Sunday, December 23, 2007

மனம் கோணாது.....

எண்பது வயதைக் கடந்த நிலையிலும் அப்பா மிகவும் திடகாத்திரமாக இருந்ததோடு எல்லா வேலைகளையும் தானாகவே செய்வார். சிலவேளைகளில் மதிய உணவுக்குப் பின் ஒரு மணி நேர பகல் தூக்கம். பெரும்பாலும் வீட்டு வேலைகளை வெகு நேர்த்தியாகச் செய்வார். மற்ற வேளைகளில் விறாந்தையில் சாய்மனைக் கதிரையில் அமர விரும்பாமல் ஒரு சாதாரணக் கதிரையில் நிமிர்ந்திருப்பார். அவருடன் நன்கு பழக்கமில்லாதவர்கள் வந்தால் மெதுவாக எழுந்து ஓர் அறையில் ஒதுங்கிக் கொள்வார்.

நல்ல மழை காலமானாலும் தினமும் குளிப்பார். வீட்டில் இருக்கும் போது கட்டும் வேட்டியானாலும் சுத்தமான வேட்டியாக இருக்கும் படி பார்த்துக் கொள்வார். நெருங்கிய உறவினர் அயலவர் வீட்டுக்குக் கூட மிக மிக அவசியமெனக் கருதி அரைமணி நேரம் சென்று வருவதானாலும் “அம்மாடி போயிட்டு வரட்டுமா” என்று தங்கையிடம் அனுமதி கேட்பார்.

தங்கையிடம் அனுமதி கேட்பது எனக்குப் பிக்காததால் நேரடியாகக் கேட்டேன். அப்பா சிரித்தார். “பிள்ளைகள் வயது வந்து விட்டால் அவர்கள் பெரியவர்கள். சாப்பாடோ போக்குவரத்தோ – பிறருடன் கதைப்பதோ கதைக்காமல் விடுவதோ எல்லா விடயங்களிலும் பிள்ளைகள் மனம் கோணாமல் நடக்க வேண்டும். பிள்ளையளுக்குப் பிடிக்காததை செய்யக் கூடாது" என்று சொன்னார்.
(இதன் முன்னைய இடுகைகளை 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள் வாசிக்கலாம்)

No comments: