Sunday, December 16, 2007

அனுமதியல்ல, தகவல்

எனது அலுவலக அறைக்கு வந்து என்னுடன் உரையாடிய அதிகாரியொருவரையும் அழைத்துக் கொண்டு கணக்காளரின் அறைக்குச் செல்வதற்கு முன்பாக எனது சிற்றூழியரிடம் நான் கணக்காளரின் அறைக்குச் செல்வதாகவும் சுமார் அரைமணி நேரத்தில் திரும்பி வருதாகவும் சொன்னேன். என்னுடன் உரையாடிய அதிகாரி ஏளனமாகச் சிரித்தார். “என்ன இதே கட்டிடத்தில் இருக்கிற கணக்காளரை சந்திக்கிறதுக்கும் பியோனின் பெர்மிஷன் தேவையா?” “இது அனுமதியல்ல தகவல். அலுவலகத்திற்கு கடமைக்கு வந்த பின் வெளியே செல்லும் போது எங்கே? என்ன விடயம்? எத்தனை மணிக்கு மீண்டும் திரும்புவேன், என்ற தகவலே தவிர பியோனிடமிருந்து அனுமதியல்ல” என்றேன்.

அதிகாரியுடன் கணக்காளரின் அறையில் அறிக்கை தயாரித்துக் கொண்டிருந்த போது ஒலித்த தொலைபேசியை எடுத்த கணக்காளர் - “உங்களை அமைச்சர் வரட்டுமாம்” என்று சொல்லி விட்டு. “என்னுடைய அறையில் இருப்பது எப்படி அமைச்சருக்குத் தெரியும்?” எனக் கேட்ட போது ஐந்தாம் வகுப்பு அனுபவத்தை சொன்னேன்.

அதிகாலையிலேயே எழுந்து விடுவதால் அப்பா மாலை இரண்டு மணியிலிருந்து மூன்று மணி வரை வரை தூங்குவது வழக்கம். அப்பா தூங்கி சில நிமிடங்களுக்குள் அங்கே கடமையாற்றிய தொழிலாளி திருவலை, கத்தி ஆகிய உபகரணங்களை எடுத்துக் கொண்டு அவற்றைச் செப்பனிட இரும்புத் தொழிற்சாலைக்குச் செல்ல ஆயத்தமானார். சிறிது நேரத்தில் திரும்பி விடலாம் என்ற அவர் சொல்லை நம்பி நானும் அவருடன் சேர்ந்து சென்றேன். தொழிற்சாலையிலிருந்த இயந்திரங்களைப் மூன்று மணிக்கு எழுந்த அப்பா என்னைத் தேடியிருக்கிறார். கடையிலிருந்த யாரும் சரியான பதில் சொல்லவில்லை. பொழுது போக்காக நான் செல்லும் தமிழ்ப் பண்ணை புத்தகசாலை, ஜெஸிமா படக் கடை, முன்னாலுள்ள புடவைக்கடை எல்லாவற்றிலும் முதலில் தேடல். அடுத்து வின்ஸர் ராணி என பட மாளிகைகளில் தேடல்.

ஐந்து மணி போல் நான் கடைக்குச் சென்ற போது எல்லோரும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அப்பா வெகு சாதாரணமாக சொன்னார். “ஆண்பிள்ளை நாலு இடத்துக்குப் போக வேணும். நாலு போரோடு பழக வேணும். அதற்கெல்லாம் அனுமதி எடுக்க வேண்டுமென்பதில்லை. ஆனால் எங்கே போகின்றேன்? எப்போது திரும்பி வருவேன் என்ற தகவலைச் சொல்லிப் போனால் யாரும் பதட்டப்படாமல் பயப்படாமல் இருப்பார்கள். நான் நித்திரையென்றால் வேறொருவரிடம் சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அல்லது ஒரு கடிதத்தை எழுதி வைத்திட்டுப் போயிருக்கலாம்”

அன்று முதல் நான் போகுமிடமும் திரும்பி வரும் நேரமும் சிலருக்காவது தெரிந்திருக்கும்.
(இதன் முன்னைய இடுகைகள் 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள்)

1 comment:

Anonymous said...

அனைவரும் அவசியம் மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டிய அருமையான
அறிவுரை.