Sunday, December 23, 2007

சூடும் தண்ணீர்

அந்த நாட்களில் வருடத்தின் இரண்டாவது காலாண்டுக் காலத்தில் ‘தினகரன்’ பத்திரிகையின் ஆதரவில் யாழ்ப்பாணத்தில் மாபெரும் சைக்கிளோட்டப் போட்டிகளுடன் கூடிய விளையாட்டு விழா நடைபெறும். சைக்கிளோட்ட வீரர்களை உற்சாகப்படுத்த பார்வையாளர்கள் தண்ணீரை வாளியோடு ஊற்றுவார்கள். கடையில் வேலை செய்த இளவட்டங்கள் சில ஒன்று சேர்ந்து குறும்பு வேலைக்குத் திட்டமிட்டு ஒரு வாளியையும் கொண்டு சமையலறைக்குள் புகுந்து வெளியேறியதை அப்பாவின் கழுகுக் கண்கள் கவனித்துவிட்டன. சமையலறையிலிருந்து இளவட்டங்களைப் பின் தொடர்ந்த அப்பாவின் கைகளில் பெரிய வாளியொன்றில் நிரம்பியிருந்த நீரிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது.

விரைந்து வந்து கொண்டிருந்த வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலி பெருக்கியின் அறிவிப்பு –

‘சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொள்ளும் பெண் வீராங்கனைகள் வேகமாக வருகின்றார்கள்’

இளவட்டங்களிலொன்று தண்ணீர் நிரம்பிய வாளியைத் தூக்க மற்ற இளவட்டங்கள் வேடிக்கை பார்க்க முண்டியடித்தன. அப்பாவும் பெரிய வாளியைத் தூக்கினார். அவர் கண்கள் சிவந்திருந்தன.

“அடே! தண்ணியைக் கொட்டிட்டு உள்ளே போ - இல்லே இந்த வாளியில இருக்கிற தண்ணியை உன் தலையில ஊத்துவன்”

இளவட்டத்தின் கையிலிருந்த வாளி கீழே விழ வாளியிலிருந்த கொதி நீர் நிலமெங்கும் சிதறியது. சைக்கிளோட்டப் போட்டியில் கலந்து கொண்ட பெண்களுக்கு சுடுதண்ணீர் ஊற்ற முயன்ற இளவட்டங்கள் தங்கள் தவற்றை உணர்ந்து தலைகளைத் தாழ்த்திக் கொண்டன.

சமையலறையை நோக்கித் திரும்பிய அப்பாவின் கையிலிருந்த வாளித் தண்ணீர் சூடு ஆறியிருந்தது. அப்பாவின் சாதுர்யத்தால் அந்த இடத்தில் பெண்களுக்கு நேர இருந்த விபத்தும் ஆண்களுக்கு நேர இருந்த அவமானமும் தவிர்க்கப்பட்டது.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: