Wednesday, September 11, 2013

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...



















உடுப்பிட்டி அ.மி.கல்லூரி, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி பழைய மாணவர் சங்க கனடா கிளை கனடாவில் 25 வது ஆண்டு விழாவை 09-08-2013,10-08-2013 தினங்களில் கொண்டாடி வெளியிட்ட வானவில் மலரில் வெளியான எனது கட்டுரை இது..எழுத தூண்டி வெளியிட்ட கலாநிதி.த. வசந்தகுமாருக்கு நன்றி

வயதான காலத்தில் கவலையையும் துன்பத்தையும் மறக்க வைக்கும் உடுப்பிட்டி அ.மி.கல்லூரி...

-உடுவை எஸ்.தில்லைநடராசா

கல்லூரி வாழ்க்கை கழிந்து நாற்பது ஐம்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் கவலைகள் மனதை வாட்டும் போது- நோய்கள் உடலை வருத்தும்போது பிரச்சினைகள் தலைதூக்கும்போது கல்லூரிக்காலமும் அப்போது சிரித்து மகிழ்ந்த நாட்களும் மாறிமாறி மனதில் தோன்றி சந்தோஷம் தருகிறது., சங்கடங்களை மறக்க வைக்கிறது.

எனது வாழ்க்கையில் எத்தனையெத்தனையோ விடயங்கள் மறந்து போய்விட்டது. மறக்காமல் , மறக்க முடியாமல் நினைக்காதபோதிலும் மனமகிழ்ச்சியை- ஒருவித உள்ளக்கிளுகிளுப்பைத் தருவது பள்ளி வாழ்க்கையே ! அடி வாங்கி அழுதாலும் அவமானப்பட்டாலும் இன்று அதை எண்ணிப்பார்க்கிறபோது ஒரு தனிச்சந்தோஷம்.

இப்போதெல்லாம் ஏறக்குறைய எல்லா மாணவர்களிடமும் சைக்கிள்- சிலரிடம் மோட்டார் சைக்கிள் கூட இருக்கிறது. எனது நாட்களில் பாடசாலைலிருந்து தூரத்தில் வசிக்கும் வசதியான மாணவர்களிடம் தான் சைக்கிள் இருக்கும். சிலர் பஸ்ஸில் வந்து போவார்கள். ஒரு நாள் வழக்கறிஞர் ஜி.ஜி.பொன்னம்பலம் பருத்தித்துறை நீதிமன்றத்துக்கு வழக்குபேச வருகிறார் என்ற கதை பரவ சில ஆசிரியர்கள் முன்னே செல்ல பின்னே மாணவர்படை. சைக்கிள் வைத்திருந்தவர்களுக்கு வசதி. சைக்கிள் பாரில் கரியரில் மாத்திரமன்றி ஹான்டிலிலும் மாணவர்களை ஏற்றிக்கொண்டு சென்றனர்.


மதிய உணவு இடைவேளைக்கு மணி அடித்தவுடன் வழமை போல நவுண்டில் சோதிலிங்கம் வீட்டுக்குப் போவதற்காக தனது சைக்கிளைத்தேடி, சைக்கிளைக்காணாமல் அழத்தொடங்கினான். பூட்டப்டபடாமல் இருந்த சைக்கிள்களை மற்றவர்கள் களவாக எடுத்துக்கொண்டு போன கதையும் அதிபருக்கு முறையிடப்பட்டது. நீதி மன்றம் போனவர்கள், நீதி மன்றம் போனசைக்கிள் எல்லாம் அதிபரின் அறைக்கு அருகே வந்து சேர்ந்தது. ஆனால் சோதிலிங்கத்தின் சைக்கிள் வரவே இல்லை. அதிபரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு பலர் பதில் சொல்ல முடியாமல் தடுமாற- நீதி மன்றம் சென்று ஒழித்து ஒழித்து பிந்திவந்த மகாலிங்கமும் சிவராசாவும் சொன்ன கதை அதிபரை மாத்திரமல்ல- எல்லோரையும் சிரிக்க வைத்தது. வழமையாக சைக்கிளில் வரும் சோதிலிங்கம் அன்று சைக்கிள் கொண்டு வரவில்லை. சிவராசாவின் சைக்கிள் கரியரிலிருந்து வந்ததை சிவராசா நினைவூட்டிச்சொல்ல சோதிலிங்கம் ஒத்துக்கொள்ள- அதிபரின் தண்டனையிலிருந்து எல்லோரும் தப்பிவிட்டார்கள்.

பாடசாலை நாட்களில் உல்லாசமாக உலாத்தித்திரிவதென்றால் ஒரு தனிசந்தோஷமல்லவா ? நண்பர்கள் கூடினால் சிலமணி நேரத்துக்குள் சமாளித்து விடலாமென்றால் தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவில் என சொல்லி புறப்பட்டு- கோவிலுக்குப் போவதற்கு முதல் குளிக்க வேண்டுமென்று சொல்லி பாலத்துக்கு வலது புறமாக இருக்கும் உப்புமாலுக்குச்சென்று கடல்நீராடுவோம். கரையிலிருந்து சற்று தள்ளிப்போனால் கற்கள் எதுவுமில்லாத வெண்ணிற மணலை அடியில் கொண்டதாகவும் ஆழம் குறைவானதாகவும் உள்ள தெளிந்த நீர். வழுக்கும் பாசி- இழுக்கும் சுழி என்ற பயமே இல்லாமல் நேரம் போவது தெரியாமல் கடல் விளையாடிய நாட்கள் ஏராளம் !

சைக்கிள் வசதியும் கிடைத்து ஒரு பகல்பொழுதைச் சமாளிக்க முடியுமென்றால் கீரிமலைக்கேணி எங்களோடுதான். அப்படி தூரம் சென்று வரும் நாட்களில் தாகத்தை தணிக்க வளலாய் என்ற இடத்துக்கும் மயிலிட்டி என்ற இடத்துக்கும் இடையில் தென்னைமரங்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இளநீருக்குச் சொந்தக்காரர் நாங்கள்.

அந்த நினைப்போடு, ஞானதாசன், பாலசுப்ரமணியம், பரமசாமி ஆகியோரோடு – நானும் வளலாய் கிராமத்தில் தென்னை மரமொன்றில் ஆளுக்கு இரண்டு என்ற வீதத்தில் இளநீர் பிடுங்கிக்கொண்டு தூரத்தில் வந்து கொண்டிருந்த கிழவனின் கையில் வைத்திருந்த கத்தியைத் தரும்படி கேட்டோம். கத்தியைத்தர முடியாது இளனியை வெட்டித்தாறன் என எங்களை வீதியோரம் அழைத்துச்சென்று நிலத்தில் வைக்கப்பட்டிருந்த மரமொன்றில் கத்தியைத்தீட்ட ஆரம்பித்தான். இடையிடையே நிலத்தில் இருந்த மணலையும் மரத்தில் போட்டு கத்தியை கூராகத்தீட்டிக்கொண்டே,” எங்கை தேங்காய் பிடுங்கினது ?” என விசாரித்தான். பரமன் தான் பதில் சொன்னான்.-‘அந்த மரத்திலை தான் பிடுங்கினது., நேரம் போகுது. கத்தியை கெதியாகத் தாங்கோ- நாங்க வெட்டுறம்’ என்றான். கிழவன் மரத்தில் தீட்டி கூராக்கிய கத்தியை விரல்களால் மெதுவாகத் தடவிக்கொண்டே, “ டேய் என்ரை காணியிக்கிளை களவாக தேங்காய் இண்டைக்கும் பிடுங்கிக்கொண்டு என்னட்டை கத்தி கேக்கிறாங்கள். அண்டைக்கு ஓடினவங்கள்-இண்டைக்கு விட மாட்டேன்” என்று சொல்லிக்கொண்டே நிலத்திலிருந்து எழும்பினான்.

 “ஓடித்தப்புவம்” என்று சொல்லிய வண்ணம் சைக்கிளில் பாய்ந்து ஏறினான் ஞானதாசன்., கிழவன் அவனைக் குறிபார்த்து ஏறிந்த கத்தி குறி தவறிவிட்டது.

கத்தி விழுந்த இடத்துக்கு விரைவாக ஓடமுடியாத கிழவன் நிலத்திலிருந்த இளனியை ஒவ்வொன்றாக எடுத்து எங்களை நோக்கி ஏறிய நாங்களும்

சைக்கிள்களில் தாவி ஏறினோம். தப்பினோம் பிழைத்தோம் என, கன தூரம் வேகமாக ஓடின சைக்கிள் ஒரு கள்ளுக்கொட்டில் அருகே மெதுவாக தயங்கித்தயங்கி நின்றது. அப்போது தான் ஞானதாசன் சொன்னான்:-‘ இப்ப தான் நினைவுக்கு வருகுது- கொஞ்ச நாளைக்கு முதல் வேறை சில பொடியளோடை வந்து அந்தக் காணியுக்கிளை இளனி பிடுங்கினனாங்கள்., கிழவன் கலைச்சுக்கொண்டு ஓடி வர நாங்கள் ஓடித்தப்பியிட்டம்”.

 ‘தப்பியிட்டம் எண்டு சொல்ல முடியாது. அங்கை வாற சைக்கிள் கரியரிலை கிழவன் கத்தியோடை வாறமாதிரித் தெரியுது’ என்று சைக்கிள் வந்த திசையைக் காட்டினான், பாலன். இரண்டு பேர் சைக்கிளில் வருவது தெரிந்தது.

அவர்கள் கண்களில் படாமல் இருப்பதற்காக கொட்டில் பின்புறத்தில் சைக்கிள்களைச்சாத்திவிட்டு உள்ளே ஒழித்துக் கொண்டோம்., கொட்டிலுக்கு உள்ளே போனதால் ஒரு போத்தல் நாலுபேருக்குப் போதாது தான். ஆனாலும் அதுக்கு மேலை போக விரும்பவில்லை.

அன்று இளனி விடயம் சரிவராமல் போனதால் தாகத்தைத் தீர்த்தது அந்தக்கொட்டில். பிறகு இளனி பிடுங்கினதாகவும் நினைவில்லை., கொட்டிலுக்குள்ளை ஒழித்ததாகவும் நினைவில்லை.

கையிலை பையிலை காசு இருந்தால் நம்பக்கூடிய மாதிரி யாராவது ஒரு ஆசிரியரின் பெயரையும் இரவு பாடசாலையில் தங்க வேண்டும் என்று ஒரு கதையையும் அவிட்டு விடுவம். சைக்கிள் வண்டிகள் ஒழுங்கைகள் வழியாக மொட்டைப் புளியடியில் ஒன்றாகச்சந்தித்து , கீரிமலைக்குளிப்பு- யாழ்பாணத்தில் கொத்துரொட்டி-ஏதாவது ஒரு தியேட்டரில் செக்கன்ட் ஷோ. விடிவதற்கு முன் உடுப்பிட்டிச்சந்திக்கு வந்து விடும் சைக்கிள்.

ஒரு நாள் காலையில் நாலைந்து சைக்கிள்- நாங்கள் ஏழு எட்டுப்பேர்- ஒரு வித்தியாசமாக இருக்கட்டும் என்று கொடிகாமம் சென்று விட்டோம். மத்தியானம் வயிறு கடிக்க ஒவ்வொருவரும் ஆளையாள் பார்த்தோம். நம்பிக்கையில்லாமல் ஒவ்வொருவரின் பொக்கற்றுகளையும் கடுமையாகச்சோதித்து, ஒருசதம் இரண்டு சதமாக எடுத்த பணத்தின் மொத்தப் பெறுமதி பதினைந்து சதம். நீண்ட நேரம் சந்தையில் தேங்காய் விற்கும் கிழவியுடன் பேச்சுவார்த்தை நடாத்தி கொடிகாமம் சந்தையில் பதினேழு சதம் சொன்ன தேங்காயை இரண்டு சதம் விலை குறைத்து வாங்கி அதைச்சிதறு காயாக அடித்து ஏழு எட்டுப்பேரும் ஆளுக்கு இரண்டொரு தேங்காய்ச்சொட்டு- அது தான் அன்றைய மத்தியான சாப்பாடு.

காய்ந்த வயிற்றோடு சோர்ந்து போய் சைக்கிள் ஓடி வர இரவு எட்டு மணியாகி விட்டாலும் உடுப்பிட்டி சங்கக்கடையைக் கண்டவுடன் ஒரு சந்தோஷம். விசிலடித்து சத்தமாக கத்திக்கொண்டு வர எதிரில் வந்த ஒரு கிழவி கேட்டாள்-“ ஏன்ரா உங்களை பேய் பிசாசு ஒண்டும் காண இல்லையே?”

நவம் சொன்னான்:-“ இல்லைஆச்சி பேய் பிசாசுகள் கண்டது தான். சயிட் எடுத்துக்கொண்டு வாறம்”

இவை எனது கதைகள்- உங்களின் கதைகளையும் கேட்க ஆவலாக உள்ளேன்.


No comments: