Monday, December 17, 2007

"நேரமில்லை....நேரமில்லை....."

நவம்பர் மாதக் கடைசியில் வகுப்பேற்றப் பரீட்சையை அடுத்து டிசம்பரில் வரும் நீண்ட பாடசாலை விடுமுறை மகிழ்ச்சியான நாட்கள். ஆழமாகப் படிக்க வேண்டிய விடயங்கள் இருக்காது. ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் தீபாவளி மலர்கள் மகிழ்வைத் தரும். தீபாவளியையொட்டி வெளியான புதுப் புதுத் திரைப்படங்கள் பார்க்கலாம். இந்தியாவில் நடைபெறும் இசைவிழா வானொலி அஞ்சலும் நெஞ்சத்தை மகிழ்விக்கும்.

கடைக்கு விறகு கொத்த வரும் மாமாவின் மகன் என்னை விட உயர்ந்த வகுப்பில் படிப்பதால் மார்கழி விடுதலையில் அவரின் பாடப் புத்தகங்களை இரவலாக வாங்கி வாசிக்க வேண்டும் எனபதும் அப்பாவின் ஏற்பாடுகளில் ஒன்று. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தப் புத்தகங்களை வாசித்துவிட்டு திருப்பி கொடுக்க வேண்டுமென்பது கண்டிப்பான கட்டளை.

பல சுவையான பொழுது போக்குகளுக்கிடையே பாடப் புத்தகங்களை முழுமையாக வாசித்து முடிக்காததால் “வாசிக்க நேரமில்லாமல் போய் விட்டது’ என்று சொல்லி முடிக்கு முன்பாக அப்பா கேட்டார்- “நேரமில்லாததால் வாசிக்கவில்லையா?”

ஆமெனத் தலை அசைந்தது.

அடுத்த கேள்வி- “நேற்றிரவு முதல் நாளிரவு சாப்பிட்டதா?” “ஓம் சாப்பிட்டனான்” இன்னுமொரு கேள்வி- “நேற்றிரவு நித்திரை கொண்டதா? அதற்கு முதல் நாளிரவு நித்திரை கொண்டதா?” எல்லாவற்றுக்கும் பலமாகத் தலையை ஆட்டினேன். அப்பா சிரித்தார். – “கட்டிக்கு சாப்பிட நேரமிக்கும், நித்திரை கொள்ள நேரமிருக்கு. பாடப்புத்தகம் வாசிக்க நேரமில்லை” – ஒரு கணம் யோசித்தேன். “நேரமில்லை” என்பது சாட்டு, நேரத்தை சரியாகப் பங்கிட்டு முன்னுரிமை அடிப்படையில் வேலைகளை நிறைவேற்றப் பழகிவிட்டால் குறுகிய அடிப்படையில் வேலைகளை நிறைவேற்றப் பழகிவிட்டால் குறுகிய நேரத்துக்குள் எவ்வளவோ காரியங்கள் செய்யக்கூடியதாயிருக்கும். “நேரமில்லை” என்று கூறி எம்மை நாம் ஏமாற்றுகின்றோம். அல்லது வேலைகளையும் கடமைகளையும் சரிவர செய்யாமலிக்கின்றோம்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: