Thursday, March 20, 2014

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலை தான் ---உடுவை தில்லைநடராஜா



‘சுடர் ஒளி ‘ ஞாயிறு வார வெளியீடு ,2014 மார்ச் 09 –சுடர் வலம் பகுதியில் பிரசுரமானது

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலை தான்
உடுவை தில்லைநடராஜா

 
தேவன் –யாழ்பாணம்  எழுதிய தெய்வீகக் காதல் , 

சொக்கனின் இராஜ இராஜசோழன் ,சங்கிலி 

யோகநாதனின் 

கல்லறைக்காதல் ,கணேசபிள்ளையின் அசட்டு மாப்பிள்ளை 



,சி.சண்முகத்தின் வாடகை வீடு ஆகிய நாடகங்கள்  எனக்கு புகழைத் தேடித்தந்தன .



அரசில் உயர் பதவி வகிப்பவர்: இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடம் பிடித்து வைத்திருப்பவர் ; ஆன்மிகப் பக்கத்திலும் தடம் பதித்தவர் ;ஓய்வின்றி வேலை செய்யும் நிலையிலும் நாடகத்துக்கென நேரம் ஒதுக்கி நாடக மேடையிலும் முத்திரையைப் பதித்தவர் உடுவை தில்லை நடராஜா .
மாணவப்பருவத்திலேயே பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதியிருந்தார். தில்லைநடராஜா என்ற பெயரில் வேறு இருவர் எழுதிய ஆக்கங்களை இவர் எழுதியதாக சிலர் பாராட்டிய போது, தனக்கென ஒரு தனித்துவமான பெயர் வேண்டும் எனச்சிந்தித்து உடுவை தில்லைநடராஜா என்று எழுதி தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தினார் .

சில்லையூர், தாளையடி , தெளிவத்தை , வதிரி என ஊர்ப் பெயரைச்சொன்னதும்  எழுத்தாளார்களின் பெயர் பிரதிபலிப்பது போல உடுவை என உச்சரித்தாலே தில்லைநடராஜா என்ற பெயர் மனதில் ஒட்டிக் கொள்ளும் –பதிந்து கொள்ளும்.

உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் ஜி .சீ .ஈ .சா /த வரை படித்த பின் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உயர்தரம் கற்றார். மாணவப் பருவத்தில் நடிக்க ஆரம்பித்த உடுவை தில்லைநடராஜா அரசில் உயர் பதவி வகித்த போதும் நடிப்பைக் கைவிடவில்லை. நடிகர்கள் கேவலமானவர்கள் அல்லர்; உயர்வாகப் பார்க்கப் படவேண்டியவர்கள் என நிரூபித்துள்ளார்.தனது நாடக அனுபவங்களை மனம் திறந்து வெளிப்படுத்துகின்றார்.

கே : சிறுவயதிலேயே எழுத்து, நாடகம் இரண்டிலும் தடம் பதித்தீர்கள்-இது எப்படிச்சாத்தியமானது ?

ப :அப்பா தான் காரணம். பாடசாலையில் படிக்கும் போதே புத்தகங்கள் வாங்கித்தருவார். கூட்டங்கள், படம், நாடகம் ஆகியவற்றுக்குப் போகும்படி கூறுவார். கல்கண்டு, கரும்பு, ஆகிய புத்தகங்களை விரும்பிப் படித்தேன். படித்து முடிந்ததும் கதையைக் கேட்பார். படம் , நாடகம் என்றாலும் அப்படித்தான்.இலக்கியம், அரசியல் கூட்டம் முடிந்ததும் அங்கு நடைபெற்றதைக் கூற வேண்டும். மறு நாள் பத்திரிகையில் நான் சொல்லாத தகவல் ஏதும் வந்தால் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார். அந்தப் பயிற்சி பின்னாளில் உயர் பதவி வகிக்கும் போதும் எனக்கு உதவுகின்றது.
கே : மாணவப்பருவத்து எழுத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது ?
ப : பத்திரிகைகளில் எனது பெயருடன் –படத்துடன் கதைகள் பிரசுரமானபோது தனி உலகத்தில் மிதந்தேன்.ஆசிரியர்களும் மாணவர்களும் என்னைப்பற்றி உயர்வாகப்பேசினர். ஈழநாடு, சுதந்திரன் ஆகியவற்றில் எனது எழுத்துகள் வெளியாகின. அப்போதே சில தொடர்கதைகளும் எழுதினேன்.ராஜகோபால், சிவகுருநாதன் ஆகியோர் நான் எழுதுவதற்கு உற்சாகப்படுத்தினர் .அப்பா வேலைசெய்த தில்லைப்பிள்ளை கிளப் லக்ஷ்மி விலாஸில் டொமினிக் ஜீவா போன்றவர்களின் பழக்கம் உண்டானது.
கே.கே.எஸ் .வீதியிலுள்ள தமிழ்ப் பண்ணை புத்தகசாலை, லங்கா புத்தகசாலை, மறவன்புலவு சச்சிதானந்தனின் தந்தையார் நாடாத்திய காந்தா அச்சகம் புத்தகசாலை ஆகியவற்றுக்கு அடிக்கடி செல்வதனால் அதிகமான புத்தகங்களைப் படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. காசு கொடுக்காமல் அதிக புத்தகங்களைப் படித்தேன். இந்த அனுபவம் அரசில் பதவிகள் வகித்த போதும் கடமை நேரத்தில் கோவிலுக்கு போவதற்கும், புத்தகங்கள் படிப்பதற்கும் வசதி ஏற்படுத்தித் தந்ததோடு –பணக்கொடுப்பனவுகளையும் பெற்றுத்தந்தது. தணிக்கை ச்சபை உறுப்பினராக இருந்ததனால் படம் பார்க்க காசு தந்தார்கள்.இவையெல்லாம் மற்றவர்களை விட எனக்குப் புதுமையான அனுபவங்கள்.

கே: நாடகத்தின்பக்கம் உங்கள்பார்வை எப்போது திரும்பியது ?

ப : அருள்.எம்பெருமான் தான் எனக்கு முதன்முதலாக நடிக்கச் சந்தர்ப்பம் தந்தார். அதன் பின்னர் திருமதி.சிவராஜா எனக்கு நாடகப் பயிற்சி தந்தார். அருள்.எம்பெருமானின் ‘உலகம் போற போக்கை பாரு’, திருமதி.சிவராஜாவின் ‘சகுந்தலை ‘ ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நானே எழுதி நெறிப்படுத்திய ‘சிங்கப்பூர் சிங்காரம்’, ‘கண் திறந்தது’ ஆகியவை பாடசாலைக் காலத்தில் எனக்குப் பெருமை தேடித்தந்தன.

கே: நாடகத்தில் நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் ?

ப : மிகவும் பெருமையாக இருக்கும். அரசனாக நடிக்கும்போது அம்மாவின் பட்டுச்சேலையை அவவுக்கு தெரியாமல்தான் கொண்டு போவேன். அதை இரண்டாக மடித்து தாறுபாச்சிக் உடுத்துவார்கள்.பருத்தித்துறையிலிருந்த சீன் சிவலிங்கம் என்பவரிடம் தான் அரச உடுப்பு வாங்குவேன். முகத்துக்கு முத்துவெள்ளை அரிதாரம் பூசி, கன்னத்தில் றோஸ் நிற பவுடரும் பூசி விடுவார்கள். சப்பாத்துக்கு தங்க நிற சரிகைக் கடதாசி ஒட்டி, கார்ட் போர்டை வளைத்து முன்னுக்கு கூர் வைத்து வடிவமைபோம். மேக்கப் செய்வதை சிலர் வந்து புதினம் பார்ப்பார்கள். புதினம் பார்க்க வரும் சிறுவர்களைக் கலைப்போம். எல்லாம் கொஞ்ச நேரம் தான். பிறகு மேக்கப் அரிக்கத் தொடங்கும்.தலையில் வைத்த டோப்பா மணம் ஒரு மாதிரியிருக்கும். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு நடிப்போம். வீட்டுக்கு வந்து தேங்காய் எண்ணெய் போட்டுத்தான் மேக்கப்பை களைய வேண்டும்.

கே: நாடகமேடை அனுபவத்தில் உங்களைப் பாதித்த சம்பவம்?

ப : யாழ்.இந்துக்கல்லூரி வைர விழாவின்போது தேவன் –யாழ்ப்பாணம் எழுதி நெறிப்படுத்திய ‘தெய்வீகக் காதல்’ நாடகத்தில் கம்பனாக நடித்தேன். எனக்கான ஒப்பனை முடிந்ததும் அங்கு வந்த ஆசிரியர் சொக்கன் என்னைப் பார்த்தார். தம்பி, “கம்பன் ஆழ்வார் –வீபூதி பூசுவதில்லை.ஒப்பனையை மாற்று” என்றார். அவரின் ஆலோசனை எனக்குப் பிடிக்கவில்லை. நான் ஏறு மாறாகப் பேசி விட்டேன். நாடகம் முடிந்ததும் எனது நண்பர்களான பாமா ராஜகோபால்,சசி சபாரட்ணம்,பெருமாள், கோபு ஆகியோர் ஒப்பனையின் குறையை சுட்டிக்காட்டினார்கள். அதன் பின் ஆசிரியர் சொக்கனிடம் நான் மன்னிப்பு கேட்டேன்.

கே: உங்களுக்கு புகழைத்தேடித்தந்த நாடகங்கள் எவை ?

ப: தேவன் –யாழ்பாணம்  எழுதிய தெய்வீகக் காதல் , சொக்கனின் இராஜ இராஜசோழன் ,சங்கிலி யோகநாதனின் கல்லறைக்காதல் ,கணேசபிள்ளையின் அசட்டு மாப்பிள்ளை ,சி.சண்முகத்தின் வாடகை வீடு ஆகிய நாடகங்கள்  எனக்கு புகழைத் தேடித்தந்தன.

கே: யாழ்ப்பாணத்தில் நாடகம் நடித்த நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடிப்பதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது ?

ப: முதன் முதல் வேலை கிடைத்து பொலீஸ் தலைமை அலுவலகத்தில் எழுதுவினைஞனாக பதவியேற்றேன். பின்னர் வவுனியா பொலீஸ் அலுவலத்தில் வேலை செய்தபோது, வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட திறந்தவெளி அரங்கு திறந்து வைக்கப்பட்டது. எனக்கு பழையபடி நாடகவியாதி பிடித்துக்கொண்டது. அங்கு நண்பர்களுடன் நாடகங்கள் நடித்தேன். அப்போதுதான்  சோ.இராமேஸ்வரன், மு.பாக்கியநாதன், அவரின் தம்பி பாக்கியராஜன்,வதிரி.சி.ரவீந்திரன், ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது. கொழும்புக்கு மாற்றலாகிய பின் வரணியூரான் (புளுகர் பொன்னையா )எஸ்.எஸ்.கணேசபிள்ளையும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதன் பின் எனது வளர்ச்சியைப் பார்த்து நானே வியந்திருக்கிறேன்.

கே: கொழும்பு நாடக அனுபவம் எப்படி இருந்தது ?

ப: மில்க் வைட் சோப் நிறுவன ஆதரவில் வெள்ளவத்தை இராம கிருஷ்ண மிஷன் மண்டபத்தில் ‘அசட்டு மாப்பிள்ளை’ நாடகம் நடந்தது. நாடகம் முடிந்ததும் நடிகர்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் உடை மாற்றிக்கொண்டிருந்ததால் என்னை அழைக்கத் தாமதமானது..அப்போது சபையிலிருந்து தில்லைநடராஜா என்று பலர் சத்தம் போட்டார்கள். வவுனியாவிலிருந்து வந்த நண்பர்கள் தான் சத்தம் போட்டதாக பின்னர் அறிந்து கொண்டேன்.

கே: நாடகங்களை அரங்கேற்றுவது இலகுவாக இருந்ததா ?

ப: நடிக்கும்போது அந்தப் பிரச்சினை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. மேடையேற்றும் போது தான் பிரச்சினைகள் தெரிய ஆரம்பித்தன. நான் பொலீஸ் திணைக்களத்தில் வேலை செய்ததாலும் எல்லோருடனும் நட்பு பாராட்டியதாலும் எல்லோரும் உதவி செய்தார்கள். வாகன வசதி, நிதியுதவி எல்லாம் தாராளமாகக் கிடைத்தது.

கே: பின்னர் அரச உயரதிகாரியான பின்பும் நீங்கள் நடிப்பதை நிறுத்தவில்லையே – என்ன காரணம் ?

ப: நடிப்பது ஓர் இழிவான செயலல்ல- உயரதிகாரியான பின் என் திறமையை வெளிக்காட்டுவதில் தவறில்லை. எனக்குக் கீழே இருப்பவர்களும் அப்போதுதான் அவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப் படுத்துவார்கள். இளவாலை ஹென்றி அரசர் பாடசாலையின் நிதியுதவிக்காக அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடத்த எஸ்.எஸ்.கணேசபிள்ளையிடம் கேட்டார்கள்.’தில்லை நடித்தால் தான் தயார் என்றார். அப்போது நான் அரச அதிபராக இருந்தேன். என்னிடம் கேட்டார்கள். நானும் ஒப்புதலளித்தேன் . எல்பின்ஸ்டன் அரங்கில் நடைபெற்ற அந்த நாடகத்தின் மூலம் பல லட்சம் ரூபா நிதி சேர்ந்தது. எனது உதவியால் அதிகளவு நிதி சேர்ந்ததையிட்டு நான் சந்தோசப் படுகிறேன்.

கே: உங்களின் திறமையை நீங்கள் எப்படி பட்டை தீட்டி னீர்கள் ?

ப: அப்படி ஒரு சந்தர்ப்பம் எனக்கு வவுனியாவில் கிடைத்தது. மேடைகளில் பட படவென அடுக்கு வசனங்களில் அறிவித்தல் செய்தபோது நண்பர்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டினார்கள். எனது அறிவிப்புகளை ஒலிப்பதிவு செய்து போட்டுப்பார்த்தபோது – தவறுகளை உணர்ந்தேன். அதன் பின்னர் எப்படி அறிவிப்பு செய்யலாம் எனப் பேசிப்பார்த்து ஒத்திகை செய்தேன்.

கே: நாடகத்தின் பக்கம் அதிக அக்கறையுடன் நீங்கள் செயற்பட ஊக்கம் தந்தது யார்  ?

ப: எனது அம்மாவின் தாயார் பாடசாலை நாட்களில் வல்லிபுரக் கோவிலுக்கு கூட்டிக்கொண்டு போவார் .கோவிலில் நடைபெறும் நாடகங்களைப் பார்ப்பேன். தேர்த்திருவிழாவுக்கு முதல் நாள் மாலையில் வீட்டிலிருந்து கால் நடையாகச் செல்வோம். தேர்த்திருவிழாவன்று இரவு நாடகங்களை பார்த்து விட்டு, அடுத்த நாள் தான் வீட்டுக்கு வருவோம். நடிகமணி வி.வி.வைரமுத்து, கொக்குவில் செல்வராஜா ஆகியோரின் நாடகங்கள் எமது ஊரில் போட்டிக்கு நடை பெறும். வீரபத்திரர் ஆலய முன்றலில் செல்வராஜாவின் நாடகமும் –விதானையார் படலையில் வி.வி.வைரமுத்துவின் நாடகமும் நடை பெறும். ஏட்டிக்கு போட்டியாகவும் விளம்பரம் செய்வார்கள். அரிச்சந்திர மயான காண்டம் நாடகத்தை பலரது நடிப்பில் பார்த்திருகின்றேன் . ஆனால் வி.வி.வைரமுத்துவுக்கு ஈடு இணை யாருமில்லை.

கே: மறக்க முடியாத அனுபவம் ?

ப: பளைக்கும் கொடிகாமத்துக்கும் இடையில் உள்ள எழுதுமட்டுவாள் என்ற ஊரில் நடைபெற்ற நாடகவிழாவை முடியாது.வானொலி மேடைக் கலைஞர்கள் நடிக்கும் ஆறு நாடகங்கள் ஓரிரவில் நடைபெறும் என்று ஒரு வாரமாக விளம்பரம் செய்தார்கள். மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாக வேண்டிய நாடகவிழா இரவு பத்து மணிக்குத்தான் ஆரம்பமானது. ஆறு நாடகங்களும் காலை மூன்று மணிக்கு முன்பாகவே முடிந்து விட்டது.நாடகம் பார்க்க வந்தவர்கள் கலைந்து போகவில்லை. இன்னும் நடியுங்கோ அல்லது பாடுங்கோ என்றார்கள். எங்களுக்கும் சந்தோஷம்.எம்மவர்கள் மேலதிக திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.கடைசியாகத் தான் எமக்கு உண்மை தெரிய வந்தது.அதிகமானவர்கள் அயற் கிராமங்களிருந்து  மாட்டு வண்டிகளில் வந்தவர்கள்.அவர்கள் வரும்போது அரிக்கன் லாம்பு கொண்டு வரவில்லை.விடியும் வரை காத்திருக்க வேண்டும் என்பதால் எங்களை நடிக்கும்படி கூறினார்கள்,

கே: மேடை நாடகங்கள் இன்று கொழும்பில் குறைந்து விட்டதே; என்ன காரணம் ?

ப: தொலைக்காட்சி எல்லோரையும் வீட்டுக்காவலில் சிறை வைத்துள்ளது. நாடகம் முடிந்த பின் தாமதமாக வீடுகளுக்கு போவதற்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லை.
வெள்ளவத்தையில் நாடகம் பார்த்துவிட்டு, இரவு ஒன்பது மணிக்குப்பின் கொட்டாஞ்சேனை, மட்டக்குளி ஆகிய இடங்களுக்கு பொதுப் போக்குவரத்து வசதிகள் இல்லாமையினால் பார்வையாளர்கள் செல்வதில்லை. நாங்களும் இதைப் பலமுறை அனுபவித்திருக்கின்றோம்.

கே: உங்கள் அனுபவம் என்ன ?

ப: ஒரு தடவை பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் வரணியூரானின் ‘அசட்டு மாப்பிள்ளை’ நாடகம். கணேசபிள்ளை,அவரின் தம்பி அச்சுதம்பிள்ளை,இப்போது சுவிற்சலாந்தில் இருக்கும் குணபதி கந்தசாமி ஆகியோரோடு நானும் நாடகம் முடிந்த பின் கொட்டாஞ்சேனைக்குப் போக வேண்டும். இன்று போல அந்த நாட்களில் ஆட்டோ இல்லை. டாக்சியை தேடிப்பிடித்தாலும் செலவு அதிகம். கையைக்கூடக் கடிக்கும். பம்பலப்பிட்டியில் இரவுச்சாப்பாடு சாப்பிட்டுவிட்டு புறக்கோட்டைக்கு பஸ்ஸில் போனோம். நாங்கள் நால்வரும் புறக்கோட்டை பஸ் நிலையத்தில் லோங்சை கழட்டிவிட்டு, சாரத்தைக் கட்டிக்கொண்டு, குடித்துவிட்டு வெறியில் அடிபடுபவர் போல நடித்துக்கொண்டு கொட்டாஞ்சேனைக்கு போனோம். அந்த நேரம் திருடர் பயமும் இருந்தது. அதற்காகவே குடிவெறியில் சண்டித்தனம் செய்வது போல் நடித்துக்கொண்டு சென்றதால் கைக்கடிகாரம் உட்பட பல பொருட்களை பறிகொடுக்க வில்லை.

கே: பயிற்சியளித்தால் நடிப்பதற்கு ஆர்வம் உள்ளவர்கள் முன் வருவார்களா ?

ப: கொழும்பிலே மிகவும் குறைவான சாத்தியமே உள்ளது. முன்பு ராஜேந்திரம் மாஸ்டர் பல முயற்சிகள் செய்ததாக கேள்விப்பட்டது , அன்டனி ஜீவா, கலைச்செல்வன், மட்டக்களப்பில் பேராசிரியர் மௌனகுரு, யாழ்ப்பாணத்தில் குழந்தை சண்முகலிங்கம் ஆகியோர் தமது பகுதிகளில் பல முயற்சிகள் செய்து வருவருவதாக அறிந்துள்ளேன்.

கே: நீங்கள் நடிப்பதைப்பற்றி உங்களுக்கு இணையான உயரதிகாரிகள் என்ன கருதுகிறார்கள் ?

ப: அவர்களும் அதை வரவேற்கிறார்கள். வடகிழக்கு ஆளுநர் காமினி பொன்சேகாவுடன் நான் பணியாற்றிய போது,நடிகனுக்கு முன்னால் இன்னொரு நடிகன் என்று பெருமையாகக் கூறினார். சில ஒன்றுகூடல்கள் –விருந்துகளின் போது மற்றவர்வர்களை மகிழ்விக்க சில அளிக்கைகளை வழங்குவார்கள். சிலர் பாடுவார்கள்; சிலர் நடனம் ஆடுவார்கள். சிலர் நடிப்பார்கள்.சிலர் நடிப்பென்று சொல்லாமல் எதாவது வேடிக்கை செய்வார்கள். அண்மையில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலொன்றில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் இராப்போசனம். ஊடக படப்பிடிப்பாளர் விஜயபாலன் ஏ..எம்.ஜெயசோதியைக் காட்டி அவர் ஒரு நல்ல நடிகை என்றார். அங்கிருந்த ஜெயசோதியுடன் கதைத்து விட்டு மண்டபத்துக்கு வெளியே நான் சென்றதும், அவர் பெரிய சத்தத்தில் உடுவையைக் கண்டீர்களா என பெண்களிடம் கேட்டார்.  அனைவரும் என்னைத்தான் தேடினார்கள் - ஊடக படப்பிடிப்பாளர் விஜயபாலனும் தேடினார். மண்டபத்தில் நான் நுழைய ஜெயசோதி என்னுடன் வாய்த் தர்க்கம் இட எல்லோரும் ஏதோவொரு சண்டையைப் பார்ப்பது போல தடுமாறினார்கள். பின்னர் தஹான் அது நடிப்பு என அறிந்து சிரித்த சத்தத்தில் காலி வீதியால் சென்றவர்களும் என்னவோ எதோ வென்று விசாரித்தார்கள் .

கே: தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளீர்களா ?

ப: சித்தாலேப வர்த்தக ஊக்குவிப்புக்காக ரூபவாஹினியில் நான் எழுதிய  “புதிய அத்தியாயத்தின் ஆரம்பம் “ நாடகப்பிரதியை எஸ்.விஸ்வநாதன் நெறியாள்கை செய்ய நானும் நடித்தேன்.

கே: வேறு நாடகங்கள் எழுதியுள்ளீர்களா ?

ப: பாடசாலைக்கால  மேடை நாடகங்கள், ‘சங்கடமான சமையல்’ உட்பட சில வானொலி நாடகங்கள், ஈழநாடு பத்திரிகை 10 ஆவது ஆண்டு விழா நாடகப்போட்டியில் பரிசில் பெற்ற “பூ மலர் “ ஆகியன.

கே: உங்கள் நாடக உலக வெற்றிக்கு யார் காரணம் ?

ப: எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் தந்தவர்களும் என்னுடன் நடித்தவர்களும் தான் காரணம்.மயில்வாகனம்  சர்வானந்தா,கணேசபிள்ளை,இளவாலை ஜேசுரத்தினம், குணபதி கந்தசாமி, ஏ.சிவதாசன்,ராஜபுத்திரன் யோகராஜா,ரெஜினோல்ட் வேதநாயகம்,மேர்வின் மகேசன்,கணேசராஜா,சக்திதரன்,நாகேசு தர்மலிங்கம், சந்திரபிரபா மாதவன்,விஜயாள் பீட்டர்,கமலினி செல்வராஜன்,ஏ .எம்.சி .ஜெயஜோதி போன்றவர்களின் ஒத்துழைப்பும் எனது வெற்றிக்கு காரணம்.

கே: எதிர்கால நாடக உலகம் எப்படி இருக்கும் என நினைக்கின்றீர்கள் ?

ப: பல்கலைக்கழகத்தில் ‘நாடகமும் அரங்கியலும்’ பயிலும் நெறியாக இருப்பதால் புதிய எழுச்சி பெறும் என எண்ணுகின்றேன்.

நேர் காணல் : ரவிவர்மா 

1 comment:

வர்மா said...

நன்றி
அன்புடன்
வர்மா