Saturday, June 2, 2012

”எப்படிச் சுகம்..........?”


நாள் தோறும் நாம் சந்திப்பவர்களுள் சிலர் நமக்கு நெருக்கமானவர்வர்கள்., வேண்டியவர்கள். அவர்களுடன் தொடர்புகளைப் பேண விரும்புகின்றோம்.

சில நாடுகளில் சிலர் Good Morning" சொல்லி உரையாடலை ஆரம்பிப்பதும் தொடர்பைப் பேணுவதும் வழக்கம் .அதற்குச் சமமான வணக்கம் என்ற சொல்லை நம்மவர் சிலர் பயன்படுத்தினாலும்-யாழ்ப்பாணப்பகுதிகளில் சிறுவயது முதல் என்னால் அவதானிக்க முடிந்த ஆரம்பவார்த்தை எப்படிச்சுகம்?”

எப்படிச்சுகம்?” -உறவு முறைகளைப் பொறுத்து பழகும் முறைகளை யொட்டி -அண்ணை எப்படிச் சுகம்” -”தம்பி எப்படியடா?”  -”மச்சான் எப்படிச் சுகமே?”  எனத் தொடரும்.

பெற்றோரும் பிள்ளைகளும் ஓரே இல்லத்தில் வாழும்போது சம்பிரதாய சுகவிசாரிப்புகளுக்கு இடமில்லாத போதும்-தொலைவிலிருந்து தொடர்பு கொள்ளும் போது- நீண்ட நாட்களுக்குப் பின் தொடர்பு கொள்ளும் போது-சுகம் விசாரிப்பார். கடிதங்கள் ஆரம்பிக்கும் போது கூட-

-”சுகம், சுகமாயிருக்க. கடவுள் கிருபை புரிவாராக

-”சுகம், சுகம் எப்படி?” என வார்த்தைகள் வளர்ந்து சென்றதைப் பார்த்திருக்கின்றேன்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்

-”சுகம் எப்படி ?” என விசாரிக்கின்ற போது ஏறக்குறைய எல்லோரும் நல்ல சுகம்” – ”எனக்கென்ன குறை” – ”கடவுள் புண்ணியத்திலை நல்லாய் இருக்கிறேன்என சிரித்துக்கொண்டே சொல்லியதைக் கேட்டிருக்கின்றேன்.

நன்றாக இருந்தார்கள் ! நலமாக வாழ்ந்தார்கள் !! அத்தியாவசியத்தேவைகளை அவர்களின் சொந்தக் கிராமங்களில் பெறக்கூடியதாக இருந்தது. கோடு (Courts) கச்சேரி, பொலிஸ், ஆசுப்பத்திரி என செல்வோர் எண்ணிக்கை குறைவு. ஆக…….ஆக……அந்த நா ள் வாழ்வு ஆனந்தமான வாழ்வு.


   
யிர் வாழ்வுக்கு உணவு தேவை. கிராமத்துச் சந்தைகளில் கடைகளில் அரிசி முதல் மரக்கறி பழ வகைகள் உட்பட மீன் இறைச்சி வாங்கக்கூடியதாக இருந்தது. சில வேளை சிறிது தரம் குறைந் தாலும் கல் குறுணல் இருந்தாலும் வாரந்தோறும் கூப்பன் அரிசி இலவசமாகமலிவாகக் கிடைத்தது. அது தவிர பணக்கார விருந்துகளில் பரிமாறப்படும்பாசுமதிஅரிசியை விட சிறப்பான ஊர் அரிசி கைக்குத்து அரிசிபச்சை அரிசிமொட்டைக் கறுப்பன் எனப் பிடித்தமான அரிசி வகைகள் பல.

பாணும் பணிசும் உத்தியோகத்தர்களின்மாணவர்களின் அவசர உணவாக இருந்த போதிலும் தட்டுப்பாடோ கட்டுப்பாடோ இருக்கவில்லை.

உள்ளுர் மரக்கறிகள் ஏராளம் ! ஏராளம் !! மட்டுவில் கத்தரிக்காய், நீர்வேலி வாழைக்குலை, அச்சு வேலி மரவள்ளி என ஒவ்வொரு மரக்கறிகள் ஊர்களுக்கும் மௌசைக் கொடுத்தது. இரவும் பகலும் அச்சமின்றி வாகனங்கள் வீதிகளில் உருண்டதால் சுன்னாகம், கொடிகாமம், சாவக்கச்சேரி, அச்சுவேலி ஆவரங்கால் சந்தைகளைச் சென்றடைவதில் சிரமம் இருக்கவில்லை. நம்மவர்கள் உடன்மீன் உருசித்தவர்கள்., விளையும் பாரையும் நிலவற்ற காலம் பார்த்து சதைப்பிடிப்பான நண்டும் இறாலும் சுவைத்துச் சுவைத்துச் சாப்பிட்டவர்கள்

சனிக்கிழமை என்றால் எண்ணெய் முழுக்கும் கோடிப் பக்கத்தில் கோழி வெட்டும், இரத்தம் சொட்டும் ஆட்டிறைச்சிப் பங்கும் ஓடிப் பிடித்தக் கொண்டு வரும் உடும்பு இறைச்சியும் மறக்கக் கூடியவையா ?

ஆச்சிமாரும் அம்மாமாரும் சுவையாக தந்த பால்பிட்டு, பாலப்பம், சட்டி அப்பம், இராசவள்ளிக் கிழங்கு, மரவள்ளிக்கிழங்கும் சம்பலும், கோழிப்புக்கை, நெத்தலிப்பொரியல், உருளைக் கிழங்குப் பிரட்டல், மசிய வைத்த கீரை, சீனியும் தேங்காய்த்துருவலும் சேர்த்து புளுக்கொடியல் மாவில் செய்த உருண்டை, எள்ளுருண்டை, பருத்தித்துறை தட்டை வடை, பனாட்டும் பழங்கஞ்சியும்விழாக்கால விருந்துகளில் பரிமாறப்பட்ட சிப்பி, முறுக்கு, பயிற்றம் பணியாரம், பால் ரொட்டி, அரிய தரம் எல்லாம் ஆடம்பர ஹோட்டல் உணவுகளை விட எவ்வளவு சுவை என ருசித்துப் பார்த்தவர் களுக்குத் தான் தெரியும். வருடம் முழுவதும் கிடைக்கும் வாழைப்பழம், பப்பாசிப்பழம், பருவ காலத்து மாம்பழம், பலாப்பழம் இன்று நினைத்தாலும் நாவினிக்கும். வயிற்றுள் எதுவோ வழுக்கிக் கொண்டு போவது போல ஒரு சுகமான- சுவையான அனுபவ நினைவு.

லொறிகளும் புகையிரதமும் சுமந்து வரும் மலைநாட்டு மரக்கறிகளான கரட், பீற்றூட், லீக்ஸ்……தென் னிலங்கைப் பழங்களான அன்னாசி, றம்புட்டான், மங்குஸ்தான் – ”எங்கள் மண்ணில் விளைந்தது ”- என்ற பெருமிதத்துடன் சுவைத்த முந்திரியப்பழம்இவை மட்டுமா ?

சிறு வயதில் வீட்டுக்குத் தெரிந்தும் தெரியாமலும் தின்று மகிழ்ந்த அன்னா புன்னா, அணிஞ்சில், இலந்தைப்பழம், முதலிப்பழம், நாவல் பழம், ஈச்சம் பழம், பன்னைப்பழம்……இப்படி எத்தனை யெத்தனை ?

உணவுக்கடுத்து உடையென்றால் அவசரக் கொள்வனவுக்கு நடைதூரத்தில் ஒரு புடவைக்கடை அமைந்திருக்கும். நாகரீகமான உடைமோஸ்தர்” ”பாஷன்என்று சொன்னால் யாழ்ப்பாண நகரக்கடைகளுக்குப் போய் வருவது சிரமமல்ல. உணவு, உடையை அடுத்து உறைவிடம் பெரும் பாலான நிலப்பரப்பு சமதரை ஆனதால் வதிவிடம் அமைக்க வாய்ப்பான நிலம் நம்முடையது.

ஒரு காலத்தில் மண்ணால் வீடு கட்டி, மாட்டுச்சாணத்தால் நிலம் மெழுகி, செம்மண்ணால் சுவர் எழுப்பி சுண்ணாம்பு தீற்றி, பெரும்பாலும் பனையோலைகளாலும் சில இடங்களில் தென்னோலைகளாலும் வேயப்பட்ட வீடுகள். இவை வெப்பவலயத்துக்குப் பொருத்தமான குடிமனைகள். பல காரணங்களுக்காக வீட்டுக்கருகே ஆனால் வேறாக அமைக்கப் பட்டகுசினிஎன்று சொல்லப்படும் சமையலறைகள், களஞ்சிய அறைகள்.

காலப்போக்கில் மண்வீடுகள் பல கல் வீடுகளாக மாறின. காங்கேசன்துறை சீமேந்து நல்ல தரமானது. அது வட பகுதியில் மற்ற இடங்களைவிடக் குறைவான விலையில் கிடைத்தது. மணலும் மலிவு. பனை மரங்கள் வளை மரங்களாக…. கிளிநொச்சியை அடுத்த பகுதிகளிலிருந்து பாலை, முதிரை, தேக்கு மரங்கள் நிலையாக- கதவாக யன்னலாக தீராந்திகளாக உரு மாறியது. பருத்தித்துறை துறைமுகத்துக்கு இந்தியாவிலிருந்து கப்பலில் வந்திறங்கிய ஓடுகள் வடபகுதிக் கூரைகளில் ஏறின.

இயற்கையான சூழல் ரம்மியமாகவும் இதமாகவும் இருந்தது. சுமார் 10 வருடங்களுக்கு முன்பு அதிகாலைப் பொழுது சிங்கப்புர் விமான நிலையத்தில் இறங்கியபோது, விமான நிலையத்தில் பயணிகள் தங்குமிடத்தில் ஓரழகான மலர்தோட்டம்- பறவைகள், குருவிகள் கத்தும் சத்தம்வண்டுகள் ரீங்காரமிடும் ஒலி. விசாரித்துப்பார்த்த போது பெருமளவு பணச்செலவில் அமைக்கப்பட்ட செயற்கை ஏற்பாடுகள் என அறிந்து கொண்டேன். ஆனால் எங்கள் பிறந்த மண்ணில் இயற்கையாகவே இத்தனை இன்பமும் பணச்செலவின்றி அனுபத்ததை தந்த நாட்கள் நெஞ்சில் நிழலாடின.

பக்தியைப் பெருக்கி நம்பிக்கை வளர்த்த கோவில்கள், அறிவைப் பெருக்கி வாழ்வுக்கு வழிகாட்டிய கல்லூரிகள், இவற்றுடன் மணல் வெளியிலும் வயல்வெளியிலும் பார்த்து மகிழ்ந்த இராத்திரி திருவிழாக்கள், கெந்தித்தொடுதல், கிட்டியடித்தல், கிளித்தட்டு, வாரோட்டம், கெற்றப்போல் என மாணவப் பருவத்து விளையாட்டுகளும் தைமாதத்தில் வண்ண வண்ணப் பட்டங்கள் கட்டிப் பறக்க விட்டதும் மனத்திரையில் படமாக ஓடி மகிழ்வைத் தந்தன.

மத்தியான வேளை வெப்பம் சற்று அதிகமானாலும் நிழல் தரும் மரங்கள் நிம்மதி தரும்.

காலைநேரத்தில் ஆலய மணியோசை, தொடரும் தீபராதனை ஒளி ஒலி, வண்டில் சத்தம், வயல் தோட்டம் நோக்கி விரைவோர் கல்லூரி செல்லும் மாணவர் என புத்துணர்வே எங்கும் நிறைந்திருக்கும்.

மாலைப்பொழுதும் இரவும் இன்பமாக கழிந்த நாட்கள் அந்த நாட்கள். பேய் பிசாசுக்குக்குக் கூட பயப்படாத நாட்கள்.

ஒரு சம்பவம்

கிராமத்தின் ஒரு புறம் அண்ணன். அவன் தங்கை திருமணத்தின் பின் கிராமத்தின் மறுபுறத்தில் கணவனுடன் குடித்தனம். அண்ணனுக்கோ தங்கையைப் பாராமல் இருக்க முடியாது. காலையும் மாலையும் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்கொரு தரமாவது சென்றுஎப்படித் தங்கைச்சி ?” என்று கேட்டு வராவிட்டால் அண்ணாவுக்கு தலை வெடித்து விடும்.

தீடீரென்று சிறு பிள்ளைகள் உருவாக்கிய சம்பவத்தால் அண்ணாவுக்கும் தங்கைக்கும் மனஸ்தாபம். இருவரும் கதைப்பதில்லை. கோபம். ஆனாலும் வழக்கம் போல அண்ணன் கிராமத்தின் மறுபுறத் திலிருந்து தங்கையின் வீட்டுப்படலை வரை சென்று வீட்டைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் திரும்பி விடுவார். இரத்த உறவு எத்தனை நாளைக்கு பேசாமல்- கதைக்காமல் அமைதியாக இருக்கும்.

ஒரு நாள்வாங்கோ அண்ணை ! எப்படிச் சுகம் ?” தங்கை கேட்டாள்.

தங்கச்சி நான் நல்ல சுகம்- உன்ர பாடு எப்படி ?” அண்ணாவின் விசாரிப்பு தொடர்ந்து குடும்பத்தில் மீண்டும் உறவு தொடர்கதையாகியது. இப்படி வளர்ந்தவர்களின் வாரிசுகள் இன்றைய நிலையால் பிற நாடுகளில் இரண்டு மூன்று அறைகள் கொண்ட சிறு வீட்டில் வாழ்வு. கணவனும் வேலை., மனைவியும் வேலை. ஓர் அறையில் வாழும் கணவன்-மனைவியும் இடையிடையே தான் சந்திப்பார்கள்.

வீட்டின் கதவிலோ அல்லது குளிர்சாதனப் பெட்டிக் கதவிலோ கணவன்- மனைவியின் போக்குவரத்துகள் அவசியம் செய்ய வேண்டியவை STICKER ஆக ஒட்டப் பட்டிருக்கும்.வேலைக்குப் போகாத பெண்கள்  என்றால் குளிரைச்சமாளிக்க கையுறை காலுறை ஓவர்கோட் எல்லாம் போட்டுக்கொண்டு தொலைக்காட்சியில் வீடியோ சுகம் காண்பார்கள். பெண்களின் கண்களில் நீரை வரவழைப்பதற்கென்றே தயாராகும் மெகா சீரியல்கள்.

ஊரில் எண்பது வயதிலும்அசுக்கிறிமும்” ”அசுப்பழமும் கடித்துத்தின்று ஆரோக்கியமாக வாழ்ந்தவர்கள்- ஆச்சியும் தாத்தாவும்.  தாத்தாவுக்கும் ஆச்சிக்கும் ஐஸ் ICE என்று சொல்ல வராது.

பிற நாட்டில் நாற்பது வயதில் சொல்ல முடியாத வருத்தங்களுக்கு ஊசியும் மாத்திரைகளும் வாங்குகின்றார்கள்

எப்படிச்சுகம் ?”

அன்று எல்லாவற்றிலும்  சுகம் கண்டோம்

இன்று எந்த சுகமும் இல்லை

பணமுண்டுசொத்துப்பத்துண்டுநூதனமான சாதனங்கள் பல உண்டு.

எப்படிச் சுகம் ?

உடுவை.எஸ்.தில்லைநடராசா

““““ 2008ல் காலமான நண்பர் வீ.கதிரிப்பிள்ளையின் நினைவு மலருக்கு எழுதியது. அவரும் அடிக்கடி பயன் படுத்திய வார்த்தை-எப்படிச் சுகம்