Saturday, July 21, 2007

விருந்து


கொழும்பு நகரில் நாகரீகமானவர்கள் வாழும் பெரிய மாடமாளிகைள் நிறைந்திருந்த கல்லூரி வீதியில் செல்வரத்தினத்தின் மாடி வீட்டை பார்த்தபடி இருந்தது ரங்கனின் சிறிய தகரக் கொட்டில், செல்வரத்தினத்துக்கு கார் நிறுத்தும் கராஜாகப் பயன்பட்ட அந்தக் கொட்டில் இன்று ரங்கனின் வீடாக மாறியிருக்கிறது. வீடு என்று சொல்வதை விட இன்றோ நாளையோ இடிந்து விழும் இறுதிக் கட்டத்திலுள்ள கொட்டில் என்று சொல்வதே பொருந்தும். இற்றுப் போன பழைய தகரங்களால் மூன்று பக்கங்களும் சுவர் போல அடைக்கப்படடிருந்த அந்த வீட்டை சாதாரணமான மனிதன் தள்ளினாலும் போதும்! தரை மட்டமாகிவிடும். அந்தத் தகரக் கொட்டிலில் தான் ரங்கனும் அவன் மனைவி சரோஜாவும் , அவர்களிருவரும் பெற்ற செல்வம் காந்திமதியும் குடியிருந்தார்கள்.


பெற்றோரை இழந்து அனாதையாக வளர்ந்த சரோஜாவும், ஆதரிக்க யாருமில்லாமல் வாழ்ந்த ரங்கனும் எப்படியோ ஒருவரையொருவர் கண்டு காதலித்து, ஏழ்மையின் ஆசியோடு கணவன் மனைவியாயினர்.


பணக்காரன் செல்வரத்தினம் புதிய ‘பென்ஸ்’ கார் வாங்கிய போது, புதிதாக கராஜ் ஒன்றையும் கட்டுவித்தார். இடிந்து விழும் நிலையிலிருந்த பழைய கராஜ்ஜையுமு; பணமாக்க விரும்பிய செல்வரத்தினம் அதை ரங்கனுக்கு வாடகைக்குக் கொடுத்தார். அந்தத் தகரக் கொட்டிலுக்கும் வாடகை இருபத்தைந்து ரூபா ரங்கனும் சரோஜாவும் இருபத்தைந்து ரூபா வீட்டில் இல்லற வாழ்க்கை நடாத்த ஆரம்பித்தார்கள்.
கோட்டையிலுள்ள அலுவலங்களில் வேலை செய்யும் உத்தியோகத்தர்களுக்கு , அவரவர் வீட்டிலிருந்து மத்தியானச் சாப்பாட்டைக் கொண்டு சென்று கொடுப்பது தனர் ரங்கனின் வேலை. சரோஜாவைக் காதலிக்கு முன்பே சேகரித்த பணத்திலிருந்து ஒரு பழைய சைக்கிளை வாங்கி வைத்திருந்தான் ரங்கன். சரோஜா அவன் வாழ்க்கைக்குத் துணையாக இருந்தது போல சைக்கிள் அவன் தொழிலுக்குத் துணையாக இருந்தது.


காலை ஒன்பது மணிக்கு மேல் தனது சைக்கிளையும் எடுத்துக் கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கி, சைக்கிளின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் மரப் பெட்டியில் அடுக்கி வைப்பான். வீடு வீடாகச் சென்று சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்குவதற்குள் நேரம் பதினொரு மணியைத் தாண்டி விடும். அதன் பின்பு மழையோ வெய்யிலோ இரண்டுமே ரங்கனுக்குத் தெரியாது. சைக்கிளை வேகமாக உதைந்து கொண்டு கோட்டைக்குச் செல்வான்.


கோட்டையில் ஒவ்வொரு கந்தோரின் முன்னாலும் சைக்கிளை நிறுத்திவிட்டு, சாப்பாட்டுப் பொட்டலங்களை எடுத்துக் கொண்டு போய் சாப்பிடும் அறைகளில் வைத்துவிட்டு வருவான். இப்படியாக ஒவ்வொரு கந்தோரும் ஏறி இறங்கிச் சென்று கொண்டிருக்க நேரம் ஒரு மணியாகிவிடும்.


பெட்டியிலிருந்த சாப்பாட்டுப் பொட்டலங்களை கந்தோர்களில் கொடுத்த பின்பும், ஒரு பொட்டலம பெட்டியின் மூலையொன்றில் ஒளிந்து கொண்டிருக்கும். அந்தப் பொட்டலம் உத்தியோகத்தர்களுக்காகக் கொடுக்கப்பட்டதல்ல. தன் அன்புக் கணவன் சாப்பிடுவதற்காகச் சரோஜா கட்டிக் கொடுத்த பொட்டலம் தான் அது.


எல்லோருக்கும் சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கொடுத்த பின்பு சரோஜா கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்துடன் செனேற் கட்டிடத்துக்குப் பக்கத்திலுள்ள கோட்டன் பார்க்குக்குச் செல்வான் ரங்கன். பூந்தோட்டத்தின் ஒரு கரையிலுள்ள பெரிய மரம் தான் அவனது சாப்பாட்டு அறை. அதன் கீழிருந்து பொட்டலத்தை அவிழ்த:த சாப்பிட்டு விட்டு, பூந்தோட்டத்திலுள்ள குழாயிலிருந்து நீரை இரண்டு கைகளாலும் ஏந்திக் குடிப்பான். உண்ட களை தீர மர நிழலில் ஒரு துண்டை விரித்து சிறிது நேரம் தூங்குவான். மீண்டும் ஒவ்வொரு கந்தோருக்கும் சென்று சாப்பாட்டுக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு வீடுகளிலும் ஒப்படைப்பான்.ரங்கன் எப்படியும் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட நூறு ரூபா வரையில் உழைத்து விடுவான். ரங்கனின் உழைப்பை வைத்து சரோஜா சிக்கன சீவியம் நடத்தி வந்ததால்தான் பிறருக்கு கடமைப்படாதவாறு இவர்கள் காலத்தைக் கழிக்க முடிந்தது.


குறைந்த வருவாயில் சிறந்த வாழ்க்கை நடாத்துகிறார்களே என்று கல்லூரி வீதியிலுள்ளவர்கள் அடிக்கடி மனதுக்குள் புழுங்கியதாலோ என்னவோ அவர்களின் வாழ்க்கையிலும் புயல்வீச ஆரம்பித்தது.
ஒரு நாள் மாலை நாலு மணிக்குக் கந்தோரிலிருந்து சாப்பாட்டுக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். கபூர் பில்டிங் சந்தியில் திரும்பும் போது லொறியென்ற உருவத்தில் வந்த விதி, ரங்கனின் கால்களில் ஒன்றைக் கவர்ந்து கொண்டு சென்றது.


காலம் செய்த கோலத்தால் காலில்லாதக் கணவனை வைத்துக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும், காந்திமதியைப் படிப்பிக்க வேண்டிய பொறுப்பும் சரோஜாவின் தலையில் விழுந்தன. பக்கத்திலுள்ள பெரிய வீடுகளுக்குச் சென்று பணிவிடைகள் செய்தாள். பாத்திரங்கள் கழுவிக் கொடுப்பது, வீடுவாசல் பெருக்குவது, சந்தைக்குச் சென்று சாமன்கள் வாங்கி வருவது எல்லாம் சரோஜாவின் வேலை.


ரங்கனுக்கு கிடைத்த அளவு சம்பளம் சரோஜாவிற்குக் கிடைக்காத போதும் அவர்கள் ஒருவாறாக வாழ்ந்து வந்தார்கள்.


சரோஜா வாடிக்கையாக வேலை செய்யும் வீடுகளில் செல்வரத்தினத்தின் வீடும் ஒன்று. அன்று ஒரு புதன்கிழமை சரோஜா வழக்கம் போல செல்வரத்தினத்தின் வீட்டிலுள்ள பாத்திரங்களைக் கழுவிக் கொடுத்துவிட்டு, தன் வீட்டுக்கு வந்ததும் ரங்கனும் சரோஜாவும் தங்கள் தகரக் கொட்டிலைக் கழுவித் துப்பரவாக்கத் தொடங்கினார்கள். வள்ளுவர் தின பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக காந்திமதி கல்லூரிக்குச் சென்று விட்டாள்.


பதினொரு மணியிருக்கும் அப்போது- அந்த வீதி வழியே வருகிறாள் ஒருத்தி. ஏறக்குறைய அவள் வயது இருபத்தெட்டிருக்கும். ஆனால் வறுமையின் வாட்டத்தால் நாற்பதுத் தாண்டி விட்டதுபோன்ற தோன்ற. பல நிறத்துணிகளால் பொருத்தப்பட்ட அவள் சட்டையில பல கிளிசல்களும் இருந்தன. கைத்தறித் சேலையின் கரைகளும் கிழிந்திருந்தன. அவற்றை முடித்துக் கட்டியிருந்தாள்.
அவள் இடுப்பிலிருந்த குழந்தை பசியால் அழுது கொண்டிருந்தது. அவளுக்கு முன்னால் ஆறு வயது சிறுமி ஒருத்தி அதுவும் அவள் பெற்ற பிள்ளை. அந்தச் சிறுமியின் அரையில் அழுக்கடைந்த சிறு பாவாடையொன்று அவளுக்குப் பின்னால் மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் பிறந்த மேனியுடன் வருகின்றான். அதுவும் அவளுக்குப் பிறந்த குழந்தைதான். இரந்துண்டே அவர்கள் நால்வரும் வாழ்க்கை நடாத்தினார்கள்.


பாவம்! தாயும் பிள்ளைகளும் இரண்டு நாட்களாக இரந்திரந்து பார்த்தார்கள் மற்றவர்கள் மனம் இரங்கவில்லை. தண்ணீரால் வயிற்றை நிரப்பிக்கொண்டு தளர்ந்த நடையுடன் வந்து கொண்டிருந்தனர் கல்லூரி வீதி வழியாக, ரங்கனின் தகரக் கொட்டிலுக்குப் பக்கத்திலிருந்த மாடி வீட்டை நோக்கி நால்வரும் சென்றார்கள்.


சாப்பிடுவதற்காக கையைக் கழுவிக் கொண்டு சரோஜாவின் முன்னால் வந்து அமர்ந்தான் ரங்கன். சரோஜா பானையிலிருந்த பழைய சோற்றைக் கோப்பையில் கொட்டி வலக்கையால் பிசைந்து கொண்டிருப்பதை வாயில் நீர் ஊற பார்த்தவாறிருந்த ரங்கன் தற்செயலாக திரும்பிய போது முன் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த பிச்சைக்காரக் குடும்பத்தைக் கண்டான்.


செல்வரத்தினமும் மனைவி மல்லிகாவும் மாடியிலிருந்தவாறே தாயையும் பிள்ளைகளையும் வேண்டா வெறுப்புடன் பார்த்தனர்.தன் இடுப்பிலிருக்கும் குழந்தையின் தலையைத் தடவிக் கொண்டே, “தொரே! சாப்பிட்டு மூணு நாளாச்சு ஏதுனாச்சும் கொடுங்க தொரே” என்றாள் அந்தத் தாய்.


மாடியிலிருந்த கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். “எல்லாம் முடிஞ்சு போயிடுத்து” என்று சொல்லி விட்டு முகத்தைச் சுளித்துக்கொண்டாள் மல்லிகா.
“அம்மா! எனக்கு வேணாம்மா. இந்தக் குழந்தைகளுக்கு ஏதுனாச்சும் கொஞ்சமிண்ணாலும் கொடுங்கம்மா” தகப்பன் இல்லா குழந்தைங்கம்மா. ஏதுனாச்சும் கொடுங்கம்மா!”
அந்த தாயுள்ளம் தனக்காகப் பரிந்து கேட்கவில்லை. தன் குழந்தைகளுக்காகக் கெஞ்சிக் கேட்டது.


மாடி வீட்டு மனிதரின் மனம் இரங்கவில்லை. மனைவி கணவனைக் கோபத்தோடு பார்த்தாள். “இந்தா சாப்பாடெல்லாம் முடிஞ்சு போயிடுத்துண்ணு சொன்னாப் போக வேண்டியது தானே! ஏன் சும்மா கத்திக்கொண்டு நிற்கிறாய்?” என்று மனைவியின் கோபத்தை மொழிபெயர்த்தார், செல்வரத்தினம்.


“ஐயா குழந்தைகளுக்கு....” பெற்றவள் சொல்லி முடிப்பதற்குள்.
“சும்மா சொன்னா கேட்கமாட்டீங்க. இனி நாயைத்தான் கடிக்கவிடவேணும்” என்று சொல்லியபடியே கீழே இறங்கினார் செல்வரத்தினம். மல்லிகாவும் பின்தொடர்ந்தாள்.
“இங்கே ஒன்றுமே கிடைக்காது” என்று எண்ணியபடி வந்த வழியே திரும்பினாள் பிச்சைக்காரி.


மாடியில் நின்ற செல்வரத்தினத்தின் மகன் தான் தின்று முடித்த மாம்பழத்தின் கொட்டையைக் கீழே வீசினான்.
அரைப் பாவாடையுடன் நின்ற சிறுமி, மண்ணில் விழுந்த மாங்கொட்டையை ஆவலோடு எடுத்துச் சூப்பிக் சாப்பிடத் தொடங்கினாள். “அக்கா அக்கா! எனக்கும் கொடு’ என்று அந்தச் சதையற்ற மாங்கொட்டைக்காகக் கெஞ்சினான் சிறுவன்.
தமக்கையும் தம்பியும் மாறி மாறி மாங்கொட்டையை சூப்பிய வண்ணம் தாய்க்குப் பின்னால் சென்றார்கள்.


ரங்கன் தகரத்தைப் பிடித்துக் கொண்டு மெல்ல மெல்ல நடந்து வெளியில் வந்து, “அம்மா! சாப்பிட்டிட்டுப் போங்க” என்று அழைத்தான்.


தாயோடு பிள்ளைகளும் தகரக் கொட்டிலுக்கு வந்தனர். தாங்கள் சாப்பிடுவதற்காக குழைத்த சோற்றைக் கொண்டு வந்து, அந்தப் பெண்ணிடம் கொடுத்தாள் சாரோஜா.


பசியால் கதறித் துடித்த பிள்ளைகளின் வயிறு குளிரக் குளிர, ரங்கனின் முகமும் சரோஜாவின் முகமும் மலர்ந்தன அப்போது...


கல்லூhயிலிருந்து ஓட்டமும் நடையுமாக வந்தாள் காந்திமதி. “அம்மா! எனக்குத்தான் பேச்சுப் போட்டியில் முதற்பரிசு! நூறு ரூபா கிடைச்சிருக்கு” என்று சந்தோசத்துடன் சொன்னாள்.
“என் கண்ணெல்ல” என்றவாறு காந்திமதிறைக் கட்டியணைத்து முத்தமிட்டாள் சரோஜா.


“நீ எதைப் பற்றி பேசினேம்மா?” ரங்கன் தன் மகளைக் கேட்டான்.


“நான் விருந்து பற்றிப் பேசினேப்பா...


“விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா மருந்தெனினும் வேண்டற்பாற்று அன்று”


என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறாரெல்லா. அந்தக் குறளை வைச்சுக்கொண்டு விருந்து பற்றிப் பேசினேனப்பா. அதற்குத்தான் பரிசு” என்றாள் காந்திமதி.

மாடி வீட்டிலே...

“அந்தப் பிச்சைக்கார நாய்களின் தொலை பெரிய தொல்லையாப் போச்சு” என்று முணுமுணுத்தவாறே சாப்பாட்டு அறைக்குள் சென்றனர் செல்வரத்தினமும் மல்லிகாவும், அங்கே மேசையிலிருந்த உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த இரண்டு நாய்களைக அடித்துத் துரத்திக் கொண்டிருந்தான் வேலைக்காரன்.


ராதா - 1968

1 comment:

Anonymous said...

நல்லது ஒரு வசிப்பு விருந்து
எமக்கு வழங்கியதற்க்கு நன்றி
அன்புடன்
தாசன்