Saturday, December 15, 2007

சண்டித்தன தத்துவம்


அப்பா வேலை செய்த சாப்பாட்டுக் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுள் சிறிது குடித்துவிட்டு பெரிதாக மிரட்டிச் சண்டித்தனம் செய்வோரும் அடங்குவர். அப்படிப்பட்டோர் வரும் போது முதலாளியைப் பார்க்கப் பாவமாய் இருக்கும். அவர்களையும் பகைக்க விரும்பாமல் வியாபாரத்தையும் கெடுக்க விரும்பாமல் சில தின்பண்டங்களையோ அல்லது சிறிது பணத்தையோ கொடுத்து அவர்களைக் சமாளிப்பதில் அப்பாவுக்கு உடன்பாடில்லை. ஒரு நாள் குடிகாரச் சண்டியனொருவன் கடையைக் கலக்கிக் கொண்டிருந்த போது திடீரென அந்த இடத்துக்கு வந்த அப்பா அவன் கழுத்தெலும்பை இறுக அமத்திக் கொண்டு காலால் ஒரு பலமான உதை. கணப்பொழுதில் குசினிக்குள் நுழைந்து வெளியே வந்த அப்பாவின் கையில் எரிந்து கொண்டிருந்த கொள்ளிக் கட்டையைப் பார்த்ததும் அவன் வெறி முறிந்திருக்க வேண்டும். ஒரே ஓட்டம். அதன் பின்னர் யாராவது கடையில் கலாட்டா செய்யும் வேளை அப்பா அவர்களை முறைத்துப் பார்த்து விட்டு வேகமாக குசினிக்குள் நுழைவார். கலாட்டா செய்ய வருபவர் எப்படிக் கடையைவிட்டு நழுவுகின்றார் என யாருக்கும் தெரியாது.

“எப்போதும் முந்துகின்றவன் சண்டிக்காரனாக இருப்பான். வெற்றியும் கிடைக்கும். அதற்காகப் பயப்படக் கூடாது. திடீரென பெரிதாக ஏதாவது செய்து அச்சுறுத்தல் நிலையை உருவாக்கி, ‘சாதுவுக்கு கோபம் வந்தால் அவ்வளவு தான்...’ என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்திய பின் அமைதியாக இருந்து விட வேண்டும் என்பதும் அப்பா சொல்லி தந்ததில் ஒன்று.


(இதன் முன்னைய இடுகைகள் 'அப்பா' என்ற வகைப்படுத்தலினுள்)

3 comments:

Anonymous said...

//"சாதுவுக்கு கோபம் வந்தால் அவ்வளவு தான்..." என்ற அபிப்பிராயத்தை ஏற்படுத்திய பின் அமைதியாக இருந்து விட வேண்டும் //

உலகத்த, ரொம்ப சரியா புரிஞ்சு வச்சிருக்கார் உங்க அப்பா.

சுந்தரவடிவேல் said...

உங்கள் எழுத்து நடை எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.

உடுவை எஸ். தில்லைநடராசா said...

அனானி நீங்கள் சொல்வது சரிதான்.
சுந்தரவடிவேல், பாராட்டுக்கு நன்றி