(அப்பா நூலின் தொடர் 01)
எனது ஆசிரியர்கள், மேலதிகாரிகள், நண்பர்கள் காட்டிய வழிகள் உயர்ந்த நிலையை பெற உதவினாலும் இன்னுமொருவர் படிப்பித்த பாடங்கள் நாளாந்த நடவடிக்கைகளைச் சிறப்பாகச் செய்வதற்கு உதவுகின்றன.
அவர் பள்ளிக்குச் சென்று படித்ததில்லை. ஐந்தாறு வயதில் இரண்டு மைல் தூரம் நடந்து சென்று தொழில் பார்த்து தினக் கூலியாக இரண்டு சதம் பெற்று, எட்டு வயதில் பெற்றோரையும் பிறந்த ஊரையும் விட்டு வெகு தொலைவுக்கு அப்பால் தொழில் தேடிக் கொண்டவர்.
சொந்த முயற்சியால் எழுத்துக் கூட்டிப் பத்திரிகை சஞ்சிகை வாசிப்பின் மூலம் பல விடயங்களைக் கிரகித்து நல்லவற்றையும் நல்லவையல்லாதவற்றையும் எடை போடத்தக்க தகமை பெற்றவரானார்.
அவர்-
திரு.சிங்காரம்பிள்ளை – எனது தந்தையார்
யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடையில்
யாழ்ப்பாணத்தில் ஒரு சாதாரண சாப்பாட்டுக் கடையில்
‘’சமையல்’’ அவரது தொழில்.
யாழ்ப்பாண நகரில் குறுக்கும் நெடுக்குமாகப் பல வீதிகள் அமைந்த போதும், பிரசித்தமான வீதிகள் மிகச் சிலவே. அத்தகைய பிரசித்தமான சில வீதிகளில் கண்டி வீதி, பருத்தித்துறை வீதி மானிப்பாய் வீதி, காங்கேசன்துறை வீதி என ஊர்களுக்குச் செல்லும் பாதைகளைக் காட்டுகின்ற வீதிகளில் ஒன்று காங்கேசன் துறை வீதி, காங்கேசன்துறை வீதியை ஆங்கிலத்தில் சுருக்கமாக கே.கே.எஸ், றோட் என அழைப்பார்கள். ஆங்கில மொழி தெரியாதவர்கள் நாவிலும், கே.கே.எஸ் றோட் நடம் புரிந்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான சாப்பாட்டுக் கடைகளில் ‘’லக்சுமி விலாஸ்’’ குறிப்பிடத்தக்கது. தில்லைவனம்பிள்ளை என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட ‘’லக்சுமி விலாஸ்’’ அநேகமாக எல்லோராலும் ‘’தில்லைப் பிள்ளை கிளப்’’ என்றே அழைக்கப்பட்டது. வீதியால் போவோர் வருவோரைக் கவர்ந்திழுக்கக் கூடிய காட்சிப் பெட்டிகள் அமைந்த கடையல்ல ‘’தில்லைப்பிள்ளை கிளப்’’ வாடிக்கையாளரின் சைக்கிள் வண்டிகள் நிறுத்தக்கூடிய சிறு ஒழுங்கை போன்ற முகப்பைக் கொண்ட தில்லைப்பிள்ளை கிளப்பில் அலங்காரப் பொருட்கள், கவர்ச்சிப் பொருட்கள் என எல்லவற்றையும் காண முடியாது.
டிக்காசன் காப்பி, எண்ணெய் தோசை,மசாலாத் தோசை என்றும் நினைவுக்கு வரும் முதல் தர ஹோட்டலாக தில்லைப்பிள்ளை கிளப் விளங்கியது.
கலப்படம் இல்லாத சுத்தமான உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் ‘’தில்லைப்பிள்ளை கிளப்பில்" அப்பா சிங்காரம் பிள்ளையும் ஒரு தொழிலாளி.
இரண்டாவது வகுப்பில் நான் படித்துக் கொணடிருந்த வேளை புகைப்படம் பிடித்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் வாஸன் ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்றனர்.
படப்பிடிப்பாளர் ‘’கண் வெட்டாமல் பார்க்க வேணும்" "அச்ச பிள்ளை ஸ்மைல் பிளீஸ்’’ எவ்வளவோ சொல்லி பாரத்தார். கமராவை பார்த்த வண்ணம் அதற்கு முன்பாக என்னை இருத்தி படம் பிடிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
தந்தையார், புகைப்படக் கருவியில் பொருத்தப்பட்டிருந்த வட்டக் கண்ணாடியைக் காட்டி. ‘’தம்பி சிரித்துக் கொண்டே இந்தக் கண்ணாடியைப் பாருங்கோ இதிலையிருந்து ஒரு குருவி பறந்து வரும்" என்றார்.
குருவி பறந்து வரும் என்ற எண்ணத்துடன் சிரித்த முகத்துடன் இருந்தேன். ‘’ரெடி’’ "தாங் யூ’’ சொன்னது எனக்குக் கேட்கவில்லை. சில நாட்களில் அழகான புகைப்படம் கிடைத்தது.
(இதுதான் அந்தப் படம்)பின்னரும் சில சந்தர்ப்பங்களில் புகைப்படக் கருவியிலிருந்து குருவி பறந்து வரும் எனக் காத்திருந்தேன். குருவி வராவிட்டாலும் படங்கள் நன்றாக அமைந்து விட்டன.
முதன் முதலாக தொழில் வாய்ப்புத் தேடி விண்ணப்பம் அனுப்பிய போதுதான் நான் எப்போது பிறந்தேன் என அறிந்து கொண்டேன். பிறந்த திகதி எனக் குறிப்பிட்டிருந்த கூட்டில் எழுத வேண்டிய தகவலுக்காகவே பெற்றோரிடமிருந்து பிறந்த திகதியைக் தெரிந்து கொண்டேன். எனது பள்ளிப் பருவத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்று நடைபெற்ற சம்பவங்கள் எதுவும் இருந்தாக நினைவில் இல்லை. என் வீட்டில் மட்டுமல்ல கல்லூரியிலும் ஊரில் இல்லை. இல்லவேயில்லை.
இப்போதெல்லாம் சாதாரண வாழ்வுக்குக் கஷ்ரப்படும் குடும்பங்களில் கூட, வீடியோ, புகைப்படம் இத்தியாதிகள் இல்லாவிட்டால் பிறந்தநாள் கொண்டாட்டம் நிறைவுள்ளதாக அமையாது. தின்பண்டங்கள் மத்திலும், விளையாட்டுப் பொருட்களுக்கு மத்திலும், குழந்தைகளை விதவிதமான புது உடைகளுடன் படமெடுப்பதை எல்லோரும் விரும்புகின்றனர். பிறந்த நாள் நிகழச்சிகளுக்கு என்னை அழைப்பவர்களின் நோக்கங்களில் ஒன்று தந்தை சொன்ன மந்திரத்தைச் சொல்லி தந்திரமாக அழுகின்ற குழந்தைகளையும் சிரிக்க வைத்து புகைப்படத்தினுள் விழுத்தி விடுவேன்.
அப்பா வருவார்...........
(அப்பாவை பற்றி "அப்பா" வகைப்படுத்தலுக்குள் படிக்கலாம்)
4 comments:
ஐயா, உங்கள் பதிவும் "அப்பா" நூல் விவரம் இன்றுதான் கண்ணில் பட்டது. நாளை வரும் என்று சொன்னீர்களே வரவில்லையே என்று நினைத்திருந்தேன். ஆனால் "கவனமாய் பாருங்கோ குருவி வரும்" என்ற தலைப்பில் போட்டிருந்ததை கிளிக்கிப்பார்த்தால் "அப்பா" ஆரம்பமாகியிருந்தது தெரிய வந்தது. ஒரு விண்ணப்பம்- அப்பா தலைப்பில் அத்தியாயம் வாரியாய் போட்டால் கிடைக்கும் நேரத்தில் தேடி படிக்க செளகரியமாய் இருக்கும்.
வணக்கம் உஷா,
மிக்க மிக்க நன்றி ஞாபகம் வைத்திருந்து படித்தமைக்கு. அப்பா என்னும் பெயரிலேயே தொடர்ந்தும் இடுகையை இட்டால் திரட்டிகளில் தினந்தோறும் அதை காண்பவர்களுக்கு சலிப்பூட்டும் என்பதினாலேயே ஒவ்வொரு இடுகைக்கும் ஒவ்வொரு தலைப்பிட எண்ணினேன். ஆனால் அப்பா நூலை வரிசைக்கிரமத்தின் படி அப்பா என்னும் வகைப்படுத்தலிலுள் (லேபலிலுள்) சென்று பார்க்க முடியும். அது தவிர ஒவ்வொரு இடுகையின் ஆரம்பத்திலும் அது எத்தனையாவது என இலக்கமும் இடுகின்றேன். இது வாசிப்பதற்கு இலகுவாக இருக்கும் என நம்புகின்றேன். இது வாசிப்பதற்கு சிரமமாய் இருக்குமானால் தயவு செய்து பின்னூட்டம் இடுங்கள்.
குருவி பறந்து வரும் வித்தையை நானும் முயன்று பார்க்கலாம் ;)
நல்லாப் போது, தொடரின் தலைப்பிலேயே "அப்பா", அத்தியாய இலக்கம், உப தலைப்பைக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்
//கானா பிரபா said...
குருவி பறந்து வரும் வித்தையை நானும் முயன்று பார்க்கலாம் ;)
நல்லாப் போது, தொடரின் தலைப்பிலேயே "அப்பா", அத்தியாய இலக்கம், உப தலைப்பைக் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும் //
ஹாஹா..... கானாப்பிரபா முயலுங்கள். குருவி வரும். தவிர நீங்கள் சொன்னது போன்றே தலைப்பையும் போடுகின்றேன்.
Post a Comment