Thursday, November 29, 2007

இப்படியுமொரு காலம் இருந்ததே தெரியுமா?



பொதுவாக சம்பவங்களைக் குறிப்பிடும்போது கூடவே காலத்தையும் குறிப்பிடுவது வழக்கம். சில வேளைகளில் கி.மு- கி.பி.என்றும் நூற்றறாண்டு எனவும் குறிப்பிடுவதும் உண்டு. நான் தெரிவிக்கும் சம்பவங்கள் நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்த சங்கதியல்ல கடந்த வருடம். அதற்கு முந்திய வருடம் என்று சொல்ல முடியாவிட்டாலும் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் என்று சொல்லலாம்.

ஆம்

அண்மையில் நடைபெற்ற தேர்தலையடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் வடபகுதிக்கும் வன்னிக்கும் அத்தியாவசியப் பொருட்ககளை அனுப்பவும் பாதைத்தடைகளை அகற்றவும், தரை வழிப்பாதையைத் திறக்கவும் நடவடிக்கை எடுப்பதுபற்றிப் பேசப்படுகிறதல்லவா?

1977 இலும் ஒரு தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மக்களுக்கு அறிமுகமான வசதியான விடயங்களில் சொகுசு பஸ் வண்டிச் சேவையும் ஒன்று. குறிப்பாக நாட்டின் தலைநகரான கொழும்புக்கும் இடையே புகையிரதமே பிரதானமான போக்குவரத்துச் சாதனமாக இருந்தது. ஆனால் பணவசதிபடைத்தவர்களுக்குக்கும் நேரத்தை மிக முக்கியயமாகக் கருதியவர்களுக்கும் சொகுசு பஸ் வண்டிகள் பயணத்தை எளிதாக்கின.

கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் இருப்பிடங்களில் இரவுச்சாப்பாட்டை முடித்துக் கொண்டு சொகுசு பஸ் வணண்டியில் அமர்வார்கள். இருக்கையோடு இணைத்துள்ள விசையை அழுத்தினால் அவை சாய்மனைக்கதிரையாக கட்டிலாக மாறி களைப்பே தெரியாத பயணமாக மாறிவிடும்.

குளிரூட்டி உடலுக்கு இதமளிக்கும். ஒலிபெருக்கி பாடலிசைக்கும். தொலைக்காட்சியில் ஓரிரு சினிமாப்படங்களையும் பார்க்கும் வசதி. புறக்கோட்டை அல்லது யாழ்ப்பாணம் பஸ்நிலையம் சென்று தான் ஆசனம் பிடிக்க வேண்டுமென்பதில்லை. முன் கூட்டியே ஆசனப்பதிவு இதர ஒழுக்கு செய்யும் போது வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி , பருத்தித்துறை, காங்கேசன்துறை, கொடிகாமத்திலிருந்து பிரயாணம் செயக்கூடிய வசதியும் இருந்தது. அந்தக்காலம் அப்படியொன்றும் அதிக தூரதத்தில் இருக்கவில்லை.

1967ஆம் ஆண்டு கொழும்பில் வேலைகிடைத்தது. அப்படியொன்றும் பெரிய வேலை யல்ல . எழுதுவினைஞர் வேலை . எண்பது ரூபா சம்பளம். வாழ்க்கைப்படி, விசேடபடி என்று பல படிகளைச் சம்பளத்தோடு சேர்த்துத் தந்தாலும் மொத்த வருமானம் 200 ரூபாவுக்கும் குறைவானதே! அதில் அப்படி இப்படி கழிவு போக நூற்றுமுப்பது அளவில் கைக்கு வரும் சம்பளம் வாங்கிய உடனே பெரிய தபால் அலுவலகத்தில் கிய+வரிசையில் நிற்க ஐம்பது ரூபா மணி ஓடராக மாறி யாழ்ப்பாணம் சென்றுவிடும்.

‘சமரி’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கூட்டுவிடுதி வாழ்க்கை. அவ்விடுதியில் நான்கு பேர் தங்கும் அறைக்கு மாத வாடகை நூற்று ரூபா. அதில் என் பங்கு இருபத்தைது ரூபா. மிகுதியில் மறுமாத சம்பளம் வரை உணவு உட்பட சகலதுக்குமாக சரியாகத்திட்டமிட்டாலும் சம்பளத்துக்கு ஒன்றிரண்டு நாட்கள் முன் சட்டைப்பையையும் வயிற்றையும் மாறிமாறித்தடவும் வாழ்க்கை தான். அப்போதுதெல்லாம் சனிக்கிழமைகளிலும் ஒரு மணிவரை அலுவலகத்தில் இருக்க வேண்டும். இருபத்திமூன்றாம் திகதியன்று ஒருசனிக்கிழமை அலுவலகத்திலுருந்து புறப்பட்டு மதிய உணவு என்ற பெயரில் சிலவற்றை உள்ளே தள்ளிக்கொண்டு கொட்டாஞ்சேனையில் தங்கியிருந்த அறைக்குச் சென்றேன்.

கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு பஸ் கட்டணம் ஐந்து சதம் தான் ஆனாலும் அதை பிடிச்சம் பிடிக்க சில நாட்களில் நடந்து போவுது வழக்கம். அந்த சனிக்கிழமை நடந்து சென்றபோது சட்டைப்பைக்குள் விரல்களை விட்டு சில்லறைகளைத் தடவியபோது ஒருவித திருப்தி.

ஐம்பது ஒன்று. இருப்த்தைந்து இரண்டு, நாலு பத்து எல்லாமாக ஒரு ரூபா நாற்பது சதம். திங்கட்கிழமை வரையும் சமாளிக்கலாம். திங்கட்கிழமை சம்பளம் வந்து விடும் இப்பபோய் நடந்த களைப்பு தீர நல்லாக நித்திரை கொள்ளவேண்டும்.

அறைக்கதவில் ஒரு தந்தி செருகப்பட்டிருந்தது. எடுத்து பிரித்தேன். அன்று காலை பத்து மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து தந்தையார் அனுப்பியிருந்த தந்திதான் அது. இலங்கையில் தந்திகள் தபால் கந்தோரில் ஒப்படைக்கப்பட்ட நேரத்தில் சில மணி நேரத்தில் சரியான விலாசங்களைச் சென்றடைந்த காலம் என ஒன்றிருந்து.

யாழ்ப்பாணத்தில் காலை பத்து மணிக்கு ஒப்படைத்த தந்தி கடமையுணர்ச்சியிள்ள உத்தியோகத்தர்களால் நான் தங்கியிருந்த அறை வரை வந்த நானில்லாத வேளையிலும் யாரோ ஒருவரால் பொறுப்பு ஏற்கப்பட்டு அறை கதவில் அழகாகச் செருகப்பட்டிருந்தது.

தந்தியை பிரித்துப்படித்த போது தடுமாறி விட்டேன் ‘’ அம்மாவுக்கு சுகமில்லை. உடனே வரவும் -அப்பா’’ தந்தியைப்படித்ததும் எல்லாவற்றையும் மறந்தேன். ஒரே கவலையாக இருந்தது. சட்டையைக் கழற்றி ஆணியில் கொழுவி விட்டு கட்டிலில் படுத்துகொண்டு கூரையைப் பாரத்த வண்ணம் யோசித்தேன்.

‘’ அறிவு தெரிந்த பருவம் முதல் என்னை ஆளாக்கிய அம்மாவின் தியாக உணர்வுகள், செம்மையான வழிகாட்டுதல்கள், அன்பான அரவணைப்புகள், அடிப்பது போலக்கடித்தது இலாவமாகத் தன்வழிப்படுத்தி திருந்த வைக்கும் திறன்’’

‘’அவசரமில்லாவிட்டால் அப்பா தந்தியடித்திருக்கமாட்டார்’’

‘’கந்தோர் நாளென்றால் இலவச புகையிரத ஆணைச்சீட்டு எடுத்திருக்கலாம். சிறிதளவு பணம் இருந்தாலும் சமாளிக்கலாம்’’
‘’டக்டக், டக்டக்’’தடதடவென்று அறைக்கதவைத்தட்டிய வண்ணம் அடுத்த அறை வாசி சிங்கம் உள்ளே நுழைத்தார். அவர் வந்த பரபரப்பில் என்ன யோசித்தேன் என்பதையும் மறந்து விட்டேன்.

‘’நடா காரொண்டு மன்னாரக்குப் போகுது. நான் அதிலை ஊருக்குப் போறன். வர ஒரு கிழமையாகும். இந்த வாடகைக்காசை டலிமா மாஸ்டரிடம் கொடு’’ சொல்லிய வண்ணம் எனது கையில் இருபத்தைந்து ரூபாவை வைத்தவர் எனது பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அறையிலிருந்து வெளியேறினார். அறைக்கு வெளியே கார் புறப்படும் ஒசை கேட்டது. மன்னார் வங்காலையைச் சேர்ந்த சிங்கம் எனது அடுத்த அறையில் தங்கியிருந்தார். அவர் தந்த இருபத்தைந்து ரூபாவை பலதடவை மாறி மாறிப் பாரத்தேன். ஆச்சரியம்! மகிழ்ச்சி’’

இன்று இரண்டு மூன்று இலட்சம் ரூபாவை யாராவது சும்மா தந்தால் கூட அன்றைய மகிழ்ச்சி வருமா என்பது சந்தேகம் தான்!

மணிக்கூமட்டைப் பார்த்தேன். மாலை ஆறு மணி கடந்து ஐந்து நிமிடம். அவசரம் அவசரமாக சட்டையை மாட்டினேன். காரம் துவாய் வேறு தேவைப்படுமா தேவைப்படாதா என்று எண்ணாமல் சில பொருட்கள் சிறிய பையில் திணிப்பு.

நாலு வாரத்தைகள் கடதாசியில் ‘’யாழ்ப்பாணம் அவசரமாகப்போறன் - நடா’’ என்று கிறுக்கி அதனைக் கதவிடுக்கில் செருகி வைத்து விட்டு ஓட்டமும் நடையுமாக கொட்டாஞ்சேனை பஸ் நிலையம்.கோட்டை புகையிரத நிலையத்தில் பத்து ரூபா நோட்டை டிக்கட் பெறும் கவுண்டரில் வைத்தேன். யாழ்ப்பாணம் செல்வதற்க்கான டிக்கட்டும் பத்துசதம் சில்லறையும் எனக்கு கிடைத்தது.

இரவு 7.15 மணிக்குப் புறப்பட்ட புகையிரதம் காலை 6மணிக்கு முன்பாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. ஆனாலும் அது சில இடங்களில் மெதுவாகச் செல்லும் போதும் நேரெதிரே வரும் மற்றொரு புகையிரதத்துக்கு வழிவிடுவதற்காக நின்ற போதும் வயதான பிரயாணிகள். ‘’இந்த யாழ்ப்பாணமெயில் இப்படித்தான் சரியான சிலோ உவன் ட்ரைவர சரியில்லை. ஒரு பிடி பிடிச்சுக் கொண்டு போயிருக்கலாம். ஓவர் ரைம் எடுக்கின்றதுக்காகச் சிலோவாகப் போறன் ‘’ என சாரதியையும் புகையிர திணைக்களத்தையும் திட்டித் தீர்த்தார்கள்.

நான் வயது அனுபவமும் குறைந்தவனாக இருந்தால் யாரையும் ஏசவில்லை. ஒருவேளை வளர்ந்த பின் வயதானபின் இன்னும் அந்த புகையிரதத்தில் பிரயாணம் செய்ய சந்தர்ப்பம் கிடைத்திந்தால் அவர்களைப் போல் திட்டியிருப்பேனோ என்னவோ?

யாழ்ப்பாணத்தில் தந்தையார் வேலை செய்யத கடைக்குச் சென்றேன்.

‘’ தம்பி!’’ என்னை கண்டதும் அப்பா சிரித்தாரா? அம்மாவை எண்ணி அழுதாரா? அவரை கேடக வேண்டும். தந்தையார் சொன்னபடி யாழ். பெரியாஸ்பத்திரி சென்று காவலாளியை கெஞ்சி ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து அம்மாவைப் பார்த்தபோது தான் நிம்மதி. என்னை பார்த்தும் அம்மாவுக்கு அரைவாசி வருத்தம் மாறி விட்டது போலும். நன்றாகச் சிரித்தார். நானும் சிரித்தேன்.

நாங்கள் சிரிப்பதைக் கண்டு பொறாமைப்பட்ட நேர்ஸ் ‘’டொக்டர் வாறார்!’’ என்றபடி என்னை விரட்டி வெளியே அனுப்பி விட்டார்.

காவலாளியின் கருணையோடு களவாக ஆஸ்பத்திக்குள் நுழைந்து அம்மாவைப் பாரத்த கதையை அப்பாவிடம் சொன்னேன். பின்னர் மத்தியானம் பன்னிரெண்டு மணிமுதல் ஒரு மணிவரை அம்மாவின் அருகிலேயே நின்றேன்.

அம்மா என் மீது மட்டும்தான் பாசமென்றிமில்லை- ‘’ தம்பி வந்தனி தங்கச்சி தம்பியையும் பார்த்து ஆறுதல் சொல்லிப் போட்டுவா’’

அம்மாக்கு வந்த சாப்பாட்டில் ஒரு பகுதியைச் சாப்பிட்டு விட்டு யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் ஒரு பிஸ்கட் பெட்டியை வாங்கி கொண்டு சொந்தக் கிராமாகிய உடுப்பிட்டிக்குக் சென்றேன்.

தம்பி தங்கைக்கு ஆறுதல் சொல்லி விட்டு மீண்டும் பஸ்ஸில் யாழ்ப்பாணம் புறப்பட்டேன். அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து பதினைந்து மைல் தொலைவிலுள்ள உடுப்பிட்டிக்கு சென்று திரும்ப இரண்டு மணித்தியால நேரமும் ஒரு ரூபா பத்து சதமும் போதும். ஏனென்றால் இடையிடையே சோதனை முகாம்களும் வீதித்தடைகளும் இல்லை. அறுபது சதம் கொடுத்தால் ஐந்து சதம் கொடுத்தால் ஐந்து சதம் மிகுதி தரக்கூடிய பஸ் நடத்துநர்களும் சேவையிலிருந்தார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மீண்டும் ஆஸ்பத்திரியில் நுழைந்தேன். அப்பாவும் வந்திருந்தார். அம்மாவுக்கு மத்தியானம் இருந்ததைவிட நல்ல சுகம். அம்மாவின் கேள்வியா அல்லது வேண்டுகோளா?

‘’தம்பி இரண்டு மூண்டு நாளைக்கு நிண்டு போனாலென்ன?’’

‘’தந்தி கிடைத்தவுடனே வந்தவன். லீவும் எடுக்கயில்லை. போகாவிட்டால் வேலையாலை நிப்பாட்டினாலும் நிப்பாட்டிப் போடுவாங்கள்’’ அம்மாவைச் சமாளித்தார் அப்பா.

ஆறுமணிக்கு பார்வையாளர் வெளியே செல்ல வேண்டிய நேரம். அப்பாவும் புகையிரத நிலையம் வரை கூடவே வந்தார். திங்கட்கிழமை காலை ஏழு மணிக்கு முன்பாக கொட்டஞ்சேனை அறைக்கு சென்றவுடன் அறைவாசிகளிடம் சொன்னேன்.

‘’கடவுள்தான்..... தந்தியை பார்த்திட்டு காசில்லையே எண்டு முழுசிக்கொண்டிருந்தன். சிங்கமண்ணை இருபத்தைஞ்சி சதத்துக்கு ஒருபிஸ்கட் பெட்டி பேந்தும் திரும்பி வர ரயில் டிக்கட் எல்லாச் செலவும் போக இன்னும் கொஞ்ச சில்லறை மிச்சமிருக்கு.

சட்டைப் பையிலிருந்து சில்லறைக் காசுகளின் மீது விரல்கள் தாளமிட்டன.

‘’தம்பி நீ பெரிய பிழைவிட்டிட்டாய்’’ என்று பத்மநாதன் ஒரு குண்டைத்தூக்கி போட்டார்.

‘’ஏனண்ணே ‘’ என்று நான் கேட்டதும்

‘’இன்னொரு ஐந்து ரூபா செலவைக் குறைச்சிருக்கலாம். உனக்கு அனுபவம் காணாது’’ என்ற பத்மநாதன் தொடர்ந்தார்.

‘’ஒரு விக்எண்ட் டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் எடுத்துக் கொண்டு யாழ்ப்பாணம் போனால் பதினைஞ்சு ரூபாயோடை போய்வந்திருக்கலாம்;’’

பின்னர் தான் தெரிந்த கொண்டே தூர இடங்களுக்கு வார இறுதி டிக்கட் அல்லது றிற்றேன் டிக்கட் வாங்கினால் ஒன்றரைக் கட்டணத்தில் இருவழிப் பயணம் செய்யலாம்.

அதாவது கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் போக பத்து ரூபா மீண்டும் அங்கிருநந்து வர பத்து ரூபா என்றால் வெள்ளிக்கிழமை பதினைநடத ரூபா கொடுத்து டிக்கட் வாங்கினால் அதே டிக்கட்டில் திங்கட்கிழமை திரும்பி வரலாம்.


பாதுகாப்பு அமைச்சு அனுமதி, தடை முகாம், அடையாள அட்டை என்ற சொற்களைக் கேள்விப்படாத காலத்தில் விடுதலைகூட எடுக்காமல் இருபது ரூபா செலவில் யாழ்ப்பணம்சென்று திரும்பியவர்களும் கொழும்பில் வாழ்ந்திருக்கின்றார்கள்.



நன்றி
வீரகேசரி(வார மலர்)
27-01.2002

2 comments:

வந்தியத்தேவன் said...

வணக்கம் ஐயா இப்படியான கதைகளைச் சொல்லி எங்கள் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்காதீர்கள்( சும்மா பகிடிக்குத்தான்). கோட்டையில் இரவு ஏறினால் கொடிகாமத்தில் இறங்கி தட்டிவானில் நெல்லியடிச் சந்தியில் காலையில் வந்திறங்கி சங்குண்ணி கடையில் தேத்தண்ணி குடித்துவிட்டு ஊருக்கு வந்த பலரைக் கண்டிருக்கின்றேன். ஆனாலும் எங்கள் தலைமுறைக்கு இதெல்லாம் கொடுத்துவைக்கவில்லை. ஒரு 25 வருடத்தில் காலம் எப்படி மாறிவிட்டது. பெருமூச்சு விடுவதைத் தவிர வேறு ஒன்றும் செய்யமுடியாது.

நீங்கள் இசைக்குழு ஒன்றில் பாடகராக இருந்ததாக அறிகின்றேன் அந்த அனுபவங்களையும் உங்கள் பாணியில் எழுதுங்கள்.

கானா பிரபா said...

பழைய நினைவுகளைத் தூண்டில் போட்டு விட்டது.