Saturday, July 21, 2007

வாசக்கட்டி

(01)
செல்வசந்திநி முருகன், பக்தர்கள் புடை சூழ , பவனி வந்து கொண்டிருந்தார். இறைவனுக்கு முன்னாலும் பின்னாலும் கற்பூரச் சட்டிகளும், காவடிகளும் வந்து கொண்டிருந்தன. வீதி வலம் வந்து கொண்டிருந்த முருகனுக்குப் பின்னால் பாடவல்ல பஜனைக் கோஸ்டியினர் தோத்திரப் பாடல்களைப் பண்ணோடு பாடிய வண்ணம் வந்தனர்.

தொண்டமனாற்றில் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் சந்திநி முருகனைத் தரிசிக்க வந்தவர்களும் , வேடிக்கை பார்க்க வந்த வேறு சிலரும் மற்றவர்களை இடித்து நெருக்கிக் கொண்டு வடக்கு வீதிக்குச் சென்றார்கள். வடக்கு வீதியில் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றுவதற்காகத் துலாக் காவடி எடுக்கவிருக்கும் ஓர்; அடியார் தன்னைத் தயார் செய்து கொண்டு, இறைவனைத் தரிசித்த வண்ணம் நின்றார்.
வடக்கு வீதியில் வந்து திரண்டு கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களைப் பொலிசாரும், சாரணர்களும் தொண்டர் படையினரும் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தனர். கட்டுப்பாட்டுக்கு அடங்காத சிலர் அங்குமிங்கும் ஓடித்திரிந்தனர்.

“அடியார்களே, தயவு செய்து அமைதியாக இருக்கவும்” – பொலிசாரின் வேண்டுகோள் ஒலிபெருக்கியிலிருந்து பல தடவைகள் வெளிவந்துகொண்டிருந்தது. வெளி வீதி சுற்றி வரப்புறப்பட்ட முருகப்பெருமன் மூன்று வீதிகளையும் கடந்து, வடக்கு வீதிக்கு வந்து நின்றார். துலாக் காவடி நடைபெறுவதற்கான ஆயத்தங்களைச் செய்து முடித்தனர் திருவிழாக்காரர்.

“அடியார்களே, துலாக் காவடி எடுக்கும் அன்பர் தனது காவடியுடன் மேலே செல்லப் போகின்றார்” என்று ஒலிபெருக்கி அறிவித்தது. துலா உயர்ந்தப்பட்டது. துலாவின் ஒரு தலைப்பில் துலாக்காவடி எடுக்கும் அன்பர் தொங்கிக்கொண்டிருந்தார். தன் நேர்த்திக் கடனை நிறைவேற்றி வண்ணம் கூப்பிய கரங்களுடன் மேலே வலம் வந்துகொண்டிருந்தார் துலாக்காவடி அன்பர்.

வடக்கு வீதியில் கூடியிருந்த மக்கள் இந்த அற்புதக் காட்சியைக் கண்டதும், பக்திப் பரவசத்தினால் தங்களையும் அறியாமல் “அரோகரா, அரோகரா” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். அரோகரா சொல்லும் மக்கள் கூட்டத்தில் முத்தனும் சேர்ந்து கொண்டான்.

துலாவின் மேலே வலம் வந்த அடியார் பூக்களையும் எலுமிச்சம் பழங்களையும் தமது திருக்கரத்தால் எடுத்துக் கீழே இருந்த பக்தர்களை நோக்கி எறிந்தார்.

அங்கே நின்ற மக்கள் கீழே விழும் எலுமிச்சம் பழங்களையும் , மலர்களையும் ஏந்துவதற்காக “நான்-நீ” என்று போட்டி போட்டுக்கொண்டு ஒருவரையொருவர் இடித்தனர்.
முத்தனும் ஜனக்கூட்டத்தோடு இடிபட்டபடி ஓர் எலுமிச்சம்பழத்தை எட்டிப் பிடிக்க முயன்றபோது, முத்தனின் முதுகைச் சுரண்டிய யையனொருவன் “டே கறுவல் நீயும் துலாக்காவடி பார்க்க வந்திட்டாய்” என்று கேலியாகச் சொன்னான்.

தன்னைக் “கறுவல்” என்று தன்னோடு படிக்கும் மாணவனின் கேலி ஒரு பக்கத்திலும், எலுமிச்சம் பழத்தை இழந்த ஏமாற்றம் மறுபக்கத்திலும் முத்தனுக்கு வேதனையைக் கொடுத்தன.

கிராமத்துப் பள்ளிக்கூடம் ஒன்றில் ஐந்தாவது வகுப்பில் படித்துவந்த முத்தனின் நிறம் கறுப்புத்தான். அவனது தோல் கறுப்பாக இருந்ததால் அவனைக் ‘கறுவல்’ என்று மாணவர்கள் கேலி செய்வது வழக்கம்.

முத்தனின் வேதனை கோபமாக மாறியது. தன்னைக் கேலி செய்த மாணவனைப் பார்;த்து, “டே மூக்குச்சளி, நான் கறுவலெண்டால் நீ பெரிய சிவப்போ, மூதேசி, உன்னைப் பார்த்தால் மூண்டு நாளைக்குச் சோறு தின்னேலாது.” என்று சொல்லிவிட்டு, கேலிக்குப் பதில் கேலி செய்ததில் திருப்தியடைந்தான் முத்தன்.

மற்ற மாணவனும் சும்மா இருக்கவில்லை. மற்றவர்களுக்கு முன்னிலையில் முத்தன் தன்னை “மூக்குச்சளி” என்று கிண்டல் செய்தது அவனுக்கும் பிடிக்கவில்லை.

“போடா வாழைக்காய் தலையா” என்று ஆத்திரத்தோடு சொன்னபடி முத்தனை அடிப்பதற்காகக் கையோங்கினான்.
“என்னடா சூத்தைப்பல்லா ஒரு மாதிரிப்பாக்கிறாய்?” என்று முத்தன் கேட்டுக்கொண்டே மற்றவனைக் கைநீட்டி அடித்துவிட்டான்.

இருவருக்குமிடையில் சண்டை ஏற்பட, அங்கே நின்ற ஒரு பெரியவர் இரண்டு பேரையும் பிடித்துக்கொண்டு, “கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்திலை ஏன் அடிபடுகிறீயள்?” என்று கேட்டார்.

“முத்தனை ஒரு கை பார்க்கவேணும்” என்று எண்ணிக்கொண்டே மற்றவன் அந்த இடத்தைவிட்டு மெதுவாக நகர்ந்தான்.

துலாக்காவடி முடிந்ததும், முருகன் அடியார்களால் பூங்காவன மண்டபத்திற்குத் தூக்கிச் செல்லப்பட்டார். முத்தனும் ஆட்களுக்கிடையில் நுழைந்து நுழைந்து பூங்காவன மண்டபத்தினுள் சென்றான்.

அழகு நிறைந்த பூங்காவன மண்டபத்திலிருந்து நறுமணம் நாலா பக்கங்களுக்கும் பரவியது. முருகன் வள்ளிக்கும் தெய்வானைக்கும் நடுவில் இருந்த வண்ணம் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தார்.

பூங்காவன மண்டபத்திலிருந்து நறுமணம் நாலுபக்கமும் பரவியதுபோல, நாதஸ்வர இன்னிசையும் நாலா பக்கங்களிலும் ஒலித்துக்கொண்டிருந்தது.

எத்தனையோ மக்களின் மனதைக் கவர்ந்த நாதஸ்வர இசை முத்தனுக்கு பிடிக்கவில்லை. “ச்சீ” இதேன் இந்தக் குழலைப் போட்டு சும்மா “ப்பீ பி” எண்டு ஊதுறாங்கள். இந்த இடத்திலை சின்ன மேளத்தை ஆடவிட்டாலும் பார்த்துக்கொண்டு இருக்கலாம்” என்று தனக்குச் சொல்லியபடி பூங்காவன மண்டபத்தை விட்டு வெளியேறினான் முத்தன்.
“சரி நேரம் போகுது. இனி வீட்டை போவம்” என்று எண்ணியபடி தன் இடுப்பில் கட்டியிருந்த கிழிந்த சால்வையை அவிழ்த்துத் தோளில் போட்டான். அவன் சால்வையைப் போட்ட வேகத்தில் தலைப்பில் முடியப்பட்டிருந்த காசு மண்டையில் வந்து அடித்தது.

“ஓ காத்தலை கோயிலுக்கு வெளிக்கிடயிக்கை கடலைக் கொட்டை வேண்டச் சொல்லி அப்பு பத்திச்சதம் தந்தவரல்லே...உப்பிடி உதாலை போய் கடலை வேண்டுவம்.” என்று முத்தன் மற்றவர்களுக்கு சத்தம் கேட்காத வகையில் சொல்லிக்கொண்டு கடைகள் இருந்த பக்கத்தை நோக்கி அங்குமிங்கும் பார்த்தபடி சென்றான். அன்று பத்தாம் திருவிழாவானதால், வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தில் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள். வேறு சிலர் வேடிக்கையாகப் பேசித் தங்கள் வியாபாரப் பொருட்களை விற்றார்கள். இன்னும் ஒரு சிலர் அடியார்களுடன் அன்பொழுகப்பேசி, மட்டமான தரங்குறைந்த சாமான்களை அவர்கள் தலையிலே கட்டிக்கொண்டிருந்தார்கள்.

குடும்ப பொறுப்புள்ள பெண்கள் பாத்திரக் கடையையே விலைக்கு வாங்கி விடுபவர்கள் போல ஒவ்வொரு பொருளையும் கையில் எடுத்து “என்ன விலை? என்ன விலை” என்று கேட்டுவிட்டுப் பாத்திரங்களை இருந்த இடத்தில் வைத்தார்கள். கன்னிப்பெண்கள் காசைக் கொடுத்து கரங்களை அலங்கரிப்பதற்காக அழகிய வளையல்கள் வாங்கினார்கள். சிறுவர்களும் சிறுமியரும் ஐஸ்பழத்தையும் , ஐஸ்கிறீமையும் சுவைத்த வண்ணம் சென்று கொண்டிருந்தனர்.

வளையல் கடைகளுக்கும் பாத்திரக் கடைகளுக்கும் மத்தியில் இருந்த “ஐஸ்கிறீம் கடையொன்று முத்தனின் கண்ணில் பட்டது.
“ஒரு ஐஸ்பழம் வாங்கிக் குடிச்சால்?....நல்ல இதமாயிருக்கும்” என்று எண்ணியவனாய் சால்வைத் தலைப்பை அவிழ்த்து அழுக்கடைந்து போயிருந்த பத்துச் சதத்தைக் கையிலெடுத்ததும் முத்தனின் மனம் மாறிவிட்டது.

“ஐஸ்பழம் வேண்டுற காசுக்கு கடலைக்கொட்டை வேண்டினால் வழி நெடுகக் கொறிச்சுக்கொண்டு போகலாம். ஐஸ்பழமெண்டால் உடனை கரைஞ்சுபோம். உது வெறும் பச்சைத் தண்ணியிலையும் சீனியிலையும் தானே செய்யிறதாம்” இவ்வாறு முத்தனின் உள்மனம் சொல்லியது. முத்தன் கடலை வாங்குவதற்காகக் கடலை விற்கும் கடைக்குச் சென்றபோது, சிறிது தூரத்தில் பலபேர் ஒரு கூட்டமாகக் கூடி நிற்பது அவனுக்குத் தெரிந்தது. என்ன கூட்டம் என்பதை அறியவேண்டும் என்ற ஆவலினால் அந்த இடத்துக்கு முத்தன் ஓடிச்சென்றான்.

கூட்டத்தின் நடுவிலே நிறத் துணிகளால் தைக்கப்பட்ட உடை அணிந்த கோமாளி ஒருவன் வேடிக்கையாகப் பேசியும் பாடியும் சவர்க்காரத்துக்கு விளம்பரம் செய்து கொண்டிருந்தான்.

அந்தக் கோமாளிக்குப் பின்னால் ஏழெட்டுச் சினிமா நட்சத்திரங்களின் அழகிய வர்ணப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்தின் கீழும் “நான் இவ்வளவு எழிலுடன் திகழ்வதற்கு காரணம் சுமதி சோப்பே” என்ற வாக்கியமும் ,சினிமா நட்சத்திரங்களின் பெயரும் எழுதப்பட்டிருந்தன.

சினிமா நட்சத்திரங்களின் படத்தையும், அதன் கீழ் எழுப்பட்டிருந்த வாக்கியங்களையும் வாசித்துவிட்டு முத்தன் கோமாளி சொல்லுவதை அவதானித்தான்.

கோமாளி ஒரு ‘சுமதி’ சோப்பைத் தனது கையில் வைத்துக் கொண்டு, சுற்றிவர நின்ற மக்களைப் பார்த்து,“அன்பர்களே”
“நீங்கள் அழகுடன் வசீகரமாகத் திகழவேண்டுமானால் எங்கள் ‘சுமதி’ சோப்பை வாங்கி உபயோகியுங்கள், ‘சுமதி’ சோப் உங்கள் உடலிலுள்ள அழுக்கை அகற்றுவதோடு, உங்களின் வசீகரத் தன்மையையும் அதிகரிக்கின்றது.

“நீங்கள் இங்கே பார்த்துக்கொண்டிருக்கும் படங்களிலுள்ள சினிமா நடிகைகள் எங்கள் ‘சுமதி’ சோப்பையே ஒவ்வொரு நாளும் உபயோகித்து வருகிறார்கள். அதனால்தான் அவாகள் அழகுள்ளவர்களாக இருக்கிறார்கள்.” “எங்கள் ‘சுமதி’ சோப் எல்லாக் கடைகளிலும் கிடைக்கும். இன்றே ஒன்றை வாங்கித் தினமும் உபயோகித்துப் பாருங்கள்” என்று சொன்னான்.
கோமாளியின் பேச்சைக் கேட்ட சில ஆண்களும் பெண்களும் ‘சுமதி’ சோப்பை வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

“மற்றக் கடைகளில் விற்கும் விலையை விடக் குறைவான விலையில்- அதாவது ஐம்பது சதத்துக்கு நாங்கள் ‘சுமதி’ சோப்பை இங்கே விற்றுக் கொண்டிருக்கிறோம்”என்று கோமாளி சொல்லிவிட்டு, ஒரு சவர்க்காரத்தை எடுத்துத் தன் முகத்தில் தடவிக் காட்டியதும் , ஜனங்கள் “கொல்” என்று சிரித்தார்கள்.

(2)
சினிமா நடிகையின் படங்களைப் பார்த்தபடியே கோமாளியின் பேச்சைச் கேட்டுக்கொண்டிருந்த முத்தன் யோசிக்கத் தொடங்கினான்.
“இந்தப் படத்தில் இருக்கிற பொம்பிளையள் எல்லாம் எவ்வளவு வடிவா இருக்கினம். அவையின்ர முகமெல்லாம் நல்ல வெள்ளையும் சிவப்பாகவும் இருக்குது” “அந்தப் படத்தில் இருக்கிற பொம்பிளையள் இந்தச் சவர்க்காரத்தைப் போட்டுக் குளிக்கிறபடியால் தானே நல்ல வடிவா இருக்கினம் எண்டு இந்த மனிசன் சொன்னது. ஆனபடியால் நானும் ஒரு சவர்க்காரத்தை வேண்டிக்கொண்டு போய்க் குளிச்சால் என்ர முகமும் உடம்பும் சிவப்பா மாறும் , பேந்து என்னை ஒருதரும் ‘கறுவல்’ எண்டு கூப்பிட மாட்டினம்’ என்று எண்ணினான் முத்தன்.

தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதற்காகக் கோமாளிக்கு பக்கத்தில் வந்த முத்தன் அவனைக் கூப்பிட்டு, “அண்ணை, இந்த சவுக்காரம் போட்டுக் குளிச்சால் நான் நல்ல சிவப்பாக வருவனே?” என்று கேட்டான்.

நாலு பேருக்கு இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிச் சவர்க்காரத்தை விற்றால்தானே அவனும் ஒருவாறாகப் பிழைக்கலாம். தனது சரக்கு மட்டமானது என்று வியாபாரியும் சொல்லமாட்டாரே.

கோமாளி முத்தனின் முதுகைத் தட்டிவிட்டு, “தம்பி, நீ இந்த சோப்பை வாங்கிப் பாவித்தால் உன்ர முகம் ரோசாப்ப+ மாதிரிச் சிவப்பாக வரும். அதுமட்டுல்ல உன்ர முகம் கண்ணாடி மாதிரிப் பளபளப்பாக வரும்.” என்று சொன்னான்.
இந்தச் சவுக்காரத்தைப் பாவிச்சால் “கறுப்பாகக் கிடக்கிற இந்தத் தோலெல்லாம் சிவப்பா மாறும். பேந்து என்னை ஆர் கறுவல் எண்டு பகிடி பண்ணுறது என்று திரும்பவும் முத்தன் யோசித்துவிட்டு, “அண்ணே” இந்தச் சவுக்காரம் என்ன விலை?” என்று கோமாளியைக் கேட்டான். “ஐம்பது சதம்” – கோமாளி சொல்லிவிட்டு மீண்டும் வேடிக்கைப் பேச்சில் இறங்கினான்.

ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்டது போலிருந்தது முத்தனுக்கு. ஐம்பது சதத்துக்கு அவன் எங்கே போவான்?
“இப்ப வேண்டாட்டிலும் அப்புவிட்டைச் சொல்லியெண்டாலும் ஒரு வாசக்கட்டி வேண்டத்தான் வேணும்.” என்று எண்ணிக்கொண்டான் முத்தன்.
தன் கையை விரித்து “பத்துச் சதம் இருக்கிறதா?” என்று பார்த்துக்கொண்டான். கையிலிருந்த அழுக்கடைந்த பத்துச் சதம் அவனைப் பார்த்துச் சிரித்தது.

“சீ-இன்னொரு நாப்பது சதம் எண்டால் இப்பவே ஒரு வாசக்கட்டி வேண்டிக்கொண்டு போகலாம். ஆ..இந்தப் பத்துச் சதத்தைக்கொண்டு போவம். அப்பு கேட்டால் கடலைக்கொட்டை வேண்டித்திண்டுட்டன் எண்டு சொல்லலாம். இப்ப கடலைக்கொட்டை வேண்டித் திண்டனெண்டால் உதிலை வழியிலை போகக்கிடையிலை கொறிச்சு முடிச்சுப் போடுவன். இந்தப் பத்துச் சதத்தோடை அப்புவிட்டையுமு; கும்பிட்டு மண்டாடி ஒரு நாப்பேசாம் வேண்டி வாசக் கட்டி வேண்டினால், இந்தத் தோல் சிவப்பா மாறியிடும்” என்று எண்ணியபடி இந்த இடத்தை விட்டு அப்பால் சென்றால் முத்தன்.

“மனிதனின் மனம் எனப்படுவது ஒரு மாயக்குரங்கு. அது அடிக்கடி கொப்புக்கு கொப்பு தாவிக்கொண்டிக்கும். ஒரு நேரம் ஒரு நல்ல காரியத்தை செய்வான். மற்ற நேரம் அதை மறந்து கூடாத காரியத்தைச் செய்வான். இதற்கெல்லாம் மனிதனின் மனமும், அவனோடு சேர்ந்திருக்கும் சமுதாயமுமே காரணமாகும்” யாரோ ஒரு பெரிய அறிஞர் , தமது நண்பருக்குச் சொல்லிக்கொண்டே கடைத்தெரு வழியாகச் சென்றார்.

முதலில் கடலை வாங்குவதற்காகக் காசை எடுத்த முத்தன் ஐஸ்கிறீம் கடையைக் கண்டதும் ஐஸ்பழம் சாப்பிட விரும்பினான். பின்பு ஐஸ்பழம் சாப்பிட விரும்பமால் கடலை வாங்க எண்ணினான். கடலை வாங்குவதற்கு முன் கோமாளியின் வேடிக்கைப் பேச்சைக் கேட்டதும் கறுப்பாக இருக்கும் தனது உடம்பை “சுமதி” சோப்பினால் சிவப்பாக மாற்றலாம் என்று யோசித்தான். முத்தனின் மனம் மாறி மாறி , ஒன்றை விட்டு வேறொன்றை விரும்பிக் கோண்டிருந்ததற்கு அவனிடமிருந்த பத்துச் சதமும் , கடைத்தெருவில் விற்பனைக்கு இருந்;த விதம் விதமான பொருட்களுமே காரணங்களாக இருந்தன.

வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த முத்தன், பக்கததில் வந்துகொண்டிருந்த பதினெட்டு வயதுப் பருவ மங்கையொருத்தியைக் கண்டான். அந்தி வானத்தின் அழகு நிறத்தைப் போன்றிருந்த அவளின் முகத்தைப் பார்த்ததும் முத்தனின் மனதில் ஏதோ தோன்றியது.

“இந்த அக்காவும் “சுமதி” வாசக்கட்டி போட்டுக் குளிக்கிறவபோல கிடக்கு: அதுதான் முகம் குங்குமம்; மாதிரி நல்ல சிவப்பாகக் கிடக்கு” என்று எண்ணி அந்த பெண்ணின் வண்ண முகத்தைப் பார்த்தபடி நடந்து சென்றான்.

வீதியில் கிடந்த பெரிய கல்லொன்று முத்தனின் காலைப் பதம் பார்த்தது. “ஆ! அம்மா!” என்று முனகியபடியே காலை இழுத்து இழுத்து நடந்தான். “இவவின்ரை சிவத்த முகத்தைப் பார்த்துக்கொண்டு வந்த படியால்தான் கல்லடிச்சுப்போட்டுது. நானும் “சுமதி” வாசக்கட்டியைப் போட்டுக் குளிச்சால் என்ர முகமும் சிவப்பா வரும். அப்ப என்ர முகததைப் பார்த்துக்கொண்டு மற்றப் பெடியன் பெட்டைகள் போகையிக்கிள்ளை அவையின்ர காலில கல்லுக்குத்தும். அப்ப நான் பார்த்துச் சிரிக்கலாம். என்று தான் எண்ணுபவை எல்லாம் கண்முன் நடப்பது போல நினைத்து வாய்விட்டுச் சிரித்தான்.

முத்தனுக்குப் பக்கத்தில் சென்றவர்கள் அவனை “பைத்தியம்” என்று எண்ணிக்கொண்டு நடந்தார்கள். முத்தனின் தோற்றமும் , அவனின் நிறமும் அவனது அழகில்லாச் சிரிப்பும் மற்றவர்கள் மனதில் “பைத்தியம்” என்று நினைக்கும் படி செய்தன.

கோவிலிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருக்கும் வழியில் வெயில் சூட்டினால் முத்தனுக்கு தாகம் உண்டாகியது. தாகத்தைத் தணிப்பதற்காக வழியில் நின்ற ‘சர்பத்’ வியாபாரியிடம் பலர் சர்பத் வாங்கிப் பருகினர்.

‘சர்பத்’ தைக் கண்டதும் அவன் பத்துச்சதத்தைக் கொடுத்து, ஒரு கிளாஸ் சர்பத்தைக் குடிக்க விரும்பினான். ஆனால் உடனே சவர்க்கார நினைவு வந்துவிட்டது. “இப்ப சருவத்துக் குடிச்சால் பேந்து வாசக்கட்டி வேண்டேலாது. மொட்டப் புளியிலை நல்ல சக்கரைத் தண்ணியும் மோரும் வாப்பங்கள் வாங்கிக் குடிச்சுக்கொண்டு போவம்” என்று எண்ணி ‘சர்பத்’ அருந்தும் யோசனையை விட்டு விட்டான்.

முத்தனின் வாய் அவனையுமறியாமல் “சுமதி” சோப் , சுமதி சோப்” என்று முணுமுணுக்கொண்டிருந்தது. மொட்டைப் புளியடியில் இருந்த தண்ணீர்பந்தலில் , வயிறு நிறையக் சக்கரைத் தண்ணீரை வாங்கிக் குடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தான் முத்தன்.

சரவணைக்குப் பக்கத்தில் பதுங்கிப் பதுங்கிச் சென்ற முத்தன் “அப்பு” என்று செல்லமாகக் கூப்பிட்டு , “ஒரு நாப்பது சாம் தாணையப்பு” என்று கெஞ்சினான். சரவணை தலையிலிருந்த மண்ணைத் தட்டிக்கொண்டு , “என்னடா அது ? நாப்பாசாமோ?” என்று கோபத்துடன் கேட்டார்.

அப்பு, சுமதி சோப் எண்டு ஒரு வாசக்கட்டி விக்குது. அந்தச் சவுக்காரம் போட்டுக் குளிச்சால் என்ர கறுப்பு நிறம் மாறிச் சிவப்பா வருவனாம். அதுதானப்பு காசு வேணும்” என்று கெஞ்சினான் முத்தன்.

சரவணை செருமிவிட்டு “அவனாரும் பேயன் சொன்னான் எண்டு நீயும் நம்பியிட்டியே? - இந்தா பத்திச்சாம் நீலக்கட்டியிலை அரைக் கட்டி வாங்கியந்து இந்த வேட்டியைத் தோய்ச்சு வை” என்று சொல்லிக்கொண்டே, ஒரு பத்துச்சத நாணயத்தை முத்தனிடம் கொடுத்தார்.

முத்தன் காசை வாங்கிக் கலர்ப் பெட்டியில் வைத்து விட்டு, சரவணை தோட்டத்துக்குப் போகும் சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தான். சரவணை தோட்டத்துக்குப் போனவுடன், முத்தன் சரவரணையின் வேட்டியை நன்றாக அடித்துத் துவைத்து , கசக்கிப் பிழித்து கொடியில் போட்டான்.
“இன்னொரு முப்பதுசாம் எண்டா” என்று எண்ணிய முத்தனின் மனக்கணிணல் “சுமதி சோப் கோமாளி” அடிக்கடி தோன்றிய வண்ணமிருந்தான்.

தோட்டத்தால் வந்த சரவணை கொடியில் காயப் போட்டிருந்த வேட்டியைப் பார்த்து விட்டு “ டேய் - ஊத்தை போகமால் தோச்சனியே? என்று தடித்த குரலில் கேட்டார்.
“இல்லையப்பு அரைக்கட்டி சவுக்காரமும் உந்த வேட்டிக்குத்தான் போட்டது செம்பாட்டுப் புழுதி போகாதாம்” என்று சொல்லி முத்தன் சமாளித்தான்.அன்றிரவு முழுவதும் முத்தன் ‘சுமதி’ சோப்பை நினைத்து, நினைத்து புரண்டு புரண்டு படுத்தான். விடியும் வரை நித்திரை கொள்ளவில்லை.
அடுத்த நாள் காலையில் பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த முத்தன் “அப்பு! ஒரு இருவது ஒற்றைக் கொப்பி வேண்டவேணும். கொப்பி வேண்டயில்லையெண்டு வெள்ளிக்கிழமையும் வேலுப்பிள்ளை வாத்தியார் அடிச்சவர்” என்று அழுது கொண்டே சொன்னான்.

சரவணை மூன்று பத்துச்சத நாணயங்களை எடுத்து முத்தனிடம் கொடுத்தார். “இருவது சாததை கொப்பிக்கு எடு, பத்துசாதத்துக்குச் சின்னமணி கடையிலை இரண்டு சுருட்டு வேண்டிக் கொண்டு வா” என்று சொல்லி முத்தனைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தார் சரவணை.

“அடி சக்கை! அம்மன் கோயில் பக்கை. அம்பேசாமும் வந்திருத்து. அப்பு சுருட்டு எண்டு கேட்டால் “காசு துலைஞ்சு போச்சு” எண்டு ஒரு கணக்கு விடுறது என்று மனதிற்குள் நினைத்த வண்ணம் ஒரு கடைக்காரனிடம் “சுமதி” சோப் தரும்படி ஐம்பது சதத்தையுமு; கொடுத்தான்.

கடைக்காரன் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, “தம்பி! ‘சுமதி’ சோப் தரும்படி ஐம்பது சதததையும் கொடுத்தான்.
கடைக்காரன் காசைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, “தம்பி! ‘சுமதி’ சோப் ஐம்பத்தைஞ்சியாம்” என்றான்.
முத்தனின் கையில் இருந்த ஐந்து பத்துச்சத நாணயகளும் அவனைப் பார்த்து நகைத்தன.

“சரி! இன்னொரு அஞ்சியாம் ஆரட்டையெண்டாலும் தண்டுவம்” என்று எண்ணிக்கொண்டு தனது வகுப்புக்கு சென்றான்.சவர்க்காரம் வாங்கவேண்டுமென்ற ஆசையினால் தனக்குப் பக்கத்திலிருந்த மாணவனின் புத்தகப் பையைத் திறந்து பத்துச் சதத்தைக் களவெடுத்தான் முத்தன். இடைவேளையின் போது, மாணவன் காசைக் காணவில்லை என்று தேடியபோது “கடவுளாணை நான் எடுக்கேல்லை” என்று பொய்ச் சத்தியமும் செய்து கொண்டான் முத்தன்.
மணியடித்ததும் , மற்ற மாணவர்களையும் முந்திக் கொண்டு கல்லூரியிலிருந்து வெளியே வந்த முத்தன் நேராக ஒரு கடைக்கு சென்றான்.

கடையிலிருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்த முத்தன் கைகளில் ‘சுமதி’ சோப் ‘கமகம’ வென்று வாசமடித்துக் கொண்டிருந்தது.

முத்தன் தன் மூக்குக்குக் கிட்ட “சுமதி” சோப்பைப் பிடித்துக்கொண்டு அதன் நறுமணத்தை முகர்ந்தபடி யோசிக்கத் தொடங்கினான்.

“எவ்வளவு பாடுபட்டு , பொய்சொல்லி , களவெடுத்து, இந்த வாசக்கட்டியை வேண்டினனான். வீட்டை போன உடன அங்கினை புத்தகங்களைக் கழற்றி எறிஞ்சுபோட்டு, ஓடிப்போய்க் குளிக்கவேணும்”

“இந்த வாசக்கட்டியைப் போட்டுக் குளிச்ச உடனை இந்தக் கறுப்புத் தோல் சிவப்பா மாறுமெல்லே. பேந்து என்னை ஆரெண்டாலும் “கறுவல்” எண்டு பகிடி பண்ண முடியுமே?”
இப்படியாக ஒவ்வொன்றையும் நினைத்து இன்பமடைந்த முத்தன் குளிப்பதற்காகக் கிணற்றடிக்குச் சென்றான். நாலு வாளி தண்ணீரை அவசரம் அவசரமாக மேலில் ஊற்றிக்கொண்டு கிணற்றுக் கட்டில் வலது காலை ஊன்றிய வண்ணம் சவர்க்காரத்தை எடுத்து மேல் முழுதுவும் தேய்த்தான்.

முகத்திற்குப் போடுவதற்காக , சவர்க்காரத்தைத் தன் கைகளுக்கிடையில் வைத்துத் தேய்த்தபோது சவர்க்காரம் முத்தனின் கைகளிலிருந்து நழுவிக் கிணற்றுக்குள் விழுந்தது. முத்தன் மனவேதனையில் தன் கைகளையும் , கால்களையும் பார்த்தான். கறுப்பாக இருந்த தோல் எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே இருந்தது. முத்தன் அழ ஆரம்பித்து விட்டான்.

“அந்தக் கடைக்காரர் கள்ளப் படையள், கறுப்புத் தோலைச் சிவப்புத் தோலாக்குமெண்டு சொல்லி பெட்டையளின்ரை படத்தையும் வைச்சுக்கொண்டு வாசக்கட்டி விக்கிறாங்கள். அந்த வாசக்கட்டியிலை வேலையில்ல!

கடலை வாங்காமல், சர்பத் குடியாமல் , ஐஸ்பழம் சாப்பிடாமல் , கொப்பி, சுருட்டும் வாங்கமால் காசு களவெடுத்து வாங்கிய வாசக்கட்டி அவனை ஏமாற்றிவிட்டுக் கிணற்றுள் விழுந்து மறைந்து விட்டதால் ஏற்பட்ட துயரம் காரணமாக, வியாபாரிகளையும், பொருள்களையும் குறை கூறிக்கொண்டிருந்தான் முத்தன்.

தினகரன் 1967