Tuesday, December 18, 2007

செய்விக்கும் சொல்லும் உத்தி

பாடசாலை நாட்களிலிருந்து கலைகளில் விருப்பம். இளைஞனாக மேடை நிகழ்ச்சிகளை தொகுத்து அறிவிப்பு செய்த காலத்தில் சொந்த ஊரில் பெற்றோர் முன்னிலையில் நிகழ்ச்சி வழங்கிய போது ஒரு வித்தியாசமான அறிவிப்பு-

மேடைக்குப் பின்னால் ‘ம்....’ என ஹமிங் குரலில் ஒரு பெண்ணின் பாடல் ஆரம்பமாகும் போது மேடையில் எனது அறிவிப்பு- “மேடைக் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பல இடங்களுக்குச் சென்றிருக்கின்றேன். ஒரு முறை இசை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்க மட்டக்களப்பு சென்றிருந்த போது அற்புதமான பாடகியின் அறிமுகம் கிடைத்தது. அன்று முதல் நான் தோன்றும் மேடைகளில் அவளும் தோன்றுகின்றாள். அவளை என் உறவினருக்கும் ஊராருக்கும் அறிமுகம் செய்து வைக்கின்றேன். இன்று அவள் பாடும் முதல் பாடல் -

நான் உன்னைத் தேடுகின்றேன்-
நாள் தோறும் பாடுகின்றேன்-
நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகின்றேன்


வாலிப வயதிலிருந்த என் அறிவிப்பும் மேடையின் உள்ளிருந்து ஒலித்த பெண் குரலும் சபையில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. ஒலித்த குரலுக்குரிய உருவம் மேடையில் வந்த போது சபை ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. பெண் குரலில் பாடியவர் இரு குரலிசை மன்னன் என புகழ் பெற்ற லோரன்ஸ். அந்த நாட்களில் ஆண் ஒருவர் பெண் குரலிலும் ஆண் குரலிலும் மாறி மாறிப்பாடுவது ஆச்சரியம். அன்றைய நிகழ்ச்சியைப் பற்றி மற்றவர்கள் மட்டும் கதைக்கவில்லை.

இரவு சாப்பிட்ட பின்னர் அம்மா ஆரம்பித்த கதைக்கு அப்பா குரலை உயர்த்திக் கொண்டு அடுத்த அறையிலிருந்த எனக்கும் கேட்க வேண்டும் என்பதற்காகச் சொன்னது- “மகன் எழுதட்டும் - பேசட்டும் - நடிக்கட்டும்- ஆனால் ஒரு பெம்பிளைப் பிள்ளைத் தொட்டிட்டான் எணடால் அது என்ன சாதி சமயமோ குருடோ சொத்தியோ அது எங்கடை பிள்ளை மாதிரி. இவன் மாட்டன் எண்டாலும் நாங்க்ள இவரைக் கலியாணம் கட்ட வைப்பம்” அப்பாவும் அம்மாவும் கருத்தொருமித்தவர்கள் என்பதால் நான் வலிபனாக இருந்த காலத்திலும் வனிதையர் விடயத்தில் கவனமாகவே இருந்தேன்.

இது அப்பா கையாண்ட ஓர் உத்தி என எண்ணுகின்றேன். இப்பொது கூட சில விடயங்களை நேரில் எப்படிச் சொல்வது என்று தயக்கம் ஏற்படும் போது, சந்தர்ப்பத்துக்காகக் காத்திருந்தோ அல்லது சந்தர்ப்பத்தை வரவழைத்தோ சொல்ல வேண்டியவற்றை நாசூக்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சொல்லி விடுவேன்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: