Tuesday, December 18, 2007

தொழிலே எஜமானன்

அந்தக் காலத்தில் தேர்தல் என்றாலே பெரிய திருவிழாதான். தினமும் மாலையில் யாழ். முற்றவெளியில் வேட்பாளர்களுக்கு ஆதரவான அரசியல் பிரசாரக் கூட்டங்கள் - செல்வாக்கைத் தேடவும் வெளிப்படுத்தவும் அலங்கார ஊர்வலங்கள் - பலர் புடை சூழ வேட்பாளர்களே வீட்டுக்கு வீடு வாக்கு வேட்டையாட வருவார்கள். வீதியலங்காரம் பூரண கும்பங்கள் - மாலை மரியாதை பந்தம் பிடிப்போர் ஒன்றுக்கும் குறைவிருக்காது.

பிரபல அரசியல்வாதியொருவர் கடைக்கு முன்னாலுள்ள வீதி வழியாக வருவதாக செய்தியறிந்து ஏறக்குறைய எல்லோரும் வீதிக்கு விரைந்தனர். அரசியல்வாதியைப் பார்க்கும் ஆசையினால் நானும் கடை முகப்புக்குச் சென்றேன். அரசியல்வாதி ஆறுதலாக ஒவ்வொரு கடை கடையாக ஏறி இறங்க பொறுமையிழந்த வானம் கறுக்க மழை தூறத் தொடங்கியது. இறுதியாக கடை வாசலுக்கு வந்த அரசியல்வாதி கையில் வைத்திருந்த வாக்காளர் பட்டியலை எழுத்து அப்பாவின் பெயரை வாசித்து அவரைத் தேடிக் கொண்டு கடைக்குள் குசினி வரை வந்துவிட்டார். அப்போது சமையல் வேலையோடிருந்த அப்பா விரைவாக வெளியே வந்து விறகையும் ஏனைய பொருட்களையும் உள்ளே கொண்டு சென்று பத்திரப்படுத்துவதை அரசியல்வாதி கவனிக்காது விட்டாலும் முதலாளி கவனித்துவிட்டார். “தேர்தல் காலங்களில்தான் அரசியல்வாதிகள் எங்களைத் தேடுவார்கள். பிறகு நாங்கள் எப்படித் தேடினாலும் அவர்கள் அகப்படமாட்டார்கள்” என்றார் அப்பா. “நெஞ்சுரம் கூடியவர்” என முதலாளி பாராட்டிய போது மற்றவர்கள் மழையில் நனைந்த பொருட்களை முதலாளியின் பார்வையிலிருந்து மறைக்க முயன்று கொண்டிருந்தனர். நான் அரசாங்க ஊழியன். அரசியல்வாதிகள் பற்றி அதிகம் அலட்டி கொள்வதில்லை. அப்பாவுக்கு கிடைத்த பாராட்டு போல எனக்கும் கிடைக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயம் தானே!
(இதன் முன்னைய இடுகைகள் 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள்)

No comments: