Saturday, June 16, 2012

மாம்பழம் இனிக்கிறது



கொழும்பிலிருந்து விடுதலையில் யாழ்ப்பாணத்துக்குச் செல்லும் 

போதெல்லாம், சிறிது நேரத்துக்குள்ளாகவே அக்கம் பக்கத்து வீட்டுக்காரர் 

பலர் எங்கள் வீட்டுக்குப் படையெடுப்பது வழக்கம்.வேறொன்றுமில்லை-


கொழும்புப் புதினங்கள் அறிந்துகொள்ளலாம் என்ற நோக்கத்தோடு, 

அவர்களது உறவினர்கள் பற்றிய முதல்தர தகவல்களை நேரிடையாகத் 

தெரிந்து கொள்வதுடன் ஏதாவது கொடுத்தனுப்பியிருந்தால் 

பெற்றுகடகொள்ளலாம், ஏதாவது கொடுத்தனுப்ப வேண்டியிருந்தால் 

அதற்குரிய ஒழுங்குகளையும் செய்து கொள்ளலாம்.



வரவேண்டியவர்களெல்லாம் வந்து விட்டார்கள்- செல்வராணி ஒருவரைத் தவிர- வழமையாக முண்டியடித்துக் கொண்டு முதல் வருபவர் வராதது எதுவோ போலிருந்தது. என்னை விட வயது கூடியவராகையால்,“செல்வமக்காவைக் காணயில்லைஎன்று அம்மாவிடம் சொன்னேன்.

அம்மா சொன்னார்- ” தம்பி ! சொல்ல மறந்து போனன். அவவுக்குக் கலியாணம் முடிஞ்சு போச்சு.செல்வமக்கா இப்ப கொழும்பிலை. அது இருந்தாப் போலை தீடீரெண்டு கலியாணம். மாப்பிள்ளை பகுதி மானிப்பாய். ஆக்களும் நல்ல சாதிசனம். கொழும்பிலை கொம்பனி ஒண்டிலை வேலை. குறிப்பும் பொருந்தியிடுத்து.சீதனமும் கனக்கக்கேக்க யில்லை. எல்லாம் சரி வந்தாப் போலை சட்டுப் புட்டெண்டு செய்திட்டினம்….”

அம்மா சொல்லி முடிப்பதற்கு முன்னரே ஒரு இருமல் சத்தம். இருமிக் கொண்டு வந்தவர் செல்வமக்காவின் தாய் சின்னாச்சி.

தம்பி! மகளும் கொழும்பிலை வெள்ளவத்தையிலை தான் இருக்கிறா. காண்றனீங்களோ ?“- “இல்லைஎன்று தலையசைத்தேன்-“ நான் கொட்டாஞ்சேனையிலை இருக்கிறன். கொட்டாஞ்சேனை ஒரு தொங்கல் எண்டால் வெள்ளவத்தை மற்றத் தொங்கல்என்றேன்

அதுக்கென்ன- எல்லாம் கொழும்பு தானே! சந்திக்க வேணு மெண்டால் சந்திக்கலாம் தானே ! உன்னுடைய விலாசமும் வேண்டிக்கொண்டு போனவஎன்றார், எனது தாயார்.

ஆறு நாள் விடுதலை எப்படிப்போன தென்று தெரியவில்லை. இரவு புகையிரதத்தில் மீண்டும் கொழும்புக்குப் புறப்படுவதற்குரிய ஆயத்தங்களைச் செய்தேன்.

தம்பி !”-சின்னாச்சி அழைக்கும் குரல்.

-தொடர்ந்து அறையினுள் நுழைந்த அவரது கையில் ஒரு பார்சல்.

உனக்குத் தெரியும் தானே! செல்வமக்காவுக்கு மாம்பழம் எண்டால் காணும். கறுத்தக்கொழும்பான் மாம்பழம் எண்டால் உயிர். அது தான் ஒரு இருபத்தைஞ்சு பழம் வாங்கினனான். நீயும் அவளைப் பாத்துக் கனநாள். இதிலை அவையின்ரை வெள்ளவத்தை விலாசம் வைச்சிருக்கிறன்“.

சின்னாச்சி கொண்டு வந்த மாம்பழப் பார்சலையும் கொழும்பு கொண்டு போகும் பொருட்களுடன் வைத்தேன்.
மாலை காங்கேசன்துறையிலிருந்து புறப்பட்ட இரவு தபால் புகையிரதம் காலை எட்டு மணிக்குப்பின்பு தான் கொழும்பை வந்தடைந்தது.

அவசரம் அவசரமாகக் கொட்டாஞ்சேனையிலுள்ள கூட்டு விடுதிக்குச் சென்று, உடையை மாற்றிக்கொண்டு அலுவலகம் சென்றேன். விரைந்து சென்றதால் அரைநாள் விடுமுறைக்குப் பதிலாகக் குறுகிய விடுமுறையுடன் கடமைகளையும் கந்தோரையும் சமாளிக்க முடிந்தது.

மாலையில் பிரதான எழுதுநர் தந்த அறிக்கையைத் தயாரித்து செவ்வை பார்க்கும் போது மணி ஐந்தரையாகி விட்டது.

வெள்ளவத்தைக்குச் சென்று செல்வமக்காவுக்கு மாம்பழங்களைக் கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் கூட்டு விடுதியினுள் நுழைந்தபோது கண்ட காட்சி-

வா மைச்சான். வா நீ யாழ்ப்பாணத்திலையிருந்து கொண்டு வந்த மாம்பழம் (Super) சுப்பர் நல்லாயிருக்குதுசந்திரன் மாம் பழத்தைச் சாப்பிட்டுக்கொண்டே பாராட்டுத் தெரிவித்தான்.

இரண்டு சாப்பிட்டன். இன்னும் நாலைஞ்சு சாப்பிட்டால் தான் பொச்சமடங்கும்என்றான் சுந்தரம்

பாலனின் கையிலிருந்த கத்தி மாம்பழத்தை நறுக்கிக் கொண்டிருந்தது. அவனும் கதைக்க ஆரம்பித்தான்.

“உனக்கொரு விஷயம் தெரியுமோ? கொழும்பிலையுள்ள ஆக்களெல்லாம் யாழ்ப்பாணத்தான் தான் நல்ல ருசியெண்டு சொல்லுறவை“

“எப்படி அறைவாசிகளான நண்பர்களுடன் கோபிப்பது?“ என்ற சிந்தனை ஒரு புறம்- மாம்பழத்தைக் கொடுக்காவிட்டால் செல்வமக்கா என்னைப்பற்றி என்ன நினைப்பார்? என்ற சிந்தனை மறு புறம்-

“நடந்ததைச் சொல்லுவம்“ –என்ற எண்ணத்துடன் கொட்டாஞ் சேனையிலிருந்து இரத்மலான நோக்கிப் புறப்பட்ட பஸ்ஸில் சென்று வெள்ளவத்தைச் சந்தையருகே இறங்கிய போது மின்னலென ஒரு சிந்தனை-

“வெள்ளவத்தை சந்தையில் இருபத்தைந்து மாம்பழம் வாங்கி அதையே யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டு வந்தது, எண்டு சொல்லிக் கொடுத்து விட்டால்…..“

பல வகையான மாம்பழங்கள் பார்வையில் பட்டபோது, ஒரு வியாபாரி குவித்து வைத்திருந்த பொலிவான பழங்களுக்கு முன்பாக நான்கைந்து பேர் விலை கேட்பதையும் பார்த்து, அவர்களோடு நானும் சேர்ந்து கொண்டேன்.

“மாத்யா- இந்த மாதிரி மாம்பழம் நீங்க சாப்பிட்டு இல்லே- மிச்சம் ருசி—கறுத்த கொழும்புதானே!“-வியாபாரிக்கு வெற்றி.மூவர் ஆளுக்குப் பத்து மாம்பழம் வீதம் வாங்கினார்கள். உயரமான சிவப்பு நிறமானவரும் நானும் இருபத்தைந்து மாம்பழங்களாக வாங்கிக்கொண்டோம்.

என் மனதில் “எதுவோ பெரிய சாதனை புரிந்துவிட்டேன்“ என்ற நினைப்பு. வழமையான சாதனை புரிந்ததாக உணர்ந்தால் உடனடியாக ஒரு சிகரட் ஊதி அதைக் கொண்டாடுவேன்.

அருகிலிருந்த கடையில் புகுந்து சிகரெட் பற்றவைத்தபோது, “சா…. நான் சிகரெட் குடிக்கிறது செல்வமக்காவுக்குத் தெரியாது. தெரிஞ்சால் என்ன நினைப்பார் ?“ என்ற எண்ணத்தால் கடையில் வைத்தே முழு சிகரெட்டையும் உறிஞ்சி வாயைக் கழுவியபின் , செல்வமக்கா வீட்டுக்குச் சென்று வாசலில் பொருத்தப்பட்டிருந்த அழைப்புமணியை அமத்தினேன்.

செல்வமக்காவே கதவைத்திறந்து உள்ளே அழைத்தச் சென்றார்.

“ என்னக்கா சொல்லாமல் கொள்ளாமல் கலியாணம் முடிச்சிட்டிங்க ? அவர் எங்கை வேலை செய்யிறார் ?“
“அது தம்பி- கொமர்சல் கொம்பனியிலை வேலை செய்யிறார். பாத் ரூமிலை குளிச்சுக் கொண்டிருக்கிறார். இருங்கோ….என்ன குடிக்கிறீர் ?”

வெள்ளவத்தை சந்தையில் வாங்கிய மாம்பழப் பார்சலை ஒப்படைத்தேன்—“சின்னாச்சியம்மா தந்து விட்டவ. கறுத்தக் கொழும்பான் மாம்பழம்“

சமையலறைக்கச் சென்று தேநீர் கோப்பையுடன் திரும்பிய செல்வமக்கா சொன்னார்-

“என்ன இருந்தாலும் எங்கடை ஊர் மாம்பழம் நல்ல ருசிதான். ஊரிலையிருந்து நீர் கொண்டு வந்த மாம்பழம் நல்லாக இனிக்குது. இவரும் இண்டைக்கு மாக்கற்றிலை வாங்கிக் கொண்டு வந்தவர். அது அவ்வளவு சரியில்லை…“செல்வமக்கா சொல்லிக் கொண்டிருக்கும் போதே, குளியலறையிலிருந்து தலையைத் துடைத்த வண்ணம் வந்த செல்வமக்காவின் கணவர், “ஹலோ “ என்றார். நானும் “ஹலோ் என்றேன்.

நாங்கள் ஒருவரையொருவர் மாறி மாறி ஆச்சரியத்துடன் பார்த்தபோது- செல்வமக்கா என்னை அறிமுகஞ் செய்து வைத்தார்.

“ஊரிலை இவரும் எங்கடை வீட்டுக்குக் கொஞ்சம் தள்ளி இருக்கிறவர். லீவிலை யாழ்ப்பாணம் போனாப்போலை அம்மா மாம்பழம் குடுத்து விடடவ. கொண்டு வந்தவர். மாம்பழம் நல்ல இனிப்பு.

-செல்வக்காவின் கணவர் மிகவும் ஆச்சரியத்தோடு என்னைப்பார்த்தார்.

வெள்ளவத்தையில் நான் மாம்பழம் வாங்கச்சென்ற போது, வியாபாரியுடன் விலைபேசி இருபத்தைந்து மாம்பழம் வாங்கிய உயரமான சிவப்புநிற மனிதர் வேறு யாருமல்ல—செல்வமக்காவின் கணவர் தான்.

ஆனால் அவர் வாங்கின மாம்பழத்தைவிட நான் வாங்கிய மாம்பழம் இனிக்கிறது என்று செல்வமக்கா சொல்வதற்கான காரணம்- அவை யாழ்ப்பாணதிலிருந்து கொண்டு வந்தது என்ற நம்பிக்கையால் ஏற்பட்ட கருத்தாகவும் இருக்கலாம்.

செல்வமக்காவின் கணவர் வாய்விடடுப் பெரிதாகச் சிரித்தார்- “உமக்கு விஷயம் தெரியாதப்பா- வெள்ளவத்தை மாக்கற்றிலை நான் மாம்பழம் வாங்கின இடத்திலை தான் இவரும் வாங்கிக்கொண்டு நிண்டவர். அந்த மாம்பழம் இனிக்குதோ?“

நான் கொடுத்த மாம்பழம் இனிக்கிறதென்று செல்வமக்கா சொன்னது பொய்யா ? அல்லது யாழ்ப்பாணதிலிருந்து தான் நான் கொண்டு வந்த மாம்பழம் என்று சொன்னது பொய்யா?

1968ல் பிரசுரமாகி 2000ம் ஆண்டு வெளியாகிய “கல்யாணம் முடித்துப்பார்“ நூலிலும் சேர்க்கப்பட்டிருந்தது.

3 comments:

Prem said...

வாசிக்கும் போதே மாம்பழத்தை ருசித்துவிட்டேன்! :)
நல்ல பதிவு ஐயா :)

உடுவை எஸ். தில்லைநடராசா said...

நன்றி. உடுவை

சிவத்தமிழோன் said...

மாம்பழத்தில் சிவகுடும்பத்தில் பிரச்சினை வந்தது தெரியும்......மாம்பழத்தினால் 'பொய்' க்குரிய பொருளுக்கு பிரச்சினை வந்தது புதுசு.

நகைச்சுவை உணர்வுடன் அருமையான கருத்தொன்றை வாசகர்களுக்கு ஊட்டியுள்ளீர்கள்!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாது ஒன்றும்
தீமை இலாத செயல் என்பது குறள். ஆக இரண்டு பொய்களுமே வாய்மைதான் :)

கண்டதுக்கும் விடுமுறை என்ற சோம்பல்பிடித்த நம் இளையோர்களுக்கு பயணக்களைப்பையும் பொறுப்படுத்தாது பணிக்கு செல்லும் மாண்பை உணர்த்தியுள்ளீர்கள்.

தங்கள் தமிழ்ப்பணியும் சமூகப்பணியும் மேலும் மேலும் சிறப்புற; அவற்றால் நம் சமூகம் நிறைவான பயனைப்பெற்றிட எல்லாம் வல்ல கௌரியம்மை உடனாய திருக்கேதீச்சரத்தானின் திருவருள் துணைநிற்க வேண்டுகிறேன்.

சிறியேனின் வாழ்த்துகள் ஐயா