Thursday, August 16, 2007

நஞ்சு கேட்ட அகதித் தாய் - அந்தப் பரபரப்பான பிபிசி பேட்டி

யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்த வேளையில் நான் கிளிநொச்சியின் அரச அதிபராக பணியாற்றிமை குறித்தும், அந்த இடப்பெயர்வு குறித்து நான் பிபிசியின் தமிழோசைக்கு அளித்த செவ்வியின் எதிர்வினைகள் குறித்தும் நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பிபிசியிக்கு செவ்வி அளித்த நாள் தொடர்பாகவும் அதற்கு சில நாட்கள் முந்தியதான குறிப்பை வழங்கலாம் என இருக்கின்றேன்.

04- நவம்பர் 1995 – திருகோணமலைக்கு கூட்டம் ஒன்றுக்காக சென்று திரும்பிக் கொண்டிருந்த நான் வவுனியாவுக்கு வந்த போது, அங்கு யாழ்ப்பாணத்தில் இருந்து, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பெருமளவிலான மக்கள் வந்து கொண்டிருப்பதான செய்தி கிடைத்தது. அங்கிருந்து அவசர அவசரமாக கிளிநொச்சிக்கு புறப்பட்டு கிளிநொச்சியை அடைய நள்ளிரவு ஆகிய இருந்தது.

05- நவம்பர் 1995 – காலை எழுந்து பார்த்ததும் கிளிநொச்சி நகரத்தின் வீதியின் கரைகள், கடை வாசல்கள், பொது இடங்கள் எல்லாவற்றிலும் யாழ்ப்பாண மக்கள் நிறைந்து இருந்தனர். நகரப்பகுதிக்கு சென்று அங்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளும் ஒழுங்குகளை செய்து விட்டு, கிளிநொச்சி செஞ்சிலுவை சங்க தலைவர் பொன். விநாயகமூர்த்தியுடன் கிளாலிக்கு சென்று அங்கு வரும் மக்களுக்கான உணவு, ஏனைய ஏற்பாடுகள், தொடர்ந்து கிளிநொச்சிக்கு செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தும் விட்டு, மாலையில் கச்சேரிக்கு திரும்பிய போது , கொழும்பில் இருந்து உடனே அங்கு வருமாறான செய்தி கிடைத்திருந்தது. இரவிரவாக பொற்றோல்மக்ஸ் கொளுத்தி வைத்து நானும் இன்னும் சில அதிகாரிகளுமாக அறிக்கைகள் தயார் செய்ய ஆரம்பித்தோம்.

06- நவம்பர் 1995 செஞ்சிலுவை சங்க வாகனத்தில் வவுனியாக்குள் நுழைந்த போது பிரவுண் அண்ட் கொம்பனிக்கு அருகாமையில் வன்னிக்குள் அனுமதிக்கப்படாத வெளிநாட்டு, உள்நாட்டு ஊடகவியாளர்கள் குவிந்து இருந்ததை கண்டேன். அவர்கள் எமது செஞ்சிலுவை சங்க வாகனத்தை துரத்தியபடி வவுனியா கச்சேரிக்குள் நுழைந்த என்னை சுற்றிக்கொண்டனர். என்னால் முடிந்தளவு தகவல்களை சொல்லி, கொழும்புக்கு செல்ல வேண்டிய அவசர நிலையையும் கூறினேன். அப்போது பிபிசியின் வவுனியா செய்தியாளர் மாணிக்கவாசகம் நீங்கள் கொழும்பு போவதாக சொல்லுகின்றேன். ஆனந்தி தொடர்பு கொள்ளுவார் என்று சொன்னார். (ஆனந்தி அன்றிரவு பிபிசியில் சொன்ன செய்திக்குறிப்பை ஒலிப்பதிவாக இங்கே கேட்கலாம்)

07- நவம்பர் 1995 கொழும்பில் நடந்த கூட்டத்தில் வடக்கு மாவட்டங்களின் அரசாங்க அதிபர்கள் அனைவரும் கலந்து கொண்டோம். அன்று மாலையில் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் பொன்னபலம் பதவியில் இருந்து மாற்றப்பட்டார். மாலை 7 மணியளவில் நான் பிபிசி ஆனந்திக்கு அந்த பேட்டியை அளித்தேன். (மேலதிக விபரங்களை எனது செவ்வியில் இங்கே கேட்கலாம்)

3 comments:

த.அகிலன் said...

மிகவும் வலிநிறைந்த அந்த அகதிநாட்களின் முக்கியமான ஒரு சாட்சியம் இது. துயருறும் தமிழ் வாழ்வின் நிரந்தர துயரம் குறித்தான தங்கள் பதிவிற்கு நன்றி.

ஒரு மிக முக்கியமான காலகட்டத்தில் அரசாங்க அதிபராக அது கிளிநொச்சியின் அரச அதிபராக இருந்தவர் என்கிற வகையில். இன்னும் நிறைய வலிகளை தயக்கங்களை உடைத்துக்கொண்டு நீங்கள் நிச்சயம் பதிவு செய்யவேண்டும். காத்திருக்கிறோம் நீங்கள் ஒரு காலத்தின் சாட்சியாய் கொடுக்கப்போகும் உண்மைச்சாட்சியங்களிற்காய்

கானா பிரபா said...

எந்த நாட்டு பாஸ்போர்ட் என்று சொல்லமுடியாத நிலையில் நிற்கும் எமது உறவுகளின் கண்ணீர்ப்பதிவுச் சாட்சியங்களை இப்படியான பதிவுகள் மூலம் அதிகம் எதிர்பார்க்கின்றோம்.

Anonymous said...

ithaiyellam thamilarkalin ega pirathinithkalum yosikkaveenum..innum sandai pidichu thaan tamiliilam kaanumvam endaal..michcham sochcham irukkira sanaththukkum...AROGARA....