Sunday, August 17, 2014

"தமிழறிஞர் அகளங்கன் நினைவாக வவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது"...... உடுவை எஸ்.தில்லைநடராஜா

தமிழறிஞர் அகளங்கன் நினைவாக
 வவுனியாவில் நூலகம் அமைப்பது சிறந்தது   

(20-07-2014 வவுனியாவில் அகளங்கன் அவர்களின்  மணி விழா நிகழ்வில் உடுவை எஸ்.தில்லைநடராஜா ஆற்றிய தலைமையுரை )
சுமார்  நாற்பது நாற்பத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் வவுனியா வசதிகள் குறைந்த பின் தங்கிய மாவட்டம் என்று கருதப்பட்ட காலத்தில் கலைஞர்கள் எழுத்தாளர்கள் என்று சொல்லப்படும் படைப்பாளிகள் எண்ணிக்கை குறைவாகவே காணப்பட்ட காலத்தில்- அதாவது இன்றைய  மணிவிழா நாயகனான அகளங்கன், மாணவனாக இருந்த  காலம் முதல்  கவிதை கட்டுரை சிறுகதை நாவல் ஆராய்சிக்கட்டுரை என்று படிப்படியாக  பல துறைகளில்  அகலமாகவும் சில துறைகளில் ஆழமாகவும் கால் பதித்தவர் .,


அகளங்கன் . தான் மட்டும் எழுத வேண்டும்- தான் மட்டும் நூல் வெளியிட வேண்டும்- தான் மட்டும் மேடையேற வேண்டும்- என்று கலை இலக்கிய நடவடிக்கைகளை தன்னோடு மட்டும் என்று மட்டுப்படுத்தாமல் பல எழுத்தாளர்கள் படைப்பாளிகள் கலைஞர்கள் உருவாகக் காரணமாயிருந்தவர்., சிற்பக்கலை வல்ல அருட்கலைவாரிதி. சண்முகவடிவேல் ஸ்தபதி, ஆன்மீகத் துறையில் ஈடுபாடு மிக்க சிவநெறிப்புரவலர்.சி.ஏ.இராமசாமி  மற்றும் கலா பூசணம் தேவராஜா, மனிதநேய மாமணி.நா.சேனாதிராஜா, நடனக் கலை வளர்க்கும் திருமதி.சூரியயாழினி வீரசிங்கம், மிருதங்கக் கலைஞர் கலாபூசணம் கனகேஸ்வரன், வயலின் வாத்தியக் கலைஞர். கலாபூசணம் திருமதி விமலேஸ்வரி கனகேஸ்வரன், சோதிட நூல் எழுதிய கவிஞர் கண்ணையா, சாஸ்திரிய சங்கீதக் கலை வளர்க்கும் கிருஷ்ணகுமாரி இளங்கலைஞர் இசைவேந்தன்.கந்தப்பு ஜெயந்தன் எல்லோருடனும் நட்பு பாராட்டி வவுனியாவை முன்னணிக்குக் கொண்டு வர தனது பங்களிப்பை நல்கியவர் அகளங்கன். 

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சுறுசுறுப்பாகவும் கலகலப்பாகவும் எழுதியும் பேசியும் வருபவர் . இன்று அவரது மணிவிழாவுக்காக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்களால் தெரிவு செய்யப் பட்ட அரசியல் பிரமுகர்கள் பல்கலைக்கழக கல்விமான்கள் மற்றும் அறிஞர்கள் கலைஞர்கள் கூடியுள்ளார்கள். எல்லோரும் அவர் எழுதி வெளியிட்ட நூல்கள் கடந்த காலத்தில் அவருக்குக் கிடைத்த பரிசில்கள் பட்டங்கள் விருதுகள் ஆகியவற்றை காணும் போது  பெரிய அளவிலான பாராட்டு விழாவுக்கு முழுக்க முழுக்கப் பொருத்தமானவர் என்னும் கருத்துக்கு மாற்றுக்கருத்து இருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொள் வார்கள்.

பழந் தமிழ் இலக்கியங்களின்  சுவையான பகுதிகளை  அகளங்கன் படைப்புகளில் காணலாம் .,  அந்தப்படைபுகளில்  எல்லாம் கலைநயமும் கவிநயமும் இணைந்திருக்கக் காணலாம்.,  ஆக்கத்திறன் மிக அகளங்கன் பல்வேறு துறைகளில் ஆற்றலும் ஆளுமையும் உடையவர்.,அவரது திறமைகளுக்கும் புலமைக்கும் அவர் பெற்ற பரிசுகளும் விருதுகளும் அங்கீகாரமாகவே உள்ளன .நாள்தோறும் பரிமாறும்  கருத்துகள் பாராட்டுக்கள் காற்றில் கரைந்துவிடும் என்பதால் அகளங்கனைப்பற்றிய  அருமையான பதிவுகளை  அடக்கிய நூலான மணிவிழா மலர்  வெளியிடப்படுகிறது

என்னைப்பொறுத்தவரை கடந்த சில வருடங்களாகவே பொன்னாடை போர்த்தும் கலாசாரம் நம் நாட்டில் பரவலாகப் பெருகி பொன்னாடையின் பெறுமதியை அதாவது  போர்த்தப்படுபவரின் பெறுமதியை போர்த்துபவரின் பெறுமதியை குறைத்து வருகிறது .அதை மாற்ற வேண்டும். 1991 ம் ஆண்டில் தமிழ்மொழியில்  வெளியான சிறுகதை தொகுதிகளில்  உலகளாவிய ரீதியில் பரிசில் பெற்ற சிறுகதைகளை எழுதியவர்களுக்காக   இந்தியாவில் பாராட்டு விழா நடைபெற்ற போது  பொன்னாடை என்று சொல்லி குளிக்கும்போது பயன்படுத்தக்கூடிய சாதாரண துவாயை போர்த்தினார்கள் . உண்மையில் அந்த சாதாரண துவாய் பொன்னாடையை விட நன்கு பயன்பட்டது

1993 ல் வவுனியா மாவட்ட செயலகம் ஒழுங்கு செய்த வவுனியா இலக்கிய விழாவில் முல்லைமணி அருணா செல்லத்துரை அகளங்கன் போன்ற படைப்பாளிகளுக்கு பொன்னாடைக்கு பதிலாக பட்டு  வேட்டிசால்வையும் நடன ஆசிரியை திருமதி துவராகா கேதீஸ்வரனுக்கு பட்டுச்சேலையும் போர்த்திக் கௌரவித்தார்கள். அதே போன்று இன்று அகளங்கனுக்கு பட்டு வேட்டிசால்வை போர்த்தி  . கௌரவித்து மகிழ்வதோடு இந்த வழக்கத்தைப் பின்பற்றுவதால் பயன் மிக பொருளால் கௌரவம் செய்வது போலவும் உணரலாம் .
.
அடுத்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து  புத்தக பண்பாட்டை  வளர்க வேண்டும் . பாடசாலை மட்டங்களில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்பட்டு  பரிசளிப்பு நிகழும் சந்தர்பங்களில் மாணவர்களுக்கு முடிந்தளவுக்கு நூல்களை பரிசில்களாக வழங்கினால் அவர்கள் அறிவும் வளரும் .நூல்களை வாசிக்க வேண்டும் என்ற ஆர்வமும் பெருகும் . ஒரு மாணவருக்கு நூலாக வழங்கும்போது பலர் அந்நூலை வாசிக்க சந்தர்பம் கிடைக்கிறது என்பதையும் மறந்து விட முடியாது .

கிராமப்புற பாடசாலையில் படித்த அந்த நாட்களில் வருடாந்த பரிசளிப்பு தினத்தில் ஒவ்வொரு பாடத்திலும் அதிக புள்ளிகள் பெறும் மாணவர்களுக்கு பெறுமதியான நூல்களை பரிசில்களாக வழங்குவார்கர்கள். நூலின் முதலாம் பக்கத்தில் மாணவனின் பெயர் வகுப்பு அதிக புள்ளிகள் பெற்ற பாடத்தின் பெயர் எழுதப்பட்டு கல்லூரி அதிபரால் கையொப்பம் வைக்கப்பட்டிருக்கும்  சிறு வயதான மாணவப்பருவத்தில்  பரிசில்களாக கிடைத்த நூல்களை நண்பர்கள் அயலவர்கள்  பலர் படித்துள்ளார்கள் .சில நூல்கள் எனது வீட்டில் இன்னும் இருக்கின்றன . உலோகங்களாலும் மரங்களாலும் செய்யப்பட்ட கேடயங்கள் கிண்ணங்கள் கரள் பிடித்து அப்புறப்படுத்த பட்ட போதும் நூல்கள் இன்னும் பலரால் வாசிக்கப்படுகின்றன

இன்றும் கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் –கொழும்பு தமிழ் சங்கம் ஒழுங்கு செய்யும்  நிகழ்வுகளில் கலந்து கொள்வோருக்கு பெறுமதியான நூல்களை வழங்கி கௌரவம் செய்வதும் மனம் கொள்ளத்தக்கது. வாழ்கையின் பல்வேறு சந்தர்பங்களில் பிறருக்கு பணமாகவோ பொருளாகவோ பல அன்பளிப்புகளை வழங்கி  வருகின்றோம். முடியுமான சந்தர்பங்களில் நூல்களை பரிசாக வழங்கவும் முயற்சிகள் மேற்கொள்ளலாம்
மற்ற மாவடங்களுக்கு முன்னோடியாக ஊர்ப் பெரியார்களுக்கு  சிலை வைப்பதில் முன்னணியில் திகழும் இடம் வவுனியா . அண்மையில் கூட கூட்டுறவு பெரியார் முத்தையா அவர்களுக்கு  சிலை நிறுவப்பட்டது
என்னைப் பொறுத்த அளவில் அகளங்கன் போல தமிழறிஞர்கள் பலர்  நம் நாட்டுக்கும் நமக்கும்  வேண்டும். இரண்டாம் நிலைக் கல்வியை முடித்துக்கொண்ட அகளங்கன் படிப்பதற்காக யாழ்  பல்கலைக் கழகம் சென்ற போது யாழ் நூல் நிலையத்தில் நுழைந்ததால் அவருக்கு அர்த்தம் உள்ள மணிவிழாவை கொண்டாடுகின்றோம்   அகளங்கன்  யாழ் நூலகத்தில் இலக்கியம் சோதிடம் என்று ஒரு விடயத்தையும் விடாமல் எல்லாவற்றையும் படித்தார்

வாசிப்பால் வாழ்கையில் உயர்ந்தவர் பலர்.அவர்களில் அகளங்கனும் ஒருவர்
எனவே அகளங்கன் பெயரால் ஒரு நல்ல நூலகம்- உருவாக வேண்டும் வவுனியா மாவட்டத்தில் அவர் பிறந்த பம்பைமடுக் கிராமத்திலோ அல்லது வாழும் திரு நாவற் குளத்திலோ அல்லது வவுனியாவில் வேறு ஓரிடத்திலோ ஒரு நூலகம் அமைப்பது பயனுள்ள பணியாகும்
எங்கள் மத்தியில் அகளங்கன் போல இன்னும் பல தமிழறிஞர்கள்  உருவாகவேண்டும் என்றால் ஊர் தோறும் நூலகங்கள் பல உருவாக வேண்டும்

எதையும் செய்யலாம் நிறைவேற்றலாம் என்று நம்பிக்கையுடன் ஆரம்பிக்கும்போது அவை வெகு எளிதாக  நிறைவேறுவதையும் காணலாம்

யாழ்பாணத்தில் சிறிதாக இயங்கிக் கொண்டிருந்த நூலகத்துக்கு இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் வந்திருந்த போது நூலக அபிவிருத்திக்கு கொடுத்த சிறுதொகை நூலகத்தைப் பெருப்பித்த வரலாறு எல்லோருக்கும் தெரியும் கொழும்பு தமிழ் சங்க செயலாளராக இருந்த தமிழவேள் கந்தசாமி இந்திய திரைப்பட நடிகர் எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு விண்ணப்பித்தபோது கிடைத்த உதவியால் தமிழ்ச் சங்க நூலகம் விரிவடைந்தது

போராட்ட காலத்தில் கிளிநொச்சியில் மரநிழலின் கீழ் இரவல் மேசையில் கச்சேரி நிர்வாகம் நடந்தது.

எனவே நல்ல எண்ணத்துடன் ஒரு சிறிய அறையில் கூட அகளங்கன் நூலகத்தை ஆரம்பிக்கலாம் .இந்த முயற்சிக்காக என்னால் முடிந்த சிறு பணத்தொகையையும் எனது நூல்களின் சேகரிப்பில் ஒரு பகுதியையும் அகளங்கன் மணிவிழாக் குழுத்தலைவர் கலாநிதி ஓ.கே.குணநாதனிடம் வழங்குகின்றேன் .

சிறுதுளி பேரு வெள்ளம் என்பதை நாங்கள் மறுப்பதற்கில்லை .எதிர் காலத்தில் அறிவுள்ள சமூகத்தை காணும் எண்ணத்துடன் ஒவ்வொருவரும் சிறிய தொகையை கொடுத்து இரண்டொரு நூல்களை கொடுத்து பல அறிஞர்களை இந்த மாவட்டத்தில் உருவாக்கலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது

இன்று அன்பளிப்பு செய்யும் நூல்களுக்கும் வவுனியா மாவட்டத்துக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. உலகத்தில் இந்து கலைகளஞ்சியத்தை வெளியிட்ட நாடு இலங்கை. முதலாவது தொகுதியின் பதிப்பாசிரியர் கலாநிதி பொன்.பூலோகசிங்கம் வவுனியா மண்ணைச் சேர்ந்தவர். 70 களில் வவுனியா மேடை நாடகங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்ட நீ.பி.அருளானந்தம் எழுதிய  எங்கள் பாரம்பரிய கலையான  நாட்டுகூத்தை தொனிப்பொருளாக வைத்து எழுதிய நாவலையும் அவரது நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பையும் வழங்குகின்றேன் வவுனியா தொடர்பான பதிவுகளும் இந்நூல்களில் பரவலாக உண்டு.  

மாற்றங்கள் மறுப்பதற்கில்லை எனவே   அகளங்கன் நூல்கள் பிற மொழிகளுக்கும்  மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவையும் உண்டு 

1 comment:

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழறிஞர் அகளங்கன் நினைவாக நூலகம் ஒன்றினை அமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்ததோடு, தங்கள் நூல்களின் ஒரு பகுதியையும், அன்பளிப்பாய் வழங்கி, நூலக முயற்சியை ஊக்குவித்தமை, தொடங்கி வைத்தமைக் கண்டு உள்ளம் மகிழ்கின்றேன் ஐயா.
அகளங்கள் நூலகம், பெரு நூலகமாய் வளரட்டும்
நன்றி ஐயா