Tuesday, December 18, 2007

நியாயச்சம்பளம்

சாப்பாட்டுக் கடையின் உட்புறமும் வெளிப்புறமும் மட்டுமல்லாமல் சுற்றுப்புறமும் துப்பரவாக வைத்திருக்க வேண்டுமென அப்பா வற்புறுத்துவார். அதனால் காலத்துக்குக் காலம் கடைத் தேவைகளுக்குப் பயன்படுத்த தண்ணீர் எடுக்கும் கிணறும் இறைத்து துப்பரவாக்கப்படும். நான் வாழ்ந்த கிராமத்தில் துலாவில் பெரிய பட்டை கட்டி நீர் இறைத்ததைப் பார்த்திருக்கின்றேன். போதியளவு இடவசதியில்லாததால் யாழ்ப்பாண நகரத்திலுள்ள கிணறுகளில் கப்பியில் (துழண்டி) கட்டி தண்ணீர் அள்ளுவார்கள். தண்ணீர் இறைக்கும் போது நான்கு பேர் பெரிய பட்டையுடன் வருவார்கள். நான்கு நீளமான கயிறுகள் பட்டையின் நான்கு புறங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும். கிணற்றை சுற்றி அமைந்தள்ள சீமேந்துக் கட்டில் நான்கு பேரும் நான்கு புறமாக நின்று கொண்டு நீளமான கயிற்றை மெது மெதுவாகத் தளர்த்த பட்டை கிணற்றினுள்ளே இறங்கும். பட்டையில் நீர் நிறைந்ததும் நான்கு பேரின் எட்டுக்கரங்கள் ஒரேயளவு வேகத்துடன் ஒன்றாகவும் விரைவாகவும் இயங்க கயிற்றை மேலே இழுப்பார்கள். நீர் நிரம்பிய பட்டை சீமேந்துக் கட்டருகே வந்ததும் ஒருவர் தான் நிற்க்கும் பக்கமாக பட்டையை மெல்லச் சரித்திழுக்க மற்ற மூவரும் கயிற்றை தளர்த்த பட்டைதானாகச் சரிந்து நீரை நிலத்தில் கொட்டும். சுமார் நான்கைந்து மணி நேரம் நால பேரும் ‘ம்’ என்ற ஒரேயொரு எழுத்தை மட்டும் விதம் விதமாக உச்சரிப்பார்கள்.

‘ம்’- என்றால்-

கயிற்றை இளக்கலாம் - கயிற்றை இழுக்கலாம் - தண்ணீரை அள்ளலாம் - பட்டையைச் சரிக்கலாம் என்பது அட்டுமல்ல நான்கைந்து நிமிடம் ஓய்வெடுக்கலாம் - தேநீர் அருந்தலாம் -ஓய்வு போதும் - மீண்டும் இறைக்கலாம் - எல்லாவற்றுக்கும் ‘ம்’ தான்- அர்த்தம் அவர்களுக்குத்தான் தெரியும்

60 களின் ஆரம்பம் என நினைவு

நான் மட்டுமல்ல- இப்படி தண்ணீர் இறைப்பதை பலரும் வேடிக்கை பார்த்தார்கள். நால்வரின் கவனம் அவதானம் எல்லாம் கிணற்றிலேதான் நிதானம் சற்றுத் தவறினாலும் உயிராபத்து.

கிணற்றின் அடித்தளத்தில் உள்ள சிறிய குழிக்குப் பட்டைக்கிடங்கு எனப் பெயர். பட்டைக்கிடங்கு வரை நீர் குறைந்ததும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு கிணற்றுக்குள் இறங்கியவர் சாம்பிறாணிப் புகை காட்டி விடடு மேலே வந்த பின்தான் அவர்களுக்கும் முதலாளிக்குமிடையில் தகராறு-

நால்வரும் ஆளுக்குப் பத்து ரூபாவாக நாற்பது ரூபா சம்பளம் கேட்டனர். முப்பது ரூபாவுக்கு மேலே கொடுக்க முதலாளிக்கு விருப்பமில்லை.

நால்வரும் அப்பாவிடம் மனவருத்தம் தெரிவித்தனர். ஒருவரின் கண் கலங்கியதையும் அப்பா கவனிக்கத் தவறவில்லை.

“வெய்யிலில் நின்று வேலை செய்த போது அவர்கள் வியர்வையோடை இரத்தத்தையும் சிந்தித்தான் உழைத்திருக்கிறாங்கள். உழைப்புக்கு ஏற்ற காசு குடுக்காட்டி அவங்கட கண் கலங்கும். இரத்தம் மட்டுமல்ல வியர்வை கண்ணீர் எல்லாம் சக்தியுள்ளவை. எனக்குத்தாற சம்பளத்திலை பத்து ரூபா குறையுங்கோ. இப்ப நாற்பது ரூபா குடுங்கோ” அப்பாவின் வேண்டுகோள் நியாயமானது.

அப்போது அப்பாவுக்கு மாதச்சம்பளம் நூறு ரூபாதான். தொழிலாளிகளுக்காக இன்னொரு தொழிலாளி தான் உழைப்பைக் கொடுக்க முதலாளி விரும்பாததாலோ என்னவோ தகராறு சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விருந்தினனாக எனது நிலையொத்த அதிகாரி வீட்டுக்குச் சென்ற போது வீட்டு வேலைக்கு வந்திருந்த தொழிலாளிக்கும் நண்பருக்குமிடையே இப்படியொரு தகராறு. அப்பாவின் கதையைச் சொன்னேன். தொழிலாளிக்கு நியாயமான கூலி கிடைத்தது. விருந்தை விட நட்பை விட கடமையைச் செய்த திருப்தி.

No comments: