப்பா இடது கை விரல்களை மடித்து வலது கைவிரல்களால் விரல்களின் இறுதி மொழியைத் தடவி விட்டு முப்பத்தொரு நாட்கள் என்றார். பின்புதான் நாட்காட்டி, நாட்குறிப்பு இல்லாமல் எளிதாக ஒவ்வொரு மாதத்திலும் எத்தனை நாட்கள் என்பதை அறியக் கூடிய வழியைச் சொல்லித் தந்தார்.

இடது கையின் பெருவிரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்களும் உள்ளங்கையைத் தொடும் வண்ணம் பொத்திப் பிடிக்க வேண்டும். பின்னர் மறுகையிலுள்ள ஆட்காட்டி விரலால் பொத்திப் பிடித்த கையில் விரல்கள் ஆரம்பமாகும் மொழியையும் விரல்களுக்கு மத்தியிலள்ள பள்ளப் பகுதியையும் ஆட்காட்டி விரல் மொழியிலிருந்து தொட்டு ஜனவரி, பெப்பிரவரி , மார்ச் என பன்னிரெண்டு மாதங்களையும் சொல்ல வேண்டும். அப்பேர்து ஆட்காட்டி விரல் ஜனவரி மாதத்திலுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டு வரும் சிறிய விரல் மொழியை இரண்டாவது தடவை ஜுலை, ஓகஸ்ட் ஆகிய இரண்டு மாதங்களிலும் முப்பத்தொரு நாள் என்பதை நினைவுக்குக் கொண்டு வரலாம் பின்னர் மோதிர விரல் மொழியைத் தொட் ஒக்டோபரிலுள்ள முப்பத்தொரு நாளையும், நடுவிரல் மொழியைத் தொட்டு டிசம்பர் மாதத்திலுள்ள முப்பத்தொரு நாளையும் நினைவுக்குக் கொண்டு வரலாம். மொழிகளைத் தொடும்போது வரும் மாதங்கள் முப்பத்தொரு நாளைக் கொண்டதாகவும் இருவிரல்களுக்கும் இடையில் பள்ளப் பகுதியைத் தொடும்போது வரும் மாதங்கள் அதாவது ஏப்ரல், ஜுன், செப்டெம்பர், நவம்பர் மாதங்கள் முப்பது நாளைக் கொண்டதாகவும் இருக்கும். ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையிலுள்ள பள்ளத்தைத் தொடும் போது பெப்பிரவரி எனச் சொல்வோம். பெப்பிரவரியில் 28 நாட்களும் லீப் வருடத்தில் 29 நாட்களும் வரும்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

படிக்க ஒரு சூழல்

கிராமத்துச் சூழலில் அமைந்த மண்வீட்டில் சிறிய மேசையொன்றின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் அரிக்கன் லாம்பு வெளிச்சத்தில் இரவு ஆறு மணியிலிருந்து அம்மா சாப்பிடுவதற்காகக் கூப்பிடும் வரை நானும் தங்கையும் படிக்க வேண்டும் என்பது அப்பாவின் கட்டளை.

அம்மா சாப்பிடுவதற்காக் கூப்பிடும் வரை எட்டு எட்டரை மணிவரை அமைதி நிலவும். அப்பாவும் அம்மாவும் கூட ஒருவரோடொருவர் பேசமாட்டார்கள். அப்பாவுடன் அல்லது அம்மாவுடன் கதைப்பதற்கு யாராவது வந்தால் தந்திரமாக அவர்களை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்று மெல்லிய குரலில் சுருக்கமாகக் கதைத்து அனுப்பி விடுவார்கள். பள்ளிக்கூடம் செல்லும் பிள்ளைகளான எங்கள் படிப்பும் கவனமும் கதைகளால் குழம்பி விடக் கூடாது என்பதில் அப்பா கவனமாக இருந்ததுடன் அம்மாவையும் அதற்கேற்ப தயார்படுத்தி வைத்திருந்தார்.

சில வீடுகளில் இரவில் நடை பெறும் உரையாடல்களும் வாக்கு வாதங்களும் நான்கைந்து வீடுகளுக்காவது வெகு தெளிவாகக் கேட்கும் என்பது வேறு கதை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

வெளியேறும் விற்றமின்கள்

பாடசாலை நாட்களில் நெல்லிக்காய் தோடம்பழம் போன்றவற்றில் விற்றமின் ‘சி’ இருப்பதாகப் படித்ததும் இவற்றைத் தேடியலைந்தேன்.

எளிதாக எப்போதும் பெறக்கூடிய பொருள் தேசிக்காய் என்பதால் தேசிக்காயைப் பிழிந்து குடித்தால் விற்றமின் ‘சி’ கிடைக்கும் என ஆசிரியர் சொல்லியதை கேட்டு, பழுத்த எலுமிச்சம் பழங்கள் மூன்றை வாங்கி வந்து அவற்றைப் பிழிந்து பின்னர் நீரூற்றி சீனி போட்டுக் கலக்கிய போது அப்பா தெரிவித்த தகவல்;.

“எல்லோரும் வழமையாக முதலில் சாற்றைப் பிழிந்து சீனியோ சர்க்கரையோ போட்டு கலக்கிய பின் அல்லது இரண்டு பாத்திரங்களை எடுத்து மாற்றி மாற்றி ஆற்றி தேசிக்காய் நீரைத் தயாரித்துப் பருகுவார்கள். இப்படிக் கலக்கும் போதும், ஆற்றும் போதும் விற்றமின் சத்து வெளியேறி விடும் எனவும் உண்மையான விற்றமின் சத்து தேவையானால் தண்ணீரில் சீனியையோ அல்லது சக்கரையையோ சேர்த்துக் கரைத்து சரியான பக்குவத்திற்கு வந்த பின் தேசிக்காயைப் பிழிந்து சீனிக் கரைசலில் ஊற்றி அதிகம் கலக்காமலோ ஆற்றமலோ பருகும் போது தான் விற்றமின் ‘சி’ யைப் பெறக் கூடியதாகயிருக்கும்” என்றார்.

ஆரம்பத்தில் அப்பாவின் இக்கருத்துடன் உடன்படத் தயங்கினாலும் , சற்று வளர்ந்த பின் காய்கறிகளை சட்டியால் மூடி அவிக்காவிட்டால் விற்றமின் வெளியேறிவிடுமென வைத்திய நிபுணர்களின் கருத்துக்களைப் பத்திரிகைகளில் படித்த போது அப்பாவுடன் உடன்பட முடிந்தது. உயிர்ச் சத்தான விற்றமின் இருப்பதாக நாங்கள் வாங்கும் பொருட்களைத் தவறாகப் பதப்படுத்துவதாலும் பக்குவப்படுத்துவதாலும் உயிர்ச்சத்திழந்த உணவுப் பொருட்களையே உட்கொள்கின்றோம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அப்பிளும் வாழைப்பழமும்

ஆங்கிலப் பாடம் படிக்கும் போது An apple a day keeps the doctor away என்று படித்ததும் வீட்டுக்குச் சென்று அம்மாவுடன் போராட்டம்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பிள் பழம் சாப்பிட்டால் வருத்தம் வராது” என்று பிடிவாதம் பிடித்தேன்.

அப்பா அமைதியாகச் சொன்னார். “அது இங்கிலிஸ் புத்தகமானதால அப்பிள். பொதுவாக பழம் சாப்பிட்டால் நல்லது. அப்பிளை விட வாழைப்பழம் நல்லது. நம்ம் ஊர்ல வருஷம் முழுவதும் வாழைப்பழம் கிடைக்கும். பாப்பாசிப்பழமும் கிடைக்கும். சீசனுக்கு மாம்பழமும் பாலப்பழமும் கிடைக்கும். இதை விட நல்ல பழம் வேறையில்லை”

வேலைக்குச் சென்ற புதிதில் கொழும்பிலிருந்து அன்னாசி , இறம்புட்டான், மங்குஸ்தான் என யாழ்ப்பானத்துக்குக் கொண்டு வந்தாலும் முக்கனியான மா, பலா, வாழைக்கு மற்ற பழங்கள் ஈடு கொடுக்க முடியாது என தெரிந்து கொண்டேன்.

கடமை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்ற போத அப்பிள் திராட்சையைவிட அதிக விலை கொடுத்து வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றேன். அப்படியொன்றும் அதிக விலையல்ல. ஒரு பழத்தின் விலை 150 ரூபாவில் இருந்து 250 ரூபா வரை.

எனவே அப்பிள் பழத்தின் சத்து வாழைப்பழத்திலும் இருக்கிறது. ஒப்பீட்டளவில் எங்கள் நாட்டில் மிக மலிவான வாழைப்பழம் அப்பிள் ஏற்றுமதியாகும் நாடுகளில் Expensive item தான்.

எங்கள் மண்ணின் பெருமையையும், மண்ணில் விளையும் பொருட்களின் அருமையையும் அப்பா உணர்த்தியும் பல வருடங்களின் பின்பாகவே உணர முடிந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கடனை முறிக்க ஒரு தந்திரம்

ஏப்ரல் மாத விடுமுறையில் அப்பாவுடன் நிற்கும் போது, அப்பாவுடன் நெருங்கிப் பழகும் ஒருவர் கைமாற்றாக ஐந்து ரூபா கேட்டார். அவரை வெளியில் நிற்க வைத்துவிட்டு, அப்பா தனது பெட்டியிலிருந்து பத்து ரூபா நோட்டைக் கொடுத்து, “மாத்தின காசில்ல. சாவகாசமா திருப்பித் தா” எனக் கொடுத்தார்.

பெட்டியில் ஐந்து ரூபா நோட்டு இருக்கத்தக்கதாக அப்பா பத்து ரூபா கொடுத்ததால் காரணத்தை அறிய முயன்றேன்.

“பத்து ரூபா நட்டம் தான்! ஆனா பழகியிட்டான். பத்து ரூபாவுக்கு மேல நட்டம் வராமல் பாதுகாக்க முடியும்” என்றார்.

இரண்டு நாள் கழித்து அவர் பத்து ரூபாவுடன் அப்பாவை சந்தித்தார்.

“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.

“அவசரமில்ல. பிறகுத் திருப்பித் தரலாம்” என்று அப்பா சொல்லியதும் அவர் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் சென்று விட்டார்.

மீண்டும் இரண்டு நாள் கழித்து அப்பா சம்பளம் எடுத்த சில நிமிடங்களுக்குள் வந்தார், பத்து ரூபா கடன்காரர். இப்போது அவர் கடனாகக் கேட்ட தொகை ஐம்பது ரூபா.

அப்பா சிரித்தார். “கொஞ்சம் முன்னாடி வந்திருக்கப்படாது. ஊர்லேயிருந்து வந்தவரிடம் சம்பளத்தைக் கொடுத்திட்டேன். காசிருந்தா ஐம்பது இல்லே நூறுகூடத் தருவேனே”

இந்தச் சம்பவத்தைப் பற்றி அப்பா கூறும் போது “சில ஆட்களுடன் பழக வேணும். பகைக்கக் கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல் செய்து பகைக்கக் கூடாது. அஞ்சு கேட்கிற போத பத்தைக் கொடுத்துக் கொடுத்து கொடுக்கல் வாங்கலுக்கும் பத்தோடே முற்றுப்புள்ளி போட்டால் பத்து ரூபா மட்டும் நட்டம்” என்றார்.

இந்தச் சம்பவம் தந்த படிப்பினையால் ஆயிரக் கணக்கில் ஏற்பட வேண்டிய எனது நட்டம் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இன்னுமொரு சம்பவம் -

சுமாரான சம்பளம் வருமானம் என்று எனது நிலை உயர்ந்த பின் ஊரில் நிதிச்சேகரிப்பு பட்டியலுடன் தெரிந்தவர்கள் வந்திருந்த போது விறாந்தையில் அப்பாவும் இருந்தார்.

சம்பிரதாயபூர்வமான உரையாடல்களைத் தொடர்ந்து எனது பங்களிப்பை வழங்கும் எண்ணத்துடன் பணம் எடுப்பதற்கு அறைக்குள் நுழைந்த போது பின் தொடர்ந்த தந்தை கேட்டார்.

“கட்டி எவ்வளவு பணம் என்று கேட்டீர்களா?”

நான் இல்லையென்று தலையசைத்து “ஒரு 250 ரூபா கொடுக்கலாம்” என்றேன். தந்தை 100 ரூபா போதுமென்றார்.

அவர் விருப்பப்படியே வெளியே சென்ற நான் மீண்டும் நிதி சேகரிப்பு பட்டியலை வாங்கி “எவ்வளவு பணம் எதிர்பார்க்கிறீங்கள்” என்றேன்.

என்ன ஆச்சரியம் “100 ரூபா எண்டாலும் நீங்கள் போடவேணும்” என்றவர்களிடம் 100 ரூபாவைக் கொடுத்து நிதிசேகரிக்கும் பட்டியலிலும் பதிவு செய்தேன்.

அப்பா தந்த விளக்கம் “பாத்திரமறிந்து பிச்சை இடு. அவர்கள் குறைய எதிர்பார்க்கிற போது கூடக் கொடுக்கக் கூடாது. அவங்கள் அதிகமாக கேட்டு உனது பொருளாதார நிலை இடம் கொடுக்காவிட்டால் அதிகம் கொடுத்து நீ நட்டப்படக் கூடாது. தனக்கு மிஞ்சியதுதான் தானம். ஆகவே தண்டலுக்கு வருவோரிடம் என்ன எதிர்பார்க்கிறீங்க என்று கேட்டு அளவாகக் கொடுக்க வேண்டும். கேட்கும் அளவு அதிகமானால் இருப்பு அறிந்து கொடுக்க வேண்டும்”

இதனால் அன்று 150 ரூபா மீதப்படுத்த முடிந்தது போல பின்னரும் பல சந்தர்ப்பங்களில் சிலவற்றை மீதப்படுத்த முடிந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)


முரண்பாடுகள் சொல்லும் உண்மைகள்

தீபாவளி வருஷசம் என பெருநாட்கள் வரும் போது கடையிலுள்ள தொழிலாளிகள் சட்டை, சாரம், வேட்டை போன்ற புது உடுப்புகள் வாங்குவார்கள். வாங்கிய புது உடுப்புகளை இரவு கடை பூட்டியதும் மற்றவர்களுக்குக் காட்டி மகிழ்வார்கள்.

அந்த இளம் தொழிலாளி அதிகம் படிக்காத போதும் அழகான ஆடைகளுக்காக அதிகம் செலவழித்ததேர்டு தன்னைப் படித்தவன் என்று மற்றோருக்கு காட்டுவதற்காக இரண்டொரு சஞ்சிகைகளையும் கையில் வைத்திருப்பான். சில படங்களைப் பார்ப்பதற்காகவும் மற்றவர்களுக்குக் காட்டுவதற்காகவும் ஆங்கில சஞ்சிககையையும் வைத்திருப்பான். அவன் புதிதாக வாங்கி வந்த ‘சேட்’ மிக நன்றாக இருந்தது.

“சேட் பிரமாதம்” என அப்பாவும் ஒரு பாராட்டு கொடுத்தார்.

பாராட்டுகளினால் மனம் நிறைந்த தொழிலாளி சொன்னான். “இது நல்ல திறமான துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. தையலும் அறாது”

“அப்படியா?” வேறு சில தொழிலாளர்களின் ஆச்சரியம்.

அவன் தொடர்ந்தான். “துணி கிழிந்தாலும் சாயம் போகாது, நிறம் மாறாது”

மீண்டும் சில தொழிலாளர் ஆச்சரியப்பட்டனர். “அப்படியா?”

அவனின் அசட்டுச் சிரிப்பு, “இது ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. நிறம் மாறினாலும் சேட் கிழியாது. சேட் கிழிஞ்சாலும் நிறம் மாறாது. எனக்காக புடவைக்கடை முதலாளி விலை குறைச்சுத் தந்தவர்!”

அப்போதுதான் அப்பா பெரிதாகச் சிரித்தார். “என்னய்யா சொன்னே! நிறம் மாறினாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. ஒரே ஒரு சேர்ட்தான் இருந்தது. அதையும் முதலாளி விலை கொறைச்சுக் கொடுத்தார். இது வழக்கமாக எல்லா முதலாளிமாரும் சொல்லுறது. செய்யிறது. நாம ஏமாறக் கூடாது”

அப்பா சொல்லிய பின்தான் முன்னுக்குப் பின் முரணாக தொழிலாளி சொல்லியதும், சேட் விற்பனை செய்பவரால் அவன் ஏமாற்றப்பட்டதையும் உணர முடிந்தது.

இன்றும் கூட, ஊடங்கள் சிலவற்றின் ஊடாக காதில் விழுபவை. கண்ணில் படுபவை. முன்னுக்குப் பின் முரணாக அடுத்தடுத்த வரிகளில் விளம்பரங்களை தரும் போது நினைவுக்கு வருவது ‘நல்ல துணி. சாயம் போனாலும் துணி கிழியாது. துணி கிழிந்தாலும் நிறம் மாறாது. தரமான துணி”


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

மூலைக்கடைக்கார முதலாளி

கிராமத்தின் மத்தியில் மூன்று வீதிகளும் இணையும் சந்திகருகே பலவிதமான பொருட்களையும் விற்பனை செய்யும் சில கடைகள் இருந்தன. சந்திக்குச் சிறிது தூரம் தள்ளி தார்வீதியுடன் ஓர் ஒழுங்கை இணையும் இடத்தில் இருந்த கடைக்குப் பெயர் மூலைக்கடை. ‘மூலைக்டை’ என விளம்பரப் பலகை இல்லாத போதும், தார்வீதி வழியாகப் போவோர் வருவோர் வீதியோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யும் அதேவேளை ஒழுங்கை வழியாக வருவோர் தார்வீதிக்கு வராமல் ஒழுங்கையோரம் நின்று பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய வசதியும் இருந்தது.

எங்கள் வீட்டிலிருந்து பல கடைகளைத் தாண்டித்தான் மூலைக் கடைக்குச் செல்ல வேண்டியிருந்தாலும் , மூலைக்கடையிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என்பது அப்பாவின் உத்தரவு. அதற்கான காரணத்தை அப்பாவே சொன்னார்.

சில ஆசிரியர்கள், பல பெரியவர்கள் சிகரெட், சுருட்டு போன்றவற்றைப் புகைப்பதால் மாணவர்களையும் குழந்தைகளையும் கடைகளுக்கு அனுப்பி புகைத்தல் பொருட்களை வாங்குவது வழக்கம். மூலைக்கடை உரிமையாளர் வளர்ந்தவர்களுக்கு மட்டுமே சிகரெட், சுருட்டு போன்றவற்றை விற்பனை செய்தார். அவரிடம் ஆசிரியர்களின் பெயர் சொல்லியோ, பெற்றோர்களைச் சொல்லியோ பணம் கொடுத்தும் சிகரெட், பீடி, சுருட்டு வாங்க முடியாது. இலாபம் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. தன்னால் சமூகம் நட்டப்படக் கூடாது என்ற மூலைக் கடைக்காரரின் இலட்சியம் அப்பாவுக்குப் பிடித்துக் கொண்டது.

அந்த மூலைக்கடைக்காரரும் அப்பாவும் பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டது தெரியுமு;. ஒரு தடவை மனித சமுதாயத்துக்குச் செய்யும் நன்மையாகக் கருதி விற்பனை கூடிய வாரப் பத்திரிகை சிகரெட் விளம்பரங்களைத் தனது சஞ்சிகையில் இடம் பெறாது என பகிரங்கப்படுத்திய போது, மூலைக்கடை வியாபாரியும் இலாபம் தரக் கூடிய சிகரெட் விற்பனையை நிறுத்தி விட்டார்.

மாணவனாக இருந்த காலத்தில் சமுதாயச் சிந்தனையைப் பற்றி நான் பெரிதாக கருதாத போது ஓரளவுக்கு வளர்ச்சியும் முதிர்ச்சியும் அடைந்துள்ள இன்றைய நிலையில் அப்பாவின் சிந்தனையையும் மூலைக்கடைக்கார முதலாளியின் சிந்தனையையும் பல தடவை எண்ணியுள்ளேன். இலாபத்தை மட்டும் நோக்காகக் கொண்டு செயற்படாத முதலாளிகளும் இருக்கின்றனர்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Sunday, December 30, 2007

கண் கெட்ட பின்பு...

தொழில் காரணமாக கொழும்புக்கும் பிற மாவட்டங்களுக்கும் சென்ற போது உணவுத் தேவைகளுக்காக சாப்பாட்டுக் கடைகளை நாடினேன். பிளாஸ்டிக் வகைகளைச் சேர்ந்த கோப்பைகள், கிளாஸ் பொலீத்தின் வகையைச் சேர்ந்த கண்ணாடிப் பேப்பர்கள் ஒரு வகைக் கவர்ச்சியை ஏற்படுத்தின.

எழுபதுகளில் அவற்றை தில்லைப்பிள்ளை கிளப்பிலும் அறிமுகம் செய்ய வேண்டுமென்று அப்பாவிடம் எடுத்துச் சொன்ன போது அவர் தடுத்துவிட்டார். “வாழையிலையும் வாழைத்தடலும் இல்லாத காலத்தில் பொலீத்தினைப் பற்றி போசிப்போம். அலுமினியப் பாத்திரங்கள் பழசானாலும் அவற்றை உருக்கி இன்னொரு பொருளாக்குவார்கள். பிளாஸ்டிக்கை எரித்தால் வரும் புகை மனிதனுக்கு கூடாது. மண்ணில் தாழ்த்தாலும் அது மண்ணில் உக்காது. கடலில் எறிந்தாலும் அது தாழாமல் மிதக்கும்” இப்படி பலவற்றைச் சொல்லி தடுத்துவிட்டார்.

ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ‘பொலீத்தின் பாவனைக்குத் தடை’ ‘பிளாஸ்டிக்கால் ஏற்படும் தீங்குகள்’ என்ற தலைப்பில் வரும் செய்திகளை படிக்கும் போது தில்லைப்பிள்ளை கிளப் பசியைப் போக்க மட்டுமில்லாமல் சூழலைப் பாதுகாக்கவும் நடவடிக்கை மேற்கொண்டது போல என்னால் உணர முடிகின்றது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

விவசாயத் தகவல்கள்

எரு, இலைகுழை போன்ற இயற்கைப் பசளைகளோடு தோட்டப் பயிர்ச் செய்கைகளில் ஈடுபட்ட எங்கள் கிராமவாசிகளுக்கு செயற்கை உரம் விற்கும் கடையின் அறிமுகம் 50 களின் பிற்பகுதியில் கிடைத்தது.

அந்த அறிமுகத்தினால் இயற்கைப் பசளைகள் பயன்படுத்தப்படாமல் வீணானது ஒரு புறமிருக்க ஏழ்மை நிலையில் வாழ்ந்த கிராமத்துத் தோட்டக்காரர் செயற்கை உரக் கொள்வனவிற்கு பெருமளவு பணம் செலவிட்டு, உற்பத்திச் செலவை அதிகரித்தனர். அப்போது எங்கள் கிராமத்து தோட்டக்காரர் இரண்டொருவருடன் அடிக்கடி அப்பா பரிமாறிய கருத்துக்கள் 90 களின் நடுப்பகுதியில் அரசாங்க அதிபராக கடமையாற்றிய போது விவசாயிகள், தோட்டக்காரர்கள் மத்தியில் என்னை வளந்தருநராக (RESOURCE PERSON) ஆக அறிமுகம் செய்தது.

உதாரணமாக வீட்டுக்கூரைகளுக்கு வேய்ந்த ஓலைகள் ஓரிரு வருடங்களின் பின் அகற்றப்பட்டு, தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றது. அந்த ஓலைகள் உரமாக நிலத்தில் தாழ்க்கப்படும் போது, அதே ஓலைகள் பசளையாக மட்டும் பயன்படாமல், அடி நிலத்திலிருந்து களைகள் முளைத்து மேலே வராமல் தடுக்கும் தடுப்பெல்லையாகவும் பயிர்களுக்காக ஊற்றப்படும் நீர் தரையின் கீழ்ப் பக்கத்தை நோக்கிச் செல்வதை தடுக்கும் தன்மை கொண்டதாகவும் (WATER HOLDING) ஓலைகள் இருக்கின்றன என அப்பா சொன்ன கருத்து என் மனதில் ஆழமாகப் பதிந்திருந்தது.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஒட்டுமா

எங்கள் ஊரில் ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு பெயர். அப்பாவும் அம்மாவும் வாங்கிய காணியின் பெயர் “கோரைத்தரை”. யாழ்ப்பாணத்தில் பயிர்கள் செழித்து வளரும் பசளைத் தன்மை கொண்ட சிவப்பு நிறமண் கொண்ட நிலங்களும் உண்டு.

கோரைப் புல் நன்கு வளரும் மணற்பாங்கான நிலம் - கோரைத்தரை. நீரை உறிஞ்சுகின்ற தன்மை கொண்ட மண். வாய்கால் வழி நீர் பாய்ச்சி பயிர் வளர்ப்பது சிரமமென்பதால் சாப்பிட்ட பின் கை கழுவும் இடத்தில் - சட்டி பானை கழுவும் இடத்;தில் வாழைக்குட்டி வைக்க சிறுவனான என்னை ஊக்குவித்தார். வாழைக்குலையில் இடைப்பழம் பழுத்ததும் பக்குவமாக வெட்டி ஒரு சீப்பு பழத்தை சாப்பிடச் சொல்லி மற்றவற்றை விற்றுப் பணத்தை என்னிடம் தந்துவிட்டார். பழத்தையுமு; சாப்பிட்டு பணத்தையும் கண்டால் சும்மா இருப்பேனோ? இப்படியே தங்கையை சமையல் வேலைகளிலும் வீட்டு வேலைகளிலும் அம்மாவுக்கு உதவியாக இருக்கப் பழக்கினார். அரிசி புடைக்கும் போது ஒதுக்கித் தள்ளும் குருணல் அரிசியை குப்பையில் வீசாமல் அதைப் போடுவதற்காக கோழி வளர்க்கச் சொல்லி முட்டை விற்கும் காசு தங்கைக்கு சொந்தமானது.

சிறு வாழைத்தோட்டம். பயிற்றம் செடி, பப்பாசி எனச் சற்றுப் பெரிதானது. ஒரு கோழி வளர்க்க ஆரம்பித்த தங்கை படிப்படியாக எண்ணிக்கையைக் கூட்டி ஆடும் வளர்க்க ஆரம்பித்தாள். வீடு முற்றம் ஆகியவற்றைத் துப்பரவாக வைத்திருப்பதும் தங்கையின் கடமை. குப்பை விற்கும் பணமும் அவளுக்குத்தான் சொந்தம். மாணவர்களான பிள்ளைகளிடம் பெற்றோர் கடனாகப் பணம் பெற்று சிறு வட்டியும் திருப்பிக் கொடுத்த சம்பவங்களும் உண்டு.

வீட்டுத் தோட்டத்தில் ஈடுபாடு அதிகரித்ததை அவதானித்த தந்தை “இந்த வருடம் நல்ல மாங்கன்று கொஞ்சம் வாங்கி வைக்க வேணும்” என்றார்.

தந்தையின் கருத்தை உள்வாங்கிக் கொண்ட தாயார் ஒருநாள் கிராமத்துச் சந்தையிலிருந்து பத்து சிறிய ஒட்டு மாங்கன்றுகளை வாங்கி வந்தார். மூங்கில் குழாய்களில் மண் நிரப்பி மாங்கொட்டையை விதைப்பார்கள். பின்னர் மாங்கொட்டையில் இருந்து செடி முளைத்துச் சிறு மரமானதும், நுனிப்பகுதியை வெட்டி ஏற்கனவே முதிர்ச்சி பெற்ற நல்ல இன மாமரத்தின் கிளைகளை வெட்டி ஒட்ட வைத்திருப்பார்கள். இப்படி ஒட்டி வைத்த மாமரத்தை யாழ்ப்பாணப் பகுதியில் ‘ஒட்டுமா’ என்றழைப்பர்.

விதையிலிருந்து முளைத்து வரும் மாமரம் வேறு வகையானதாக இருந்தாலும் , சுவை நிறைந்த கனி தரும் மரத்தின் கிளையை ஒட்டி , அந்த மரத்தின் பழங்கள் எல்லாவற்றையும் சுவையானதாக அமையும் படி தோட்டக்காரன் மாற்றி விடுவான். குறுகிய காலத்துக்குள் நல்ல இனிப்பாக கனி தரும் ‘ஒட்டுமா’ வைத் தேடி வாங்கி வைக்கும் வழக்கம் இருந்தாலும் சிலர் போலியான ஒட்டுமாவை உற்பத்தி செய்து ஏமாற்றும் வழக்கமும் இருந்தது.

அம்மா ஆவலுடன் வாங்கி வந்த ‘ஒட்டுமா’ போலியானது. சுவையான பழத்துக்குப் பதில் புளிப்பான மாம்பழங்களையே நான்கு வருடங்களுக்குப் பிறகு பெடி முடிந்தது. மாமலர விடயத்தில் வியாபாரி ஒருவனால் ஏமாற்றப்பட்ட கவலை அம்மாவுக்கிருந்தது.

அப்பா அம்மாவுக்கு ஆறுதலளித்தார். “பரவாயில்லை. இது ஒரு பாடம். திருநெல்வேலி விவசாயப் பண்ணையிலோ அல்லது நன்றாக தெரிந்தவர்களிடமோ ‘ஒட்டுமா’ வாங்கி வைத்திருந்தால் ஏமாற வேண்டியிருக்காது. பொருட்களை வாங்குவதற்கு முதல் விற்பவர் பற்றியும், பொருட்களின் தன்மை , விற்பவரின் குணநலன் பற்றியும் அறிந்திருக்க வேண்டும்”

பின்பு சற்று விபரமாகச் சொன்னார். “நிரந்தர முகவரியைக் கொண்ட நிறுவனங்கள் , நன்மதிப்பைத் தேடி வைத்துள்ள வியாபாரிகள் தங்கள் பெயரை காப்பாற்றிக் கொள்வதில் எப்போதும் கவனமாக இருப்பார்கள். மலிவான பொருட்கள் எல்லாம் தரமான பொருட்கள் எனச் சொல்ல முடியாது. யாழ்ப்பாணத்தில் மிகக் குறைந்தளவு நிலப்பரப்பை தோட்டச் செய்கைக்கு பயன்படுத்தினாலும் சிறந்த முறைகளைக் கையாள்வதனாலேயே பயன்பெறுகின்றார்கள். உதாரணமாக மாமரம், பலாமரம் போன்றவற்றை வைப்பதற்கு முன் பயன் தரக் கூடிய மரமா என்பதை அவற்றின் தாய் மரம் அல்லது விதை பெற பயன்படுத்தப்பட்ட மரம் என்பதிலிருந்து அறிந்து கொள்வார்கள். என்பதையும் ஒட்டு மரமானால் , ஒட்ட வைப்பதற்காக கிளை எடுக்கப்பட்ட மரத்தைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அக்கறை காட்டுவார்கள். மரத்தை நாட்டும் போது இடத்தை தேர்ந்தெடுப்பதிலும் கவனமாக இருப்பார்கள். மரம் வளரும் காலத்தில் விலங்குகளால் பாதிக்கப்படாதிருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் பிடுங்கப்படாத இடத்தில் மரம் வைக்கப்பட்டு வளர்வதையும் உறுதிப்படுத்திக் கொள்வார்கள். செடி வளர்ந்த பின் தவறான மரம் என்றோ அல்லது வைத்த இடம் தவறான இடம் என்றோ கருதக் கூடாது. முன்னெச்சரிக்கையாக நடக்க வேண்டும் என்பதில் யாழ்ப்பாணத் தோட்டக்காரர் கரிசனையானவர்கள்” என்றார்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

சகுனம் பார்க்கும் சங்கதி

எங்கள் கிராமத்தில் எடுத்ததற்கெல்லாம் சாத்திரம் பார்ப்பார்கள். பல்லி விழுந்தால், பல்லி சொன்னால் பஞ்சாங்கத்தைப் புரட்டுவார்கள். காகம் கரைந்தால் அதற்கும் ஏதாவது சொல்வார்கள். ஓணான் குறுக்கே போனால் கூடாது என்று எப்போதும் ஏதாவது சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். அப்பா சகுனம் சாத்திரம் எல்லாவற்றிலும் நம்பிக்கை வைப்பதில்லை. தெய்வ நம்பிக்கை இருந்தால் வேறு நம்பிக்கை தேவையில்லையென்பார் அணில் குறுக்காகச் சென்று நல்ல காரியம் ஒன்றும் ஆகவில்லை. அதனால் ஓணான் குறுக்காகப் போனாலும் கேட்டகாரியம் எதுவும் நடக்காது என்று சொல்வார்.

எழுது வினைஞனாகக் கடமையாற்றி நிர்வாக சேவைக்குப் பதவி உயர்வு பெற்றதும் அக்காலத்தில் காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் இரவு புகையிரதத்தில் ஏறி கொழும்பு வருவதாக ஏற்பாடு. மறந்து போகக் கூடாது என்பதற்காக சாப்பாட்டை கட்டியெடுத்து வாசலருகே வைத்தனர். இரவு நேரமாகையால் அரிக்கன் லாம்பையும் கொழுத்தி என்னை ஏற்றிச் செல்லதற்கான வாகனம் வந்தது. தான் தாமதம் பூனை குறுக்கே குதித்தோட அரிக்கன் லாம்பு பூனையின் கால்களுக்குள் இடறுப்பட்டு நிலத்தில் சரிய சிம்னி உடைந்து சிதறியது விளக்கு உடைந்ததை ‘’ ஐயோ! முழுவியளம் சரியில்லை ‘’ என்று யாரோ கொன்னார்கள்.

அப்பாவின் சிரிப்பு ‘’ சாப்பாட்டை ருசியாகச் சமைத்தால் பூனை வரும். சாப்பாட்டுக்கிட்ட விளக்கை வைச்சிருந்தா பூனை விளக்கைத் தட்டிப்போட்டு சாப்பாட்டை எடுக்கும். இதையெல்லாம் பார்த்த ஒண்ணும் செய்ய முடியாது. தம்பி புறப்படும்’’

முதல் முதல் ஒரு பெரிய பதவியை ஏற்பதற்காக புறப்படும் போத பூனை குறுக்கே வந்தது என்று தயங்கினாலும் அப்பா தந்த தைரியம் உற்சாகத்தையம் ஊக்கத்தையும் தந்தது. பதவிக்கு சந்த 25 வருடங்கள் பூர்த்தி. எந்த விக்கினமும் இதுவரை இல்லை.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Saturday, December 29, 2007

பெரிய இடத்து விஷயங்கள்

பள்ளி மாணவப்பருவத்தில் பாடசாலை விடுமுறை நாட்களிலும் வார இறுதியிலும் யாழ்ப்பாணம் செல்லும் போது அப்பா மாலை வேளைகளில் முற்றவெளிக்கோ இல்லது கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கோ என்னை அனுப்பி வைப்பார். பின்னர் இரவுச் சாப்பாட்டுக்குப்பின் கூட்டங்களில் யார் யார் என்ன பேசினார்கள் என்பதை அப்பாவுக்குச் சொல்ல வேண்டும். அதன் பின்பு இரண்டாவது நாள் பத்திரிகைச் செய்திகளைப் பார்வையிட்டு நான் சொன்னவற்றை ஒப்பிடுவார். இது சாரம் கெடாமல் சுருக்கி சொல்லக்கூடிய திறனையும் வளர்த்தது.

ஒரு சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு முற்ற வெளியில் பிரமுகர் ஒருவர் பேசியது ஞாயிற்றுக்கிழமை பத்திரிகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றிருந்தால் தந்தையாரிடம் அது பற்றிக் கேட்டேன்.


‘’ கொழும்பு பத்திரிகள் சனிக்கிழமை மாலையில் அச்சிடப்படடு இரவு தபால் புகையிரத முலம் யாழ்ப்பாணம் வருகின்றன. அப்படியானால் இரவு ஒன்பது மணிக்கு இடம் பெற்ற பேச்சு... என நான் பேசி முடிப்பதற்க்கு முன்பாக அவர் சொன்னார். ‘’இது பெரிய இடத்து விஷயம். எழுதித் தயாரிக்கப்பட்ட பேச்சை முன் கூட்டியே பத்திரிகைக்கு கொடுத்திருப்பார்கள்....சில விஷயங்களைத் தெரிந்தாலும் தெரியாதது மாதிரி காட்டிககொள்வது நல்லது.’’

காலம் போக போகத்தான் ‘வாய் திறந்து மாட்டிக் கொண்டு முழிப்பதைக் காட்டிலும் வாயை மூடிக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல முழிப்பது நல்லது.’ என்பதை நன்றாக உணர்ந்து கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Friday, December 28, 2007

நுட்ப பாடங்கள்.

“எப்படித் துடைத்தாலும் முகம் பார்க்கும் கண்ணாடி தெளிவாயில்லை. எண்ணை மாதிரியிருக்கு” என்ற போது அப்பா பற்பொடியால் முகம் பார்க்கும் கண்ணாடியைத் துடைக்க சொன்னார். இப்படியே அரிக்கன் லாம்புச் சிம்னியை வீபூதியைப் பயன்படுத்தி துடைக்கச் சொன்னார்.

ஒரு நாள் எனது சீப்பு அழுக்காக இருந்ததால் துப்பரவாக்குவதற்காக சீப்புப் பற்களிடையே தும்பை விட்டு படாதபாடு பட்டேன். அப்பா அதை வாங்கி பாவித்த பல் துலக்கும் பழைய தூரிகையால் சவர்க்கார நீரையும் சேர்த்து நொடிப்பொழுதில் துப்பரவாக்கி விட்டார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஒரு தையல்காரர் - முகாமைத்துவ தத்துவம்.

அப்பா வேலை செய்யும் கடைக்கு அடுத்த கட்டிடத்தில் ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு தொழில் செய்வோர் வசித்து வந்தனர். இரண்டாவது அறையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த தையல்காரர். சிறுவயதில் அவரின் கைவண்ணத்தில் உருவான சேட்டும் காற்சட்டையும் என்னை அழகுபடுத்தின. நேர்த்தியான தையல் சாதாரணமான கூலி இதனால் அவரது தையல் மிஷின் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் . பெருநாள் காலங்களில் இரவில் கூட தையல் மெஷின் தூங்குவதில்லை.

துணியைத் தைப்பதற்களவாக வெட்டிய பின் கழித்து விடப்படும் துண்டுகள் வெட்டுத்துண்டுகள் என அழைக்கப்படும். மெஷினருகே வைக்கப்பட்டிருக்கும் காட்போட் பெட்டி வெட்டுத்துண்டுகளால் நிரம்பி வழியும். சிறு வயதில் வெட்டுத்துண்டும் எனது விளையாட்டுப் பொருள்களில் அடங்கும். அவற்றைப் பயன்படுத்தி காற்றாடிக்கு வால் கட்டுவேன். பொம்மைகள் , சிறு அலங்கார வேலைகள் இப்படிப் பல.

வெட்டுத்துண்டுகள் தேவைக்கு மேலதிகமாகக் கிடைத்ததால் நண்பர்களுக்கு உபயம் செய்து நட்பையும் வளர்த்துக் கொண்டேன். வெட்டுத்துண்டுக்கு கிராக்கி அதிகமாகிய நேரத்தில் தையற்காரர் இடத்தை மாற்றி விட்டார்.

“அவர் இப்போ மலாயன் கபேக்கு முன்னால் பெரிய கடையெடுத்து பத்து மெஷின் போட்டு சேட் factory நடத்திறார்” என்ற அப்பா “இனிம வெட்டுத்துண்டு எடுக்க முடியாது. கொஞ்சம் கூட waste இல்லாம சேட் தைச்சிடுவார்” என்றும் தெரிவித்தார்.

ஒரு மெஷின் வைத்துத் தைக்கிற போதே வெட்டுத்துண்டால் பெட்டி நிரம்பி வழியும். பத்து மெஷின் எண்டால்....அப்பா பொய் சொல்கிறார் என்ற எண்ணத்துடன் மலாயன் கபேக்கு முன்னாலுள்ள தொழிற்சாலையைத் தேடிப் பிடித்தேன்.

அப்பா சொன்னது உண்மைதான். பத்து மெஷின்கள் வேறு வேறு அளவான சட்டைகளை உருவாக்கிக் கொண்டிருந்தன. இரண்டு சிறுவர்கள் சுறுசுறுப்பாக பொத்தான் தைப்பதிலும் பொத்தான் துவாரம் தைப்பதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். பெரிய மேசையில் நீளமான துணி விரிக்கப்பட்டு பல அளவுகளில் வெட்டப்படுகின்றன. ஆனால் ஓரங்குலத்துணி கூட வெட்டுத்துணியென கழிக்கப்படுவதில்லை. ஒருவர் சேட் தைப்பதற்கு இரண்டு யார் துணி கொடுத்தால் அதில் சிறிதளவு துணி வெட்டுத்துணியாகக் கழிப்படுகின்றது. நூற்றுக்கணக்கான சட்டைகள் தைக்கும் போது சிறிதளவு துணி கூட சேதமாகாமல் இருந்தது ஆச்சரியத்தை தந்தது.

இந்த அனுபவம் - ‘அருந்தலான வளங்களிலிருந்து உச்சப் பயன்பாடு’ என்ற முகாமைத்துவ உரையைத் தயாரிக்க உதவியது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

புத்தம் புது பாத்திரம்

புதிதாக வியாபாரம் ஆரம்பிக்கும் கடையொன்றில் அப்பாவையும் அழைத்திருந்தார்கள். பால் காய்ச்சுவதற்கு முன்பாக அப்பாவின் கேள்விக்கு “சுத்தமான பால்” என்று யாரோ பதில் சொன்னார்கள். “பாத்திரம் சுத்தமாகக் கழுவியதா?” எனக் கேட்ட போது – “இது ஹோட்டலில் பாவிச்ச கரிப்பிடிச்ச பாத்திரமில்லை. புதிசா வாங்கினது” என்று யாரோ பதில் சொன்னார்கள்.

அடுப்பில் சூடாகிக் கொண்டிருந்த வெள்ளை நிறப்பால் சிவப்பு நிறமாக மாறிக் கொண்டிருந்த போது ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் மாறி மாறிப் பார்த்தனர்.

எல்லோர் முகத்திலும் கேள்விக்குறி

அப்பா அமைதியாகச் சொன்னார்கள் “பயப்படாதீங்க. பாத்திரம் புதிசு. மெழுகு பூசியிருக்காங்க (sealing wax) நீங்க சுத்தமாகக் கழுவயில்ல”


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கஞ்சப் பிரபுக்கள்

அப்பாவுடன் நட்பைப் பேணிய பணக்காரக் குடும்பங்களில் அதுவுமொன்று. இரண்டு குடும்பங்களும் வாசிப்பதில் ஆர்வமுள்ளதால் புத்தகங்கள் கை மாறும். தொலைக்காட்சி பெட்டிகள் வருவதற்கு முன் வானொலிப் பெட்டிகள் செல்வாக்கு செலுத்திய காலம். டரான் ஸிஸ்டர்கள் கண்டு பிடிப்பதற்கு முன்பாக வால்புகள் இணைக்கப்பட வானொலிப் பெட்டிகளின் இயக்கத்திற்கு ஏரியல் வயர் கட்டுவது அவசியம். வாசிப்பில் ஆர்வம் மிக்க குடும்பம் வானொலி வாங்கிய போதும் மரத்திலும் கூரையிலும் ஏறி ஏரியல் வயர் கட்டுவதில் வெற்றி பெறவில்லை.

புத்தகத்துடன் சென்ற என்னை மரத்தில் ஏற்ற முயன்று தோல்வி கண்டதற்குக் காரணம் எனக்கிருந்த பயமே! ஏரியல் வயர் கட்டும் போது பத்து ரூபா கூலி கொடுக்கக் காட்டிய தயக்கம் வானொலியின் இயக்கத்தைத் தமாதித்தது. அப்பாவிடம் அவர்கள் கதையைச் சொன்னேன்.

“செட்டிக்கு வேளாண்மை சென்மப் பகை – பத்து ரூபாதானே – ஏறத் தெரிந்தவங்ககிட்ட சொல்லிக் கட்டிடுங்க. எல்லோருக்கும் அந்த வேலை சரிப்பட்டு வராது” என்றார்.

வீட்டுக்கார ஐயா நானூறு ரூபா கொடுத்து வாங்கிய வானொலிக்கு ஏரியல் வயர் இணைப்புக்கு பத்து ரூபா செலவழிக்க தாமதித்ததை அம்மாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் மாலை சுமார் ஏழு மணி. மெல்லிய இருட்டு. யாரும் வரமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு முற்றத்தில் நின்ற மரத்தினருகே மேசையை இழுத்துக் கொண்டு வந்து வைத்து மேசையின் மேலே கதிரையொன்றை வைத்து கதிரைக்கு மேலே ஸ்ரூல் ஒன்றை வைத்து ஏரியல் வயரையும் எடுத்துக் கொண்டு கால் பாதம் வரை நீண்டிருந்த சேலையை உயர்த்தி உள்ளே சொருகிக் கொண்டு சிரமத்தோடு மேலே ஏறிய வேளை பார்த்து வந்த காரின் வெளிச்சம் அம்மாவை நிலை குலையச் செய்ய குப்புற விழுந்து விட்டார். ஒட்டகப்புலத்தில் புக்கை கட்டி நோவெண்ணை வாங்கிய செலவு பத்து ரூபாவைப் போலப் பல மடங்கு. சில சில்லறை விடயத்தில் கஞ்சனைப் போல நடந்து பெரும் தொகை இழக்கக் கூடாது. பெரிய ஆபத்தில் சிக்கக் கூடாது என்பார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசி்க்கலாம்)

இரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..

ஆரம்பத்தில் மற்றவர்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன். பெரும்பாலும் நாடகங்களில் நடித்ததோடு ‘நிகழ்ச்சித் தொகுப்பாளராக’ அறிவிப்பு வேலைகளையும் செய்தேன். சொந்தமாக ஒரு சைக்கிள் வண்டி கூட இல்லாத நாட்களில் சைக்கிளில் அழைத்துச் செல்வதாக இருந்தால் மேடை நிகழ்ச்சிகளுக்கு சம்மதம் கொடுத்து பங்குபற்றினேன்.

திடீரென ஒரு திருப்பம். 1972 இல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வவுனியாவில் காப்புறுதி இரவு கலை விழாவை நடாத்திய போது நிகழ்ச்சித் தொகுத்தளிக்க என்னை அழைத்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த கூட்டுத்தாபன விளம்பர முகாமையாளர் டாபரேக்கு எனது அறிவிப்பு நன்கு பிடித்துக்கொண்டது. அவர் என்னைப் பாராட்டியதோடு வவுனியாக் கிளை முகாமையாளரிடம் ஏதோ ஒரு இரகசியமாக சொன்னார். அடுத்த நாள் வவுனியாக் கிளை முகாமையாளர் நவரத்தினம் அறிவிப்பு செய்ததற்கான பாராட்டுக் கடிதத்துடன் 250 ரூபா தந்தபோதுதான் விளம்பர முகாமையாளர் கிளை முகாமையாளருக்குச் சொன்ன இரகசியம் புரிந்தது. மாதம் முழுதும் வேலை செய்யும் கிளாக்கனுக்கு 300 ரூபா சம்பளம் - ஓரிரவு அறிவிப்புக்கு 250 ரூபா பின்னர் மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களில் அறிவிப்பு வேலைக்கு 250 ரூபாவுடன் போக்குவரத்து தங்குமிட வசதிகள் எனவும் கவனித்தார்கள். காணிவல் பொப்பிசை ஆகியனவும் அறிவிப்பு செய்ய அழைத்தன.

கையில் நல்ல பசை. இடையிடையே சில மணிநேரம் மேடையைக் கலகலப்பாக்கி பெறும் பல நூறு ரூபா பெரிதா? அல்லது மாதம் முழுக்க உழைத்து பெறும் 300 ரூபா பெரிதா? அப்பாவின் அறிவுரை “அரசனை நம்பி புருஷசனைக் கைவிடக் கூடாது” பெரிய நெருக்கடியிலிருந்து தப்பி நிரந்தர வருமானம் தரும் அரச உத்தியோகத்தைக் காப்பாற்றி உயர்வும் பெற முடிந்தது.

70 களின் நடுப்பகுதியில் இடையிடையே மேடைக் கவர்ச்சி எனக்கு வலை வீசியது. புகழ் என்பதை விட பணத்தையும் விரும்பியது மனம். வானொலி மேடைக் கலைஞர்களை வளைத்து கலை நிகழ்ச்சி செய்யக் கூடிய திறமையிருந்தது. வேலை செய்த இடத்தால் பெற்ற செல்வாக்கு விளம்பரத்துக்கும் டிக்கட் விற்பனைக்கும் உதவி செய்தது. ஓரிரவுக்குள் பெரிய புகழ் மட்டுமல்ல – பல ஆயிரக்கணக்கான ரூபா பணமும் சேர்ந்து விட்டது.

ஒரு வித மயக்கத்தோடு ஒலி வாங்கியில் நான் “பல சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்தக் கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தேன். கடந்த சில நாட்களாக அங்குமிங்கும் அலைந்து திரிந்ததில் சரியான உறக்கமின்றி சாப்பாடில்லாமல் இந்த நிகழ்ச்சியை உங்களுக்காக ஒழுங்கு செய்தேன். இன்னும் சொல்வதானால் இரண்டு நாட்கள் ஒரு கண்ணுறக்கமில்லை. இன்று ஒன்றுமே சாப்பிடவில்லை”

எதுவோ சாதனை நிகழ்த்தியவன் போல நான் சொன்னதும் எனது நண்பர் சிலர் என்னை அலாக்காகத் தூக்கிக் கொண்டு மேடைக்கு முன்னால் ஊர்வலம் வந்தனர்.

அன்றிரவு அப்பாவிடம் வாங்கிக் காட்டினேன். “கட்டியை யாராவது இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி கேட்டாங்களா? எதுக்குப் பொய் சொல்ல வேணும். கெஞ்சி மண்டாடி டிக்கட் வித்திட்டு சாப்பிடயில்லை – தூங்கயில்ல ஏன் பொய் சொல்ல வேணும்? காசு கொடுத்து டிக்கட் எடுத்து program பார்க்க வந்திருப்பாங்களே தவிர கட்டியின்ர பேச்சைக் கேட்க வந்திருக்க மாட்டாங்க. பேச்சில எந்தக் கலையழகும் இல்லை. பொருத்தமுமில்லை. ஒரே அறுவை. நீங்க ஒழுங்கு செய்யிற நிகழ்ச்சியில நீங்களே உங்களைப் பாராட்டக் கூடாது. வேற நிகழ்ச்சியில மற்றவங்க உங்களப் பாராட்டணும். அதுதான் உண்மையான பாராட்டு”

இதை விட இன்னொரு முக்கிய விடயம் சொன்னார். “இப்போ கொஞ்ச பணம் வந்திருக்கலாம். இது நிலைக்காது. இப்படியே வாற பணம் இப்படியே போயிடும். கொஞ்சமெண்டாலும் நிரந்தர தொழில் மூலம் தேட முயற்சிக்க வேணும். கொடி கட்டிப் பறந்து இலட்சக் கணக்கில் சம்பாதித்த சினிமாக்காரங்களே றோட்ல நிக்கிறாங்க”

இரவுக் கலை நிகழ்ச்சியில் பலரிடம் டிக்கட் மூலம் பெற்ற பணத்தை இரவுக் கலை நிகழ்ச்சியே என்னிடமிருந்து பறித்துக் கொண்டது. இருந்தாலும் என்னை நான் பாராட்டக் கூடாது என்பதுடன் மேடைகளிலும் பொது இடங்களிலும் பேசும் கவனிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

தொழில் விசுவாசம்

பொதுவாக யாழ்ப்பாணத்தில் பொருட்களை உடமையாக்கும் போது பொருட்களின் விளம்பரத்திலும் அழகிலும் மயங்காமல் நீடித்த காலம் பயன்படக் கூடிய பொருட்களைத் தேடி வாங்கிய காலம் ஒன்றிருந்தது. ஏ போர்டி கார், றலி சைக்கிள், சிங்கர் தையல் மெஷின் வரிசையில் பிக் பென் மணிக்கூடும் சேர்த்துக் கொள்ளப்படும். எங்கள் வீட்டில் பிக்பென் மணிக்கூடு பிழையில்லாமல் நீண்ட காலம் உழைத்ததற்கு ஒரு காரணமும் இருந்தது.

அந்தக்காலத்தில் பிரபலமான மணிக்கூடு திருத்;தும் கடையொன்றிருந்தது. அக்கடையில் இரண்டு மூன்று நாட்களில் ஐந்து ரூபா கட்டணத்தில் மணிக்கூடு ‘சேர்விஸ்’ செய்து தருவார்கள். அந்தக் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டிருப்பதால் அங்கோ வேலை செய்பவர் தனிப்பட்ட வகையில் சில இடங்களுக்குச் சென்று திருத்த வேலைகளைச் செய்வார். அவர் அப்பா வேலை செய்யும் கடைக்கும் ஞாயிற்றுக் கிழமைகளில் வருவார். இரண்டு ரூபாவும் ஒரு போத்தல் மண்ணெண்ணை (அப்போது சுமார் இருபத்தைந்து சதம்) யும் கொடுத்தால் சிறிது நேரத்திற்குள் மணிக்கூட்டை சேர்விஸ் செய்யப்படுவதால் களவு வேலைகளுக்கிடமிருக்காது எனப் பலர் நம்பினார்கள். காலத்துக்கு காலம் அவரால் எங்கள் மணிக்கூடும் சேர்விஸ் செய்யப்பட்டதால் மணிக்கூடும் சரியான நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. ஏதாவது உதிரிப்பாகங்கள் மாற்ற வேண்டியிருந்தால் அவர் குறிப்பிடும் உதிரிப்பாகங்களை வாங்கி வந்தால் எங்கள் முன்னிலையில் மாற்றி பழைய பாகங்களை மணிக்கூட்டு உரிமையாளரிடம் கொடுத்து விடுவார். உதிரிப் பாகங்கள் பொருத்துவதற்கென வேறு கட்டணம் வாங்க மாட்டார். இதனால் யாழ் நகரமெங்கும் அவருக்குப பல வாடிக்கையாளர்கள். நல்ல வருமானம் . கடையில் மாதச்சம்பளம்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை கடையில் சில மணிக்கூடுகள் சேர்விஸ் செய்ய ஆரம்பித்த போது நானும் அவருக்குதவியாக நட்டுகளைக் கழற்றி சில பாகங்களை மண்ணெண்னையில் கழுவி உதவி செய்தேன். அவரும் மணிக்கூடு திருத்தும் முறைகள் சிலவற்றைச் சொல்லித் தந்தார். அவரது மாதச்சம்பளம் ஞாயிற்றுக்கிழமை வருமானம் இவற்றை மனதில் கூட்டிப்பார்த்தேன்.

அப்பா சிரித்தார். வேணுமிண்ணா மணிக்கூடு ரிப்பயர் செய்யிற வேலையைப் பழகலாம். ஆனா ஒரு கடையில் வேலை செய்து கொண்டு ஞாயிற்றுக்கிழமை வருமானத்துக்காக வேற இடத்திற்கு போறது சரியில்ல. எப்பவும் நமக்குத் தொழில் தாறவங்க சம்பளம் தாறவங்கட்ட விசுவாசமாயிருக்கணும். அவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது”

‘அப்படியெண்டால் அவரிடம் நாங்கள் மணிக்கூடு சேர்விஸ் செய்யச் சொல்லிக் கொடுக்கிறதும் பிழை” என்றேன் நான்.

“பிழைதான். அவர் குடும்பம் பெரிசு. இப்படியப்படி உழைச்சாதான் குடும்பத்த காப்பாத்தலாம். அதுக்கு நாம செய்யிற பங்குதான் இது. இது சரியில்ல. இப்படி நாம உழைக்கக் கூடாது”

இந்த சம்பவம் மனதில் நன்றாகப் பதிந்துள்ளதால் எனது மேலதிகாரிகளுக்கு விசுவாசமாகவும் உண்மையாகவும் நடந்து வருகின்றேன். அதனால் எனது தொழிலிலும் அலுவலக விடயங்களிலும் யாரும் இதுவரை குற்றம் குறை காண முடியவில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஒரு சமையல்காரனும் அவரது மகனும்

ஆறாம் வகுப்பில் ஒரு நாள் மாலை நடைபெற்ற ஆங்கில பாடம் என்னை மிகவும் பாதித்தது. ஆசிரியர் வெகு சாதாரணமாக “what is your father?” எனக் கேட்க மாணவர்கள் சிலர் டொக்டர், என்ஜினியர் என பெருமைப்பட பலர் கிளார்க், ரீச்சர் என்றனர். கிராமப்புற பாடசாலையாதலால் சிலர் farmar என்றனர். எனது முறை வந்த போது நானும் farmar என்றேன். எனது பின்னணியை நன்கறிந்த ஆசிரியர் “கொப்பர் எங்கை கமம் செய்யிறவர்? எத்தினை ஏக்கர் காணி வைச்சிருக்கிறார்?” என்று கேள்வி மேல் கேள்வி கேட்க தடுமாற்றமும் வெட்கமும் என்னைப் பிடுங்கித் தின்றன.

ஆசிரியர் அத்துடன் நிறுத்தி விடவில்லை. “கொப்பர் சமையல் வேலை செய்யிறார். "My father is a cook" எண்ட தலைப்பிலை ஒரு பக்க கட்டுரை எழுதிக் கொண்டு வரவேணும்” என்றார்.

ஒவ்வொரு மாணவனும் அடுத்த நாள் அவர்களுடைய தகப்பனின் தொழிலைப் பற்றி ஆங்கிலத்தில் ஒரு பக்க கட்டுரை எழுதி வர வேண்டுமென்பது ஆசிரியரின் கட்டளை. எல்லா மாணவர்களினதும் கேலிப் பொருளான நான் அன்றுதான் முதன் முதலாக cook என்ற ஆங்கிலச் சொல்லைக் கேள்விப் பட்டேன். வெட்கம் ஒரு புறமிருக்க ஒரு வசனம் கூட எழுத முடியாத நிலையில் ஒரு பக்க கட்டுரை.

எப்படி எழுதப்போகின்றேன் என்ற பயம். எனது வேதனைக்கான காரணமறிய அம்மா கையாண்ட தந்திரங்கள் தோல்வியைத் தழுவ எனது நல்ல காலம் தீடிரென அப்பா வீட்டுக்கு வந்தார். அடக்கி வைத்திருந்த வெட்கம், வேதனை எல்லாம் அலறியழும் கண்ணீராக மாறியது. எனது கன்னங்களில் வழிந்தோடிய கண்ணீரை அப்பாவின் கைகள் துடைத்தன.

“கட்டி சாப்பிட்ட பிறகு நான் சொல்றன். ஒரு பக்கமல்ல இரண்டு பக்கத்துக்கு சொல்றன் எழுதினாச் சரி”

எனது சந்தேகம் - “அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியுமா? – cook என்ற சொல்லையே முதன் முதலாகக் கேள்விப்படும் என்னால் ஒரு பக்கம் ஆங்கிலத்தில் எழுத முடியுமா?”

அப்பாவின் பக்கத்தில் கொப்பி பென்சிலுடன் அமர்ந்து புதிய பக்கமொன்றில் My father is a cook என ஆங்கிலத்தில் எழுதினேன். அப்பா கொப்பியைப் பார்த்து விட்டு cook என்ற சொல்லுக்கு பதிலாக sweet maker என்று எழுதச் சொன்னார்.

ஆச்சரியத்துடன் பார்த்த எனக்கு அப்பா சிரித்துக் கொண்டே பதிலளித்தார்.

“கட்டி நான் செய்யிறது சாதாரண சமையலில்லை – அல்வா , கேசரி, போளி , பூந்தி , ஓமப்பொடி, காராசேவு , மைசூர்பாகு. அதில பல item ரொம்ப sweet ஆக இருக்கும். அதனால நான் சுவீட் மேக்கர்” அப்பா தான் தயாரிக்கும் பதார்த்தங்கள் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருட்கள் வெற்றுக் கொள்ளக்கூடிய இடங்கள், உத்தேச விலை, பதார்த்தங்களின் உணவுப் பெறுமானம் பயன்பாட்டுக் காலம் எல்லாவற்றையும் மிக தெளிவாக சிம்பிள் இங்கிலிசில் சொல்லியதால் சுமார் மூன்று பக்கம் எழுத முடிந்தது. அடுத்த நாள் சில நண்பர்கள் தகப்பன்மாரின் பெரிய உத்தியோகங்களை உச்சரித்த பின் வார்த்தைகளின்றித் தடுமாற எனது கட்டுரை ஆங்கில ஆசிரியரை தடுமாற வைத்தது. பல சொற்கள் அவருக்குப் புதிது என்பதை அவரே ஒத்துக் கொண்டார்.

அப்பா கடைகளில் உள்ள விளம்பர பலகைகள், லொறி , வான் போன்ற வாகனங்களில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை பார்த்து எழுத்துக்களை அறிந்து கொண்டதாகவும பொருட்கள் பொதி செய்து வரும் பெட்டி, தகரம் ஆகியவற்றிலுள்ள லேபிள்கள் சிட்டைகள் ஆகியவற்றிலிருந்து அநேக தகவல்களைப் பெற்றுக் கொண்டதாகவும் கூறுவார். “வெட்கப்படாமல் பயப்படாமல் ஆங்கிலத்திலும் , சிங்களத்திலும் பேச வேண்டும், எழுத வேண்டும்” என்று சொல்லுவார். இதனால் எனனைப் பற்றி , எனது தொழிலைப் பற்றி, எனது ஊரைப் பற்றி , எனது நாட்டைப்பற்றி, சமகால நிகழ்வுகளைப் பற்றி ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் சரளமாகக் கதைக்கவும் இதே விடயங்களை இன்னொருவரிடமிருந்த அறிந்து கொள்ள எத்தகைய கேள்விகளைக் கேட்க வேண்டுமென்பதும் தெரிந்து கொண்டேன். அவ்வளவுதான். ஆனால் நான் கடமையாற்றும் இடத்தில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளும் தெரியுமென பிறர் நினைப்பதற்கு sweet marker ரின் வழிகாட்டல் தான் காரணம்


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கலைந்திடாத கோலம்

முற்றத்தை அலங்கரிக்கும் அழகான கோலங்களைப் போடுவது அம்மாவுக்கு கை வந்த கலை. தங்கை அம்மாவிடம் பயின்ற கலையை மேலும் மெருகுபடுத்தி தினமும் விதவிதமாகவும் வித்தியாசமான பொருட்களாலும் கோலம் போட்டு வீட்டைப் பொலிவாக்கி எங்களையும் மகிழ்வித்தாள். தங்கையின் முயற்சியையும் கலையார்வத்தையும் பாராட்டிய தந்தை இந்தியா சென்ற அவர் நண்பரிடம் சொல்லி கோலம் தொடர்பான புத்தகமொன்றை வாங்கிப் பரிசளித்தார்.

தங்கை சில நாட்களாக பல விதமான பொருட்களைச் சேகரித்து ஒரு நாள் மாலை வீட்டு விறாந்தையையும் முற்றத்தையும் வண்ணக் கோலங்களால் நிரப்பினாள். பெரும்பாலும் மாவையும் தேங்காய்பூவையும் பயன்படுத்தியே கோலம் போடப்படும். தங்கை போட்ட கோலங்கள் வித்தியாசமானது. – பல வடிவங்கள் நிறங்கள் உள்ள இலைகளைப் பயன்படுத்தி ‘இலைக் கோலம்’ அழகான அமைப்பும் கண் கவர் வண்ணமும் கொண்ட பூக்களைப் பயன்படுத்தி ‘மலர்க்கோலம்’ அரிசி உழுந்து, பயறு , பருப்பு, போன்றவற்றால் ‘தானியக் கோலம்’ மாலை கோர்க்கப் பயன்படும் மணி போன்ற அலங்காரப் பொருட்களை வைத்து ‘மணிக்கோலம்’ இப்படிப் பற்பல. இவற்றுடன் தேங்காய்ப்பூவுக்கு வர்ணம் சேர்த்து செய்யப்பட்ட கோலமும் இருந்தது.

காரணமில்லாமல் விழாக்கோலம் கொண்ட வீடு என்னை வியப்பில் ஆழ்த்த அம்மா வியப்பை விடுவித்தார் - “நாளைக்கு காலமை சிநேகிதப் பிள்ளையள் வருகினமாம். அவைக்குக் காட்டுறதுக்கா பிள்ளை கோலம் போட்டிருக்கு”

“எந்தக் கோலம் வடிவு?” என்று தங்கை கேட்டபோத – “வீட்டின் பிரதான முற்றத்தில் போட்டிருந்த கோலம் தான் வடிவு” என்றேன். அதிகம் செலவில்லாமல் சிரமமில்லாமல் அரிசிமாவினால் வரையப்பட்ட சாதாரணமான கோடுகளைக் கொண்ட கோலமானாலும் கலையழகையும் தனித்துவத்தையும் கொண்டிருந்த அக்கோலமே வடிவான கோலம் என்ற எனது கருத்தை அம்மாவும் அப்பாவும் ஏற்றுக் கொண்டனர்.

அடுத்த நாள் காலை தங்கையின் சிணுங்கல் சத்தத்தில் விழித்துக் கொண்டோம். வடிவான மாக்கோலத்தையும் தேங்காய்ப்பூக் கோலத்தையும் எறும்புகள் சுவைத்துப் பார்த்திருக்க வேண்டும். அலங்காரக் கோலம் சிதைந்தும் அழிந்தும் உருமாறி அலங்கோலமாயிருந்தது.

கோலம் போடுவதற்கான மாவைப் பக்குவப்படுத்தி கோலம் போடுவதற்குள் சிநேதிகள் வந்து விடுவார்கள் என்பதுதான் தங்கையின் கவலைக்குக் காரணம். அப்பா ஒரு சிறு ஓலைப் பெட்டியை எடுத்து அங்குமிங்கும் குனிந்து நிலத்திலிருந்து எதையோ எடுத்து ஓலைப்பெட்டிக்குள் போடுவதை அவதானித்தோம். அப்பா கல்லுரலை நிமிர்த்தி அலவாங்கைக் கொண்டு வரும்படி சொன்னார். அப்போதுதான் பெட்டியில் சேகரித்துக் கொண்டு வந்த பொருட்களைப் பார்த்தோம்.

சாதாரணமாக நிலத்தில் காணப்படும் சிறு சுண்ணாம்புக் கற்கள் அப்பா கற்களை உரலில் போட்டு அலவாங்கால் இடித்தார். உரலில் இடித்தவற்றை மீண்டும் பெட்டியில் போட்டுக் கொண்டே “கோலப் பொடி ரெடி” என்றார்.

“சாதாரணமாக ஒரு பிரயோசனமுமில்லாம இருக்கிற இந்த மாதிரிக் கல்லை பொறுக்கி மாவாக்கி தகர டப்பாவிலை போட்டு வைச்சா தேவையான போது கோலம் போடலாம். காசும் வேணாம். எறும்பும் தின்னாது” – அப்பா சொன்னது என் காதில் விழுந்து பதிவானது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஏமாற்றம் எமக்கான போது..

அப்பா தொழில் செய்த கடைக்கு அருகிலமைந்த கடடிடமொன்றில் பல அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்கியிருந்தவர்கள் சாப்பிடுவதற்காக கடைக்கு வந்த போதும் சிலரின் அறைக்குச் சென்ற போதும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொந்த ஊர் நிரந்தர வதிவிடம் வேறாக இருந்தாலும் சிறு சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதால் அவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் தங்கியிருந்தார்கள்.

ஒருவர் ஐஸ்கிறீம் விற்பவர். இன்னொருவர் புதிய வீடுகள் கட்டிடங்கள் கட்டுமிடங்களில் சீமேந்து பைகளை வாங்கி வந்து சிறு சிறு பைகளாக ஒட்டி விற்பவர். விளம்பர பலகை எழுதுபவர், பாயசம் காய்ச்சி விற்பவர், தையற்காரர், தும்பு மிட்டாய், கச்சான் அல்வா செய்பவர் இப்படிப் பலர் அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் இருவரை ஒரு நாள் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் காணநேர்ந்தது. ஒருவர் கையில் சிறிய காட்போட் பெட்டி. மறுகையில் கண்ணாடிப் பேப்பரில் சுற்றப்பட்ட இனிப்புகள்.

“இருபது தோடம்பழ இனிப்பு பத்து சதம். தாகத்துக்கு நல்லது. இருபது தோடம்பழ இனிப்பு பத்துச் சதம்” எனக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.

மரநிழலின் கீழே நின்ற மற்றவரைச் சுற்றிவர சிறுவர் கூட்டம். ஒரு அட்டைப் பெட்டியில் இனிப்புகளும் ஒரு சிறிய தகரத்தில் தண்ணீரும் வைத்திருந்தார். கையில் இரண்டு அங்குல நீளம் இரண்டு அங்குல அகலத்தில் வெட்டப்பட்ட காகித்தத் துண்டுகளை வைத்திருந்தார்.

அவரிடம் ஐந்து சதம் கொடுத்தால் கையிலிருக்கும் காகித் துண்டொன்றைக் கொடுப்பார். எதுவும் எழுதப்படாத காகிதத் துண்டை தகரத்திலுள்ள தண்ணீரில் போட்டதும் அத்துண்டில் ஒன்று முதல் இருபது வரையிலான இலக்கங்களுள் ஏதாவது ஒரு இலக்கம் தோன்றும். என்ன இலக்கம் தோன்றுகிறதோ அத்தனை இனிப்புகளைக் கொடுப்பார். வெற்றுக் காகிதத்தை தண்ணீரில் போட இலக்கம் தோன்றுவதும் இலக்கத்துக்கேற்ப இனிப்புக் கொடுப்பதும் வேடிக்கையாகத் தோன்ற சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஐந்து சதம் கொடுத்து வாங்கும் துண்டுகளில் இடையிடையே 10 அல்லது 12 இலக்கங்கள் தோன்றும் போது அவர் பார்த்துப் பாராமல் இனிப்புக்ளை அள்ளிக் கொடுப்பதும் அநேகமாக 1 அல்லது 2 அல்லது 3 இலக்கங்கள் தோன்றும் போது கணக்காக இனிப்புகள் கொடுப்பதையும் கவனித்தேன். நானும் ஐந்து சதம் கொடுத்து துண்டு கேட்ட போது என்னை அடையாளம் கண்டு கொண்டதுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கைநிறைய இனிப்புகளை அள்ளி தந்து அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்றார்.

பணம் கொடுக்காமல் பலர் முன்னிலையில் நிறைய இனிப்புக்களைப் பெற்றுக் கொண்டது சந்தோஷத்தைத் தந்தாலும் என மனதை ஏதோ உறுத்தியது.

அன்று மாலை நடந்ததை அப்பாவிடம் சொன்னேன்.

அப்பா அவரை அழைத்துப் பத்து ரூபா பணம் கொடுத்து “இந்தாய்யா இனி சின்னம் சிறுசுகளை ஏமாத்தாம நான் சொன்னதை செய்” என்றார்.

பின்னர் நான் அப்பாவிடமிருந்து தெரிந்து கொண்டது.

ஒருவர் பெரும்தொகையான இனிப்புகளை மொத்த விலைக்கு வாங்கி பத்து சதத்துக்கு இருபது இனிப்பு விற்பனை செய்கின்றார்.

மற்றவர் சவர்க்காரத்தை நீரில் கரைத்து அந்த நீரால் கடதாசியில் எழுதினால் அந்த இலக்கங்களை எழுத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என எண்ணிக் குறைந்த பெறுமதியுள்ள கடதாசிகளை அதிக அளவில் குறிப்பாகச் சிறுவர்களை ஏமாற்றி இனிப்பு விற்பனை செய்கின்றார்.

அப்பாவுக்கு ஏமாற்றி வியாபாரம் செய்வதில் உடன்பாடில்லாததால் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். அவர் தனது வியாபாரத்தை மாற்றவேயில்லை.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்பும் அவர் இலக்க துண்டுகளை வைத்தே இனிப்பு வியாபாரம் செய்ததைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவன் கதையை விடு. நீ ஏமாறாதே” என்றார்.

பின்னர் சுமார் ஆறேழு மாதங்கள் போயிருக்கும். அவர் பஸ் நிலையததில் பொரித்த பருப்பு கடலை டொபி விற்பனை செய்வதைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவனுடைய பிள்ளையை யாரோ ஏமாத்திப் போட்டாங்களாம். என்னட்டச் சொல்லி அழுது கொண்டிருந்தான். அதுக்கப்புறம் ஆளே மாறியிட்டான்” என்றார் அப்பா.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Wednesday, December 26, 2007

செய்விக்கும் சொல்லும் உத்தி 2

சில விடயங்களை மனதைப் புண் படுத்தாமல் சுட்டிக்காட்டுவதில் அப்பா கெட்டிக்காரர். ஒரு நாள் மாலை வீட்டுக்குத் திரும்பிய போது வீட்டில் அப்பா மாத்திரம் இருந்தார்.

“என்ன கட்டி சாப்பாத்துக் காலிலை ஏதோ மிதிச்சிட்டீர் போலையிருக்கு. ஒரே மணமாயிருக்கு” என்றார்.

காலைத் தூக்கிப் பார்த்துவிட்டு ஒன்றுமில்லையென்றேன். அவர் விடவில்லை. “அப்ப சப்பாத்துக்குள்ளயிருந்து மணக்குதா?

பல நாட்களாகக் காலுறைகளைத் தோய்க்காத காரணத்தால் வியர்வையும் அழுக்கும் சேர்ந்துவரும் துர்நாற்றம் என எப்படி அப்பாவுக்குச் சொல்வது?

மெதுவாக காலுறைகளையும் சவர்க்காரத்தையும் எடுத்துக் கொண்டு கிணற்றடிக்குச் சென்ற என்னை பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் அழுக்கான எனது பெனியன் கைலேஞ்சி.

“சேட்டையும் காற்சட்டையையும் மட்டும் தோய்த்து iron செய்தால் போதாது. எல்லா உடுப்புகளையும் சுத்தமாக வைச்சிருக்க வேணும். இல்லையெண்டால் ஊத்தை உடுப்புகளாலை உடம்பு கடிக்கும். வருத்தமும் வரும்” என்று அப்பா சொன்னது மாலையில் வீட்டுக்குச் சென்று ஆடைகளை களையும் நினைவுக்கு வரும்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கடிதக் காவல்கள்

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ‘சுதந்திரன்’ வாரப்பத்திரிகையின் ‘வளர்மதி’ சிறுவர் பகுதியில் வெளியிடுவதற்காக ‘உதவி புரிவோம்’ என்ற தலைப்பில் எழுதி வைத்திருந்த கட்டுரையைப் படித்த தந்தை அது நல்ல கட்டுரை எனவும் திரும்ப அழகான கையெழுத்தில் எழுதியனுப்பும் படியும் சொன்னார்.

மீண்டும் எழுதி கட்டுரையை கடித உறையினுள் வைத்து ஒட்டிய பின் உறையை வாங்கியவர் மேலும் கீழும் பார்த்தார். அவரே அந்த பார்வையை மொழி பெயர்த்தார்.

“கடிதத்தை உறைக்கு அடங்கத் தக்க வகையில் பக்குவமாக மடித்து உறையில் வைத்து ஒட்டும் போத கடித்தைப் பெறுபவர் கிழிக்கும் போது கூட தவறியேனும் கடிதம் கிழியாத வகையில் உறையின் ஓரங்களுக்கு மாத்திரம் பசை தடவ வேண்டும்” கடித உறைக்கு அளவுக்கதிகமாகப் பயன்படுத்திய பசை கட்டுரையையும் சேதமாக்கி விட்டது. இன்றைக்கு அலுவலகங்களுக்கு வரும் கடிதங்களில் பெரும்பாலானவற்றை உறையிலிருந்து எடுப்பதற்குள் அவை துண்டு துண்டாகி விடுகின்றன. கடிதங்கள் மட்டுமல்ல, காசோலைகளும் கூட.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

காதுக் குடைகையிலே..

சின்ன வயதில் இன்னுமொரு கெட்ட வழக்கம். நல்ல விடயங்களை விரும்பிக் கேட்கும் எனது காது தீப்பெட்டிக்குச்சு , கிளிப், ஊசி போன்றவற்றையெல்லாம் கேட்கும் - காது குடைவதற்காக, சில சமயம் கை ஏதாவது பொருளைத் தேடியெடுத்து காதினுள்ளே விட்டு பெரிய அட்டகாசம் செய்யும். அப்பா பார்த்து விட்டால் அவ்வளவுதான்.

“கட்டிக்கு எத்தனை தரம்...” அவர் ஆரம்பித்ததும் அவர் பார்வையிலிருந்து மறைவதைத் தவிர வேறு வழியில்லை.

‘குளிக்கும் போது நீரூற்றி காதுகளைக் கழுவ வேண்டும். பின்பு சற்று தடிப்பான பழைய சீலைத்துண்டை திரிபோல உருட்டி காதில் விட்டு அழுக்கையகற்ற வேண்டும். கிளிப் ஊசி போன்றவை காதில் காயத்தை ஏற்படுத்தினால் புண் உண்டாகலாம். தீக்குச்சியின் மருந்துள்ள முனை காதில் போனால் மேலும் அழுக்குச் சேரும். பயன்படுத்தி எறிந்த தீக்குச்சை எடுக்கிற போது நிலத்திலிருந்த அழுக்கையும் சேர்த்தெடுத்து காதுக்குள் சேமிக்கின்றோம்.

இரு முனைகளிலும் பஞ்சு வைத்து பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட காது குடையும் குச்சியை அப்பாவிடம் காட்டினேன். அதை வாங்கிப் பார்த்துவிட்டு அப்போதும் சிரித்தார். ஒரு முனையில் ஒட்டப்பட்டிருந்த பஞ்சு கழன்றிருந்தது. ‘நல்ல வேளை காது குடையும் போது காதுக்குள் கழன்றால்...’ என நான் சிந்தித்த போது இன்னொரு சம்பவத்தைப் சொன்னார்.

அப்பாவின் மருமகன் ஒருவன் பாடசாலைக்குச் செல்லும் நாட்களில் பொழுது போக்காக தும்பு, சிறுகுச்சு போன்றவற்றை மூக்கினள் நுழைத்து தும்மலை வரவழைத்து மற்றவர்களைச் சிரிக்க வைப்பான். ஒரு நாள் அவனுக்கு கிடைத்த பொருள் கொப்பியில் எழுதுவதற்கும் எழுதியவற்றை அழிப்பதற்கும் சிறு இறப்பர் ஒரு முனையில் பொருத்தப்பட்ட பென்சில். இறப்பர் முனையை மூக்கினுள் விட்டு தும்மல் விளையாட்டு காட்டிய போது இறப்பர் கழன்று மூக்குத்துவாரத்தில் சிக்கி விட்டது.

தும்மி மற்றவர்களைச் சிரிக்க வைத்த மருமகனின் கண்கள் சிவந்து நீரை சிந்த மூச்சு விடுவதற்கும் வெகு சிரமப்பட்டான். பல முயற்சிகள் பயன் தராமல் போக ஆஸ்பததியில் டாக்டர் வளைந்த கம்பியொன்றை மூக்குக்குள் செலுத்தி இறப்பரை எடுத்த பின் மருமகனுக்குத் தும்மல் வருவதில்லை.

சில வேளை என்னை மறந்து ஊசியெடுத்து பல்லைக் குத்தினால், நகத்தைக் கிண்டினால் அப்பா என் முன்னால் நின்று ஏசுவது போல ஓர் உணர்வு. உஷாராகி உள்ளத்தால் அப்பாவிடம் மன்னிப்புக் கேட்டுத் ஊசியை எறிந்து விடுவேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

சைவக்கடையில் ஒரே ஒரு மாமிசக்காரன்

கடை அந்த நாள் வழக்கப்படி ‘சைவாள் காப்பி ஹோட்டல்’ எனவும் அழைக்கப்பட்டது. கடையில் வேலை செய்பவர்கள் கூட முட்டையென்றாலும் உள்ளே கொண்டு வந்தால் வேலையிலிருந்து நீக்கப்படுமளவுக்கு கடும் உத்தரவு. சைவத்தை விரும்பிச் சாப்பிடுவோர் முகம் சுளிக்காமல் வந்து போக வேண்டுமென்ற எதிர்ப்பார்ப்பு. ஒரே ஒரு விதிவிலக்கு செல்லமாக வளர்த்து வந்த நாய்க்கு மட்டும். கடையின் மாற்று வழியொன்றினால் நாயாரின் தேவை கவனிக்கப்படும்.



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கலப்பட காரணங்கள்

அந்த சுற்றடலில் இருந்த சாப்பாட்டுக் கடைகளை விட சில பொருட்களின் விலை சற்று அதிகம். நன்கு பழக்கமான வாடிக்கையாளர் ஒருவர் என் காது கேட்கக் கூடியதாகச் சொன்னார்.

“விலையெல்லாம் கூடச்சொல்லி இப்படி வயித்திலை அடிக்கிறீங்களே” அப்பாவின் முகத்தில் மெல்லிய சிரிப்பு. “விலை உங்களுக்கு மட்டுமில்ல எங்களுக்கும் கட்டுப்படியாகணும், கலப்படமில்லாமல் சாப்பாடு செய்யிறதால் விலை கொஞ்சம் கூட, வயித்தில அடிச்சாலும் இந்தச் சாப்பாட்டால வருத்தம் வராது”

கலப்படம் இருக்கக் கூடாது என்பது கடையை ஆரம்பித்த தில்லைவனம் பிள்ளை முதலாளியின் கண்டிப்பான உத்தரவு. சாப்பிட வருவோர் அடுக்களை வரை வந்து சாப்பாடு தயாராகும் விதத்தைப் பார்க்கலாம். அரிசிமா, மிளகாய்த் தூள், கோப்பிதூள் போன்றவற்றை ஆட்களைக் கொண்டுவந்து ஹோட்டலில் தயாரிப்பார்கள். பால் பெற்று கொள்வதற்காக மாட்டுப் பண்ணையொன்றும் நடாத்தப்பட்டது. தேவை அதிகரித்ததால் வெளியே பால் வாங்கினாலும் மாட்டுப்பண்ணை தொடர்ந்தும் பேணப்பட்டது.

“நாளைக்கு ஆட்கள் வராவிட்டாலும பரவாயில்லை. சாப்பாட்டைக் குறை சொல்லக்கூடாது. நேர்மையாகச் சம்பாதிக்கிற காசுதான் தங்கும் ஏமாத்திச் சம்பாதிக்கிற காசு எங்களை ஏமாத்திப் போடும்” என அடிக்கடி சொல்லி கோதுமை மாவுடன் தவிட்டைக் கலந்து தயாரித்த இடியப்பத்தை அரிசிமா இடியப்பம் என்று விற்று பணம் சம்பாதித்த ஒருவர் இளவயதிலேயே நீரிழிவு நோய்க்கு ஆளாகி தவிட்டுப் பாண் சாப்பிடும் உதாரணத்தையும் சுட்டிக் காட்டுவார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

உயிர் கொல்லும் சாதனம்

அந்த நாட்களில் ஐஸ்கிறீம் விற்பனை செய்யாத கடைகளில் குளிர்சாதனப் பெட்டிகளைக் காண்பதரிது. பெரும்பாலும் போதியளவு எல்லாப் பொருட்களையும் உடனடியாகக் கொள்வனவு செய்வதிலேயே மக்கள் நாட்டம் மிக்கவர்களாகக் காணப்பட்டனர். சில பொருட்களை அவித்தோ அல்லது வற்றலிட்டோ பதப்படுத்தி அடுத்த சில நாட்களுக்குப் பயன்படுத்தினர். இப்போதுள்ளது போல பல நாட்களுக்கு குளிர்சாதனப் பெட்டியில் இறைச்சி மீன் முதலியவற்றை உயை வைத்து உண்ணும் வழக்கம் இருக்கவில்லை. இந்நிலையில் முகவர் ஒருவரின் சாமர்த்தியத்தால் அப்பாவின் முதலாளி குளிர்சாதனப் பெட்டி ஒன்றை வாங்கினார்.. சோடா போன்ற குளிர்பானங்கள் வைத்தெடுப்பதற்கு இப்பெட்டி பயன்பட்டது. சாதாரண சோடாவை விட கூல் சோடாவின் விலை ஐந்து சதம் அதிகம். எதிர்பார்த்தளவுக்கு குளிர்சாதனப் பெட்டியால் வருமானம் வராதது ஒருபுறம் இருக்க குளிர்சாதனப் பெட்டியைத் தொடர்ந்தும் இயக்கியதால் மின்சாரக் கட்டணம் அதிகரித்தது முதலாளிக்கு வருத்தத்தைக் கொடுத்தது. அவரின் நண்பர் காட்டிய மாற்று வழி “இரவில் மின்னிணைப்பைத் துண்டித்து குளிர்சாதன பெட்டியின் இயக்கத்தை நிறுத்த வேண்டும். நீர் நிறைந்த வாளிக்குள் அமுக்கி மீண்டும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்து விற்பனை செய்யலாம். சோடாவை விலை கூட்டி விற்கலாம் மின்சாரக் கட்டணமும் குறையும்”

காலையில் குளிர்பானம் விற்க வேண்டிய சந்தர்ப்பங்களில் “கூல் கொஞ்சம் காணாது” என்று சொல்லிக் கொள்வார்கள். அப்பா போலி வேலைகளுக்கு பச்சைக் கொடி காட்டாதால் குளிர்சாதனப் பெட்டி விற்கப்பட்டது.

எனது நிதி நிலை திருப்பதியாக இருந்த போது நான் ஒரு குளிர்சாதனப் பெட்டி வாங்கிய போது எனது நண்பர் ஒருவரும் குளிர்சாதனப் பெட்டி வாங்கினார். வாழைப்பழம் போன்றவற்றை அதனுள் வைக்கக் கூடாதென்றும் காலத்துக்குக் காலம் சுத்தமாக்க வேண்டுமென்றும் சொல்லித் தந்த அப்பா ஒரு விடயத்தையும் வற்புறுத்திச் சொன்னார்.

“சில பொருட்களை குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்ததும் தாமதிக்காமல் பயன்படுத்த வேண்டும். சில பொருட்களைக் குளிர்ரில் வைத்திருந்தாலும் அவற்றின் காலம் காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும். மின்சாரக் கட்டணத்தைக் கணக்கிலெடுத்து தொடர்ச்சியாக மின் இணைப்பைக் கொடுக்காமல் விட்டாலும் பொருட்கள் பழுதாகி விடும்”

இ;ந்த விடயத்தில் நான் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. நனர் மட்டுமல்ல, உயர் அதிகாரியான எனது நண்பரும் தான்.

இளவயதிலேயே நண்பரைச் சில வருத்தங்கள் வாடடியதால் அடிக்கடி ஊசி மூலம் மருந்தேற்றிக் கொள்வார். அடிக்கடி ஆஸ்பத்திரி செல்வதும் டாக்டர் என அலைவதும் சிரமம் எனச் சொல்லி தனக்குத்தானே ஊசி மூலம் மருந்தேற்றப் பழகிக் கொண்டார். பார்மஸிகளில் ஊசி மருந்தை வாங்கி குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருப்பார். தனக்கு விருப்பமானபோது தானே வைத்தியம் பார்த்துக் கொள்வார்.

திருகோணமலையில் வேலை செய்த நண்பர் கடமையொன்றுக்காக சில தினங்கள் மட்டக்களப்புக்கு சென்று திருமலை திரும்பியதும் குளிர்சாதனப் பெட்டியை திறந்து பார்த்திருக்கின்றார். வழமைபோல ஊசி மருந்தை எடுத்து தனக்குத்தானே ஏற்றிய பின் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து குடும்பத்தினருக்குச் சொன்னதும் அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர்தான் நடந்த விஷயம் தெரியவந்தது. நண்பர் மட்டக்களப்பு சென்ற பின் மின்னிணைப்பை நிறுத்தி குளிர்சாதனப் பெட்டியை துப்பரவாக்கிய போதும் சில நாட்களுக்குப் பின்தான் குளிர்சாதனப் பெட்டியை இயங்க வைத்திருக்கின்றனர்.

பழுதான மருந்தால் ஏற்பட்ட பாதிப்புக்கு இந்தியா சென்றும் ஏற்ற சிகிச்சை பெற முடியாமல் போனதால் மிகவும் திறமையான ஈழத்தமிழ் நிர்வாக உத்தியோகத்தர் ஒருவரை இளவயதில் இழந்து விட்டோம்.



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அவதானிக்கா பொழுதுகள்....

அப்பா பாட நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைள் மாத்திரமல்லாமல் அறிவிப்புகள் விளம்பரங்கள் எல்லாம் வாசிக்கச் சொல்லி வற்புறுத்துவார். அதாவது கையில் கிடைத்தவற்றை மாத்திரமல்லாமல் கண்ணில் பட்டவற்றையும் வாசிக்க வேண்டுமெனச் சொல்லுவார். அடிக்கடி செல்லும் கடையில காணப்பட்ட அறிவித்தலை கவனிக்கத் தவறியதால் ஒரு தடவை எண்பது ரூபா நட்டம்.

1994 இல் வவுனியாவில் நாடகம் மேடையேற்றுவதற்காக சில்லையூரான், வரணியூரான் அடங்கலாக 16 பேர் கொண்ட குழுவுடன் கொழும்பிலிருந்து காலையில் வானொன்றில் புறப்பட்டோம். குருணாகல என்னும் இடத்தை எட்டு மணியளவில் வான் கடந்து கொண்டிருந்த போது சாப்பாட்டின் வரவை கலைஞர்களின் வயிறுகள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பல குரல்கள் ஒலித்தன.

‘இன்னும் ஒரு கிலோ மீற்றர் போக எப்பாவல ஹோட்டல் வரும், வாகனம் நிற்பாட்டலாம், வசதியாகச் சாப்பிடலாம். Toilet வசதியுமும் இருக்கு’ என்றேன். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்புக்கு வந்து போகும் வழியில் அந்த ஹோட்டலுக்குப் போய் வந்த அனுபவம். சில்லையூர் செல்வராசனின் கழுத்து மனைவியிருந்த பக்கம் திரும்பியது: ‘கமலினி!’ என்றார்.

கமலினியும் ஜெயசோதியும் சேர்ந்து ஒரு பார்சலை எடுத்தனர். கமலினியின் அழைப்பு: ‘தில்லையண்ணா sandwich செய்து கொண்டு வந்தனான். சாப்பிடுவம். ‘அது நல்லது, இதைச் சாப்பிட்டிட்டு ஒரு ரீ குடிப்பம்’ - இது ராஜபுத்திரன் யோகராஜன்.

“பார்சலையும் கொண்டு ஹோட்டலுக்கு போவம். சாப்பிட்டு ஒரு நல்ல ரீ குடிச்சிட்டு வெளிக்கிட்டால் மத்தியானச் சாப்பாடு வவுனியாவில்” – எனது ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வாகனம் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

வாகனத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்க இறங்க முதலாளியின் முகம் படிப்படியாக மலர்ந்து சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். அழைப்பு மணியைத் தொடர்ந்து அமத்திக்கொண்டு கடையில் வேலை செய்வோரைப் பெயர் சொல்லி அழைத்து விரைவாக உணவு பரிமாறக் கட்டளையிட்டார்.

நாங்கள் உணவு பரிமாறுவோருக்கு சிரமம் கொடுக்காமல் தேநீருக்கு மட்டும் சொல்லிவிட்டு நான்கு மேசைகளை ஒன்றாக இணைத்து பதினாறு நாற்காலிகளை மேசைகளைச் சுற்றிவர வைத்து சில்லையூர் தம்பதிகளின் பார்சலைப் பிரித்தோம். உறைப்புக்கறி உள்ளுடனாக அமைந்த பாணுக்கும் சுடச் சுடச் தேநீருக்கும் நல்ல பொருத்தம்.

‘சிகரெட்’ என்ற சிப்பந்திக்கு ‘வேண்டாம்’ என்றதும் சிட்டை மேசைக்கு வந்தது. எதுவித விபரமும் இல்லாமல் 160 இலக்கம் மட்டும் காணப்பட்டதால் ‘இது என்ன 160?’ என்றேன். 160 ரூபா என்ற பதிலைக் கேட்ட எனது கண்கள் முதலாளிக்குப் பின்னூலுள்ள சுவரில் மாட்டப்பட்டிருந்த விலைப்பட்டியலை மேய்ந்தன.

‘வெறும் தேநீர் - 3 ரூபா. பால் தேநீர் - 5 ரூபா’ சரியாகத்தான் எழுதப்பட்டிருந்தது. 16 ஐ 5 ஆல் பெருக்கி 80 என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் கணக்கைக் கேட்டேன். விடையில் மாற்றமில்லை. சிட்டையில் எழுதப்பட்டிருந்த தொகையில் மாற்றமில்லை. பொறுமையிழந்த நான் முதலாளியிடம் முறையிட்டேன்: ‘நாங்கள் 16 பேர் - 16 ரீ மட்டும் - 80 ரூபாதான் கணக்கு. பிழையாக 160 ரூபா கணக்குக்கு பில் போட்டிருக்கு. ‘முதலாளி சிப்பந்தியைக் கூப்பிட்டு ஏசுவார் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்’ முதலாளி சிரித்துக்கொண்டே சுவரில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தலைச் சுட்டிக்காட்டினார்.

எத்தனை தடவை அந்தச் சாப்பாட்டுக் கடைக்குப் போயிருந்தும் அன்றுதான் அந்த அறிவித்தலை வாசித்தேன். ‘வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடுபவர்களிடம் ஒருவருக்கு 5 ரூபாவீதம் அறிவிடப்படும்’

மயில்வாகனம் சர்வானந்தா கொடுப்புக்குள் சிரித்தார்: ‘கமலினியும் சோதியும் சொன்ன மாதிரி வானிலை வைச்சே சாப்பிட்டிருக்கலாம்’


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஒரு பக்க "நாணயம்"

சிக்கனமாக வாழப் பழகிக் கொண்ட அம்மா மிச்சம் பிடிக்கும் சிறு பணத்தையும் சீட்டில் முதலீடு செய்து ‘பெருக்கும் முயற்சிகளில்’ ஈடுபட்டார். எனக்குத் தெரிந்தளவில் யாழ்ப்பாணத்தில் இரண்டு வகையான சீட்டுகள் நடைமுறையிலிருந்தன. மொத்தத் தொகையையும் காலத்தையும் கவனத்தில் கொண்டு ஊர் வட்டியைக் கணக்கிட்டு அதற்கேற்ப கழிவுத் தொகையிலிருந்து ஆரம்பமாகும் ஏலச்சீட்டு. அடுத்தது வட்டியோ கழிவோ எதுமில்லாமல் குறிப்பிட்ட நாளில சீட்டுக்குப் பணம் கொடுப்போர் சீட்டைப் பொறுப்பேற்று நடாத்தும் ‘தாச்சி’ எனக் கௌரவமாக அழைப்படுபவர் வீட்டில் ஒன்று கூடி பெயர்கள் எழுதி உருட்டப்பட்ட துண்டுகளைக் குலுக்கி அவற்றுள் ஒரு துண்டை எடுப்பதன் மூலம் சேர்ந்த தொகையைப் பெறுபவர் யார் எனத் தீர்மானித்தல். அம்மாவும் இரண்டு வேறு வேறு இடங்களில் குலுக்குச் சீட்டுக்காகப் பணம் செலுத்திக் கொண்டிருந்தார். இரகசியமான முறையில் பெயர்கள் எழுதப்பட்டு வாசிக்க முடியாத வகையில் துண்டுகள் உருட்டப்பட்டிருந்தாலும் சீட்டை நடத்துகின்ற தாச்சி யாருக்கு சீட்டு கிடைக்கும் என்று ஜாடைமாடையாகச் சொல்லிவிடுவார் என்பதை அம்மா அவதானித்திருக்கின்றார். இந்த விடயத்தை அப்பாவிடம் சொல்ல அவரும் அம்மாவின் காதில் ஏதோ இரகசியம் சொன்னார். அதற்கடுத்த மாதம் குலுக்குச் சீட்டு நடைபெறும் வீட்டுக்கு அம்மா என்னையும் கூட்டிச் சென்றார்.

‘இநத் மாசம் சீத்தாவுக்கு சீட்டு விழும் சீத்தா எனக்குப் பத்து ரூபா தருவா’ என்று தாச்சி சொன்ன மாதிரியே சீட்டு சீத்தாவுக்கு கிடைத்தது. சீட்டு குலுக்கி முடிந்ததும் அம்மா கிளப்பிய ஆட்சேபனையால் தாச்சி வீட்டில் கூடிய எல்லோரும் உருட்டப்பட்டிருந்த துண்டுகளை ஆளுக்கொன்றாக எடுத்து எழுதப்பட்டிருந்த பெயரை வாசித்தனர். என்ன ஆச்சரியம்? எல்லாத் துண்டுகளிலும் சீத்தா என்ற பெயரே எழுதப்பட்டிருந்தது. தாச்சியாக இருந்து சீட்டை நடத்தியவர் தனக்கு விருப்பமானவர்களுக்கு சீட்டுக் காசு வழங்க செய்து வந்த சூழ்ச்சி அம்மாவால் அம்பலத்துக்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக அப்பாவிடம் பின்பு கேட்டேன். ‘சர்வாதிகரியாகிய ஹிட்லர் யுத்த முனையில் சண்டையை ஆரம்பிக்க முன் போர் வீரர்கள் முன்னிலையில் நாணயத்தை எடுத்து பூவா தலையா போட்டு பார்த்து பூ விழுந்தால்தான் யுத்தத்தை ஆரம்பிப்பானாம். அந்த நாணயத்தை ஹிட்லர் தனது சட்டைப்பையிலிருந்து தான் எடுப்பானாம். காலம் கடந்து வெளியாகிய ரகசியம் தான் ஹிட்லர் இதற்கென தயாரித்து வைத்திருந்த நாணயத்தின் இரண்டு பக்கங்களிலும் பூதான் இருக்குமாம். தலையே இருக்காதாம்’


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

பண வலை

இப்போது ‘அதிக வட்டி வழங்குகின்றோம்’ என ‘பினான்ஸ் என்ற பெயரில் காளான்கள் நிறுவனங்கள் முளைத்தெழுவது போல யாழ்ப்பாணத்திலும் ஒரு காலத்தில் அந்திம கால சகாய நிதிச் சங்கங்கள் பரஸ்பர உதவிச் சங்கங்கள் எனப் பல்வேறு சங்கங்கள். சில நேர்மையாகச் செயற்பட பல அமைப்புகள் சிறிது சிறிதாகப் பலரின் பணத்தைக் கொள்ளை அடித்தன. இத்தகைய அமைப்புகளைச் சேர்ந்த சிலர் விரித்த வலையில் விழாத அப்பா தனக்குத் தெரிந்தவர்கள் விழாமலும் தடுத்துக் கொண்டார். அதிக வட்டிக்கு ஆசைப்படாதிருக்க வேண்டும் எனத் தெரிந்தவருக்கெல்லாம் சொல்லுவார். எதையும் நேர்மையான முறையில் - சரியான வழியில் பெற்றுக் கொள்ள வற்புறுத்துவார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அதிஷ்ட பணம் = உழைப்பின் எதிரி

நிதி சேர்க்க – பணம் திரட்ட பலர் பல விதமான வழிகளைக் கையாள்வர். அவற்றில் லொத்தர் டிக்கட்டுகள், "நண்பர்களுக்கு மாத்திரம்" என்ற குறிப்புடன் விற்பனைக்கு விடப்படும் அதிஷ்ட லாபச் சீட்டுகள் இப்படிப் பற்பல. இவற்றில் சில என் கரத்திலும் திணிக்கப்படும்.

திணிக்கப்பட்ட சீட்டை விற்றுப் பணம் வாங்கியவர் சென்றதும் கிழித்துக் குப்பைக் கூடையில் வீசிய போது எனது சக நண்பர் என்னை விநோதமாகப் பார்த்தார். பார்வைக்குப் பதில்:- சின்னஞ் சிறுவனாக இருந்த காலத்தில் இப்போதுள்ளது போல் வேறு வேறு சுரண்டல் டிக்கட்டுகள் இல்லாவிட்டாலும் 50 சதத்துக்கு விற்பனையாகிய ‘ஆஸ்பத்திரி லொத்தர்’ டிக்கட்டும் முதல் பரிசு 50 ஆயிரம் ரூபாவும் மக்கள் மத்தியில் மனப்பாடமாயிருந்தன. பல்வேறு ஆசைகளுடன் அப்பாவிடம் கேட்ட காசு 50 சதம். காரணம் கேட்காமலே ஒரு ரூபாவை நீட்டியவர் ‘சுவீப்’ என்றதும் காசைப் பறித்து விட்டார். ‘செல்வத்தை உழைத்துச் சேர்க்க வேண்டும் 50 சதம் 50 சதமாக பலபேர் கொடுத்த கண்ணீரும் கவலையும் தான் 50 ஆயிரம் ரூபாத அந்தப் பாவச் சொத்து நமக்கு வேணுமா?’

உதவிக்காக – நண்பர்களின் திருப்திக்காக வாங்கும் டிக்கட்டில் அதிஷ்டத்தை எதிர் பார்த்தால் என் உழைப்பின் நம்பிக்கையை நான் இழந்து விடவும் கூடும். என் கருத்தை ஆமோதித்த கிழிந்த லாபச் சீட்டுகள் ஆனந்தமாகக் காற்றில் பறந்தன.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

பிணமானவர் குணமானவர்

முதலாம் வகுப்பில் படிக்கும் போதா அல்லது இரண்டாம் வகுப்பில் படிக்கும் போதா என்பது சரியாக நினைவில்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு வந்து போது கண்களில் ஈரமும் நெஞ்சில் பயமும் இருந்ததை ஒருவரும் கவனிக்கவில்லை. இமைகள் மூடாமல் இராப் பொழுதைக் கழித்ததும் ஒருவருக்கும் தெரியாது. பொழுது விடிந்ததும் ‘இன்று மட்டும் பள்ளிக்கூடம் போக மாட்டேன்’ என அடம் பிடித்தேன். அப்பா சிறிது சிறிதாக வற்புறுத்த காரணத்தைக் கக்கினேன்.

‘பாடசாலையிலிருந்து வரும் வழியில் ஒரு செத்த வீடு – செத்த வீட்டுக் கதைகள் பேய்க் கதைகள் பயங்கரத்தைத் தந்ததால் பாடசாலை செல்ல பயமாயிருந்தது. அப்பா மிக ஆறுதலாக அரவணைத்து முதுகைத் தடவினார். ‘கட்டிக்கு பயமெண்டால் போக வேண்டாம்’ பள்ளிக்கூடம் போக வேண்டாம் என்றதும் நானும் மகிழ்ந்தேன். சில நிமிட மௌனத்தை அப்பாதான் கலைத்தார் - ‘கட்டி கூட நானும் பள்ளிக்கு வாறன், பயமில்லையா? அப்பா என்னோடிருந்தால் நான் ஏன் பயப்படப்போறன். ‘பயமில்லை’ என்ற அர்த்தத்தில் என் தலை இடமும் வலமும் அசைந்தது. அப்பாவும் என்னோடு பள்ளிக்குப் புறப்பட்ட போது சொன்னார். ‘கட்டி எப்பவும் செத்த ஆட்களாலை பிரச்சனையில்லை. செத்த பிறகு அவங்களாலை ஒண்டும் செய்ய முடியாது. உயிரோடையிருக்கிற ஆட்களோடை தான் கவனமாய் இருக்க வேணும்’ பிணம் பேய் பிசாசு என்ற பயம் படிப்படியாகக் குறைந்தது. 1996 ல் முல்லைத்தீவில் இடம் பெற்ற ‘ஓயாத அலைகள்’ போராட்ட நடவடிக்கையின் பின் 531 பிரேதங்களை ஒரே நேரத்தில் பொறுப்பேற்று 476 பிரேதங்களை அடக்கம் செய்யுமளவுக்கு பயமில்லாதிருந்தேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

பந்திக்கு முந்துகையில்....

மட்டக்களப்பைச் சேர்ந்த உறவினர் இல்லத்துக்கு விருந்துண்ணச் சென்றிருந்தோம். வழமையான உணவைத் தொடர்ந்து ஒரு கேள்வி. ‘தயிர் கொஞ்சம் சாப்பிடுறீங்களா?” ஒரு அளவான மண்பனை நிரம்ப தயிர். பானையோடு கவிழ்த்தால் கூட விழாத வகையில் கட்டியாக இருந்தது கெட்டித்தயிர். மட்டக்களப்புத் தயிர் அப்படித்தான். அதன் சுவையே தனி. கட்டித்தயிரை வெட்டியெடுத்துப் போடுவதற்காக பெரிய கண்ணாடிக் கிளாசும் கரண்டியும் வைக்கப்பட்டிருந்தன. அப்பா சிறிதளவு தயிருடன் நிறுத்த நான் கிளாசின் விளிம்பு வரை நிறைத்தேன். இனி கிளாசில் இடமில்லை. அழைத்த விருந்தினர் அடுத்துக் கொண்டு வந்த தட்டத்தில் வைக்கப்பட்டிருந்த கிண்ணத்தில் சீனியும் சிறு கரண்டியும் வைக்கப்பட்டிருந்தது. அப்பா சிறிதளவு சீனியை தயிரில் சேர்த்துக் கலக்கினார். இருக்கம் தயிரில் சிறிதளவென்றாலும் குடித்தால்தான் சீனி சேர்க்க இடம் உண்டாக்கும். அப்படி இடத்தை ஏற்படுத்தி சீனியை அள்ளப் போட்ட போது வோறொரு தட்டத்தில் வட்டம் வட்டமாக வெட்டிய வாழைப்பழ துண்டுகளும் கஜூக் கொட்டைகளும் வந்து சேர்ந்தன. இப்போது எனது கிளாசில் அரைவாசித் தயிரைக் குடித்த பின் சீனி கஜூ கொட்டை எல்லாம் சேர்த்துக் கலக்கினேன். இருந்தாலும் அப்பா குடித்த தயிர் சுவையாகத்தான் இருந்திருக்கும்.

அப்பா சொல்லுவார் ‘பந்திக்கு முந்தத்தான் வேணும். ஆனால் அவசரப்படக் கூடாது. அக்கம் பக்கத்திலிருப்பவரையும் சாப்பாட்டையும் பார்க்க வேணும்’



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Tuesday, December 25, 2007

பொருட்களை தொலைக்கையில் சேர்த்து தொலைக்கவேண்டியது....

1999 ஆண்டு ஒக்டோபர் மாதம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு சீருடை கொள்வனவு செய்வதற்காக சீனா சென்றிருந்தேன். கல்வியமைச்சர் றிச்சர்ட் பத்திரானவுடன் சென்றதால் எல்லா இடத்திலும் V.I.P வரவேற்று கிடைத்தது. கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு விமானம் புறப்பட அரைமணி நேரத்துக்கு முன் வந்தால் போதுமென்று சொன்னார்கள். சங்கத்திணைக்கள , குடிவரவு குடியகல்வு, விமானப் பகுதி ஊழியர்கள் விஷேச விருந்தினர் அறையில் நாங்கள் இருந்த கதிரைக்கு அருகில் வந்து தங்கள் பணிகளை நிறைவேற்றினார்கள். சிறிய கைப்பையைக் கூட தாங்களே தூக்கிச் சென்றார்கள். சிங்கப்பூர் , ஹொங்ஹொங் போன்ற தங்கிச் செல்லும் விமான நிலையங்களிலும் தகுந்த உபசரிப்பு.

இருவாரங்களுக்குப் பின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் காலை மூன்று மணிக்கு விமானம் தரையிறங்க விருந்தினர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். கொழும்பு புறப்பட முன் பொதிகளை எண்ணினால் ஒரு பொதியைக் காணவில்லை.

பழைய சம்பவம் மனதில் படமாக ஓடியது. – 1950களில் டீசல் எரிபொருளில் வேகமாக ஓடும் யாழ். தேவி உத்தரதேவி புகையிரதங்கள் வருவதற்கு முன்பு நிலக்கரிப் புகையிரதம் ஊர்ந்த காலம். காலையில் சூட்கேஸ் பெட்டியுடன் புறப்பட்ட சித்தப்பா இரவு யாழ்ப்பாணம் வந்திறங்கிய போது சூட்கேஸ் காணாமல் போன கதை தெரிந்தது. பிரயாணக் களைப்பால் சோர்வுற்றிருந்த சித்தப்பாவிடம் கதைகள் அதிகம் கேட்காமல் சூட்கேஸ் பெட்டியின் அகலம் நீளம் உயரம் நிறம் மற்றும் முக்கியமான அடையாளங்கள் பற்றிய விபரங்களை மட்டும் அப்பா கேட்டுக்கொண்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்துக்கு விரைந்தார். புகையிரத நிலைய அதிபரின் உதவியுடன் காங்கேசன்துறை புகையிரத நிலைய அதிபருக்கு தகவல் கொடுப்பட்டது. கடைசிப் புகையிரத நிலையமான காங்கேசன் துறையில் எல்லோரும் இறங்கிய பின்னரும் தேடுவாரின்றிக் கிடந்த சூட்கேஸ் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. யாழ் புகையிரத நிலைய அதிபர் மூலம் கிடைத்த விபரங்களுடன் கிடைத்த சூட்கேஸின் விபரங்களும் ஒத்துப் போனதால் சித்தப்பா நிரந்தரமாக இழக்கவிருந்த சூட்கேஸ் திரும்பக் கிடைத்தது.

நானும் மற்றவர்களிடம் விசாரிப்பதை விடுத்து அங்கும் இங்கும் அலையாமல் பிரயாணப் பைகள் கடைசியாக வந்து சேருமிடம் - தேடுவாரற்ற நிலையில் காணப்படும் பொருட்கள் சேகரித்து வைக்குமிடம் ஆகியவற்றில எனது பொருள் இல்லையென்பதை உறுதி செய்ததும் வந்து சேரும் பொருட்களுக்குப் பொறுப்பான உத்தியோகத்தரிடம் நான் பிரயாணத்தை ஆரம்பித்த இடம் தரித்த வந்த விமான நிலைய விபரங்கள் - விமான இலக்கங்கள் டிக்கட் இலக்கம் காணாமல் போன பொதியின் நீளம் அகலம் நிறம் இதர அடையாளங்கள் - பொதிக்குரிய அடையாள டிக்கட் இலக்கம் பொதி தவறிப்போன பெட்டியினதும் அதனுள்ளே இருந்த பொருட்களினதும் விபரங்கள் அத்தனையும் எழுத்தில் கொடுத்து விட்டு எனது இருப்பிடம் வந்து சேர்ந்துவிட்டேன்.

மறுநாள் அதிகாலை ஹொங்ஹொங் விமான நிலையத்திலிருந்து தொலைபேசித் தகவல் ‘விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட பொதி கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது’ – பயணப் பெட்டியில் எனது பெயர் முகவரியுடன் தொலைபேசி இலக்கமும் எழுதி ஒட்டப்பட்ட துண்டினால் கிடைத்த பலன். சில மணி நேரம் கழித்து அடுத்த தொலைபேசியழைப்ப ‘உங்கள் பெட்டி கட்டுநாயக்கவுக்கு வந்து விட்டது. உரிய அத்தாட்சிகளைச் சமர்ப்பித்து எடுத்துச் செல்லலாம்’

முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் சில சம்பவங்கள் இடம் பெறலாம். விரைந்து சரியாகச் செயற்பட்டால் இழப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

நிறை , குறை சொல்ல ஒரு முறை

அப்பாவின் சுவையான தயாரிப்புக்களில் அல்வாவும் ஒன்று. இந்தியாவில் மதுரை மல்லிகை, மணப்பாறை முறுக்கு திருநெல்வேலி அல்வா என ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு பொருளுக்குச் சிறந்ததாக விளங்குகின்றது. திருநெல்வேலி அல்வாவே சிறந்தது எனச் சொல்வோர் அப்பாவின் தயாரிப்பை திருநெல்வேலித் தயாரிப்புக்கு ஒப்பிடுவார்கள். திங்கட்கிழமை கொழும்பில் திருமணப் பந்தலில் அமர வேண்டிய நண்பனுக்கு வெள்ளிக்கிழமை திடீரென ஓர் ஆசை. ‘திருமணக் கேக்குப் பதிலாக அப்பா தயாரிக்கும் அல்வாவை கண்ணாடிப் பேப்பரில் சுற்றி சிறு அட்டைப்பெட்டியில் வைத்து வழங்க வேண்டும்’ உடனடியாக அல்வாவைத் தயாரித்து வெட்டித் தருவதற்கு மட்டும் அப்பா உடன்பட்டார். அந்நாட்களில் பொலீத்தின் என்ற சொல்லைத் தெரிந்து வைத்திருந்தவர்கள் மிகச் சிலரே. பல இடம் தேடிய பின் வாங்க முடிந்த கண்ணாடிப் பேப்பர் துண்டு துண்டாக வெட்டப்பட்டது. சனிக்கிழமை மாலையாகி விட்டதால் பிரபல அச்சகங்கள் மூடப்பட்டு விட்டன. மானிப்பாய் வீதியில் அப்பாவால் அடையாளம் காட்டப்பட்ட சிறு ஒழுங்கையில் ஒருவர் அச்சு வேலைகளைப் பொறுப்பேற்றார். அச்செழுத்துக்களைக் கோர்ப்பது அவருக்கு கைவந்த கலை. அதன் பின்னர் கோர்வைகளைக் கொண்டு சென்று பெரிய அச்சகங்களில் மிகுதி வேலைகளைப் பூர்த்தி செய்வார். கையால் இயக்கும் சிறு அச்சியந்திரம் இருந்தாலும் எனது வேலை சிறிதென்பதாலும் பொறுப்பெடுத்துக் கொண்டு மறுநாள் மத்தியானத்துக்கு முதல் அட்டைப் பெட்டிகளை அப்பாவிடம் கொடுப்பதாகச் சொன்னார்.

ஞாயிறு மாலை மணி இரண்டாகியும் அச்சகத்திலிருந்து பெட்டி வராததால் மானிப்பாய் வீதிக்கு சென்றேன். என்னிடம் வேலையைப் பொறுப்பெடுத்தவர் இருக்கவில்லை. அவரது மனைவியையும் மகளையும் ஆத்திரம் தீரும் வரை வாயக்கு வந்தபடி ஏசினேன். வேலைகளை முடித்துக் கொண்டு இரவு ஆறு மணி ரெயினில் கொழும்புக்கு புறப்பட வேண்டுமே! தில்லைப்பிள்ளை கிளப்புக்கு பக்கத்தில் அமைந்திருந்த காந்தா அச்சகத்தின் உரிமையாளர் திரு. கணபதிப்பிள்ளைக்கு பள்ளி மாணவனான என்னை அபபா அறிமுகம் செய்து வைத்தார். அந்த அறிமுகத்துடன் ஐந்தாறு நாட்கள் அச்சுக் கோர்க்கும் பகுதியில் தலை கீழாகக் கிடந்த ஈய எழுத்துக்களிடையே எனது பெயர் விலாசத்துக்குரிய எழுத்துக்களைத் தேடியெடுத்து சிறு பெட்டியில் கோர்த்து எழுத்துகளில் மட்டுமன்றி கை முகமெல்லாம் அச்சு மையைப் பூசிக் கொண்டு அப்பாவிடம் ஏச்சு வாங்கினதும் ஓர் அனுபவம். அந்த அரைகுறை அனுபவத்தை வைத்துக் கொண்டு அப்பாவிப் பெண்;களை அச்சுறுத்தி அச்செழுத்துக்களை ஒவ்வொன்றாக தேடினேன். என்னைப் பின் தொடர்ந்து வந்த அப்பா நொடிப் பொழுதில் நடந்ததறிந்து என் சார்பில் பெண்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு ஒதுக்குப்புறமான இடத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். “கட்டி! வேலையை ஒரு ஆளிடம் கொடுத்துவிட்டு இன்னொரு ஆளிடம் குறை சொல்லக் கூடாது. அதுவும் பெம்பிளைகளைக் குறைசொல்ற போது ரொம்பக் கவனமாக இருக்க வேணும். ஒரு ஆளைப் புகழ் வேணும் பாராட்ட வேணும் எண்டால் ஆரிடமும் சொல்லலாம். ஏச வேணும் குறை சொல்ல வேணுமெண்டால் அந்தாளிடம் மட்டும் சொல்ல வேணும்” மிக நெருங்கிய நண்பர்களின் திடீர் மரண வீட்டுக்குச் சென்று திரும்பியவர் எனது வேலைகளை நிறைவேற்றுவதற்காக நிறைவேற்றுவதற்காக கையால் இயக்கும் இயந்திரத்தை அவசரம் அவசரமாக இயக்க ஆரம்பித்தார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அர்த்த ராத்திரிக் குடைக்காரன்

முன்னாலுள்ள புடைவைக் கடையில் கடமையாற்றும் ‘சேது’ மாமா சைக்கிள் விபத்தில் காயமுற்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலையில் அவரைப் பார்த்து விட்டு ஆறு மணிக்கு பின் ஆஸ்பத்திரியிலிருந்து வெளியேறிய போது பல நாட்களுக்குப் பின் சந்தித்த பள்ளித் தோழர் சிலரின் வற்புறுத்தல் - பஸ் நிலையத்துக்கு முன்னாலுள்ள குளிரகத்தில் ஐஸ்கிறீம் சுவைக்க வருமாறு வற்புறுத்தினார்கள். எங்களுடன் இணைய விரும்பாத அப்பா மெதுவாக பின்னே வர எங்கள் வாயெல்லாம் கேலிப் பேச்சுகள். அப்பாவின் காதில் விழுந்து விடுமோ என்ற அச்சத்தேர்டு மெதுவாகத் திரும்பிய எங்கள் கள்ளப் பார்வையில் - விரித்த குiயின் கீழ் ஆறுதலாக நடந்து வருவது தெரிந்தது. நண்பர்களுள் ஒருவன் சிரித்தான்.

‘மழை தூறக்கூட இல்லை. ஏன் குடை பிடிக்கிறார்?’

மற்ற நண்பனின் சந்தேகம் ‘வெய்யிலும் இல்லை’

மூன்றாமவனின் நக்கல் ‘அற்பனுக்குப் பவுசு வந்தால் அர்த்தராத்திரியில்...’ அப்பா வெய்யிலோ மழையோ இல்லாத போதும் குடையை விரித்துப் பிடித்துக் கொண்டு வந்தது எனக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. ‘ச் ச்’ என்ற சத்தத்துடன் மரங்களிலிருந்து பறவைகள் கழித்த எச்சங்கள் எங்கள் ஆடைகளை அசிங்கம் செய்தன. அதன் பின் கேலிப் பேச்சுகள் இல்லை. அழுக்கான சேட்டுடன் ஐஸ்கிறீம் கடைக்குச் சென்றால் எங்களைக் கேலி செய்வார்களே! ஐஸ்கிறீமும் இல்லை. மழை வெய்யிலுக்கு மட்டுமல்ல – மரங்களின் கீழ் நிற்கும் போதும் மரங்களின் கீழே நடக்கும் போதும் குடைகளைப் பயன் படுத்தலாம்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Monday, December 24, 2007

பணம் கொடுத்து பெற்ற 'பட்ட அறிவு'

தங்கை சற்று வளர்ந்த பின் தையல் கலையை முழுமையாகப் பயின்றதால் அவள் தனக்கென ஒரு தையல் இயந்திரத்தை உரிமையாக்க விரும்புவது சரியென கொள்கையளவில் பெற்றோர் ஏற்றுக்கொண்டனர். சில நாள் கழிய புதிய இயந்திரம் வாங்கிக் கொடுக்க தந்தை இணக்கம் தெரிவித்தார். இந்தச் சங்கதி இடைத் தரகர் ஒருவருக்குத் தெரிந்து விட அவர் கடைக்கு மாவிடிக்க வரும் பெண்ணொருத்தி மூலம் அம்மாவின் மனதில் ஆசையை மூட்டி சற்று குறைவான விலைக்கு ஒருவரிடம் பாவித்த இயந்திரத்தை வாங்கினார். தரகர் ,மாவிடிக்கும் பெண், அம்மா எல்லோரும் சேர்ந்து ‘அதிகம் பாவிக்காத மெசின். விலையும் மலிவு’ என்று சொல்லி அப்பாவின் அரைகுறைச் சம்மதத்தை வாங்கிவிட்டனர். கொடுப்பனவு பூர்த்தியாக கொள்வனவு செய்த இயந்திரம் வீட்டுக்கு வந்தது.

தையல் இயந்திரம் வீட்டுக்கு வந்த மூன்றாவது நாள் திடுதிப்பென்று கடைக்குள் நுழைந்த பொலிஸார் அப்பாவிடம் அடுக்கடுக்காகப் பல கேள்விகள், விசாரணைகள், விளக்கங்கள். பின்புதான் விடயம் விளங்கியது. இல்லத்தலைவி உழைத்து வாங்கிய தையல் இயந்திரத்தை குடிகாரக் கணவன் தரகர் மூலமாக எங்கள் தலையில் கட்டி பொலிஸ் நிலையம் வரை அலைய வைத்தான். விற்பனை நிலையததிலிருந்து வழங்கிய சிட்டை இல்லாமல் இன்னொருவருக்குச் சொந்தமான பொருளை முறையான சாட்சிகள் கூட இல்லாமல் வாங்கியது திட்டுப் பொருளை வீட்டில் வைத்திருப்பதாகக் கருதப்படும் என்றனர் பொலிஸார்.

முறையான விற்பனை நிலையங்களில் பொருட்களை வாங்காவிட்டால் சில ஒழுங்குகளைக் கடைபிடித்துத்தான் பொருட்களை வாங்க வேண்டும். ஒரு குடும்பத்தில் கணவன் சம்மதமின்றி மனைவியிடமோ மனைவியின் சம்மதமின்றி கணவனிடமோ வாங்கும் பொருள் கூட பிரச்சனைகளை உருவாக்கும் எனற் பாடத்தை பணம் கொடுத்துத்தான் படிக்க நேரிட்டது என அம்மா சொல்லுவார்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அவரவர் அளவுகள்.

அருகாமையிலுள்ள ஆலயத்துக்கு புதிய கோபுரம் கட்டும் போது தூண்கள் தெய்வச் சிலைகள் செதுக்க வந்த கலைஞர்கள் கடைக்குச் சாப்பிட வரும் போது அப்பாவுடனும் அளவளாவிச் செல்வது வழக்கம். கோவிலில் சிலைகள் செய்வதைப் பார்க்க விரும்பிய என்னை அப்பா அழைத்துச் சென்றார். வேறு வேறு உளிகளும் சுத்தியலும் கலைஞர்களின் கைகளில் சுழன்று வர உருவாகும் தெய்வச் சிலைகளின் அழகில் மெய் மறந்து நின்றோம்.

தலைமைக் கலைஞனின் ஏளனச் சிரிப்பு – “சிலை செய்யிறதொண்ணும் சுகமான வேலையில்லை. மண்ணையும் கல்லையும் கலந்து சாப்பாடு செய்யிற மாதிரியில்லை. உப்பையும் புளியையும் கூடக்குறையப் போடுற சமையல் மாதிரியில்லை”


அப்பா சர்வசாதாரணமாகச் சொன்னார். “சிலை செய்யிறதுக்கு முந்தி நீங்க ஆண் கல்லு, பெண் கல்லு, அலிக் கல்லு பார்க்கிற மாதிரி அரிசியையும் மாவையும் வாங்கிய போது, கவனமாக இருப்பம். நீங்க ஒவ்வொரு விஷயம் செய்யிற பnhதும் பிரமாணம் அளவு பார்க்கிற மாதிரி அளவு பார்த்துத்தான் உப்பு புளி போடுவம். நீங்க ஒண்ணு செய்யிற போது கொஞ்சம் பிழைச்சா அதை இன்னொண்ணா மாத்தியிடுவீங்க. சாப்பாட்டை அப்படி மாத்த முடியாது. தூக்கி தூர வீசிட வேண்டியதுதான். சாப்பாட்டை வீசியிட்டா முதலாளி எங்களைக் தூக்கி வீசியிடுவார்”

சற்றும் எதிர்பாராத பதிலால் தலைமைக் கலைஞர் திகைத்தார். “எப்படி உங்களாலை பட்பட்டென பதில் சொல்ல முடியுது”

அப்பாவின் முகத்தில் புன்சிரிப்பு மின்னல் “முட்டாள்த்தனமான கேள்விகளுக்கும் புத்திசாலித்தனமாக பதில் சொல்ல முயற்சிக்கிறன்”





(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

ஆத்திரம் கொள்ளாப் பாத்திரம்

அப்பா எவ்வளவு சீரியஸாக் கதைப்பாரோ, அதே போல நோகாமல் பகிடிக் கதைகளும் சொல்லுவார். சீனிப்பாணி காய்ச்சி மாவுடன் வண்ணப் பொடி வாசனைத் திரவியங்கள் சேர்த்து நெய்யையும் விட்டுக் கிளற உருவாகும். மைசூர்ப்பாகு நாவில் நீரை ஊற வைக்கும். வாசனையால் கவரப்பட்டு தங்க ஆபரணங்கள் வடிவமைக்கும் ஒருவர் நாவூற குசினிக்குள் நுழைந்தார்.

அப்பா இரும்புத் தாச்சியில் இளகிக் கொண்டிருந்த மைசூர்ப்பாகுக் குழம்பை 2 அடி நீளமும் 1 அடி அகலமும் கொண்ட தட்டில் ஊற்றினார். வெகு நிதானமாக ஊற்றிய போதும் சிறிதளவு குழம்பு கட்டுப்பாட்டை மீறி தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் வடிந்து திரண்டது. அவரின் கைகளுக்குள் புகுந்த அளவு கோலும் கத்தியும் 2 அங்குல நீளம் 1 அங்குலம் அகலம் என கோடுகளைக் கீற மைசூர்ப்பாகுக் கட்டிகள் உருவாகின. தட்டின் நான்கு பக்கமும் மேலதிகமாக இருந்த குழம்பை கத்தியால் சீவ அதுவும் தட்டின் கீழே விரிக்கப்பட்டிருந்த பேப்பரில் விழுந்தது. அதுவரை பொறுமையாக இருந்த நகை வடிவமைப்பவர் மைசூர்ப் பாகு தட்டத்தினருகே குனிய பேப்பரில் விழுந்திருந்த மைசூர்ப் பாகுத்துகள்களை எடுக்க முனைந்த அவர் கைகளை அப்பாவின் கைகள் தடுத்தன.

“இது சரியில்லை. நீங்கள் நகை செய்யிற போது கீழே சிந்திற தங்கத்தை இன்னொரு ஆள் எடுக்க விடுவீங்களா? இந்த சாப்பாட்டுச் சாமான்கள் என்னுடைய முதலாளிக்குத் தங்கம் மாதிரி. அவர் சொன்னா நான் தாறன்”

சிரித்துக்கொண்டே சொன்ன நியாயத்தை உணர்ந்தவரும் அசட்டுத்தனமாகச் சிரித்தார்.

“நான் சுடச்சுடச் சாப்பிட்டுப் பார்க்க நினைச்சன்”

அடுத்த தடவை அப்பா சிரித்தார் “நல்லது. நாலு மைசூர்பாகு காசு கொடுத்து வாங்கிட்டுப் போங்க. சொல்லி வேலையில்லை. அந்த மாதிரி மணியாயிருக்கும்”

இது போன்ற சமயங்களில் பிரச்சனைகளைப் பெரிதாக்காமல் சிரித்துச் சமாளிக்கும் அப்பாவின் சாமர்த்தியத்தை பல தடவை பார்த்திருக்கின்றேன். அவரிடமிருந்து நான் தெரிந்து கொண்டவற்றில் இதுவும் ஒன்று. ‘கோபம் கொள்ள வேண்டிய வேளையில் சிரித்து சமாளிக்கும் சாமர்த்தியம்’ சிநேகத்தை வளர்க்கும்.



(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

யார் யார் சிவம்..?

கோவில்கள் நிறைந்த மாவட்டம் யாழ்ப்பாண மாவட்டம். கோவிலுக்கு போகாதோரைக் காண்பதரிது. வழிபடச் செல்வோர் - பொருள் வாங்கச் செல்வோர் - பொழுது போக்கச் செல்வோர் - புதினம் பார்க்கச் செல்வோர் - என ஏதோ ஒரு வகையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகையிலோ பலரைச் சேர்த்துக் கொள்ளலாம். அதிக தூரம் நடக்க வலுவற்ற சிறுவனாக இருந்த என்னை அப்பா தோளில் தூக்கி வைக்க நான் அவர் தலையை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு குதிக்காலால் அவர் நெஞ்சில் தாளமிட்டுக் கொண்டே சுமார் மூன்று கிலோ மீற்றர் தூரத்திலுள்ள செல்வச் சந்நிதி ஆலயத்துக்குச் சென்றது இன்னும் நினைவில் இருக்கிறது. அதன் பின் கோவிலுக்குச் சென்றதைக் காணாததால் காரணம் கேட்டேன்.

“அடுப்படிதான் எனக்கு கோவில். செய்யிற தொழில் தெய்வம் - நெருப்பு என்ர தெய்வம். காலமை வேலை தொடங்கிறதுக்கு முதலும் வேலை முடிஞ்சதுமு; நெருப்பை மனதாலை கும்பிடுறன். பகல் பொழுதெல்லாம் கோயிலிலேயே இருக்கிறன். போதாதா?” சற்று ஆச்சரியத்தில் ஆழ்த்தினாலும் 20 வது முடிவதற்கு முன்பாகவே பொலிஸ் தலைமைக் காரிலயத்தில் எழுதுவினைஞன் வேலை கிடைத்த போது ஆசீர்வதித்தார்.

“நீ வேலை செய்யப் போற இடம்தான் உனக்குத் கோயில். வசதிப்படுற நேரமெல்லாம் கோவிலுக்குப் போக வேணும். மேசையும் கதிரையும் பேனையும் தான் உனக்குத் தெய்வங்கள். கதிரையை நீ காப்பற்றினா கதிரை உன்னைக் காப்பாற்றும். முடிஞ்ச வரைக்கும் பேனையை நல்ல விஷயத்திற்கு மட்டும் பாவிக்க வேணும்”

எனக்கு நன்றாகத் தெரியும் - காலையும் மாலையும் நான் மேசையைத் தொட்டுக் கும்பிடும் போது ஒட்டி நின்று பார்த்து தங்களுக்குள் சிரித்து மகிழும் ஊழியர்களைப் பற்றி. அவர்களின் சிரிப்புக்கஞ்சி என் வழிபாட்டை நிறுத்தத் தயாரில்லை. என்னைப் பொறுத்தளவில் எனது மேலதிகாரிகளின் பேனா இதுவரை எனக்குக் கெடுதல் செய்ததில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

அது ஒரு கனவான்கள் காலம்

காங்கேசன் துறை வீதியும் ஸ்ரான்லி றோடும் சந்திக்கும் இடம், முட்டாஸ் கடைச்சந்தி. அக்காலத்தில் முட்டாசுக்கடை உரிமையாளர் திரு. செல்லையாவுக்கும் அப்பாவுக்கும் இடையே எழுதாத உடன்படிக்கையொன்றிருந்தது.

வெற்றிலை போடுவது என்று சொன்னால் அப்பாவின் பெயரை கின்னஸ் புத்தகத்தில் பதிவு செய்யலாம் என நினைக்கின்றேன். தொடர்ச்சியாக அடுக்களையில் நெருப்பருகே நிற்பதால் வெற்றிலை குளிர்ச்சியைத் தரும் என நம்பினார். ஒரு வெற்றிலையை இரண்டாக்கி பாதி வெற்றிலை தான் போடுவார். ஆனால் சில நிமிடங்களுக்குள் வெற்றிலையின் சாற்றை உள்ளிழுத்து சக்கையை துப்புவதற்குள் அடுத்த வெற்றிலை போடுவதற்கு ஆயத்தமாகி விடுவார். வெற்றிலை என்றால் நிறமும் சுவையும் ஊட்டிய பாக்கு, மிக மெல்லியதாகச் சீவிய தேங்காய்ப்பூ, மங்கள விலாஸ் வாசனைப் புகையிலை இவையெல்லாம் சேர வேண்டும். இந்தப் பொருட்கள் எல்லாம் முட்டாசுக் கடைச் சந்தியிலுள்ள செல்லையா கடையில் தான் வாங்குவார். ‘வாங்குவார்’ எனச் சொல்வது தவறு.

பின்னேர வேளைகளில் செல்லையா கடைக்குச் சென்று தனக்கு விருப்பான அளவு வெற்றிலை பாக்கு புகையிலை இத்தியாதி எல்லாம் எடுத்துக் கொண்டு வருவார். சில நேரம் அப்பாவுடன் நானும் செல்வேன். கடையிலிருந்து வெளியே வரும் போது ‘வாறன்’ என்று சொல்லுவார். என்ன பொருள் எவ்வளவு எடுத்தது எவரும் கணக்கு வைப்பதில்லை. அப்பா தனக்குத் தேவையானவற்றை தானாகவே எடுக்கலாம். மாதம் தோறும் தனக்கு க்டைக்கும் 100 ரூபா சம்பளத்தில் 15 ரூபாவை செல்லையா கடையில் கொடுத்து விடுவார். இதில் ஒரு விடயம் என்னவென்றால் தொடர்ச்சியாக மூன்று மாதம் வேலைக்குச் செல்லாத வேளைகளிலும் அப்பாவின் சம்பளத்தை வாங்க உடுப்பிட்டியிலிருந்து நான் யாழ்ப்பாணம் செல்வேன். சம்பளம் வாங்கியதும் செல்லையா கடையில் 15 ரூபா கொடுத்து விட வேண்டும் என்பது அப்பாவின் கண்டிப்பான கட்டளை. அப்பா வேலைக்குப் போகா விட்டாலும் சம்பளத்துடன் கூடிய விடுதலைதான். வெற்றிலை வாங்காவிட்டாலும் முழுமையான கொடுப்பனவு செய்யப்படும்.

இந்தக் ‘கனவான் ஒப்பந்தம்’ ஒரு புறமிருக்க. 1965 ஆம் ஆண்டு உடுப்பிட்டியிலிருந்து யாழ் இந்துக்கல்லூரி சென்றதும் 100 ரூபாவாக இருந்த அப்பாவின் சம்பளம் 200 ரூபாவாகியதும் அப்பா செல்லையா முதலாளியிடம் 30 ரூபா கொடுத்தார். பணத்தை எண்ணிய முதலாளிக்கு சம்பள அதிகரிப்புக்கான காரணத்தைச் சொன்னேன். மகிழ்ச்சியால் செல்லையாவின் முகம் மலர அப்பா கொடுத்த 30 ரூபா எனது சட்டைப் பைக்குள் திணிக்கப்பட்டது” மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு. நீங்க வாற மாதிரி வந்து போங்க. முந்தி கொடுக்கிற காசை கொடுங்க. போதும்”

பணத்தின் பெறுமதி மிக வேறுபாடடைந்து விட்ட இந்நாட்களிலும் பெரும்பாலான மக்கள் ஒவ்வொரு சதத்தையும் தக்க வைப்பதில் மிகக் கவனமாக இருப்பதைக் காணக் கூடியதாயிருக்கிறது. கொள்வோர் ஒரு சதத்தையேனும் மேலதிகமாகக் கொடுக்க விரும்புவதில்லை. கொடுப்போர் ஒரு சதத்தையேனும் இழக்க விரும்புவதில்லை.

சம்பளம் அதிகரித்த போது, தினமும் தான் சென்று வரும் கடைக்காரருக்கு பங்கு கொடுக்க எண்ணிய அப்பாவும் , ‘உங்க மகனின் படிப்புக்கு அது நம்ம பங்கு’ என தொடர்ச்சியாக பணத்தைப் பெறாமல் விடட செல்லையா முதலாளியும் தினமும் என் நினைவில் வருகின்றனர்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

சம்பளம் என்பது யாதெனில்...

மூன்றாம் வகுப்பில் படிக்கும் போதே உடுப்பிட்டிக் கிராமததிலிருந்து தனியாக பஸ்சிலோ அல்லது அந்தக் காலத்தில் ஓடிய தட்டிவான்களிலோ ஏறி பதினைந்து மைல் தூரத்திலுள்ள யாழ்ப்பாண நகர் சென்று அப்பா தரும் சம்பளக் காசை கொண்டு வந்து அம்மா கையில் ஒப்படைக்கக் கூடிய சூழல். பயமற்ற பாதுகாப்பான காலம் அக்காலம்.

அப்பாவின் மாதச்சம்பளம் 100 ரூபா. ஒவ்வொரு மாதச் சம்பளமும் அடுத்த மாதம் முதலாம் திகதி கிடைக்கும். காங்கேசன்துறை வீதியில் “லக்ஷ்மி விலாஸ்” கடை என்பதை விட “தில்லைப்பிள்ளை கிளப்” என்றால் பலருக்குத் தெரியும். தில்லைவனம் பிள்ளை என்ற முதலாளிக்குச் சொந்தமான கடையில் சிங்காரம்பிள்ளை ஒரு தொழிலாளி. சிங்காரம் பிள்ளையின் தந்தையான சிவகாமிநாதபிள்ளையின் தந்தை பெயரும் தில்லை வனம் பிள்ளை. இருவரும் வேறு வேறு தில்லைவனம் பிள்ளை.

பத்து வயதில் இந்தக் கடையில் வேலைக்குச் சேர்ந்ததாக அப்பா சொல்லுவார். நல்ல முதலாளி என்பது அப்பாவின் முடிவு. தில்லைவனம் பிள்ளைக்கு பின் அவரது மகன் முறையானவர் முதலாளியான போதும் அப்பாவின் முடிவு மாறவில்லை. புதிய முதலாளி அப்பாவை “ஐயா” என கௌரவமாகவே அழைப்பார். அப்பாவின் சொல்லுக்கு மறுவார்த்தை சொல்லமாட்டார். வேறு சில கடைகளில் அதிகரித்த சம்பளமும் வேறு சலுகைகளும் தருவதாகச் சொன்ன போதும் அப்பா மறுத்து விட்டார். பணத்தின் அருமை தெரியும் அறிவு எனக்கு வந்ததும் அப்பாவுக்கும் எனக்கும் இடையில் வாக்குவாதம்.

“அதிக சம்பளம் தருவதாக சொல்லிய முதலாளிகளின் கடையில் வேலை செய்தால் என்ன?” - இது என் கருத்து. அப்பாவின் அபிப்பிராயம் வேறுவிதமாக இருந்தது- “காசு தேவைதான். ஆனால் எல்லா விஷயத்தையும் காசைக் கொண்டு மதிப்பிடக்கூடாது. கடை முதலாளி என்னை அறிஞ்சு எனனை மதிப்பாக நடத்துறார். நானும் இந்தக் கடையிலை முப்பது வருஷத்துக்கு மேலை வேலை செய்திட்டன். பேயோடை கூட பழகிட்டா விட்டிட்டு போயிட மனம் வராது. பணத்துக்காக நல்ல மனிசரை விட்டிட்டு போறதுக்கு எனக்கு இஷ்டமில்லை”

சந்தர்ப்பம் கிடைக்கும் சில நேரங்களில் வீட்டுக்கு வந்தால் விடுதலை நாட்கள் வாரங்கள் மாதங்களைக் கடந்த சம்பவாங்களும் உண்டு. அவர் வேலைக்குப் போகாது விட்டாலும் சம்பளம் ஒழுங்காகக் கிடைக்கும். அவரது இடத்துக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட மாட்டார். இவற்றையெல்லாம் பார்க்கிற போது அப்பா சொன்னதெல்லாம் சரியென எண்ணத் தோன்றும்.

க.பொ.த உயர்தர வகுப்பில் படிப்பதற்கு தோழர். கார்த்திகேசு மாஸ்டரின் சிபார்சில் யாழ் இந்துக் கல்லூரியிலும் விடுதியிலும் இடம் கிடைத்தது. இடம் கிடைத்ததில் மகிழ்ச்சி. விடுதிக் கட்டணம் இதர செலவுகளை எண்ணி முதலாளியிடம் முதன் முதலாக “தம்பி ! மகன் மேல் வகுப்புக்கு போறதாலை செலவு...”

“இந்த மாதத்திலையிருந்து 200 ரூபா சம்பளம்” முதலாளியால் அதிகரிப்பட்ட 100 வீத சம்பள உயர்வு பின்னர் குறைக்கப்படவில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கடி வாய் மருந்து

க.பொ.த உயர்தர வகுப்புக்கு வந்த பின்பு கட்டைக் காற்சட்டையுடன் நான் கல்லூரி செல்வதை விரும்பாததால் நீளக்காற்சட்டையும் சாப்பாத்தும் கிடைத்தது. புதுக்காற்சட்டையும் சேட்டும் என்னோடு அளவாக அழகாக உறவாடின. சப்பாத்துக்கு மாத்திரம் என் மீது சரியான கோபம். காலிரண்டையும் வெட்டியும் கடித்தும் படாதபாடு படுத்தின. சிறிது நேரத்துக்குப் பின் வகுப்பறைக் கதிரையுடன் ஒட்டிக் கொண்டேன். நடந்து திரிந்து ஏன் புதுச் சப்பாத்திடம் கடியும் வெட்டும் வாங்குவான்? ஏறக்குறைய எல்லோரும் போன பின் காலணிகளைக் கையில் காவிக் கொண்டு வீடு வாசல் வரை சென்று காலில் மாட்டிக் கொண்டு சென்ற போது பாதங்களைப் பார்த்த அப்பா சொன்னார்.

“முகத்திற்குப் போடுற பவுடரைக் கொஞ்சம் எடுத்து குதிக்காலுக்கு மேலையும் சப்பாத்து நல்லாகக் கடிக்கிற சின்ன விரல் பெரு விரல் மாதிரியான இடங்களிலை தடவிப் போட்டு சப்பாத்து போட்டால் சப்பாத்து கடிக்காது”

இப்போதும் சப்பாத்து செருப்பு புதிதாக வாங்கியதும் போடுவதற்கு முன்பாக முகப்பவுடரை கால் விரல்கள் , குதிக்காலில் போடும் போது நண்பர்கள் கிண்டல் செய்வதுண்டு. செய்து விட்டு போகட்டுமே! கிண்டல் தரும் வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம். சப்பாத்து செருப்படி தரும் வேதனையைத் தாங்கிக் கொள்வது சிரமம்..


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

கடனற்றார் நெஞ்சம்

சிறுவனாக இருந்த என்னையும் கூட்டிக்கொண்டு அப்பா உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அலங்காரமாக வளைத்துக் கட்டிய சீமேந்து மதில் - வண்ணப்பூ வேலைகளுடன் செய்யப்பட்ட இரும்பு கேற் - அந்தக் கேற்றுக்ளை தாங்கி நிற்கும் தூண்களுக்கு இணைக்கப்பட்டிருந்த வட்ட வடிவான மின்குமிழ் எல்லாம் மனதில் ஆசையை ஏற்படுத்த அது போல எங்கள் காணிக்கும் மதில் கட்டி கேற் போட வேண்டுமென்றேன். மதில் கட்டுவதற்கு முதல் ‘கிணறு – கக்கூஸ் - வீடு’ என்று அப்பா சொன்னதன் அர்த்தம் முழுமையாக விளங்க சில நாட்கள் தேவைப்பட்டன.

நாங்கள் பயன்படுத்தும் கிணறு சீமேந்தினால் கட்டப்படாத பழைய கிணறென்றாலும் பங்காளிகள் பலர். கிணற்றின் அருகே எதிரெதிராக நான்கு பூவரச மரங்கள் வளர்க்கப்பட்டிந்தன. சுமாரான உயரத்தில் இரண்டு பூவரச மரங்கள் வேறு தடிகளால் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. இணைத்துக் கட்டப்பட்டிருந்த தடிகளுக்கு ‘ஆடுகால்’ எனப் பெயர். இரண்டு பூவரச மரங்களுக்கெதிர்ப் புறமாக வளர்ந்த மற்ற இரு பூவரச மரங்களில் இன்னுமொரு ஆடுகால். நீளமான பனை மரத்தைச் செதுக்கியெடுத்து துலா வடிவம் கொடுத்து துலாவின் இடையே அச்சுலக்கை புகுத்தப்பட்டு அச்சுலக்கை இணைக்கப்பட்ட துலா ஆடுகால் மேல் வைக்கப்பட்டிருந்தது. துலாவின் அடிப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் பாரமான கற்கள் கிணற்றில் தண்ணீர் அள்ள வாளியை உள்ளே விடும் போதும் - அள்ளிய தண்ணீரை வெளியே கொண்டு வரும் போதும் சமநிலை பேண உதவும். கிணற்றின் அருகே நின்று நீர் அள்ளுவதற்கு வசதியாக கிணற்றின் குறுக்கே சில தடிகள் வைக்கப்பட்டிருந்தன. பங்குக் கிணறாகையால் எலலாப் பங்காளிகளும் உடன்பட்டால்தான் ஏதுவும் செய்யலாம். உடன்படாவிட்டால் ஓரங்குலக் கயிற்றைக் கூடப் போட முடியாது. செலவு செய்யும் பணம் கிடைக்காமல் போய்விடுவது மட்டுமல்ல. – கிராம கோட்டிலிருந்து உயர் நீதிமன்றம் வரை வழக்குகளில் கலந்து கொள்ளக்கூடிய அனுபவமும் கிடைக்கும்.

மதில் கட்டியிருந்த உறவினரைச் சந்தித்துத் திரும்பி வந்து சில நாள் இருக்கும் - குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற எனது சிறிய தாயார் கிணற்றினுள்ளே தத்தளித்து அபயக்குரல் எழுப்பிய போது ஊரே திரண்டோடி வந்தது.

துலாவில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த கல் அறுந்து விழ சமநிலை தளும்பிய சிறிய தாயார் தடுமாறி நின்று தண்ணீர் அள்ள கிணற்றின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடிகளின் மீது வேகமாக ஒருபுறம் ஒதுங்க – தடிகளின் மறுபுறம் மேலெழும்ப குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற சிறிய தாயார் கிணற்றினுள்ளே விழுந்து குளிக்க வேண்டிய நிலை. திடீரென ஏற்படும் விபத்துக்கள் நன்மைகளைக் கொண்டு வருவதுமுண்டு. ‘பொதுவாக கோடு கச்சேரி பொலிசு என ஏறி இறங்கினால் அலைச்சலும் செலவும், ஆவது எதுவுமில்லை’ என்று சொல்லும் அப்பாவும் துணிந்து விட்டார்.

“நல்ல வேளை. ஒருவர் தப்பியிட்டார். ஒருவரும் காசு தராவிட்டாலும் பரவாயில்லை. சுப்றீம் கோட்டிலை வழக்கு வைச்சாலும் பரவாயில்லை. கிணற்றை வடிவாகக் கட்டப் போகின்றேன். மற்ற ஆட்கள் ஒதுங்கி நிற்கலாம். நாளைக்கு இப்பிடி ஒரு சம்பவம் நடக்கிற போது யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது!”

ஒவ்வொரு குடும்பமும் அப்பா சொன்னதை மீண்டும் மீண்டும் யோசித்தது. “யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது”

துண்பத்தினள் ஓர் இன்பம். பங்காளர் ஒன்று சேர்ந்து பலமான கற்கள் சீமேந்து பயன்படுத்தி கிணற்றை சரியாக நிர்மாணித்தால் உயிராபாயமில்லை.

2003 செப்டம்பர் மாதம் மினுவாங்கொட என்னுமிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலையொன்றிலிருந்து கிணற்றில் தவறி விழுந்த மாணவன் இறந்து விட்டான். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் பாடசாலை சில நாட்கள் இயங்கவில்லை. மறுநாள் வவுனியாவில் இது போன்ற சம்பவத்தால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கு கிணறு இயமனானது. இப்படியான செய்திகள் ஒன்றிரண்டல்ல.

பிள்ளைகளின் கௌரவம் சுகாதாரம் மனதில் தோன்ற அப்பாவின் கையில் சிறிது பணம் நேர பனை வடலிகளிடையே மறைந்த காலம் மாறி மலசலகூடம் சீமேந்தினால் கட்டப்பட்டது. கடன் வாங்க அப்பா அம்மா விரும்பாததால் கணிசமான தொகை சேர்ந்த பின்பே வீட்டுக்கு அத்திவாரம் அமைக்கப்பட்டது. மதில் அலங்காரமாக இல்லாமல் - வண்ணப் பூக்கேற்றாக இல்லாமல் சாதாரணமாக அமைக்கப்பட்டது – பல வருடங்களுக்குப் பின்னர் சாதாரண வாழ்க்கை – கடனற்ற வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமானது என்பதை இப்போது உணர்கின்றேன்.




(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

இல்லையென்று இல்லையே...

1996 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ம் திகதி யுத்தம் காரணமாக கிளிநொச்சி நகரிலிருந்து இடம் பெயர்ந்த பல்லாயிருக்கணக்கானவர்களுள் நானும் ஒருவன். ஆனாலும் இலங்கையில் மிக முக்கிய பதவியான அரசாங்க அதிபர் பதவியை வகிக்கும் இருபத்தைந்து பேரில் நானும் ஒருவன். ஒரு மரத்துக்கு கீழ் மக்களின் அவலங்களை பற்றிய கவலையோடிருந்தேன். வழமையாக கச்சேரி,நீதிமன்றம் போன்ற அரச அலுவலங்கங்களுக்கு அருகில் தட்டெழுத்துப் பொறியுடன் இளைப்பாறிய உத்தியோகத்தர்கள் உழைக்கும் காட்சி மனக்கண்ணில் தோன்றியது. ஆரம்ப நடவடிக்கையாக ஒரு மேசையும் கதிரையும் இரவலாக பெற்றுக்கொண்டேன். பேனாவைத் தவிர எழுதுவதற்கு கடதாசி கூட இல்லையே என எண்ணிக் கொண்டிருக்கையில் பாரதியாரின் வறுமை வாழ்க்கை பற்றி அப்பா எப்போதோ சொன்னது நினைவில் தோன்ற உடுப்பைச் சுற்றி கொண்டு வந்த பழைய செய்தித்தாளின் நிலை உயர்ந்தது. அச்சிட்டப்பட்ட செய்தித்தாளின் அச்சிடப்படாத ஓரங்களில் பாரதியார் கவிதைகள் எழுதியதாகவும் தெரு விளக்கின் கீழ் இருந்து படித்ததாகவும் அப்பா சொன்ன கதைகள் மனதில் தோன்றின. கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த வணக்கத்துக்குரிய பிதா. ஜெபநேசனுக்கு செய்தித்தாள் ஓரத்தைப் பயன்படுத்தி எழுதிய கடிதத்துக்கு பதிலாகக் கிடைத்த தென்னோலைக் கிடுகுகள் கிளிநொச்சி கச்சேரியாக மாறி மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கும் வேலையைச் செய்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

Sunday, December 23, 2007

நிறைந்த 'பிச்சை'

அந்த நாட்களில் வெள்ளிக்கிழமையென்றால் யாழ்ப்பாண நகரைச் சேர்ந்த பிச்சைக்காரர்களுக்கு சிறிது மகிழ்ச்சி. காலையிலிருந்து மாலை வரை கடை கடையாக ஏறி இறங்க கையில் கொஞ்சம் காசும் சேரும். பெரிய மனது படைத்த மிகமிகச் சிலரைத் தவிர மற்றவர்கள் தருமத்துக்கு ஓர் அளவுகோல் வைத்திருந்தார்கள். ஒரு சதம் தரும் செய்து புண்ணியம் சம்பாதித்துக் கொள்வார்கள். அளவுகோல் விஷயத்தில் சில தருமவான்கள் மிகவும் கண்டிப்பாக இருப்பார்கள். அதிகாலையில் ஒருவருக்கு ஒரு சதம் கொடுக்கும் போதே மனக் கணனியில் உரிய பதிவுகளைச் சேமித்து வைத்து விடுவார்கள். தப்பித் தவறி காலையில் ‘ஐயா பிச்சை’ என ஒலித்த குரல் மீண்டும் ஒலித்தால் - தோன்றிய உருவம் மீண்டும் தோன்றினால் தருமவான்கள் ஏசும் போது அகராதியில் இல்லாத சொற்களும் சேர்ந்திருக்கும். சிறுவனாக இருந்த காலத்தில் வெள்ளிக்கிழமை நாட்களைக் கடையில் கழிக்க வேண்டிய சந்தார்ப்பம் ஏற்பட்டு விட்டால் முதலாளி என் கையில் சில்லறைக் காசுகளைத் தந்து பிச்சைக்காரருக்கு தருமம் செய்யும் புண்ணியவானாக என்னை மாற்றி விடுவார். முதலாளி தரும் சில்லறைகளைத் தருமம் செய்யும் போது கவனமாக இருக்க வேணும். இரண்டு ஐந்து சத நாணயங்களை அப்படியே பிச்சைகாரருக்குக் கொடுக்கக் கூடாது. அவர்கள் ஒருசதம்தான் தருமம் பெறத் தகைமையிருந்தும் சிலவேளை இரண்டு சதம் ஐந்து சத நாணயங்களுடன் கம்பி நீட்டி விடக்கூடும். அவர்களைப் பின் தொடர்வதும் ஒரு சதம் கழிந்த மிகுதிப் பணம் பெறுவதும் சாத்தியப்படாத காரியங்கள். எனவே ஐந்து சத நாணயம் வைத்திருக்கும் போது பிச்சைக்காரர் இரண்டொருவர் வந்ததும் கொடுக்காமல் சரியாக ஐந்து பேர் வந்த பின் அவர்களுள் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஐந்து சதத்தைக் கொடுத்தால் அவர்கள் பிரித்துக் கொள்வார்கள். சிலநேரம் அடிபடுவார்கள். பிரித்துக் கொடுப்பதாலோ கொடுக்காமல் விடுவதாலோ அடிபடுவதாலோ தருமவான்கள் பாதிக்கபட மாட்டார்கள். யாராவது பிச்சைக்காரர் ஒரு சத நாணயக் குற்றிகள் அதிகமாக வைத்திருந்தால் அவற்றை வாங்கிக் கொண்டு பெரிய நாணயக் குற்றிகளைக் கொடுக்க வேண்டும். நாணய மாற்றம் செய்யும் போத செல்லாத நாணயங்களும் அழுக்கேறிய நாணயங்களும் எங்கள் கைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பலவிதமான பிச்சைக்காரரைப் பார்த்த பின்பு அப்பா எனனை அவதானிக்கும்படி சுட்டிக் காட்டியவனின் பெயர் ‘பிச்சை’ – ஏறக்குறைய தோற்றம் வயது எல்லாம் நடுத்தரமிருக்கும். சுத்தமான வேட்டியென்று சொல்ல முடியாவிட்டாலும் அழுக்கான வேட்டியொன்றும் சொல்ல முடியாது. முழுங்காலுக்குக் கீழே நீளும் வேட்டி பாதத்திலிருந்து முக்கால் அடிக்கு மேல் உயர்ந்த முக்கால் கட்டு வேட்டியாக இருந்தது. ஒரு சிறிய துவாய் கழுத்தில் - துவாயில் தலைப் பிரண்டும் வழமைக்கு மாறாக கழுத்திலிருந்து முதுகை நோக்கியபடியிருந்தது.

அப்பாவின் அவதானிப்பு சற்று வித்தியாசமானதாக இருந்தது. எந்தக்; கடையாக இருந்தாலும் பி;ச்சை போதியளவு இடைவெளி விட்டு “ஐயா” என மூன்று தரம் குரல் கொடுப்பான். சில பிச்சைக்காரரைப் போல ‘புண்ணியம் கிடைக்கும் - தருமம் - பிச்சை போடுங்கோ’ மூண்டு நாளாகச் சாப்பிடவில்லை’ என எதுவுமே சொல்லமாட்டான். மூன்று தரம் அழைத்தும் யாரும் வரவிலலையானால் மீண்டும் ஒரு தரம் அழைப்பதில் நேரத்தை சக்தியைச் செலவிடாது அடுதத் கடைக்கு நகர்ந்து விடுவான். யாராவது ஒரு ரூபா கொடுத்தால் 99 சதம் மீகுதி கொடுத்து விடுவான். ஒரு சதத்துக்கு மேல் ஒருவரிடம் பிச்னையெடுக்க கூடாதென்பதில் கண்டிப்பாக இருப்பான். இந்தப் பிச்சையை நன்றாகப் புரிந்து கொண்ட புடவைக்கடை முதலாளியொருவர் தினமும் இரவுச் சாப்பாட்டுக்காக ஐந்து இடியப்பங்களை வழங்கும் படி அப்பாவின் முதலாளியிடம் ஒழுங்கு செய்தார். அப்பாவின் முதலாளியின் மனமும் நல்லதென்பதால் இரவுச் சாப்பாடாக தினமும் பத்து இடியப்பம் பிச்சையின் வயிற்றை நிறைத்தது. அப்பா சுட்டிக்காட்டி உணர்த்திய பின்தான் ஒரு பிச்சைக்காரனால் கூட மற்றவர்களின் வெறுப்பைச் சம்பாதிக்காமல் தன் தேவைகளை கௌரவமாகவும் ஒழுங்காகவும் பெறமுடியும் என்பதை அறியக் கூடியதாக இருந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

துறந்தது தணிக்கைக் குழு வேலை - பெற்றது நிம்மதி

2002 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிரித்துப் பாராட்டிக்கொண்டு அமைச்சரின் கையொப்பமிடப்பட்ட நியமனக் கடிதமொன்றைத் தந்தார். சக ஊழியர்கள் நண்பர்கள் வாழ்த்த நானும் மகிழ்ச்சியடைந்தேன்.

வழமையான கடைகளுக்கு மேலதிகமாக தணிக்கைச் சபையில் உறுப்பினராக நியமனம் கிடைத்தது. கண்டிப்பாக தமிழ் மொழியிலான நாடகப் பிரதிகளைப் பார்வையிட்டு தணிக்கை செய்ய வேண்டும். வசதியைப் பொறுத்து ஏனைய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட பிரதிகளையும் பார்வையிடுவேன். ஒரு பிரதியைப் பார்வையிட்டுத் தணிக்கை செய்ய 250 ரூபா தருவார்கள். எல்லாத் திரைப்படங்களையும் மற்றவர்கள் பார்வையிடுவதற்காக திரையரங்குகளுக்கு அனுப்புவதற்கு முன்பாகப் பார்வையிட்டு தணிக்கை செய்ய வேண்டும்.

சாதாரணமாக கியூ வரிசையில் நின்று பணம் கொடுத்து டிக்கட் வாங்கி மணியடிக்கும் வரை காத்திருந்து வியர்வைக்கும் விசிலடிக்கும் மததியில் படம் பார்த்த நிலை மாறியது. தகவல் திணைக்கள பட மாளிகையில் உள்ளே நுழைந்ததும் படம் ஆரம்பமாகும். தேவையான இடத்தில் நிறுத்தலாம். சில காட்சிகளைத் திரும்பவும் காட்டச் சொல்லிக் கேட்கலாம்.

போக்குவரத்து வாகன ஒழுங்கு மாத்திரமல்ல – படம் பார்க்கும் போது சிற்றுண்டி குளிர்பானமும் கிடைக்கும். ஒரு படம் பார்த்து தணிக்கை செய்வதற்கு 400 ரூபா தருவார்கள். விடுமுறை நாட்களில் நான்கு படங்கள் பார்த்ததும் உண்டு. ஆரம்பத்தில் விருப்பத்துடன் ஆரம்பித்த கடமை போகப் போக வேண்டாவெறுப்பாகி ராஜினாமாக் கடிதத்துடன் அமைச்சரைச் சந்திக்கும் நிலையை உருவாக்கியது.

அமைச்சர் ராஜினாமாக் கடிதத்தைப் படித்துக் கொண்டே என்னைப் பார்த்தார்.

அப்பாவை அதிக சம்பளம் தருவதாக மதுபானக் கடை உரிமையாளர் ஒருவர் தனது விற்பனைச்சாலையில் உறைப்புத் தின்பண்டங்கள் தயாரிக்க அழைத்த போது – “பணம் தேவை – உழைக்க வேண்டும் - எப்படியும் உழைக்க விருப்பமில்லை – கஷ்டமெண்டாலும் காணாதெண்டாலும் இந்த உழைப்பிலை சந்தோஷம்” அது போதுமென்ற கருத்தைச் சொல்லி வாழ்ந்த அப்பாவின் கதையைச் சொன்னேன்.

ஓரளவுக்கு மேல் வசதியாக வாழும் நான் மனச்சாட்சியை மறைத்து சமூகத்தைக் கெடுக்கும் படங்கள் தணிக்கைக் கத்தரிக்கோலுக்கப்பாலும் திரையரங்கு செல்ல நானும் உடந்தையாக இருக்க விரும்பவில்லை. மாதந்தோறும் எளிதாகச் சம்பாதிக்க கூடிய ஆயிரக்கணக்கான ரூபாவை இழந்தாலும் மனச்சந்தோஷத்தை இழக்கவில்லை.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

காரியக்காரன் உதாரணம்

சாதாரணமாக இரவு ஒன்பது மணிக்குப் பின் கடைக்கு வருவோரின் எண்ணிக்கை குறைவு – வியாபாரமும் குறைவு. கடையின் பின் புறமுள்ள கொட்டில் ஒன்பது மணிக்குப் பின் சுறுசுறுப்பாகக் காணப்படும். வாழையிலை வெட்டுதல் - தேங்காய் துருவுதல் - காய்கறி நறுக்குதல் முதலியன வெகுவேகமாக நடைபெறும். அந்தக் களத்தில் நடைபெறும் வேலைகளைப் பார்ப்பதிலும் அவர்களின் கதைகளைக் கேட்பதிலும் எனக்கு நாட்டமதிகம். அறுபதுகளின் நடுப்பகுதியில் பிரபலமான பில்டர் சிகரட் ஒன்று வாங்கினால் மாறி மாறித் தம் இழுக்கும் நாலைந்து பேர் வாய்களைச் சுற்றி வரும். அப்படிச் சுற்றி கொண்டிருந்த சிகரெட்டை தீடிரென நீண்ட அப்பாவின் கரம் பற்றிப் பறித்தது. மற்றக் கரத்தில் ஒரு புதிய சிகரெட். சிலரைப் போல நானும் அப்பா சிகரெட் புகைப்பாரோ எனச் சந்தேகப்பட்டேன்.

அப்பா புதிய சிகரெட்டின் பில்டரை எல்லோருக்கும் காட்டினார். அது தூய வெள்ளை நிறமாக இருந்தது. புகைத்த குறைச் சிகரெட்டின் பில்டர் பழுப்பு நிற மஞ்சளாக மாறியிருந்தது. அப்பா தனக்குத் தெரிந்த வகையில் விளக்கினார்.

“சிகரெட் புகையால் பில்டருக்கே இந்தக் கதியென்றால் இருதயம் எவ்வளவு பாதிப்படும்? இரத்தம் அழுக்காகும்? காசு கொடுத்து வருத்தத்தை வாங்க வேண்டுமா? உற்சாகமாக வேலை செய்ய வேண்டுமென்றால் ஒரு கப் பால் குடிச்சிட்டு கம்மெண்டு வேலை செய்யலாம்”

எல்லாத் தொழிலாளர்களையும் தன் பக்கம் திருப்ப முடியாதது அப்பாவுக்கு தோல்வியாக இருந்தாலும் இரண்டொருவரைத் திருத்த முடிந்தது வெற்றியில்லையா? தன் மகன் தவறான பாதையில் செல்வதைத் தடுத்துவிட்டார்.

சம்பவம் எனக்குச் சொன்ன செய்தி –

‘சாதாரணமானவர்களுக்கு புள்ளி விபரங்கள் விகிதாசாரங்கள் எளிதில் விளங்காத சொற்களைச் சொல்லி குழப்பியடிக்காமல் விளங்கத்தக்க வகையில் நினைவில் நிற்கத்தக்க வகையில் உதாரணங்களை செய்யக் கூடிய Practical லாகச் சொல்லி காரியத்தைச் சாதிக்க வேண்டும்.”
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)