Thursday, December 13, 2007

திருக்குறளும் நானும்

பாடசாலை நாட்களில் கட்டுரைகள் வாசிப்பதிலும் சொற்பொழிவுகள் கேட்பதிலும் ஆர்வம் அதிகம். அநேகமாக எல்லோரது பேச்சிலும் எழுத்திலும் திருக்குறளும், குறள் கூறும் கருத்துக்களும் முக்கியம் பெற்றதை அவதானிக்க முடிந்தது. திருக்குறள் மாநாடுகளும் தடல்புடலாக நடந்த காலம் அது. திருக்குறளைப் பாடமாக்கினால் எழுத்தும் பேச்சும் பொருள் நிறைந்ததாக அமையும் என எண்ணினேன்.

“கட்டி வீட்டில் இருக்கிற திருக்குறள் கலண்டரில் தினமும் கலண்டர் திகதியைக் கிழிக்க முன் திருள்குறளையும் அதன் கருத்தையும் படித்துப் பாடமாக்கும். கிழித்த திகதியை அன்று முழுவதும் சட்டைப்பையில் வைத்திருந்தால் ஏதாவது மறந்து போகும் போது திரும்ப எடுத்துப் பார்க்கலாம்” என்றார் அப்பா. கலண்டரில் குறள் படிக்கத் தொடங்கி தினசரிப் பத்திரிகைகள், வானொலி நிகழ்ச்சிகள் மூலமாக தனியான நேரமொதுக்காமலே பெரும்பாலான குறள் மனப்பாடம்.

எழுதுவதற்கும் பேசுவதற்கும் மட்டுமல்லாமல் இலங்கை நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையிலும் முகாமைத்துவம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு “ இதனை இதனால் இவன் முடிக்கும் என குறளை விளக்கி விரிவாக எழுதி அதிக புள்ளிகளை பெற முடிந்தது.

தினம் ஒரு திருக்குறள் என ஆரம்பமாகி குறிப்பாக நேரம் ஒதுக்காமலே பல விடயங்களைப் படிக்கவும் பாடமாக்கவும் பழகிக் கொண்டேன்.
(இதற்கு முன் இடுகைகளை "அப்பா" என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: