Tuesday, December 18, 2007

தொட்டில் பழக்கம்......

தங்கைக்கு பேச்சுக்கால் நடந்த போது வரன் பார்ப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து பஸ் வண்டி மூலம் மாங்குளம்வரை அப்பாவின் தலைமையில் சில உறவினர்களுடன் நானும் பயணித்த போது பஸ் முருகண்டிப் பிள்ளையார் ஆலயத்தருகே நிறுத்தப்பட்டது.

வழிபாடு தேநீரின் பின் அப்பா பொதுக்கழிப்பிடத்தில் சிறுநீர் கழிக்கச் சென்றார். இது ஒரு தொற்று வியாதி. ஒருவரை
பார்த்து ஒருவர் தொடர கடைசியாக நானும்.

எதையோ அவதானித்த அப்பா ஓடி வந்து கழிப்படத்துக்கு பக்கத்திலிருந்த தொட்டியிலிருந்து வாளியால் தண்ணீரை
அள்ளி நாங்கள் அசுத்தப்படுத்திய இடத்துக்கு மேலே ஊற்றினார். தடுத்த என்னையும் விடவில்லை.


‘’வீட்டில் இப்படிச் செய்தால் அம்மா அல்லது வேறு யாரும் சுத்தம் செய்வார்கள். இது பொது இடம். பாவிக்கும் நாங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். எங்களுக்கு முன் பாவிக்கும் நாங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும். எங்களுக்கு முன் பாவித்தவர்கள் சுத்தமாக வைத்திருந்தால்தான் நாங்கள் அருவருக்காமல் போகக் கூடியதாக இருந்தது.
எல்லோரும் உம்மை மாதிரி இருந்தால் இந்த சுற்றாடலே அசிங்கமாயிடும்.’’ அசிங்கமான இடத்தை அப்பா தண்ணீர் ஊற்றிச் சுத்தமாக்கி விட்டார்.

வெட்கத்தினாலும் வேதனையாலும் என் கண்களிலிருந்து நீர் வருவதற்கு முன்பாக அப்பா பஸ்ஸில் ஏறிக் கொண்டார்.
(இதன் முன்னைய இடுகைகளை அப்பா என்னும் வகைப்படுத்தலில் வாசிக்கலாம்)

No comments: