Sunday, June 17, 2012

விநோதமான சாதனம்


விநோதமான சாதனம்
                          உடுவை.எஸ்.தில்லைநடராசா

ஆனந்தனின் குடும்பம் வசிக்கும் சிறிய –அனெக்ஸ்-சுக்கு முன்பாக வானொன்று நின்று புறப்படும் சத்தத்தைத் தொடர்ந்து ஆனந்தனின் குரல்-“நான் போயிட்டு வாறன்“

கண்களையும் கையையும் அசைத்த மீனாவின் உதடுகளும் அசைந்தன.-“போயிட்டு வாங்கோ“

ஆனந்தனை உள்ளே இழுத்துக் கொண்ட வான், கட்டுநாயக்க விமான நிலையத்தை அடைந்த போது அவன் நண்பன் நாதனைச் சுமந்து வந்த விமானம் தரையிறங்கியது.

ஆனந்தனும் நாதனும் இருபது வருடங்களுக்கு முன் ஒரே நாளில் ஒன்றாக எழுநர்களாக நியமனம் பெற்றவர்கள். சாதாரண வாழ்க்கையில் திருப்தியையும் நிம்மதியையும் ஆனந்தன்,மீனாவின் கணவனானான். துடியாட்டமாகத் திரிந்த நாதன் கண்டியிலுள்ள பணக்கார வீட்டுத் தொடர்பால் “பத்மா“வைக் காதல் மனைவியாக்கிக் கொண்டான்.

வசதிக்கு மேல் வசதிகளைப் பெறவேண்டும் பெருக்க வேண்டு மென்பது நாதன்- பத்மா தம்பதிகளின் எண்ணம். அதனால் எழுதுநர் வேலையை விடுத்து வெளிநாடு சென்றவன் தேடிய பொருட்களோடு ஆனந்தன் வீட்டில் நுழைந்தான். பெரிய பெட்டிகளோடு சில்லுகள் இணைத்த இராட்சத சூட்கேசுகளும் நுழைந்தன.

இராட்சசூட்கேசுகளின் மூடிகளைத் திறக்க உள்ளேபல வகையான விசித்திரமான- விநோதமான சாதனங்கள். நாதன் வெளிநாட்டு அனுபவங்களை விவரித்தான்.

“அங்கை கொஞ்சம் பிஸியான லைவ் எண்டாலும் வசதியான வாழ்க்கை. ஒண்டுக்கும் கஷ்டப்பட வேண்டியதில்லை. ஒவ்வொண்டுக்கும் ஒவ்வொரு மிஷின். சும்மா பட்டனை அமத்தினால் காணும் தானாகவே எல்லா வேலைகளையும் செய்து முடிக்கும்.

ஆனந்தனின் தலை அசைந்தது—“ம்…“

நாதன் ஒரு சிறிய பெட்டியை ஆனந்தனுக்குக் காட்டினான். பெட்டியில் சுடுநீர்ப் போத்தல் ஒன்றின் மத்தியில் மணிக்கூடு பொருத்தப் பட்டிருந்தது. நாதன் சொன்னான்.

“இதிலை சீனியையும் கோப்பித்தூளையும் போட்டுத் தண்ணியை விட்டிட்டு, மணிக்கூட்டை நாலு மணிக்கு-செற்- பண்ணிப்போட்டு படுத் திடுவன். சரியாக நாலு மணிக்கு –கிறிங்…..கிறிங்….-எண்ட சத்தம். எழும்பி னால் இந்த பிளாஸ்கிலை கோப்பி சுடச்சுட ரெடியாக இருக்கும். கோப்பியைக் குடிச்சிட்டு வருவன்“

“சாப்பாடு என்ன மாதிரி ?” – ஆனந்தனின் கேள்வி.

நாதன் அடுத்த பெட்டியைத் திறந்தான். –“இதுக்கு பேர் புட் புறோசர் ( Food Processor). இறைச்சி மரக்கறியளை தானாக வெட்டி அடுத்த பாத்திரத்திலை தட்டி விடும். காஸ் குக்கரிலை வைச்சால் நாலைஞ்சு நிமிஷத்திலை சாப்பாடு ரெடி“

ஆனந்தனின் விழிகள் ஆச்சரியத்தால் விரிந்தன—”ஆ…..”

“அங்கை பார்..“ – நாதனின் கைகள் காட்டிய மூலைக்கு ஆனந்தனின் விழிகள் சென்றன.

நாதன் விவரித்தான்.-“லேட்டஸ்ட் வோஷிங் மிஷின். ஊத்தை உடுப்புகளைப் போட்டு பட்டனைத்தடடி விட்டால் அப்பிடியே வெளியாலை வரும். இதிலை தான் கவனமாக இருக்க வேணும். டக் டக் எண்டு அயன் பண்ணித்தர கட கட எண்டு எடுக்க வேணும் அல்லது உடுப்புகள் சிக்குப் பட்டுப் போகும்.“

ஆனந்தன் தான் போட்டிருந்த சட்டையை ஒரு தடவை பார்த்தான். சாதாரண – அயன் பொக்ஸ்- கூட அவன் வீட்டில் இல்லை.

மீனா உணவு தயாரிப்பதெல்லாம் மண்ணெண்ணை அடுப்பில் தான். அது ஒரு சிறிய சப்புப் பலகையிலான மேசையில் கொலுவீற்றிருந்தது. அதை அடுத்த றாக்கையில் அலுமினியம் செறமிக்ஸ் பொருட்கள் கொஞ்சம்- அதற்கு மேலிருந்த சுவரில் ஒரு சிறு ட்ரான்சிஸ்டர் ரேடியோ- ஆனந்தன் வேலைக்குச் சேர்ந்து சில மாதங்களின் பின் கடன் வாங்கிக் கொள்வனவு செய்தது.

நாதன் கேலியாகச் சிரித்தான்- “நீ இன்னும் அந்தப் பழைய ரேடியோவைக் கைவிட இல்லை ?- ஆனந்தனும் பதிலுக்குச் சிரித்தான். –“ரேடியோ மட்டுமில்லை. இப்பிடி இன்னும் கன பொருட்கள்“

நாதன் அந்தப் பெட்டியைத் திறந்தபடி சொன்னான்- “ இது மல்ரி என்ரரெயினர். –ஆனந்தனின் சந்தேகம்---”அப்படியெண்டால்…

-“ரேடியோ, ரி.வி.டேப் ரெக்கோடர் எல்லாம்“ என்ற வண்ணம் நாதன் ஒரு பட்டனை அமத்தியதும் இனிய பாடல் ஒலிக்க ஆரம்பித்தது.

நாதனின் கேள்வி-“அது சரி உன்னட்டை இதுகள் ஒண்டும் இல்லையா?“

கேள்வி முடியுமுன்னரே பாடலும் தடைப்பட்டது. விளக்குகளும் அணைந்தன.-“கறண்ட் இல்லைப்போலை இருக்கு“ என நாதன் சொல்லு முன்பு ஆனந்தன் சொன்னான்- “நாதன் கறண்ட் இல்லாட்டி மேல் நாட்டுச் சாதனங்கள் ஒண்டுமே இயங்காது. ஆனால் இங்கை –“இதுகள் எல்லாத்தையும் விட ஒரு அற்புதமான சாதனம் ஒண்டு இருக்கு. அது – “ஓல் இன் வண்“  ALL IN ONE அது எல்லாம் செய்யும். கறண்ட் இல்லாவிட்டாலும் தன்ர பாட்டிலை எல்லாம் செய்யும்.

நாதன் ஆச்சரியத்தோடு ஆனந்தன் காட்டிய இடத்தைப் பார்த்தான்.

அந்தச் சாதனம் புட்டு அவிப்பதற்காகக் குழைத்த மாவை உருட்டி புட்டுக் குழலின் உள்ளே போட்டுக் கொண்டிருந்தது.

நாதன் மீண்டும் பார்த்தான்., அந்த “ஓல் இன் வண்” இப்போது வீட்டைத் துப்பரவு செய்ய ஆரம்பித்தது. ஆனந்தனின் புட் புறோசரும், வக்கியும் கிளினரும், வோஷிங் மெசினும் அவன் மனைவி மீனா தான்.

இப்படி இன்னும் எத்தனையோ அலுவல்களைச் செய்யும் விநோதமான சாதனங்கள் இங்கேயும் இருக்கின்றன என்பதை ஆனந்தன் போன்றோர் அறிவர்,.-அறியாமலும் பலர்.

(1993ல் பிரசுரமாகி 2000ம் ஆண்டு வெளியாகிய கல்யாணம் முடித்துப்பார் நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.)

1 comment:

Prem said...

மிக நல்ல சுவாரசியமான பதிவு ஐயா! :) நான் உங்கள் சிஷ்யன், நான் கற்றறிய இன்னும் பல உள்ளது! உங்களின் உள்ளார்ந்தமான கருத்துக்களால் கவரப்படுகின்றேன்... :)