Wednesday, December 26, 2007

அவதானிக்கா பொழுதுகள்....

அப்பா பாட நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைள் மாத்திரமல்லாமல் அறிவிப்புகள் விளம்பரங்கள் எல்லாம் வாசிக்கச் சொல்லி வற்புறுத்துவார். அதாவது கையில் கிடைத்தவற்றை மாத்திரமல்லாமல் கண்ணில் பட்டவற்றையும் வாசிக்க வேண்டுமெனச் சொல்லுவார். அடிக்கடி செல்லும் கடையில காணப்பட்ட அறிவித்தலை கவனிக்கத் தவறியதால் ஒரு தடவை எண்பது ரூபா நட்டம்.

1994 இல் வவுனியாவில் நாடகம் மேடையேற்றுவதற்காக சில்லையூரான், வரணியூரான் அடங்கலாக 16 பேர் கொண்ட குழுவுடன் கொழும்பிலிருந்து காலையில் வானொன்றில் புறப்பட்டோம். குருணாகல என்னும் இடத்தை எட்டு மணியளவில் வான் கடந்து கொண்டிருந்த போது சாப்பாட்டின் வரவை கலைஞர்களின் வயிறுகள் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பல குரல்கள் ஒலித்தன.

‘இன்னும் ஒரு கிலோ மீற்றர் போக எப்பாவல ஹோட்டல் வரும், வாகனம் நிற்பாட்டலாம், வசதியாகச் சாப்பிடலாம். Toilet வசதியுமும் இருக்கு’ என்றேன். சுமார் பத்து வருடங்களுக்கு மேலாக கொழும்புக்கு வந்து போகும் வழியில் அந்த ஹோட்டலுக்குப் போய் வந்த அனுபவம். சில்லையூர் செல்வராசனின் கழுத்து மனைவியிருந்த பக்கம் திரும்பியது: ‘கமலினி!’ என்றார்.

கமலினியும் ஜெயசோதியும் சேர்ந்து ஒரு பார்சலை எடுத்தனர். கமலினியின் அழைப்பு: ‘தில்லையண்ணா sandwich செய்து கொண்டு வந்தனான். சாப்பிடுவம். ‘அது நல்லது, இதைச் சாப்பிட்டிட்டு ஒரு ரீ குடிப்பம்’ - இது ராஜபுத்திரன் யோகராஜன்.

“பார்சலையும் கொண்டு ஹோட்டலுக்கு போவம். சாப்பிட்டு ஒரு நல்ல ரீ குடிச்சிட்டு வெளிக்கிட்டால் மத்தியானச் சாப்பாடு வவுனியாவில்” – எனது ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வாகனம் ஹோட்டலுக்கு முன்பாக நிறுத்தப்பட்டது.

வாகனத்திலிருந்து ஒவ்வொருவராக இறங்க இறங்க முதலாளியின் முகம் படிப்படியாக மலர்ந்து சுறுசுறுப்பாகச் செயற்பட்டார். அழைப்பு மணியைத் தொடர்ந்து அமத்திக்கொண்டு கடையில் வேலை செய்வோரைப் பெயர் சொல்லி அழைத்து விரைவாக உணவு பரிமாறக் கட்டளையிட்டார்.

நாங்கள் உணவு பரிமாறுவோருக்கு சிரமம் கொடுக்காமல் தேநீருக்கு மட்டும் சொல்லிவிட்டு நான்கு மேசைகளை ஒன்றாக இணைத்து பதினாறு நாற்காலிகளை மேசைகளைச் சுற்றிவர வைத்து சில்லையூர் தம்பதிகளின் பார்சலைப் பிரித்தோம். உறைப்புக்கறி உள்ளுடனாக அமைந்த பாணுக்கும் சுடச் சுடச் தேநீருக்கும் நல்ல பொருத்தம்.

‘சிகரெட்’ என்ற சிப்பந்திக்கு ‘வேண்டாம்’ என்றதும் சிட்டை மேசைக்கு வந்தது. எதுவித விபரமும் இல்லாமல் 160 இலக்கம் மட்டும் காணப்பட்டதால் ‘இது என்ன 160?’ என்றேன். 160 ரூபா என்ற பதிலைக் கேட்ட எனது கண்கள் முதலாளிக்குப் பின்னூலுள்ள சுவரில் மாட்டப்பட்டிருந்த விலைப்பட்டியலை மேய்ந்தன.

‘வெறும் தேநீர் - 3 ரூபா. பால் தேநீர் - 5 ரூபா’ சரியாகத்தான் எழுதப்பட்டிருந்தது. 16 ஐ 5 ஆல் பெருக்கி 80 என்பதை நிச்சயப்படுத்திக் கொண்டு மீண்டும் கணக்கைக் கேட்டேன். விடையில் மாற்றமில்லை. சிட்டையில் எழுதப்பட்டிருந்த தொகையில் மாற்றமில்லை. பொறுமையிழந்த நான் முதலாளியிடம் முறையிட்டேன்: ‘நாங்கள் 16 பேர் - 16 ரீ மட்டும் - 80 ரூபாதான் கணக்கு. பிழையாக 160 ரூபா கணக்குக்கு பில் போட்டிருக்கு. ‘முதலாளி சிப்பந்தியைக் கூப்பிட்டு ஏசுவார் என எதிர்பார்த்த எனக்கு ஏமாற்றம்’ முதலாளி சிரித்துக்கொண்டே சுவரில் ஒட்டப்பட்டிருந்த அறிவித்தலைச் சுட்டிக்காட்டினார்.

எத்தனை தடவை அந்தச் சாப்பாட்டுக் கடைக்குப் போயிருந்தும் அன்றுதான் அந்த அறிவித்தலை வாசித்தேன். ‘வெளியிலிருந்து சாப்பாடு கொண்டுவந்து சாப்பிடுபவர்களிடம் ஒருவருக்கு 5 ரூபாவீதம் அறிவிடப்படும்’

மயில்வாகனம் சர்வானந்தா கொடுப்புக்குள் சிரித்தார்: ‘கமலினியும் சோதியும் சொன்ன மாதிரி வானிலை வைச்சே சாப்பிட்டிருக்கலாம்’


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: