Friday, December 28, 2007

ஏமாற்றம் எமக்கான போது..

அப்பா தொழில் செய்த கடைக்கு அருகிலமைந்த கடடிடமொன்றில் பல அறைகள். ஒவ்வொரு அறையிலும் தங்கியிருந்தவர்கள் சாப்பிடுவதற்காக கடைக்கு வந்த போதும் சிலரின் அறைக்குச் சென்ற போதும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சொந்த ஊர் நிரந்தர வதிவிடம் வேறாக இருந்தாலும் சிறு சிறு தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதால் அவர்கள் யாழ்ப்பாண நகரத்தில் தங்கியிருந்தார்கள்.

ஒருவர் ஐஸ்கிறீம் விற்பவர். இன்னொருவர் புதிய வீடுகள் கட்டிடங்கள் கட்டுமிடங்களில் சீமேந்து பைகளை வாங்கி வந்து சிறு சிறு பைகளாக ஒட்டி விற்பவர். விளம்பர பலகை எழுதுபவர், பாயசம் காய்ச்சி விற்பவர், தையற்காரர், தும்பு மிட்டாய், கச்சான் அல்வா செய்பவர் இப்படிப் பலர் அங்கே தங்கியிருந்தனர். அவர்களில் இருவரை ஒரு நாள் யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் காணநேர்ந்தது. ஒருவர் கையில் சிறிய காட்போட் பெட்டி. மறுகையில் கண்ணாடிப் பேப்பரில் சுற்றப்பட்ட இனிப்புகள்.

“இருபது தோடம்பழ இனிப்பு பத்து சதம். தாகத்துக்கு நல்லது. இருபது தோடம்பழ இனிப்பு பத்துச் சதம்” எனக் கூவி விற்றுக் கொண்டிருந்தார்.

மரநிழலின் கீழே நின்ற மற்றவரைச் சுற்றிவர சிறுவர் கூட்டம். ஒரு அட்டைப் பெட்டியில் இனிப்புகளும் ஒரு சிறிய தகரத்தில் தண்ணீரும் வைத்திருந்தார். கையில் இரண்டு அங்குல நீளம் இரண்டு அங்குல அகலத்தில் வெட்டப்பட்ட காகித்தத் துண்டுகளை வைத்திருந்தார்.

அவரிடம் ஐந்து சதம் கொடுத்தால் கையிலிருக்கும் காகித் துண்டொன்றைக் கொடுப்பார். எதுவும் எழுதப்படாத காகிதத் துண்டை தகரத்திலுள்ள தண்ணீரில் போட்டதும் அத்துண்டில் ஒன்று முதல் இருபது வரையிலான இலக்கங்களுள் ஏதாவது ஒரு இலக்கம் தோன்றும். என்ன இலக்கம் தோன்றுகிறதோ அத்தனை இனிப்புகளைக் கொடுப்பார். வெற்றுக் காகிதத்தை தண்ணீரில் போட இலக்கம் தோன்றுவதும் இலக்கத்துக்கேற்ப இனிப்புக் கொடுப்பதும் வேடிக்கையாகத் தோன்ற சில நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஐந்து சதம் கொடுத்து வாங்கும் துண்டுகளில் இடையிடையே 10 அல்லது 12 இலக்கங்கள் தோன்றும் போது அவர் பார்த்துப் பாராமல் இனிப்புக்ளை அள்ளிக் கொடுப்பதும் அநேகமாக 1 அல்லது 2 அல்லது 3 இலக்கங்கள் தோன்றும் போது கணக்காக இனிப்புகள் கொடுப்பதையும் கவனித்தேன். நானும் ஐந்து சதம் கொடுத்து துண்டு கேட்ட போது என்னை அடையாளம் கண்டு கொண்டதுடன் பணத்தைப் பெற்றுக் கொள்ளாமல் கைநிறைய இனிப்புகளை அள்ளி தந்து அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்றார்.

பணம் கொடுக்காமல் பலர் முன்னிலையில் நிறைய இனிப்புக்களைப் பெற்றுக் கொண்டது சந்தோஷத்தைத் தந்தாலும் என மனதை ஏதோ உறுத்தியது.

அன்று மாலை நடந்ததை அப்பாவிடம் சொன்னேன்.

அப்பா அவரை அழைத்துப் பத்து ரூபா பணம் கொடுத்து “இந்தாய்யா இனி சின்னம் சிறுசுகளை ஏமாத்தாம நான் சொன்னதை செய்” என்றார்.

பின்னர் நான் அப்பாவிடமிருந்து தெரிந்து கொண்டது.

ஒருவர் பெரும்தொகையான இனிப்புகளை மொத்த விலைக்கு வாங்கி பத்து சதத்துக்கு இருபது இனிப்பு விற்பனை செய்கின்றார்.

மற்றவர் சவர்க்காரத்தை நீரில் கரைத்து அந்த நீரால் கடதாசியில் எழுதினால் அந்த இலக்கங்களை எழுத்துக்களை எல்லோரும் அறிந்து கொள்ளமாட்டார்கள் என எண்ணிக் குறைந்த பெறுமதியுள்ள கடதாசிகளை அதிக அளவில் குறிப்பாகச் சிறுவர்களை ஏமாற்றி இனிப்பு விற்பனை செய்கின்றார்.

அப்பாவுக்கு ஏமாற்றி வியாபாரம் செய்வதில் உடன்பாடில்லாததால் அவருக்கு அறிவுரை கூறியிருக்கின்றார். அவர் தனது வியாபாரத்தை மாற்றவேயில்லை.

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பின்பும் அவர் இலக்க துண்டுகளை வைத்தே இனிப்பு வியாபாரம் செய்ததைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவன் கதையை விடு. நீ ஏமாறாதே” என்றார்.

பின்னர் சுமார் ஆறேழு மாதங்கள் போயிருக்கும். அவர் பஸ் நிலையததில் பொரித்த பருப்பு கடலை டொபி விற்பனை செய்வதைக் கண்டு அப்பாவிடம் சொன்னேன். “அவனுடைய பிள்ளையை யாரோ ஏமாத்திப் போட்டாங்களாம். என்னட்டச் சொல்லி அழுது கொண்டிருந்தான். அதுக்கப்புறம் ஆளே மாறியிட்டான்” என்றார் அப்பா.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: