மாலை ஐந்து ஐந்தரை மணிக்கு முன்பாக இருட்டு பரவும் மழைக் காலத்தில் ஒரு நாள. அரிக்கன் லாம்பைக் கொளுத்தி வைப்பதற்காகச் சென்ற அம்மா “ஐயோ பூரான்’’ எனக் கத்தினார். தடியொன்றைத் தேடி நான் அலைந்த போது அப்பா வீடு கூட்டும் ஈர்க்கில் விளக்குமாற்றினால் அம்மாவை அலற வைத்த புலிமுகச் சிலந்தியின் கதையை முடித்து விட்டார்.
அது பெரிய விடயமல்ல. – சிறிது நேரத்தின் பின் வீட்டு வாசலுக்கு முன்னால் படமெடுத்தாடிக் கொண்டிருந்த பாம்புக்கு ஒரே போடு. தலை நசிந்து மெல்லிய துடிப்புடன் பாம்பின் கதையும் முடிக்து விட்டது. விச ஜந்துக்களைக் கொல்லுவதற்க்கும் சில வழிமுறைகள் இருக்குதாம்- எட்டுக்கால் பூச்சியான புலிமுகச் சிலந்தி நிலத்திலோ சுவரிலோ அல்லது மரத்திலோ தத்திப் பாய்ந்து தப்பி விடக் கூடியது. தடியால் அடிக்கும் போது கூட தந்திரமாகத் தப்பி விடக்கூடியது. சில வேளை ஒரு காலோ அல்லது இரண்டு காலோ தடிக்கு அகப்படும். பூச்சி தப்பிவிடும். ஈர்க்கிலான விளக்குமாற்றல் அமர்த்தி அடிப்பது சுகம்.
பாம்பை ஓட விடாமல் அடிப்பதானல் முதல் அடி தலையில் ஓங்கி அடிக்க வேண்டும். நடுப்பகுதியில் அல்லது வாலில் விழும் அடி பாம்பைக் கொல்லாது. உருளை வடிவான தடியால் பாம்பை அடிப்பதுதான் சுகமாம். வேறுவகையான தடி என்றால் கை வலிக்குமாம். விச பாம்புகள் அதிகமுள்ள இடங்களில் பாரம் குறைந்த உடையாத உருண்டைத்தடியை எளிதாக எடுக்கக கூடிய இடத்தில் வைத்திருக்க வேண்டுமெனச் செல்லித் தந்தார் அப்பா.
(இதற்கு முன் இடுகைகளை "அப்பா" என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)
No comments:
Post a Comment