Monday, December 31, 2007

அப்பிளும் வாழைப்பழமும்

ஆங்கிலப் பாடம் படிக்கும் போது An apple a day keeps the doctor away என்று படித்ததும் வீட்டுக்குச் சென்று அம்மாவுடன் போராட்டம்.

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அப்பிள் பழம் சாப்பிட்டால் வருத்தம் வராது” என்று பிடிவாதம் பிடித்தேன்.

அப்பா அமைதியாகச் சொன்னார். “அது இங்கிலிஸ் புத்தகமானதால அப்பிள். பொதுவாக பழம் சாப்பிட்டால் நல்லது. அப்பிளை விட வாழைப்பழம் நல்லது. நம்ம் ஊர்ல வருஷம் முழுவதும் வாழைப்பழம் கிடைக்கும். பாப்பாசிப்பழமும் கிடைக்கும். சீசனுக்கு மாம்பழமும் பாலப்பழமும் கிடைக்கும். இதை விட நல்ல பழம் வேறையில்லை”

வேலைக்குச் சென்ற புதிதில் கொழும்பிலிருந்து அன்னாசி , இறம்புட்டான், மங்குஸ்தான் என யாழ்ப்பானத்துக்குக் கொண்டு வந்தாலும் முக்கனியான மா, பலா, வாழைக்கு மற்ற பழங்கள் ஈடு கொடுக்க முடியாது என தெரிந்து கொண்டேன்.

கடமை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்ற போத அப்பிள் திராட்சையைவிட அதிக விலை கொடுத்து வாழைப்பழம் வாங்கிச் சாப்பிட்டிருக்கின்றேன். அப்படியொன்றும் அதிக விலையல்ல. ஒரு பழத்தின் விலை 150 ரூபாவில் இருந்து 250 ரூபா வரை.

எனவே அப்பிள் பழத்தின் சத்து வாழைப்பழத்திலும் இருக்கிறது. ஒப்பீட்டளவில் எங்கள் நாட்டில் மிக மலிவான வாழைப்பழம் அப்பிள் ஏற்றுமதியாகும் நாடுகளில் Expensive item தான்.

எங்கள் மண்ணின் பெருமையையும், மண்ணில் விளையும் பொருட்களின் அருமையையும் அப்பா உணர்த்தியும் பல வருடங்களின் பின்பாகவே உணர முடிந்தது.


(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

2 comments:

கானா பிரபா said...

தொடர்ந்து வாசிக்கின்றேன், பின்னூட்டம் இடாவிட்டாலும்.

நன்றி அண்ணா

உடுவை எஸ். தில்லைநடராசா said...

மகிழ்ச்சி கானா பிரபா. வாசிப்பீர்கள் என்று தெரியும். அனைத்து இடுகைகளுக்கும் பின்னூட்டமிட முடியாதுதானே. அப்பா நூலும் இன்னும் சில இடுகைகளுடன் முடிவுக்கு வந்து விடும்.

நன்றி.