Friday, August 3, 2007

சந்நிதிக் கோயில் சாப்பாடு



“அரோகரா...அரோகரா...”

செல்வச்சந்நிதி முருகன் கோவிலின் முன்னால் பக்தி வெள்ளத்தில் தத்தளித்து நின்ற அடியார்களின், “அரோகரா...” ஒலி கோவிலை அதிரக் செய்து கொண்டிருந்தது. மூலஸ்தானத்தை மூடியிருந்த திரை விலகியதும் ஐயர் வேல்முருகனுக்குத் தீபாராதனை செய்யும் காட்சியை கண்ட பக்தர்கள் தம்மை மறந்து பக்திப்பரசவத்தில் சுத்திக் கொண்டிருந்தார்கள்.

“கந்தனுக்கு அரோகரா”“முருகனுக்கு அரோகரா”வேலனுக்கு அரோகரா”“முருகா முருகா”

அடியார்களின் ஓசையோடு ஆலயமணியின் ஓசையும் சேர்ந்து கொண்டது. பூசை நல்ல படியாக நடந்துகொண்டாக எண்ணியவர்கள். தங்கள் கைகள் தட்டிக்கொண்டார்கள்.

சிறிது நேரத்துக்கு முன்பு எழுந்த “முருகனுக்கு அரோகரா” பேரோலி அடங்கிவிட்டது. “டாங்..டாங்” என்றொலித்த பெரிய மணியும் உறங்கிவிட்டது. நாதஸ்வரம், மேளம் வாசித்தவர்களும் எங்கோ சென்று விட்டார்கள். சங்கு கூட நந்தியின் கால்களுக்கிடையில் அடைக்கலம் புகுந்து கொண்டது. எண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டுதான் இருந்தன. அவற்றில் பூசையின் போதிருந்த பிரகாசம் இல்லை. சாம்பிராணி, ஊதுபத்தி முதலியவற்றின் மணமும் சிறிது சிறிதாகக் குறைந்து கொண்டே சென்றது.

மூலஸ்தானத்தை விட்டிறங்கிய ஐயர், தனது கையிலுள்ள தட்டத்திலிருந்த விபூதியை எடுத்து சனங்களுக்கு வினியோகம செய்து கொண்டு வந்தார்.

“முருகா” என்று சொல்லிய வண்ணம் சனங்கள் விபூதியை வாங்கி நெற்றியிலும் கைகளிலும் பூசிக்கொண்டார்கள். ஒரு சிலர் ஐயரின் கால்களில் வீழ்ந்து வணங்கும் போது, ஐயர் அவர்களின் தலைகளில் விபூதியைத் தூவி ஆசீர்வாதம் செய்தார்.

விபூதி விநியோகத்தைத் தொடர்ந்து சந்தனம், குங்குமம், மலர்கள் ஆகியவற்றையும் அங்கு நின்றவர்களுக்கு விநியோகம் செய்யப்பட்ட பின், ஐயர் தீர்த்தச் செம்புடன் வருகிறார்.

இரண்டு கரங்களாலும் தீர்த்தததை வாங்கி வாயிலும் ஊற்றித் தலையிலும் தெளித்த பின்பு , ஈரக்கைகளை கண்களிலும தடவிக் கொண்டார்கள் பலர்.

:என்ர ராசா..ஐயாவிட்டை தீர்த்தம் வாங்கிக் குடியுங்கோ” எவளோ ஒரு தாய் மகனுக்கு கட்டளை பிறப்பித்ததும்,
“ஐயா தீர்த்தம்” என்று இரண்டு கைகளையும் நீட்டி தீர்த்தத்தை வாங்கி ஒரு மடக்கில் குடித்தது குழந்தை. தீர்த்தம் தேன்போல இனித்ததோ அல்லது மருந்து போல கசத்ததோ குழந்தையைத் தான் கேட்கவேண்டும்.

மகன் தீர்த்தம் பருகிவிட்டதைக் கண்டு மனமகிழ்ந்த தாய், குழந்தைக்கு மற்றுமொரு கட்டளையை இட்டாள். “ராசா...கையைக் கண்ணில் துடையுங்கோ..”
“ஏனம்மா..?” என்று கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திராமல் ஈரக்கைகளால் கண்களைத் தடவினான்.
குழந்தையின் கேள்விக்கு-
“தீர்த்தம் கண்ணிலை பட்டால் நோய் துன்பங்கள் வராது. கண் குருடாகாது” என்று மறுமொழி சொன்னார் கந்தசாமி.
பிள்ளையார் வாசலின் முன்னாலுள்ள கோயிலுக்குப் பக்கத்தில் நின்ற குருடனின் மேல் குழந்தையின் கவனம் சென்றது.

“தீர்த்தம் படாதபடியாலோ அந்த மாமாவுக்குக் கண் தெரியாமல் போனது?” குழந்தை , கந்தசாமியைப் பார்த்துக் கேட்டது.

“ஓம் கடவுளைக் கும்பிடவேணும். திருநீறு வாங்கிப் பூசவேணும். பொட்டு வைக்கவேணும். வில்வம் வேண்டி காதிலை வைக்கவேணும். தீர்த்தம் வாங்கிக் குடிக்க வேணும் இல்லையெண்டால் கண் குருடாய் போயிடும்” கண்டிப்பான குரலில் சொல்லிக் கொண்டு வந்த கந்தசாமி குரலைச் சிறிது மாற்றி கொண்டு மகனைக் “கவனமாக வளருங்கோ, நல்ல கெட்டிக்காரனாக வருவான்” என்றார்.

“அவன் உப்பிடித்தான் அண்ணை, எதுக்கெடுத்தாலும் ஒவ்வொண்டு சொல்லமால் இருக்கமாட்டன். ஐயோ..தகப்பனைப் படுத்திறபாடு. தங்கச்சியாக்கள் மத்தியானம் செல்லையா மடத்திலை அன்னதானம் குடுக்கினம் . அண்ணை...அப்ப நாங்கள் வரப்போறம். கூடமாட ஏதுவும் செய்து குடுக்க வேணும்” சொல்லிவிட்டு குழந்தையையும் கூட்டிக்கொண்டு சென்றாள் தாய்.

முருக பக்தர்கள் கோவிலின் நான்கு வாசல்களாலும் வெளியேறிக் கொண்டிருக்க, ஒரு சிலர் மாத்திரம் ஆறுமுகசுவாமி வாசலின் முன்னால் பக்திப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தார்கள். தாயும் மகனும் சென்ற பின்னர் கந்தசாமி தனது இடுப்பிலிருந்த பட்டுச்சால்வையை அவிழ்த்து நன்றாக இறுக்கிக் கட்டிக்கொண்டு பக்திப் பாடல்கள் பாடுவோரோடு சேர்ந்து கொண்டார்.

அருணகரிநாதரின் திருப்புகழும், பித்துக்குளி முருகதாஸின் பாடல்களும் பாடுவோர் வாயிலிருந்து தேனாக ஒழுகியது. அவர்களோடு சேர்ந்துகொண்ட கந்தசாமி பக்தியுணர்ச்சியோடு பாடியதாகத் தெரியவில்லை. ஏதோ கடமைக்காக வாயைமட்டும் அசைத்த வண்ணமிருந்தார். மனம் மத்தியான உணவைப் பற்றிய எண்ணத்தில் மூழ்கியிருந்தது.

“சீ..நான் அவளோடு செல்லையா மடத்துக்குப் போய் உதவியள் செய்து கொடுத்தால் மத்தியானம் நல்ல வடிவாகச் சாப்பிடலாம், இண்டைக்கு வெள்ளிக்கிழமைதானே. எல்லா மடத்திலையும் சோறு குடுப்பினம். இருந்தாலும் தெரிஞ்ச ஆக்கள் தாறதைப்போல வராது”

“அ..இதிலை இவங்களோடை பாடிக்கொண்டிருந்து என்ன புண்ணியம் ? ஒரு தேத்தண்ணிகூடக் கிடையாது”

“மடத்துக்கம் போகலாம்தான். தற்செயலாக ஆரும் பார்த்தால் ஏதும் நினைப்பாங்கள். ஒவ்வொரு கிழமையும் மடங்களில் போய் உதவி செய்திருந்தால் பரவாயில்லை. இண்டைக்குப போக சா...” அலைபாய்ந்த எண்ணங்களை ஒருவாறாக அடக்கிக் கொண்டு “பாடி முடிஞ்ச உடனே போவம்” என்ற முடிவுக்கு வந்தார்.

அன்னதானச்சோறு சாப்பிடுவதற்கு ஆசைப்படுவர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். பலர் பஞ்சத்தில் அடியுண்டு சாப்பிடுவதற்கு ஒன்றுமேயில்லாததால் அன்னதானச் சோற்றுக்காக அடிபடுகிறார்கள். இரண்டாவத வகையினர் ‘மடங்களில் வழங்கப்படும் தானச்சோறு கடவுளின் சோறு, கோவில் சோற்றில் கொஞ்சமாவது சாப்பிட வேண்டும். என்பதற்காகச் சாப்பிடுவார்கள், இதில் கந்தசாமி முதலாவது வகையைச் சேர்ந்தவர்.

கந்தசாமியை முதன்முதலாகப் பார்ப்பவர்கள், “அவர் வறுமையில் வாடுகிறார்” என்று சொன்னால் நம்பமாட்டார்கள்தான். “அவருக்கென்ன? நல்ல தோற்றம், பட்டுவேட்டி சால்வையெல்லாம் கட்டியிருக்கிறார்கள். கையிலே மணிக்கூடு, இடுப்பில் பளபளக்கும் பட்டுச் சால்வைக்கூடே பெரிய தோல் மணிபர்ஸ் தலைi நீட்டிப் பார்க்கிறது. அதற்குள் எப்படியும் ஐந்து பத்து ரூபாவென்றாலும் இருக்கும். அவரிடம் காசில்லையென்று சொன்னால் நான் நம்பவே மாட்டேன்” என்று சொல்பவர்களுக்கு அவருடைய உண்மையான வாழ்க்கையைப் பற்றி ஒன்றுமே தெரியாது.

பல வருடங்களுக்கு முன் கொழும்பிலுள்ள கொம்பனியொன்றில் வேலை பார்த்தபோது வாங்கின கைகடிகாரமும், பட்டுவேட்டி, சால்வையும் மணிபர்ஸ்சும்தான் கந்தசாமியைப் பணக்காரரென்று பல பேருக்கு அறிமுகம் செய்து கொண்டிருந்தன.

ஒரேயொரு மகளுக்கு கல்யாணத்தை நடத்தி வைத்த சந்தோசத்தில் கண்ணைமூடிவிட்டாள் கந்தசாமியின் மனைவி. ஈமக்கிரிகைகள் முடிந்த ஒரு சில நாட்களுக்குள் மகளும் மருமகனும் வீடு காணியெல்லாhவற்றையும் ‘சீதனம்’ என்ற பெயரால் அபகரித்துக்கொண்டு கந்தசாமியோடு கோபம் என்று சொல்லி கதையாமல் விட்டுவிட்டார்கள். தனது தங்கையின் குடும்பத்தோடு ஒட்டிக்கொண்ட கந்தசாமியைக் கொம்பனி வேலையும் வெறுத்து ஒதுக்கிவிட்டது.

இல்லானை இல்லாளும் வெறுத்து ஈன்றெடுத்தாய் கூட வேண்டாத நில உலகத்தில் நிலவுபோது - கூடப் பிறந்தவள் எப்படிக் 4ட்டி வைத்திருப்பாள்? இரவுப் பொழுதை நித்திரையில் கழிப்பதற்காக மாத்திரம் தங்கையின் வீட்டுக்குச் செல்வார் கந்தசாமி.

வெள்ளிக்கிழமைகளில் சந்திநி கோவிலிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் வல்லிபுரக் கோவிலிலும் ஆளைக்காணலாம். மற்றும்படி அந்தச் சுற்றுவட்டாரத்தில் திருவிழாக்கள் இல்லாத நாட்களில் வாசிகசாலையிலோ அல்லது புளியமர நிழலிலோ தனது பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பார்.

வருமானமில்லாத நிலையிலும் கந்தசாமி பட்டுவேட்டியுடன் கோவிலுக்குப் போவதையிட்டுத் தவறாக எதுவும் சொல்லமுடியாது, அவரிடம் கிழியாத வேட்டி என்ற பெயரோடு இருப்பது அந்தப் பட்டுவேட்டி ஒன்றுதான். இடுப்பில் செருகியிருக்கும் மணிபேர்ஸில் இருபது சதம்தான் இருக்கிறது. கையில் கட்டியிருக்கும் மணிக்கூடு மாத்திரம் ஒழுங்காக நேரத்தைக் காட்டிக் கொண்டிருந்தது.

எது எப்படி இருப்பினும் கந்தசாமியிடம் ஒரு தனிக் கவர்ச்சி ‘பேர்சனால்டி’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்களே: அந்தக் கவர்ச்சியாக இருக்கலாம். யாராயிருந்தாலும் சரி , முதல் சந்திப்பிலேயே சிநேகிதம் கொள்ளும் அளவுக்கு நடந்துவிடுவார்.

“என்ன கந்தசாமியண்ணை...கடுமையாகக் கனக்க யோசிக்கிறியள்?’ அவருக்குப் பக்கத்திலிருந்தவர் கேட்ட போதுதான் நினைவலைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டார் கந்தசாமி. “ஒண்டுமில்லை” என்று சொல்லி முடிப்பதற்கும் பக்திப்பாடல் குழுவுக்குத் தலைமை தாங்கியவர் ‘நமப்பார்பதி பதே’ சொல்வதற்கும் சரியாக இருந்தது.

கச்சேரி முடிகிறதே என்ற மகிழ்ச்சியில தங்கள் சத்தத்தைப் பெரிதாக்கிக் கொண்டார்கள்.”ஹர ஹர மகாதேவா!”
‘தென்னாடுடைய சிவனே போற்றி’ தலைமை தாங்கியவரின் குரலைத் தொடர்ந்து எல்லோருடைய குரல்களும் ஒரே நேரத்தில் எதிரொலித்தன.

‘எந்நாட்டவர்களுக்கும் இறைவா போற்றி!’
பக்திப் பாடல்களைப் பாடியவர்களும் ஒவ்வொருவராக எழுந்து சென்றனர். கந்தசாமி கைகடிகாரத்தைப் பார்த்து எழுந்து சென்றனர். கந்தசாமி கைகடிகாரத்தைப்பார்த்து ‘பத்தே முக்கால் மணி’ என்று தனக்குள் சொல்லிவிட்டு அங்கும் இங்கும் பார்வையைப் படரவிட்டபடி நடந்துவந்து பிள்ளையார் வாசலின் முன்னாலுள்ள கேணிக்கட்டில் அமர்ந்து கொண்டார். மத்தியான உணவு பற்றி சிந்தனை மீண்டும் அவருள்ளத்தில் தலை தூக்கியது.

‘இப்ப செல்லையா மடத்துக்குப் போகலாம்தான்....’ என எண்ணிய மறுகணமே கமதை மாற்றிக் கொண்டார். மனித மனமல்லவா! காலத்துக்குக் காலம், கணத்துக்குக் கணம் அது மாறிக்கொண்டுதானே இருக்கும்.

“வேண்டாம், ஒரு பன்னிரண்டு மணிக்குக் கொஞ்சம் முன்பின்னாகப் போவம் அவளோடை காலமையும் கதைச்சனான்தானே! அதிலை போய் தங்கச்சியெண்டால் வடிவாகக் கவனிப்பாள்” என்று யோசிக்கும் போது ஒரு கிழவனும் கேணிக்கட்டில் வந்து குந்தினான்.

“ஐயா நேரம் என்னவோ?” எதற்கோ அவசரப்பட்ட கிழவன்தான் நேரத்தை அறியத் துடித்தான். “பதினொரு மணி” வேண்டா வெறுப்பாக நேரத்தை சொன்ன கந்தசாமி முகத்தை மறுபக்கம் திருப்பினார். அங்கே பிச்சைக்காரக் குருடனொருவன் நின்று கொண்டிருந்தான்.

கிழவன் கந்தசாமியுடன் கதைக்க ஆரம்பித்தான். “இன்னும் ஒரு மணித்தியாலம் கிடக்கு. மடங்களில் பன்னிரண்டு மணிக்குத்தானே அன்னதானம் குடுப்பினம் என்னய்யா..?”

கந்தசாமி ஒன்றும் பேசவில்லை. பணக்காரர்களோடும் பெரியவர்களோடும் எடுத்த எடுப்பிலேயே சிநேகம் வைத்துக்கொள்ள முயலும் கந்தசாமிக்கு ஏழை எளியவர்களென்றால் பிடிக்கவே பிடிக்காது. அதனால்தான் அந்தக் கிழவனுடனும் அவர் ஒன்றும் கதைக்க விரும்பவில்லைப்போலும்.

பிச்சைக்காரரைவிடக் கேவலமான நிலைக்குத் தான் தள்ளப்பட்டு விட்டதைப்பற்றி கந்தசாமி சிந்தித்ததே இல்லை.
கிழவன் மீண்டும் கதைக்க ஆரம்பித்தான். “ஐயா வெள்ளிக்கிழமைகளிலும் திருவிழா நேரத்திலேயும் சோறு குடுக்கிற மாதிரி ஒவ்வொரு நாளும் குடுத்தினமெண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்....சும்மா வெள்ளிக்கிழமை வேளையிலே மட்டும் அவிச்சுக் கொட்டுகிறதாலை ஒரு புண்ணியமுமில்லை. வேண்;டாம் வேண்டாமெண்டு சொல்லவும் சோத்தைக் கொண்டுவந்து கொட்டுவினம். எவ்வளவு சோறு இண்டைக்கு மண்ணாகப் போகும். சடடி பானையளோடை கிடந்து சிந்திக் சீரழியும். எல்லோரும் ஒண்டு மண்டியாகக் கொண்டுவந்து கொட்டாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருத்தர் வந்து அன்னதானம் குடுத்தினமெண்டால் எவ்வளவு நல்லாயிருக்கும். என்னைப் போல ஏழை எளியதுகளும் வயிறாரத் தின்னுங்கள்’ எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து அறிந்தவன் போல அந்தக் கிழவன் பேசிப்பயனென்ன, அன்னதானம் கொடுப்பவர்களல்லவா அதை உணர்ந்து நடக்க வேண்டும்.
எவ்வளவோ கதைத்தும் கந்தசாமி ஒன்றுமே சொல்லாத போதும் கிழவன் விடுவதாக இல்லை.

“ஐயா இந்தக் கோவில்களிலே வெடியள். வாணங்கள் , சின்னமேளம், பெரியமேளம் , சிகரம், சப்பறம் எண்டு சில வழிக்கிற காசெல்லாத்தையும் வறுமைப்பட்டதுகளுக்குக் குடுத்தால் அதுகள் வயிறு நிறையச் சாப்பிடுங்கள்” சாப்பாட்டைப்பற்றியும் ஏழைகளைப் பற்றியுமே பேசிக்கொண்டிருந்தான் கிழவன்.

சாப்பாட்டைப் பற்றி கந்தசாமியின் வாய் பேசாவிட்டாலும் உள்ளம அதைப் பற்றித்தான் எண்ணிக்கொண்டிருந்தது.
மனிதர்களாகிய எல்லோருக்கும் ஆசையிருக்கிறது. சில நேரத்தில் சில பொருட்களின்மேல் நாட்டம் ஏற்படுகின்றது. கிழவனைப் போல சிலர் வெளிப்படையாகப் பேசுவார்கள். கந்தசுவாமியைப் போன்றவர்கள் கௌவரத்துக்குப் பயந்து ஆசைகளையெல்லாம் மனதுக்குள்ளேயே மறைத்து வைத்திருப்பார்கள்.

கேணியின் முன்னால் நின்ற குருட்டுப்பிச்சைகாரனை சிறுவனொருவன் மோதி விழுத்திவிட்டான். அவன் வேறு யாருமல்ல- தாயுடன் கூட இன்று தீர்த்தம் வாங்கிப் பருகிய அந்தச் சிறுவன்தான்! பலூன்காரன் ஒருவன் அவனைக் கலைத்துக் கொண்டோடிவரும் போது குருடனை மோதி விழுத்தி விட்டு “மாமா அடிக்க வாறன்” என்று கந்தசாமியின் பின்னால் ஓடி ஒளிந்துக்கொண்டான். சிறுவனின் கையில் தாராவைப் போன்ற பலூன் ஒன்றிருந்தது.
சிறுவனைக் கந்தசாமி தன் கைகளில் பிடித:துக் கொண்டு கலைத்து வந்த பலூன்காரனிடம், “என்ன நடந்தது” என்று அதிகாரத்தோரணையில் கேட்டார்.

பலூன்காரன் குழைந்த வண்ணம், “ஐயா” இந்த பொடியன் என்னட்டையிருந்த தாராபலூனை அறுத்துக் கொண்டோடி வந்திட்டுத்து. அது இருவத்தைஞ்சியாம் விக்கிற பலூன் ஐயா...” என்றான். கோபத்துடன் சிறுவனைக் கலைத்துக்கொண்டுவந்த பலூன்காரன் குழைந்து நின்றதற்குக் காரணம், எப்படியாவது கந்தசாமியிடமிருந்து இருபத்தைந்து சதம் வாங்கவேண்டும் என்பதற்கே! கந்தசாமி இருபத்தைந்து சதம் கொடுத்துப் பலூன் வாங்கிக் கொடுப்பதற்கு எங்கே போவார்?

“தம்பி! அந்த பலூன் வேண்டாம். அதைக் குடுத்திடுங்கோ” கந்தசாமியின் வேண்டுகோளுக்கு சிறுவன் பணியவில்லை.
“நான் மாட்டன் எனக்கு இந்த பலூன்தான் வேணும். அம்மாவிட்டைக் கேட்டனான். அவ வேண்டித்தரமாட்.டன் எண்டு சொன்னவ. நீங்க வேண்டித் தாங்கோ மாமா” சிறுவன் கெஞ்சினான். சிறுவனின் கெஞ்சுதல் அழுதையாக மாறக் கந்தசாமி பலூனைப் பறித்து பலூன்காரனிடம் கொடுத்துவிட்டு பின்வருமாறு சொன்னார். “தம்பி அம்மாவிடம் சொல்லி உங்களுக்குப் பெரிய தாரா பலூன் வாங்கித்தாறன். இதுக்கெல்லாம் அழக்கூடாது. நீங்கள் நல்ல பிள்ளையெல்லா..! ஏன் அந்த பலூனை அறுத்துக்கொண்டு வந்தனீங்கள்? களவெடுக்கிறது மற்ற ஆக்களெட்டையிருக்கிற சாமானைப் பறிக்கிறது கூடாத பழக்கம். இனிமேல் அப்பிடிச் செய்யக் கூடாது. அழாதையுங்கோ.”

அழுகைக்கிடையே, “ அம்மாவிட்டை கேட்டனான். அவ வேண்டித் தரமாட்டன் எண்டு சொன்னவ. அதுதான் நான் அறுத்தனான். அவன் அடிக்கவர நான் ஓடியந்தநான் “ என்றான் சிறுவன்.

இவற்றைக் கவனித்துக் கொண்டிருந்த கிழவன் சொன்னான்: “ஐயா அந்தப் பிள்ளைக்கு ஒரு பலூன் வாங்கிக் குடுங்கோ. அது அழாது. குழந்தைப் பிள்ளையள் பலூனையும் இனிப்பையும் கண்டால் ஆசைப்படுங்கள். நாங்களும் அந்தப் பருவத்தில் அப்பிடித்தானே இருந்திருப்பம். அதுகள் ஆசைப்படுகிறத வேண்டிக் கொடுத்தால் குழந்தைகள் களவெடுக்காது: பொய் சொல்லாது- சின்னப்பிள்ளையள் ஏதுவும் கேட்க, வேண்டிக் குடுக்காவிட்டால்தான் தாங்கள் விரும்பின பொருளைக் களவெடுக்கத் துணிகின்றன. பிறகு அந்தப் பொருளைக் கண்டிட்டு தாய்தகப்பன் ‘ எங்கை எடுத்தனி? எப்படி வந்தது? எண்டு வெருட்டினால் குழந்தையள் பொய் சொல்லுங்கள்.

கந்தசாமி தனக்கு வந்த கோபத்தைக் கிழவன் மீது காட்டமுடியாமல் தவித்தார். அந்தப் பலூனை எப்படியாவது விற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் கேணிப்பக்கத்தில் இன்னமும் வட்டமிட்டுக் கொண்டிருந்தான் பலூன்காரன்.
“மாமா ஒரு பலூன்...நான் பிறகு கேக்கயில்லை” சிறுவன் மீண்டும் கெஞ்சினான்.

“பலூனா வேண்டும் நல்ல உதைதான் தரவேணும் இனி பலூன் எண்டு கேட்டால் “பல்லைக்கடித்து, கிழவன் மீது வந்த கோபத்தைச் சிறுவன் மீது தீர்த்துக்கொண்டார் கந்தாமி.

கிழவன் வேட்டியில் செருகியிருந்த கடுதாசிச் சரையைக் எடுத்து விரித்த போது , கந்தசாமி நன்றாக உற்றுபார்;த்தார். கடுதாசிச் சரையினுள் சில்லைறைக் காசுளோடு இரண்டு பத்து ரூபா நோட்டுகளும் இருந்ததைக் கவனிக்கத் தவறவில்லை, கந்தசாமியின் கண்கள்.

அவர் ஒரு நிமிடம் யோசிப்பதற்குள் இருபத்தைந்து சதக்குத்தியொன்றை சிறுவனிடம் கொடுத்தான் கிழவன். உடனே காசு கைமாறியது. சிறுவன் தாரா பலூனை வாங்கிவிட்டான்.

கந்தசாமிக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் கதைக்காரக் கிழவன் மீண்டும் கதைத்தான்.
“குழந்தப்பிள்ளையள் இருக்கிற பக்கமாக பலூன்காரரும் முட்டாசுக்காரரும் வரக்கூடாதெண்டு ஒரு சட்டம் வைக்கவேணுமய்யா குழந்தைப்பிள்ளையள் கண்டால் “அதைவேண்டித்தா, இதைவேண்டித்தா” எண்டு கரைச்சல் படுத்துங்கள்தான். எல்லர்தகப்பனுக்கும் வாங்கிக் குடுக்க வசதியிருக்குமோ? வேண்டிக்குடுக்காமல் குழந்தையளைக் கோவிச்சால் கோயிலுக்கு வந்து கும்பிட்ட வலன் போச்சுதே!”

“எல்லாத் தாய் தகப்பனும் வாங்கிக்குடுக்க வசதியிருக்குமோ” கிழவன் சொன்னது செவிகளில் எதிரொலித்தது கந்தசாமியை மனம் நோகவைத்தது. “யாரோ பெற்ற பிள்ளையோடு உறவுமுறை கொண்டாடப் போய்” கிழவன் தன்னைக் குத்திக் காட்டுகிறானே!

தாரா பலூனைவைத்து விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் முகத்தில் மலர்ந்த மகிழ்ச்சி. கிழவனின் உள்ளத்திலும் பிரபலித்தது. “தம்பி, இது நல்ல பலூன் என்ன, உடையாமல் வைச்சு விளையாட வேண்டும். இனிமேல் பலூன் வேண்டித்தரச்சொல்லி கரைச்சல் படுத்தகூடாது” யாரோ பெற்ற பிள்ளைதான் என்றாலும் எவ்வளவு அன்பாகச் சொன்னான் கிழவன்.

மகனைத் தேடித்கொண்டு வந்த தாயும் கேணியடிக்கு வந்து சேர்ந்தாள். கந்தசாமியை நோக்கி மெல்லிய சிரிப்பொன்றை உதிர்த்தவள் மகனைப் பார்த்தும் முகத்தில் சிறிது கோபத்தை வரவழைத்துக்கொண்டே கேட்டாள். “சுகுமார் உனக்கு இந்த பலூன் எங்கே கிடைத்தது?’

பதில் சொல்லப் பயந்த சுகுமாரன் கிழவனைப் பார்த்து கையைக் காட்டினான். “அது நான்தான் வாங்கிக் குடுத்தனான் அம்மா” கிழவன் சொல்லியதும் தாயைப் பார்த்த சுகுமாரனுக்கு துணிவு வந்துவிட்டது.

“இந்த மாமாவட்டைக் கேட்டனான். அவர் வேண்டித்தரமாட்டன் எண்டு சொன்னவர், உடனை இந்த அப்பா வேண்டித்தந்தவர்” என்றான் சுகுமாரன்.

தாய் குழந்தையைத் தடவிவிட்டு “அப்படியெல்லாம் வாங்கக்கூடாது ராசா. இந்தாங்கோ இந்த இருபத்தைந்து சதத்தை அந்த அப்பாவிட்டைக் குடுங்கோ” என்று சொல்லி முடிக்கவில்லை.

“அம்மா எனக்குக் காசு வேண்டாம்” குழந்தை ஆசைப்பட்டுது வாங்கிக் குடுத்தனான். நானும் பிள்ளைகுட்டிக்காரன். எங்கடை பிள்ளையளும் எங்கேயெங்கே என்னத்திற்கு அந்தரிக்குதுகளோ அதுகளுக்கும் ஆரும் உதவி செய்ய வேணும். காசை மறுத்தான் கிழவன்.

பரவாயில்லை என்று சொல்லி நன்றிப்பார்வையோடு காசைக் கொடுத்த பின்பு சொன்னாள். நல்ல வேளையப்பா நான் சமையலிலை இருந்தாற் போலை பிள்ளையைக் கவனிக்கவே இல்லை. சமைச்ச பிறகு பார்த்தால் காணயில்லை..ம்..முருகன்தான்.

“அம்மா சனசந்தடியுள்ள இடங்களுக்குச் சின்னஞ்சிறுகளைக் கூட்டிக்கொண்டு போனால் நீங்கள்தான் கவனிக்கவேணும். பிராக்கு கண்ட இடத்திலை பிள்ளையள் நிண்டிடும்” கிழவன் சொல்லிவிட்டு, சாப்பிடப் போவதற்காக வேட்டியை இறுக்கி கட்டினான்.

“அப்பா! செல்லையா மடத்திலை நாங்கள்தான் அன்னதானம் குடுக்கிறம்..நீங்கள் வாருங்கோ...” என்று சொன்னவள் கந்தசாமியையும் பார்த்து “அண்ணை நீங்களும் வாருங்கோ” என்று அழைப்பு விடுத்தாள்.

அழைப்பை ஏற்ற கந்தசாமியும் கிழவனும் தாயையும் மகனையும் பின்தொடர்ந்து செல்லையா மடத்தினுள் புகுந்தனர். எதிர்பாராத விதமாகப் பந்தியிலும் கந்தசாமிக்குப் பக்கத்திலேயே குந்திக்கொண்டான் கிழவன். சோறும் கறிகளும் பரிமாறப்பட்டன.

“அய்யா பார்த்தீங்களே! பூசனிக்காய் புடலங்காய் எண்டு ஏழெட்டுக் கறிபோடுற காசுக்கு, கோவா பீற்றூட் எண்டு ரெண்டு மூன்று நல்ல கறியள் போட்டாலும் காணும்...” கிழவன் சொல்லி முடிப்பதற்குள்.... “சும்மா சத்தம் போடாமல் சாப்பிடு” கந்தசாமியின் குரலில் கண்டிப்பு நிறைந்திருந்தது. கிழவனிடமிருந்த இருபது ரூபாதான் அவன் மீது கந்தசாமிக்குப் பொறாமையை ஏற்படுத்தியது.

மனிதனின் ஆசைக்கு எல்லையில்லை. ஒரு பொருளை அடையவேண்டுமென்று துடியாயத் துடிக்கிறான்: படாத பாடுபடுகின்றான். அந்தப் பொருளை அடைந்தபின் இன்னொரு பொருளில் ஆசை வைக்கிறான். மத்தியான உணவுப்பிரச்சனை முடிந்ததும் பணப்பிரச்சனை எழுகிறது. கிழவனின் பணத்தை எப்படியாவது கவர்ந்துவிட வேண்டுமென்ற கெட்ட சிந்தனையுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்த கந்தசாமி இலையிருந்த சோற்றை முடிக்குமுன் கிழவன் எழுந்துவிட்டான்.

கிழவனின் மடியிலிருந்த கடதாசிச் சரை கீழே விழுந்ததை ஒருவருமே கவனிக்கவில்லை- கந்தசாமியைத் தவிர.

“அவங்க எழும்பினால் பரவாயில்லை. நீங்க ஆறுதலாகச் சாப்பிடுங்கோ” சுகுமாரனின் தாய் கந்தசாமிக்குச் சொன்னாள்.
கையைக் கழுவிவிட்டு, காசைத் தேடிக்கொண்டு வந்த கிழவன் கண்ட காட்சி....

கந்தசாமி கிழவனின் கடுதாசிச் சரையை காலால் இழுத்து, கைகளுக்கு மாற்றி அதிலிருந்து இரண்டு பத்து ரூபா நோட்டுக்களை எடுத்துக் கொண்டு, சரையை அப்படியே நழுவவிட்டார்.

“அய்யா...உங்களுக்குக் காசு தேவையெண்டு கேட்டிருந்தால் நானே தந்திருப்பேன். களவெடுக்கிறது கூடாத பழக்கமெண்டு அந்தக் குழந்தைக்குச் சொன்ன நீங்களே களவெடுத்தியள்- பரவாயில்லை” சொன்னதும் சொல்லாததுமாக மடத்தைவிட்டு வெளியேறிக் கொண்டிருந்தான் கிழவன்.

கந்தசாமியின் முகம் அவமானத்தால் வெளுத்தது, நிலத்தில் கவனிப்பாரற்றுக் கிடக்கும் கிழவனின் கடுதாசிச் சரையைப் பார்க்கிறார். சில்லறைக் காசுகளைச் சுற்றியிருந்த கடதாசியில் அச்சிட்டிருந்த, “மற்றவரை மன்னிக்கும்போது மனிதன் தெய்வமாகிறான். மன்னிக்காதவன் மனிதனாகவே இருக்கிறான்” என்ற மணி மொழியைத் தவிர மற்ற எழுத்துக்களைக் கந்தசாமியால் வாசிக்க முடிக்கவில்லை.

ஈழநாடு 1970

11 comments:

Anonymous said...

உடுப்பிட்டியிலிருந்து செல்லச்சந்நிதி கோவிலுக்கு வயலுக்குள்ளாலே நடந்துபோகும் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்திருக்கின்றீர்கள்.

வீரபத்திரக்கோவிலடிக்கு முன்னாலே 751 வீதியிலிருந்து இறங்கி, காணி ஒழுங்கைகளூடாகப்போய், வயலேறி, ஆலமரத்துப்பிள்ளையார் கோவிலடியைக் கடந்து, செல்லச்சந்நிதிக்கு வருவதுவரை இப்போது கனவுலகமாகத் தோன்றுகின்றது. எண்பதுகளுக்கு முன்னாலான காலம்.

உங்கள் கதை 1970 இனதென்றாலுங்கூட, இஞ்ஞாபகங்களை மீட்டியதற்கு நன்றி

G.Ragavan said...

அருமை அருமை அருமை. மிகமிக ரசித்தேன்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

மிக நல்ல கதை.

வெற்றி said...

நல்ல கதை.

கானா பிரபா said...

பழைய ஞாபகங்கள், தொலைந்தவை எல்லாம் நினைவுக்கு வருகுது, மிக்க நன்றி

கொமன்ற் மொடறேசனை எடுத்துவிட்டால் நல்லது

Unknown said...

பிச்சைக்காரரைவிடக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டு விட்ட கந்தசாமிக்கு கூட ஏழை எளியவர்களென்றால் பிடிக்கவில்லை. கதை நன்றாக இருக்கிறது.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

//வீரபத்திரக்கோவிலடிக்கு முன்னாலே 751 வீதியிலிருந்து இறங்கி, காணி ஒழுங்கைகளூடாகப்போய், வயலேறி, ஆலமரத்துப்பிள்ளையார் கோவிலடியைக் கடந்து, செல்லச்சந்நிதிக்கு வருவதுவரை //



இப்போது நீங்களுமே எனக்கு பழைய நினைவுகளை ஊட்டிவிட்டீர்கள் அனானி.
ராகவன், யோகன் , வெற்றி , சுல்தான் பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து என்னுடைய நிர்வாணம் சிறுகதை தொகுதியில் வந்த சிறுகதைகளை பதிவில் இடலாம் என நினைக்கிறேன்.

கானா பிரபா உங்களுடைய பதிவுகளும் பழைய நினைவுகளை கொண்டு வரும் பதிவுகள் தானே. இப்போது கொமன்ற் மொடரேசன் சரியாய் இருக்கின்றதா..?

கானா பிரபா said...

இப்போது பின்னூட்ட இலகுவாக இருக்கின்றது, தொடர்ந்தும் எழுதுங்கள், ஆவலுடன் படிக்க இருக்கின்றேன்

கொண்டோடி said...

இப்போதுதான் முதன்முதல் உங்கள் வலைப்பதிவுக்கு வருகிறேன் என்று நினைக்கிறேன்.
ஈழப்பதிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி. முன்பு 'கலக்கி'க் கொண்டிருந்த சிலர் காணாமலே போய்விட்டார்கள்.

அதுசரி, நான் வாசித்த இரண்டு கதையிலும் கந்தசாமி என்ற பெயர் வருகிறதே, உங்களுக்கு நன்கு தெரிந்த நபரா அவர்? ;-)

உடுவை எஸ். தில்லைநடராசா said...

கானா பிரபா உங்களைப் போன்றவர்களின் பாராட்டுக்கள் அதிகரித்த பணிச்சுமைக்குள்ளும் இவ்வாறான பதிவிடவும், புதிதாக எழுதவும் முடிகின்றது.

//அதுசரி, நான் வாசித்த இரண்டு கதையிலும் கந்தசாமி என்ற பெயர் வருகிறதே, உங்களுக்கு நன்கு தெரிந்த நபரா அவர்? ;-) //

கொண்டோடி தெரிந்தவர்களின் பெயர்கள் எழுதும் போது இயல்பாக வந்துவிடுகின்றது. சில கதைகளின் பெயர்களை மாற்றி எழுதுகின்றேன். இன்னும் சில கதைகளில் பெயர்களை மாற்றமாலே எழுதுகின்றேன்.

துளசி கோபால் said...

அருமை ஐயா அருமை