Friday, January 4, 2008

பயிற்சி அனுபவங்கள்

சாரணர் இயக்கத்தில் சேர்ந்து சில நாட்களுக்குள் ஆரம்பமாகிவிட்டது. தொண்டமானாறு செல்வசந்நிதி ஆலய வருடாந்த உற்சவம், யாழ்ப்பாண மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வதால் ஆலயத்துக்கு அருகாமையிலுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த சாரணர்களும் உதவிக்கு அழைக்கப்படுவது வழக்கம். உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி சாரணர் இயக்க மாணவர்களோடு இணைந்து கொண்டு நானும் சென்றேன்.

நாங்கள் கூடாரம் அமைத்துத் தங்கியிருந்த இடத்துக்குச் சிறிது தூரம் தள்ளி வல்வெட்டித்துறை சிதம்பராக் கல்லூரிச் சாரணர்கள் கூடாரம் அமைத்திருந்தார்கள். ஒரு நாள் மதிய உணவுக்குப் பின் சாரண ஆசிரியர் நீலகண்டன் எங்களை அழைத்து, “இன்று மாலை சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் உங்களுடன் கலந்து பழக வருகிறார்கள். சிநேக பூர்வமான விளையாட்டுகளும் இடம்பெறும்” என்றார்.

சிதம்பராக்கல்லூரி மாணவர்களும், உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி மாணவர்களும் சம்பிரதாயபூர்வமான அறிமுகம் - விளையாட்டுகள் என்று ஈடுபட்டிருந்த வேளை, எங்கள் கல்லூரி சாந்தன், நீளமான கயிற்றைக் கொண்டு வந்தான் - “கயிறு இழுப்புப் போட்டி”

முதல் தடவை எங்கள் கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது தடவை கயிறிழுத்தல் ஆரம்பமான சில விநாடிகளில்.... “ஐயோ அம்மா” என்று சாந்தன் விழுந்து விட்டான். சுற்றி ஒரு கூட்டம்.

உடனே சுறுசுறுப்பாகச் செயற்பட்டேன் - “சேர்! ஒரு கார் பிடிச்சு வரட்டோ?”

நீலகண்டன் ஆசிரியர் கோபித்தார் “சத்தம் போடாமல் உன்ர வேலையைப் பார்”

நிலத்தில் விழுந்து கிடந்த சாந்தன் வலது கையால் வயிற்றை அமத்திப் பிடித்தபடி அலறினான்: “அம்மா...அம்மா”

மைதானத்தில் மாலை நேர வெய்யில் சுட்டெரித்ததால் எல்லோருமாகச் சேர்ந்து சாந்தனை வேலியோர மரநிழலின் கீழே தூக்கிச் சென்றனர்.

எங்கள் கல்லூரி பெரிய மாணவர்கள் அமைதியாக இருந்து அவதானித்தபடி இருந்தனர். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் சாந்தனைக் கேள்வி கேட்டு வயிற்றைத் தடவிக் கொண்டிருந்தனர். சுமார் பத்து நிமிடங்கள் கழித்து, சாந்தன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்தான். “இப்ப கொஞ்சம் சுகம்”

“ஆஸ்பத்திரிக்குப் போவமா?” – ஆசிரியர் நீலகண்டன் கேட்டார்.

“இவரும் ஒரு ஆசிரியரா?” பத்து நிமிடத்துக்குப் பிறகு கேட்கிறார்?” – ஆசிரியர் நீலகண்டன் மீது ஒரு விதமான வெறுப்பு.

மரத்தின் மேல் ஏறி....

அப்போது உயரமான மரத்தின் கிளையொன்றில் ஏறியிருந்து கீழே நடந்தவற்றைப் பார்த்துக் கொண்டிருந்த இராஜேந்திரனை ஆசிரியர் நீலகண்டன் கண்கள் நோக்குகின்றன.

அவரது கோபம் - “உங்கை என்னடா செய்யிறாய்? இறங்கடா கீழை”

இராஜேந்திரன் விரைவாகக் கீழே இறங்க முயற்சிக்கும் போது அவனது ஒரு மரக்கிளைகளுக்கிடையே சிக்குபட்டுவிடுகிறது. அவனது அலறல் பயங்கரமாயிருந்தது.
“அம்மா...அம்மா..”. அதைவிடப் பயங்கரமாயிருந்தது ஆசிரியரது சத்தம் “இறங்கடா...இறங்கடா..”

இராஜேந்திரன் அழுதான் - “ஐயோ சேர் கால் மடங்கியிடுத்து. இழுக்க முடியாமல் கிடக்கு”

நாங்கள் எல்லோரும் நன்றாகப் பயந்தோம்.

உடனடியாகச் சிதம்பராக் கல்லூரி மாணவர் இருவர் மரத்தில் ஏறினார்கள். ஒருவன் மரத்திலிருந்த வண்ணம் கயிற்றை மேலே எறியச் சொன்னான். இருவரும் கயிற்றில் ஓர் ஊஞ்சல் போலச் செய்து, அதில் இராஜேந்திரனை உட்கார வைத்து பத்திரமாகக் கீழே இறக்கினார்கள்.

“ஓரிடத்திலை கூட்டமாக நில்லாதையுங்கோ, சுத்திவர நி;ல்லுங்கோ. காற்று வரட்டும்” என்று சொல்லிய வண்ணம் வேலியருகே சென்ற ஆனந்தன், “அம்மா அம்மா!” என்று பிடரியைக் கைவிரல்களால் தடவியபடி அழுதான் - “கம்பி வேலி சேர்...ஆணி குத்திப் போட்டுது” ஆனந்தன் அழுது கொண்டிந்தான்.

சிதம்பராக் கல்லூரி மாணவன் ஒருவன் ஆனந்தனின் தலையில் ஆணி குத்திய இடத்திலுள்ள மயிர்களை விரல்களால் விலத்தி அடையாளம் வைத்து, “கத்தரிக் கோலைக் கொண்டு வாங்கோ” என்றான்.

என் மனம் கவலைப்பட்டது – “சாந்தன் வயிற்று வலியால் அவதிப்படுகின்றான்; இராஜேந்திரன் கால் மடங்கிக் கஷ்டப்படுகின்றான்;;: ஆனந்தன் தலையில் ஆணி குத்தி அவதிப்படுகின்றான்;: என்ன கஷ்ட காலம்”?

நான் கவலைப்படும் போது மாணவர்கள் பலர் சிரித்தார்கள். ஆசிரியர் நீலகண்டனும் சிரித்தார். சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் சிரித்தனர். விடயம் இதுதான் -

சாரணர்கள் முதலுதவிப் பரீட்சையில் சித்தியடைய வேண்டும். சிதம்பராக் கல்லூரி மாணவர்கள் முதலுதவி அளிக்கத்தக்க அறிவையும் தகைமையும் பெற்றுவிட்டனரா என்பதைச் சோதனை செய்வதற்காகவே விளையாட்டுப் போட்டி நடைபெற்றது, சாந்தன், இராஜேந்திரன், ஆனந்தன் எல்லோரும் பிரமாதமாக நடித்தனர். இவர்களின் நடிப்பை நிஜமென நினைத்துக் கார் பிடிக்கப் புறப்பட்டதை இப்போது நினைத்தாலும்...

இப்படித்தான்...

எழுபதுகளில் தந்தி ஒன்று அனுப்புவதற்காக யாழ்ப்பாணம் தபால் கந்தோருக்குச் சென்றேன். தபால் கந்தோரில் ஒரேயொரு உத்தியோகத்தரைத் தவிர மற்றைய எல்லோரும் கந்தோரின் பின்பக்கம் சென்றனர். நானும் சென்றேன். வரிசையாக நின்ற பலர் ஒவ்வொருவராகத் தந்திக் கம்பத்தின் மேலே ஏறி இறங்கியதை அவதானித்தேன். நீளக் காற்சட்டை அணிந்திருந்த சிலரும் காற்சட்டையைச் சுருட்டி மடித்துச் செருகிக் கொண்டு தந்திக் கம்பத்தில் ஏறி இறங்கினார்கள்.

அங்கிருந்த ஒருவரிடம் “என்ன விளையாட்டு இது என்றேன்”

“விளையாட்டல்ல....இன்ரவியூ...நடக்கிறது. இவை லைன்ஸ்மென் வேலைக்கு அப்ளிக்கேஷன் போட்டவை. கம்பத்திலை ஏறத் தெரியாட்டி வேலை செய்ய முடியாது: அதுதான்” என்றார் ஒருவர்.

கவர்னர் சந்திப்பு; 1990 நடுப்பகுதியில் பிரச்சினைகள் நிறைந்த அவசர காலத்தில் ஒரு வெள்ளிக்கிழமை இரவு, திருகோணமலையில் எனது வதிவிட இல்லத்துக்கு வந்த பிரதம செயலாளர் திரு.கணேசநாதன் - “அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு கவர்னர் தன்னைச் சந்திக்கட்டாம்” என்றார்.

அடுத்த நாள் காலை 9.00 மணிக்கு ஆளுநர் அலுவலகத்தில் கணேசநாதன் காட்டிய கதிரையில் அமர்ந்து கொண்டேன்.

ஆளுநரிடமிருந்து வரும் கடிதங்கள், கோவைகளைப் பார்வையிட:டு, எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் குறிப்பிட்டு, அடுத்த உத்தியோகத்தர்களுக்கு அனுப்ப வேண்டும். உத்தியோகத்தர்களிடமிருந்து ஆளுநருக்கு அனுப்புவனவற்றைச் சரிபார்க்க வேண்டும்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, ஆளுநரின் அழைப்பு.

“நானும் செயலாளர் கணேசநாதனும் கொழும்பக்குப் போகின்றோம. அலுவலகத்தைப் பார்த்துக் கொள்ளும்” என்றார்.

அவசர காலத்தில் அலுவலகக் கடமைகளைச் சரியாக நிறைவேற்றும் தகைமையைச் செயல் ரீதியாகப் பரீட்சித்துப் பார்த்த ஆளுநரும் செயலாளரும் திருப்திப்பட்டு, அலுவலகத்தை என்னிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர் எனப் பின்னரே அறிய முடிந்தது.

1994 இல் பாங்கொங் நகரில் ஆசிய பயிற்சிக் கல்லூரில் (ATI) நான்கு வார கால ‘இடர்கால முகாமைத்துவம்’ பயிற்சிக்கச் சென்றிருந்தேன்.

பல நாடுகளைச் சேர்ந்த புதிய முகங்கள் - புதிய அனுபவங்கள் - பத்து நாள் பயிற்சி முடிந்துவிட்டது.

காலையில் எழுந்து ஒரு தேநீர் குடித்தால்தான், சற்றுச் சுறுசுறுப்பாக வேலை செய்யலாம்.

பதினோராவது நாள் வழமையைவிட சிறிது முன்னதாக விழித்துக் கொண்ட நான் ‘எப்போது ரீ குடிக்கலாம்’ என்ற எண்ணத்துடன் கதவருகே சென்றேன். கதவுக்குக் கீழிருந்த சிறு இடைவெளியூடாக இரண்டு கடிதங்கள் அறையினுள்ளே தள்ளப்படடிருந்தன. ஒன்று எனக்கு – அடுத்த கடிதம் எனது அறை நண்பனுக்கு.

கடிதத்தில் காணப்பட்ட தகவல்

‘அவசர அறிவித்தல்’

பல ஆண்டுகளாக அமைதியாக இருந்த இரண்டு எரிமலைகள் நள்ளிரவுக்குப் பின், சீற ஆரம்பித்துவிட்டன. எந்த நேரம் என்ன நடக்குமென்று சொல்லத் தெரியாது. எனவே வெளிநாட்டவரைப் பாதுக்காப்பாக வெளியேற்ற, தாய்லாந்து அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதற் கட்டமாக இந்த விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டாவது மாடியிலுள்ள மகாநாட்டு மண்டபத்துக்குக் காலை 7.00 மணிக்குச் சமூகமளிக்கவும்.

அந்த அறிவித்தல் என்னை மட்டுமா அதிர்ச்சிக்குள்ளாக்கியது?

‘பாங்கொக் நகரை முழுமையாகப் பார்க்க முடியவில்லை?’

‘ஊருக்குக் கொண்டு போவதற்கான பொருட்கள் வாங்கவில்லையே?’

‘பயிற்சி அரைகுறையாக இருக்கிறதே?’

ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் வித்தியாசமான ஏக்கங்கள்.

மகாநாட்டு மண்டபத்தில் பயிற்சி இணைப்பாளர் எங்களசை; சந்தித்தார்.

‘வணக்கம்! திடீரென்று ஏற்பட்ட நிலைமைக்கு வருந்துகின்றோம். வெளிநாடுகளிலிருந்து வந்த உங்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கின்றோம். இப்போது எரிமலைகளின் சீற்றம் அதிகரித்து நிலை உக்கிரமடைந்து வருவதால் பாங்கொங் நகரிலுள்ளோரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுக்காமல் உங்களை மாத்திரம் அனுப்புவது சாத்தியமல்ல. இங்கு பல அதிகாரிகள் வந்திருக்கிறார்கள்’

இணைப்பாளர் ஒவ்வொருவரையும் அறிமுகஞ் செய்து வைத்தார்.

‘இவர் எரிமலை தொடர்பான தகவல்களைத் தருவார்’

‘இவர் பொலிஸ் பகுதிப் பொறுப்பதிகாரி’

‘இவர் காலநிலை அவதான நிலையத்தைச் சேர்ந்தவர்’

‘இவர் தொடர்பாடல் வேலைகளைக் கவனிப்பார்’

தொடர்ந்து இணைப்பாளர் சொன்னார்;: ‘உங்களை நான்கு ஆட்கள் கொண்ட குழுவாகப் பிரித்து, ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறைக்கும் அனுப்புவோம். இந்த அதிகாரிகள் தேவையான தகவல்களைத் தருவார்கள். கட்டுப்பாட்டறையில் உங்களுக்குத் தேவையான காகிதாதிகள், தொலைபேசி, கணனி ஆகிய உண்டு. விரைவாகத் திட்டங்களைத் தயாரித்தால் எல்லோரையும் எரிமலைச் சீற்றததிலிருந்து பாதுகாத்து வெளியேற்ற முடியும்’

நானும் வேறு மூன்று பயிற்சியாளரும் தலைவிதியை நொந்து, இறைவனை வேண்டி எங்களுக்கென தரப்பட்டுள்ள கட்டுப்பாட்டறைக்குச் சென்று சுமார் மூன்று மணித்தியாலயலங்கள் செலவிட்டுப் பல்வேறு அதிகாரிகளிடமிருந்து தகவல்களைப் பெற்று, மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றக் கூடிய திட்டத்தைத் தயாரித்தோம்.

பத்து மணியாகிவிட்டது. மற்ற நண்பர்கள் மூவரையும் அழைத்துக் கொண்டு திட்டம் பூர்த்தியான மகிழ்ச்சியுடன் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் கட்டுப்பாட்டறையினுள் நுழைந்தோம்.

மூன்று மணிநேரமாகப் பாடுபட்;டுத் தயாரித்த திட்டம், கடதாசிகள், கிழிந்தும் நீரில் நனைந்தும் நிலத்தில் கிடந்தன. அறையெல்லாம் அலங்கோலம். அழகான கையெழுத்துடன் கூடிய அறிவிப்பு ஒன்றுதான் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

‘இப்படியான நெருக்கடி நேரத்தில், எல்லோரும் கட்டுப்பாட்டறையை விட்டுப் போயிருக்கக் கூடாது. மழையும் காற்றும் நீங்கள் தயாரித்த திட்டக் கடதாசிகளைச் சேதப்படுத்திவிட்டது. மீண்டும் தயாரித்து, பயிற்சி இணைப்பாளர்களிடம் கொடுக்கவும்’ – என்ற அறிவித்தல் சுவரில் ஒட்டப்பட்டிருந்தது.

யாரை நோவது –

செய்த வேலைகளை மீண்டும் செய்து தயாரித்தோம். முதலில் மூன்று மணி நேரம் தேவைப்பட்டது. பின்னர் முப்பது நிமிடத்தில் செய்து முடிந்துவிட்டோம்.

திரும்பத் திரும்ப ஒரு விடயத்தைச் செய்யும் போது விரைவாகவும், சரியாகவும் செய்ய முடியும் என்பதோடு, கட்டுப்பாட்டறையில் ஒருவராவது உணவு, உறக்கம் மந்து கடமையாற்ற வேண்டும் என்பதையும் சொல்லித் தந்த பயிற்சி இணைப்பாளர் ‘எரிமலைக் குமுறலும்’ பயிற்சிக்காகத் தயாரிக்கப்பட்ட நாடகம் என்றார்.

பயிற்சின் போது 28 பயிற்சியாளர்களை அழைத்துக் கண்களைக் கட்டி 80 அடி நீளமான கயிற்றைத் தந்து அக்கயிற்றில் ஒரு சற்சதுரம் போடச் சொன்னார்கள். சுமார் அரை மணி நேரம் ஒவ்வொருவரும் நன்றாகச் சத்தமிட்டுக் கத்தினோம். உருப்படியாக ஒன்றும் செய்யமுடியவில்லை. பின்னர் எங்களுக்குள் ஒரு தலைவரைத் தெரிந்தெடுத்தோம். தலைவருக்கு, சிலர் தங்களுக்குத் தெரிந்த ஆலோசனைகளைத் தெரிவித்தனர். தலைவர் ஆலோசனைகளை உள்வாங்கிய பின்னர், கட்டளைகளைப் பிறப்பித்தார்.

’80 அடி நீளமான கயிற்றை இரண்டாக மடித்தால் 40 அடி நீளமாகக் குறையும்” ஒவ்வொரு 40 அடி நீளமான கயிற்றையும் பதினான்கு பேர் பிடிக்கவும்.

அடுத்த கட்டளை:

40 அடி நீளமாகக் குறைந்த கயிற்றை மீண்டும் இரண்டாக மடித்து 20 அடியாகக் குறைத்து 20 அடி நீளமான கயிற்றை ஏழு பேர் பிடிக்கவும்.

அடுத்த கட்டளை:

‘ஒன்று, ஏழு, பதினான்கு, இருபத்தியொன்று எண்ணுக்குரியவர்கள் 90 பாகை கோணத்தில் கயிற்றைப் பற்றிக் கொண்டு, ஒன்று எண்ணுக்குரியவருக்குப் பக்கத்தில் இருபத்தியெட்டு எண்ணுக்குரியவரை நிற்கச் சொன்னார்.

ஒரு சற்சதுரம் உருவாகிவிட்டது.

தீயணைப்பு வேலைகளை மேற்கொள்ளும் போது கண்களை மூடிக்கொண்டு இடம் வலம் - மேலே கீழே என்று மாறி மாறிச் சொல்லும் போது இத்தகைய பயிற்சிகள் உதவியாயிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.


பயிற்சி அனுபவங்கள் பயன் நிறைந்தவையாக இருக்க வேண்டுமென்பது என் கருத்து.

4 comments:

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the MP3 e MP4, I hope you enjoy. The address is http://mp3-mp4-brasil.blogspot.com. A hug.

பூச்சரம் said...

பூச்சரம்
இலங்கை பதிவாளர்களின் வலைப்பூ சரம் DIRECTORY OF SRI LANKAN BLOGGERS

"கேளுங்க.. கேளுங்க.. நல்லா கேளுங்க.."
விரைவில்..பிரபல பதிவர்களை உங்கள் கேள்விகளால் துளைத்தெடுக்க களம் அமைக்கிறது.. பூச்சரம்

பதிவுலக நண்பர்களோடு கருத்துக்களை பகிருங்கள்

பூச்சரம் online பதிவர் சந்திப்பு.. வெகு விரைவில்..

ம.தி.சுதா said...

அனுபவத்தை அனுபவித்துப் பகிர்ந்துள்ளீர்கள் நன்றி ஐயா..


ம.தி.சுதா
இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

உடுவை எஸ். தில்லைநடராசா said...

ம.தி.சுதாவின் முயற்சிகளுக்கு நன்றிகளும் பாராட்டுதல்களும்., வாழ்க.,வளர்க-உடுவை.எஸ்தில்லைநடராசா