Friday, December 28, 2007

இரண்டு நாள் தூக்கமில்லை - சாப்பாடு கூட இல்லையே..

ஆரம்பத்தில் மற்றவர்கள் ஏற்பாடு செய்யும் கலை நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்டேன். பெரும்பாலும் நாடகங்களில் நடித்ததோடு ‘நிகழ்ச்சித் தொகுப்பாளராக’ அறிவிப்பு வேலைகளையும் செய்தேன். சொந்தமாக ஒரு சைக்கிள் வண்டி கூட இல்லாத நாட்களில் சைக்கிளில் அழைத்துச் செல்வதாக இருந்தால் மேடை நிகழ்ச்சிகளுக்கு சம்மதம் கொடுத்து பங்குபற்றினேன்.

திடீரென ஒரு திருப்பம். 1972 இல் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் வவுனியாவில் காப்புறுதி இரவு கலை விழாவை நடாத்திய போது நிகழ்ச்சித் தொகுத்தளிக்க என்னை அழைத்திருந்தார்கள். கொழும்பிலிருந்து வந்த கூட்டுத்தாபன விளம்பர முகாமையாளர் டாபரேக்கு எனது அறிவிப்பு நன்கு பிடித்துக்கொண்டது. அவர் என்னைப் பாராட்டியதோடு வவுனியாக் கிளை முகாமையாளரிடம் ஏதோ ஒரு இரகசியமாக சொன்னார். அடுத்த நாள் வவுனியாக் கிளை முகாமையாளர் நவரத்தினம் அறிவிப்பு செய்ததற்கான பாராட்டுக் கடிதத்துடன் 250 ரூபா தந்தபோதுதான் விளம்பர முகாமையாளர் கிளை முகாமையாளருக்குச் சொன்ன இரகசியம் புரிந்தது. மாதம் முழுதும் வேலை செய்யும் கிளாக்கனுக்கு 300 ரூபா சம்பளம் - ஓரிரவு அறிவிப்புக்கு 250 ரூபா பின்னர் மன்னார், கிளிநொச்சி, திருகோணமலை போன்ற இடங்களில் அறிவிப்பு வேலைக்கு 250 ரூபாவுடன் போக்குவரத்து தங்குமிட வசதிகள் எனவும் கவனித்தார்கள். காணிவல் பொப்பிசை ஆகியனவும் அறிவிப்பு செய்ய அழைத்தன.

கையில் நல்ல பசை. இடையிடையே சில மணிநேரம் மேடையைக் கலகலப்பாக்கி பெறும் பல நூறு ரூபா பெரிதா? அல்லது மாதம் முழுக்க உழைத்து பெறும் 300 ரூபா பெரிதா? அப்பாவின் அறிவுரை “அரசனை நம்பி புருஷசனைக் கைவிடக் கூடாது” பெரிய நெருக்கடியிலிருந்து தப்பி நிரந்தர வருமானம் தரும் அரச உத்தியோகத்தைக் காப்பாற்றி உயர்வும் பெற முடிந்தது.

70 களின் நடுப்பகுதியில் இடையிடையே மேடைக் கவர்ச்சி எனக்கு வலை வீசியது. புகழ் என்பதை விட பணத்தையும் விரும்பியது மனம். வானொலி மேடைக் கலைஞர்களை வளைத்து கலை நிகழ்ச்சி செய்யக் கூடிய திறமையிருந்தது. வேலை செய்த இடத்தால் பெற்ற செல்வாக்கு விளம்பரத்துக்கும் டிக்கட் விற்பனைக்கும் உதவி செய்தது. ஓரிரவுக்குள் பெரிய புகழ் மட்டுமல்ல – பல ஆயிரக்கணக்கான ரூபா பணமும் சேர்ந்து விட்டது.

ஒரு வித மயக்கத்தோடு ஒலி வாங்கியில் நான் “பல சிரமங்களுக்கு மத்தியில்தான் இந்தக் கலை நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தேன். கடந்த சில நாட்களாக அங்குமிங்கும் அலைந்து திரிந்ததில் சரியான உறக்கமின்றி சாப்பாடில்லாமல் இந்த நிகழ்ச்சியை உங்களுக்காக ஒழுங்கு செய்தேன். இன்னும் சொல்வதானால் இரண்டு நாட்கள் ஒரு கண்ணுறக்கமில்லை. இன்று ஒன்றுமே சாப்பிடவில்லை”

எதுவோ சாதனை நிகழ்த்தியவன் போல நான் சொன்னதும் எனது நண்பர் சிலர் என்னை அலாக்காகத் தூக்கிக் கொண்டு மேடைக்கு முன்னால் ஊர்வலம் வந்தனர்.

அன்றிரவு அப்பாவிடம் வாங்கிக் காட்டினேன். “கட்டியை யாராவது இப்படியொரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி கேட்டாங்களா? எதுக்குப் பொய் சொல்ல வேணும். கெஞ்சி மண்டாடி டிக்கட் வித்திட்டு சாப்பிடயில்லை – தூங்கயில்ல ஏன் பொய் சொல்ல வேணும்? காசு கொடுத்து டிக்கட் எடுத்து program பார்க்க வந்திருப்பாங்களே தவிர கட்டியின்ர பேச்சைக் கேட்க வந்திருக்க மாட்டாங்க. பேச்சில எந்தக் கலையழகும் இல்லை. பொருத்தமுமில்லை. ஒரே அறுவை. நீங்க ஒழுங்கு செய்யிற நிகழ்ச்சியில நீங்களே உங்களைப் பாராட்டக் கூடாது. வேற நிகழ்ச்சியில மற்றவங்க உங்களப் பாராட்டணும். அதுதான் உண்மையான பாராட்டு”

இதை விட இன்னொரு முக்கிய விடயம் சொன்னார். “இப்போ கொஞ்ச பணம் வந்திருக்கலாம். இது நிலைக்காது. இப்படியே வாற பணம் இப்படியே போயிடும். கொஞ்சமெண்டாலும் நிரந்தர தொழில் மூலம் தேட முயற்சிக்க வேணும். கொடி கட்டிப் பறந்து இலட்சக் கணக்கில் சம்பாதித்த சினிமாக்காரங்களே றோட்ல நிக்கிறாங்க”

இரவுக் கலை நிகழ்ச்சியில் பலரிடம் டிக்கட் மூலம் பெற்ற பணத்தை இரவுக் கலை நிகழ்ச்சியே என்னிடமிருந்து பறித்துக் கொண்டது. இருந்தாலும் என்னை நான் பாராட்டக் கூடாது என்பதுடன் மேடைகளிலும் பொது இடங்களிலும் பேசும் கவனிக்க வேண்டிய விடயங்கள் சிலவற்றையும் தெரிந்து கொண்டேன்.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: