Monday, January 6, 2014

தவறிப் பிறந்த தரளம் ( குறும்பட குறிப்பு ) www.youtube.com. (Forgotten Pearl) Short Film

                தவறிப் பிறந்த தரளம்     ( குறும்பட  குறிப்பு )
         http://www.youtube.com/watch?v=nLJt9L2LWNE

தவறிப் பிறந்த தரளம்  என்ற தலைப்பில் வருணன்  வருணன் என்பவரால் யாழ்ப்பாணம் முல்லைத்தீவு பகுதிகளில் படமாக்கப்பட்ட சுமார் பத்து நிமிட கால எல்லையை கொண்ட குறும்படம் வெளிவந்துள்ளது.

ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு பள்ளிக்கு போகும் சிறுவன் பயந்து திரும்பி ஓடி வரும்  நிகழ்வொன்றின் தாக்கத்தை படம்  சித்தரிப்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.


குடும்பம் என்பது ஆயிரம்காலத்து பயிர். பெற்றோர் விளையாட்டுத் தனமாக விபரீத ஆசைகளை வளர்த்துக் கொள்ள அவர்களைவிட பிள்ளைகள் தான்  பாதிக்கப் படுவார்கள் என்பதை யதார்த்தமாக சித்தரிக்கும் இப்படத்தில் ஆடம்பரமான காட்சிகள் அநாவசிய உரையாடல்கள் எதுவுமில்லை. காலையில் ஆரம்பமாகும் கதை சிறிது நேரத்திலேயே முடிவில்லாத முடிவுடன் முடிகின்றபோதும்- திருமணத்தின் பின் கணவன் –மனைவி உறவும், ஒழுக்கமும் உயர்ந்த அளவுக்கு பேணப்பட வேண்டியதின் அவசியத்தை சொல்லாமல் சொல்கிறது.

குடிகாரத்தந்தை தூக்கத்தில் இருக்க தாய் சிரமப்பட்டு மகனை பாடசாலைக்கு அனுப்ப, சிறுவன் ஹெலிகாப்டர் பறக்கும் சத்தம் கேட்டு பயந்து பள்ளிக்கு செல்லாது வீட்டுக்குத் திரும்பி வருகின்றான். பெற்றோர் சமாதானம் செய்து அவனை மீண்டும் பள்ளிக்கு அனுப்புகின்றனர். வழியில் வம்பளக்கும் சிலர் அந்த சிறுவனின் தாயாரின் நடத்தை சரியில்லை என ஏளனம் செய்ய -அது சிறுவன் மனதில் முள்ளாக தைத்து  வீடு திருப்பியவனுக்கு, தாயைக் காண வில்லை என்பது அதிர்ச்சி.

 ‘அம்மா எங்கே?’ அன்று கேட்கும் சிறுவனிடம்  இன்னொரு பெண்ணை அழைத்து வந்து ,’இண்டு முதல் இவள் தன் உன்ரை  அம்மா’ என்று சொல்லி அவளையும் என்று அறிமுகப்படுத்த- அவன் தகப்பனையும் புதிய தாயையும் வெறுத்து வீட்டை விட்டு வெளியேறுகின்றான்— வழியில் முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து இறங்கி மகனை அழைக்கும்  தாயும் ஒரு புதிய துணை
தேடியதைக் கண்டு சிறுவன் விரக்தியோடு கால் போனபோக்கில் போகிறான். அப்போது ஹெலிகாப்டர் பறக்கிற சத்தம் கேட்கிறது.சிறிது நேரத்துக்கு முன்பு எந்த ஹெலிகாப்டர் ஓசை பயங்கரமாகத் துரத்தியதோ... அந்த ஓசை அவனுக்கு  பயங்கரத்தை தரவில்லை.

ஒன்றாக இருந்த தாயும் தந்தையும், புதிதாக தேடிய துணைகளால் இரண்டு குடும்பமாக சிறுவன் ஏக்கம் ஏமாற்றம் ஆகியவற்றோடு தனி வழி செல்கின்றான் . இப்படியே போனால் சமூகம் ஒழுக்கம் விழுமியம் எல்லாம் என்னாவது என்ற அச்சமும் எழுகிறது., பெற்றோர் சுற்றம் சமூகம் என வளர வேண்டியவன் எல்லாவற்றையும் இழக்கும்போது சமூக விரோதியாகவும் மாறலாம் என்ற எச்சரிக்கைச் சைகையையும் எதிரொலிக்கும் குறும்படமாக வும் இதனை பார்க்கலாம்

அடுப்பில்  விறகு எரியும் காட்சியோடு ஆரம்பமாகும் படத்தில் ஔவை யாரின் ஆத்திசூடி வசனங்களை மனனம் செய்து, தாய் சொல் கேட்டு பாடசாலைக் கொப்பியில் எழுதும் சிறுவன்- அதே அறையில் சாரத்தால் போர்த்துப் படுத்து உறங்கும் தந்தை என - வீட்டு நிலைமையை காட்டுவதும் – சிறுவன் காலணி அணியும்போதும்- பள்ளிகூட சீருடை புத்தகப்பையுடன் புறப்படும்போதும் காமராவின் அண்மைப் பார்வை நன்றாகவே உள்ளது

பனைஓலை மட்டையால் அடைக்கப்பட்ட வேலி – வேலியிலிருக்கும் பொட்டால் வெளியே வரும் நாய் ஆகியவற்றை இயக்குனர் அவதானிக்க வைத்துள்ளார்.

சின்ன  சின்ன உரையாடல்கள் ஆங்கில உப தலைப்புகளுடன் அமைக் கப்பட்டிருப்பதால் மொழி தெரியாதவர்களும் படத்தையும் உரையாடல் களையும்  இலகுவாகப்  புரிந்து கொள்ள முடியும்.

 வருணன்  வருணன் ,சமந்த தசநாயக்க ,சஞ்சீவ அபயக்கோன் என தமிழ் சிங்கள கலைஞர்கள் சேர்ந்து உருவாக்கிய குறும்படம் குழந்தைகளை பெற்றோர் அரவணைத்து வளர்க்கவேண்டியதை வலியுறுத்து கின்றது --  
                                          
                            உடுவை .எஸ் .தில்லைநடராஜா 

No comments: