Wednesday, December 12, 2007

மலையளவு சோதனை பனித்துளியாகி மாறி மறைகிறது.


1965 ம் ஆண்டில் பதினெட்டு வயது பூர்த்தியாகிய சில நாட்களில் பெரிய சோதனை. அந்தச் சோதனையின் பலனாக 1966 டிசம்பர் மாதம் கொழும்பு பொலிஸ் தலைமை அலுவலகத்துக்கு 1967 ஜனவரி மாதம் 4ம் திகதி காலை ஒன்பது மணிக்கு வரச்சொல்லி கடிதம் வந்த போது சற்று யோசனை தான்.

சோதனை எனக் குறிப்பிட்டது- அரசாங்க பொது எழுதுவினைஞர் சேவையில் சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை. பொலிஸ் தலைமை அலுவலத்திலிருந்து வந்திருந்த கடிதம் தந்த தகவல்.- 04.01.1967 முதல்
பொலிஸ் திணைக்களத்தில் எழுதுநர் வேலைக்குச் சேர்க்கப் பட்டிருப்பதை தெரிவிக்கும் எனது முதலாவது நியமனக்கடிதம்.

பெற்றோர் உட்பட ஒருவருக்குமே நான் பொலிஸ் கந்தோரில் வேலைக்கு சேர்வது விருப்பமில்லை. நாற்பது வருடத்துக்கு முதல் இருந்த சூழ்நிலை - இன்றைய நிலை போலல்லாத, எவரும் எங்கும் சென்று வரக் கூடிய சூழ்நிலை. இருப்பினும்–முழுமையாக விருப்பமில்லாவிட்டாலும் பொலிஸ் கந்தோரில் கிளார்க் வேலைக்கு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டது. பெற்றோருக்கிருந்த கடவுள் நம்பிக்கை என்னையும் தொற்றிக் கொண்டது. அந்த நம்பிக்கை அறிவு தெரிந்த நாள் முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொண்டமானாறு செல்வச்சந்நிதி கோவிலுக்குச் செல்ல வைத்து முருகனை வழிபட வைத்தது. இப்போது கேள்விப்படுவது போலப் பயங்கரமான பிரச்சினைகள் அந்த நாட்களில் இல்லாவிட்டாலும் சிறு சிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன. தெய்வ வழிபாடும் கஷ்டங்களைக் குறைக்கும் என்பது பெற்றோர் நம்பிக்கை. தொழில் கிடைத்த மகிழ்வோ அல்லது வேலைத்தலத்தில் கஷ்டம் வரக்கூடாது என்ற நினைப்போ தெரியவில்லை- பெற்றோர் ஒழுங்கு செய்த பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டேன்.

என் வயது ஒத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எனக்கு முதலில் வேலை.அதுவும் அரசாங்கத்தில் நிரந்தர நியமனம் கிடைத்து விட்டது. கொழும்பில் எல்லாமே புதுமை- புது அனுபவம். மூன்று மாதங்கள் விரைவாக ஓடி மறைய ஆறு நாள் விடுதலையில் சொந்தக்கிராமம் சென்றேன். அம்மாவின் முகம் கறுத்ததுக்குக்காரணம் நான் பல நாட்கள் கடிதம் எழுதவில்லை என்பது ஊருக்குப் போனபின் தான் தெரிந்தது.

-2-
அம்மா வெகு பக்குவமாக என் செவிகளில் போட்டார்: “ தம்பி கொழும்பிலை தனிய இருக்கிறாய். புது இடம் புதுச் சூழ்நிலை –நாங்கள் எல்லாரும் ஒண்டாக ஒரு இடத்திலை இருக்கிறம். நீ இடைக்கிடை சுக புதினங்களை கடித மூலம் அறிவிச்சால் தான் நாங்கள் நிம்மதியாக இருப்பம்”.

அசட்டுச்சிரிப்பைத் தொடர்ந்தது பதில்: “ அம்மா- தபால் கந்தோர் போறதெண்டால் கன தூரம். மாத்தின காசில்லாட்டால் முத்திரை என்வலப் தர மாட்டாங்கள்-( அந்தக் காலத்தில் சாதாரண தபாலுக்கான அஞ்சல் கட்டணம் பத்துச்சதம். முத்திரை அச்சிடப்பெற்ற என்வலப் பன்னிரெண்டு சதம் )

அன்று மாலையே அம்மா தனது விருப்பத்தைச் செயற் படுத்துவதற்காக எனது வேலையை எளிதாக்கிவிட்டார். இருபது அஞ்சலட்டைகளை ( அக்காலத்தில் போஸ்ற் காட் என பரவலாகப் பயன்படுத்தப்பட்ட அஞ்சலட்டையின் விலை ஐந்து சதம் மட்டுமே ) என்னிடம் தந்த அம்மாவின் விளக்கம்: “ தம்பி இந்த போஸ்ற் காட்டிலை தங்கச்சி விலாசமும் எழுதி வைச்சிருக்கிறாள். ஓவ்வொரு கிழமையும் சுக புதினங்களை எழுதி வழி தெருவிலை இருக்கிற தபால் பெட்டியிலை போட்டு விடு. அது போதும். கொழும்புக்கு போனதும் “ சுகமாக வந்து சேர்ந்தேன்” எண்டு ஒரு வரி- அது போதும்”.

விடுதலை முடிந்து ஞாயிறு மாலை யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து இரவு தபால் புகையிரதத்தில் கொழும்பு செல்வதாக ஒழுங்கு. ஒருவருக்கும் தெரியாமல் அஞ்சலட்டை யொன்றில் “ சுகமாக வந்து சேர்ந்தேன். எல்லாம் நலம்” என எழுதி அதை சட்டை பொக்கற்றில் வைத்தேன். கொழும்பு புகையிரத நிலையத்திலிருந்து தங்கியிருக்கும் இடத்துக்கு செல்லும் வழியிலுள்ள தபால் பெட்டியில் அதைப்போட வேண்டும் எனவும் திட்டமிட்டுக் கொண்டேன்.

யாழ்ப்பாணம் செல்லும் பஸ்ஸில் ஏறுவதற்காக சந்திக்குச் சென்ற போது எதிரே வந்த இருவர் எனது பிரயாணப்பை காற்சட்டை சேர்ட் எல்லாவற்றையும் கடுமையாகச் சோதித்தனர். அந்த இருவரும் படையினர் அல்ல- எனது பள்ளித்தோழர்கள்- பாலனும் யோகனும். சோதனை முடிவில் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் சட்டைப்பையிலிருந்த அஞ்சலட்டையை எடுத்து சந்தியிலிருந்த தபால் பெட்டியில் போட்டு விட்டனர்.

மறு நாள் திங்கள் அம்மா சொல்லி தங்கை எழுதிய கடிதமும் அம்மா சொல்லாமல் தம்பி எழுதிய கடிதமும் ஓரே நேரத்தில் என்கைக்கு கிடைத்தது.

-3-

அம்மாவுக்கும் தங்கைக்கும் தெரியாமல் தம்பி எழுதிய கடிதம்
“ அண்ணா இன்று காலை தபால்காரனிடமிருந்து கடிதத்தை வாங்கிய அம்மாவுக்கு சரியான சந்தோஷம். கொழும்புக்கு போனதும் முதல் வேலையாக தனக்கு கடிதம் போட்டதாக அம்மா புளுகினா. ஆனால் அக்கா தான் குட்டை உடைச்சிட்டா. – நேற்றிரவு ரெயினிலை ஏறின அண்ணா இண்டைக்கு காலமை தானை கொழும்புக்கு போகலாம். இண்டைக்கு காலமை கொழும்பிலை போடுற தபால் என்ன மாதிரி இண்டைக்கே உங்களுக்கு கிடைக்கும்? – எண்டு சொல்லி போஸ்ற் காட்டிலை அச்சடித்திருந்த யாழ்ப்பாண தபால் கந்தோர் சீலையும் காட்டி உன்னைக்காட்டிக் குடுத்திட்டா.”

அம்மா எழுதியதாக கிடைத்த தங்கையின் கடிதம்: “ தம்பி. நீ என்னை ஏமாத்திறதாக நினைச்சு உன்னை ஏமாத்தாதே. நேரம் இருக்கிற நேரம் சுகம் எண்டு ஒரு சொல்லு எழுதினாலும் போதும். ஏங்களுக்கு கடவுள் தான் துணை. தூர இடங்களுக்கு போறதுக்கு முதல் இருக்கிற இடத்துக்கு கிட்டடியிலை உள்ள கோயிலுக்கு போய் உண்மையாகக் கும்பி ட்டிட்டுப் போனால் ஒரு குறையும் வராது. கதிர்காமக் கந்தனுக்கு நேர்த்தி வைத்துத்தான் நீ பிறந்ததால் சந்தோஷமான விஷயம் அல்லது பிரச்சினையான விஷயம் உண்டால் கதிர்காமம் போய் முருகனைக் கும்பிடு. எல்லாம் சரி வரும்”

அதன் பின் தினமும் வீட்டில் தெய்வத்தை வழி படுவதுடன் வழமை யான இருப்பிடத்திலிருந்து தூர இடங்களுக்கு பிரையாணம் செல்ல முன் அண்மையிலுள்ள ஏதாவது ஒரு கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம். பெரிய பெரிய பிரச்சனைகள் தோன்றிய வேகத்தில் மறைந்ததும் தெய்வ அனுக்கிரகம் - அல்லது அம்மாவின் தெய்வ வாக்கு என நம்புகின்றேன்.

தொழில் ரீதியாக தொல்லைகள் வந்ததுமுண்டு. எதிர்பாரா ஏற்றங்கள் - மகிழ்வுகள் கிடைத்ததும் உண்டு. அடுத்தடுத்து வெளி நாடுகளுக்குச் சென்று வரக்கூடிய வழிகளும் பிறந்தது. பல ஆண்டுகளுக்கு முன் தெய்வமாகிய அம்மாவையும் மனதில் வணங்கி கதிர்காமம் சென்று முருகனையும் வழிபட்டு வருவேன். உள்ளத்தில் பெரு மகிழ்ச்சி- வார்த்தைகளுக்குள் அடங்காத ஒரு வகைச்சுகம்- சுமார் இரண்டு மைல் உயரமுள்ள உச்சி மலையில் ஏறி முருகனை வழிபடும் போது உடலும் புதுப்பலம் பெறுவதை உணர்ந்திரு க்கின்றேன்- மொத்தத்தில் கதிர்காம யாத்திரை உச்சிமலை முருக வழிபாடு யாவும் சுகானுபவம்.

அறுபதுகளில் வருடாந்த திருவிழாக்காலத்திலும் கார்த்திகை தீபத்திரு நாளிலும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடுவர். அப்படியான ஒரு காலத்தில் ஒரு ருபா கொடுத்து தென்னோலையில் இழைக்கப்பட்ட பாய் வாங்கி வயல் வெளியில் இரவைக் கழித்தது நினைவிலுண்டு. இன்று தங்கு வதற்கு வசதியான இடங்கள் பலவுண்டு.

-4-

முன்பு மாணிக்க கங்கையில் நீராடி ஈர ஆடையுடன் ஆலயம் சென்று வழிபடுவர். இன்று தங்கியிருக்கும் இடங்களில் குளித்து விட்டு கோவிலுக்கு செல்வோர் பலர். இன்னும் நல்ல நினைவு- கோவிலுக்கு செல்லும் போது முதலில் பிள்ளையாரை வணங்கி பின்பு முருகனை வணங்கி கோவிலை இடமிருந்து வலமாகச் சுற்றி வருகையில் ஆலய வலது பக்கத்தில் அமைந்துள்ள தெய்வானையம்மன் கோவிலுக்கும் சென்று வருவது “ஓம்” என்ற எழுத்து அமைந்துள்ள ஒழுங்கில் நடந்து சென்று வழிபடுவது போன்ற உணர்வைத்தரும் ஒரு பெரியவர் சொன்னார்.

அவசரமான இன்றைய உலகில் போக்குவரத்து வசதிகள் இருப்பதால் ஒரே நாளில் கதிர்காமம்- செல்லக்கதிர்காமம்-உச்சிமலை என மூன்று இடங்களையும் தரிசித்து வருவோரும் உண்டு. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிரதான ஆலயம் அமைந்துள்ள கதிர்காமத்தில் முழுமை யாக முதல் நாள் வழிபாடு செய்து- மறு நாள் காட்டுப்பாதை வழியாக கால் நடையாகவே செல்லக்கதிர்காமம் செல்வது வழக்கம். காட்டுப்பாதையின் இரு மருங்கும் பிச்சைக்காரர் இருப்பர். பிச்சையெடுப்பதிலும் ஒரு ஒழுங்கை அந்த காலத்தில் காண முடிந்தது. இன்று கையேந்துவோரை பரவலாக எல்லா இடத்திலும் காணலாம்.

ஒரு நாள் பிரதான ஆலயம்- மறு நாள் செல்லக்கதிர்காமம் என செல்லும் பக்தர்கள் மூன்றாம் நாள் அதிகாலை மாணிக்க கங்கையில் நீராடி உரத்த குரலில் "அரோகரா” சொல்லிய வண்ணம் உச்சிமலை ஏறுவார்கள். ‘அரோகரா- முருகனுக்கு அரோகரா- கந்தனுக்கு அரோகரா’ என்று சொல்லிக் கொண்டு மலையேறும் போது களைப்பும் சோர்வும் தோன்றாது எனச் சொல்வார்கள். அதை நானும் உணர்ந்திருக்கின்றேன். அன்று வயல்களுக்கூடாக நடைபாதையாக இருந்தஇடத்தின் பெரும்பகுதி வாகனங்கள் செல்லக்கூடிய தார் றோட்டாக மாறியுள்ளது. உச்சிமலை வரை செல்ல இன்று வாகன வசதியும் உண்டு. முன்பு முழுத்தூரமும் கால்நடை தான். உச்சிமலைக்கு ஏறி வழிபாடு செய்து இறங்குவது உடலுக்கும் உள்ளத்துக்கும் மிக நல்லது. அக்காலத்தில் கதிர்காமம் செல்பவர்கள் ஒருவரையொருவர் “சாமி” என்று தான் கூப்பிடுவார்கள். அறிமுகம் இல்லாத ஒருவரைக்கூட ‘சாமி’ என அழை த்து கதைப்பார்கள். கணவன் மனைவியை ‘சாமி’ என அழைப்பதையும் தாய் மகனை ‘சாமி’ என அழைப்பதையும் கண்டிருக்கின்றேன். உச்சிமலை ஏறும் போது தூரம் தெரியாதிருக்க ‘சாமி இன்னும் கொஞ்ச தூரம் தான்- சாமி இன்னும் சில படிகள் தான் ஏற வேணும்’ என உச்சிக்கு ஏறுவோரை ஊக்குவிப்போரையும் காணலாம்.

உச்சிமலை ஆலயத்தில் தேனில் தினை மாவைக்குழைத்து நெய்யூற்றி மாவிளக்கு வைப்பார்கள். மலையுச்சியில் மாவிளக்கை உண்பதும் சுகமான சுவையான அனுபவமே! பூசையைத் தொடர்ந்து கிடைக்கும் அமுது சாப்பிட வும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

-5-

முருகனை மனமார வழிபட்ட வண்ணம் உச்சிமலைப்படிகளில் ஏறிய போது படிகள் கீழ் நோக்கி விரைவாக நகர்ந்து ஏறிச்செல்வதை எளிதாக்கு வது போன்ற உணர்வையும் இறங்கும் போது படிகளின் எண்ணிக்கை குறைந்து சுகமாக இறங்கும் அனுபவத்தையும் பெற்றிருக்கின்றேன். கதிர்காம த்தில் கிடைக்கும் வீபூதி ஒரு மலையிலிருந்து பெறப்படுவதால் வித்தியாச மான வீபூதியாக இருப்பதால் அந்த வீபூதியை வாங்குவதற்காக கதிர்காமம் சென்று வந்தவர் வீட்டில் பலர் கூடிய காலமும் இருந்தது. தீர்த்தத்திருவிழா பூர்த்தியானதும் போத்தலில் மாணிக்ககங்கை நீரை நிரப்பி ஊருக்குக் கொண்டு சென்று தெரிந்தவர்களுக்கு கொடுக்கும் வழக்கமும் அந்த நாட் களில் இருந்தது.

ஓவ்வொரு தடவையும் கதிர்காமம் செல்லும்போது உடலும் உள்ளமும் இலேசாகி புத்துணர்வு ஏற்படுகிறது. சில அனுபவங்களை நண்பர்களுடன் பகிர்கையில் அவர்களின் சந்தேகம்-“ வெளிநாடுகள் செல்லும் வாய்ப்பாலா அல்லது உத்தியோக மாற்றங்களாலா அடிக்கடி கதிர்காமம் செல்கிறீர்கள்?”

சிரித்துக் கொள்வேன்-“ பயண சுகம்- தொழில் தரும் மகிழ்வு என்பது ஒரு புறமிருக்க பெரிய பெரிய சோதனைகளிலிருந்து தப்ப முடிந்தது. அறுபதைத் தாண்டியும் திடமாக கடவுள் வைத்திருக்கிறார். தெய்வம் தான் நான் அடிக்கடி சந்திக்கும் வைத்தியர். உச்சிமலையில் ஏறி இறங்குவது தான் என்னுடைய வைத்திய பரிசோதனை. மலையளவு சோதனை பனித்துளியாக மாறி மறைகிறது”


வீரகேசரி

09.12.2007

No comments: