Monday, December 24, 2007

கடனற்றார் நெஞ்சம்

சிறுவனாக இருந்த என்னையும் கூட்டிக்கொண்டு அப்பா உறவினர் ஒருவர் வீட்டுக்குச் சென்ற போது அலங்காரமாக வளைத்துக் கட்டிய சீமேந்து மதில் - வண்ணப்பூ வேலைகளுடன் செய்யப்பட்ட இரும்பு கேற் - அந்தக் கேற்றுக்ளை தாங்கி நிற்கும் தூண்களுக்கு இணைக்கப்பட்டிருந்த வட்ட வடிவான மின்குமிழ் எல்லாம் மனதில் ஆசையை ஏற்படுத்த அது போல எங்கள் காணிக்கும் மதில் கட்டி கேற் போட வேண்டுமென்றேன். மதில் கட்டுவதற்கு முதல் ‘கிணறு – கக்கூஸ் - வீடு’ என்று அப்பா சொன்னதன் அர்த்தம் முழுமையாக விளங்க சில நாட்கள் தேவைப்பட்டன.

நாங்கள் பயன்படுத்தும் கிணறு சீமேந்தினால் கட்டப்படாத பழைய கிணறென்றாலும் பங்காளிகள் பலர். கிணற்றின் அருகே எதிரெதிராக நான்கு பூவரச மரங்கள் வளர்க்கப்பட்டிந்தன. சுமாரான உயரத்தில் இரண்டு பூவரச மரங்கள் வேறு தடிகளால் இணைத்துக் கட்டப்பட்டிருந்தன. இணைத்துக் கட்டப்பட்டிருந்த தடிகளுக்கு ‘ஆடுகால்’ எனப் பெயர். இரண்டு பூவரச மரங்களுக்கெதிர்ப் புறமாக வளர்ந்த மற்ற இரு பூவரச மரங்களில் இன்னுமொரு ஆடுகால். நீளமான பனை மரத்தைச் செதுக்கியெடுத்து துலா வடிவம் கொடுத்து துலாவின் இடையே அச்சுலக்கை புகுத்தப்பட்டு அச்சுலக்கை இணைக்கப்பட்ட துலா ஆடுகால் மேல் வைக்கப்பட்டிருந்தது. துலாவின் அடிப்பக்கத்தில் கட்டப்பட்டிருக்கும் பாரமான கற்கள் கிணற்றில் தண்ணீர் அள்ள வாளியை உள்ளே விடும் போதும் - அள்ளிய தண்ணீரை வெளியே கொண்டு வரும் போதும் சமநிலை பேண உதவும். கிணற்றின் அருகே நின்று நீர் அள்ளுவதற்கு வசதியாக கிணற்றின் குறுக்கே சில தடிகள் வைக்கப்பட்டிருந்தன. பங்குக் கிணறாகையால் எலலாப் பங்காளிகளும் உடன்பட்டால்தான் ஏதுவும் செய்யலாம். உடன்படாவிட்டால் ஓரங்குலக் கயிற்றைக் கூடப் போட முடியாது. செலவு செய்யும் பணம் கிடைக்காமல் போய்விடுவது மட்டுமல்ல. – கிராம கோட்டிலிருந்து உயர் நீதிமன்றம் வரை வழக்குகளில் கலந்து கொள்ளக்கூடிய அனுபவமும் கிடைக்கும்.

மதில் கட்டியிருந்த உறவினரைச் சந்தித்துத் திரும்பி வந்து சில நாள் இருக்கும் - குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற எனது சிறிய தாயார் கிணற்றினுள்ளே தத்தளித்து அபயக்குரல் எழுப்பிய போது ஊரே திரண்டோடி வந்தது.

துலாவில் கயிற்றால் பிணைக்கப்பட்டிருந்த கல் அறுந்து விழ சமநிலை தளும்பிய சிறிய தாயார் தடுமாறி நின்று தண்ணீர் அள்ள கிணற்றின் குறுக்கே வைக்கப்பட்டிருந்த தடிகளின் மீது வேகமாக ஒருபுறம் ஒதுங்க – தடிகளின் மறுபுறம் மேலெழும்ப குடிப்பதற்கு தண்ணீர் அள்ளச் சென்ற சிறிய தாயார் கிணற்றினுள்ளே விழுந்து குளிக்க வேண்டிய நிலை. திடீரென ஏற்படும் விபத்துக்கள் நன்மைகளைக் கொண்டு வருவதுமுண்டு. ‘பொதுவாக கோடு கச்சேரி பொலிசு என ஏறி இறங்கினால் அலைச்சலும் செலவும், ஆவது எதுவுமில்லை’ என்று சொல்லும் அப்பாவும் துணிந்து விட்டார்.

“நல்ல வேளை. ஒருவர் தப்பியிட்டார். ஒருவரும் காசு தராவிட்டாலும் பரவாயில்லை. சுப்றீம் கோட்டிலை வழக்கு வைச்சாலும் பரவாயில்லை. கிணற்றை வடிவாகக் கட்டப் போகின்றேன். மற்ற ஆட்கள் ஒதுங்கி நிற்கலாம். நாளைக்கு இப்பிடி ஒரு சம்பவம் நடக்கிற போது யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது!”

ஒவ்வொரு குடும்பமும் அப்பா சொன்னதை மீண்டும் மீண்டும் யோசித்தது. “யார் கிணற்றுக்குள் விழுவார் என்று சொல்ல முடியாது”

துண்பத்தினள் ஓர் இன்பம். பங்காளர் ஒன்று சேர்ந்து பலமான கற்கள் சீமேந்து பயன்படுத்தி கிணற்றை சரியாக நிர்மாணித்தால் உயிராபாயமில்லை.

2003 செப்டம்பர் மாதம் மினுவாங்கொட என்னுமிடத்தில் பாதுகாப்பற்ற நிலையில் பாடசாலையொன்றிலிருந்து கிணற்றில் தவறி விழுந்த மாணவன் இறந்து விட்டான். இது தொடர்பாக எழுந்த பிரச்சனையால் பாடசாலை சில நாட்கள் இயங்கவில்லை. மறுநாள் வவுனியாவில் இது போன்ற சம்பவத்தால் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரிகளுக்கு கிணறு இயமனானது. இப்படியான செய்திகள் ஒன்றிரண்டல்ல.

பிள்ளைகளின் கௌரவம் சுகாதாரம் மனதில் தோன்ற அப்பாவின் கையில் சிறிது பணம் நேர பனை வடலிகளிடையே மறைந்த காலம் மாறி மலசலகூடம் சீமேந்தினால் கட்டப்பட்டது. கடன் வாங்க அப்பா அம்மா விரும்பாததால் கணிசமான தொகை சேர்ந்த பின்பே வீட்டுக்கு அத்திவாரம் அமைக்கப்பட்டது. மதில் அலங்காரமாக இல்லாமல் - வண்ணப் பூக்கேற்றாக இல்லாமல் சாதாரணமாக அமைக்கப்பட்டது – பல வருடங்களுக்குப் பின்னர் சாதாரண வாழ்க்கை – கடனற்ற வாழ்க்கை எவ்வளவு சந்தோஷமானது என்பதை இப்போது உணர்கின்றேன்.




(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: